கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருகின்ற உங்கள் வீட்டுப்பிள்ளைகளுக்கு நாம் வாக்காளப் பெருங்குடி மக்கள். பொன்னான வாக்குகளைப் பொறித்து, சட்டமன்ற வரலாறையும் தலைமைச் செயலகத்தையும் மாற்றிய பின்பு ஆட்சியாளர்களுக்கு நாம் விலை இல்லா அடிமைகள். இந்தியச் சந்தையின் பெருமுதலாளிகளுக்கு நாம் வாங்கும் திறன் தளும்பும் வாடிக்கையாளர்கள். ஜீவன்முக்தி அளிக்கும் சாமியார்களுக்கு நாம் ஒப்பந்தம் செய்து கொண்ட பக்தர்கள். முதலமைச்சர் கனவோடு நடிகைகளைத் துரத்தும் திரையுலகத் தளபதிகளுக்கு நாம் ரசிகர்கள். தமிழர் நாட்டின் நாடித்துடிப்பு, இதயத் துடிப்பு, நரம்புத்துடிப்பு, மூச்சுபிடிப்பு, முதுகுப்பிடிப்பு எல்லாமும் நித்தியானந் தாவை மையம் கொண்டே துடிப்பது போல அருவெறுப்பான சிரிப்பை பரப்பியபடி அகல விரித்து உட்கார்ந்திருக்கும் அட்டைப் படத்தோடு ஆசிரம உள் அறைகளின் முக்கல் முனகல்களை அப்படியே படம் பிடித்து சமூக அறம்காக்கும் இதழாளர்களுக்கு நாம் வாசகர்கள். தமிழீழ விடுதலைக்கு கல்லறைக் கட்டப் போட்டிப் போட்டுக் கொண்டு ஆளுக்கொரு கருங்கல்லை அடுக்கி வைத்த கட்சித் தலைமைகளுக்கு நாம் தொண்டர்கள்.

 நம்மைவிட அழகாக, சிதையாத தமிழ் பேசி வாழ்ந்த உறவுகள் மீது வெறி கொண்டு போர்த்தொடுத்து அழித்தொழித்த கோழை நரிகளின் கொடிய தலைமையின் கீழ் இயங்கும் அரசமைந்த நாட்டில் நாம் குடிமக்கள்?

 யாருக்கு நாம் மனிதர்கள்?

 ஏதேதோ பெயர்களில் இடத்துக் கேற்ற நிறங்களில் தகவமைவுகளைப் பெற்று வாழப்பழகியதில் நாம் மனிதர்கள் என்பதை நாமே மறந்து தொலைத்து விட்டோம்.

 அதிலும் நாகரிக மனிதர்களாகப் பிறப்பெடுத்தவர்கள் கண்ணெதிரே ரத்தச் சகதி கொப்பளித்தாலும் கைக்குட்டையால் மறைத்துக் கொண்டு நகர்ந்துவிடும் லாவகம் பயின்றவர்கள். கூட்டுக்குள் தலை புதைக்கும் எலும்புகளற்ற புழுக்கள். பிழைக்கத் தெரிந்தவர்கள்.

 ஆனால், போலித்தனமும் இரட்டை வேடமும் பழகாமல் இதயத்தில் ஈரம் காயாமல் எஞ்சியிருக்கும் எளியோரை குறிவைத்தே இங்கே அரசியல், ஆன்மீகம், இலட்சியம், எழுச்சி, புரட்சி போன்ற மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரக் கடைகள் தினந்தோறும் திறக்கப்படுகின்றன.

 நாமும், பசிமயக்கம், பக்தி மயக்கம், கட்சி மயக்கம், கொள்கை மயக்கம், குடி மயக்கம் இன்னபிற என்ன உண்டோ அனுமதிக்கிறோம்.

 உயிரச்சம் துணிச்சலை தின்று விடுகிறது. எல்லா அநீதிகளையும் சகித்துக் கொண்டு தலைகுனிந்து வாழப் பணித்து விடுகிறது.

 அவர் அதிகாரபலம் நிரம்பியவர்; பகைத்துக் கொள்ளாதே! இவர் நமக்கு நெருக்கமானவர்; கண்டுக் கொள்ளாதே! சாலை முழுவதும் சாக்கடையால் மூழ்கடிக்கப் பட்டிருக்கிறதா? மூக்கைப் பிடித்துக் கொண்டு செங்கல் வரிசையில் கால் வைத்து கடந்து செல். சக மனிதன் செத்துக்கிடக்கிறானா? விலகி நட என்று பாடம் சொல்லப் பட்டிருக்கிறது.

 பொதுநலனில் அக்கறை கொண்ட சமூக ஆர்வலர், செயலில் நீதி செய்யும் வீரர் கொல்லப்படுவார் எனத் தெரிந்திருந்தும், உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதான புகார் இருந்தும் நடக்கட்டும் எனக் காத்திருந்த காவல்துறை போல, நடப்பது நடக்கட்டும் என்று கைகளைக் கட்டிக் கொண்டு வேடிக்கைப் பார்க்கிறோம். குற்ற உணர்வை கோயில் உண்டியலில் திணித்துவிட்டு, அடுத்தடுத்த முழுநிலா நாட்களில் நமக்கான புண்ணியம் தேடி அதே பாதையில் மலையை சுற்றிவரப் புறப்படுகிறோம்.

 அயோக்கியர்கள் பலவீன மானவர்கள். ஆனால் அவர்களுக்கு பணம் பக்க பலமாக இருக்கிறது. பதவி பாதுகாப்பு தருகிறது. சத்தியத்தின் பக்கம் நிற்பவர்களை பொருளாதாரம் பலவீனமாக்கி விடுகிறது. இவ்வித முரண்பட்ட தன்மையே சமூகச் சக்கரத்தை சேற்றில் சிக்கிச் சுழலச் செய்கிறது.

 ஆசைகள் துற என்பது ஆன்மீகம். ஆடைகள் திற என்பவர்கள் அற்புதங்கள் நிகழ்த்துகிறவர்களாக ஒரே தொடுதலில் துயர் துடைக்கும் ஆற்றல் பெற்றவர்களாக வலம் வருகிறார்கள். இன்றைக்கு தெருவில் நின்றாலும் மீண்டும் பல்லாயிரம் கோடிகளைப் பெறுவேன் என்று சவால் விடுகிறார்கள். பக்தகோடிகள் பெருகப் பெருக சுவாமிகளுக்கு கோடிகள் பெருகுவதில் குறை இருக்காது.

 ஆன்மீகம்? ஆன்ம ஈகம். ஆன்மா உட்பட அனைத்தையும் அர்ப்பணிப்பது; ஒப்படைப்பது; தியாகம் செய்வது. எதுவும் என்னுடையது அல்ல எனும் நிலை. அந்த வகையில் தேசத்துக்காக மக்கள் நலனுக்காக இன விடுதலைக்காக உயிரையும் ஒப்படைத்த போராளிகள் உயர்ந்த ஆன்மீகவாதிகள். அவர்களை பயங்கரவாதிகள் என்று சொல்லும் கூட்டம், பொன்னும் பொருளும் சூடி பெண்களோடு கூடிக் கும்மாளம் போடும் காவி உடுத்திய காலித்தனத்தை அனுமதிக்கிறது; பங்களிப்பு செய்கிறது. இது ஞானபூமி?

 “தான்'' என்பது தொலைந்து “தனது'' என்பதை இழந்து அடையாளமற்றுப் போதலே ஆன்மாவை சுத்திகரிக்கும் ஆன்மீகம்.

 எல்லாவற்றிலும் தன்னையே முன்னிறுத்தி அடையாளப்படுத்துவது எப்படி ஆன்மீகமாகுமென்று யாரும் எதிர்க்கேள்வி எழுப்பவில்லையே. சுவாமி பலம் பொருந்தியவர். மோட்சம் கொடுத்துவிடுவார் என்ற அச்சம். சுவாமியிடம் “போனால்'' எல்லாம் கிடைக்கும் என்ற ஆசை. பேராசை. அதற்கு ஆன்மீகப் பற்று எனும் போர்வை. நம்பி வந்தவர்களை மயக்கி வீழ்த்துவது குற்றமெனில், நம்பிப் போவதும் குற்றம்தான்.

 ஆன்மீகமோ பகுத்தறிவோ அது மனிதனை பக்குவப்படுத்தத் தவறுகிற தென்றால் அவற்றால் என்ன பயன்? பித்து நிலைக்கு இட்டுச் செல்லும் எந்தக் கொள்கை வடிவமும் மனித குலத்தை சீரழிக்கும் ஆயுதங்கள்தான் என்பதை அடியவர்களாயினும், அறிவுவாதிகளாயினும் உணர்தல் வேண்டும்.

 என் கடவுளை வணங்காவிட்டால் உன்னைக் கொல்வேன் என்பது எப்படி ஆன்மீகமாகாதோ, அப்படியே என் கொள்கையை ஏற்றுக் கொள்ளாவிட்டால் இனத்துரோகி என்பதும் பகுத்தறிவாகாது. இரண்டுமே வழிமுறை தவறிய வழிபாட்டு வெறியின் அடையாளமாகவே கொள்ளப் படும்.

 அண்மைக்கால நிகழ்வுகள் பல கேள்விகளை எழுப்பியிருக்கின்றன. போலி ஆன்மீகம் போலவே பகுத்தறிவும் ஒரு பாவனைதானோ என்ற ஐயம் ஏற்படுகிறது. கடவுள் ஒரு குறிப்பிட்ட கூட்டத்தினர்க்கு மட்டுமே சொந்தமாகிப் போனது போல பகுத்தறிவும் ஒரு குழுவினர்க்கு மட்டுமே சொந்தமென்பதும் தவறுதான். பகுத்தறிதல், மனித குணம்.

 ஒரு சிந்தனையாளர் சிந்தித்து விட்டார். அதுபோதும். நீ சொந்தமாக சிந்திக்காதே. எதையும் ஆராயாமல் அப்படியே கண்ணை மூடிக்கொண்டு நம்பு என்பது எவ்வாறு பகுத்தறிவாகும் என்று புலப்படவில்லை. ஒருவர் சிந்தித்ததை வேறொருவர் கேள்விக் குள்ளாக்காமல் இருந்திருந்தால், அறிவியல் வளர்ச்சி ஏற்பட்டிருக்கவே முடியாது.

 இதுதான் சட்டம். மீறக்கூடாது என்று மிரட்டும் அதிகார வர்க்கத்திற்கும், இதுதான் கொள்கை. மாறக்கூடாது என்ற வறட்டுவாதம் பேசும் கொள்கை வாதிகளுக்கும் ஆதிக்க குணத்தில் எந்த வேறுபாடும் இருப்பதாகத் தெரியவில்லை. ஓர் இயக்கம் சார்ந்த அல்லது ஓர் அமைப்பு சார்ந்த வாழ்க்கை தமிழகத்தில் கடந்த நூற்றாண்டில் ஏற்பட்டதல்ல. அந்தந்த காலத் தேவைகளுக்கேற்ப ஒன்றுக்கொன்று முரண்பட்ட இயக்க நிலைப்பாடுகள் எல்லாக் காலத்திலும் தோன்றியிருக்கின்றன.

 ஆதிசங்கரர் ஓர் இயக்கமென்றால் ராமானுஜர் மற்றோர் இயக்கம். வள்ளுவரும் வள்ளலாரும் ஓர் இயக்கமென்றால் திருமூலரும் சிவவாக்கியரும் பிறிதோர் இயக்கம். அவ்வாறே டார்வினும், கலிலியோவும், ஐன்ஸ்டீனும். அனைத்தையும் மனித இனம் ஏற்றுக் கொண்டும் ஆய்வுக்குட்படுத்தியும் கடந்து வந்திருக் கிறது. எது தேவை என்பதை காலமும் அக்கால மனிதர்களும் தீர்மானிக்கிறார்கள்.

 எல்லா இயக்கங்களும், அவை கட்டமைத்த கோட்பாடுகளும் மனிதனை செழுமைப் படுத்துவதற்காக உருவானதே யன்றி மனிதத்தைக் கொன்று கொள்கையில் மூழ்கடித்து தத்துவத்தையும், தத்துவத்தை போதித்தவரையும் வாழவைப்பதற்காகவோ வழிபடுவதற்காகவோ அல்ல.

 இடையில் சிக்கிய எளிய மனிதனை கோட்பாடுகளற்ற கொள்கைகளற்ற வாழ்வே நிம்மதியானது என்று எண்ணத்தூண்டுவது இயக்கங்களுக்கு மட்டுமல்ல... கொள்கை களுக்கும் தோல்வியே!

= = =

 எனக்குப் பிடித்த கவிஞர் கந்தர்வன் அவர்களின் சாட்டையடி கவிதை.

 எதிலும் எப்போதும்

 காசைக் குறி வை

 தேசம் முழுவதும்

 தீக்கிரையாயினும்

 சாம்பலை விற்று

 சம்பாத்தியம் நடத்து!

 ஏனோ இந்த வரிகளை படித்ததும் அணு உலையில் பொதுவுடைமையின் நிலைப்பாடு என் நினைவுக்கு வந்தது.

 தோழர் கந்தர்வன் பொதுவுடைமைத் தோழர்கள் சிலரையும் அவர்களது தலைமைகளில் சிலரையும் மனதில் வைத்தே இக்கவிதையை வடித்திருப்பார் போலும்.

 அணு ஆயுத ஒப்பந்தத்திற்கும், அணு உலைக்கும் வேறுபாடு தெரியாமல் விழிக்கிறான் சாமானிய வாக்காளன்.

 கம்யூனிஸம், மார்க்ஸிஸம் பொறுத்தளவில் அதாவது அந்த வர்ணத்தை பூசியிருக்கும் கட்சிகளைப் பொறுத்தவரையில் ஏகாதிபத்தியம் என்பது அமெரிக்க ஏகாதிபத்தியம் மட்டும்தான். சீன ஏகாதிபத்தியம், இந்திய ஏகாதிபத்தியம், சிங்கள ஏகாதிபத்தியம் என்று எதுவுமில்லை என்றே சாமானியன் தடுமாறுகிறான். அப்பாவியான அவனுக்கு ஒரு மண்ணும் விளங்கவில்லை.

 ஒருவேளை, அமெரிக்காவின் தீக்குச்சி நம் குடிசையைக் கொளுத்தினால் மட்டும்தான் தீ பரவும். அப்போது மட்டுமே நாம் பதற வேண்டும். அய்யோ அய்யோ என்று கதற வேண்டும். சீனமோ, ரஷ்யாவோ கொளுத்தினால் பரவும் தீ சிவப்பாக இருக்கும். எனவே குடிசையை எரிக்காது. உலகத்தையே நேசிப்பதாகச் சொல்லி சர்வதேசியம் பேசிக் கொண்டு சொந்தச் சகோதரன் சாவதை சலனமின்றி பார்த்திருப்பது மார்க்ûஸயும் லெனினையும் சரியாகப் புரிந்துக் கொண்டவனுக்கு குரூரமாகத் தெரிகிறது.

 பொதுவாக கோபப்படுவதும் பிரச்னைகளைப் பேசுவதும் கெட்டப் பழக்கம் என்பது போலவும், கட்டுரையாளனுக்கு அழகல்ல என்பது போலவும் கருதுகோள் நிலவுகிறது. சிறுமை கண்டு பொங்கும் குணத்தை இழந்துவிட்ட தமிழனை எல்லா ஊர்களிலும் நேர்காண முடிவதால், அவனுக்கு என்னென்ன பிரச்னைகள், யாரால் ஏற்படுகின்றன என்பதையே முதலில் நினைவூட்ட வேண்டியிருக்கிறது. சிறுமையிலும் சிறுமையாகிவிட்ட தமிழர் வாழ்வின் அவலங்கள் குறித்த கவலைகள் எமக்கு அதிகரித்திருக்கும் காலம் இது.

 பங்காளியிடம் வாழ்நாள் முழுவதும் பேசாமல் பகைமை பாராட்டும் தமிழன் பகையாளியிடமும் துரோகியிடமும் பல் இளித்து நிற்பது கண்டு சிறு வயது முதல் சோற்றில் உப்புப் போட்டுச் சாப்பிட்ட எனக்குக் கொதிக்கிறது.

 ஆயுத பூஜைக்குத் தயாராகிக் கொண்டிருந்தது சென்னை. நெற்குன்றம் அருகில் மேட்டுக்குப்பம் சாலையில் முன்னிரவுப் பொழுதில் இரு சக்கர வாகனத்தை ஓரமாக நிறுத்தி அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தேன். அறுபது வயதை நெருங்கியிருக்கும் அழுக்கு உடை மனிதர் ஒருவர் என்னை நெருங்கி வந்தார்.

 இடது கையால் தலையைச் சொறிந்து, வலது கையை என்னிடம் எதிர்பார்ப்போடு நீட்டி, “எதுனா வாங்கிக் குடுண்ணா'' என்றார். எனக்கு “குப்''பென்று அழுகை முட்டியது.

 “எதுனா வாங்கிக் குடுண்ணா'' என்று அவர் கை காட்டிய திசையில் இருந்தது உணவகம் அல்ல - டாஸ்மாக்.

 இரண்டொரு நிமிடத்தில் இன்னொருவன். நான் முன்பின் பார்த்திராத இளைஞன் எனக்கு வணக்கம் வைத்து விட்டு, “நாளைக்கு ஆயுத பூஜை. எதுனா கவனி'' என்று கை நீட்டினான். எனக்கு கோபம் தலைக்கேறியது. (எழுத்தில் மட்டுமல்ல களத்திலும் நான் சண்டைக்காரன். கள நிகழ்வுகளில் என் கோபம் சாத்தியப் படுத்தியவை குறித்து வரும் இதழ்களில் பதிவு செய்வேன்).

 மேட்டுக்குப்பம் பகுதியைப் பொறுத்த வரை நான் கடந்து செல்லும் வழிப்போக்கன். என்னிடம் தயக்கமின்றி குடிப்பதற்கு பணம் கேட்கும் நிலையில் இவர்களை நிறுத்தியவனை யார் தண்டிப்பது?

 நெஞ்சு சூடு ஆறாமல் வண்டியை உதைத்து தமிழினத்தை இரந்துவாழும் இழி நிலைக்குத் தள்ளியவனை வாய்விட்டு கெட்ட வார்த்தையால் திட்டிக் கொண்டே வீடடைந்தேன். இன்றுவரை எனக்கு தணியவில்லை.

 தமிழரின் ரத்த நாளங்களில் ஆல்கஹாலை நிரப்பி அடிமையாக்கி, உணர்ச்சியை மழுங்கடித்து, தலைமுறைகள் கடந்தும் இந்த இனம் தலைதூக்கிவிடாமல் பார்த்துக் கொள்வதில் திராவிட அரசுகள் முனைப்போடு இயங்குகின்றன. மதுபான விற்பனையிலும் 25% ஆடித்தள்ளுபடி, கோவையில் ஒரு கடையில் மூன்று பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம், இரண்டு குவார்ட்டர் வாங்கினால் ஒரு சிக்கன் பிரியாணி இலவசம் என்ற அறிவிப்புப் பலகையில் தெரிந்தது, இந்த தேசத்தின் உண்மை முகம்.

 இரண்டாண்டுகளுக்கு முன்பு ஒரு மழைக்கால முடிவில் படப்பிடிப்பு தளத் தேர்வுக்காக கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சென்றிருந்தேன். வல்லரசு கனவிலிருக்கும் இந்த தேசத்தின் லட்சணம் வரைபடங்களில் தெரிவதில்லை. எம்மக்களின் வாழ்விடங்களில் படர்ந்திருக்கிறது.

 மாநகரங்களை மட்டுமே கருத்தில் கொண்டு நாடு வளருகிறது என்று உளறுகிறார்கள் அல்லது உண்மை வெளியே தெரியாமல் உலகை ஏமாற்றுகிறார்கள்.

 நானும் திரையுலக நண்பனும் சிற்றூர்களின் ஊடாகப் பயணித்து சேரிப் பகுதிகளை அடைந்தோம்.

 எல்லா ஊர்களிலிருந்தும் சேரிப்பகுதி தனியே விலகி இருக்கிறது அல்லது விலக்கி வைக்கப்பட்டிருக்கிறது.

 ஊர் என்பது எப்போதும் சேரியை உள்ளடக்கியதாக இருக்கவில்லை.

 சேரி எங்கே இருக்கிறது என்று விசாரித்தால், “ஊர் தாண்டி கெழக்கால போனீங்கன்னா சேரி வரும்'' என்கிறார்கள் முகம் சுளித்தபடி.

 ஒரு ஊர் ஏன் இரண்டாக இருக்க வேண்டும்? இருவேறு நுழைவாயில்களோடு? சேரி என்பதும் ஊர் இல்லையா? அங்கு வாழ்வதற்குத்தான் வழியில்லை. வாழும் உரிமை மறுக்கப்படுகிறது என்றால் செத்தவனை புதைப்பதற்கும் இடமில்லை. கனவு காணுங்கள். இந்தியா ஒரு வல்லரசு.

 கார் சேரிக்குள் நுழைந்தது. இறங்கி நின்றோம். நம்புங்கள் நான் சொல்வது நிகழ்காலம் தான்.

 கோழிகளும், சொறி மண்டிய நாய்களும், ஆடுகளும், பன்றிகளும், மனிதர்களும் ஒன்றாகப் புழங்கும் வசிப்பிடம்.

 குளிப்பதும், கழிப்பதும், சமைப்பதும், உண்பதும், துவைப்பதும், படுப்பதும் ஒரே இடம் எனும் நிலையில் எண்ணெய் காணாத தலைகளுடன் தண்ணீர் காணாத தேகங்களுடன், உணவு காணாத ஒட்டிய வயிறுகளுடன் எம்மைச் சூழ்ந்து கொண்ட மக்கள், “சாமி! சாமி! என் ஊட்ட வந்துபாரு சாமி! முச்சூடா இடிஞ்சு போச்சு, நாலு புள்ளைவ இருக்கு. படுக்க வெக்க எங்க போவம்?''

 “சார் சொவரு கூரை எல்லாம் பிச்சுக்குட்டு பூடுச்சு சார்! என் ஊட்ட எயுதிக்கங்க சார்''

 “எப்பா! ரேசன் கார்டு இருந்தாத்தான் பணம் குடுப்பியா? கல்லு சொவரு ஊடாப் பாத்து காசு குடுத்துட்டுப்போ... குட்சக்காரி யெல்லாம் எங்கனா போய் சாவறோம்!''

 சென்னைக்கு மீண்ட பின்பும் பலநாள் தூக்கம் கெடுத்தன அவர்களது கூக்குரல்கள்.

 மழையில் வீடிழந்து, வாழ்விழந்து நின்ற அம்மக்கள், காரில் வந்திறங்கியதால் எங்களை வெள்ள நிவாரணம் கொடுக்க வந்த அரசு அதிகாரிகள் என்று நம்பி, தமது கையறு நிலையைச் சொல்லிக் கதறினார்களே, எம்மக்களை குடி போதைக்காகவும், நிவாரண நிதிக்காகவும் கையேந்தும் பிச்சைக்காரர்களாக நிறுத்தியவனை என்ன செய்வது?

 மக்களின் நிலை குறித்த கோபத்தையும் மக்கள் மீதான கோபத்தையும் பதிவு செய்யும் கட்டுரையாளனே தீர்வு சொல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் நியாயமில்லை. எமது தீர்வுகளே அவர்கள் வாழ்வை திருத்தமாக மீட்டெடுப்பது சாத்தியமானால்... இம்மண்ணில் நாம் சுட்டிக் காட்டும் கோளாறுகள் எல்லாமும் சீர் பெற்றிருக்கும்.

 நான், எல்லா பிரச்னைகளுக்குமான தீர்வு மக்களிடம் மட்டுமே இருக்கிறது என்று நம்புகிறவன். அந்த உண்மையை சமரசமின்றி மக்களுக்குச் சொல்கிறவன்.

 ஒரு படைப்பாளியின் வேலை மக்களை சிந்திக்கப் பழக்கப்படுத்துவது. நான் சிந்தித்ததை அவர்களுக்கு பழக்கிவிடுவது அல்ல. அது அத்துமீறல். அராஜகம்.

 கட்டுரை என்பது தரவுகள், புள்ளி விவரங்கள், ஆண்டறிக்கை போன்று எண்களின் அடுக்குகளை உள்ளடக்கியிருக்க வேண்டும் என்று யார் விதிமுறை வகுத்தது? கட்டுக் கதைகளுக்கே மனம் கலங்கும் எம் மக்களின் கண்ணீரை கட்டுரை தன் உள்ளடக்கமாகக் கொள்வது தவறா?

 கோபம் அவசியத்தின் போது பயன்பட வேண்டிய ஆயுதம். அதை கூர் தீட்டும் சாணைக் கல்லாக, எழுத்து வடிவம் இருக்கவேண்டும்.

 அறிவு ஜீவிகளுக்காக எழுது கிறவர்கள், வெகு மக்கள் ஊடகங்களில் எழுதும் வாய்ப்பைப் பெற்றவர்களுக்கு கோபம் இல்லையா?

 அவர்களில் பலர் ஏன் கோபத்தை கலைவடிவமாக மாற்றவில்லை. ஆனால் சக படைப்பாளியின் மீதான கோபத்தையும் காழ்ப்பையும் புத்தகமாக வடிக்கிறார்களே?

 மாட்டு வண்டி தொலைந்ததையும், செவலை கன்று ஈன்றதையும், வள்ளி எனும் இளம்பெண் நான்கு பெண்களுக்கு தகப்பனான செல்லபெருமாளுடன் கொண்டிருந்த உறவு ஊருக்குத் தெரிந்து விட்டதால் நாண்டுக் கொண்டு செத்துப் போனதையும் வாழ்வியல் பதிவென எழுதத் துணிகிறவர்கள் - இன்றைய தொலைக்காட்சித் தொடர்கள் சித்தரிக்கும் அவல உறவுகளை எப்போதோ இலக்கியமாக பதித்து விட்டவர்கள் - எளிய மக்கள், கொள்கைகளால் மிரட்டப் படுவதையும் அமைப்புகளாலும் கட்சி களாலும் வதைபடுவதையும் அதிகாரத்தால் சுரண்டப்படுவதையும் ஆதிக்கத்தால் உயிரோடு புதைக்கப் படுவதையும் வெகுமக்கள் படைப்பாக ஏன் வெளிக்கொணரவில்லை?

 உண்மை பெரும்பாலும் பேசிவிட முடியாததாகவே இருக்கிறது. உண்மைக்கும் உயிர் வாழ்தலுக்கும் தொடர்பிருக்கிறது என்பதே மறுக்க முடியாத உண்மை.

= = =

 திருச்சி அருகே மணப்பாறையைச் சேர்ந்தவர் ரேணுகாதேவி. தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றவர். தமிழக அரசு ஏழை எளிய மக்களுக்காக வழங்குகிற விலை இல்லா அரிசியை வாங்குவதற்காக மக்கள் அங்காடிக்குச் சென்றார். அரிசியைத் தர மறுத்த அங்காடி ஊழியர் (அவரும் பெண்தான்!) ரேணுகாதேவியை தரக்குறைவாகப் பேசி அடித்திருக்கிறார். தமிழ் கொடுத்த போர்க் குணத்தில் ரேணுகாதேவி போராட தீர்மானித்தார். அரிசி வாங்காமல் அங்கிருந்து போவதில்லை என்று முடிவெடுத்தவர், நடந்ததை காவல்துறையில் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்கும்படி கேட்க - கடமை தவறாத காவல்துறை உதவி ஆய்வாளர் சீறிப் பாய்ந்தார். யார் மீது? புகார் கொடுத்த ரேணுகாதேவி மீது!

 கோபம் துடிதுடிக்க உதவி ஆய்வாளர், பொது இடத்தில் ரேணுகாதேவியை அடித்து இழுப்பதை தொலைக்காட்சி செய்தியில் பார்த்த போது, இந்த நாட்டின் பெருமைமிக்க சனநாயக முகமூடி நொறுங்கிச் சிதறுவதை கண்ணுற முடிந்தது.

 பணமாகவும் பொருளாகவும் மாமூல் கொடுப்பவர்களுக்குத் தான் காவல் நண்பன். ஏழை மக்களுக்கா?

 “நாங்கள் முப்பது கோடி ஜனங்களும் நாய்களோ? பன்றிச் சேய்களோ?'' என்று கண்களில் கனல் தெறிக்க, புருவங்கள் நெறித்து, பற்களைக் கடித்து, மீசைத் துடித்த சுப்ரமணியபாரதி நல்ல வேளையாகப் போய்ச் சேர்ந்தான்.

 ஆங்கிலேயர்கள் நம்மை விலங்கினும் கீழான இழி மக்களாகக் கருதினார்களோ இல்லையோ, நீங்கள் நூற்றி இருபது கோடி மக்களும் அடிமை நாய்களே! பன்றிச் சேய்களே! என்று ஆளும் வர்க்கத்தினர் மட்டுமல்லாது, வீசியெறியப்படும் எலும்புத் துண்டுகளுக்காக பாயும் வெறிநாய்களும் கூட கருதுகின்றன.

 காவல்துறை மட்டுமா? நாங்கள் மட்டும் சளைத்தவர்களா என்று சவால் விடுகிறது போக்குவரத்துத்துறை. நடத்துனரும், ஓட்டுநரும் பயணிகளை நடத்தும் விதம் உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கும். யாரேனும் ஒருவர், ஒரே ஒருவர் எதிர்ப்புக்குரல் எழுப்பி பேருந்தை நிறுத்தியிருக்கிறீர்களா? நிறுத்தியிருந்தால் நீங்கள் புரட்சியாளர். என்னுடைய கள அனுபவம் அடுத்த இதழில்.

Pin It