அதிர்ச்சி தரத்தக்க மிகப்பெரிய அபாயம் நம்மை எதிர்நோக்கி காத்திருக் கிறது. பெய்கிற மழைக்கும், நிலத்தடி நீருக்கும், குளத்து, ஆற்று நீருக்கும் தொகை நிர்ணயிக்க-அதையும் தனியாருக்கு தாரை வார்க்க-துடிக்கிறது இந்திய நடுவண் அரசு.

 இந்திய அரசின் நடுவண் நீர்வள அமைச்சகம் “தேசிய நீர்க்கொள்கை வரைவு - 2012'' என்ற வரைவை பிப்ரவரியில் தனது இணையத்தில் ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டுமே வெளியிட்டது. இவ்வரைவின் மீது பொதுமக்கள் கருத்துக்கேட்டு சில நாளேடுகளில் அறிவிப்பும் வெளியிடப் பட்டது. அரசமைப்புச் சட்டத்தில் அறிவிக்கப் பட்டுள்ள தமிழ் உள்ளிட்ட தேசிய இன மொழிகளில் கூட இவ்வரைவு வெளியிடப் படவில்லை. அவசர அவசரமாக செயல் படுத்திடத் துடிக்கும் தில்லி அரசின் கபட நோக்கைப் புரிந்து கொண்டு, தமிழில் இக்கொள்கை வரைவை பூங்குழலி அவர்கள் மொழி பெயர்ப்பில், கா.தமிழ்வேங்கை தொகுத்து அச்சிட்டு வெளியிட்டுள்ளார்.

 "காசுள்ளவர்க்கே தண்ணீர்' எனக் கூறும் இவ்வரைவு அறிக்கையின் கோர முகம் இதன் மூலம் புட்டு புட்டு வைக்கப் பட்டுள்ளது.

 பின்னிணைப்பாக இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி மத்திய கட்டுப்பாட்டுக் குழு தலைவர் ஆர்.நல்லகண்ணு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன், புதிய தலைமுறை ஆ.பழனியப்பன் கட்டுரைகளும் மற்றும் தினமணி தலையங்கமும் சேர்க்கப்பட்டுள்ளது. இதிலிருந்து சில பகுதிகள்...

 ...தமிழ்நாட்டிற்கு இதனால் கடும் பாதிப்பு ஏற்படும். ஏற்கனவே ஆற்றுநீர் பங்கீட்டு இறுதி அதிகாரம் இந்திய அரசிடம் இருக்கும் போதே தமிழகத்திற்கு எதிராக இந்திய அரசு செயல்படுவதைக் கண்டு வருகிறோம். காவிரிச் சிக்கலிலும் முல்லைப் பெரியாறு அணைச் சிக்கலிலும் நீதிமன்றத் தீர்ப்புகளைச் செயல்படுத்த வேண்டிய தனது சட்டக் கடமையைக் கை கழுவிவிட்டு தமிழின எதிரிகளோடு அரசு கைகோர்த்து நிற்பதைப் பார்க்கிறோம். இந்நிலையில் ஆற்றுநீர் முழுவதும் இந்திய அரசின் உடமையானால் தமிழகத்திற்கு நீதி கிடைக்க வாய்ப்பே இல்லை. நீர் முற்றுகையில் முழுவதும் சிக்கி வறண்டுவிட வேண்டியது தான். எந்த இயற்கை வளமும் மக்களின் பொது உரிமை நிலையிலிருந்து அரசுடமை என மாற்றப்பட்டால் அந்த வளம் தனியார் உடமையாவதற்கு வழி திறந்து விடப் படுகிறது என்று பொருள்.

 பாவம், விவசாயி இனி தண்ணீர் வாங்க பணம் இல்லாவிட்டால் அவரது நிலம் தரிசாக கிடக்கும். இதன் காரணமாக விவசாயம் அருகிப்போய் நம் நாட்டில் உணவு உற்பத்தி வெகுவாகக் குறைந்து விடும் ஆபத்துக்கான அறிகுறிகளை வரைவு தேசிய நீர் கொள்கை உருவாக்கிவிடும்.

 தண்ணீரை தனியாரிடம் கொடுத் ததின் விளைவாக பலநாடுகள் மிக மோசமான அனுபவங்களைச் சந்தித்தது சமீபத்திய வரலாறு. பொலிவியாவின் 3-வது பெரிய நகரமான கொச்சம்பாவின் நகராட்சி நிர்வாகம் நீர் விநியோகத்தை பெச்டெல் எனும் அமெரிக்க கம்பெனியிடம் ஒப்படைத்தது. உடனே தண்ணீர் கட்டணம் பல மடங்கு உயர்ந்தது. கொச்சம்பாவில் உள்ள தண்ணீர் அனைத்தும் தனக்கு மட்டுமே சொந்தம் என்று அறிவித்தது அந்த நிறுவனம். அங்கு அனைத்து வீடுகளிலும் மழை நீர் சேகரிப்புத் தொட்டிகளை உடைக்க ஆரம்பித்தனர், பெச்டெல் கம்பெனி ஆட்கள். மக்கள் வெகுண்டெழுந்தனர். பெரும் போராட்டங்கள் வெடித்தன. போராட்டத்தை அடக்க, ராணுவத்தை ஏவியது அரசு. இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் நடைபெற்றது. இறுதியில் மக்கள் போராட்டமே வென்றது. 2002-ம் ஆண்டு ஒப்பந்தத்தில் இருந்து விலகியது பெச்டெல் நிறுவனம்.

 மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் மகாநதியில் கிளை ஆறான ஷிவ்நாத் என்கிற ஜீவநதி பாய்கிறது. அதை ரேடியஸ் வாட்டர் லிமிடெட் என்கிற அமெரிக்க கம்பெனிக்கு 1998-ஆம் ஆண்டு குத்தகைக்கு கொடுத்தது ம.பி.அரசு. அவர்கள் ஒப்பந்த விதிகளை மீறி ஏராளமான தண்ணீரை உறிஞ்சினர். அத்துடன் நிற்காமல் ஆற்றையொட்டிய ஊர்களில் வீடு வீடாகச் சென்று "உங்கள் கிணற்றில் உள்ள தண்ணீர் எங்களுக்குச் சொந்தம்' என்று கூறினர். ஆற்று நீர் பூமிக்குள் கசிந்து கிணற்றுக்குள் வருகிறது என்பது அவர்களின் வாதம். எனவே "பணம் கட்ட வேண்டும்' என்று கூறினர். கிணறுகளில் மீட்டர் பொருத்தினர். அதற்கு எதிராக மிகப்பெரிய போராட்டங்களை மக்கள் நடத்தினர்....

 விழிப்புறச் செய்ய வந்திருக்கும் இந்நூலை பல படிகள் அச்சிட்டு எங்கும் வழங்கி “மக்கள் விரோத தேசிய நீர்க் கொள்கை வரைவு 2012''ஐ அம்பலப்படுத்த வேண்டியது நம் அனைவரின் முக்கிய முதல் கடமையும் ஆகும்.

வெளியீடு

ஐந்திணைப் பாதுகாப்பு இயக்கம்,

தமிழக நதிகள் பாதுகாப்புக் கூட்டமைப்பு,

நன்னீர் மற்றும் சுகாதார உரிமைக்கான தமிழகக் கூட்டமைப்பு,

தொடர்புக்கு : கா.தமிழ்வேங்கை

4/17, பழனிலிங்கனார் தெரு,

வள்ளலார் நகர், வண்டிமேடு,

விழுப்புரம் - 605 602.

பேச : 9442170011

விலை : ரூ.30/-

Pin It