முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் அண்மைக் காலச் செயற்பாடுகள் தமிழுணர்வாளர்களுக்கு வருத்தமும் அதிர்ச்சியும் உண்டாகச் செய்துள்ளன.

கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது தான் என்று சான்றிதழ் வழங்கியதோடு, கூடாது கூடங்குளம் என்று போராடி வரும் மக்களை மயக்குவதற்கான ஒரு திட்டத்தையும் வெளியிட்டார் கலாம். அவர் அணு அறிவியலர் அல்லர் என்பதை அறியாத பலர் ‘அறிவியல் மேதை கலாமே சொல்லி விட்டார்’ என்று பேசுகின்றனர்.அரசு சார்பானவர்களைத் தவிர பெரும்பாலான பிற அறிவியலர் அணுமின் உலைகளின் ஆபத்தைச் சுட்டியே வருகின்றனர்.

இடிந்த கரையிலும், கூடங்குளத்திலும் நெஞ்சுறுதியும் நேர்மைத் திறமும் கொண்டு பேராடி வரும் மக்களில் எவரும் கலாமின் ‘அறிவியல்’ வாதங்களுக்கோ, ஆசை வார்த்தை களுக்கோ மயங்கவில்லை. அரசும் அவரது திட்டம் குறித்து வாய் திறக்கவில்லை என்ற நிலையில் அவர் அடுத்த வேலைக்குப் போய் விட்டார். போன இடம் கொழும்பு. சிங்கள அதிபர் இராசபட்சே விடுத்த அழைப்பை ஏற்று இலங்கைக்குச் சென்றார் அப்துல் கலாம். அங்கு அவர் தமிழர்கள் இனக் கொலையுண்டதற்கு நீதி கேட்டாரில்லை, ஏனென்றால் அது பற்றி அவருக்கு எதுவும் தெரியாது. டப்ளின் நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் அறிக்கை, ஐ.நா. மூவல்லுநர்குழு அறிக்கை, இலண்டன் சேனல்-4 வெளியிட்ட இலங்கையின் கொலைக்களங்கள் ஆவணப்படம்... இவை குறித்தெல்லாம் அறிந்து கொள்ள அவருக்கு நேரமில்லை. தன் சொந்த ஊரிலிருந்து கடலுக்குச் சென்று பிணமாகத் திரும்பிய நூற்றுக்கணக்கான மீனவர்களைப் பற்றியோ, அவர்களைக் கடந்த முப்பதாண்டுகளாகச் சிங்களக் கடற்படை சுட்டு வீழ்த்தி வருவது பற்றியோ அவருக்கு யாரும் சொல்லவில்லை இராசபட்சேவைப் போல் எந்தத் தமிழரும் அவரை அழைத்து விருந்து கொடுத்து (விருந்து மட்டும் தானா?) விலாவாரியாக எடுத்துச் சொல்லவில்லை போலும்.

இராசபட்சே சாட்சிகள் இல்லாத போரை நடத்தினாலும், அது சான்றுகள் இல்லாத போராகி விடவில்லை. இன அழிப்புப் போரையும், அதன் கொடிய விளைவுகளையும் இன்று அறிந்து கொள்ள அக்கறையுள்ள அனைவரும் அறிவர். ஆனால் அப்துல் கலாம் மட்டும் அறிய மாட்டார். அவருக்கு அக்கறை இல்லை என்பதா? அறிந்தும் அறியாதவராகப் பாசாங்கு செய்கிறார் என்பதா?

அணு உலைக் கருத்தை மக்களிடம் விலை போகச் செய்வதற்கு ஒரு தேர்ந்த விற்பனைப் பிரதிநிதி இந்திய அரசுக்குத் தேவைப்பட்ட போது, அப்துல் கலாம் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அவர் தமிழர், புகழ் பெற்ற தமிழர் என்பது ஒரு தகுதி. வல்லரசுக் கனவுகளின் மொத்தக் குத்தகையாளர் என்பது மற்றொரு தகுதி.

கலாம் இந்தியா நல்லரசாகத் திகழ வேண்டும் என்று கனவு கண்டதே இல்லை. எப்போதுமே வல்லரசுக் கனவு தான். மெல்லரசாக இருக்கும் போதே தமிழர்களை இன அழிப்புச் செய்வதற்குத் துணை போன இந்தியா வல்லரசாகி விட்டால் நம் நிலை என்னாகும்? எண்ணிப் பார்க்கவே அச்சமாக உள்ளது.கலாமின் இனிய கனவு... நமக்கோ சிம்ம சொப்பனம்!

இந்தியா வல்லரசாக வேண்டுமானால் அணுகுண்டுகள் தேவை, அணுகுண்டுகள் செய்திட அணு உலைகள் தேவை. இது இந்திய வல்லாதிக்கத்தின் நிலைப்பாடு. அணு ஆயுதங்கள் மனிதப் பேரழிவுக் கொடுங்கருவிகள் ஆதலால், அணுகுண்டுகளை ஆதரிப்பவர்கள் மாந்தர் குலத்தின் பகைவர்கள். கலாமை இப்படிச் சொல்ல சிலருக்குச் சங்கடமாக இருக்கலாம், ஆனால் உண்மைகள் இரக்கம் பார்ப்பதில்லை.

அப்துல் கலாம் எப்படி குடியரசுத் தலைவரானார் என்பதை நினைவுபடுத்திக் கொண்டால் அவரது இன்றைய போக்கு வியப்போ அதிர்ச்சியோ தராது இந்துத்துவ பாரதிய சனதா கட்சி தான் முதலில் அவரை இந்தப் பதவிக்கு முன்மொழிந்தது.அவர் ஓர் இந்துத்துவ இசுலாமியர் என்பது அவர்களுக்குத் தெரிந்திருந்தது.தமிழ் நாட்டில் சில தலைவர்கள் ‘ஆகா தமிழர்க்குத் தலைமைப் பதவி’ என்று ஆனந்தப் பள்ளுப் பாடினார்கள். அப்போதே நான் சொன்னேன், கலாம் தமிழர் தாம். ஆனால் அவர் தலைமையேற்கப் போவது தமிழ்க் குடியரசுக்கல்ல. இந்தியக் குடியரசுக்கு. இந்தியக் குடியரசு என்பது இந்திக் குடியரசே தவிர வேறல்ல.

இவரை ஏ.பி.ஜே. அப்துல் கலாம் என்கிறார்கள்.ஏ.பி.ஜே.என்பது இவருக்கு முதல் எழுத்து. பி.ஜே.பி. என்பது தான் உண்மையில் இவருக்குத் தலை எழுத்து.