கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது வழங்கு விழா டொரொண்டாவில் ஜூன் 16 ஆம் தேதி நடைபெற்று, அவ்விழாவில் அபுனைவு (அப்படித்தான் எழுதியிருக்கிறார்கள்) இலக்கியப் பிரிவில் "கெட்டவார்த்தைப் பேசுவோம்' என்ற நூலுக்காக பெருமாள் முருகன், விருது பெற்றுள்ளார். கருக்கல் தனது வாழ்த்துக்களை அவருக்குத் தெரிவித்துக் கொள்கிறது.

 தமிழிலுள்ள கெட்ட வார்த்தைகள், இவையிவை இலக்கியங்களில், நாடக மேடைகளில், குறவன் குறத்தி என்ற நாட்டுப்புற கலை நிகழ்வில், பழமொழி களில், விடுகதைகளில் இன்னின்ன வகைகளில் கூறப் படுகின்றது; மக்கள் ரசிக்கிறார்கள் பேசுகிறார்கள் மகிழ்கிறார்கள் என்றெல்லாம் பெருமாள் முருகன் சிலாகித்து தன் நூலில் எழுதியுள்ளார்.

  "அவையல் கிளவி மறைத்தனர் கிளத்தல்' என்பது தொல்காப்பியம் (அவை + அல் + கிளவி) அவையினில் சொல்லத் தகாத ஒரு சொல்லை மறைத்து வேறொரு சொல்லால் கூறுவது என்பது தொல்காப்பியர் காலத்திலிருந்து தமிழகத்தில் வழக்கத்திலிருந் திருக்கிறது என்பதற்காகத்தான் கூறினேன். அல்லாது தொல்காப்பியனே கூறி விட்டான் என்பதற்காக அல்ல. (தொல்காப்பியன் என்ன நம்மை விடப்பெரிய இவனா... நாமெல்லாம் என்ன ஆளுங்க...)

 இலக்கணத்தில் இடக்கரடக்கல், குழூஉகுறி, மங்கலம் என்று, சொல் குறித்துக் கூறப்படுகிறது. மங்கலம் என்பது, செத்தாரைத் துஞ்சினார் என்று கூறுவது. (குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்) இயற்கை எய்தினார், இறைவனடி சேர்ந்தார். (தாத்தா சாமிகிட்ட போயிட்டாரு அழாதடா கண்ணு) குளித்தல் என்பது நம் உடலை நீரால் கழுவிக் கொள்வது. இருவரால் தானாக தன் உடலை நீரால் கழுவிக்கொள்ள  முடியாது. ஒருவர்  இறந்து போனவர், இன்னொருவர் சிறு குழந்தை. இறந்தவர் உடலைக் கழுவுதல் குளிப்பாட்டுதல், குழந்தையினை நீரால் கழுவவும் அதையேக் கூறலாமா அது அமங்கலமாகப்படுகிறதே என தாய் குழந்தையை, "குளிக்காட்டுவாள் அல்லது குளியாட்டுவாள். விளக்கை அணை என்றால் அமங்கலம். "கை அமர்த்து' என்பது மங்கலம். நிறையச் சொல்லலாம். குழூஉக்குறி என்பது ஒரு கூட்டத்தாரிடை பிறர்க்கு விளங்கிவிடக் கூடாது என்பதற்காகப் பேசப்படுவது. (இது நவீன கவிதைகள் பற்றி அல்ல. இது வேறு அது வேறு).

 இடக்கரடக்கல் தான் நமக்கு வேண்டும். மலம் கழிக்கச் சென்ற ஒருவர் குறித்து எங்கள் பக்கம் "வெளியே போயிருக்கிறார்', "கொல்லைக்குப் போயிருக் கிறார்' என்பர். வெளியே போயிட்டு கால் கழுவி வருவார். - இதுதான் இடக்கரடக்கல். சின்னப்பிள்ளைகள் ஆசிரியரிடம் "சார், ஒன்னுக்கு, இரண்டுக்கு' என்று ஒற்றை விரலை இரட்டை விரலைக் காட்டுவார்கள். இப்ப நகரப் பகுதிகளில் ஒன்னுக்கு ரெண்டுக்கு என்பதும் மறைந்து "ஒன் பாத் ரூம், டூ பாத் ரூம்' ஆயிடிச்சி (என்ன... எட்டாம் வகுப்பு இலக்கணப் பாடம் படிக்கிற மாதிரி இருக்கா, என்ன செய்ய... இப்பிடியெல்லாம் சுத்தி வளைச்சுப் பேச வேண்டியதா இருக்கு).

 இந்நூலில் "கெட்ட வார்த்தைகளை' மக்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் எவ்வெவ்வாறு கையாளுகின்றனர். சங்க இலக்கியம் தொட்டு "அல்குல்' என்ற பதம் எந்தெந்த இலக்கியத்தில் எவ்வெவ்வாறு எத்தனை இடங்களில் எடுத்தாளப்பட்டுள்ளன என விரிவான ஆராய்ச்சி மேற்கொண்டு ள்ளார் பெருமாள்முருகன். காள மேகம் என்ற கவிஞர் தன்னுடைய தனிப்பாடல்கள் வழி எவ்வெவ்வாறெல்லாம் கெட்டவார்த்தை களை சமத்காரமாகப் பயன் படுத்தியுள்ளார் என புல்லரிக்கிறார், புளகாங்கிதம் அடைகிறார். எடுத்துக் கொண்ட தலைப்புக்கு வஞ்சகம் இன்றி கெட்ட வார்த்தைகளை வாரி வழங்குகிறார்.

 ஆனால், இப்படியெல்லாம் எழுது கிறார்களே இது சரியா, தேவையா என்று கேட்க ஒருசிலர் இருக்கத்தான் இருப்பார்கள். அந்த பாமரர்களை, பத்தாம் பசலிகளை பண்பாட்டுக் காவலர்கள் என்றும் ஒழுக்கவாதிகள் என்றும் கிண்டலடிக்கிறார். போதாதற்கு இவ்வாறான பாடலில் உள்ள வரிகளைக் கூறக் கூச்சப்பட்டு புள்ளி வைத்தோ அல்லது வேறு சொற்களாலோ எழுதுபவர்களை "தமிழ் வாத்தியார்கள்' என்றும் கேலி செய்கிறார்.

 மேலும் காள மேகம் போன்ற கவிவாணர்கள் தமிழுக்குக் கொடுத்திருக்கும் கொடையென கெட்ட வார்த்தைகளைக் கூறுகிறார். “ஏதாவது நான்கு வரி உளறிவிட்டு இத்தனைக் காலம் சோறின்றிப் பசியோடு வாடித் தவித்த தமிழ்த்தாய்க்குப் பிரியாணி பொட்டலம் வாங்கிக் கொடுத்துவிட்ட மமதை ஏறித்திரியும் கவிமாமணிகளைக் கொண்டது தமிழ்நாடு. அதைத் தமிழ்த் தாய்க்கு செய்த தொண்டாக, தமிழ்த் தாய்க்குக் கொடுத்தக் கொடையாக பீற்றித்திரியும் கவிப்பேரரசுகள் பவனிவரும் நாடு'' என்று கவிஞர்களை சகட்டு மேனிக்குக் கேலி செய்கிறார். கவிமாமணிகள் என்றும் கவிப்பேரரசுகள் என்றும் பண்பாட்டுக் காவலர்கள் என்றும் தமிழ் வாத்தியார்கள் என்றும் கிண்டலடிக்க இவருக்கு என்ன உரிமை இருக்கிறது? ஏதோ நாலைந்து நாவல் எழுதி சில பல விருதுகள் கிடைக்கப் பெற்ற தாலேயே உங்கள் தலையைச்சுற்றி இருபத்தி நான்கு மணி நேரமும் ஒளிவட்டம் சுற்றிக் கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டீர் களா பெருமாள்முருகன்? அவர்கள் உங்களைப் போன்றோரை ஒளிவட்டத் தலையர்கள் எனக் கேலி பேச எவ்வளவு நேரம் ஆகும்? இது தேவையா?

 எழுத எடுத்துக்கொண்ட தலைப்பை விடுத்து "கம்ப ரசத்தில் ஒரு கோப்பை' என்ற தலைப்பிலான கட்டுரையில் அண்ணாவை ஏகத்துக்கும் கிண்டலடிக்கிறார். அவர் எழுதியுள்ளது முழுவதுமாக வாசகரை எட்ட வேண்டும்.

 “கெட்ட வார்த்தைப் பேசுவோம் கட்டுரைத் தொடரில் இம்முறை நூல் ஒன்றை அறிமுகப்படுத்திக் கொள்வோம். இந்நூல் முந்தைய தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கு மிகவும் பரிச்சயமானது. சி.என்.அண்ணா துரை எழுதிய நூல். சி.என். அண்ணாதுரை என்று பெயரைக் குறிப்பிட்டு எழுதினால் நான் ஏதோ மிகமோசமான கெட்ட வார்த்தை ஒன்றைப் பகிரங்கமாகச் சொல்லிவிட்டது போல் என் மேல் பலர் கோபம் கொள்ள வாய்ப் பிருக்கிறது. ஏனென்றால் இயற்பெயர்களைக் கெட்டவார்த்தைகளாய்க் கருதும் காலம் இது. பட்டப் பெயர்களை அதாவது அடை மொழிகளைச் சொல்லித்தான் அழைக்க வேண்டும் என்று எழுதப்படாத விதி ஒன்று தமிழ்ச் சமூகத்தைப் பீடித்திருக்கிறது''.

 “சில ஆண்டுகளுக்கு முன் சட்ட மன்றத்தில் விவாதம் (பெயருக்கு விவாதம் என்று சொல்கிறேன். அங்கே நடப்பவை துதிபாடல்களும் ஏச்சுக்களும் தானே) நடை பெற்ற போது தி.மு.க.வினர் ஜெயலலிதா என்ற பெயரினைக் குறிப்பிட்டுப் பேச, உடனே அ.தி.மு.க.வினர் கொதித்தெழுந்து போயினர். அவர்கள் உடனே கருணாநிதி என்று பேச ஆரம்பித்து விட்டனர். புரட்சித் தலைவி என்றோ அம்மா என்றோதான் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமாம். அதைப் போல கலைஞர் என்று சொன்னால்தான் ஆச்சாம். இதைப்பற்றிப் பெரிய விவாதம். கிட்டத்தட்ட அன்றைய சட்ட மன்ற அலுவலே இதுதான். அன்றைக்குத் தான் எனக்கு உரைத்தது, ஆகா இந்தத் தலைவர்களுடைய இயற்பெயர்கள் எல்லாம் கெட்டவார்த்தை களாய் மாறிப்போய் விட்ட சமூகம் நம்முடையது என்று''.

 “அதனால்தான் சி.என்.அண்ணாதுரை என்று எழுத எனக்கு அச்சமாக இருக்கிறது. இன்னொன்று சி.என்.அண்ணாதுரை என்றால் இப்போதைய தலைமுறையினர்க்கு யாரென்று தெரிந்துகொள்வதற்குக் கடினம். ஊருக்கு ஊர் முச்சந்திகளில் விரல் நீட்டிக் கொண்டு போக்குவரத்துக் காவலர் போல நின்றிருக்கும் சிலையைப் பார்த்திருப்பீர்கள். (நான் கல்லூரியில் படிக்கும் போது பிகர் போகுதடா அந்தப் பக்கம் இந்தப் பக்கம் தான் பிகர் போகுதடா அப்பிடின்னு கை காட்டறாரு அண்ணா என்று மாணவர்கள் எல்லாம் அந்தக் கை நீட்டலுக்கு அர்த்தம் சொல்வர்) அந்த அறிஞர் அல்ல, அல்ல பேரறிஞர்தான் சி.என்.அண்ணாதுரை. பேரறிஞர் அண்ணா என்று சொல்லிவிட்டால் பிரச்சினை இல்லை. சரி... அவருக்கு 2008 செப்டம்பர் முதல் நூற்றாண்டு தொடங்கு கிறது. அதை ஒட்டி அவருக்குச் செலுத்தும் அஞ்சலியாகவும் இதைக் கொள்ளலாம்''.

 - பெருமாள் முருகன் எழுதி யுள்ளதை முழுவதுமாகக் கொடுத்துள்ளேன். எடுத்துக் கொண்ட தலைப்பு என்ன... அதற்கும் அண்ணா குறித்து இவர் எழுதி யுள்ள எள்ளலுக்கும் என்ன சம்பந்தம்? மகாத்மா, அண்ணல், அறிஞர், பேரறிஞர், மூதறிஞர், கர்மவீரர், கலைஞர், புரட்சித் தலைவர் என்றெல்லாம் தமக்குப் பிடித்த தலைவனை அந்தத் தலைவனின் இயல்பை ஒட்டி அவனின் தொண்டர்கள் அடைமொழி சூட்டி அழைக்கின்றனர். அவ்வாறு அழைப்பதில் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கின்றனர். அது குறித்து இவருக்கு என்ன ஆட்சேபம், ஆதங்கம்? இவர்களின் இயற்பெயர்கள் எல்லாம் கெட்ட வார்த்தைகள் போலாயிற்று என்றும் எழுதுகிறார். அதுபோக சி.என்.அண்ணாதுரை என்று எழுத இருவருக்கு அச்சமாக இருக்கிறதாம். சி.என்.அண்ணாதுரை என்றால் அனைவருக்கும் தெரியாதாம். ஏன் மறைந்த முன்னாள் முதல்வர் சி.என். அண்ணாதுரை என்றோ, திராவிட முன்னேற்றக் கழக நிறுவனர் சி.என். அண்ணாதுரை என்றோ எழுத என்ன சிக்கல்? அதனால் “அறிஞர், அல்ல, அல்ல, பேரறிஞர் அண்ணா'' என்று எழுதுகிறார். என்ன ஒரு எள்ளல் எகத்தாளம்! "அண்ணா' கைவிரல் நீட்டி "எழு' என்றால் எழுந்த லட்சக் கணக்கான மாணவர்களை பெருமாள் முருகனுக்குத் தெரியாதா...? இறந்து போன ஒரு தலைவன் குறித்து எள்ளுதல் என்பது எந்த அளவுக்குச் சரியானது? பெருமாள்

முருகன் "அண்ணா'வைப் பற்றி மட்டு மல்லாது, அவரின் சிலை அமைந் திருக்கும் விதம் குறித்தும் அந்நாளைய மாணவர்கள் கூறினார்கள் என்று கூறும் சொற்கள் உச்சபட்ச திமிர் என்றுதான் கொள்ள வேண்டும். எல்லாம் "ஒளி வட்டத்தின் மகிமை'.

 இந்நூலில் பண்பாடு பற்றிப் பேசுபவர்களை பண்பாட்டுக் காவலர்கள், ஒழுக்கவாதிகள், தமிழ் வாத்தியார்கள் என்று கிண்டலடிக்கிறார். கவிஞர்களை நாலுவரி எழுதிவிட்டு கவிமாமணிகள், கவிப்பேரரசு

ஆகிவிடுகிறார்கள் என்று கேலி பேசுகிறார். இறுதியாக அடைமொழி ஏற்றிருக்கும் தலைவர்களை குறிப்பாக "அண்ணா'வை எள்ளி நகையாடுகிறார். மேலும் நிறைய கெட்ட வார்த்தைகளைத் தமிழ் கூறும் நல்லுலகம் மறந்து விடக்கூடாது என பதிவும் செய்துள்ளார். வாழ்க!

பின்னிணைப்பு:

 இனி இது போன்ற தலைப்புகளில் "ஒளிவட்டத் தலையர்கள்' நூல் செய்ய எந்தத் தடையும் தயக்கமும் இருக்காது.

1. கெட்ட வார்த்தைத் தமிழ்-தமிழ்-அகராதி.

2. தஞ்சை மாவட்ட கெட்ட வார்த்தைகள்.

3. திருச்சி மாவட்ட கெட்ட வார்த்தைகள்.

 (மாவட்டத்திற்கு மாவட்டம் கெட்ட  வார்த்தைகளைத் தொகுத்து வெளியிடலாம்).

4. பழமொழிகளில் கெட்ட வார்த்தைகள்

5. விடுகதைகளில் கெட்ட வார்த்தைகள்.

6. நாட்டுப்புறப் பாடல்களில் கெட்ட வார்த்தைகள்.

7. தெருக் கூத்துகளில் கெட்ட வார்த்தைகள்.

8. பாட்டி சொன்ன கெட்ட வார்த்தைகள்.

9. தாத்தா சொன்ன கெட்ட வார்த்தைகள்.

 இன்னும் கெட்ட வார்த்தைகளின் தோற்றமும் தொன்மையும் என்பது குறித்து ஆராய்ந்து, முனைவர் பட்டத்துக்கு முயற்சிக்கலாம். தமிழ்-தெலுங்கு கெட்ட வார்த்தைகள் ஒற்றுமையும் வேற்றுமையும் என ஒப்பாய்வும் செய்யலாம். யார் கண்டா... உங்களுக்கும் ருவாண்டோ நாட்டின் இலக்கியக் காட்டு விருது ஏதும் கிடைக்கலாம். என்னதான் செய்யக்கூடாது... கொடுமைடா... சாமி...

Pin It