அதென்ன தமிழில் கெட்ட வார்த்தை நல்ல வார்த்தை? கெட்ட வார்த்தைகள் எனச் சொல்லி பாசாங்கு செய்து திறமான சொற்களை ஒரு மேன்மையான மொழி இழந்துவிடலாகாது என்பது என் கருத்து. எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்பதுதான் மரபு. தொடர்பு எல்லைகள் விரிவடைந்தபிறகு, நுகர்வுப் பொருள்களோடு கருத்துக்களும் வார்த்தைகளும் வந்து குவியவே செய்யும். இயற்கையான இந்த வருகையையும் இயக்கத்தையும் தடுத்தல் சரியன்று. அதுவும் தமிழ் நவீன இலக்கியக் களத்தில் ஆசார - வைதீக சாஸ்திரிகள் மடிசஞ்சிகள் இருப்பது நியாயமல்ல. மடி விழுப்பு பார்க்கும் காலம் போய்விட்டது. தமிழ் வாத்தியார்கள் மட்டும்தான் தமிழுக்கு எதிரானவர்கள் என்ற நிரந்தர கருத்து போய் புத்திலக்கியச் சூழலில் நவீன வைதீகர்கள் வாளைச் சுழற்றிக் கொண்டு வருவது தகாது.

                கிராமப்புறங்களில் மாலை நேரத்தில் கொல்லைப் புறத்தில் பெண்கள் ஓய்வாக உரையாடிக் கொண்டிருப்பதை சற்று எட்டிப் பாருங்கள். தவறு ஏதுமில்லை. வெள்ளந்தியான பெண்கள். நம் வீட்டுப் பெண்கள் அண்டை அசல் எதிர்வீடு என ஒரு உரையாடற் சூழல். வீட்டு வேலை, பிரச்சினை அசதியிலிருந்து விடுபட்டு மனந்திறக்கும் இனிய வேளை. தலை சீவிக் கொண்டும் கொடுக்கல் வாங்கல் எனப் பொருளாதாரம் புழங்கிக் கொண்டும் இருப்பது அற்புதமானது. சற்றே உற்சாகம் - சற்றே களைப்பு - சற்றே சலிப்பு எனக் கலவையாய் - ஒரு பெண்மணி திடீரெனச் சொல்வாள் “எங்க வூட்டுக் கம்மனாட்டிக்கு பாக்கு கடிக்கற நேரம்தான்டி...” எவ்வளவு கவித்துவமான வரி. இதில் "கம்மனாட்டி'யும் "பாக்கு கடிக்கிற நேர'மும் கெட்ட வார்த்தையோ. இதில் வாழ்க்கையையும் கவித்து வத்தையும் ரசிக்க தனி மனசு வேணும்.

                அசல் கிராமத்து மனிதனான எனக்கு பொருளாதார இன்ன பிற லௌகீக காரணங்களால் தமிழின் புதுவரவுகளை உடனுக்குடன் விலை கொடுத்து வாங்கி வாசிப்பது சிரமமானதுதான். எனவே பெருமாள் முருகனை இன்னும் வாசிக்க வில்லை என்ற செய்தியையும் குறிப்பிடுவது அவசியம்.

                கொஞ்சமாய் சங்ககாலம் பயணிப் போம். நவீனத் தமிழ் இலக்கிய வாதிகளுக்கு பழியேதும் வந்துவிடாது. "அண்ணாந்து ஏந்திய வனமுலை தளரினும்' (நற்.10) எனத் தொடங்கும் பாடலை ஒரு நல்ல தமிழாசான் வழி பாடங்கேட்க வேண்டும்.

                கன்றும் உண்ணாது கலத்தினும் படாது... பசலை உணீஇயர் வேண்டும் ஞி திதிலை அல்குல் என மனமக்கவினே (குறு.27) என்ற வெள்ளிவீதியாரை வாசிக்கலாம். அல்குல் கைவரல் அணிந்தவை திருத்தல் (தொல் - மெய்.15) இன்னும் கொஞ்சம் இது குறித்துப் பார்க்கலாம். கலைத்தரம்பு தொடுத்த காழ் ஊன்று அல்குல் (பெரும்பாணாற்றுப் படை.244) இடைக்குக் கீழும் தொடைகட்கு மேலும் தோற்றத்தில் பாம்பின் படம் போன்று அகன்ற மைந்துள்ள உடற்பகுதி என்று அடையாளப் படுத்தும் வியாக்யானமும் உண்டுதான். பாங்காம் அல்குல் பற்றவன் ஊக்கிச் செலவுடன் விடுங்கோ (நற்.25:5-6) மாண்விரி அல்குல் மலர்ந்த நோக்கு (பதிற்.65:7) நல் எழில் அல்குல் வாடிய நிலையே (ஐங்குறுநூறு.351) மார்பும் அல்குலும் மனத்தொடுபரியை (பரி.13:54) மிசைந்து சூழ்போகிய அகன்றேந் தல்குல் (சிலம்பு.13:160) மேகலை விரீயெ தூசு விசி அல்குல் (பெருங்காதை 1:44:6) களனெனக் கரையும் அல்குல் (சீவக சிந்தாமணி.684) மணந்தாய் புரிகுழலாள் அல்குல் போல வளர்கின்றதே (திருக்கோவையார்.9) வாம மேகலையினுன் வளர்ந்த அல்குலே (கம்பர்.1:12:62) மணிகிளற் காஞ்சி அல்குல் வரி அரவுலகை வென்ற துணிவு கொண்டார்ப்ப (பெரியபுராணம்.138) ஆர்த்த மணிக்காஞ்சி அல்குலாள் (மதுரை சொக்கருலா.242) அல்குல் - வடிவு அகல் உபத்தமும் ஆகும் என்று பிங்கலநிகண்டு (1003) விளக்கும். ஆக அல்குல் சங்க இலக்கியத்தில் 100 இடங்களிலும், முலை 170 இடங்களிலும் வருகின்றது என்ற புள்ளி விவரம் கூடப் பயன் தரும். பட்டியல் போதும் என்று நினைக்கிறேன். தமிழில் சொல்லக் கூடாத வார்த்தைகள் என ஏதுமில்லை. எல்லாச் சொற்களும் அழகியவையே. தமிழ் இலக்கியங்களை உலகத் தரத்திற்குக் கொண்டு போகும் முயற்சிக்குத் தடை என்பது அறமாகாது.

                "அவையில் கிளவி மறைத்தனர் கிளர்த்தல்' (தொல்.46) என்று தொல் காப்பியம் சொன்னது இலக்கண மரபு தவிர வேறில்லை. இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் என்பது பால பாடம். ஈகார - பகரம் என்பது "பீ” தான். என்னுடைய முப்பாட்டி ஒருத்தி இருந்தாள். அவள் பேர் ஆண்டாள். சாமியையே புணரக் கூப்பிட்டவள்; நப்பின்னை கொங்கைமேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா என்பாள். "உன்னித்தெழுந்த என் தடமுலைகள் மானிடற் கென்று பேச்சுப்படின் வாழ்கிலேன்' என்று தகித்தாள். நிறையச் சொல்லலாம்.

                செந்தமிழில் கெட்டவார்த்தைகள் என ஏதும் இருக்க முடியாது. நம் அரசியலில் தியாகம், சுதந்திரம், தேசபக்தி, திட்டம், அரசு முதலான வார்த்தைகளை வேண்டுமானால் கெட்டவார்த்தைகளாகச் சொல்லலாம். ஓர் ஆறுதலுக்காக -

                ஒரே செய்தி. தமிழில் இரண்டே வகைதான். ஒன்று நன்றாகச் சொல்லப்பட்டது. இன்னொன்று நன்றாகச் சொல்லப்படாதது - சரிதானே?

Pin It