சிறுகதை

ஊரின் கிழக்கிலிருந்த மேட்டுப் பகுதியை தனது தங்குமிடமாக ஆக்கிக் கொண்டு அவன் தனது குடிசையை கட்டிக்கொண்டபோதுதான், காடு, களனி, களத்து மேடு என அவனைப் பற்றிய பேச்சு எழுந்தது.

ஒரு கருக்கலில், அவன் கிழக்கிலிருந்து கால்நடையாகவே ஊருக்குள் வந்ததாக சிலர் சொல்லிக் கொண்டனர். முதல் சில நாட்கள் அவன் எதுவுமே பேசுவதாய் இல்லை. ஊரினர், எட்டி நின்று அவனையும் அவனது செய்கையையும் வேடிக்கை பார்ப்பதிலேயே கழிந்தது. சிலர் அதை ஒரு பொழுது போக்காகவுமே கொண்டனர்.

அவன் பேசுவதாகத் தெரியவில்லை. ஒருவேளை அவன் பேசமறுப்பவனாக, அல்லது குரலற்றவனாகவோ இருக்கலாம் என்றே தோன்றிற்று.

எனினும் அவன் தனது குடிசையை கட்டி முடித்தபோது அது மிகவும் இருளாக இருப்பதை யாவரும் அவதானிக்கக் கூடியதாகவிருந்தது.

முன்பிருந்தே அவனை கவனித்து வந்தவர்கள் அந்த மாற்றத்தை பார்த்திருந்தனர். அவன் மிகவும் சிவந்தவனாகவும், கதிரவனைப் போல ஒளி மிக்கவனாகவும் இருந்தான். இங்குள்ள யாரைப் போலவும் அவன் இருக்கவில்லை.

முதலில் அவனை நெருங்கிப் பேச முற்பட்டவர்களை அவன் சைகையாலேயே தடுத்து நிறுத்தியிருந்தான். அவன் ஒரு வழிபோக்கனோ என்று அய்யுற்றவர் பின்னால், அவனது இருப்பிடத்தைப் பார்த்து அதையும் கைவிட்டனர். அவன் சமயத்தில், ஒரு முனிவனைப்போலவும் அல்லது திசாபதி போலவும் தோன்றினான். அவன் எப்போது தங்களுடன் பேசப்போகிறான் அல்லது தனக்கு பேசவராது என்று உணர்த்தப்போகிறான் என்பதை தூக்கத்திற்கிடையேயான சிறிது விழிப்பு நிலையில் பலரும் தமக்குள் எண்ணிக்கொண்டனர்.

அதற்கு வலு சேர்க்கும் விதமான ஒரு காரணமும் இருந்தது. ஒளிபோன்ற தோற்றம் கொண்டிருந்த அவனது நிழல், கதிரொளியில் அடர்ந்த மசி கொட்டியதுபோல அவனுடன் நகர்ந்தது. முதலில் அதை யாவரும் உற்றிருந்ததாகத் தெரியவில்லை. மேற்கு தெருவிலிருந்த ஒரு பிஞ்சு யாக்கை கறுத்த மெலிந்த சிறுமி ஒருத்திதான், துனுக்குற்று பயந்தவளாக, தனது தாயாரின் புடவைத்தலைப் பிற்குள் ஒளிந்து கொண்டவளாயிருந்தாள்.

ஒரு நிறைமதி நாளில், அவனது குடிசையை சுற்றி ஒளி வெள்ளம் பொழிந்தபடியிருக்க, அவனது குடிசையைச் சுற்றி, இருள் ஒரு போர்வையைப் போல கவிழ்ந்திருந்ததை வழக்கமாக அவனை கவனித் திருக்கும் பலரும் கண்டனர். சிறிது நாழிக்கெல்லாம், கருக் கொண்ட மேகத்தினை கிழித்துக் கொண்டு வெளிப்படும் கதிரென அவன் வெளிப்பட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களை, திடீரென்று கைகாட்டி அழைத்தான்.

அவர்கள் யாவரும் அந்த பின்னிரவில் அப்படி அழைப்பானென்று எதிர்பார்க்கவில்லை. அந்த அழைப்பை ஏற்று அந்த குடிசையின் அருகில் செல்ல துணியவும் இல்லை. ஆனால் ஒரு சிலர் அவனது அழைப்பை ஏற்றாலும், மிகுந்த தயக்கத்துடனே அருகில் சென்றனர். அவன், அவர்களை மகிழ்வுடன் வரவேற்பது, தூரத்தி லிருப்பவர்களாலும் பார்க்கமுடிந்தது. மிகவும் குதூகலத்துடன் ஒரு குழந்தை யானையை கைகாட்டி அழைத்துச் செல்வது போல மிகு விருப்பத்துடன் அவர்களை உள்ளுக்குக் கூப்பிட்டான். அப்போது அவனது புன்னகை, ஒரு இருளின் கீற்றுப்போல வெளிப்பட்டது.

அந்தக் குடிசை பார்க்க சிறியதாக இருந்தாலும், காலகாலமான இருளை தனக்குள் கொண்டதைப் போல அடர்ந்திருந்தது. துணிவோடு சென்ற அந்த சிலருக்கும் பின்னர் அச்சம் தருவதாக மாறிற்று. அவர்கள் தமக்குள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள இயலாத இருளில் அகப்பட்டிருந்தாலும், அவனை மட்டும் நன்றாகப் பார்க்க முடிந்தது. அந்த இருள் அவர்களை கரைத்துவிட்டதா, அல்லது அந்த கடும் இருளில் தாம் கரைந்துவிட்டோமா என்ற அச்சம் ஒரு குளிரைப் போன்று அவர்களை வாட்டியது.

இப்போது அவன் பேசத்துவங்கினான். மெல்லிய குரலில் அதே சமயம் மலையில் முட்டி மோதிவரும் காற்றென, அவன் பேசியிருந்தான். சில சமயம், அவனது குரல் பாழ் வெளியிலிருந்து, மலைக்குகை இருள் பெருக்கிலிருந்து வருவது போல இருந்தது. அவன் பேசினான், “அஞ்சாதீர் உலகத்தீரே! அச்சம் நீங்கப்பெறாத வாழ்வு துன்பம் மிக்கது. அச்சத்தின் ஒளி உலகைக் காண கூசுவதாயிருக்கும், அச்சம் ஒளி போன்றது. அது இருளைக் கண்டால் ஓடி ஒளிந்துக் கொள்ளும் எனவே யாரும் அஞ்சாதீர்! அச்சத்தை வெல்லும் மனமிருந்தால் வாருங்கள். புதிய ஒளி மிக்க இருளை நான் உங்களுக்கு வழங்குகிறேன், இருளை உங்கள் கண்கள் பருகுமானால், பால் குகையின், இடம், வலமாகப் பறக்கும் பெரிய, கரிய பறவையை நீங்கள் காணலாம்!”

ஒரு வசியக்காரனின் இருள் நிரம்பிய குரலில் அவன் பேசுவதாகவிருந்தது. அவர்கள் அவனிடமிருந்து தங்களை விலக்கமுயலாதவர் களாக இருந்தனர். மேலும் அவன் பேசும் விதமாக அந்த இருளை கொஞ்சமாக எடுத்து பருகியபடிக்கு அவன் சொல்கிறான். “நண்பர்களே! இதோ நான் தரும் இந்த காரிருளை உங்கள் இல்லத்தில் இடுவீர்களானால் உங்கள் வாழ்வும் இருப்பிடமும் புதிய ஒளியைப் பெறும். உலகத்தில் எப்போதுமே, எல்லாவற்றிற்குமே எதிர்வுகள் உண்டு. நான் உங்களுக்கு வாழ்வின் எதிர்வினைத்தருகிறேன். விடையற்ற கேள்விகளுக்கு, எதிர்வுகளே, முரண்களே பதில்களாக இருக்கின்றன. இது வரையிலான பதில்களை, கேள்விகளை கைவிடுங்கள்! இதோ வெளிச்சத்திலிருந்து பிறக்கிறது உங்களுக்கான புதிய இருள்! விடியல் தரும் கருக்கல்!.”

அங்கிருந்த சிலரும் அவனொரு தேவ தூதனோவென அய்யுற்றனர். தேவகுமாரனின் மலை பிரசங்கம் போல இருந்தது அவனது தொனி. “நண்பர்களே சாத்தானை நீங்கள் அறிந்திருப்பீர்கள், நீங்கள் நினைப்பதுபோல அல்ல அவர்கள், சாத்தானின் கல்லறையி லிருந்தே இந்த இருளை உங்களுக்காகக் கொண்டு வந்திருக்கிறேன், உங்கள் பழைய ஒளியில் பிறந்த எண்ணங்களை இந்த இருளில் எரித்தீர்களானால், சாத்தானின் மகிமையை நீங்கள் அறியக்கூடும்!”

நிறைநிலவின் ஒளிச்சாரலில் அவன் கரும் பேயயன நின்றிருந்தான். அவனது விழியிலிருந்து கருமை கசிந்து இருள் நிறைந்த குடிசையை மேலும் இருளாக்கிற்று. குடிசைக்குச் சென்றிருந்தோர் அப்பிரசங்கத் தன்மை வாய்ந்த இருளின் குரலால், தமது இதயத்திலிருந்த ஒளி மிகுந்த பகுதிகளை நிரப்பிக்கொள்ள விருப்பம் மிகுந்தனர். கூட்டத்தில் ஒருவன் முனுமுனு த்தான். ‘பாரதி கூட இருளை குறைந்த ஒளியயன்றுதானே சொல்கிறான், நாம் இருளை அனுமதிக்கலாம் தவறில்லை.’

உடன் சென்றிருந்த மற்றொருவனோ, “தாயின் கருவறைகூட இருள்தானே? ஆம் நாம் இருளிலிருந்து வந்தவர்கள்தானே?” என்றான். அதனையயாருவன் ஆமோதிக்கவும் செய்தான்.

பிறகு அவன் வந்திருந்தோருக்கு இருளை ஒரு தேநீரைப்போல வழங்கிப் பருகச் சொன்னான். “இது இருளைக்கடைந்து நானே தயாரித்தது. பருகிப்பார்த்துச் சொல்லுங்கள் நண்பர்களே!. இன்னும் ஒன்றுதான் என் இலட்சியம்! கதிரவனை கரியவனாக மாற்ற வேண்டும். அதுமட்டும் ஈடேறுமானால் எனது வேலை மிகவும் சுலபமாகிவிடும்!” அப்படி அவன் சொன்னபோது அவனிரு கண்களும், கடுவன் பூனையின் கண்களென இருள் மிகுந்தன.

அவன் அவர்களை நீண்ட நேரம் நிற்கவிடவில்லை. வந்திருந்தோர் அனை வருக்கும் தமது பரிசென இருள் நிரம்பிய கண்ணாடிக் குடுவைகளை அளித்தான். அதற்கு முன்பாக அவனது குடிசையயங்கும் பொங்கிப் பெருகிய படியிருந்த இருளை, கரிய மசியயன கைகளினால் வழித்து புட்டிகளில் அடைத்ததை கண்ணுற்றோர், இவனொரு செப்படிவித்தைக் காரனோவென எண்ணினர்.

குடிசையிலிருந்து வெளியேறியோர், அவனைப் பற்றிய திகைப்பான சொற்களோடு சென்றனர். இருளை அமுதமென பருகத்தந்ததும், ஒரு மசியயன புட்டிகளில் அவற்றை அடைத்துத் தந்ததும் கனவோ வென்றிருக்கக் கண்டனர். இருளை வழங்கும் இவன் இருளப்பன் அல்லது இருளனாக இருக்கலாம் என்று அவர்களில் சிலர் பேசிக்கொண்டனர். இன்னும் சிலரோ அவன் நமக்கு மகிழத்தக்க விதத்தில் இருளை, சத்தானின் கல்லறையிலிருந்து கொண்டுவந்து தந்தமையால் இருளாகரனாக இருக்கவேண்டும் என்றனர். அவர்கள் தமது இல்லங்களுக்குச் சென்று சேர்ந்தபோது விடியத்துவங்கிவிட்டது.

கதிரெழுந்து, சென்றிருந்தோர் வீடுகளின் முற்றங்களில் விழுந்தபோதுதான், அந்த அதிசயம் நடந்தது. மசியடைக்கபட்ட, குடுவைகள் நிரம்பிய வீடுகளில் திடீரென்று இருள் கசிந்து பெருகத் துவங்கிற்று. வெயிலின் உக்கிரம் ஏற, ஏற குடுவை நிரப்பிய இல்லங்களில் மேலும் கருமை ஏறிற்று.

வெளிச்சம் நிரம்பிய பகலில் ஒளிந்து கொள்ள நினைத்தோருக்கு, மிகுந்த குதூகலத்தையளித்தது அது.

பகலின் இரகசியங்களையயல்லாம், கொட்டிவைக்க இரவுவரை காத்திருந் தோருக்கு, பகலில் ஒரு இரவு கிடைத்து விட்டது, மகிழ்ச்சியளிப்பதாகவிருந்தது.

திருடர்களும், அயோக்கியர்களும் இருளை வழங்கும் அவனைத் தேடி வந்து, குடுவைகளை வாங்கிச் சென்றனர்.

அந்த ஊரின் பகல் சிறிதாக குறைந்து வருவதை பலரும் அவதானித்தனர்.

கொள்ளையர்கள், வெளிச்சத்தில் கொள்ளை யடித்து, இருளில் பதுக்கினர். இதனால் பகல் கொள்ளை அதிகரித்தது.

இருளை விரும்பாதோர், இப்போது அவனை வெறுக்கச்செய்தனர். அதிருப்தியாளர் சிலர் ஒன்று சேர்ந்து, அவனை சந்திக்க கிழக்கு மேட்டிலிருக்கும் அவனது இருப்பிடத்திற்குச் சென்றனர். அப்போது அவன் நிறைய, பெரிய அண்டாக்களில் கரிய இருளை உயவு பசையைப்போல வழித்து நிரப்பிக் கொண்டிருந் தான். பக்கத்தில் பெரிய நெல் அடைக்கும் பத்தாயத்தையயாத்த பொதிப் பெட்டிகளில், இருள் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. அவன் அவர்களை கவனித்ததாகத் தெரியவில்லை. இப்போது அவனுடன் இன்னும் வேறுசிலரும் இருந்தனர். அவர்கள் அவனது வேலையில் அவனுக்கு உதவிக் கொண்டிருந்ததைக் காண முடிந்தது.

போயிருந்தவர்களில் முதலில், அவனது குடிசைக்கு அருகாமை வீட்டுக்காரன்தான் பேசினான். அவனது பேச்சில் இருள் பற்றிய அச்சம் நிரம்பியிருந்தது. அவன் இருளனைப் பார்த்து குற்றம் சாட்டும் தொனியில் பேசினான். “உனது குடிசையின் இருள் எனது இல்லம் வரை கசிந்து படர்கிறது. எனது குழந்தைகள் அதனால் அச்சத்தில் வீறிடுகிறது! இந்த இடத்தை நீ காலி செய்து போய்விடு!”

இருள் வரைந்த மாயாவி போன்றிருந்த அவன் அதற்கு கரும் சிரிப்பொன்றை வீசிவிட்டு, “அற்பர்களே வதந்தியால் பயந்து சாகாதீர்கள். இதோ என் பணியாளர்களைக் கேளுங்கள். இரண்டு பெரிய நகரங்களை நான் ஏற்கனவே இருளால் பொழியச் செய்திருக்கிறேன். அங்கே மக்கள் மிகவும் இன்பமாக இருக்கிறார்கள், பகலில் குடைவிரித்த இருளில் அவர்கள் சுகமாக இளைப்பாறுவதை அறிவீர்களா?” மேலும் சொன்னான். “இருள் விரிவடைந்து வருகையில், நீங்கள் யாவரும் விரும்பாத நாளில் நான் இங்கிருந்து சென்றுவிடுவேன் அதுவரை, முழு கதிரவனை மறைக்கும் கரிய இருளை உருவாக்கும் என் ஆராய்ச்சி தொடர்ந்தபடி யிருக்கும்.”

உடனிருந்த சிவந்த யாக்கை கொண்ட அவ்விரு பணியாளரும், அதை ஆமோதித்தனர்.

“எங்கள் குழந்தைகள் அழ, எங்கள் ஆடு, மாடு போன்ற வளர்ப்பினங்கள் மிரள, இந்த திடீர் இருள் எங்களுக்குத் தேவைப்படவில்லை. உன் இருள் உமிழும் குடுவைகளை எடுத்துச் சென்றுவிடு” என்றான் கூட்டத்திலிருந்த ஒருவன்.

துணிவுடன் அந்தக் கும்பலில் வந்திருந்த பெண்ணொருத்தி, “பகலைக் காட்டி, குழந்தை களை சமாளித்துவிடலாம் நீயோ இருளைத் தருவேன் என்கிறாய். அச்சுறுத்தும் உனது இருளால் பால்குடியையும் நிறுத்திவிட்டு குழந்தைகள், தேம்பியழுவதை நீ அறிய மாட்டாய் மாயக்காரா!” என்றாள் அழும் குரலில்.

“இரவு மிருகங்கள், தனது வேட்டையை பகலிலும் தங்கி துவங்கிவிட்டன. பாம்புகள், தெருக்களில் நின்று சீறுகின்றன. ஆந்தைகளும், கோட்டான்களும் இடம் வலமென பறந்து காதுகிழிய அலறுகின்றன. சகுனப் பறவைகள் யாவும் இனிமையாகப் பாடுகின்றன எங்களுக்கோ அடிவயிற்றில் கலவரத்தீ மூளுகிறது. என்னசெய்யப் போகிறோம் இனி நாங்கள்?” என்றான் கூட்டத்திலொருவன்.

“நான் பொழியச் செய்யும் இருளால் இந்த ஊரே புதுமையடையும். என் வளமான மொழியையும், குரலையும் நனையும் இந்த இருளிலிருந்து நீங்கள் பெற இயலும். சிவந்த இந்த யாக்கையை, கறுத்த நீவீர் யாவரும் இந்த இருள் வழி பெறுவீர்!” என்றான் அவன் முடிவாக.

இந்த பதிலில் சிலர் திருப்தியும், அதிருப்தியுமாக கலைந்தனர்.

இருளன் தரும் சிவந்த உடல் குறித்த கற்பனைகள் நன்றாக வேலை செய்தது. சிவந்த உடலின் பெறுமதி அளவில்லாததாக இருந்த மையால், இருளனை எதிர்க்கும் திட்டத்தினை சிலர் கைவிடுவதாக அறிவித்தனர்.

இருளனை எதிர்க்கும் அல்லது ஆதரிக்கும் குழுக்கள் என ஊர் இரண்டாகப் பிரிந்து நின்றது. இருளை ஆதரித்து ஒரு குழுவும், ஒளியை ஆதரித்து ஒரு குழுவும் எழுந்தன.

ஒளியை ஆதரிப்போர், இருளனை வெளி யேறக் கோரி பலவிதமான போராட்டங்களில் இறங்கினர்.

இருளன் இது எதையும் காதில் போட்டுக் கொள்ளாது, தனது இருளை குடுவைகளில் அடைத்து, விநியோகிப்பதற்கான வேலைகளில் மும்முரமாகவிருந்தான்.

ஊரின் அச்சமும் இருளைப்போல பரவியது என்றால், இருள் கவிழும் சிவந்த உடலைப் பெறும் கற்பனையும் பகலைப்போல ஒளிரத் துவங்கிற்று.

இருளன் வானளாவ அமைத்த இருள் நிரம்பிய கரும் பொதிகள், கருத்த மேகங்களென இருளைப் பொழியத் தயாராக இருந்தன.

இருளனின் அண்டை வீட்டினன், குற்றம் சாட்டியது போல இருள் மெல்ல கசிந்து தங்கள் வீடுகளுக்குள்ளும் ஒரு பகல் வேளையில் வந்துவிடுமென்றால் என்ன செய்வதென்று நினைக்கவே அச்சத்தைத் தருவாகவிருந்தது. இதனால் ஊர்க்கூட்டம் போட்டுப் பேசுவதென முடிவாயிற்று.

ஊர்க் கூட்டத்தில், இருளை எதிர்ப்போர் தமது முக்கிய அய்யத்தை முன்வைத்தனர். “இருள் பகலில் முழுவதுமாக கசிந்து வந்து தங்கிவிடுமானால் நமது நிலமை என்னவாகும்.”

இருளை விரும்பும் கூட்டமும் தமது பதிலை காட்டமாகவே முன்வைத்தது. இருளை எதிரியாகப் பார்க்க வேண்டியதில்லை. மனித முன்னேற்றத்தில் இருளின் பங்கை குறைத்து மதிப்பிட்டுவிட இயலாது. இனி இருள் தான் நமது வாழ்வில் ஒளியேற்றுவதாகவிருக்கும். இருளை எதிர்ப்போர், மனித வளர்ச்சியை எதிர்ப்போராவர்.

இத்தனை வாத பிரதிவாதங்களுக்கு நடுவிலும், இருளன் அழைக்கப்படவில்லை. அவனது சார்பில் ஊராரில் சிலரே வாதிட்டதுதான் வியப்பாக இருந்தது. இறுதியாக முடிவேதும் எட்டப்படாது கூட்டம் கலைந்தது.

இருளனின் உலையில் இப்போது யாவருக்கு மான காரிருள் நன்றாகக் கொதிக்கத் துவங்கிற்று.

எனினும், ஊரின் மேற்காக, இருளிலும் அறியும்படி, காக்கைச் சிறகின் நிறத்திலும், மெலிவிலும் ஓர் சிறுமி இருந்தாள். அவளது கண்கள் அசாதாரணமான ஒலியுடன் முன்னெப்போதும் காணாத ஒளியுடன் இருந்தது. இரண்டு நெருப்புத் துண்டங்களான அது, இருளை, ஏன் இருளனையே விழுங்குமாறு ஒளிர்வதாகவிருந்தது.

Pin It