வேலிகளுக்குள்
மின்சாரம் பாய்ச்சி
தளிர்களைச் சருகாக்கி
வேர்களுக்குள்
அமிலம் ஊற்றி
விழுதுகளைச் சாம்பலாக்கி
செம்மாந்து நின்ற
விருட்சத்தை
மொட்டை மரமாக்கி
பிறப்பு மூலத்தை
நிர்மூலமாக்கி
சிங்கப்பல் பிதுக்கி
தாண்டவமாடிச் சென்றது
போதிமரத்து மோகினிப் பிசாசு
மத்தளம் கொட்டி
சாம்பிராணி புகைகாட்டி
மாலையிட்டு
மோகினி கையில்
சூலாயுதமும் அக்கினிச்சட்டியும் கொடுத்து
சேர்ந்தாடிக் களித்தது
இந்திரப்பிரஸ்தத்து
இரவல் புறா.
கழுகாய் மாறிட்ட
புறாவின்
உதிர்ந்த சிறகாய் மாறிய
சூரியப் பறவையோ
நங்கூரமிட்டு
நாற்காலியயனும் கூட்டில் கெட்டியாய்.
நாற்காலிக்கு மேலும் கீழும்
கனத்த பெட்டிகளுக்குள்
மூன்று சிங்க சிம்மாசன
காகித அரக்கனை சுமந்து
மூச்சு வாங்கியபடி.
விளம்பர இடைவேளைகள்
செல்லுலாய்டு புணர்ச்சிகள் நடுவே
எல்லாவற்றையும் கொறித்தபடிக்கு
எதுவுமற்று
நீங்களும் நானும்.
Pin It