இந்த இதழ் கருக்கலின் நேர் காணலுக்கு மிகச் சிறந்த இலக்கியவாதியும், அரசியல்வாதியும், தாமரை இதழின் ஆசிரியரும் ஆன இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில துணைச் செயலாளர் தோழர் சி.மகேந்திரனை முடிவு செய்ததும், நாம் தொடர்பு கொண்டது முனைவர் இரா. காமராசு (பொதுச் செயலாளர், கலை இலக்கியப் பெருமன்றம்) அவர்களைத்தான். பட்டுக்கோட்டை நிகழ்வு ஒன்றில் சந்தித்து, நேரம் வாங்கி உதவி புரிந்தார். மன்னார்குடியை அடுத்த உள்ளிக்கோட்டை திருமணத்திற்கு வருகை புரிந்த சி.மகேந்திரன், நேர்காணலுக்கான நேரமாக நமக்கு முதலில் ஒதுக்கித் தந்தது காலை 8 மணி. பிறகு நம் இதழ் குறித்து அறிந்து, விரிவாகப் பேச, மதியம் 4 மணியை தோழர் வை.செல்வராஜ் (திருவாரூர் மாவட்டத் துணைச் செயலாளர்) மூலம் மாற்றித் தந்தார்.

 அன்று மாலை சரியாக நான்கு மணிக்கு மன்னை அரசு விருந்தினர் மாளிகைக்குள் நுழைந்தோம். எங்கிருந்தோ வந்த தோழர் ஒருவர் "சி.எம்மைத்தானே பார்க்க வந்திருக்கிங்க... இப்ப வந்திடுவார்... உட்காருங்க'' என்று சோபாவைக் காட்டினார். இருக்கையில் அமர்ந்து, பத்து நிமிடக் காத்திருப்பில், தோழர் சி.மகேந்திரன் பரபரப்போடு வியர்க்க விறுவிறுக்க உள்ளே வந்தார். “வாங்க... தாமதமாகி விட்டது. செய்தியாளர் சந்திப்பு சிறிது நீண்டு விட்டது'' என்றபடி நம்மருகே அமர்ந்தார்.

 புன்னகை முகம். தலை வழுக்கையும் ஒரு கம்பீரம்தான். நெடிய உருவம். பேண்ட் சட்டையில் இருந்தார். எவ்வித பந்தாவுமின்றி நம்மில் ஒருவராக உரையாடினார். ஏற்றமும் இறக்கமும், கம்பீரமும் குழைவும், சப்தமும் மென்மையுமாய் கேள்விகளுக்கேற்ப பதில் தந்தார். அவருடன் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட துணைச் செயலாளர் வை.செல்வராஜ், மன்னை ஒன்றியச் செயலாளர் ஆர்.வீரமணி, அகில இந்திய மாணவர் பேரவையின் மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் துரை.அருள்ராஜன் முதலியோரும் இருந்தனர். சம்பிரதாய உரையாடலை அடுத்து மகேந்திரன் கேள்விகளை எதிர்கொள்ள ஆயத்தமானார். இனி நீங்களும், அவரும்...

சந்திப்பு : பாண்டியன், பரிதி

உங்கள் பள்ளிப்பருவம், இளமைப்பருவம், நீங்கள் கம்யூனிஸ்டு இயக்கத்தில் சேர உந்துதலாய் அமைந்த நிகழ்வு அல்லது நபர் அல்லது சூழலைச் சொல்லுங்கள்.

 என் கிராமம் கீழவன்னிப்பட்டு. இயற்கை அழகு சூழ்ந்த, ஆனால் இன்று கூட பேருந்து போக்குவரத்து இல்லாத ஒரத்தநாட்டிற்கும் மன்னார்குடிக்கும் இடையில் அது இருக்கிறது. இங்குதான் என் ஆரம்பப் பள்ளிப் பருவம் துவங்கியது. ஆரம்பப் படிப்பிற்குப் பிறகு உயர்நிலைப் படிப்பிற்காக தஞ்சை சென்றேன். அங்கு செல்வராஜ் உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்தேன். அந்தப் பள்ளியை ஏற்படுத்தித் தந்தவர் கலெக்டர் மலையப்பன். மக்கள் கலெக்டர் மலையப்பன் என்று அவரைக் கூறுவார்கள். அந்தப் பள்ளியில் நரிக்குறவர் மாணவர்களும் கல்வி கற்க வேண்டும் என்ற இலட்சியத்துடன் அவர் இருந்தார். உடையும் உடலும் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதை முதலில் அவர்களுக்குக் கற்பிக்க, அது குறித்து இப்போது நினைத்துப் பார்த்தாலும் ஆச்சரியமாக இருக்கிறது.

 பதினோராம் வகுப்பு வரை அந்தப் பள்ளியில்தான் படித்தேன். என் பொதுவுடைமை வாழ்க்கையின் ஆரம்பம் அங்குதான் தொடங்கியது. அங்கு பெருமைப் படத்தக்க ஆளுமைகளாக இரண்டு ஆசிரியர்கள் இருந்தனர். ஒருவர் தங்கபாலன். இன்னொருவர் பாரதிப்பித்தன். ஒரு தந்தையைப் போல என்னிடம் அன்பு செலுத்தி அவர்களின் குடும்பத்தில் ஒருவனாகவே என்னை நடத்தினார்கள். அவர்களிடமிருந்து நான் பொதுவுடைமை, தமிழ், அரசியல் என அனைத்தையும் கற்றுக்கொண்டேன். பாரதிப்பித்தன் ஒரு மிகச்சிறந்த பொதுவுடைமை சிந்தனையாளர். பொதுவுடைமை என்ற தத்துவத்தைத் தமிழகத்தில் நிலை நிறுத்துவதற்கு தனது பார்வையை மணிமேகலை, சிலப்பதிகாரம், கம்ப ராமாயணம் இவற்றை நோக்கி ஆழமாகப் பதித்தவர், என்னையும் பார்க்கச் செய்தவர். இந்த இருவரும் என்னை வழி நடத்தியிருக்க வில்லை என்றால் நான் பொதுவுடைமை இயக்கத்தின் பால் வந்துசேர சிறிது காலதாமதமாகியிருக்கலாம்.

 அந்த இளம் வயதிலேயே நான் பொதுவுடைமை இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு பணியாற்றினேன். படிக்கின்ற காலத்திலேயே மேடை ஏறிப்பேசுவதில் எனக்கு ஆர்வம் இருந்தது. பள்ளியில் நடைபெற்றப் பேச்சுப் போட்டிகளிலெல்லாம் நான் கலந்து கொண்டு அநேகமுறை முதல், இரண்டாம் பரிசுகளை வென்றுள்ளேன். அதுபோல மாவட்ட அளவில் நடைபெற்றப் பேச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் பெற்றுள்ளேன். அதுமட்டுமல்லாது பத்தாம் வகுப்பில் நான் படித்துக் கொண்டிருந்த காலத்தில் ஆனந்த விகடன், “நானொரு தலைசிறந்த மாணவன்'' என்ற தலைப்பில் ஒரு கட்டுரைப் போட்டி நடத்தியது. அந்தக் கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்டு தமிழக அளவில் மூன்றாம் பரிசு பெற்றேன்.

 அதற்குப்பிறகு என் வாழ்க்கை செல்வராஜ் உயர் நிலைப்பள்ளியைவிட்டு, தஞ்சையைவிட்டு, மன்னார்குடிக்கு நகர்ந்தது. மன்னார்குடியிலுள்ள அரசினர் கலைக் கல்லூரியில் சேர்ந்தேன். நான் அக்கல்லூரியின் முதல் பேட்ஜ் மாணவன். இப்போது அந்தக் கல்லூரியில் இருக்கக்கூடிய கட்டிடங்களெல்லாம் அப்போது இல்லை. ஓட்டுக் கட்டிடத்தில் கல்லூரி, அதன் விடுதி எல்லாம் நடைபெற்றது.

 பின்னர் என் கல்லூரி வாழ்க்கை திருவாரூர் கல்லூரிக்குப் பெயர்ந்தது. நான் மன்னார்குடிக்கு வந்து சேர்ந்த பொழுதே கம்யூனிஸ்டு கட்சியின் தீவிர உறுப்பினராகச் செயல்பட்டுக் கொண்டிருந்தேன். அனைத் திந்திய மாணவர் பெருமன்றத்தின் செயலாள ராகவும் நான் தேர்வு செய்யப் பட்டேன். கட்சிக்கூட்டம், ஊழியர் கூட்டம் போன்ற வற்றில் கலந்து கொண்டு தீவிர செயல் பாட்டாளனாக என்னைக் கூர் தீட்டிக் கொண்டிருந்தேன்.

 என் கிராமத்தைச் சுற்றி பத்து கிலோ மீட்டருக்கு ஒரு கம்யூனிஸ்டு கூடக் கிடையாது. அந்த கிராமத்தின் முதல் கம்யூனிஸ்ட்டே நான்தான். பிறகுதான் கட்சிக் கிளைகளெல்லாம் தொடங்கினோம். ஆனால் என்னை நானே ஒரு கம்யூனிஸ்ட் என்று அறிந்து கொள்வதற்கும் அதன் தத்துவம் எவ்வாறு ஒடுக்கப்பட்ட மக்களின் தத்துவமாக இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்வதற்கும் எனக்கு பயிற்சி பெறுவதற்குமான ஒரு மையமாக இருந்தது மன்னார்குடிதான். (இந்த இடத்தில் தோழர் மகேந்திரன் கண்களில் உணர்வு பூர்வமான ஒளி மின்னியது).

 மன்னார்குடியும் மன்னார்குடியை ஒட்டியுள்ள சின்னச்சின்ன கிராமங்களும் அங்குள்ள கட்சிக் கிளைகளின் தோழர்களும், அவர்களின் ஆர்வமும் என்னை ஈர்த்து வைத்திருந்தது. இம்மாதிரியான தோழர்கள், அவர்களின் சமூக மாற்றத்திற்கான ஈடுபாடு இவை தான் அந்த வயதில் எனக்குள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.

 திருவாரூர் அரசினர் கலைக்கல்லூரி அப்போது கலைஞரின் பெயரால் கலைஞர் கருணாநிதி கலைக் கல்லூரி என்ற பெயரில் இயங்கிக் கொண்டிருந்தது. அந்தக் கல்லூரியின் பெயர் மாற்றப்பட வேண்டும் என்ற மாணவர்களின் போராட்டத்தில் நானும் பங்கு கொண்டேன். அது இப்போது திரு.வி.க. கலைக் கல்லூரியாக பெயர் மாற்றப்பட்டு இருக்கிறது.

 நான் அப்போது அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் மாநிலப் பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டு இருந்தேன். பின்னர் 1979-இல் சென்னைக்குச் சென்றேன்.

 எனது தந்தையார் என் எட்டாம் வயதிலேயே இறந்து போனார். என்னுடன் பிறந்த ஐந்து சகோதர சகோதரிகளையும் வளர்ப்பதில் என் தாயின் பங்கு மகத்தானது. என் தாய் ஒரு வீரம் மிகுந்த பெண்மணி, எந்தக் காலத்திலும் தனது தைரியத்தை அவர்கள் இழந்தது கிடையாது. அவருடைய தைரியத்தாலேயே நானும் என் சகோதர சகோதரிகளும் வளர்ந்தோம். எங்களுக்கு கிடைத்த கல்வியும் கல்வியின் மீதிருக்கும் ஆர்வமும் அவர் தந்தது. அதையெல்லாம் இப்போது நினைத்துப் பார்க்கும் பொழுது நெகிழ்வாக இருக்கிறது.

அப்போதைய இளைஞர்களின் ஈர்ப்பு திராவிட இயக்கமாக இருந்த நிலையில், உங்களை கம்யூனிஸ்டு கட்சி ஈர்க்க அடிப்படைக் காரணமாக இருந்தது எது?

 அந்த கால கட்டத்தில் மாணவரிடம் பெரியதொரு ஈர்ப்பு கம்யூனிஸ்ட் கட்சியில் இல்லாமல் இருந்தது என்பது உண்மைதான். ஆனால் நக்சலைட் மூவ்மென்ட் போன்ற விஷயங்களில் கொஞ்சம் ஈர்ப்பு உடையவர் களாகச் சிலர் இருந்தனர். திராவிட முன்னேற்றக் கழகம் அப்போது ஆட்சியில் இருந்தது. கம்யூனிஸ்ட் கட்சி முக்கியமான எதிர்க்கட்சியாக இருந்தது. மிகச்சிறந்த வெகுஜன இயக்கமாகவும் அதன் சித்தாந்தங் களினாலும் தத்துவங்களாலும் எங்களுக்குக் கிடைத்த ஆசிரியப் பெருமக்களாலும் திராவிட ஈர்ப்பையும் மீறி என் போன்ற பலர் கம்யூனிஸ்ட் ஆனோம்.

சுதந்திர போராட்டத்தின் பங்களிப்பை காங்கிரஸ் தனதாக்கிக் கொண்ட நிலையில், கம்யூனிஸ்டுகள் தங்களின் பங்களிப்பை வெகு மக்களிடம் கொண்டு சேர்க்கத் தவறியது ஏன்?

 இதனை மிகவும் முக்கியமான ஒன்றாக நான் கருதுகிறேன். 1952-இல் கம்யூனிஸ்ட் எதிர்க்கட்சி, ஒரு பலம் பொருந்திய எதிர்க்கட்சி. அரசியலில் பல மாற்றங்கள். மாற்றங்களில் இரண்டு முக்கியமான விஷயங்களை நாம் கவனிக்க வேண்டியிருக்கிறது. காங்கிரசை எதிர்த்து உறுதியோடு நின்ற அல்லது எதிர்க்கட்சியாக இருந்த கம்யூனிஸ்ட் கேரளாவில் ஆட்சிக்கு வருகிறது. கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாக பிரிந்தபோது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேரளாவில் மேற்கு வங்காளத்தில் ஆட்சிக்கு வந்தது. தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் செய்ய வேண்டிய ஒரு முக்கியமான வேலைத் திட்டம் இருந்தது. ஆனால் அந்த வேலைத் திட்டத்தை மிகவும் இலகுவாக தன் கையில் தி.மு.க. எடுத்துக் கொண்டது. ஆனால் அவர்கள் மேற்கொண்ட கொள்கைக்கு, வேலைத்திட்டத்திற்கு, அவர்கள் உண்மை யாகவும், விசுவாசமாகவும் இல்லை. கம்யூனிஸ்ட்டைப் பொறுத்த அளவில் தி.மு.க.வின் மீதுள்ள வெறுப்பின் காரண மாகவும், தமிழகத்தின் அடிப்படைப் பிரச்சினைகள், பண்பாடு சார்ந்த பிரச் சினைகள் அல்லது இந்தியாவிலுள்ள எந்த ஒருமொழிக்கும் இல்லாத தொன்மை யையும் சிறப்பையும் உணர்ந்து அதற்கேற்ப செயல்படக் கூடிய செயலை விட்டு விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இந்தக்குறைபாடு என்பது தமிழ்நாட்டில் ஒருபெரிய கட்சியாக வளர்வதற்கான வாய்ப்பு பறிபோனதற்கான ஒரு காரணமாகக் கருதுகிறேன்.

மற்ற கட்சிகளின் தந்திரமான அரசியல், இடதுசாரிகளை வெகுஜன தன்மையிலிருந்து தள்ளி வைத்திருப்பதற்கான காரணமாக இதை கருதலாமா?

 சித்தாந்த ரீதியாகப் பார்த்தீர்களானால் ஒரு அர்ப்பணிப்பு, ஒரு நேர்மை அல்லது மக்கள் பிரச்சினைகளைத் தீவிரமாக கையிலெடுப்பது போன்றவற்றில் இன்றும் மக்களின் நம்பிக்கையைப் பெற்ற ஒரே கட்சியாக கம்யூனிஸ்ட் கட்சிதான் இருக்கிறது. அதில் எந்த மாற்றமும் கிடையாது. ஆனால் வெகுஜனத் தன்மையைப் பெறவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் தான். மற்ற கட்சிகள் அளவுக்கு வெகுஜனத் தன்மையைப் பெறாமலிருப்பதற்கு தமிழ்நாட்டினுடைய தனித்தன்மைகள், கட்சி அதனுடைய போராட்ட வடிவங்களை சரியாகக் கையாளாததுதான். குறைபாடுதான். 1946-இல் புதிய தமிழகம் என்றொரு வேலைத்திட்டம் முன் வைக்கப்பட்டது. அதில் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால், அதில் திராவிடக் கட்சிகள் என்னென்ன விஷயங்கள் குறித்துப் பேசினார்களோ அந்த விஷயங்கள் குறித்துப் பேசப்பட்டது. அதற்குப் பிறகு என்ன ஆனது? தமிழ்நாட்டில் உள்ள கம்யூனிஸ்ட்டில் ஆரம்பத்திலிருந்தே இரண்டு போக்குகள் இருந்தது, தொடர்ந்தது. ஒன்று ஜீவாவினுடைய தன்மை. இன்னொன்று பி.ராமமூர்த்தி போன்றோரின் தன்மை.

ஜீவா போன்றவர்கள் மார்க்சீயத்தைப் புரிந்து கொண்டு செயல்படுத்தியவிதம் ரொம்பவும் வித்தியாசமான ஒன்று. உதாரணத்திற்கு அப்போது கம்யூனிஸ்ட் கட்சிகள், மேலைநாட்டை அடிப்படையாகக் கொண்டு மேலை நாட்டிலிருந்து வரக்கூடிய தகவல்கள் அவர்களுக்கு கூடுதலாகக் கிடைத்ததாலே அதையே ரொம்பவும் பெரிது படுத்திப் பார்க்கக் கூடிய தன்மை ஒன்று இருந்தது. மாக்சிம் கார்க்கியின் தாயை புகழ்ந்து பேசும் அளவிற்கு திருக்குறளை பேசவில்லை இவர்கள் அப்போது. இந்தக் குறைபாடு இருந்துகொண்டே வந்தது. ஜீவா மக்கள் காங்கிரஸ், பகுத்தறிவு இயக்கம், மக்கள் போராட்டம் பலவற்றின் அனுபவத்தி லிருந்து பின் கம்யூனிஸ்ட் கட்சியில் வந்து சேர்கிறார். இவரது அனுபவம் சிங்கார வேலரின் அனுபவம் இவைகள் வித்தியாச மானவை. இது ஒரு அனுபவ மார்க்சீயத்தை அடிப் படையாய் கொண்டது. அனுபவ மார்க்சீயம் என்பது முக்கியமான ஒன்று. இரண்டு போக்குகளுக்கிடையில் மோதல் எப்போதும் இருந்து கொண்டே இருக்கிற நிலையில், ஜீவாவின் அணுகுமுறை தமிழகத்தில் பெரிய வெற்றியினைப் பெற்றது.

தமிழ்நாடு கம்யூனிஸ்ட் இயக்கம் என்பது தமிழ் மக்களின் பண்பை அறிந்து பண்பாட்டுக் கேற்ப ஒரு அரசியலை கட்டியமைக்கக்கூடிய வீழ்ச்சிக்கு அல்லது புரட்சிக்கு முக்கியமான காரணம் என நான் நினைக்கிறேன். ஒரு வர்க்கம் ஒரு சமூகம் இரண்டாகப் பிரித்துப்பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது. மற்றவர்களால் வர்க்க மாகத்தான் பார்க்க முடிந்தது. ஜீவாவால் மட்டுமே இரண்டையும் ஒரு சேரப்பார்க்க முடிந்தது. வர்க்கம், சாதி என்று பார்க்கும் போது மனித கவுரவம் என்ற ஒன்று உருவாகிறது. சாதியில் பிரிந்து கிடக்கக்கூடிய நமது சமூகத்தில் மனித கவுரவங்களை அகற்றுவது என்பது ஒரு நடவடிக்கை; அது ஒரு அதிகாரம். நீ கவுரவமானவன், நீ கவுரவமற்றவன், நீ புனிதமானவன், நீ புனிதமற்றவன் என்று முத்திரை குத்தப்பட்டு உழைப்புக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது... இப்படி பிரிக்கக்கூடிய ஒரு நிலைமை இந்திய சமூகத்தில் உள்ளது. இது ஒரு சமுதாயப் போராட்டமாகவும் ஒரு வர்க்கப் போர் என்கிற விஷயமாகவும் போய்விடுகிறது. திராவிட இயக்கம், மற்றவர்கள், அம்பேத்கார் போன்றவர்கள் வலிமையாக இதை கையில் எடுத்தபோது அதனுடைய முக்கியத்துவத்தைப் போதிய அளவிற்கு - நர்ஸ்ரீண்ஹப்ர்ஞ்ஹ் அள்ல்ங்ஸ்ரீற் என்று சொல்கிறோமே சமூகவியலை புரிந்து கொள்வதில் அல்லது நடத்திக்கொண்டு போவதில் கம்யூனிஸ்டுகளுக்கு பலவீனம் இருந்தது.

தமிழர்களின் பின்னடைவிற்கு திராவிடமும், அதைப் பேசிய பெரியாரும் தான் காரணம் என சில அமைப்புகள் வைக்கும் குற்றச் சாட்டை ஒரு கம்யூனிஸ்ட்டாக எப்படிப் பார்க்கிறீர்கள்?

 நான் அதை முற்றிலும் மறுக்கிறேன். திராவிடம் என்பது தவிர்க்க முடியாதது. இன்றைக்குப் பேசுகின்ற பலரும் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு பேசவில்லை. திராவிடம் என்ற போக்கு எப்போது வந்தது? இந்திய அளவில் திராவிடத்திற்கும் சமஸ்கிருதத்திற்கும் நடைபெற்றப் போட்டியின் விளைவாகத்தான் இது ஏற்பட்டது. கால்டுவெல் ஒப்பிலக்கணத்தை உருவாக்கினார். அந்த ஒப்பிலக்கணம் என்ன சொல்கிறது? “திராவிட மொழிகள் அனைத்திற்கும் தலைமை பீடமாகத் தமிழ் தான் இருக்கிறது''. உலக அளவில் இது ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. கால்டுவெல் தமிழுக்குச் செய்தத் தொண்டுக்கு நிகராக வேறொருவர் செய்தார் என்று ஏற்க முடியாது. தமிழ்மொழியை அனைவரும் சிறப்பிப்பதற்கு அவரும் ஒரு முக்கியமான காரணம் ஆவார். இதற்குப் பிறகு திராவிடமா? ஆரியமா? என்ற ஒரு நிலைப்பாடு ஏற்படுகிறது. திராவிடம் என்ற சொல்லில் தமிழ்தான் அதன் உள்ளிருப்பாக இருக்கிறது என்று எண்ணவும் பேசவும் படுகிறது.

 திராவிடம், தமிழ் என்ற இரண்டும் வெவ்வேறான நிலைப்பாடுகள் அல்ல. திராவிடம் என்பது தமிழ்தான். திராவிடத்தின் உள்ளுக்குள் முழுமையும் தமிழ்தான் இருக்கின்றது என்று எண்ண வேண்டுமே அல்லாது வேறு அல்ல. இதை இப்பொழுது ஒரு கட்டமைப்பு செய்கிறார்கள். அப்படி செய்து திராவிடத்திலிருந்து தமிழைப் பிரிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகமோ, திராவிடர் கழகமோ தமிழ்நாட்டுக்கு எதிரான வேலைத்திட்டத்தை செய்கின்றார்களா? அதில் இருப்பவர்கள் போலிகளாக இருக்கின்றார்கள் என்று சொல்லுங்கள், ஊழல்வாதிகளாக இருக்கின்றார்கள் என்று சொல்லுங்கள், லஞ்சம் வாங்கிவிட்டார்கள் என்று சொல்லுங்கள் அது வேறு விஷயம். வேலைத்திட்டத்தைப் பரிசீலனை செய்தீர்கள் என்றால் தமிழ் மக்களுக்கான வேலைத் திட்டம்தான், அதனால் அவர்களைத் தமிழர்களின் எதிரி என்று சொல்ல முடியாது. திராவிடம் என்ற வார்த்தை வருவதனாலேயே தமிழர்களின் எதிரி அல்ல. அதை ஒரு பொது நோக்காகத்தான் கொள்ளப்பட வேண்டும். திராவிட முன்னேற்றக் கழகமோ, திராவிடக் கொள்கையோ எந்தக் காலத்திலும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிரானது அல்ல.

 கம்யூனிஸ்ட் என்பது அடக்கு முறையை எதிர்ப்பது. அடக்குமுறை என்பது சாதி, சடங்கு, சம்பிரதாயங்கள், மூடப்பழக்க வழக்கங்கள், விதவைகளுக்கான வாழ்வினை மறுக்கும் போக்கினை எதிர்த்து போரிடுவது. இத்தோடு தமிழுக்கும் முக்கியத்துவம்... இவை திராவிடர்கழகம், தி.மு.க.வின் அம்சங்கள் என்றால், அதை எப்படி கம்யூனிஸ்ட் கட்சி எதிர்க்க முடியும்? முடியாது. என்ன இதில் சிக்கல் என்றால், இந்தக் கொள்கைகளுக்கு அவர்கள் விசுவாசமானவர்களாக இல்லை என்பதுதான்.

முல்லைப்பெரியாறு, காவிரி பிரச்னை தொடங்கி மூவர்தூக்கு, ஈழம் வரை மத்திய அரசு தமிழர்க்கு எதிராகச் செயல்படுகிற நிலையில் "தமிழ்த்தேசியம்' தேவை என்கிற நிலைப்பாடு தோன்றியுள்ளதே, சரியா?

 இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு இரண்டாவது அரசியல் போராட்டத்துக்குள் இந்தியா நுழைந்துவிட்டது. அந்தப் போராட்டத்தை உலகமயம் இன்னும் தீவிரப் படுத்துகிறது. இந்தியா சுதந்திரம் பெறுகிற போது இங்குள்ள இனங்கள், மொழிகள் எல்லாமும் ஒன்றுபட்டு நின்றால்தான் வெள்ளையரை எதிர்க்க முடியும் என்ற நிலை இருந்தது. அப்பொழுது தேசியத்தின் ஒற்றுமை என்பது அவசியமாக இருந்தது. சுதந்திரத்திற்குப் பிறகு ஒரு பெரிய போராட்டத்தின் மூலம்தான் மொழிவழி மாநிலம் அடைய முடிந்தது. மொழிவழி மாநிலம் என்பது இந்தியாவின் வளர்ச்சிக்குத் தேவையாக இருந்தது. தேவை ஆக்கினோம். அப்படி ஒவ்வொரு மொழியினைப் பேசும் மக்களும் ஒவ்வொரு மொழியினைப் பேசும் இனங்களாக இருக்கிறோம். தமிழகம், கேரளம், கன்னடம், மராட்டியம் எனத் தனித்தனி மொழி பேசும் மாநிலங்களும், ஒரே மொழி பேசும் இரண்டு மாநிலங்களும் (ஜார்கண்ட்) தற்போது இருக்கின்றன.

 மொழிவழி மாநிலங்கள் என்று ஏற்பட்ட பிறகு ஒவ்வொரு மொழி பேசுவோர் ஒவ்வொரு தேசிய இனங்களாக அடையாளப் பட்டு அவ்வாறான தேசிய இனங்களுக்குள் உள்ள ஏற்றத் தாழ்வுகள் பற்றிப்பேச அவசியம் வருகிறது. தமிழ்த்தேசியம் என்பது பல அளவு கோள்கள் கொண்டது.

 தமிழகம் அல்லது தமிழ் மக்களின் முன்னேற்றம், முன்னேற்றத்திற்கான வலிமையைப் பெறுதல் என்பதைப் பேசியாக வேண்டிய தேவை இருக்கிறது என்பதை நிராகரித்து விட முடியாது.

மேற்கு வங்கத்தில் சி.பி.எம்.மின் பின்னடைவை சக கம்யூனிஸ்டு தலைவராக எப்படிப் பார்க்கிறீர்கள்?

 அது ஒரு விமர்சனத்துக்குரியது. உலக அளவில் மார்க்சிய சிந்தனையாளன் என்பது வேறு, ஒரு கட்சிக்காரன் என்பது வேறு. நான் கட்சிக்குள் ஏற்பட்ட மாற்றங்களை யெல்லாம் தெளிவாக உணர்கிறேன். அதைமீறி ஒரு மார்க்சிய சிந்தனையாளனாகப் பார்க்கையில் கூறுகின்ற கருத்துக்கள் கட்சிக் கட்டுப் பாட்டை மீறியதாகாது என்றே சொல்லலாம்.

 ஒரு சமூக வளர்ச்சி என்பது பல நிலைகளைப் பெற்றிருக்கிறது. இப்போது உலக கம்யூனிஸ்ட் இயக்கம் 21-வது நூற்றாண்டின் சோசலிசம் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறது. அப்படியென்றால் 19-வது நூற்றாண்டு சோசலிசம் 20-வது நூற்றாண்டு சோசலிசம் என்று இருந்ததா என்கிற கேள்வியெல்லாம் வருகிறது.

 19-வது நூற்றாண்டு சோசலிசம் மார்க்சை மையப்படுத்தியது. அப்போது கம்யூனிசம், மார்க்சிசம் என்றால் என்ன வென்று தெரியாது, அது அப்போதுதான் அறிமுகம் ஆகிறது. அறிமுகப்படுத்தும் போதே அது தன் இருப்பிற்காகவே கடுமையாகப் போராட வேண்டியிருந்தது. மிகப்பெரிய தத்துவவாதிகளை அப்புறப் படுத்த வேண்டியது, அந்தத் தத்துவங்களைக் கிழிப்பது, விவாதங்கள் நடத்துவது, இவைகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டியத் தேவை அன்றைய கம்யூனிஸ்ட்டிடம் இருந்தது. இதுவே லெனின் காலத்திற்கு வரும் பொழுது ஆயுதம் மூலம் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டிய கட்டாயம் வருகிறது. 

 21-ஆம் நூற்றாண்டின் சோசலிசம் என்பது வெறும் ஆயுதம் தாங்கிய புரட்சியின் மூலம் நடக்கக் கூடியது அல்ல. ஜனநாயக உள்ளடக்கம் கட்டுமானங்கள் கொண்டு இருக்க வேண்டும் என்பதுதான் 21-ஆம் நூற்றாண்டின் சோசலிசம்.

 இதற்கான முன்னுதாரணம் அல்லது மாடல் ஏதாவது இருக்கிறதா என்றால் இலத்தீன் அமெரிக்க நாடுகள் உள்பட இருபத்தியிரண்டு நாடுகள் வாக்கெடுப்பின் மூலமாக, ஜனநாயக அடிப்படையில் மாறுபட்ட கருத்துக்கள் வேறுபட்ட செயல்பாடுகள் இவற்றையெல்லாம் வைத்தே அங்கு ஆட்சி அமைத்திருக்கின்றன.

 21-ஆம் நூற்றாண்டின் சோசலிசம் அல்லது கம்யூனிஸம் இவற்றோடு கூடிய ஜனநாயகம் என்ற கோட்பாடு என்பது மிகவும் அவசியமானது. அது மிகச் சரியாக மேற்கு வங்காளத்தில் பின்பற்றப்பட வில்லை. ஒரு கம்யூனிஸ்ட் இயக்கத்தின் அடிப்படை என்பது ஜனநாயக மத்தியத்துவம். அங்கு ஜனநாயக ஊற்றுக்கண் குறைந்து போய்விட்டது. கட்சி அதிகாரம் என்பது கட்சிக்காரர்கள் வெகு மக்களினிடையே உள்ள பேலன்ஸôன நிலை. அது இல்லாத ஒரு சூழல் அங்கு நிலவியதால் தான் மிகச்சவாலான நெருக்கடி அவர்களுக்கு ஏற்பட்டது. அப்போது அதனால்தான் மாவோயிஸ்ட்டுகள் வந்தார்கள். மாவோயிஸ்ட்டுகளின் போராட்டத்தை அவர்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. அப்போராட்டத்தில் சில குறைபாடுகள் இருக்கலாம். ஆனால், அப்போராட்டத் திற்கான அடிப்படை நிலம். நிலத்துக்கான போராட்டத்தை ஒரு கம்யூனிஸ்ட் எதிர்க்க முடியுமா? இந்தப் பின்னடைவை விமர்சன ரீதியாக அறிந்து கொள்ள வேண்டும். இந்த விமர்சனம் என்பது அவர்களுக்கானது மட்டுமல்ல, பொதுவாக அனைத்துக் கம்யூனிஸ்ட்டுகளுக்கானது. இப்படியான அதிருப்தியை திரினாமுல் பயன்படுத்திக் கொண்டது. ஆனால் திரினாமுல் வெகு சீக்கிரத்தில் காணாமல் போய் விடும். அதற்கு காரணங்கள் இருக்கின்றன.

 மாவோயிஸ்ட்டுகளின் நடை முறையில் சில குறைபாடுகள் இருக்கிறது. மாவோயிஸ்ட்டுகளைப் பொது வழிக்குக் கொண்டு வரவேண்டும். இந்தியாவிலுள்ள கம்யூனிஸ்ட்டுகள் மாவோ அமைப்பின் மீதான தடையை நீக்குவதற்கு முயற்சிக்க வேண்டும். அதேப்போல மாவோயிஸ்டுகள் ஆயுதப் போராட்டத்தைக் கைவிட வேண்டும், ஜனநாயக வழிக்குத் திரும்ப வேண்டும், வலிமை மிகுந்த மக்கள் போராட்டமாக அவர்கள் அதை மாற்ற வேண்டும்.

 எல்லா பொதுவுடைமை இயக்கங்களும் இப்படியான பிரச்சினை களுக்கெதிராக நின்றால் இத்தன்மையில் மாறுதல் ஏற்படும். அதற்கான முயற்சி வேண்டும்.

எல்லா கம்யூனிஸ்டு அமைப்புகளையும் ஒருங்கிணைத்து மாபெரும் சக்தியாக்கும் திட்டம் உண்டா? இப்படி ஒரு புள்ளியில் இணைய தடையாக இருப்பது எது?

 எல்லா கம்யூனிஸ்ட் இயக்கங்களும் ஒன்றுகூட வேண்டும் என்பது அவசியமான ஒன்று, மாவோயிஸ்டுகள் உட்பட. ஆனால் அதற்கு ஒரு பெரிய தடை இருக்கிறது. தடைக்கு முக்கியக் காரணம் சி.பி.எம். ஒன்று கூடுதல் என்ற நிலையை ஆரம்ப நிலையிலேயே அவர்கள் எதிர்த்தார்கள், நிராகரித்தார்கள். ஒன்று சேரவேண்டும், ஒரே கட்சியாக இருக்க வேண்டும் என்பதை அவர்களை ஏற்றுக்கொள்ள வைப்பதற்கு ஒரு போராட்டமும் நிர்பந்தமும் தேவைப் படுகிறது. இரண்டாவது காரணம் மாவோயிஸ்டுகள். அவர்கள் இன்றைய எதார்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்திய அரசை, ஆயுதப் போராட்டம் நடத்தி அவர்களால் வெற்றி பெற முடியாது. எவ்வளவு காலத்திற்குக் காடுகளிலும் மலைகளிலும் இருக்க முடியும்? இழப்பாகத்தான் இது முடியும். அவர்கள் ஆயுதத்தைக் கைவிட்டு இடதுசாரி இயக்கங்களுடன், விவசாயக் கட்சிகளுடன் நெருக்கமாகி கலந்துரையாடி ஒரு சாத்தியமான, சரியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். மார்க்ஸிஸ்ட், எம்.எல். இவர்கள் எல்லோரையும் இணைத்து ஒரு பொதுத் தன்மையைக் கொண்டு வருவதற்கான முயற்சி இருக்கிறது. எதிர்காலத்தில் சாத்தியப்படும்.

முள்ளிவாய்க்கால் படுகொலைக்குப் பிறகான இன்றைய சூழலில் ஈழப்பிரச்னைக்கு என்ன தீர்வு வைத்திருக்கிறீர்கள்?

 ஈழப்பிரச்சினையில் இலங்கையில் சிங்கள மக்களும் தமிழ் மக்களும் சேர்ந்து வாழ முடியுமா என்பது ஒரு பொதுக் கேள்வியாக இருக்கிறது. இணைந்து வாழ்வதற்கான சாத்தியக்கூறு மிகவும் குறைவு. இதை எப்படி சரி செய்வது என்பது ஒரு கேள்வி. மூடி மறைத்து வைத்திருந்த ஒன்று உலகஅளவில் இன்று விரித்து வைக்கப்பட்டிருக்கிறது.

 சிங்களர், தமிழர் இந்த இரண்டு இனங்களும் சமத்துவமாக இருக்கிறதா என்ற வினா ஒரு ஓரத்தில் இருந்து கொண்டுதான் இருக்கிறது. இலங்கை இந்தியா போல ஒரு கூட்டாட்சி கிடையாது, ஒற்றை ஆட்சி, ஒற்றை இனமாக இருந்தால்தான் அது ஒற்றை ஆட்சியாக இருக்கும், ஆனால், சிங்களர், தமிழர் என்று இரு இனமக்கள் வாழும் போது அங்கு கூட்டாட்சிதான் இருக்க வேண்டும். அதனால் தான் சிறுபான்மையான தமிழ் இனம் இருக்கவே கூடாது என்று நினைக்கிறார்கள். அங்கு பெரிய இனமாக இருக்கக் கூடிய சிங்கள இனம் சிறுபான்மைத் தமிழ் மக்களை அழிக்க நினைக்கின்றது. இதை சின்ன மீன் தியரி என்று கூறுவார்கள்.

 மீன் தொட்டியில் ஒரு பெரிய மீனும் சின்ன மீனும் இருக்கின்றன. பெரிய மீன் சின்ன மீனிடம் நாம் இருவரும் சமத்துவமாக இருப்போம் நீ என்னை விழுங்கிவிடு என்றது. சின்ன மீனால் பெரிய மீனை விழுங்க முடியுமா? எனவே சமத்துவமாக ஒற்றையாக இருப்போம் என்று கூறி பெரிய மீன் சின்ன மீனை விழுங்கிவிட்டது. இதுதான் சிறுபான்மைக்கு எதிரான தியரியாக இருக்கிறது.

 1948-இல் ஈழத்தில் தமிழ் மக்களின் எண்ணிக்கை 37 இலட்சம்; சிங்களர்களின் எண்ணிக்கை 77 இலட்சம். இது இப்பொழுது இரண்டு கோடியாகிவிட்டது. ஆனால் 37 இலட்சம் தமிழர்கள் 15 இலட்சமாகக் குறைந்து விட்டார்கள்.

 இது ஒரு பக்காவான இன அழிப்புப் பிரச்சினை. இந்த இன அழிப்புக்கு எதிராக தனிநாடு என்பது சரியானது தானே. அது முடியுமா முடியாதா என்பது வேறு விஷயம். ஆனால் என்ன செய்யலாம்? அந்த மக்கள் விரும்பிய வகையில் கிழக்கு தைமூர் போல, கொசாவாபோல, தெற்கு சூடான் போல ஐ.நா. மேற்பார்வையில் ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தி தீர்வு காணலாம்.

அதற்கான செயல்பாடுகள் இருக்கிறதா?

 இருக்கிறது. நான் ஐரோப்பாவுக்கு சென்றிருந்தது அது விஷயமாகத்தான். அங்கு, நான் பல்வேறு இடது சாரி இயக்கங்களைச் சேர்ந்தவர்களைச் சந்தித்தேன். அது போது மானது அல்ல. நான் எனது நூலான "வீழ்வேனென்று நினைத்தாயோ' வெளியீட்டு விழாவிற்காக சமீபத்தில் சென்றிருந்தேன். அங்கு ஜெர்மனியில் முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நிகழ்ச்சியில் அப்போது கலந்து கொண்டேன். அங்குள்ள முக்கியமான இடதுசாரி இயக்கங்களைச் சேர்ந்தவர்களையும் சந்தித்தேன். அவர்கள் பொது ஜன வாக்கெடுப்பை ஏற்றுக் கொள்கிறார்கள். அதுபற்றி மாற்றுக் கருத்து எவரிடமும் இல்லை. போராட்டத்தை இன்னும் நூறு ஆண்டுகளுக்கு நடத்தக் கூடியவர்களாகத் தெம்பும் உறுதியும் உள்ளவர்களாக அங்குள்ள ஈழத்தமிழர்கள் இருக்கிறார்கள். இன்று சிங்களர்களுக் குள்ளேயே பிரச்சினைகள் இருக்கிறது. ஐ.நா.வின் முன்னெடுப்பு சில விளைவுகளை ஏற்படுத்தும்.

உணவுத்தரக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்புச் சட்டம் சிறு வணிகர்களைப் பாதித்துவிடும் என்று சொல்லப்படும் நிலையை எப்படிப் பார்க்கிறீர்கள்?

 உலகமயம் என்பது உலக மார்க்கெட்டை தங்கள் வசம் ஆக்கிக் கொள்வதற்கான பெரு முதலாளிகளின் கண்டுபிடிப்பு. இந்தியாவிற்குள் நூறு கோடி மக்கள் இருக்கிறார்கள். (சீனாவிற்குள் இவர்கள் நுழையவே முடியாது.) மிகச் சுலபமாக இந்தியாவிற்குள் நுழைய இடம் இருக்கிறது. இந்திய அடித்தளத்தையே காலி செய்து அந்த இடத்தில் வேர்விட முயற்சிக்கிறார்கள். இது பேரழிவையே தரும்.

 அந்நிய முதலீடுகள் நுழைவதையும் சில்லறைவர்த்தகத்தை சிதைப்பதையும் ஏற்றுக் கொள்ள முடியாது. அனுமதிக்கவும் முடியாது. இதற்காக வியாபாரிகளைத் திரட்டி மிகப் பெரிய போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். இந்தியாவினுடைய எதிர் காலத்தையே சீர்குலைக்கும் சில்லறை வர்த்தகர்களுக்கான நடவடிக்கையினை கம்யூனிஸ்ட் கட்சி உறுதியுடன் எதிர்க்கும்.

கல்வி உரிமைச்சட்டம் எதிர்பார்த்தபடி உள்ளதா?

 கல்வி உரிமைச் சட்டமானது சரியான படி நாம் எதிர்பார்க்கும் அளவிற்கு இல்லை. சிறுபான்மை பள்ளிகளுக்கு தவிர்ப்பு என்பதும் 25 சதவீத மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே செலுத்தும் என்பதும் ஏற்கத்தக்கதல்ல. மக்களின் வரிப்பணத்தைத் தனியார் பள்ளிகளுக்குக் கொடுப்பது என்பது சரியல்ல. அது மிகப்பெரிய குறைபாடு.

 பிள்ளைகளின் கல்வி என்பது பெற்றோர்களுக்குத் தரும் இலவசம் போன்ற தல்ல. அரசு, ஏழை மக்களின் கல்விக்கு பொறுப்பானதாக இருக்க வேண்டும். கலைஞரின் மருத்துவக் காப்பீட்டுப் பணம் இடைத்தரகர்களால் விழுங்கப்பட்டது. அது போல் இதுவும் ஆகிவிடக் கூடாது. கல்வி உரிமைச் சட்டம் அடிப்படையில் நல்லதாகத்தான் இருக்கிறது. ஆனால், அரசு இதனைச் சிதைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

தெளிந்த கொள்கை, வெற்று உணர்ச்சி அரசியல் இவைகளைச் செய்யாத கம்யூனிஸ்டு கட்சிகள் திராவிடக் கட்சிகளுடன் மாறி மாறி கூட்டணி ஏற்படுத்திக் கொள்வது சில சட்டமன்ற இடங்களுக்காக என்பது கஷ்டமான நிலைப்பாடாக இல்லையா?

 இதைத் திராவிடக் கட்சிகளுடனான கூட்டணி என்று மட்டும் பார்க்கக் கூடாது. இந்தியாவிலுள்ள மற்ற கட்சிகளுடனான கூட்டணி என்றும் பார்க்க வேண்டும். கட்சிக் கூட்டணி என்று அமைத்த பிறகு நாடாளுமன்றத்திற்குப் போகாமல் இருக்க முடியாது. தனித்து நின்றும் வெற்றிகாண இயலாது. என்ன காரணம்? எல்லோரும் ஏதோ ஒரு வகையில் கூட்டணியில் இருக்கிறோம். கூட்டணி என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக ஆகிவிட்டது. இந்திய எதார்த்தம் இதுதான். கொள்கைப்பிடிப்பு உள்ளவர்கள்தான். ஆனால், எதார்த்தத்துக்கு எதிராக உலவ முடியாது. எதார்த்தத்திலிருந்து வெகுதொலைவு சென்றுவிடவும் முடியாது. இந்திய ஜனநாயகம் என்பது பல கட்சிகள் பங்கேற்கும் ஜனநாயகம் ஆகும். தேர்தலில் இரண்டு பெரிய கட்சிகள் உள்ளன. இந்த இரண்டு பெரிய கட்சிகளும் எல்லா கட்சிகளையும் விழுங்கி விடுகின்றன. தி.மு.க. கூட்டணி அல்லது அ.தி.மு.க. கூட்டணி இந்த இடத்தை மாற்றும் வரை எதையும் மாற்ற முடியாது. ஒரே தீர்வு விகிதாச்சார வாக்குமுறைதான். உலகில் பல நாடுகளில் விகிதாச்சார வாக்குமுறை அமுலில் உள்ளது. இந்தப் பிரச்னைக்கு அதைத் தவிர வேறு எதுவும் ஒத்துவராது.

பொது வாழ்க்கை ஈடுபாடு, எப்போதாவது தங்களை "ஏண்டா அரசியலுக்கு வந்தோம்' என்று சலிப்படையச் செய்திருக்கிறதா?

 ஆம். சலிப்பும் அலுப்பும் அவ்வப் போது ஏற்படத்தான் செய்கிறது. போலித் தனங்கள் குறித்த வெறுப்பு வருகிறது. வரவில்லை என்று கூறமுடியாது. வெறுப்பி லிருந்து புதிய லட்சியம் பிறக்கின்றது. இணைய தளம் புதிய நிலைமைகளை ஏற்படுத்தி இருக்கிறது. அது ஒரு புதிய ஆயுதம். அது பலரின் வெற்று இமேஜ்களை டேமேஜ் செய்கிறது. வெறுப்பு, சலிப்பு மாறி புத்துணர்வுடன் எழும்படி செய்கிறது. ஒவ்வொரு சின்ன பெரிய நகரங்களிலும் சின்னச் சின்ன தொலைக்காட்சிகள் உருவாகப் போகின்றது. ஒரு புதிய உத்வேகம் உருவாகி வரும் காலத்தில், வெறுப்பாவது சலிப்பாவது? "ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே'. நாம் விலக முடியுமா?

Pin It