தமிழ்மொழி பேசும் பகுதிகளை செந்தமிழ் நாடு, கொடுந்தமிழ் நாடு என இரண்டு பகுதிகளாகப் பகுத்துப் பேசுவதைத் தமிழ் இலக்கண நூல்களில் காணலாம். (நன்றி புதுச்சேரி வரலாறு - சி.எஸ்.முருகேசன்)

 கொடுந்தமிழ் நிலம் 12 பற்றி நன்னூல் உரைகண்ட சங்கர நமச்சிவாயர் கூறுவதிது:

“தென்பாண்டி குட்டங் குடங்கற்கா வேண்பூழி
பன்றி யருவா வதன் வடக்கு - நன்றாய
சீத மலாடு புன்னாடு செந்தமிழ் சேர்
ஏதமில் பன்னிரு நாட் டெண்”

 தென்பாண்டி நாடு, குட்ட நாடு, குடநாடு, கற்கா நாடு, வேணாடு, பூழி நாடு, பன்றி நாடு, அருவா நாடு, அருவா வடதலை, சீத நாடு, மலை நாடு, புனல் நாடு என்பன பன்னிரு தமிழ் நிலம்.

 அதெல்லாம் சரி! கொடநாடு, மதுரை மண்டலம், அங்காளம்மன் காலனி போன்றவை இதில் அடங்குமா? தமிழகத்தின் தென்பகுதியை "அரிவாள் நாடு' என்றும் அழைக்கலாம் என்கிறார் ஓர் நண்பர்.

“செந்தமிழ் நாடெனும் போதினிலே
10 மணிநேர "பவர்கட்' பாயுது வீட்டினிலே”

இருளர் மொழிக் கவிதை

 பேச்சுமொழியில் கவிதைகள் நெய்யப் படுவது தமிழுக்குப் புதிதல்ல. என்றாலும் பழங்குடி இனம் சார்ந்த "இருளர்' சமூகத்தின் பேச்சு மொழியில் லட்சுமணன் படைத்துள்ள "ஒடியன்' கவிதைத் தொகுப்பு தமிழுக்கு ரொம்பவும் புதுசு!

 அந்த மக்களின் மொழியில் வாசிக்கையில், வாசகனுக்கு வாய்க்கும் ஓர் புத்தனுபவம்!

 சங்கப் பாடல்களின் வாசம் வீசும் கவிதையின் ஓர் துளி.

ராஜா
கூப்பு ரோட்லே
கையில கெடாய்த்தூம்
இருளனெ வெலாக்கி
தூக்கி பெணாங்கி மெதிச்சான்
எச்சாவோ நிந்த
காண்ரீட்டு காரனே
ராஜா

(காட்டில் வெட்டிய மரங்களை எடுத்துப் போகும் வனத்துறை சாலையில் கையில் கிடைத்த இருளனை விலக்கி, எங்கேயோ நின்ற கான்ராக்ட்காரனை தூக்கி மிதித்ததாம் யானை. யானையை - ராஜா என்று தான் இருளர்கள் குறிப்பிடுவார்களாம்.)

 “எனக்கு அறிமுகமான இருளர் பழங்குடி மக்கள் பற்றிய கவிதைகளை அவர்கள் மொழியான இருளர் மொழியிலேயே எழுதியிருப்பது வாசகனை சித்திரவதைப்படுத்தும் நோக்கத்திலல்ல. அவர்களிடம் கேட்டதை, கேட்டபடி, எழுத்து வடிவம் இல்லாத அவர்கள் மொழியிலேயேக் கொடுப்பதுதான் சரியாக இரக்கும் என்பதால் தான்” என்கிற லட்சுமணன், பழங்குடி மக்கள் குறித்து குறும்படம் ஒன்றையும் தந்துள்ளார்.

 “பழங்குடிகளின் மொழிகளைப் பாதுகாக்க நம்மிடம் எந்தத் திட்டமும் இல்லை. மேலும் பாதுகாக்க வேண்டியத் தேவையைப் பற்றியும் நம்மிடம் எந்த அக்கறையும் இல்லை. தோல்வி யுற்றவனின் மொழிகள் மீது யாருக்குத் தான் கரிசனம் வரும்” என முன்னுரைத்துரைக்கும் ச.பாலமுருகனின் ஆதங்கத்தில், உண்டு ஆயிரம் அர்த்தங்கள்.

 ஒரு கேள்வி - கனிம வளங்களைச் சுரண்டிக் கொழுத்த மதுரைப் பகுதிக்கு எத்தனை "ராஜா'க்களை அனுப்பலாம்?

பிரதிக்கு
மணிமொழி பதிப்பகம்
220அ முல்லைவீதி, தந்தை பெரியார் நகர்,
போளூர் சாலை, திருவண்ணாமலை - 606 601

புதுமைப்பித்தனின் ஜாகைகள்

 கவிஞர் இளையபாரதி தொகுத்த "கண்மணி கமலாவுக்கு' நூல் வாசிக்க கிடைத்தது. அமரர் புதுமைப்பித்தன் (சொ.வி) காதலும் பிரியமும் பொங்க தனது துணைவியாருக்கு எழுதியக் கடிதங்களின் தொகுப்பு.

 பெரும்பாலும் "வீட்டுக்குப் பண மனுப்புகிற' பொறுப்புள்ள குடும்பத் தலைவனாக பதிவாகிற புதுமைப்பித்தன், தனது வயிற்றுப் பிழைப்புக்காக மாறியிருக்கிற தங்குமிடங்கள் தான் எத்தனை யெத்தனை?

05.03.38 - 72, லிங்கி செட்டித்தெரு.
01.04.38 - 48, புதுத்தெரு, மண்ணடி. 
25.01.39 - 254, அங்கப்பநாயக்கன் தெரு.
20.03.39 - 187, மவுண்ட் ரோட்.
13.05.40 - சாலேமான்ஷன் டக்கர்ஸ்லேன்   30.11.40 - 5, கிருஷ்ணா கார்டன் தெரு,  திருவல்லிக்கேணி.
10.03.43 - 2, நியூ பிளாக்ஸ், லஷ்மிபுரம்.

சென்னையில் மட்டும் இத்தனை ஜாகைகளை மாற்றியிருப்பது பொருளாதார நிர்பந்தமா? சமூக நிர்பந்தமா? ஓர் படைப்பாளியை பணமும் வேறு சங்கதிகளும் துரத்தி துரத்தி விரட்டுவது வரமா, சாபமா...?

 இப்போது புரிகிறது "காணி நிலம் கேட்டவன்' எதற்குக் கேட்டான் என்று...!

கொசுறு:

அறிமுக மாகும்
அண்டை மனிதர்கள்
மின்வெட்டு  - பாலபாரதி

Pin It