வணக்கம்.

 இதோ, மழைக்காலம் வருவதற்கு அறிகுறியாக வெப்பச் சலனத்தின் காரணமாக பூமி எங்கும் "சட்டச்சடசட'வென மழைத்தூறல் தூறும் ஒலி கேட்குதில்லையா? அட, அதுக்கு முன்னமே மண்வாசம் கிளர்ந்து "கம்'மென்று வீசி, நாசிகள் விடைக்கு தில்லையா!

 "கருக்கல்' மண் மணத்தை விதைக்கப் போகிறது, இனி இதழ்தோறும். அதற்கான அச்சாரம்தான் இது. இந்த இதழில் "செவக்காட்டுச் சித்திரங்கள்' வரைந்த "ஏலேய்' தெம்மாங்குப்பாடிய வே.இராமசாமியின் "ஆநிச்சி' இடம்பெற்றிருக்கிறது. நாடுவிட்டு ஊர் விட்டு மண் விட்டு எங்கோ தொலை தூரத்தில் இருக்கிறவர்களையும் மண்வாசம் துரத்தி வந்து பாடாய்ப்படுத்தி எடுக்குமே... விட்டகுறை தொட்டகுறையாக மறந்து போன கிராமியங்களை மீட்டெடுக்கும் சிறு முயற்சியாகத்தான் இது...

 நினைத்துப் பார்க்கிறேன். என் விடலைப் பருவத்தில் கி.ரா.வின் கிராமிய மண் வாசம் வீசும் கதைகளை வாசித்து அவரைப் பார்க்கவும், புத்தகங்களை வாசிக்கவும் விரும்பி கடிதம் போட்டதும், அதற்கு அவர் கடிதத்தில் புத்தகங்களைப் பட்டியலிட்டு "அன்னம் பதிப்பகத்தில் கிடைக்கும்' என்ற விவரத்தையும் கூறி “அம்புட்டும் எம்மக்கள பத்தின கதைகள்'' என அவரது நடையிலேயே பதில் எழுதியதும் என்னை சொக்கிச் சுழன்று திக்கு முக்காட வைத்தது. இன்றைய திரை நாயகர்களை பார்க்க விரும்பும் ரசிக மனோநிலையில் அவரைப் பார்க்க விரும்பி கன்னியாகுமரி வரை ஒருமுறை சென்றவன் இடைச்செவலில் இறங்கி, அவரில்லாமல் ஏமாந்து, (அப்போதுதான் பாண்டிச்சேரிக்கு இடம் பெயர்ந்திருந்தார் அவர்) அவர் எழுதிய கதைகளில் இடம்பெற்ற கரிசல் மண்ணை பொட்டலமாக்கி எடுத்து வந்ததும் ...இப்போது நினைத்தாலும் சிலிர்ப்பாயும் கிராமிய மண் மன

வசீகரிப்பின் உச்சமாயும் உணரத்  தோன்றுகிறது. அன்றைக்கு சோவியத் கதைகள் அடுத்து கி.ரா.வின் எழுத்துக்கள் எனத் தொடங்கி இன்று மேலாண்மை, காமுத்துரை வரை மண் மனம் என்னை இழுக்கிறது; உள் வாங்குகிறது; மனசை ஈரப்படுத்திக் கொண்டே இருக்கிறது... உங்களுக்கும் இந்த உணர்வு வாய்க்காமலா இருக்கப் போகிறது?

= = =

 மரம் சும்மா இருந்தாலும் காற்று சும்மா இருக்க விடுவதில்லை. அப்படித்தான் பெருமாள் முருகனின் "கெட்டவார்த்தை பேசுவோம்' புத்தக சமாச்சாரமும்.

 "குமுதம்' இதழில் வந்த ஒரு கட்டுரையைப் பார்த்துவிட்டு "கெட்ட வார்த்தைப் பேசுவோம்' என்கிற பெருமாள் முருகன் அவர்களின் புத்தகத்தைப் பெற்று அது பற்றி எழுத எண்ணி அதனை வெளியிட்ட கலப்பை பதிப்பகத்தாரை தொடர்பு கொண்டு, நீண்ட... போராட்டத் துக்குப்பிறகே நூலைப் பெற முடிந்தது.

 கிடைத்தும் நூலை விமரிசிக்க தயக்கமே காட்டினோம். சிறு அளவிலேயே தெரிய வந்த இந்த புத்தக விஷயங்கள் விமரிசிப்பின் மூலம் பெருவாரியாகக் கவனம் பெற்றுவிடுமோ என்ற அச்சம் கூட ஒரு காரணம். "சொல்லித் தெரிவதில்லை மன்மதக்கலை' என்ற மரபில் வந்தவர்கள் நாம். அந்தந்த பருவத்திலே தானாகத் தெரிய வந்து விடுகிற விஷயத்தை - எந்தெந்த சொற்களை உச்சரிக்கத் தயக்கம் காட்டு கிறோமோ, அருவருப்பாக எண்ணுகிறோமோ அந்த சொற்களை எழுத்தின் மூலம் பகிரங்கப்படுத்தி, பிரயோகித்து முழுக்க முழுக்க எழுதப்பட்டிருக்கிறது இந்தப் புத்தகம். (இத்தகு சொற்களை வைத்து கதையாக எழுதினால் இன்றும் காவல் துறையினர் பறிமுதல் செய்து, வழக்கும் போட்டு விடுவார்கள்). கல்லூரியில் மாணவ மாணவியர்க்கு பாடம் நடத்துகிற பெ.மு., விரும்பினால் தாராளமாக மேற்படி சொற்களைப் பயன்படுத்தி பேசி எழுதி சந்தோஷப்பட்டுக் கொள்ளட்டும்; நமக்கு எந்த ஆட்சேபமுமில்லை.

 "கெட்ட வார்த்தைப் பேசுவோம்' என நம்மையும் இழுத்து பேச விரும்புகிற அல்லது நிர்பந்திக்கிறச் சூழலைத்தான் மிக வன்மையாகக் கண்டிக்கிறோம்; இதைத்தான் "இலக்கிய சட்டாம் பிள்ளைத் தனம்' என்றும் சொல்கிறோம்.

 அத்தோடுஇந்த நூலில் பேச வந்த விஷயத்தை விட்டுவிட்டு எவரை தலைவராகவும், பேரறிஞராகவும், முதல்வரா கவும் தமிழக மக்கள் கொண்டாடி னர்களோ, அவர்களின் மனங்களைப் புண்படுத்தி, காட்டமாக வேண்டா வெறுப்பாக எடுத்தேன் கவிழ்த்தேன் என்று விமரிசிக்க வேண்டிய நிலைக்கு இவர் வரக் காரணம்தான் என்ன? பெ.மு. இந்த நூலை எழுதிட தேவை அண்ணா எழுதிய தீ பரவட்டும் மற்றும் கம்பரசம் மட்டுமே. அதைவிட்டு தனிப்பட்ட முறையில் அவரை தாக்க ஏதாவது உள் நோக்கம் இருக்குமோ என எண்ண வேண்டியுள்ளது. இன்று தமிழகத்தில் பெருவாரியாக இருக்கிற திராவிட இயக்கங்களை இழித்தும் பழித்தும் பேசுவது சமீபகாலமாக ஒரு இலக்கியத்தகுதி அல்லது இலக்கியக் காரனாக ஆகிவிடு வதற்கான தகுதி என ஏற்பட்டு விட்டது.

 தலைவர், எழுத்தாளர், சிந்தனை யாளர் எவராக இருப்பினும் விமரிசனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்லர் தான். அதற்காக பொத்தாம் பொதுவாக தேவையற்ற நேரங்களில், இடங்களில் கூட எவரையும் சகட்டுமேனிக்கு சேற்றை வாரி இறைத்து தூற்றிவிடுவது என்பது சரியானதுதானா?

 மறைந்த ஒருவரை விமரிசிப்பது என்பது அவர் நல்லவர் அல்லாதவராக இருந்தாலும் கூட நாகரிகம் இல்லை என்கிற குறைந்தபட்ச இங்கிதம் கூட இல்லாமல் அவரை இழித்தும் பழித்தும் மோசமாக எழுதுவது என்பது கனடா நாட்டு டொரண்டா காரர்களுக்கு வேண்டுமானால் விருது தருகிற சமாச்சாரமாக இருக்கலாம். "மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு' என்று சொன்னவரையே தரம் தாழ்த்தி பெ.மு.க்களின் பேனாக்கள் எழுதுமெனில் அதை எப்படி சகித்துக் கொண்டிருக்க முடியும்?

= = =

 "உரைகல்' பகுதிக்கு ஏராளமான கடிதங்கள் வந்தும் - தாமதம் காரணமாக அனைத்தையும் பிரசுரிக்க முடியவில்லை. ஆனால் அவற்றில் சொல்லப்பட்டுள்ள அனைத்து குறை நிறை கருத்துக்களையும் பரிசீலித்து கருக்கல் தொடர்ந்து சரியான தடத்தில் பயணிக்கும்... தொடர்ந்து ஆதரவு நல்குங்கள்!

Pin It