கடந்த 2008-ம் ஆண்டு ஜூலை 6-ம் நாள். கோவை மாவட்டம் சோமனூரின் அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்த சிற்றரசு, தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்க அமைப்பையும் சேர்ந்தவர். கோமதி - உயர்சாதி வெள்ளாள கவுண்டர். இருவரும் விசைத்தறித் (பவர் லூம்) தொழிலாளிகள். அந்தப் பழக்கத்தில் இருவருக்கும் காதல்; இது பெற்றோருக்குத் தெரிந்து கோமதியின் பெற்றோர்கள் இவர்கள் வேலை செய்யும் இடத்துக்கு வந்து மிரட்டிச் செல்வது வழக்கமாகிவிட்டது. ஒரு சாதிக்குள்ளான காதல் எனில் வித்தியாசமாய் தெரிவதில்லை. ஆனால் தாழ்த்தப்பட்ட இளைஞனோடு காதல் என்பது அதிகப்படியாய், அனர்த்தமாய்ப் படுகிறது. நெருக்குதலும் மிரட்டலும் அதிகரிக்க, அதற்குப் பணியாமல் சிற்றரசும், கோமதியும் மணம் செய்து கொள்கின்றனர். “கொலை செய்வோம்'', நேரடியாகவே கோமதியின் சொந்தக்காரர்கள் மிரட்டிச் சென்ற சில நாட்களில், சிற்றரசு லாரி ஏற்றிக் கொல்லப்படுகிறார். முகம் முழுதாகச் சிதைந்து விடுகிறது. "சந்தேக மரணம்' என்று காவல்துறை வழக்கை முடிக்க முயற்சி செய்கிறது. இது சாதிப் படுகொலை என தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம், வன் கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் கொலை வழக்குப் பதிவு செய்யப் போராட்டத்தை தொடங்கினர். இன்றுவரையும் எத்தனை பேரணி, ஆர்ப்பாட்டம், காவல் நிலைய முற்றுகை எதுவும் ஆதிக்க சாதிகளின் கையடக்கப் பிரதிநிதிகளான காவல்துறையை அசைக்கவில்லை.

 டில்லி, மும்பை போன்ற பெரு நகரங்களில் கௌரவக் கொலைகள், கலப்புத் திருமணக் கொலைகள் - பொருளாதார நிலை, பதவி, சமூக அந்தஸ்து என்ற அடிப்படையில் நடக்கின்றன. இது போன்ற நகர்ப்புறங்களில் சாதிக் கவுரவம் இரண்டாம் பட்சமானதாக அமைகிறது. முதல் அளவு கோல், இங்கு சமூக மதிப்புத்தான்.

 ஆனால் தமிழகத்தில் நடை பெறுகின்றவை முற்று முழுக்க சாதியக் கொலைகள். சாதி மாற்றிக் காதலித்தால் - காதலிக்கிறபோதே கொலை; காதலித்து மணம் செய்து கொண்ட பின்னும் கொலை;

 தர்மபுரி மாவட்டம் சுகன்யா கொலை 05.08.2011. 2010-ம் ஆண்டு ஜூன் மாதம் 23-ம் தேதி அன்று ஈரோட்டைச்சேர்ந்த இளங்கோ கொலை. 1.9.2011 அன்று திருவண்ணாமலை மாவட்டம் துறிஞ்சிக்குட்டைமேடு கிராமத்தில் வசித்த பழங்குடியினர் துரை கொலை. பரமக்குடி அருகே கலையூர் கிராமம், வேறு வேறு சாதியினரான டேனியல் ராஜூம் திருச்செல்வியும் திருமணம் செய்து கொண்டனர். 5.6.2008 அன்று தாயாரும் பாட்டியும் சேர்ந்து திருச்செல்வியின் கழுத்தை நெறித்து கொலை செய்தனர். 2009 டிசம்பர் பழனி அருகே உள்ள கலையமுத்தூர் கிராமத்தில் கலப்பு மணம் செய்து கொண்ட ஸ்ரீபிரியா அரிவாளால் வெட்டிக் கொலை.

 காதல் திருமணம் என்பது கலப்புத் திருமணம் ஆக நிகழ்கிறபோது மட்டுமே கொலைகள் நடக்கின்றன. தமிழகத்தில் கலப்புத் திருமணப் பதிவு ஆண்டுக்கு ஆண்டு அதிகமாகிக் கொண்டே போவது போல், அதன் பின்னான கொலைகளும் கூடிக்கொண்டே போகின்றன. “சென்னையில் கடந்த ஆண்டு பதிவான திருமணங்களில் 10 சதவிகிதம் கலப்புத் திருமணங்கள்'' என்கிறார் பதிவு அலுவலக அதிகாரி ஒருவர். கலப்புத் திருமணங்கள் செய்து கொண்டோரில் எத்தனை பேர் உயிரோடு இல்லை என்ற கணக்கை அவரால் தர முடியாது. அது பதிவு செய்யும் இடமே தவிர, பதிவின் பின் அவர்களின் வாழ்வு நிலை, பாதுகாப்பு, உத்தரவாதம் என்ற திருமணத்துக்குப் பின்னான பிரச்சனைகளை கண்காணிக்கும் நல்வாழ்வு மையம் அல்லவே.

 சாதி மறுப்பு திருமணம் செய்து கொள்ளும்போது உயர்சாதி ஆணும் தாழ்த்தப்பட்ட பெண்ணுமாக இருந்தால், ஆண் மகனை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்தல், புறக்கணிப்பு என்று சிறு சிறு அளவில் தண்டிப்பு நிறைவேற்றப்படுவதைக் காணலாம். தாழ்த்தப்பட்ட பெண்ணை, எவ்வகையிலாவது கை கழுவிவிட, ஆண் மகனை நிர்பந்திக்க முயலுகிறார்கள். தாழ்த்தப் பட்ட சாதி ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அது கொலையில் முடிகிறது.

 கௌரவக் கொலைகள் சாதிய காரணங்களை முன்னிறுத்தி நடத்தப் பட்டாலும் பெரும்பாலும் பெண்களாகவே இருக்கிறார்கள் என்பது குறிப்பிடப்பட வேண்டும். பலவீனமான பாலியல், ஆணுக்குக் கட்டுப்பட்டவர்கள் என்ற காரணங்கள் முதலிடம் வகிக்கின்றன. பெண்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். நாற்பது, ஐம்பது ஆண்டுகளில் பெண்கள் பெற்ற வளர்ச்சி, சமத்துவ பழகுமுறை போன்ற எதுவும் கௌரவக் கொலைகாரர்களுக்கு ஒரு பொருட்டேயல்ல. எல்லை தாண்டாதவர் பெண்கள் என்ற ஆணாதிக்கம், சாதி ஆதிக்கத்துடன் இணைந்து போகையில் கொலைகள் உற்பத்தியாகின்றன.

 இக்கொலைகள் - திருமணம் மட்டு மல்ல, திருமணத்துக்கு முன்னான காதலும் சாதி பார்த்துக் காதலிப்பதாக இருக்க வேண்டும் என்ற உளவியல் அச்சத்துக்கு இட்டுச் செல்கின்றன. இளம்பருவத்தில் தன்னியல்பாய் ஊற்றெடுக்க வேண்டிய சுதந்திர சிந்தனைக்கு எல்லை கட்டப்படுகிறது. எல்லைகள் எழுப்பப்பட்ட மனித மனம், கல்விச் சாலைகளில், பணியிடங்களில் சாதி அறிந்து பழக விழைகிறது.

“உனக்கும் எனக்கும் ஒரே ஊர், வாசுதேவ       நல்லூர்

நீயும் நானும் ஒரே மதம்

திருநெல்வேலி சைவப் பிள்ளைமார்

வகுப்புங்கூட

உன்றன் தந்தையும் என்றன் தந்தையும்

சொந்தக்காரர்கள்

எனவே செம்புலப் பெயல் நீர்போல

அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே''

- என்று கவிஞர் மீரா எழுதிய எள்ளல் கவிதை இன்று அப்படியே நடைமுறைக்கு வந்து கொண்டிருக்கிறது. “நாம் காதலிப்போம்; சாதி பார்த்து காதலிப்போம்; வகுப்பறையில் பணிபுரியும் இடங்களில் சாதி பார்த்துப் பழகுவோம்'' என்ற உளவியல் நிலைக்கு இளம் வயதினர் தள்ளப்பட்டு விட்டதுதான் கௌரவக் கொலைகள் புரிந்த திருவிளையாடல்.

 ஒரு சாதிக்குள்ளாக பழகவோ, புரிந்துணர்வு கொள்ளவோ, காதலிக்கவோ வாய்ப்பு அற்ற நிலையில் இதுபற்றி ஆதங்கப்படுகிறார் "தாம்பராஸ்' என்ற பிராமணர் சங்கத் தலைவர் என்.நாராயணன்.

 “பிராமணர் சமூகப் பிள்ளைகள் கலப்புத் திருமணம் செய்வது அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் நடந்தது. இப்போது அதிகமாகி விட்டது. முக்கியமான காரணம் உலகமயமாக்கல். கணினித் துறையில் பணி புரிவோரிடம் நிறைய கலப்புத் திருமணங்கள் நடக்கின்றன. வேறு சாதிப் பையன்களை ஏன் திருமணம் செய்து கொள்கிறீர்கள் என்று பிராமணப் பெண்கள் சிலரிடம் கேட்டேன். அதற்கு எங்களுடன் பணி செய்கிறவர்கள் வேறு சாதியினராக இருக்கின்றனர். பிராமணப் பையன்களை சந்திக்க அதிகமான வாய்ப்புகள் இல்லை'' என்று தெரிவித்ததாக அவர் வருத்தப் படுகிறார். சாதிக் கட்டுப்பாடுகளை மீறுதல் கூடாது என்றால் அவரவர் படிக்கும், பழகும் பணி புரியும் இடங்களில் அப்படியானவர் களுக்காகக் காத்திருக்க வேண்டுமென்றாகிறது.

 மாமல்லபுரத்தில் பா.ம.க. நடத்திய சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் திருவிழாவில் காடுவெட்டிக் குரு என்பவர் “வன்னிய குலப் பெண்களை கலப்புமணம் செய்பவர்களை வெட்ட வேண்டும். யாராவது நம்ம பொண்ணுங்களுக்கு வேற சாதியில் திருமணம் செய்து வைத்தால் தொலைத்துப் போடுவேன்'' என்று ராமதாûஸ வைத்துக் கொண்டே கொலை மிரட்டல் செய்திருக்கிறார்.

 ஆச்சி வந்தாச்சு என்பது மாத இதழ். ஒவ்வொரு சாதிப்பிரிவும் நடத்தும் தனக்கான சமூக இதழ் போல், நகரத்தார் சமூகம் (செட்டியார்) கொண்டு வரும் சாதி இதழ். அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர், தமிழ்ப் புலமையாளர், சீரிய சொற்பொழிவாளர், கட்டுரையாளர் இன்ன பல அடைமொழிக் குரியவர் பழ.கருப்பையா. ஈழத்தமிழர் துயரம் குறித்து எழுத்துக்களில் அவர் அளவு கண்ணீர் சிந்தியவர் எவரும் இல்லை. அந்த இதழில் பழ.கருப்பையா எழுதினார்...

 “நகரத்தாருக்குரிய அடையாளங்கள் எனச் சிலவற்றை ஆய்வாளர்கள் சுட்டுகின்றனர். அவை - நேர்மை, ஆழமான பக்தி, சிக்கனம், அறக்கொடை, திட்டமிடல் ஆகும். இந்த அடையாளங்கள் இன்றளவும் தொடர்கின்றன. இவை என்றும் தொடர வேண்டுமென்றால், நாம் கலப்புத் திருமணத்தை முற்றிலுமாக எதிர்க்க வேண்டும். சமூகத்தை மீறிக் கலப்புத் திருமணம் செய்து கொள்வோரை, நம் சமூகத்திலிருந்து தள்ளி வைக்க வேண்டும்''.

 தனக்குள் மறைத்து வைத்திருந்த முகத்தை, தானே கிழித்துக் காட்டிக் கொள்கிறார். தமிழ்ப் புலமைத்துவம் கொண்டவராக காங்கிரஸ் இயக்கத்திலிருந்து ஒரு அரசியல்வாதி உருவாகி வருவது முயற்கொம்பு. அங்கு, இங்கு அலைபாய்ந்து, கடைசியில் ஒரு மரத்தினடியை இளைப்பாறப் பிடித்தவர் ஒரு அரசியல்வாதி. சாதி இதழ்களில் பங்கேற்கலாமா என்றால் எல்லா அரசியல்வாதிகளும் செய்வதைத்தானே இவர் செய்கிறார் என்று சமாதானப் படுத்திவிடலாம்.

 “இந்த நிலையில் ஒருவர் இருக்கிறார் என்பதை உணர்வது கூட நமக்கு அவமானமாக இருக்கிறது; ஆனால் அப்படி இருப்பது அவருக்கு அவமானமாக இல்லை'' என்று ஓவியா சொல்வது சரிதான். கலப்புத் திருமணம் அங்கீகரிக்கப்பட்டுள்ள அரசியல் சட்டப்பிரிவு 17 மற்றும் 7-ன் கீழ், வெளிப் படையாய் கலப்புத் திருமண எதிர்ப்புக் கொலைகள் நடத்தத் தூண்டியதாய் இவர்கள் எல்லோர் மேலும் கொலைக்குற்ற வழக்குத் தொடர முடியும். அரசு செய்யுமா?

 காதலர் தின எதிர்ப்பு இந்துத்துவ அமைப்புகள், கலப்புத் திருமண எதிர்ப்புப் பிரச்சார இயக்கங்கள் (கொங்கு வேளாளக் கவுண்டர் பேரவை), வன்னியர் இளைஞர் சங்கம், நகரத்தார் சமூகம், முக்குலத்தோர் இளைஞர் பேரவை போன்ற அனைத்தும் சாதியக் கட்டமைப்பில் சிறிதும் தளர்வு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக இயங்குகின்றன. இதுபோல் இன்னும் காட்சிக்கு வராத அமைப்புகள் அங்கங்கே இருக்கின்றன.

 இன்றைய உலக வளர்ச்சியில் மனித மனங்கள் பழகும் வெளிவிரிந்து பரந்து சிறகு பரப்பி வருகிறது. புதிய விசயங்களை வரவேற்றல், அறிந்து கொள்ளல், புதிய உலகை எதிர்கொள்ளல் என பார்வை விரிவு கொள்கிறது. ஆனால் மேலே காட்டியவை போன்ற அமைப்புகள் சாதியை மேலும் மேலும் இறுக்கம் கொள்ள வைத்து, மனசை சாதிய மனமாக குறுகச் செய்து குழியில் தள்ள முயலுகின்றன.

 சோமனூரில் சிற்றரசு கொலையுண்ட போது கோமதி கருவுற்றிருந்தார். கருவுற்ற அந்தப் பெண்ணுக்கு பாதுகாப்புக் கருதி த.ஒ.வி. இயக்கம் அதே ஊரைச் சேர்ந்த அருந்ததிய இளைஞருக்கு மறுமணம் செய்து வைத்தது. அவர்களின் எதிர்கால வாழ்க்கையின் உத்திரவாதமாக கோவை வழக்கறிஞர் சங்கம் மாதா மாதம் ஒரு தொகையினைக் கொடுத்து உதவுகிறது. த.ஒ.வி.இ. போன்ற இயக்கம் இருப்பதால் இது சாத்தியமாயிற்று. ஆனால் ஏலாததுகள், இல்லாததுகள், அனாதரவுகளுக்கு இதுமாதிரிக் கொலைகளை வெளியுலகுக்கு கொண்டு வரும் சாத்தியம் உள்ளதா? சாதிய பயங்கரவாதத்துக்கு சகல துணையாய் வரும் அரச பயங்கர வாதத்தையும் சேர்த்து எதிர்த்து நிற்க ஏலுமா? சொல்லப்படாமல் அவர்களுக்குள்ளேயே அடக்கம் செய்த சாதிக் கொலைகளுக்கு எண்ணிக்கையுண்டோ?

 முந்தைய காலத்தில் சாதி மறுப்பை திட்டமிட்ட பணியாக ஊசலாட்டமின்றி எடுத்துச் செய்தன சமூக சீர்திருத்த இயக்கங்கள். அக்கால கட்டத்தில் இறங்கிய சாறு விழுங்கி, கலைகளும், படைப்புகளும் சாதி எதிர்ப்புக் காதலை, திருமணங்களைப் பேசின. சமூக சீர்திருத்த விழிப்புக்கு பிரதானப் பங்களித்த இயக்கங்கள் பின்னாளில் அதிலிருந்து நகர்ந்து, தேர்தல் அரசியலுக்குள் சுருண்டன. சாதியின் வால்பிடித்துத் தொங்கிக் கொண்டு அலைவதுதான் தேர்தல். அதனால் சிதறல் சிதறலாயிருந்த சாதி, பெரியார், அம்பேத்கர் போன்றோரின் கடும் உழைப்பால் நைந்து போய் கொண்டிருந்த சாதி, தேர்தல் வழியாய் தன்னை இறுக்கமாக்கி வளர்த்துக் கொண்டே இருக்கிறது. எது மரணிக்கப்பட வேண்டுமோ அதை உயிராக்கி வளர்த்து விட்டதுதான் அரசியல் கட்சிகளின் சாதனை. அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும் கலப்புத் திருமணங்கள் சாதியை அசைத்து விடாது என்றாலும், அதைக்கூட அனுமதிக்கத் தயாராக இல்லாத சாதிக்குழுக்களின் முதுகு சொறிந்து கொண்டிருக்கின்றன ஓட்டுவாங்கும் கட்சிகள். சாதி மறுப்பு உணர்வு, கலப்புத் திருமணம் போன்ற சமுதாய முனைப்பான பக்கங்களை மட்டுமல்ல; வாழ்வியலின் பல சிறப்பான பக்கங்களைக்கொன்று போட்டு விட்டன இவை.

 “நம் நாட்டின் சாபக்கேடாக உள்ளது சாதியமுறை; அது விரைவில் ஒழிக்கப்படுவது நாட்டுக்கு நல்லது. நாட்டின் முன்பாக உள்ள பல அறைகூவலை அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர் நோக்க வேண்டிய சமயத்தில் சாதி மக்களை கூறு பிரித்துப் போடுகிறது. கலப்புத் திருமணம் என்பது தேச நலன் கொண்டது. அதன் மூலம் சாதியமுறை ஒழிக்கப்படுகிறது. சாதிய முறை, தன் குடும்பத்தை தெருவை அனைத்தையும் பிரிக்கும் ஒரு பிரிவினைவாத சக்தி, தன் சொந்தக் குழந்தையையே கொலை செய்யத் தூண்டுகிறது'' என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கட்ஜூ, கியான் சுதா மிஸ்ரா ஆகியோர் கொண்ட அமர்வு தெளிவான எச்சரிக்கை வழங்கியுள்ளது.

 எத்தனை தீர்ப்புகள் வந்தாலென்ன? கல்லுப் பிள்ளையார் போல் அசைக்க முடியாதபடி உட்கார்ந்திருக்கிற சாதிக்கு கௌரவக் கொலைகள் என்ற தேங்காயும் உடைக்கப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. இதற்கு முற்றுப் புள்ளி வைப்பது எப்போது? கலப்பு திருமணக்காரர்கள் மட்டுமே போதுமா? அவர்களுடன் கைகோர்த்து, அதன் வேரிலே தீ வைக்கிற காலம் வருமா? இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல பல காலமாகும்.

Pin It