சிறுகதை

காடு பார்க்கப் போகிற உற்சாகம் மட்டுமே அந்த மகிழுந்து பயணத்தில் இருந்தது. சேரன்மாதேவி கடந்து களக்காடு நோக்கிச் செல்லும் வழியில் யானைகள் செல்லும் வழி கவனமாகச் செல்லவும் என்கிற வனத் துறையின் அறிவிப்புப் பலகை இருந்தது. “யான பார்த்துட்டுப் போவோம்டே” என்றார் குமார். “நீங்க நௌச்ச நேரத்துக்கெல்லாம் ஆன வராதுண்ணே” என்றான் அய்யப்பன். “போன மாசம் வந்திச்சு பேப்பர்ல படிச்சேன்” என்றான் நந்தன். எல்லோர் மனதிலும் யானை குடியிருந்தது.

நான் மலையைப் பார்த்தபடி வந்தேன். கார் பயணத்தில் சீராக மலை எங்களுக்கு வலப்புறமாகக் கடந்து செல்வது ஒரு பெரும் ஓவியத்தை கடந்து செல்வது போல இருந்தது.

“யானை ஒரு சின்ன மலை. மலை ஒரு பெரிய யானை” என்றேன் நான்.அய்யப்பனுக்கு அந்த வார்த்தை மிகவும் பிடித்திருக்கும் போல அவனின் மகிழ்வு ரியர்வியூ கண்ணாடியில் தெரிந்தது. “சித்தப்பா தோட்டத்துக்கு மிளா, கரடி, சருகுமான், சிறுத்தை எல்லாம் தண்ணி குடிக்க வரும்” என்றார் துரை.

“ஆனை வருமா?”

என் கேள்விகள் எல்லாம் யானையைச் சுற்றியே இருந்தது.துரை ஒரு சின்ன யோசனைக்குப் பிறகு “தெரியல” என்றார். நெல்லையப்பர்கோவில் யானை, பொட்டல் புதூர் யானை, திருச்செந்தூர் யானை, திருக்குறுங்குடி யானை எனசின்ன வயதிலிருந்து தண்ணீர் தெளித்து ஆசி வழங்கி பிச்சை எடுக்கிற யானைகள் பார்த்திருக்கிறேன். யானையை அதன் கம்பீரத்தோடு ஒரு போதும் பார்த்த தில்லை. இந்தக் காட்டுப் பயணம், யானையைக் காட்டினால் நல்லதென்று தோன்றியது.

மலையடி புதூருக்கு திரும்பும் போது நன்றாக இருட்டியிருந்தது. “இந்த ரோடு நேரா சித்தப்பா தோட்டத்துல போய் நிக்கும்” என்றார் துரை. ஆளரவமற்ற அந்த மண் சாலையில் ஒரு பெரும் அமைதியோடு பயணப்பட்டோம். எல்லோர் கண்களிலும் எதையாவது பார்த்து விடமாட்டோமா என்கிற எதிர்பார்ப்பு இருந்தது.

“உங்க சித்தப்பா எப்படி?” நான் துரையிடம் இதை கேட்டபோது அவரது தோட்டத்தை நெருங்கியிருந்தோம். “நா என்ன சொல்ல இருக்கு நீங்களே வந்து பாருங்களேன்” என்றார் துரை.

ஒரு பெரிய மனிதரைப் பார்க்கும் போது இருக்கும் இயல்பான தயக்கம் என்னுள் இருந்தது. மாதவன் அட்வகேட் உயர் நீதிமன்றம் என்கிற பெயர் பலகையைக் கடந்து தோட்டத்திற்குள் எங்கள் மகிழுந்து சென்ற போது தியானம் முடித்து வந்திருந்தார் மாதவன்.

“துரை சொன்னாப்ல தம்பி, என்ன படம் எடுக்கப்போறிய..?” பெரும் தோட்டத்திற்கு சொந்தக்காரர் என்கிற துளி அகமும் பேச்சில் இல்லை.

“கம்பா நதி”

“அப்படின்னா என்ன தம்பி”

“திருநெல்வேலில காட்சி மண்டபம் இருக்குல்ல அங்க ஒரு நதி ஓடிச்சு அது இப்ப இல்ல .. அழிஞ்சு போச்சு அதுமாதிரி தொலஞ்சு போன ஒரு உறவப்பத்தி கதை.” “ஓ தொலஞ்சு போனத தொலக்குதியளோ.. நல்லா பண்ணுங்க தம்பி. நம்ம புள்ளக உங்களுக்கு வேண்டியத செஞ்சு குடுப்பாங்க.”

அண்ணாச்சி சொன்ன அந்தப் பிள்ளைகள் ராசவடிவு, சேகர், சித்திரைப்பாண்டி, பேச்சிமுத்து, மீசைக்காரர், ஜெயபாலன்

இந்த ஆறுபேரும் தான். அவர்கள் தான் காட்டுக்குக் காவலாளிகள்.அவர்களுக்குள் காடு அத்தனை பரவிக்கிடந்தது.

“உள்ளங்கைலவச்சுத் தாங்கலன்னா இவ்ளோ பெரிய காட்டை கட்டியடிக்க முடியுமாய்யா...” என்பார் மீசைக்காரர். அவர் உள்ளங்கை விரித்து இதைச் சொல்லும் போது காய்ப்புக் காய்த்த கைகளில் ஓடும் ரேகைகள் காட்டின் ஒற்றையடித் தடங்களாகத் தான் தெரியும்.

“இம்புட்டு காட்டையும் நாந்தான் சார் திருத்திக் கொண்டு வந்தேன். ஹிட்டாச்சி வச்சு அடிச்சு.. மரம் வச்சு வளத்து...” ராசவடிவின் வாக்கியங்கள் ஒரு முற்றுப் பெறாத வாக்கியமாக இருக்கும் .. அந்த காடு தங்களால் தான் உருவானது என்கிற எண்ணம் தான் அவர்களுக்கும் காட்டிற்குமான உறவு.

அண்ணாச்சி விடைபெற்றுப் போனபின் அவர்களுக்குள் இருக்கும் இறுக்கம் தளர்ந்தது. “வெறுங்காலோட காடுகரை சுத்தி வாரம்ல ராத்திரிக்கு கொஞ்சம் உசுப்பு தண்ணி ஊத்துனாத் தான் சரியாவரும்” என்றபடியே தனது மது பாட்டிலை எடுத்தார் மீசைக்காரர். மதுவில் மட்டும் எல்லோருக்கும் ரகசியம் இருந்தது சேகரும், ராச வடிவும் குடிக்கா தவர்கள். மற்றவர்கள் தங்களுக்கான மதுவை பாதுகாப்பதில் கவனமாக இருப்பவர்கள் எல்லோருக்கும் மது இருக்கிறது என்ற தைரியம்தான் அவர்கள் மதுவை பொதுவில் எடுத்து வைக்கும் தைரியத்தைக் கொடுக்கும்.

அவரவர் மதுபாட்டில்களோடு அவர்கள் மாமரத்திண்ணையில் அமர்ந்தபோது அடர் இருளின் மெளனமும் உடன் அமர்ந்தது. காட்டிற்கு புதியவர்கள் என்பதால் எங்களுக்குள் ஒரு பேரச்ச இருள் இருந்தது.சுற்றிச் சுற்றி பார்த்தபடி அமர்ந்திருந்தோம். காற்றின் இரைச்சலை கவனித்தபடி இருந்த ராசவடிவு “இன்னும் ரெண்டு நாள்ல மழைவரும் சார்” என்றார். “எப்படி சொல்றிங்க” என்றான் அய்யப்பன்.

“நா எங்க சார் சொல்லுதேன் காத்து சொல்லுதுல்ல..” சிரித்தபடி ராசவடிவு இதைச் சொன்னார். “காத்து என்ன சொல்லுது” என்கிற என் கேள்விக்கு மீசைக்காரர் தனது முதல் ரவுண்டை முடித்துவிட்டு மீசையைத் தடவியபடியே பதில் சொன்னார்.

“சார் மண்ணும் தண்ணியும் காத்தும் பேசும்ல.. ந்தா கேக்குது பாருங்க.. மேகாத்து உருட்டி விசிலடிக்குதா? அந்த விசிலு சத்தம் என்ன சொல்லுது வேற என்ன.. மழ விசிலடிச்சு ரெண்டு நாள்ல வாரம்னு சொல்லுது” எனக்குள் இருந்த எழுத்தாளன் என்கிற கர்வத்தை அவர் பேச்சு உடைத்தது. அந்த மழையின் விசில் பேச்சு அத்தனை அழகாக இருந்தது. அந்த சொல்லிலிருந்து தான் அவர்களுக்குள் பயணப்படத் துவங்கினேன். அப்போது எனக்குள் இருந்த ஒற்றை பயம் திடீரென ஏதேனும் மிருகம் வந்து விட்டால் என்ன செய்வது என்பது தான். எனக்கு மட்டுமில்லை என்னோடு வந்த அனைவருக்கும் அந்த பயம் தான் ஒரு மெளனத்தை தந்திருந்தது “அய்யா திடீர்னு ஒரு மிருகம் வந்திருச்சுன்னா என்ன பண்றது.” நான் பொதுவில் இந்த கேள்வியை முன் வைத்தேன். “மனுச வாடைக்கு வராது சார்” என்கிற ராசவடிவின் வார்த்தை மீது எனக்கு நம்பிக்கை பிறக்கவில்லை. நான் சுற்றிலும் பார்த்தபடியே இருந்தேன். “மத்தது ஒன்னும் பண்ணாதுண்ணே. கரடி வந்தா மட்டும் தான் பயப்படணும்” என்ற அய்யப்பன் நந்தனைப் பார்த்து பலமாகச் சிரித்தான். அந்த சிரிப்பிற்கான காரணம் இந்தக் கதைக்குத் தேவையற்றது. “கருக்கருவா மாதிரி மீசைய எதுக்கு வளத்து வச்சிருக்கேன்.. கரடிய மிரட்டத் தானே? எம் மீசையில இருக்க ஒத்த மயித்துக்குப் பயந்து கரடி ஒரு பர்லாங்கு ஓடும்லா” என்றார் மீசைக்காரர். சித்திரைப் பாண்டி “ஆமா போன மாசம் இவரப் பாத்த கரடி இப்போ குசராத்ல இருக்கு. ஒத்த மயித்துக்கு ஒரு பர்லாங்ன்னா கணக்கு போட்டுப் பாருங்க மொத்த மசுத்துக்கும் குசராத்தத் தாண்டி எந்த காட்டுக்கோ போயிருக்கும்” என்றார்.

சித்திரப்பாண்டி பொதுவாக அதிகம் பேசுகிறவர் இல்லை. எப்போதும் அப்பாவியான ஒரு முகத்தோடும், அமைதி யோடும் இருப்பவர். அவரது வீரத்தை யயல்லாம் யாரோ ஒரு சீசாவுக்குள் அடைத்து டாஸ்மாக்கில் கொண்டு போய் வைத்து விட்டார்கள். அதில் ஒரு பாட்டிலை வாங்கி மூடியைத்திறந்தால் போதும் அவருக்கு வீரம் பொத்துக் கொண்டு வரும். குவாட்டருக்கு பத்து பேரைவெட்டுவார். அந்த ஒற்றை இரவில் அவர்கள் எங்களுக்கு காட்டை பழக்கிவிட்டார்கள்.

எல்லோரிடமும் நட்போடு பழக முடிந்த எனக்கு காட்டில் இரண்டே இரண்டு பயம் தான் இருந்தது. ஒன்று மிருகங்கள் குறித்த பயம், மற்றொன்று சேகரின் அரிவாள் மீதான பயம். சேகரின் அரிவாளை கையில் எடுத்த போது தூக்க முடியாத கனத்தோடு இருந்தது. “இத வச்சு எப்படி வெட்டுவீங்க” அப்பாவியாக நந்தன் கேட்டான்.

“அருவாளப் பாத்ததும்தான் அவனவன் அமயம் போட்டுட்டு ஓடிப் போயிருவானே அதுக்குப் பொறவு எங்கன கூடி வெட்டுதது. என்னைக்காவது ஒருநா சேகரு வெட்டுவான் நீங்க பாப்பிய” என்றார் ராச வடிவு. அவர் சொல்லுக்குள் ஒரு எள்ளல் இருந்தது.

அன்று மதியம் உளுந்தஞ்சோறும் கருவாட்டுக் குழம்பும் வள்ளித்தாயக்காளின் கைமணத்தில் ஒரு உணவு போதையைக் கொடுத்தது. வள்ளித்தாயக்கா கை பக்குவத்தில் விறகடுப்பு பேசும். வென்னி ருசிக்கும். பூமணியக்காவும் வள்ளித்தாயக்காவும் உணவுப் பொறுப்பை எடுத்துக்கொண்டார்கள். எங்களுக்குள் ஒரு இடைவெளியற்ற அன்பை அந்த உணவு உபசரிப்பு கொடுத்தது.பொழுது அடையும் போதும் பொழுது விடியும் போதும் அவர்கள் வேறு வேறு மனிதர்களாக இருந்தார்கள்.

எழுதுவதற்குத் தேவையான,ஒரு சுகமான அமைதியை அந்தக்காடு தன்னுள் பத்திரப் படுத்தி வைத்திருந்தது. எனக்கு எழுதுவதைவிட யானை பார்த்துவிட வேண்டு மென்பதுதான் பெரும் கனவாக இருந்தது.

அண்ணாச்சியின் மகன் மணிகண்டன் “அண்ணே வேலையயல்லாம் முடிச்சுட்டு ஒரு நாள் ட்ரக்கிங் போயிட்டு வாங்கண்ணே ரொம்ப நல்லா இருக்கும்” என்றான். “ஆனை வருமாடே” எனக்கேட்டேன் “நா பார்த்த தில்லண்ணே” என்றான்.யானை மீது எனக்கு ஏன் இத்தனைக் காதல் வந்ததென்று தெரிய வில்லை. அந்தக் காட்டிற்குள் இருந்த நாட்களின் கனவுகளெங்கும் யானைக் கூட்டம் வந்து பிளிறிக்கொண்டிருந்தது. “தார் சாலைல யானை நடக்கும் போது மனசு வலிக்குது தம்பி, யானை ஒரு அடியயடுத்து வைக்கறப்ப பூமிக்குள்ள ஒரு யானை போவுதுல்ல” என்பார் கோணங்கி யண்ணன். ஒரு வேளை மனசுக்குள் இருக்கும் யானை அவரது வார்த்தையிலிருந்து வந்திருக் கலாம்.

அன்று இரவு நரக்காட்டு பெல்லோசிப் பங்களா வாட்ச்மேன் வந்திருந்தார்கள். நரக்காடு நாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து பதினைந்து கல் தொலைவில் இருந்தது. காட்டுப் பாதையாக நடந்து செல்லவேண்டும். நான்கு மணிநேர நடைபயணதூரம். மதிய உணவிற்குப் பிறகு புறப்பட்டவர்கள் கருக்கலில் வந்து சேர்ந்தார்கள். இரவின் மது விருந்தில் அவர்கள் முதல் நாள் பார்த்த சருகு மான், யானை பற்றிய செய்திகள் நிறைந்திருந்தது. நாங்கள் வியப்போடு கேட்டுக்கொண்டிருந் தோம். “அந்தா இருக்கே அந்த மல தான் சார் யான மலை அங்கிட்டுப் போனா ஆனையப் பார்க்கலாம் சும்மா ஆட்டுக்குட்டி மாறி மேஞ்சிக்கிட்டு கிடக்கும். எங்கூட வாங்க சார் நா உங்களுக்கு யானை, புலி, சிங்கமெல்லாம் காட்டுதேன் எல்லாம் மான் குட்டிங்க மாதிரி பம்முனாப்ல கெடக்கும் அததுக்கு ஒரு நேரம் இருக்கு. மனுசப்பயதான் எதுக்கெடுத்தாலும் நொறநாட்டியம் பண்ணிட்டுத்திரிவான்” என்றார் பேச்சிமுத்து. அது சிங்கவனமில்லை யயன்று தெரிந்தாலும் நான் இந்தக் காட்டுக்குள்ள சிங்கமெல்லாம் கிடையாது என சொல்லிக் கொள்ளவில்லை.

மறுநாள் நானும் பேச்சிமுத்தும் காடு கிளம்பிப்போவதென்று முடிவானது. சேகர் ஜீப்ல போலாம் சார் என்றான். “அண்ணாச்சி மலங்காட்டுக்குள்ள ஒரு பொடை இருக்கு தம்பி ஒரு அஞ்சு நிமிசம் அங்கன போயி தியானம் பண்ணிட்டு வாங்க இது நம்பியாண்டவர் ஆண்ட காடு உங்களுக்கு இனுமே எல்லாம் நல்லபடியா இருக்கும்” என்றார். பிரார்த்தனை மீது எனக்கு நம்பிக்கை இல்லையயன்றாலும் அண்ணாச்சியின் வார்த்தைக்காகப் போகலா மென தோன்றியது. விலங்குகளைப் பார்ப் பதற்கு இரவு நேரம் தான் தோது என பட்டதால் எங்கள் பயணத்தை மாலையில் வைத்துக் கொள்வதென்று தீர்மானித்தோம்.

மதிய உணவு வேளையிலிருந்தே சேகர் தனது வீரதீர சாகங்களைச் சொல்லத்து வங்கினான். காட்டிற்குள் ஜீப் ஓட்டிப் போனது பற்றிய கதை மட்டும் ஒருமணி நேரத்திற்கு மேலாக ஓடியது. சில விடயங்களை சிரிக்காமல் கேட்பதற்கு அதீத சக்தி தேவைப்படுகிறது. சேகரின் பேச்சைக் கேட்க அப்படியயாரு சக்தி நந்தனுக்கும், அய்யப்பனுக்கும் இல்லை. அவ்வப்போது ஒன்றுக்கு இருப்பது போல எழுந்து போய் சிரித்துவிட்டு வந்தார்கள்.

“கேரளாவுக்கு மணல் லாரி ஓட்டுனவன் சார் எப்பேர்பட்ட வண்டின்னாலும் போன்னா போவும் வான்னா வரும்” என்றான். சேகர் ஜீப்பில் ஏறி அமர்ந்து கிளட்சை மிதித்து கியரை போடுவதற்கு பதிலாகபோ என்று சொல்லி விடுவானோ என்கிற பயம் எனக்கு இருந்தது. அப்படி எதுவும் நடக்கவில்லை.

உண்மையிலேயே ஜீப் ஓட்டுவதில் சேகர் வல்லவனாகத்தான் இருந்தான். பாதைகளற்ற பாறைகளின் மீதான பயணம் ஒரு விதமான கிலியையும், ஈர்ப்பையும் கொடுத்தது. அண்ணாச்சி சொன்ன பொடைக்கு முதலில் போகலாமென்று தீர்மானமாயிற்று.பேச்சிமுத்து ஓரிடத்தில் வண்டியை நிறுத்தச் சொன்னார். “சார் இங்கனக்குள்ள தான் எங்கயோ இருக்கு வாங்கபோவலாம்.” நாங்கள் இறங்கி மலைக்கு மேல் நடக்கத் துவங்கினோம். பேச்சிமுத்து நடை வேகத்தில் காட்டில் அவருக்கு இருந்த அனுபவம் தெரிந்தது. கொஞ்சம் நம் நடை தளர்ந்ததால் பேச்சிமுத்து கண்ணிலிருந்து மாய மாய் மறைந்து போனார். அத்தனை வேகம்...

சங்கிலித் தொடராக பிடித்த சிகரெட்டுகள் எங்களை மூச்சு வாங்கச் செய்தது. கிருபாவும் அய்யப்பனும் பின் தங்கத்துவங்கினார்கள். பேச்சிமுத்து ஒரு பத்து பதினைந்து நிமிட நடைக்குப் பிறகு வழிதப்பிவிட்டோம் என்பதை உணர்ந்தார். திரும்பிய திசையயங்கும் காடு ஒரே விதமாய் இருந்தது. இதற்குள் சரியான வழி தவறான வழியயன எப்படி கண்டுபிடிக்கப் போகிறோம் என்று எனக்குப் புரியவில்லை. ஒருவிதமான பயத்தோடு பேச்சிமுத்து அருகில் நின்று கொண்டிருந்தேன்.தூரத்தில் நந்தனும், அய்யப்பனும் சிரமத்தோடு மலையேறிக் கொண்டிருந்தார்கள்.

“வாங்க சார் இப்படி போய்ப் பார்க்கலாம்.” என்றபடி என் பதிலை எதிர்பார்க் காமல் நடக்கத்துவங்கினார் பேச்சிமுத்து. அவரது அடியயாற்றி நடப்பது தான் பாதுகாப் பானது என்று அவரை ஒட்டியே நடக்கத்து வங்கினேன். சட்டென ஒரு இடத்தில் நின்றவர் சார் பாம்பு சார் என்று ஒரு திசையில் கை காட்டினார். அவர் கை காட்டிய திசையில் ஒரு பெரிய கருந்தடியைப்போல சுமார் 12 அடி நீளத்திற்கு நெளிந்துகொண்டிருந்தது ஒரு கருப்பு நிற பாம்பு. மலைப் பாம்பைப் போல இருந்த அந்த பாம்பிற்கும் எங்களுக்கும் ஒரு 5 அடி இடைவெளியே இருந்தது. புல்வெளியில் அது கிடந்ததால் தல எது வால் எது எனத் தெரியவில்லை. அச்சத்தில் என் மயிற்கால்கள் குத்திட்டு நின்றன. நான் ஆதரவாக பேச்சி முத்துவின் கையைப் பிடிக்க யத்தனித்தேன். “பயப்படாதீங்க சார் அது நம்மள ஒன்னும் பண்ணாது” என்றார் பேச்சிமுத்து. அந்த ஆறுதல் வார்த்தை என்னை மேலும் அச்சுறுத்தியது.

பேச்சிமுத்து எதையும் கவனிக்காமல் சத்தமாக “அய்யப்பன் அண்ணாச்சி இங்கவந்து பாருங்க எம்புட்டு பெரிய பாம்பு” எனக் குரல் கொடுக்கவும் அது மெல்ல நகரத்துவங்கியது. அதன் உடல் அசைந்த விதத்தில் அது எந்தப் பக்கம் நகர்கிறது என்பதை உணர முடியவில்லை. ‘எங்கள் கால்களை நோக்கி நகர்ந்தால் அவ்வளவுதான்’ இந்த எண்ணம் மனதுக்குள் எழுந்ததுமே நான் ஒரு அடி பின்னோக்கி நகர்ந்தேன்.

பேச்சிமுத்துக்கு என் பதட்டத்தைப் பார்த்து அத்தனை சிரிப்பு வந்தது. பேச்சிமுத்து வாய்விட்டு சிரிக்கவும், பாம்பு வேகமாக எங்களுக்கு எதிர் திசையில் ஊர்ந்து ஒரு புதருக்குள் மறைந்தது. பாம்பின் வால்பகுதி புதருக்குள் போவதை நான் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது தான் கிருபாவும் அய்யப்பனும் வந்து சேர்ந்தார்கள். “பாம்பு பாக்க ஒரு கோளு வேணும் சார்வாள்” என அய்யப்பனிடம் சொல்லியபடியே “வாங்க சார் போலாம்” என்றபடி நடந்தார் பேச்சிமுத்து. ஒரு வழியாக அண்ணாச்சி சொன்ன பொடைக்கு வந்து சேர்ந்தோம். பேச்சிமுத்து உள்ளே சென்று தியானம் செய்யச் சொன்னார்... “அடியாத்தாடி நீங்க தியானம் பண்ணலன்னா அண்ணாச்சி சொல்லுலல்லாவுழ் வேண்டியதிருக்கும்” என்று பேச்சிமுத்து பதறியது எனக்குப் பிடித்திருந்தது.

நான் தயக்கத்தோடு உள்ளே சென்றேன். “சும்மா தைரியமா இருங்க சார். ஒரு பூச்சிபொட்டு வராது. நா இருக்கம்ல.” என்று தைரியம் சொன்னார் பேச்சிமுத்து. நான் பாறையில் சென்று அமர்ந்தேன். ஒரு கணம் மாதவன் அண்ணாச்சிக்காக என் நாத்திகம் கண்மூடியது.

மணிகண்டன் “ஒவ்வொரு இடத்தி லருந்தும் பாக்கறப்போ மலைவெவ்வேறயாத் தெரியும்ணே” எனச்சொன்னது சரியாகத் தானிருந்தது. அந்தப் பயணத்தில் தான் நாங்கள் எத்தனை அழகான இடத்தில் இருக்கிறோமென்று புரிந்தது.

பகல் பயணத்தைவிட நள்ளிரவு பயணம் இன்னும் இனிமையாக இருந்தது. ஜீப்பின் முன் பக்கத்தில் ஒரு பெரிய லைட் வைத்துக் கொண்டு அமர்ந்தார் பேச்சிமுத்து.

காடெங்கும் சீரியல் பல்ப்களை விதைத்தது போல விலங்குகளின் கண்கள் ஒளிர்ந்து கொண்டிருந்தன. அய்யப்பனும், நந்தனும் திருவிழாவைப் பார்ப்பது போல இருந்தது. அங்கங்கே வெளிச்சம் காட்டிக் கொண்டிருந்த விலங்குகள். ராசவடிவு “யயப்பா சேகரு... வண்டிய அப்படி அணைச்சாப்ல நிறுத்து. சார் நல்லா பாக்கட்டும்” என்றார். சேகர் வண்டியை நிறுத்தவும் பேச்சிமுத்து தன் கையிலிருந்த டார்ச்சை ஒரு வட்டவடிவில் அடித்தார். தூரத்தில் தெரிந்த இரண்டு கண்களைப் பார்த்தபடி பதட்டமான குரலில் சார்.. சார் அங்க பாருங்க சிறுத்த ஒன்னு நிக்குது என்று கத்தினான். அய்யப்பனுக்கும் நந்தனுக்கும் ஒரு வேளை அது சிறுத்தையாக இருக்குமோ என்கிற எண்ணம் இருந்தது. காரணம் கடந்த மாதத்தில் ஒரு நாள் அண்ணாச்சி தோட்டத்து வீட்டின் வாசலில் ஒரு சிறுத்தை படுத்திருக்கும் படம் தினசரிகளில் வந்திருந்தது.அதுவும் போக தினப்படி யாராவது ஒருவர் சிறுத்தை வந்து போன கதையை சொல்லிக் கொண்டிருந் தார்கள்.

எனக்கென்னவோ சேகரின் சொல்லில் நம்பிக்கை இல்லை. அவன் கொஞ்சம் உயரத்தில் ஒரு பூனையின் கண் ஒளிர்ந்தாலும் ஒட்டகம் இருக்கு என சொல்லக் கூடியவன்தான்.

“எட்டி புளுகு தான் சார் நம்பாதிய சிறுத்த வாசன நமக்கு தெரியுமில்ல நால்லாம் புழுக்கை வாசனைய வச்சு புலியோட வயச சொல்லுவேன் சிறுத்த வாசன தெரியாமப் போவுமா?” என்றார் மீசைக்காரர். அவன் கைகாட்டிய திசையில் இருந்தது ஒரு மிளாதான்.

அன்று அந்த வனமெங்கும் நாங்கள் பார்த்தது வெறும் மிளா தான். ஆனால் நூற்றுக்கணக்கான மிளா பார்த்தோம்.சில இடங்களில் பாதையோரம் இருந்த மிளாக்கள் குட்டிகளோடு உயிருக்குப் பயந்து ஓடியதைப் பார்த்தபோது இந்த பயணம் வந்திருக்கக் கூடாதோ என்று தோன்றியது. அறைக்குத் திரும்பிய போது அய்யப்பனும் இதையே சொன்னான். “ரொம்ப சொலபமா அதுகளோட சொதந்திரத்த கெடுத்துட்டு வந்துட்டோம். இது தப்புண்ணே.” அய்யப்பன் இதை சொன்னபோது என்னுள் ஒரு குற்றவுணர்ச்சி யேற்பட்டது. நான் மறுத்திருந்தால் விலங்கு பார்க்கப் போயிருக்க வேண்டியதில்லை.

மிளாக்கள் கூட்டமாக வந்து நின்று ‘எங்கள ஓடஓட துரத்துனியே ஒரு புலி எதிர்ல வந்திருந்தா என்ன ஓட்டம் ஓடியிருப்பே’ எனக் கேட்பதாகப் பட்டது. வலிமை குறைந்தவர்கள் மீது இயல்பாக ஒரு அலட்சியம் வந்துவிடுகிறது. மறுநாள் அண்ணாச்சியிடம் தொலைபேசியில் விடை பெற்று புறப்பட்டோம். “கருநாக பாம்பு பார்த்தது அதிர்ஷ்டம் தம்பி இனிமே நல்லாருப்பிய” என்றார் மாதவன் அண்ணாச்சி.

பத்துநாள் பழக்கத்தில் விடைபெறும் போது மீசைக்காரருக்கு கண்ணீர் வந்தது. “என்ன மீசக்காரரே அழுவுதிய” என்றான் நந்தன். “கண்ணுல தூசி வுழுந்துட்டுன்னு பொய் சொல்லவா சொல்லுதிய... மனசு உங்களவிட்டுப் பிரிய மல்லுகட்டுதுய்யா.. நல்லபடியா போயிட்டு வாங்க” என்றார். அவரை எளிமைப்படுத்தும் விதமாக “மீசக்காரரே அண்ணாச்சி காட்டுக்கு ஆனை வந்தா சொல்லுதியளா?” என்றேன்.

“ஏ ஆண்டவனே அது எதுக்கு இங்கிட்டு வரணும். எல்லதாண்டி எது வந்தாலும் நாம அதுக்கு தொல்லகுடுக்கம்னு அர்த்தம்யா அது அது, அது அது எடத்துல இருக்கட்டும்” என்றார். அவர் சொல்வது சரிதான் என்று தோன்றியது. காட்டானை பார்க்கும் ஆசையை அங்கேயே விட்டுவிட்டு வந்தோம்.