ஒரு நீதிக்கதை

 அவனுக்கு அப்பா, அம்மா ஆசையாகச் சூட்டிய பெயர் கலியமூர்த்தி. அந்தப் பெயர் அவனுக்குப் பிடிக்காமல் போனதற்கு ஒரு அழகானக் காரணம் இருந்தது. “இது என்ன பெயர் இந்தக் காலத்தில்'' என்று ஷ்யா (முழுசாக ஷ்யாமளா) கேட்டதிலிருந்தே இவனுக்கு இந்தப் பெயர் பிடிக்காமல் போயிருந்தாலும், கிராமத்திலேயே இந்தப் பெயரை இவன் முழுசாக வைத்திருக்க வில்லை.

 ஆரம்பத்தில் கவிதை எழுதும் பொழுது ஆம்பல்.ஆர்.கே.மூர்த்தி என்ற பெயரில் எழுதி தினந்தந்தி, தினமலர் வாசகர் நெஞ்சில் பதிந்திருந்தான். ஆம்பல் குளத்தூர் என்ற ஊரின் முன்பகுதியையும் ஆர் என்ற அப்பா ராமச்சந்திரனின் முதல் எழுத்தையும், கலியமூர்த்தியைக் கே.மூர்த்தி எனச் சுருக்கியும் கவிஞனாகி இருந்தான். ஷ்யா கேட்டதிலிருந்து இந்தப் பெயரை விட்டுவிடுவது குறித்துச் சின்ன யோசனையும் அவனுக்குள் இருந்தது.

 ஆம்பல்.ஆர்.கே.மூர்த்தி உள்ளூரில் ஏறக்குறைய கவிஞனாக ஏற்றுக் கொள்ளப் பட்டவன். உள்ளூர்க் கவியரங்கங்களில் மூன்று, நான்கு நிமிடங்களுக்கு முழங்கியவன். அவன் நண்பர்கள் அப்போது கைத்தறித்துண்டு வாங்கி வந்து பொன்னாடையாகப் போர்த்திக் கைத்தட்டுவதும் நடக்கும். இவ்வாறான உள்வெளிக் காரணங்களால் அவன் கவிஞனாகி விட்டிருந்தான். ஒரு சமயம் அவன் தாய் மாமா, தங்கச்சி மகனாச்சே என்ற பாசத்திலும் நல்ல மிதப்பிலும் தன் விரலிலிருந்த அரைப் பவுன் மோதிரத்தை அவனுடைய கவிதையைப் பாராட்டி அவனுக்கு அணிவித்ததும், இதற்காக அவர் தன் வீட்டில் மொத்துப்பட்டதும் தனிக்கதை.

 அதெல்லாம் ஒருகாலம். இப்போது கவியரங்கங்களும் குறைந்துவிட்டது, போதும் போதாதற்கு தெருவுக்கு நான்கு கவிஞர்கள் வேறு முளைத்துவிட்டார்கள். மேலும், அவர்கள் இவனுடைய இளைஞனே எழு / நீ எழுந்தால் ஞாலம் எழும் / காலம் இது / கண் திற / உன் கண்களின் ஜ்வாலை, சுட்டெரிக்கட்டும் / அந்தச் சூரியனையும் / என்ற வரிகளுக்கெல்லாம் கேலி பேசுவது போலக் கைதட்டுவதும். "ஊ...' என்று ஊளையிடுவதும் என்று ஆரம்பித்தபொழுது அவன் கவியரங்கம் ஏறுவதை நிறுத்திக் கொண்டான். ஆனாலும், பெண்ணே / உன் வாசலில் / என் இதயம் பிச்சைப் பாத்திரத்துடன் நிற்கிறது / அதில் உன் காதலை பிச்சையாக வேணும் போடமாட்டாயா / என்று கவிதைகள் எழுதி நாளிதழ்களுக்கு அனுப்பி கவிஞன் என்ற பெயரைத் தக்க வைத்துக் கொண்டிருந்தான்.

 வேலையில்லாத பட்டதாரியான இவனுக்கு இவன் அம்மா வழி சொந்தம் ஒருவர் சென்னையிலிருந்த தன் நிறுவனம் ஒன்றில் பன்னிரண்டாயிரம் ரூபாய் சம்பளத்தில் ஒரு வேலை போட்டுக் கொடுத்தார். அவனும் ஆம்பல் குளத்தூரை மறந்து சென்னையிலேயே தங்கிவிட்டான். ஒரு ஓரத்தில் சினிமாவில் பாட்டெழுதும் நப்பாசையும் இருந்தது.

 சம்பாத்தியத்தை எதிர்பார்க்காத குடும்பம். ஆக, இவன் சென்னையிலே வசதிக் குறைவின்றி தங்கியிருந்தான். பத்தாதற்கு இவன் அம்மா வேறு தன் கணவனுக்குத் தெரியாமல் பணம் அனுப்பிக் கொண்டிருந்தாள். கொஞ்ச காலம் ஆம்பல்.ஆர்.கே.மூர்த்தியாக கவிதைகள் செய்து, நாளிதழ்களுக்கு அனுப்பிக் கொண்டிருந்தான்.

 இப்படி எந்தச் சிக்கலும் பிக்கலும் இல்லாது சுமுகமாகப் போய்க் கொண்டிருந்த இவன் வாழ்க்கையைத் திருப்பிப் போட்டது, சின்ன அரங்கக்கூட்டம். இவன் எப்பொழுதும் போல ஒரு நாலு வரிக் கவிதைக்கு முயற்சித்துக் கொண்டே வடபழநியில் ஒரு தெரு ஓரமாகச் சென்று கொண்டிருந்தான். ஒரு திருமண மண்டப வாசலில் வைக்கப் பட்டிருந்த ப்ளக்ஸ் போர்டு ஒன்று இவன் கவனத்தைக் கவரவே, நின்று வாசித்தான். அரங்கத்தின் உள்ளே மைக்கில் யாரோ பேசிக் கொண்டிருந்தார்கள். இவன் போர்டைப் படித்தான். “பன்மைத்துவ சமூகத்தில் பின்னவீனத்துவக் கவிதைகளின் தாக்கமும் - தகிப்பும்'' பொழிவு "ராகவ் புத்ர ஜாமால்யன்' என்று எழுதியிருந்தது.

 இவனுக்கு சுத்தமாக ஒன்றும் புரியவில்லை. மீண்டும் படித்தான். அதில் கவிதை என்ற வார்த்தையைத் தவிர்த்து வேறு ஒன்றும் புரிவதாக இல்லை. பன்மைத்துவ சமூகம், பின்னவீனத்துவம், தாக்கம், தகிப்பு எல்லாமும் இவனைக் குழப்பியடித்தது. அது வேறு ஏதோ ஒரு மொழிபோல இருந்தது.

 எல்லாவற்றையும்விட சொற் பொழிவாளரின் பெயர் வேறு இவனுக்கு அச்சம் ஏற்படுத்துவதாக இருந்தது. "ராகவ் புத்ர ஜாமால்யன்' இவன் மெதுவாக உச்சரித்துப் பார்த்தான். சொற்பொழிவாளரின் பேச்சு வாகன சத்தங்களையும் மீறி ஆவேசமாக ஒலித்தது. கால்கள் மண்டபத்துக்குள் இவனை இழுத்துச் சென்றது. அங்குக் காலியாகக் கிடந்த ஒரு நாற்காலியின் நுனியில் இவன் அமர்ந்து கொண்டான்.

 மேடையில் மூன்று பேர் நாற்காலிகளில் அமர்ந்திருக்க, ஒரு நாற்காலி காலியாகக் கிடந்தது. காலியாக இருந்த நாற்காலிக்கு உரியவர்தான் பேசிக் கொண்டிருந்தவர் என்றும், அவர்தான் ராகவ் புத்ர ஜாமால்யன் என்றும் யூகித்துக் கொண்டான். அவர் சில நேரங்களில் சத்தமாகவும் உடனே தன் குரலைத் தாழ்த்தி ஏதோ ரகசியம் கூறுவது போல் கிசுகிசுப்பாயும் பேசிக் கொண்டிருந்தார். அவர் சத்தமாகப் பேசும் பொழுது சிலரும், கிசுகிசுப்பாகப் பேசும் பொழுது சிலரும் சோகையாகக் கைதட்டிக் கொண்டிருந்தனர். இவனையும் சேர்த்துக் கூட்டத்தில் ஐம்பது பேர் இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டான்.  கூட்டம் சிறிது சிறிதாகக் கசியத் தொடங்கியதும் கூட்டம் முடித்துக் கொள்ளப் பட்டது. சொற்பொழிவாளரின் பேச்சு முடிந்து கும்பல் கும்பலாக சிலர் பேசிக் கொண்டிருந்தனர். சிலர் மேடையிலிருந்த மேஜையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்களைப் புரட்டிக் கொண்டும் வாங்கிக் கொண்டுமிருந்தனர். அங்கிருந்த அனைவருக்கும் குளிர்பானம் வழங்கப்பட்டது. இவனுக்கும் ஒன்று தரப்பட்டது. அப்போதிருந்த சூழ்நிலையில் குளிர்பானம் இவனுக்கு இதமாக இருந்தது.

 ஒருவர் இவன் அருகே வந்து உங்களை இதற்குமுன் பார்த்ததில்லையே என்று கூறியபடி இவனிடம் அதற்கான பதில் ஒன்றையும் எதிர்பாராது, அன்றைய பேச்சாளர் குறித்தும் பேச்சு குறித்தும் ஏதோ கூறிக் கொண்டிருந்தார். அந்த பேச்சாளரின் பேச்சு போலவே இவருடையப் பேச்சும் ஒன்றும் புரியாததாகவே இருந்தது. ஆனாலும், ஏதோ கவிதைகள் குறித்துத்தான் என்று மட்டும் புரிந்து கொண்டான்.

 மெதுவாக மேடைக்குச் சென்று அங்கிருந்த புத்தகங்கள் எல்லாவற்றிலும் ஒவ்வொன்று வாங்கிக் கொண்டான். ஜாமால்யன் இவனைப்பார்த்து சிநேகமாகப் புன்னகைத்தார். இவனும் அவரைப் பார்த்து புன்னகைத்து வைத்தான்.

 அறைக்கு வந்து கைலி கட்டி கட்டிலில் அமர்ந்து ஒவ்வொரு புத்தகமாக புரட்டிப் பார்த்தான். அன்றைய சொற்பொழிவு போலவே புத்தகத்தின் தலைப்புகளும் எழுதப் பட்டிருந்த விஷயங்களும் குழப்பியடித்தன. எழுத்தைவிட படங்கள் பயமுறுத்தின. மிகுந்த களைப்பாகவும் சோர்வாகவும் உணர்ந்தான். மூன்று, நான்கு முறை தண்ணீர் குடித்தான். மிகுந்த அலுப்புடன் விளக்கு அணைத்து தூங்கிப் போனான். கூட்டத்தில் இவனிடம் வலிய வந்துப் பேசியவர் பெரிய பாம்பாக மாறி அவன் தலையைக் கடித்துத் தின்னவும் ஜாமால்யன் இவனின் இரண்டு கால்களையும் கடித்து விழுங்கும் மீனாகவும் கனவு வந்து, திடுக்கிட்டு எழுந்து கொண்டான். இவ்வாறான கனவு வந்ததற்குக் காரணம் நேற்று முன்தினம் டி.வியில் பார்த்த "அனகோண்டா' திரைப் படமும் கூட்டத்திலிருந்து வாங்கிவந்திருந்த புத்தகங்களும், காய்ந்துபோன புரோட்டாவைத் தின்று நெஞ்சு கரித்துக் கொண்டிருந்ததும்தான் என்று அறியாமலே பிறகு தூங்கிவிட்டான்.

 ஆனாலும், நான்கைந்து தினங்கள் அந்தப் புத்தகங்களை பிடிவாதமாக வாசித்து மந்திரம் போன்ற அந்த எழுத்தினை ஒருவாறாகப் புரிந்து கொள்ளத் தொடங்கி விட்டான். இவனுக்குள் ஒரு வெளிச்சம் ஏற்பட்டதாகவும் ஒரு புதிய கதவைத் திறந்து விட்டதாகவும் இவன் நினைத்துக் கொண்டான்.

 பின்னர், இதுபோல பல புத்தகங்களை, மாத இலக்கிய இதழ்களை வாங்கிப் படித்தான். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ஆம்பல்.ஆர்.கே.மூர்த்தி காணாமல் போய்விட்டான்.

 ஆம்பல்.ஆர்.கே.மூர்த்தியாவது காணாமல்தான் போய்விட்டான். திரும்ப வரலாம், கண்டு பிடிக்கப்படலாம். ஆனால் "ஷ்யாமள்பிரீத்தன்' தான் செத்தே போய்விட்டான். அவன் யார் ஷ்யாமள் பிரீத்தன் என வாசகர்கள் அறிய ஆர்வமிருப்பின் கதையை மேற்கொண்டு வாசிக்கவும், ஆர்வமில்லாவிடில் வேறுபக்கம் செல்லவும். தெரிந்து கொள்ளாவிடில் ஒன்றும் குடிமுழுகிப் போய்விடாது. பெட்ரோல் விலை 28 ரூபாய் ஆகிவிடாது. இந்தியா இடது பக்கமாகத் திரும்பிவிடாது.

 ஆம்பல்.ஆர்.கே.மூர்த்தி என்கிற ஆர்.கலியமூர்த்தி என்கிற நண்பர்களால் கலியா என்று அழைக்கப்பட்ட இவன் ஓர் ஆண்டு காலம் ஒரு பயிற்சிபோல இதுபோன்ற சொற் பொழிவுகள் கேட்பதும் புத்தகங்கள் வாசிப்பதுமாக பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தான். ஜாமால்யன் போலவும் இன்னும் சில இலக்கியக்காரர்கள் போலவும் நீண்ட முடி வைத்துக் கொண்டான். முகத்தில் பத்து நாள் தாடியை எப்போதும் தக்க வைத்துக் கொண்டான். நடையும் உடையும் கூட மாறிவிட்டது. இவ்வளவுக்கு நடுவிலும் ஷ்யாவுடனான நட்பையும் பேணிக் கொண்டிருந்தான்.

 என்றாலும், வாரத்தில் இருமுறை யேனும் சந்தித்துப் பேசிக் கொண்டிருப்பது என்ற வழக்கம் இவனுடைய தீவிர இலக்கியத் தேடலினால் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை யெனக் குறைந்து, பின்னர் மாதத்திற்கு ஒருமுறை என்றாகி அதுவும் இல்லாமலேயேப் போய்விட்டது. ஷ்யாவுக்குத் திருமணமாகி கணவனுடன் டெல்லி பக்கம் சென்று விட்டதும் கூட அரசல் புரசலாக யாரோ சொல்லித்தான் கேள்விப்பட்டான். அது இவனுக்குள் எந்த பெரிய பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. "சரி போ' என்று சொல்லிக் கொண்டான்.

 நடுவில் பிரீத்தி என்பவளுடன் நட்பு ஏற்பட்டது. ஏதோ ஒரு இலக்கியக் கூட்டத்தில் சந்தித்தது. அது மெதுவாக வளர்ந்து, ஒத்துப்போன சிந்தனையில் இருந்ததால், நட்பாகத் தோன்றி காதலுக்கு முன்னேறிக் கொண்டிருந்தது. அவளுடைய அதிக இடைவெளி தராத நெருக்கத் தோரணையும் தோழமையும் இவனுக்குப் பிடித்திருந்தது.

 ஒரு ஆண்டு காலத்திற்கு மேலாக இலக்கிய வாசிப்பு, கூட்டங்கள் என்றிருந் தவனுக்கு ஒரு நாள் கழிப்பறையில் கவிதை என்று சொல்லிக் கொள்ளத்தக்க மின்னல் போன்ற வரி நெஞ்சில் தோன்றியது.

 வெளியில் வந்த பின்னர் அதை வாய் விட்டுச் சொல்லிப் பார்த்தான். அந்த ஒற்றை வரியை ஒரு புத்தகத்தின் பின்பக்கம் எழுதி வைத்துக் கொண்டான். “சிலந்தி புஷ்பம் வடித்தது தேனா? விஷமா?'' அவ்வளவுதான். இது ஒன்றும் கவிதை அல்ல ஆனால் கவிதை போல ஏதோ ஒன்று என்றும் பின்னால் இது ஒரு கவிதையாக வர வாய்ப்பிருப்பதாகவும் நினைத்துக் கொண்டான். அன்று இரவு தூக்கம் கெட்டு, ஒரு குவளை தண்ணீர் அருந்தி, அந்த வரியைப் பெரிதாக எழுதிப் பார்த்தான். திரும்பத் திரும்ப வாசித்தான். யோசித்தான். அவளுக்கும் எனக்குமான / எனக்கும் அவளுக்குமான / இடையில் பூத்த / சிலந்தி புஷ்பம் / வடித்தது / தேனா - விஷமா?/

 அவன் உற்சாகமானான். இதன் பிறகு சொற்கள் அவனைத் துரத்த ஆரம்பித்தன. என்னை எடுத்துக்கொள்... என்னை எடுத்துக் கொள் என்று கெஞ்சின, கொஞ்சின.

 மௌனம் மலர்த்திய இரவுகள் / வார்த்தைகள் அடை காத்துக்கொண்டிருந்தன / தூ..வென தட்டி எழுந்தாள் / தட்டப்பட்டது நானா - சிலந்தியா?

 அவனுக்குள் ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டது. முதலிலிருந்து படித்துப் பார்த்தான். அபார கவிதை. அவ்வளவுதான் கவிதை என்று பட்டது.

 பிறகு அவன் நிறைய, நிறைய கவிதைகள் செய்தான். சில, கவிதைக்கான அந்தஸ்தை அடைந்ததாகக் கருதிக் கொண்டான். சில, இரண்டு மூன்று வரிகளுக்கு மேல்போகும் வழி அறியாமல் முட்டிக் கொண்டு நின்றன. அவை ஒரு நாள் வழிகாணும், கவிதையாகும் என்று கூறிக் கொண்டான்.

 நன்றாக வந்திருப்பதாகத் தனக்குத் தோன்றிய நான்கு கவிதைகளை அழகாக குண்டு குண்டாக எழுதினான். கவிதை களுக்குத் தலைப்பு வேண்டுமே. யோசித்து ஒன்றும் பிடிபடாமல் கவிதை (1) கவிதை (2) என்று நான்கு கவிதைகளுக்கும் எண் இட்டான். இப்பொழுதுதான் அவனுக்கு மிகப் பெரிய கவலை வந்தது. கவிதைக்குத் தலைப்பு இல்லாவிட்டாலும் பரவாயில்லை கவிதை எழுதியவனுக்கு ஒரு பெயர் வேண்டுமே. ஆம்பல்.ஆர்.கே.மூர்த்தி என்ற பெயர் இதற்கெல்லாம் சரிப்பட்டு வராது. பல பெயர்கள் யோசித்தான், எழுதிப் பார்த்தான். புத்தகங்களில் கவிதை எழுதியவர்கள் பலரின் பெயரைப் படித்துப் பார்த்தான். இவனுக்கு பெயர் கிடைக்கவில்லை. கை, தாளில் ஷ்யாமளா பிரீத்தி என்று அனிச்சையாக எழுதிக் கொண்டிருந்தது. யோசித்தான் "ஷ்யாமள் பிரீத்' என்று சொல்லிக்கொண்டே ஷ்யாமள் பிரீத்தன் என்று எழுதிப்பார்த்து, ஷ்யாமள் பிரீத்தன் ஆனான். ஷ்யாமளாவையும் பிரீத்தியையும் இணைத்து ஒரு பெயர் தனக்கு தேடிக்கொண்ட சாமர்த்தியத்தை இவனே பாராட்டிக் கொண்டான். ஷ்யாமளாவுக்கு இது தெரிந்தால் மகிழ்ச்சி அடைவாள் என்றும் நினைத்துக் கொண்டான். ஆனால் இந்தப் பெயரைக் கேட்டவுடன் பிரீத்தி “யார் அந்த ஷ்யாமளா?'' என்றதும் தடுமாறிப் போனான். தன்னாலேயே நம்ப முடியாத ஒன்றைக்கூறி சமாளிக்கப் பார்த்த அவனை பிரீத்தி உதடுபிதுக்கி, அலட்சியமாக நோக்கி, திரும்பிப் பார்க்காது சென்றது இவனுக்கு சிறிதே வலியை ஏற்படுத்தினாலும் பெரிதாக வருந்தவில்லை.

 இரண்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு அவள் தன் திருமணப் பத்திரிக்கையை இவனிடம் சிரித்துக் கொண்டே தந்ததும், இவன் சிரித்துக் கொண்டே வாழ்த்துச் சொன்னதும் கூட நடந்தது. பிறகு அவளையும் மறந்து போனான்.

 ஷ்யாமளாவும், பிரீத்தியும் தன் வாழ்க்கையில் குறுக்கிட்டது தனக்கு ஒரு பெயர் கொடுக்கத்தான் என்று அவனுக்குத் தோன்றி நகைத்துக் கொண்டான். இதுபற்றிக் கூட கவிதை ஒன்று செய்யலாம் என்று தோன்றியது.

 அந்த மாதத்தில் வெளிவந்த இலக்கியப் பத்திரிக்கையில் அவனுடைய நான்கு கவிதைகளும் வெளிவந்ததும் இவனுக்கு ஜூரம் வந்தது போல இருந்தது. பின், இதனைத் தன் நண்பர்கள் சிலரிடம் காட்டி தான் தான் ஷ்யாமள்பிரீத்தன் என்று கூறிக் கொண்டதும், அவர்கள் நம்ப மறுத்ததும், நிரூபித்ததும் நடந்தது.

 இதன்பிறகு, நிறைய இதழ்களில் அவன் பெயர் அடிக்கடி தென்படலாயிற்று. அவன் சிறுகதை பக்கமும் தன் கவனத்தைத் திருப்பினான். சிறுகதைகளிலும் ஜெயித்தான். எல்லாம் பாலியல் ரீதியான உளவியல் சிக்கல், உறவுச்சிக்கல், வக்கிரமான சிந்தனை என வளர்ந்திருந்தான். கதை என்ற ஒன்று வேண்டாம். நிறைய சொற்கள், புரிந்துவிடாத சொற்றொடர்கள் என எழுதிக் குவிக்க ஆரம்பித்தான். அவனுக்கென வாசகர் வட்டம் ஒன்றும் ஏற்பட்டிருந்தது. இலக்கியக் கூட்டங்களில் சொற்பொழிவாற்றும் அளவுக்கு வளர்ந்துவிட்டான்.

 இதெல்லாம் படிக்கும் வேகத்தில் நடந்துவிட்ட நிகழ்வுகள் அல்ல. திரைப்படத்தில் ஏழ்மையிலும் ஏழ்மையான கதாநாயகன் ஒரு பாடல் காட்சியிலேயே நம்பர் ஒன் பணக்காரனாவதாகக் காட்டப்படும் யுக்தி எனக் கொள்க. ஷ்யாமள் பிரீத்தன் இந்த நிலையை எட்ட எந்த அளவுக்குத் திட்ட மிட்டிருப்பான், எத்தனைத் தில்லுமுல்லு, திருகுதாளம், வாய்ச்சவடால், வம்பு, இழிவு படுத்தல், படுதல் என எத்தனை செய்திருப்பான். அதையெல்லாம் விரிக்கின் பெருகும் எனவே மேலே செல்க.

 எப்படி ஷ்யாமளாவையும், பிரீத்தியையும் விட்டுவிட்டானோ அவ்வளவு சுலபமாகத்தான் வேலையையும் விட்டு விட்டான். அவன் அம்மாவும் அப்பாவும் உடனே ஊருக்குத் திரும்பும்படியும் அவனுக்கு ஒரு பெண் பார்த்து வைத்திருப்பதாகவும் அடிக்கடி நச்சரித்துக் கொண்டிருந்தனர்.

 ஒருநாள், இதைச் சாதாரணமான என்றும் போல ஒரு நாளாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இந்த நாளில்தான் ஷ்யாமள்பிரீத்தன் என்ற மாயா வினோத எதார்த்தவாத, பின்னவீனத்துவ எழுத்துக்காரன் அகாலமரணம் அடைந்தான். அன்று ஒரு இலக்கியக் கூட்டத்தில் வழக்கம்போல் சிறப்பு சொற்பொழிவாளனாக ஏறி கூட்டத்தை வார்த்தைகள் வழியாக வாய்பிளக்கச் செய்து கொண்டிருந்தான்.

 “இப்படியான ஒரு உயர்ந்த நாகரிகமும் பண்பாட்டுப் பெருமையும் நம் சமூகத்திற்கு இருந்தது. பாலியல் சிந்தனையில் விரிவான தளத்தில் மேன்மை பெற்றிருந்த நமக்கு அது குறித்தான எந்தப் பெருமையும் இன்றில்லை. யாரும் யாரையும் என்றும் எல்லோரும் எல்லோரையும் எவ்வித மனச் சங்கடமும் இல்லாது உறவு கொண்டிருந்த நம் சமூகம் மேலை நாட்டினரின் தாக்கத்தால் பாலியல் என்பதை அசிங்கம் போலவும் அருவருப்பான தாகவும் கருதத் தலைப்பட்டு ஒதுக்கி வைத்துவிட்டது. நாம் எல்லோரும் பாலியலின் மேன்மைத் தன்மையை ஒத்துக் கொள்ள மறுக்கிறோம்... நம் சமூகம் தாழ்ந்து விட்டது...'' என்று நீட்டமாக உரைத்துக் கொண்டிருந்த பொழுது, ஐந்தாறு இளைஞர்கள் மேடையில் ஏறி "அடிங்கடா' என்று கூறிக்கொண்டே அவனைப் பிடித்துச் சாத்தத் தொடங்கிவிட்டனர். தலைமை, முன்னிலை, கேட்டுக் கொண்டிருந்த படர்க்கை எல்லாம் ஓடிவிட, இவன் மட்டும் மாட்டிக் கொண்டான். கடுமையாகத் தாக்கப்பட்டான், மூக்கு உடைந்து சட்டையிலெல்லாம் இரத்தம் பரவியது.

 ஒருவன், அவனை அங்கிருந்த நாற்காலியில் தள்ளிவிட்டு தன் காலால் நன்றாக அமுக்கிக் கொண்டு உருட்டுக் கட்டையை அவன் முகத்தின் முன்னே ஆட்டிய படி “என்னடா... எழுதற... என்ன... பேசுற... அப்பிடியே இடிச்சேன்னு வைச்சிக்க...'' என்று பயமுறுத்திக் கொண்டிருந்தான். “இல்ல... இல்ல...'' என்று இவன் பயந்துபோய் அலற, அவர்கள் "இனிமேலுக்கு எழுதுனபடுவா... கை, கால் இருக்காது' என்று கூறிச் சென்று விட்டனர். போனவர்களில் ஒருவன் திரும்ப வந்து அவன் வயிற்றில் எட்டி உதைத்துவிட்டு கையை ஆட்டி எச்சரிக்கைக் காட்டிச் சென்றான். அது ஏதோ போனஸ் போல இருந்தது.

 இவன் களைப்பில் நாற்காலியிலேயே விழுந்து கிடந்தான். மைக் செட் ஆசாமி மட்டும் அவனிடம் வந்து “எழுந்திருச்சு மெதுவா வூட்டுக்குப் போயிடுசாரு, அவனுவ திரும்பியும் வந்திடப் போறானுவ'' என்றான். இவன் மெதுவே எழுந்து ஒரு ஆட்டோ பிடித்துத் தன் அறைக்கு வந்து சேர்ந்தான். அவன் அப்பா அவனுக்குப் போன் செய்து வீட்டுக்கு வரும்படி சொன்னார். அவன் அம்மா அழுது “வாப்பா... உன்ன பாக்கணும் போலிருக்கு'' என்றாள். இவனும் இரண்டு நாட்களில் ஊருக்கு வந்து விடுவதாகக் கூறினான். அன்று இவனுக்குப் போன் செய்து விசாரித்த நண்பர்களிடம் "ஷ்யாமள் பிரீத்தன் செத்துப் போனதாகவும். இனி அவன் வரமாட்டான் என்றும் கூறினான். தன் சேகரிப்பான அனைத்து புத்தகங்களையும் பழைய பேப்பர் வியாபாரி ஒருவனிடம் போட்டுவிட்டு அம்மாவிடம் கூறிய படியே ஆம்பல் குளத்தூருக்குப் புறப்பட்டுப் போனான். போகுமுன் ஞாபகமாக செல்போனில் இருந்த தன் சிம்கார்டைக் கழற்றி சாக்கடையில் வீசிவிட்டுச் சென்றான்.

 இப்படியாக வளர்ந்து கொண்டிருந்த பின்னவீனத்துவ எழுத்துக்காரன் ஒருவன் அகால மரணம் அடைந்தது தெரியாமல் சென்னை மறுநாளுக்குத் தயாராகிக் கொண்டிருந்தது.

 இந்த இடத்தில் சுபம் அல்லது முற்றும் போட்டு கதையை முடித்துவிடலாம். ஆனால் நம் கலியனை அப்படியே விட்டுவிட மனமில்லை. அவனை ஆம்பல் குளத்தூரில் பெற்றோரிடம் நலமே சேர்த்து விடுவோம்.

 ஷ்யாமள் பிரீத்தன் என்ற ஆம்பல். ஆர்.கே.மூர்த்தி என்ற கலியமூர்த்தி என்ற கலியன் ஆம்பல் குளத்தூருக்கே வந்து சேர்ந்து, மன்னார்குடிக்கு அருகிலிருந்த ஒரு கிராமத்தில் அப்பாவின் தூரத்து சொந்தமான தமிழரசி என்ற தமிழை இரண்டு மாதத்தில் கரம் பிடித்தான்.

 தமிழரசி, ஷ்யா பிரீத்தி அளவுக்கு அழகி இல்லை என்றாலும் "பரவால்ல' என்று கலியனுக்குத் தோன்றியது. இவளுக்கும் ஜீன்ஸ் மாட்டிவிட்டால் அவளுகளைவிட அழகா யிருப்பாள் என்றும் நினைத்துக் கொண்டான்.

 இவன் இப்பொழுதெல்லாம் "தமிழு, தமிழு' என்று அவளையே சுற்றிக் கொண்டிருந்தது இவன் அம்மாவுக்குப் பிடிக்காமலே இருந்தது. "பொல்லாத தமிலக் கண்டுட்டான்' என்று அம்மாக்காரி அடிக்கடி முகத்தை நொடித்துக் கொண்டாள். "அல்லாரும் கொஞ்ச நாளைக்கு அப்பிடித்தான்டி இருப்பானுவ... கல்யாணம் பண்ணிக்க... கல்யாணம் பண்ணிக்கன்னு நச்சரிக்க வேண்டியது, மவனுக்கு கல்யாணம் ஆன உடனேயே நொட்டாரஞ் சொல்றது... இதே... எளவாப் போச்சு இந்தப் பொம்பளச் சிறுக்கியளுவளுக்கு' என்று அவளிடம் கோபம் காட்டினார் இராமச்சந்திர படைக்கலராயர். "அப்பனப் போலத்தான் மவனும் இருப்பான்' என்று அவள் கூறியதில் புளகாங்கிதம் அடைந்து மீசையைப் பெருமையுடன் முறுக்கி விட்டார் படைக்கலராயர்.

 கலியன் தன் மனைவியை தஞ்சாவூர் பெரியகோயில், சிவகங்கைப் பூங்கா, அரண்மனை என்று சுற்றிக் காட்டவென்று ஒருநாள் தஞ்சாவூக்கு அழைத்துச் சென்றான். திரும்பி வரும்பொழுது, பேருந்து நிலையம் ஓரமாக ஒரு திருமண மண்டப வாசலில் ஒரு ப்ளக்ஸ் போர்டு சார்த்தி வைக்கப்பட்டிருந்தது. அதில் “பக்க நியாயத்தின் பொதுப் புத்தியும் மறுபக்க நியாயம் குறித்த காத்திரமான சிந்தனையும் - ஒரு நவீனத்துவ பார்வை'' சொற்பொழிவு "சீத்தராம் சித்தார்த்த' என்று எழுதியிருந்ததைப் படித்தான். உள்ளே எட்டிப் பார்த்தான். "வேல மசுறு இல்ல' என்று முனகிக் கொண்டான். அவன் முனகல் தமிழ் காதில் விழுந்துவிட்டது. "என்ன அத்தான்?' என்று கலவரமானாள். "ஒன்னுமில்ல நீ வா' என்று முன்னால் நடந்தான். அத்தானுக்கு என்னமோ ஆயிற்று என்ற கவலையில் அந்த மண்டபத்தைத் திரும்பித் திரும்பிப் பார்த்த படியே சென்றாள். "அங்க... என்ன நடக்குது?' என்றாள். "அங்க ஏதோ லேகியம் விக்கிறானுவ போலிருக்கு நீ வா...ன்னா?' என்று அவளை இழுக்காத குறையாக இழுத்துக் கொண்டு பேருந்துக்கு விரைந்தான் கலியன்.

Pin It