“இந்த உலகம் உங்களுக்கானது அல்ல. உங்கள் எதிர்காலத் தலைமுறைக்கானது”

- யாரோ ஒரு அறிஞனின் இந்தப் புவியை ஆழமாக நேசித்த ஒருவனின் வரிகளில் ஒவ்வொரு எழுத்துக்கிடையேயும் கூர்மையாக செருகி நிற்கும் அக்கறை மிகுந்த அச்ச உணர்வே இந்தக் கட்டுரைத் தொடருக்கான அச்சாணி.

இடையறாது சுழல்கின்ற இந்தப் பூமிப்பந்தில் வருங்கால தலைமுறைக்கென்று நாம் எதை விட்டு வைக்கப்போகிறோம்? ஆட்சியாளர்களும், அதிகாரவர்க்கமும் இந்த மண்ணில் நம்மை மனிதனாக வாழ அனுமதிக்கிறார்களா?

பொழியும் பனியை புறந்தள்ளிவிட்டு அடர் இருள் அகலாத அதிகாலையில் மழைநீர் எட்டிக்கூடப் பார்த்திராத வீட்டுக்கான வெள்ள நிவாரணம் பெறுவதற்காகவும், இலவசத்துக் காகவும் வரிசையில் காத்துக்கிடக்கும் அடிமை களாக நாம் இருந்தால் -

நமது பிள்ளைகளும், பேரன், பேத்திகளும் ரொட்டித் துண்டுகளுக்காக தெருவில் அடித்துக் கொள்ளுகிற நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்பதை பெரும்பான்மை சமூகம் உணர்ந்தி ருக்கிறதா?

இந்த தேசத்தில் எண்ணற்ற கேள்விகள்! எதற்கும் பதில் இல்லை. எண்ணிக்கை யிலடங்கா சிக்கல்கள். எதற்கும் தீர்வில்லை. ஏன்? சிக்கல்களை தீர்த்து குடிமக்களை தன்னிறைவு பெற்ற மாந்தர்களாக வாழ வைக்கிற நோக்கம் ஆட்சியாளர்களிடமும் இல்லை. அவர்களை அரியணைக்கு அனுப்பிவைத்த அடிமைக் கூட்டத்துக்கும் இல்லை.

இந்த நாட்டின் கேடுகளுக்கு, அன்றாடம் விளைகிற கெடுதல்களுக்கு கெட்டவர்கள் என்று சுட்டிக்காட்டப்படுகிற சிலர் மட்டும் காரணமல்ல. எது நடந்தாலும் விலகி நின்று வேடிக்கை மட்டுமே பார்க்கிற விமர்சனம் செய்வது மட்டுமே நமது கடமை என்று எண்ணுகிற, நம்மால் என்ன செய்ய முடியும்? நமக்கேன் வம்பு? என்று புலம்பி ஒதுங்குகிற நல்லவர்களால் தான் இங்கே தீய சக்திகள் நிரந்தரமாக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுகிற அவலம் அரங்கேறுகிறது.

சென்னையில் ஆங்கிலோ இந்தியன் பள்ளி ஒன்றின் ஆசிரியரை ஒன்பதாம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்திக் கொலை செய்ததற்கு யார் பொறுப்பு? பள்ளி மாணவன் தன் கையில் பேனாவுக்குப் பதிலாக கத்தி ஏந்தக் காரணமானவர் யார்? இந்த சமூகம் அங்கீகரித்து கர்வத்துடன் கட்டிக்காக்கிற கல்வித்திட்டமும். மனிதத்தை கொன்றுவிட்டு வெறும் படிப்பாளி களையும், அறிவாளிகளையும் மட்டுமே உருவாக்குகிற அக்கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்துகிற பள்ளி நிர்வாகங்களும், போலித்தனமான மேதைமகளில் பெருமை கொள்கிற பெற்றோரும்தான் பொறுப் பேற்கவேண்டும்.

சூழ்நிலையை வைத்து வாதிடும்போது இந்த உலகில் யாருமே குற்றவாளி இல்லை என்றாகிவிடும். என்றாலும் கூட மாணவன் கொலைசெய்யலாமா? அதுவும் ஆசிரியரை கத்தியால் குத்தலாமா? என்று பதறுகிறவர்கள் சற்று சிந்தித்துப்பார்க்க வேண்டும். உணவுப் பொருட்களால் உடலுக்கு ஒவ்வாமை ஏற்படும்போது மரணம் நிகழவும் வாய்ப் பிருக்கிறது. ஒருவருக்கு உணவாக இருப்பது இன்னொருவருக்கு நஞ்சாக இருக்கிறது. என் உடல் ஏற்காத ஒன்றை நீங்கள் எனக்கு வலுக்கட்டாயமாக புகட்ட முயன்றால் என்னை கொல்ல முயற்சிக்கிறீர்கள் என்று பொருள். அவ்வாறே மனதுக்கும் அறிவுக்கும் கூட ஒவ்வாமை உண்டு. இந்தி - அந்த மாணவனுக்கு மட்டுமல்ல, இந்த மண்ணுக்கே ஒவ்வாதது.

21-04-1938-ல் பள்ளிகளில் இந்தி கட்டாயப் பாடமாக இருக்கும் என்று ராஜாஜி உத்தரவு பிறப்பித்தபோது தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. அந்நாளில் எழுபத்து மூன்று பெண்கள் உட்பட 1269 பேர் சிறைப்பட்டு கடுமையாக போராடி 21.02.1940-ல் கட்டாய இந்தி எனும் உத்தரவை ரத்து செய்யும் நிலையை உருவாக்கினார்கள். சிறையிலே அடைக்கப்பட்டிருந்தபோதுதான் மொழிப்போர் ஈகியர் தாளமுத்துவும், நடராஜனும் உயிரிழந்தனர்.

மீண்டும் 1965 ஜனவரி 26 முதல் இந்தி ஆட்சி மொழி ஆகும் என்ற அறிவிப்பை கேட்டதும் துடித்தெழுந்த தமிழ்நாடு போர்க் கோலம் பூண்டது. பெரியவர் பக்தவச்சலம் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சியை இழக்கவும் இந்தி எதிர்ப்புப் போராட்டமே வலுவான காரணமாக அமைந்தது.

ஜனவரி 25, 1964 - ல் திருச்சியில் ஆசிரியர் சின்னசாமி தமிழுக்காக தீக்குளித்தார். அந்த நெருப்பு தமிழகமெங்கும் பரவியது. ஓராண்டு கழித்து 1965 ஜனவரி 26 கோடம்பாக்கம் சிவலிங்கம் விருகம்பாக்கம் ரங்கநாதன் தீக்குளித்தனர். ஜனவரி 27, 1965ல் மூவாயிரம் மாணவர்கள் இந்தித் திணிப்பை கண்டித்து பேரணி மேற்கொண்டனர். 200க்கும் மேற்பட்ட ஆயுதப்படை போலீசார் பேரணியை கலைக்க கண்ணீர் புகை வீசினர். மாணவர்கள் அசரவில்லை. பின்வாங்க வில்லை. ஆத்திரமடைந்த காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் ராஜேந்திரன் துப்பாக்கிச் சூட்டில் பலியானார் - தமிழர் நிலம் போர்க்களமானது.

10-02-1965 ஒரே நாளில் ஏழு இடங்களில் துப்பாக்கிச்சூட்டில் 24 பேர் பலியானார்கள்.

12-02-1965 பன்னிரெண்டு ஊர்களில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 31 பேர் பலியானார்கள். ‘தமிழ் வாழ்க, இந்தி ஒழிக’ என்று தாமாக உயிர்துறந்த மொழிப்பற்று மிக்க ஈகியர் மற்றும் துப்பாக்கிச்சூட்டில் பலியான அறுபத்தி மூன்று ஈகியரோடு ஏறத்தாழ முன்னூறுக்கும் மேற்பட்ட தமிழர்களின் வீரத்தியாகத்தை கண்ட நேருவும் சாஸ்திரியும் இந்தி பேசாத மக்கள் விரும்புகிறவரை ஆங்கிலமே துணைமொழியாக நீடிக்கும் என்று உறுதிமொழி அளித்தனர். அதன்பிறகே 12-02-1965ல் மொழிப்போர் முடிவுக்கு வந்தது. பதினெட்டு நாட்கள் உள்நாட்டுப்போர் போல நடந்து முடிந்த போராட்டத்தில் தமிழுக்காக எண்ணற்றோர் உயிர் தந்து இந்தி புகுந்து விடாமல் தடுத்த இம் மண்ணில் மெட்ரிக், சி.பி.எஸ்.இ., ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் மூலமாக இந்தி அரக்கி வேறு வடிவில் நுழைந்துவிட்டாள்.

எம்மாணவனுக்கு ஒவ்வாத நஞ்சை புகட்டி அவனை கொல்லத் துணியவைத்தது உங்கள் கல்வித் திட்டம்.

தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது

இன்னுயிர் நீக்கும் வினை.

என்ற வள்ளுவன் மொழிக்கேற்ப தான் செத்தாலும் இன்னொரு உயிரைக் கொல்லத் துணியாத எமது கைகளில் கொடியக் குறுவாளை கொடுத்தது யாருடைய தவறு?

எங்கும் எழுகிற கூக்குரல்கள் ஆசிரியர்களுக்கு பாதுகாப்பில்லை என்று அலறுவதை கேட்கும்போது, வேதனையாக இருக்கிறது.

சிறை போன்ற மதில்சுவர்களை கொண்ட பள்ளிகளுக்குள் சின்னஞ்சிறியப் பிஞ்சுகளை கல்வியின் பெயரால் சித்ரவதை செய்கிறவர் களிடமிருந்து குழந்தைகளுக்கு பாதுகாப்புப் பெறுவது எங்ஙனம்?

நாம் ஒட்டுமொத்த ஆசிரியர் சமூகத்தையும் குற்றம் சொல்லவில்லை. ஆனால் இன்று ஆசிரியப்பணி வெறும் சம்பளம் பெறுகிற வேலை அல்ல என்பதை உணர்ந்தவர்கள் எத்தனை பேர்?

எல்.கே.ஜி. வகுப்பு குழந்தைகளிடம் எந்நேரமும் எரிச்சலோடு பாய்கிற ஆசிரியர்களை நீங்கள் பார்த்ததே இல்லையா?

சரியான சம்பளம் இல்லை, பள்ளி நிர்வாகம் மரியாதை தரவில்லை, ஆசிரியர்கள் புறணி பேசுகிறார்கள், தலைமை ஆசிரியர் திட்டிவிட்டார், வீட்டிலே கணவன் சண்டை போடுகிறான். உங்களுக்கு எரிந்துவிழ ஆயிரம் நியாயமான காரணங்கள் இருக்கும். அதற்கு பாவம் அந்த பிஞ்சுகள் என்ன செய்யும்? வீட்டில் நாம் அழகுத் தமிழில் அன்பாகவும், பணிவாகவும் பேசுவதற்கு கற்றுத் தந்து பள்ளிக்கு அனுப்பினால் வீடு திரும்பும் பிள்ளை “ஏய் தொலைச்சுப்புடுவேன், தோலை உரிச்சுப்புடுவேன்.” என்று ஆசிரிய மொழியில் பேசுவது கேட்டு நீங்கள் அதிர்ந்து நின்றதே இல்லையா?

நீங்கள் கற்றுத்தரும் பாடம் எங்கள் பிள்ளைகளை மகாத்மா ஆக்குகிறதோ இல்லையோ, அவர்களை மனிதனாக ஆக்குமா? அத்தகைய தகுதி உங்களுக்கும் நீங்கள் கற்றுத்தரும் பாடத்துக்கும் இருக்கிறதா?

ஆசிரியர் பணிக்கான அடிப்படை தகுதிகள் வெறும் படிப்பும், மதிப்பெண்களும் மட்டும்தானா? அதனால்தான் பெண்களின் மதிப்புணராத பலர் பணியிடை நீக்கமும், பணிநீக்கமும் செய்யப்படும் அவலநிலை ஏற்படுகிறது.

கற்றுத்தருதல் என்றால் பிறருக்கு சொல்வது மட்டுமல்ல; தானும் சொல் வழி நிற்பது. பாடம் என்பது நடத்துவது மட்டுமல்ல. பிறருக்குப் பாடமாக வாழ்ந்துக்காட்டுவது என்பதை உணர்ந்தவர்கள் எத்தனை பேர்?

சென்னையில் பிரபலமான கல்லூரி ஒன்றில், துறைத்தலைவர் பொறுப்புக்கு மூப்பு அடிப்படையில் தன்னோடு போட்டியாக இருந்த ஒரு பேராசிரியர் மீது மூன்று பெண் பேராசிரியர்கள் சேர்ந்துகொண்டு பொய்யான புகார் ஒன்றை அளித்தார்கள். முன்னுரிமையில் ஒரே ஒரு ஆண் மட்டும்தான் போட்டிக்கு வருகிறார். அவர் மீது புகார் கொடுத்து விட்டால் தகுதி நீக்கம் செய்யப்பட்டு, போட்டியின்றி சுலபமாக தனது தோழி துறைத் தலைவர் ஆகிவிடலாம் என்று நரித் தந்திரத்தோடு தனக்கும் ஒரு காவல் துறை அதிகாரிக்கும் இடையே உள்ள நெருக்கமான உறவை பயன்படுத்தி அந்த ஆண் பேராசிரியர் மீது காவல்துறை நடைவடிக்கை மேற்கொண்ட பெண்மணியை ‘பேராசிரியர்’ என்று சொல்வதற்கு உங்களுக்கு நாக்கு கூசுகிறதா இல்லையா?

திருவாரூர் மாவட்டத்தில் ஒரு கல்வி நிறுவன நிகழ்ச்சியில் பேசுவதற்காக நான் சென்றிருந்தேன். அங்கு என்னை சந்தித்த திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு ஆசிரியை மாணவர்கள் பற்றியும், கல்வித்தரம் பற்றியும் பேசிக் கொண்டிருந்தபோது வேதனையோடு சொன்னார்:

“எங்க ஸ்கூல்ல வேலை பாக்குற ஒவ்வொரு சாருக்கும் வீட்ல ஒரு ஒய்ஃப், ஸ்கூல்ல ஒரு ஒய்ஃப். எல்லோருமே கல்யாணம் ஆனவர்கள்தான்” இவர்களிடம் படிக்கும் பிள்ளைகள் எதை கற்றுக் கொள்வார்கள்?

கல்வித்திட்டமும், கல்விக்கூடங்களும் மாறாமல் கொலை செய்த மாணவனை மட்டும் கருவின் குற்றம் என்று விரல் நீட்டுவது நியாயமா?

ஒரு நாட்டின் பாதுகாப்பு என்பது ராணுவம் மட்டுமல்ல. ஒழுக்கமும், உயர்குணங்களும் நிறைந்த கற்றறிந்த மேன்மக்கள். அவர்கள்தான் நாளைய சமுதாயத்தை வடிவமைக்கிற வல்லுனர்கள். மேன்மக்களாகிய ஆசிரியர்கள் வழி நடக்கும் தலைமுறை வெறும் பொருள் தேடி ஓடும் கருவிகளாக, பணம் ஈட்டும் இயந்திரங்களாக இருப்பதில் எனக்கு சம்மதமில்லை.

ஒழுக்கம் என்பது எது? அதன் வரையறை என்ன? ஒழுக்கம் என்றாலே அது ஆண் பெண் தொடர்புடையது என்பதே பெரும்பான்மை யானவர்களின் கருதுகோளாக உள்ளது.

ஒழுக்கம் என்பது சுயநலமின்மை; பொது நலம் கருதுதல்.

சுயநலமின்மை என்பதை ஒழுக்கமாக மனம் ஏற்க மறுக்கிறது, ஏன்? நம்மில் அனைவருமே ஒழுக்கமற்றவர்களாக சுட்டப்படுவோம்.

நேர்மை என்பது கொள்கையாக இருக்கும் வரை பலருக்கு வசதியாக இருக்கிறது.

தேவைக்கேற்ப கொள்கை மாறும். நேர்மை குணமாக இருக்கவேண்டும் என்றால். பிறர் குணத்தை நாம் வடிவமைக்க முடியாது.

சுயநலமின்மை, நேர்மை, மாந்த நேயம் யாவும் பண்புநலனாக இருந்தால் சமூகம் சரியான பாதையில் பயணிக்கும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பாதையாக, பயிற்று விக்கப்பட்ட பாடமாக இருக்கும்போது சறுக்கல் இயல்பாகிறது.

சுயநலமே எல்லாவித ஒழுக்கக்கேடு களுக்கும் அடிப்படை. என் வீட்டுக் கூரைக்கு தீ பரவாதவரை எனக்கு பிரச்சினை இல்லை. இந்த உலகம் இனியது. இந்த உலகம் நல்லது என்ற மனோபாவம் ‘யாருக்கும் எதுவும் தராது எல்லாவற்றையும் தானே அனுபவித்துவிட வேண்டும் என்று துடிக்கும் துர்க்குணம்.’ பொருள் சேர்த்தல் தவிர வேறெந்த நோக்கமுமின்றி வாழப்பழகும் மனம். பணத்தின் மீது வெறி உண்டாகும் போது மனத்தூய்மை கெடுகிறது. பிறிதொரு மனிதனின் ரத்தம் ருசிக்கிறது. பணம் நஞ்சை விட கொடியது. ஏன்? நஞ்சு வாங்குவதற்கும் பணம் தேவைப் படுகிறது. தேவைக்கேற்ப பணம் என்பதை மீறி பணத்தேவையே முதன்மையாக, சொத்து குவிப்பது மட்டுமே வாழ்க்கையின் குறிக் கோளாக புகட்டப்படுகிறது. எனவே பணத்தைத் தேடி ஓடுகிறவர்களாகவே மனிதர்கள் வளர்கிறார்கள். அதற்கேற்பவே கல்வித் திட்டம் வரையறுக்கப்படுகிறது.

இந்தக் கல்வி முறை இரண்டு வகையான அடிமைகளை உருவாக்குகிறது. ஒன்று, அன்னிய தேசிய முதலாளிகளிடம் கைகட்டி சம்பளம் வாங்குகின்ற அடிமைகள். இன்னொன்று உள்நாட்டு முதலாளிகளுக்கு சேவகம் செய்து பிழைக்கின்ற அடிமைகள். ஆக நமது பிள்ளைகளை கூலிகளாக, அறிவை விற்றுப்பிழைக்கிற அடிமைகளாக உருவாக்குகிற கல்விக்காகத்தான் நாம் பரக்கப் பரக்க பொருள் தேடுகிறோம்.

பள்ளிக்கூடம், கல்லூரிகளை விட்டு வெளியேறிய பின்பும் எது மனதில் நீங்காமல் இருக்கிறதோ அதுதான் கல்வி. அப்படிப்பட்ட கல்வி இங்கே வழங்கப்படுகிறதா?

ஆத்திச்சூடியும், கொன்றைவேந்தனும், மூதுரையும் மழலை மனதில் பதிந்தால் அவர்களது எதிர்காலம் நல்ல வழியில் பயணிக்கும். நர்ஸரி ரைம்ஸ்கள் சொல்லித் தருவது என்ன?

நல்லொழுக்க வகுப்புகள் மூலம் புகட்டப்பட்ட நீதி எங்கே போனது?

இன்றைக்கு கல்விச்சாலைகளில் புகட்டப் படும் கல்வி தன்னம்பிக்கை ஊட்டுவதாக இருந்தால் எண்ணற்ற சுயமுன்னேற்ற நூல்கள் எதற்காக எழுதப்பட வேண்டும்?.

உங்கள் கல்வி மாணவர்களை தனித்து சிந்திக்கிறவர்களாக தங்கள் வாழ்வை தாமே தீர்மானித்து, முடிவெடுக்கிறவர்களாக நம்பிக்கைத் தரும் நாளைய தலைவர்களாக உருவாக்குவதாக அமைந்தால் ஏன் இளம் வயதில் பலர் தற்கொலை முடிவை தேர்வு செய்கிறார்கள்?

ஆசிரியை உமா மகேஸ்வரியின் இழப்பு வேதனைக்குரியதுதான். அன்பான நல்ல குணமுடைய அந்த ஆசிரியையின் உயிர்தியாகம் உங்களுக்கு சொன்ன பாடம் என்ன?

அவருக்காக வருந்துவதாகச் சொல்லி அவர் பெயரை பயன்படுத்தி தமது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள நினைப்பவர்கள், தேர்வு பயத்தால் தற்கொலை செய்து கொண்ட லோகேஷ் என்ற மாணவனின் உயிருக்கு என்ன பதில் சொல்வீர்கள்?

அடையாறு அருகில் இருக்கும் ஒரு மகளிர் கல்லூரியில், மாணவிக்கு திருடி என்று ஆசிரியை பெயர் சூட்டி உடை களைந்து நிற்க வைத்து அவமானப்படுத்தியதால், செய்யாத தவறுக்கு வெட்கி மனம்குடைந்து உயிர்துறந்த ஏழை மாணவியின் குடும்பத்திற்கு உங்கள் பதில் என்ன?

இங்கு எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறு எதையோ சீர்திருத்த முயற்சிப்பதுதான் எல்லாவற்றுக்கும் அடிப்படைப்பிரச்சினையாக இருக்கிறது.

எது நடந்தாலும் பழி சுமத்த இருக்கவே இருக்கிறது திரைப்படம். பிறகென்ன? சினிமாத்தான் கெடுக்கிறது. சினிமாத்தான் சொல்லித் தருகிறது. சினிமாத்தான் சீரழிக்கிறது. மற்றவை எல்லாம் சரியாகவே இருக்கிறது என்று சொல்லிவிட்டு அடுத்த செய்திக்காக காத்திருக்க வேண்டியதுதான். எவன் கொலைசெய்தாலும், இவர்களாகவே அவனிடம் ஒரு திரைப்படத்தின் பெயரைச் சொல்லி, அதுபோல செய்தாயா? என்று கேட்டுவிட்டு, பிறகு அதையே செய்தியாக்கிவிடுவது வழக்கமாக இருக்கிறது.

அது எப்படி கொலை செய்பவனுக்கும், கடத்துபவனுக்கும் மட்டும் சினிமா சொல்லித் தருகிறது?. அரசியல் செய்கிறவர்களுக்கும், ஆட்சி நடத்துவர்களுக்கும் காவல்துறையில் சேவை செய்பவர்களுக்கும் மட்டும் சினிமா சொல்லித் தருவது புரியாமலே இருக்கிறது என்றுதான் தெரியவில்லை.

காவல்துறையின் விசாரணை முறையும் அவர்கள் செய்தி வெளியிடும் முறையும் நமக்கு தெரிந்தவிஷயம். ஆனால் அவர்கள் தருகிற செய்திகளை முழுமையாக நம்புகிற மக்கள், எளிதாக திரைப்படம்தான் சமூகத்தைச் சீரழிக்கிறது என்று ஏற்பதன் மூலமாக காவல்துறையின் திசைதிருப்பும் நோக்கத்தை எளிதே நம்பி விடுகிறார்கள் இல்லையயன்றால் இங்கே கல்வித்திட்டம் மட்டுமல்ல சட்டம், நீதி, நிர்வாகம், ஆட்சி எதுவுமே முறையாக இல்லை என்பதை மக்கள் எப்போதோ உணர்ந் திருப்பார்கள். எதன் மீதும் வெகுமக்கள் தீவிரமாக சிந்தனையை செலுத்திவிடக் கூடாது என்பதே ஆட்சியாளர்களுக்கும், அவர்களுக்கு காவலர்களாக இருப்பவர்களுக்கும் முதன்மை நோக்கம்.

அதனால்தான் அஹிம்சை வழியில்தான் விடுதலை பெற்றோம் என்று நாம் இன்னும் அசைக்கமுடியாமல் நம்புகிறோம். நாம் அதை நம்பவில்லை என்றால் ஆட்சி அதிகாரம், கோட்டை, கொத்தளங்கள் யாவும் அசைந்து விடும். எனவே அவர்கள் திசை திருப்பும் வேலையை எப்போதும் செய்வார்கள்.

திரைப்படம்தான் கொலை செய்யக் கற்றுத் தருகிறது என்பவர்களுக்கு ஒன்று சொல்கிறேன். எந்த ஒரு திரைப்படத்திலும் அப்பாவியை, நல்லவனை, ஒரு ஆசிரியனை, சமூகத்துக்காக வாழ்பவனை கதாநாயகன் கொல்வதாக சித்தரிக்கவில்லை. ஐந்து கிலோ அரிசியை தூக்க முடியாத கதாநாயகன், பத்துப்பேரை அடிப்பதாக சித்தரிக்கிறார்கள்; வெட்டுவதாகக் காட்டுகிறார்கள். ஆனால் எந்த நாயகனும் நல்லவனை வெட்டுவதில்லை மாறாக மக்களை துன்புறுத்துபவனை, கொள்ளை அடிப்பவனை, பெண்ணை கெடுப்பவனை, மோசமான அரசியல்வாதியை, அயோக்கியத்தனம் செய்யும் காவல்துறை அதிகாரியை எதிர்த்துக் கேட்பவனே நாயகனாக சித்தரிக்கப்படுகிறான். திரைப்படம் பார்த்துக் கெட்டுப்போகும் சமூகத்தைச் சேர்ந்த அறிவு மிக்க பெருமக்கள் ஏன் நாயகன் செய்வது போல அநீதியை எதிர்த்துக் குரல் கொடுக்க முன்வருவதில்லை; மக்களை ஏமாற்றுகிறவனை ஏன் கொல்லத்துணிவதில்லை?

ஆட்டோ ஓடவில்லை என்றால் கண்ணாடியை சரிசெய்தால் போதும் எனும் போது சிரிக்கிறீர்களே, அப்படித் தானிருக்கிறது சினிமா கொலை செய்யத் தூண்டுகிறது என்பதும். புலனாய்வு செய்யமுடியாத வழக்கில் - கொலைக்குற்றவாளி ரயிலில் அடிபட்டு செத்தான் என எழுதி கோப்புகளை மூடுவது போல ஓசோன் ஓட்டையை சிமெண்ட் பூசி அடைத்துவிட முயற்சிப்பது போல பிரச்சினையின் ஆணிவேர் எது என்று அலசாமல் எதிரே மாட்டப்பட்டிருக்கும் முகமூடியை எடுத்து மூடி உருவம் மாற்ற முயற்சிப்பது தான் எந்த சிக்கலும் இந்த மண்ணை விட்டு அகலாமல் நீறு பூத்த நெருப்பாகவே கனன்று கொண்டிருக்கக் காரணம்.

நமது கவலை என்ன? மெக்காலே கல்வி முறையில் செக்கடிக்கும் எதிர்கால தலைமுறை அறிவுள்ளவர்களாக இருப்பார்கள். ஆனால் மனிதர்களாக இருப்பார்களா? என்பதுதான் நம்முன்னே தலைவிரித்தாடும் கேள்வி.

எதிர்காலத்தைப் பற்றிய அச்சம் எல்லோருக்கும் இருக்கிறது. பெற்றோருக்கு தன் பிள்ளையின் எதிர்காலம் குறித்த கவலை, பிள்ளைக்கு தனது தேர்வு குறித்த கவலை, இளைஞனுக்கு வேலை குறித்தும் நிரந்தர வருமானம் குறித்தும் கவலை, பெண்ணுக்கு திருமணம் குறித்து கவலை, அரசியல் வாதிகளுக்கு தேர்தல் குறித்த கவலை, முந்தைய ஆட்சியாளர்களுக்கு ஊழல் விசாரணை குறித்தும், வருமான வரி சோதனை குறித்தும் கவலை. எனவே எல்லோருக்கும் எதிர்காலம் குறித்து அச்சம் இருக்கிறது. ஆனால் யாருக்கும் இந்த மனித சமூகத்தின் எதிர்காலம் பற்றியோ நம்மையும் நமது அத்துமீறல்களையும் தாங்கிக்கொண்டு சுழல்கிற பூமிப்பந்தின் எதிர்காலம் பற்றியோ அக்கறை இருக்கிறதா?

நிறைய நிறைய பணம், பெரிய பெரிய பங்களாக்கள், ஆடம்பர கார்கள், வெளிநாட்டு முதலாளிகள் விரைந்து செல்ல தங்க நாற்கர சாலைகள், விண்ணை மிரட்டும் தொழிற்சாலைகள் போதுமா?

வயிறு நிறைவது எங்ஙனம்?

பயிர் விளைவது எப்படி?

இப்போதைய நிலையை விட கி.பி.2050 ல் மக்கள் தொகை இரண்டு மடங்காகும். மூன்று மடங்கு உணவு உற்பத்தி தேவை ஏற்படும்.

நிலம் வளருமா?

விளைநிலங்கள் சிறப்பு பொருளாதார மண்டலங்களாக, விரிவாக்கப்பட்ட வானூர்தி நிலையங்களாக, சாலைகளாக, வர்த்தக மையங்களாக, வீடுகளாக, கட்டிடங்களாக உருமாறி விட்டன. கட்டுரையின் துவக்கத்தில் சொன்னது போல ரொட்டித்துண்டுகளுக்காக அடித்துக் கொள்ளும் தலைமுறையை தான் உருவாக்கப் போகிறோமா?

நாட்டை ஆள்கிற நடுவண் அரசு, அடியாட்களை வளர்ப்பது போல பிரச்சினை களை வளர்த்தெடுக்கிறது. தேவைப்படும் போது, அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழும் போது அந்த எழுச்சியை திசை திருப்பும் கருவியாக ஒவ்வொரு பிரச்சினையுமே பயன்படுத்தப்படுகிறது.

அடிப்படைக் கல்வி இல்லை. எண்ணற்றோர்க்கு மூன்று வேளை உணவு இல்லை.

நிறைவான சுகாதார வசதி இல்லை.

இலவச மருத்துவ சேவை இல்லை.

கோடிக்கணக்கானோர்க்கு வீடு இல்லை.

கழிப்பிட வசதி இல்லை, மின்சாரம் இல்லை

வாழத்தான் வழியில்லை என்றால் -

செத்தவனை புதைப்பதற்கும் கூட இடமில்லை. எப்படி இந்த நாடு வல்லரசாகும்?

அணு ஆயுதங்களை குவித்து வைப்பதால்

அணு உலைகளை திறப்பதால்

வல்லரசாகிவிட முடியுமா?

மக்கள் நலனில் அக்கறை செலுத்தாத அரசு நல்லரசாகவும் முடியாது, வல்லரசாகவும் முடியாது. பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியரின் தற்கொலை. விவசாயிகள் தற்கொலை. ஆசிரியரை கத்தியால் குத்தி தன் வாழ்வை சூன்யமாக்கிக்கொண்ட மாணவன்.

நெருங்கிப் பழகிய தோழியை நாசமாக்கிய கயவர்கள்.

சட்டசபையில் ஆபாசப்படம் பார்த்த அமைச்சர்களின் அநாகரீகம்

ஆளும் மத்திய அரசின் ஊழல் அசிங்கங்கள் அணு உலைக்கு எதிராகப் போராடும் மக்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் ஊடக பயங்கரவாதம்.

சபரிமலைக்கு அய்யப்பனை தேடிப்போன தமிழ்நாட்டு பக்தன் வெந்நீர் ஊற்றிக் கொல்லப்படும் கொடூரம், அன்றாடம் செய்தியாகிவிட்ட மீனவரின் படுகொலை, தமிழர்களைக் கொல்ல இலங்கைக்கு பல்லாயிரம் கோடி வழங்கிய மத்திய அரசு, கடலூரில் தானே புயலால் பாதிக்கப் பட்டவர்களுக்கு தேவையான நிவாரண நிதியை வழங்க மறுக்கும் மூர்க்கத்தனம்.

புயலின் சீற்றத்தால் சீரழிந்து நிலைகுலைந்து கிடக்கும் கடலூர் மாவட்ட பகுதிகளை கவனிக்க நாதியில்லை. சங்கரன்கோவில் தொகுதியை கவனிக்கவோ 32 அமைச்சர்கள்.

எப்போதுமே புலம்புகிறார்கள், அழுகிறார்கள், ஆதரவற்ற அபலைகளாக தவித்துத் திரிகிறார்கள். இந்த மண்ணில் கண்ணீர் சிந்தவும், வியர்வை சிந்தவும், இரத்தம் சிந்தவும் மட்டுமே அனுமதிக்கப்பட்ட தமிழர்கள். இதற்கெல்லாம் என்ன மாற்று?

நாமே மாற்று!

அடிப்படை மாற்றம்!

அமைப்பு மாற்றம்!

அரசியல் மாற்றம்!

தலைகீழ் மாற்றம்! அதுவே புரட்சி!

மக்கள் புரட்சி என்பது எப்படி இருக்கும் என்பதை பார்த்துவிடவேண்டும் என்ற ஆசை ஒருவேளை ஆள்பவர்களுக்கு ஏற்படுகிறதோ என்று கருதத்தோன்றுகிறது.

வல்லாதிக்கக்கனவோடு அடிமைப்பட்டுக் கிடக்கும் தேசத்தின் பொருளாதார அடிமைகளே! நாம் செய்யப்போவது என்ன?

பாலுக்கு ஏங்காத குழந்தையும் படிப்பிற்கு ஏங்காத பிள்ளையும் வேலைக்கு ஏங்காத இளைஞனும் வாழ்வதே சுதந்திர நாடு.

இது சுதந்திர நாடா? சொந்த மக்களையே கொன்று புதைக்கும் சுடுகாடா?

கேள்விகள் உங்களை துரத்தட்டும்...

எந்த கலைவடிவத்தின் மூலமாகவும் மக்கள் பிரச்சினை முதன்மையாக பேசப்பட வேண்டு மென்பதே எனது நோக்கம். அதனடிப் படையில் இந்த தேசத்தின் பிரச்சினைகளை எழுத உட்கார்ந்தால் தலையை சுற்றி தீப்பிடிக்கிறது. தேசத்தின் தேகமெங்கும் தொண்ணூறு விழுக்காடு தீக்காயங்கள் ஆறா ரணமாக, மாறா தழும்பாக புரையோடிக் கிடக்கும் புண்கள்.

ஆனாலும் நாம் கிரிக்கெட் பார்க்கிறோம், குடித்து மகிழ்கிறோம்.

குடிப்பதை தற்காலிகமாக நிறுத்த மாலை போட்டுக் கொண்டு, கேரளாவிற்குப் போய் அடி வாங்குகிறோம்.

உங்கள் பகுதியில் எத்தனை மணி நேரம் மின்வெட்டு? விசாரித்துக் கொள்கிறோம். பிராபாகரன் இருக்கிறாரா? இல்லையா? வினவிக்கொண்டு விடை பெறுகிறோம். எதற்கும் விடை தேடுவதே இல்லை. பிறகெப்படி விடியும்?

Pin It