ஆறரைக்குப் பால்காரர் வந்து விடுவாரோ இல்லையோ பூரணி வந்து விடுவாள். எப்போது எழுகிறாள், வீட்டு வேலைகள் செய்கிறாள், சமைக்கிறாள் என்றே தெரியவில்லை என்று அக்கம் பக்கத்தில் பேசிக் கொள்வதுண்டு. அதுவும் விடிந்ததும் ஏதோ கிளம்பினோம், ஓடினோம் என்ற பாடாகவும் இல்லை. குளித்து, தலைவாரி, மஞ்சள் பூசிய முகம் ஜொலிக்கும். நடு நெற்றியில் வட்டமாய் இட்டிருக்கும் குங்குமப் பொட்டும், இடது கன்னத்தில் மை பொட்டு வைத்ததைப் போலிருக்கும் மச்சமும் பூரணிக்கு மேலும் அழகைக் கூட்டி நிற்கும். வெற்றிலைப் பாக்கை வாய்க்குள் குதப்பியபடி, உதட்டில் படர்ந்து நிற்கும் செந்நிறம் சுமந்த எச்சில், அவளின் மெலிந்த புன்னகை, மகராசி என்று எவரையும் சொல்ல வைத்துவிடும்.

 சலவைப் பெட்டியைத் துடைத்து சுத்தம் செய்து, சாக்கு மூட்டையில் கிடந்த கரித்துண்டுகளை இடுக்கியால் எடுத்து பெட்டிக்குள் போட்டாள். தீ மூட்டி, விசிறி விசிறி நெருப்பைப் பரவச் செய்வதில் கெட்டிக்காரி பூரணி. ஆளானப்பட்ட ஆம்பளைகளே கண்கள் கசக்கி, புகையில் மூச்சுத் திணறி நிற்கையில் சிறுக்கி மக நிமிசத்துல பத்த வச்சிடுறாளே என்று சலவைத் தொழிலில் ஈடுபட்டிருந்த அவள் மூத்தோர்கள் வாயால் புகழப்பட்டப் பெருமை கொண்டவள் பூரணி.

 பிளாஸ்டிக் விசிறியால் இங்கும் அங்கும் விசிறிக் கொண்டிருந்தாள். நெருப்புக் கங்குகள் காற்றில் பளீர் பளீரென மின்னி அடங்கின. சூடேறி விட்டதா என்பதைப் பார்த்து கொக்கியைத் தள்ளி மாட்டினாள். தன் இஷ்ட தெய்வத்தை மனதில் நினைத்துக் கொண்டு பெட்டியைத் தூக்கி வண்டியில் வைத்துக் கொண்டு துணிகளைத் தேய்க்கத் தொடங்கினால் அவ்வளவுதான். சரசரவென சுருங்கிக் கிடந்தத் துணி மூட்டைகள் அழகழகாய் தேய்க்கப்பட்டு மடித்து அடுக்கி வைக்கப் பட்டுக் கொண்டேயிருக்கும். எவர் துணியும் கலைந்து விடாதபடி பார்த்துப் பார்த்து அவள் செய்யும் அழகே தனிதான்.

 பூரணிக்கென்று உதவிக்கு யாருமில்லை. ஒற்றை ஆளாய் நின்று சுற்றிச் சுழலுவாள். கயிற்றிலிருந்து விசையுடன் சுழற்றிவிடப்பட்ட பம்பரத்தைப் போல நான்குபுறமும் எவ்வேலையும் குறைவின்றி நிறைவேற்றிக் கொண்டிருப்பாள். சலவைக்கு வந்தத் துணி மூட்டைகளை ஒரு புறம் வைப்பது, தேய்த்து முடித்த சட்டை வேட்டிகளை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கிக் கொள்வது, சுற்றிலும் பழைய செய்தித்தாளைச் சுற்றி நூலால் கட்டி தனித்தனியே எடுத்து வைப்பது, தேய்க்க வேண்டிய துணிகளை வரிசைக் கிரமமாக எடுத்து வைத்துக் கொள்வது என்று தொழிலில் குழப்பமில்லாத செய்கையும் சுத்தமுமே அவளது வேலைகளை எளிதாக்கி விடும்.

 எவ்வளவு வெப்பத்தில் தேய்த்தால் எந்தெந்த துணிகள் நன்கு சுருக்கம் போகப் படியும் என்பது அவளுக்கு அத்துப்படி. பாலியஸ்டர் துணிகளை முதலில் தேய்ப்பாள். பருத்தித் துணிகளான சட்டை, வேட்டி, புடவைகளுக்கு சற்று மிகையான வெப்பம் தேவைப்படும். தவிர துணிகள் காய்ந்தும், காயாமலும் இருப்பது போன்ற மித ஈரத்தன்மையிலிருந்தால் நன்கு எளிதில் படியும். ஆகவே பருத்தித் துணிகளில் லேசாக தண்ணீர் தெளித்து அதனை துவைப்பது போல கும்மி ஒரு பக்கம் எடுத்து வைத்துக் கொள்வாள். தேவைப்படும் போது வெப்பத்தைக் கூட்டி, விசிறியால் விசிறிக் கொள்வாள். பெட்டியை எடுத்து துணியின்மீது வைத்து இழுத்தால் சுவற்றிற்கு பட்டி பார்த்ததைப் போல வெள்ளை வெளேர் நிறத்தில் வழவழவென்று கதர் வேட்டியும், சட்டையும் மினுங்கும். இதைப் போலவே பருத்தித் துணிகளும் குறிப்பாக புடவைகள் தேய்த்து மடித்து வைப்பதில் கைதேர்ந்து போயிருந்தாள் பூரணி. ஆகவே அந்தப் பகுதியில் உள்ள பெண்களிடம் தனிச் செல்வாக்கு அவளுக்கு.

 ஹவுசிங் யூனிட் என்று பெரும் பான்மையான மக்களால் அழைக்கப் பெறும் அந்த வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் வேலைக்குச் செல்லும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் பூரணி இப்போது செல்லப்பிள்ளையைப் போல ஆகிவிட்டி ருந்தாள். தொழில் சுத்தம் ஒரு புறமிருப் பினும், சிரிக்கச் சிரிக்க எல்லோரிடமும் பேசுவதே அனைவரையும் கவர்ந்து விட்டது. சில்லறை பாக்கியோ, ஒன்றிரண்டு ரூபாய் குறைந்தாலோ கூடினாலோ பூரணியும் சரி, அங்கு வாழ்கிறவர்களும் சரி அதனாலென்ன வாங்கிக்கறேன் என்று சொல்லிச் செல்கிற அளவிற்கு பூரணி எல்லோரிடமும் நெருங்கி விட்டிருந்தாள். மாலை ஆறு மணி வாக்கில் பெட்டியைத் திறந்து நெருப்பைக் கீழே கொட்டி நீரூற்றி அணைத்து விடுவாள். அதற்குப் பிறகு தேய்த்த துணிகளைக் கொண்டு வீடு வீடாக ஒப்படைத்து அதற்குரிய காசுகளை வாங்குவது தான் வேலை. மாலை ஏழு மணிக்கெல்லாம் திரும்பவும் வீடு போய்ச் சேர்ந்து விடுவாள்.

 பூரணியின் கணவன் கோவிந்தன் படுத்தப் படுக்கையாகவே கிடந்தவன், இப்போது பரவாயில்லை. சென்ற வருடம் சாலையில் மிதிவண்டியில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த லாரி மோதியதில் அப்படியே குப்புற சாய்ந்தவன் தான், பிழைப்பானோ, மாட்டோனோ என்கிற நிலை வரை சென்று ஏதோ பிழைத்துக் கொண்டுவிட்டான். இடது காலில் எலும்பு நொறுங்கி பலத்த அடி. வலது கையும் முன்போல செயல்பட மாட்டேன் என்கிறது. உண்பது முதல் கால் கழுவுவது வரை இடது கைதான். நினைத்த மாதிரி எழுந்து எங்கும் நடந்து செல்லவோ, மிதிவண்டியை மிதிக்கவோ முடியவில்லை. மெல்ல எழுந்து பத்தடி வைப்பதற்குள் கால் சோர்ந்து உட்கார்ந்து விடுவான். மாவு கட்டுப்போட்ட எலும்புகள் சேர்த்து கட்டப்பட்டிருந்தாலும் முன்போல வருமா தெரியவில்லை. உள்ளே வைத்திருக்கும் கம்பிதான் இப்போதும் காலுக்கான பிரதானம்; ஆதாரம். போகப் போக பழக்கத்தில் மட்டுமே காலூன்ற முடியும் என்ற நிலை.

 பழைய மனிதனாய் கோவிந்தன் இருந்தபோது பூரணிக்கு அத்தனைக் கஷ்டமில்லை. இப்போது இரண்டு ஆள் வேலையையும் சேர்த்து பூரணி செய்ய வேண்டியுள்ளது. கோவிந்தன் தினமும் பூரணியோடு வரமுடிவதில்லை. எப்போதாவது துணிகள் மிகுந்திருக்கும் சனி, ஞாயிறுகளில் கோவிந்தனும், மகன் மணியும் வருவதுண்டு.

 கடைக்கு வரும் பொழுதுகளில் கூட கோவிந்தன் ஓரமாய் உட்கார்ந்திருப்பதோடு சரி. எப்போதாவது தேய்த்தத் துணிகளை எடுத்து கையால் மட்டுமே மடக்கி, மடக்கி கட்டி வைப்பான். கட்டி வைத்தத் துணி மூட்டைகளை எடுத்துக் கொண்டு மணி வீடுகளில் கொடுத்துவிட்டு வருவான். அன்றைக்கு மட்டும் பூரணிக்கு சற்று ஆறுதலாக இருக்கும்.

 கடைக்கு வரும் பொழுதுகளில் நேரத்திற்கு டீயும், வடையும் வாங்கிவரச் செய்து மகனுக்கும், கணவனுக்கும் கொடுப்பாள். வலது கை விளங்காமலேயே போனதால் வடையைக் கூட பிட்டு கோவிந்தன் வாயில் வைத்து விடுவாள் பூரணி. அப்பொழுதெல்லாம் கோவிந்தன் விழிகளில் கண்ணீர் பெருக்கெடுத்து நிற்கும். எதையோ வெறித்தபடி உட்கார்ந்திருப்பான். பூரணி அவன் என்ன நினைக்கிறான் என்பதை ஊகித்து விடுவாள். சட்டென எதையாவது சொல்லி பேச்சை மாற்றி சிரிக்க வைத்து விடுவாள்.

 அவசரத்திற்கு வரும் துணிகளை அப்போதே தேய்த்து தந்து விடுவாள். இரண்டு நாள் ஆகுமென்றால் அதையும் அப்போதே சொல்லி விடுவாள். சலவைக்கு வரும் துணிகளை துவைத்து காய வைத்து, தேய்த்துத் தர வேண்டியிருப்பதால் அதற்கு மட்டும் சில நாட்கள் எடுத்துக் கொள்வாள். சொன்னால் சொன்னது போலத் தருவாள். அத்தனையளவு நம்பிக்கையை ஏற்படுத்தி வைத்திருந்தாள்.

 ஆனால் அந்த நம்பிக்கை இப்போது தகர்ந்து போய்விட்டது. தொடர்ந்து பெய்த அடைமழையில் துணிகளைத் துவைக்கவோ, காய வைக்கவோ இயலாமல் பூரணி ரொம்பவும் அவதிப்பட்டாள். பத்து நாட்களுக்குப் பிறகு இன்றுதான் லேசாக வெளிச்சம் காட்டுகிறது. இம்மழை இப்படியே போய் விட்டால் தேவலாம் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.

 காலையிலேயே துணிகளைத் துவைத்து வெயிலில் காய வைத்து விட்டுத் தான் கடைக்கு வந்தாள். பத்து நாளும் தேங்கிக் கிடந்த துணிகளை எடுத்து அவசரம் அவசரமென தேய்க்கத் தொடங்கினாள். மகன் மணியை மட்டும் வீட்டில் விட்டுவிட்டு மழை வந்தால் காயும் துணிகளை எடுத்துப் போடும்படி சொல்லிவிட்டு வந்திருந்தாள். அவனுக்கு உதவிக்கு வீட்டிற்கு விருந்தாளியாய் வந்திருந்த அக்கா மகள் செல்வியையும் விட்டு வந்திருந்ததில் ஒரு வகை நிம்மதி அவளுக்கு.

 கூடவே அழைத்து வந்திருந்த கோவிந்தன் ஓரமாய் உட்கார்ந்திருந்தான். பூரணி துணிகளை தேய்த்துத் தருவதில் மும்முரமாய் இருந்தாள்.

 இரண்டு சட்டைகளை தேய்த்து எடுத்து வைப்பதற்குள், மூன்றாம் வீட்டிலிருந்து குழந்தையை அனுப்பி விட்டிருந்தான் வேலுச்சாமி.

 ஓடி வந்த குழந்தைக்கு மூச்சு ஏறி இறங்கியது.

 “அப்பா சலவைக்குப் போட்டிருந்த வேட்டி சட்டையை வாங்கிட்டு வரச் சொன்னாங்க'' என்றாள் அவள்.

 “அப்பாவை இன்னிக்கு ஒரு நாள் பொறுத்துக்கச் சொல்லும்மா... காலையில நானே கொண்டு வந்து தர்றேன்'' - பூரணி.

 குழந்தை ஓடிப் போய் விட்டாள்.

 இங்கிருந்து குழந்தை ஓடுவதையும் வீட்டு வாசலிலேயே வேலுச்சாமி நிற்பதையும் பார்த்து பூரணி உள்ளுக்குள் சங்கடப்பட்டுக் கொண்டிருந்தாள்.

 குழந்தை ஓடிப்போய் சேதியைச் சொல்லவும், வேலுச்சாமி பூரணியைப் பார்த்தான்.

 பூரணி சைகையாலேயே தன் இயலாமையை விளக்கிவிட்டு நாளைக்குத் தருவதாகவும் சொன்னாள்.

 அதற்கிடையில் வேறு யாரோ வந்து துணி கேட்கவும், அவள் துணியைத் தேடி எடுப்பதில் கவனம் செலுத்தத் தொடங்கினாள்.

 இரண்டு நிமிடம் கூட கழிந்திருக்காது.

 “ஏண்டி ஈனச்செறுக்கி... உனக்கென்னா அவ்ளோ திமிரா...? அங்கிருந்து கைய ஆட்டி ஆட்டி சொல்றே...? கிட்ட வந்து என்னன்னு சொல்ல மாட்டியளோ? ரொம்பத்தான் கொழுப்பு எகிறி நிக்குதோ?''

 வேலுச்சாமி அடித் தொண்டையில் கத்தினான்.

 கண்கள் ரத்தச் சிவப்பாய் மாறி விட்டிருந்தன. நெருங்கி வந்தான்.

 பூரணிக்கு உயிரே தெறித்தது போலிருந்தது.

 எதிர்த்து எதுவும் பேசத் தோணாமல் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றாள். தன் மீது எத்தவறுமில்லையென்ற போதிலும் வேலுச்சாமியைப் பற்றி எல்லோரையும் போல அவளுக்கும் தெரியும். எந்தச் சிரமமுமில்லாமல் வயிறு வளர்த்துக் கொண்டிருப்பதற்கு மனைவியின் அரசுப்பணி பேருதவி புரிந்தது வேலுச்சாமிக்கு. வீட்டிலிருந்தாலும் எப்போதும் வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை மைனர் மாதிரி தான் வலம் வருவான். காலையில் கடை திறக்கத் தாமதமாகும் என்பதால் இரவே வாங்கி வந்து வீட்டில் வைத்துக் கொண்டு குளித்து முடித்ததும் ஒரு பெக் அன்னாத்திக் கொள்ளும் கருமமே கண்ணாகக் கொண்டு வாழும் கண்ணியவாதி... வாயைத் திறந்தால் கெட்ட வார்த்தைகளுக்குப் பஞ்சமிருக்காது. மழையாவது கொஞ்சம் நின்று கொட்டும். இவன் நிற்க மாட்டான். வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் இவன் தொல்லையைத் தவிர வேறு வசதி குறைவு எதுவுமில்லை என்கிற அளவிற்கு புகழ் வளர்த்திருந்தான்.

 பூரணி கையெடுத்து வணங்கினாள்.

 “அடச்சிக்கிட்டு பேயுற மழையை நீங்களே பாக்குறீங்க. நான் என்னங்கய்யா தப்பு பண்ணேன்? இன்னிக்குத் தான் கொஞ்சம் வெயில் காட்டியிருக்கு. தொவச்சி போட்டிருக்கேன். நாளைக்குக் காலையில நிச்சயமா தந்திடுறேன்''.

 “எனக்கு உன் சமாதானம் வேண்டாம். எந்துணிய இப்பவே கொடுடி... நீ சலவை செஞ்சி கிழிச்சது போதும்''

 பிராந்தி வாடைக் குப்குப் என்று அடித்தது.

 “இன்னிக்கு ஒரு நாள் மட்டும்...''

 பூரணி முடிப்பதற்குள், “அடச்சீ... சொன்னதையே சொல்லிகிட்டு... மோரையும் மூஞ்சியையும் பாரு. துணி போட்டு பத்து நாளாவுதுல்லடி... மல்லாக்கப் படுத்து மவுந்து கெடந்துப்புட்டு இப்பவந்து பசப்பிக்கிட்டு நிக்கறே...?''

 பூரணிக்கு அழுகையே வந்துவிட்டது.

 “என் புத்தி தெரியாம எங்கிட்டயே வேலைய காட்டுறியா?''

 வேலுச்சாமி அப்பகுதியில் கத்தத் தொடங்கிவிட்டால் எல்லோரும் கதவைச் சாத்திக் கொண்டு விடுவார்கள். அத்தனை அராஜகம் செய்வான். எவனும் எக்கேள்வியும் எதிர்த்துக் கேட்டதில்லை. உள்ளூரில் சில அரசியல் புள்ளிகள் அவனுக்கு வேண்டப் பட்டவர்களாக இருப்பதால் எதையும் சமாளித்து வந்து விடுவான்.

 கெட்ட வார்த்தைகளில் பூரணியின் தாயையும், குடும்பத்தையும் அசிங்கப் படுத்தி கத்திக் கொண்டே இருந்தான்.

 உட்கார்ந்திருந்த பூரணியின் கணவனுக்கு இரத்தம் சூடேறி கொதித்துக் கொண்டிருந்தது. ஒவ்வொரு சொல்லும் உயிரை கொஞ்சம் கொஞ்சமாய் பதம் பார்த்துக் கொண்டிருந்தது.

 ஆனாலும் எதுவும் பேசவில்லை.

 விளங்காமல் போன வலது கையையும் இடது காலையும் நினைத்து உள்ளுக்குள் குமைந்தான். தன் கண்ணெதிரே மனைவி படும் பாட்டைப் பார்த்து கண்களிலிருந்து வழியும் கண்ணீரை யாருக்கும் தெரியாமல் துடைத்துக் கொண்டான்.

 வேலுச்சாமி அடங்குவதாயில்லை. போதை கொஞ்சம் கொஞ்சமாய்த் தலைக்கேறிக் கொண்டிருந்தது.

 கெட்ட வார்த்தைகளால் திட்டிக் கொண்டேயிருந்தவன், ஒரு சமயத்தில் கடையில் இருந்த சாமான்களையெல்லாம் எடுத்து வீதியில் வீசினான்.

 “கொழுப்பெடுத்து திரியற உன்னை இன்னியோட அடக்குறேன்'' என்று தப்பு தப்பாய்ப் பேசினான்.

 பூரணி ஓடி அவன் கால்களில் விழுந்து கெஞ்சினாள்.

 போதையின் உச்சத்தில் மிதந்தவன் அவளை காலால் எட்டி உதைத்துக் கீழே தள்ளினான். பூரணி சுருட்டிக் கொண்டு ஓரமாய் விழுந்தாள். கொஞ்சநேரத்தில் கூட்டம் கூடி விட்டது. எவரும் வாய் திறப்பதாயில்லை. அப்படியே நின்றபடி பக்கத்திலுள்ள வர்களிடம் கிசுகிசுத்துக் கொண்டிருந்தார்கள்.

 "பாவம் அவ புருஷன் நல்லாருந்தா இந்நேரம் என்னாகியிருக்கும்? இத்தனை கொடுமை பண்றானே... ஒரு நியாயம் அநியாயமில்லாமப் போயிட்டே... கேக்க ஆளே இல்லையா? மழபேஞ்சி நாறடிக்குறதுக்கு அவ என்னய்யா பண்ணுவா? வேணும்னா செய்யுறா?'

 சுற்றியுள்ளவர்கள் புலம்பித் தீர்த்தார்கள்...

 ஒரு கட்டத்தில் என்ன செய்கிறோம் என்ற நிதானமில்லாமல் இருந்தான் வேலுச்சாமி.

 கீழே விழுந்து கிடந்த பூரணி,

 “மன்னிச்சிடுங்கய்யா... மன்னிச் சிடுங்கய்யா...'' என்ற ஒற்றை வார்த்தையோடு கெஞ்சியபடியே கையெடுத்து வணங்கிக் கொண்டிருந்தாள்.

 வேலுச்சாமி காதில் எதுவும் விழுந்த பாடில்லை.

 அவள் தலை முடியை பிடித்து வளைத்துச் சுழற்றினான்.

 “ஐயோ... காப்பாத்துங்க...'' என்று கதறினாள் பூரணி.

 கோவிந்தனுக்குள் அந்த வார்த்தைகள் இடியாய் இறங்கின. அவனுக்குள் என்ன நடந்தது என்று தெரியவில்லை.

 “முட்டாபயமவனே... எலே... விடுடா என் பொண்டாட்டிய!'' என்று கத்தியபடி படீரென எழுந்தான்.

 சூடேறி ரத்தப்பழுப்பாய் இருந்த சலவைப் பெட்டியை எடுத்தான். வேலுச்சாமியை நெட்டித் தள்ளி பெட்டியை முகத்தில் வைத்து அழுத்தினான்.

 “ஐயோ... எரியுது... எரியுது...''

 வேலுச்சாமி சூடு தாங்க முடியாமல் அலறினான்.

 அதற்குள் பூரணி எழுந்து வந்து அவனைத் தள்ளி பெட்டியை எடுத்துக் கொண்டு ஓடினாள். யாரோ கோவிந்தனை வந்து இழுத்துப் பிடித்தார்கள்.

 “என்னடா தப்பு பண்ணினோம் நாங்க. ஒரு நியாய அநியாயமில்லையா?''

 கோவிந்தன் தலையிலடித்துக் கொண்டு அழுதான்.

 வேலுச்சாமி முகம்பூராவும் தீய்ந்து வெந்து போயிருந்தது. 108க்கு யாரோ போன் செய்து, தூக்கிக் கொண்டு ஓடினார்கள்.

 எல்லோரும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். வேலுச்சாமியை நினைத்து எவரும் இரக்கப்படவில்லை. இந்தப் பாடம் கொடுக்கப்பட வேண்டியது தான் என்று பேசிக் கொண்டார்கள். இருந்தாலும் கோவிந்தன் இத்தனையளவு துணிவான் என்று எவரும் எதிர்பார்க்கவில்லை.

 "கண்ணுக்கு நேராகவே கட்டுன பொண்டாட்டி மேலே கய்ய வச்சா எவன் தான் சும்மா இருப்பான். கோவிந்தனுக்கு வெளங்காத கையே வெளங்கிப் போச்சேய்யா...?'

 ஊரெல்லாம் கோவிந்தன் பேச்சாகவே கிடந்தது.

Pin It