என் கண்வலிக்கு பால் பீய்ச்சிய
ஒவ்வொரு மாட்டுப்பொங்கலின்போதும்
யாவர்க்கும் வேப்பிலைச்சாறு கொடுத்த
குடலேறிக்கொண்ட ஊர்க்குழந்தைகளுக்கும்    
குடல் தட்டிய
சுளுக்கேறியவர்களுக்கு மூன்றுவேளை      
சுளுக்கு வழித்த
அம்மைவார்த்ததை உறுதிப்படுத்தி
பயபக்தியாய் குழையடித்த

வறுமையிலும் செம்மையாய்
கருப்பட்டி சேர்த்த
ஆட்டுப்பால் காப்பியும் அரிசிப்பொரி       
மாவுமாய்
விருந்தோம்பி

கோபக்கார மாமனுக்கு
ரெண்டாந்தாரமாய் வாக்கப்பட்டு
விசும்பல்கலோடு வாழ்ந்து
சீக்காய்க் கிடந்த அத்தையை
போய்ப்பார்க்க முடியாது
பரபரப்பு வாழ்க்கை தடுக்க
ஒருநாள் போய்ச் சேர்ந்தாள் அவளும்

எரிக்கிறது
மயானத்தீ அவளை
குற்றவுணர்ச்சி என்னை.

***

மனுஅதர்மம்

முலைசுரந்து முலைசுரந்து
பால்கட்டிவீங்கி வலித்த
மார்பைத் தண்ணீரில் பீய்ச்சும்
தாயாய்
மரணதண்டனைக் கைதியினது
தாய் ஏக்கக்குருதியைப் பீய்ச்சுகிறாள் நாளும்
மனுதர்மம் போலவே கருணை மனுதர்மமும்
ஈவிரக்கமற்றுப் போனதே என
உரத்து அறிவிக்கிறாள்

கூவிப்போகும் சிறுவனை அழைத்து
தலையாட்டி பொம்மை வாங்கி
தரையில் உருட்டிச் சிரிக்கிறாள்

இறைநம்பிக்கை போய்விட்டபிறகும்
பிரசாதம் பெற்றுக்கொள்கிறாள்

அலையலையென மேல்விதானத்தில்பரவும்
பெரியகோவிலின் மாடத்தில் நின்று
ஓம் எனக் கூவிக்கொண்டிருப்பவர்களோடு
உற்சாகமாகி
தானும் கூவுகிறாள்
மகன் பெயரைச் சொல்லி.

Pin It