அம்மா வெந்தாள் அடுக்களையில்
அப்பா வந்து "வெடுக்' கென்றார்.
"அவருக்குத் தக்காளிச் சட்டினி'
பாட்டி முணுத்தாள் மெதுவாக.
குந்தி இருந்த விஜிக்குட்டி
குப்புறக் கவிழ்ந்து "வீல்' என்றாள்.
அவளை எடுத்து இடுப்பில் வைத்து
"அடி அடி' தரையை அடித்தாள் பொய்யாக,
அத்தை முசுடு சங்கீதா, அவசரம் என்றாள்;
கடுகடுத்தாள், ஆச்சா... போச்சா...
அப்பப்போ அப்பா சப்தம் இடிபோல,
என்னை பிடித்து, முகம் துடைத்து
இட்டலி வைத்துத் "தின்' என்றாள்.
உடலைச் சாய்த்தாள் தூண்முதுகில்
"உஷ், அப்பா' என்றாள் களைப்பாக.
பசித்திருக்கும் அவளுக்கு
இட்டலி இரண்டு தட்டு ஓரத்தில்
பிய்ந்து கிடந்தது
அவளைப் போல.

யாரேனும்...

அடித்துப்பிடித்து ஏறிவிடக் கூடிய
வயதுதான். எப்போதாவது தவிர
உட்கார இடம் கிடைத்து விடுவதில்லை.
பேருந்துக்குள் இருக்கைகள் தோறும்
துண்டுகள், கைக்குட்டைகள்,
புத்தகங்கள், குழந்தைகள்
(சன்னல்வழி வந்தவை)
நம்மை முறைக்கின்றன
மிகு அதிர்ஷ்டமாக
இடம் கிடைத்துவிட
காற்றின் வருடல் சுகம்தான்.
வயதான ஒருவர்,
ஊனமுற்ற ஒருவர்,
இடுப்புக் குழந்தையுடன் ஒருத்தி என
பார்க்கும் பார்வையைத்
தவிர்க்க நினைத்தாலும்
வாயென்னவோ “நீங்க உட்காருங்க”
சொல்லி விடுகிறது.
என்ன போச்சு...
அடித்துப் பிடித்து ஏறஇயலாத
நிற்க முடியாத வயதில்
யாரேனும்,
“நீங்க உட்காருங்க”
சொல்லாமலா போய்விடுவார்கள்?

Pin It