மண்வாசம்

 ஆநிச்சி அரிசி குத்தும் உரலில் உட்கார்ந்திருந்தாள். அவள் கையில் கொத்தாக வச்சிருந்த ஆமணக்குக் குழைகளை வெள்ளாட்டங் குட்டிகள் ஒன்னுக்கு ஒன்னு முண்டியடிச்சுக்கிட்டு "கரிச் கரிச்'னு தின்றன. ஒரு மறி குழையை கடித்து உருவிட்டுப் போய் தனியாகச் சப்பியது. அதோட வாயில் இருந்து குழை மண்ணில் விழுந்ததும் முன்னத்தங்கால்களை மேலே தூக்கி ஒரு கெலி கெலிச்சு மறுபடியும் தலையை நீட்டி இலையைக் கரும்பியது. மறிகள் குழையை மெல்ல மெல்ல, காம்புகளை இறுக்கிப் பிடிச்சிருந்த ஆநிச்சிக்கு உள்ளங்கைகள் அதிருவது இதமாக இருந்துச்சு.

 "அகத்திக் குழைன்னா பரவாயில்ல. ஆமணக்குக் குழையை இளங்குட்டிகள் ரொம்பத் தின்னுச்சுன்னா தொண்டையில சொருகிக்கிடும்"னு அப்பா சொன்னது நினைவுக்கு வந்ததும் இதோட போதும்னு மறிகளுக்கு எட்டாமல் குழைகளை கயிற்றில் கட்டித் தொங்க விட்டாள். தொங்கவிடத் தொங்கவிட மறிகள் ஆநிச்சியின் காலைச் சுற்றித் தட்டழிந்தன. சிலதுகள் பாவாடை நுனியைப் பச்சரிசிப் பற்களால் இழுத்தன. அவள் காலால் உதறிவிடவும் எல்லாம் சிதறி ஓடின. கையில் அகப்பட்டதை கூட்டுக்குள் அடைத்தாள். ஒவ்வொரு மறியையும் விரட்டி விரட்டிப் பிடித்து கூட்டுக்குள் திணித்தாள். பிறகு கூட்டுக்குள் அதுக பாட்டுக்கு கத்திக் கொண்டு கிடந்தன.

 திடீர்னு பார்த்தால் வடக்கு மந்தையில் மாட்டுவண்டி நின்ன இடம் காலியாய் இருந்துச்சு. அவ்வளவுதான். பாவாடை நுனியைக் கையில் பிடிச்சுக் கிட்டே ஓட்டமெடுத்தாள். தூரத்தில் கண்மாய் தடத்தில் அப்பா வண்டியப் பத்திக்கிட்டுப் போய்க்கிட்டிருந்தார். ஆநிச்சி "யப்போய் யப்போய்'னு வீச்சிட்டுக் கத்தினாள். இவள் சத்தங்கேட்டதும் அப்பா வண்டியை நிப்பாட்டினார். கருவப்பூக்கள் கண்மாயில் பின்னால் போகப்போக ஆநிச்சி முன்னால் ஓடினாள். நேராப் போய் மாட்டு வண்டிப் பைதாவில் கால் வைத்து ஏறி சட்டத்தில் நின்றாள்.

 அப்பா எதுவும் பேசாமல் சாட்டைக் கம்பால் புளிச் புளிச்சினு மாடுகளை விளாசி வண்டியைப் பத்தினார். இவள் ரெண்டு திக்கத்திலும் ஊணிக் கம்புகளை கைக்கு ஒன்றாகப் பிடித்துக் கொண்டாள். கடையாணியில் வண்டி மசவின் ஓசையும் தடத்தில் குறுகுறுக்கும் மணல்ச் சத்தமும் ஆநிச்சியின் காதுகளுக்கு லயமாகக் கேட்டது. அப்பா வெள்ளைத் துண்டில் தலைப்பாகை கட்டி இருந்தார். அதுக்குள் எப்படியோ போய் ஒரு கருவப்பூ உதிர்ந்து விழுந்தி ருந்ததைப் பார்த்துக் கொண்டே வந்தாள். அவர் ஏதோ ஒரு பாட்டை விசிலடிச்சே பாடிக்கிட்டிருந்தார். என்ன பாட்டுன்னு இவளும் யோசித்தாள். மனசுக்குள் இருந்து வாய்க்கு வரவேயில்லை. பாட்டுச் சுகத்தில் அப்பாவின் தலையும் மாடுகளின் தலையைப் போல புஞ்சை வரைக்கும் ஆடிக் கொண்டே வந்தது.

 புஞ்சைக்கு வந்து மோக்காலிலிருந்து காளைகளை அவுத்து விட்டார் அப்பா. மூக்கணாங் கயிற்றை மாடுகளின் கொம்பில் சுற்றினார். அப்பத்தான் மேயும்போது கயிறு தரையில் இழுபடாது. ஆநிச்சி கஞ்சி வாளிகளை எடுத்துட்டுப்போய் வேப்ப மரத்தின் கீழ் கிளையில் மாட்டினாள். தரையில் வைத்துவிட்டால் அம்புட்டுத்தான். எறும்புகள் வாளியை மொய்த்துவிடும். ஏம்னா சோளக்கஞ்சி, கம்மங்கஞ்சி கூழ் எதுன்னாலும் வாளிக்கு வெளியே பிதுங்கி இருக்கும். நெல்லுச் சோறா பிதுங்காம இருக்க?

 வண்டியில் பத்திருபது சாக்குகள் சுருண்டு கிடந்தன. கிட்டத்தில் சணல் உருண்டையும் அதுல கோணி ஊசியும் இருந்துச்சு. எல்லாத்தியும் வேப்ப மரத்தடியில் கொண்டு போட்டாள். கோணி ஊசியை அப்பா கேட்கும்போது டக்குனு ஓடிப்போய் எடுத்துத் தரணும்னு மனசுக்குள் நினைச்சுக்கிட்டாள். சாக்குகளில் அப்பாவின் பேரும் அதுக்குக் கீழே "மருதங்கிணறு' என்று ஊர்ப்பேரும் எழுதியிருந்துச்சு. சந்தைக்குப் போச்சுன்னா அடையாளம் தெரியணு மில்லையா? அதுக்குத்தான்.

 அம்மா இவர்களுக்கு முன்னாடியே பசுமாட்டையும் கன்னுக்குட்டியையும் இழுத்திட்டு வந்திருந்தாள். அவளோடு அஞ்சாறு பொம்பளை ஆட்கள் சீனிக்கிழங்குக் கொடிகளை அறுத்துக் கொண்டிருந்தார்கள். ஆநிச்சிக்குப் புரிந்து விட்டது. சீனிக்கிழங்கு வெட்டப் போகிறார்கள். "யம்மோவ்'னு அவளிடம் ஓடினாள். "நீ ஏண்டி இங்க வந்தே'ன்னு அம்மா வைதாள். "நிழல்ல இருந்து மாட்டையும் கன்னையும் பாத்துக்கோ' ன்னாள். இவள் "சரிம்மா'ன்னாள். ஆனால் மரத்தடிக்குப் போகாமல் அங்கனயே நின்றாள்.

 நல்ல இளஞ்சீனிக்கொடியை எடுத்து அதை இணுக்கி இணுக்கி சங்கிலி மாதிரி செய்து கழுத்தில் மாட்டினாள். "தங்கச் சங்கிலி மினுங்குது தங்கச் சங்கிலி மினுங்குது'ன்னு குதித்தாள். அம்மா, ஆநிச்சியைக் கவனித்து, "ஏட்டி நீ வெயில் தாங்க மாட்ட, பேசாம வேப்பமரத்துக்குப் போ'ன்னாள். "நாம் போ மாட்டேன். வெயில்லாம் தாங்கிக்கிடுவேன்'னாள், இவள். "அப்பிடியாட்டி? கண்ணு முழி ரெண்டும்

சுருங்காம சூரியனைப் பாத்து நில்லு, அப்பத் தான் நீ வெயில் தாங்குற ஆளா இல்லியான்னு தெரியும்'னு அம்மா சொன்னாள். ஆநிச்சி அண்ணாந்து வானத்தைப் பார்த்தாள். ஒளியில் கண்ணு மட்டுமில்லாமல் முகமே சுர்ருன்னு சுருங்கிருச்சு. அம்மா சிரித்தாள். அவள் தோற்றதை ஒப்புக் கொண்டு மரத்தடிக்குப் போனாள்.

 கொஞ்ச நேரத்தில் ஏழெட்டு ஆம்பளை ஆட்கள் சைக்கிளில் விருட் விருட்னு வந்தார்கள். எல்லாரோட கேரியலிலும் மம்பட்டி இருந்துச்சு. அவர்கள் வரிசைக்கா நிப்பாட்டியதைப் பார்க்கையில் வாடகைக் கடைச் சைக்கிள்னு தெரிஞ்சது. சாரத்தைக் கழட்டி விட்ட ஆட்கள் டவுசரோட சீனிக்கிழங்கைத் தோண்டி னார்கள். மொங்கு மொங்குன்னு அவர்கள் மம்பட்டியில் வெட்டும்போது புஞ்சையே குலுங்கியது. பொம்பளைகள் அறுத்த சீனிக் கொடிகள் குமியல் குமியலாக அங்கன அங்கன கிடந்தது. ஆம்பளைகள் கிழங்கை வெட்டி எடுக்க எடுக்க பொம்பளைங்க கிழங்கிலிருந்து செம்மண்ணைத் துடைத்துத் துடைத்து மொத்தமாய் குமித்தார்கள்.

 ஆநிச்சிக்கோ ஒரு இடத்தில் நிலை கொண்டு நிற்க முடியவில்லை. புஞ்சையில் இருந்தே தெரியக்கூடிய கோயில்பட்டி ரோட்டில் போகும் கார்களை எண்ணினாள். "பிப்பீ... பிப்பீ பீய்னு பஸ்சு வந்தால் அது லயன் பஸ். ஆரஞ்சு முட்டாய் மாதிரி தெரியும் ஆரனை விடாமல் அமுக்கிக்கிட்டே வந்தால் மோட்டார் கோபாலன். பப்பாய்ங் பப்பாய்ங்னு பலூன் குழாயை பிதுக்கினால் அஜீஸ் பஸ். ரெண்டையும் சும்மா மாத்தி மாத்தி அடிச்சுக்கிட்டே வந்தால் கேயார் - கல்ப்பனா. எப்பப் பார்த்தாலும் எம்ஜியார் பாட்டுக் கேட்டுக்கிட்டே வந்துச்சுன்னா கயத்தாறு போகும் உதயலட்சுமி டிரான்ஸ்போர்ட். டகடக கடகடன்னு சவுண்டு வந்தால் வீரபாண்டிய கட்டபொம்மன் கவருமெண்டு டவுன் பஸ்'சுன்னு சத்தத்த வச்சே வண்டிப் பேர்களைச் சொல்லி விளையாடியவள், அசந்து வேப்ப மரத்தடியில் உறங்கிவிட்டாள்.

 மத்தியானம் கஞ்சி குடிக்க அம்மா எழுப்பியபோது ஆநிச்சிக்கு ஆச்சரியமாய் போச்சு, பாதிப்புஞ்சையில் கிழங்கைத் தோண்டி, உழவடிச்சது கெணக்காய் செம்மண் சிரித்தது. கஞ்சி குடிச்சதும் ஆட்கள் பழையபடியும் மும்முரமாய் வேலை செய்தார்கள். இவளோ, செடி, செத்தல்களை பற்றவைத்து சீனிக்கிழங்கைத் தீயில் வாட்டித் தின்றாள். ஆநிச்சியின் இந்தச் செய்கையை அம்மா, மூக்கில் விரலை வைத்து அதிசயமாகப் பார்த்துக்கிட்டிருந்தா. பெருமையாய் நினைத்து ரசித்தாள்.

 என்னன்னே தெரியாமல் அன்னைக்கு முழுவதும் அவளுக்கு குறுகுறுப்பா கொண்டாட்டமாகத் தெரிந்தது. சாயங் காலத்தில், எல்லாருமாச் சேர்ந்து சீனிக் கிழங்குகளை மூட்டையில் போட்டு மூட்டும் வேலையில் இறங்கினார்கள். புஞ்சை அரைக் குறுக்கும் இருக்கும், அது முழுக்கச் சாக்குகள் அங்கன ஒன்னும் இங்கன ஒன்னுமாக நின்றன. கிழங்குகளைச் சாக்கில் சேர்த்த பிறகு ஆம்பளைகள் சைக்கிளை கிளப்பிக் கொண்டு போனார்கள். பொம்பளைகள் மட்டும் ஒத்தாசைக்கு இருந்தாங்க.

 ஆநிச்சி சாக்குகளைக் கூட்டிப் பிடித்தாள். அப்பா கோணி ஊசியில் சணலைக் கோர்த்து சரட் சரட்னு தைத்தார். முக்கால்வாசி மூட்டைகளைத் தைத்த பிறகு இன்னும் ஒன்னுரெண்டுதான் மிச்சமிருந்தன. ஆநிச்சி ரொம்ப நல்ல பிள்ளையாய் அப்பாவுக்கு கூடமாட உதவி செய்தாள். காலையில் மாட்டு வண்டியில் வரும்போது அப்பா விசிலடிச்ச பாட்டு என்னதுன்னு கண்டுபிடித்தாள். அது "அந்த நிலாவத்தான் நான் கையில பிடிச்சேன்...'

 கக்கடேசிச் சாக்கு தைக்கும்போது சணல் காலியாயிருச்சு. மிச்சம் மரத்தடியில் கிடந்ததை ஆநிச்சி ஓடிப்போய் எடுத்தாந் தாள். பழைய படியும் சாக்குக் கூட்டிப் பிடித்தாள். சாக்கில் முடிச்சப்போட அப்பா விருட்னு ஊசியை இழுத்தார். கோணி ஊசி ஆநிச்சியின் வலது கண்ணில் பாய்ந்தது. அதே வேகத்தில் இமை தட்டுக்குள் அநிச்சையாய் ஊசியை இழுத்துவிட்டார். ஆநிச்சியின் கண் அப்படியே ஊசியோடு வந்துவிட்டது. என்ன நடந்ததுன்னு தெரியறதுக்குள்ள அப்பா மயங்கி விழுந்தார். கண்ணுக்குழியில் ரத்தம் சொட்டச் சொட்ட அலறினாள் ஆநிச்சி.

 "ஏ ஆத்தே எம்பொறப்பே'ன்னு அம்மாவும் பொம்பளைகளும் ஓங்கார மெடுத்தார்கள். "எங்களுக்கெல்லாம் ஒன்னுந் தெரியாது. நாங்க ஏதுஞ் செய்யலைங்கிற' மாதிரி நாலு மைனாக்கள் மேற்கானிக்குப் பறந்தன. முக்காச் சூரியன் வானத்துக்குள் புதைந்து கொண்டிருக்க பொழுதடைந்து கொண்டே வந்தது.  

***

 வே.இராமசாமியின் “செவக்காட்டுச் சித்திரங்கள்'' புத்தகத்திலிருந்து எடுக்கப் பட்ட பகுதி இது. அவரது வர்ணனை களும் காட்சிப் படுத்தல்களும் கார்முகில் சொல்வது போல மென்மையான மழை நாளில் வேரோடு பிடுங்கிய முள்ளங்கி யோடு வரும் மண்போல மணம் பரப்பு கின்றன. திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டம் மலையான் குளம் கிராமத்தைச் சேர்ந்தவர். தாமிராவின் "ரெட்டைச்சுழி', சற்குணத்தின் "வாகைசூடவா' படங்களில் பாட்டெழுத, எழுத்துக்கள் மூலமே அறிமுகமாகி, அழைக்கப்பட்டவர். மண்வாசம் வீசும் ஏலேய், கிணற்றுக்குள் முளைத்த மருதாணி, செவக்காட்டுச் சித்திரங்கள் படைத்தவரின் படைப்புகள் பற்றி பேச, வாங்க : 9444838389

Pin It