பேருந்து நிலையங்களில்
பேருந்துகள் இளைப்பாறிக் கொள்ளும்
அந்த ஐந்து நிமிடங்களில் வந்து போகும்

தண்ணீர் மற்றும்
புளிப்பு மிட்டாய்களை
வேகமாகக் கூவி விற்கும்
விடலைப் பையன்களாலும்

பாத்திரம் நிறைய
அழகாய் அடுக்கி வைத்துக்கொண்டு
“சூடாருக்கு சம்சோய்'' என அழுத்திக்கூறி
கவனம் ஈர்க்கும்
சமோசா விற்பவராலும்

சளித்தொல்லை மற்றும்
நாள்பட்ட தலைவலியைப் போக்கும்
ஐம்பது ரூபாய் மதிப்புடைய
அதி அற்புத மருந்தாகிய தைலத்தை
நிறுவன விளம்பரத்திற்காக
பத்து ரூபாய்க்கு விற்கும்
படித்த பட்டதாரி இளைஞராலும்

வேறு சில புத்தகங்களோடு
வரைபட வடிவில்
தமிழ்நாட்டையும் இந்தியாவையும் விற்று
வறுமையை விரட்டும்
நடுத்தர வயதினராலும்

குஜராத் பூகம்பத்தாலோ அல்லது
ஏதோவொரு தேசியப் பேரழிவாலோ
பாதிக்கப்பட்டதாகச் சொல்லி
அட்டைகளை நீட்டும்
அனுதாபத்திற்குரிய பெண்களாலும்

இளம் வெள்ளரிப் பிஞ்சுகளையும்
சுத்து முறுக்குகளையும்
பேரம்பேசி விற்கும்
வயதான பாட்டிகளாலும்

தள்ளு வண்டிகளில்
மணி சத்தத்தை எழுப்பிக்கொண்டே
கடலைகள் மற்றும் சுண்டல்கள் விற்கும்
வாலிபர்களாலும்

பழைய தத்துவப் பாடலொன்றை
சுருதி பிசகாமல் அழகாகவும்
உருக்கமாகவும் பாடும்
பார்வையற்ற பெரியவராலும்

கலைக்க முடிவதில்லை
அம்பானியாகும் என் கனவையும்
நடத்துனர் தரவேண்டிய
அம்பது பைசா சில்லறை பாக்கி
நினைவையும்...

Pin It