அப்பிகை முடிந்து, கார்த்திகையும் பிறந்து, தேதி பத்துக்கும் மேலாகிவிட்டது. காடுகரைகள் பாடுசோலிகள் ஒரு பெரும் பாட்டம் மும்முரமாக நடந்து ஓய்ந்திருக்கிறது.

                மிளகாய் நாற்று நடுவை, மக்காச் சோள விதை ஊன்றுதல், கம்பு விதைப்பு, களையெடுப்பு என்று இறவைகளிலும் மானாவாரிகளிலும் ஏகப்பட்ட பாடுகள். ஆவுடை மாதிரியான கூலி ஜனத்துக்கு ஏகக்கிராக்கி. “எனக்கு வாரீயா” என்று புஞ்சைக்காரர்கள் சுற்றி வளைத்து ஆளை மொய்ப்பார்கள்.

                “யாரு மொகத்தைப் பாக்க... யாருக்கு தாட்சண்யம் காட்ட... யாருக்கு நல்ல புள்ளையாகுறது” என்று ஆவுடைக்குள் ஒரே திகைப்பான புலம்பல்கள். யாதொரு நாளும் உஸ்ùஸன்று வீட்டில் உட்காராமல், காடொரு திக்காக ஓடித்திரிந்தாலும், யாராச்சும் ஒரு பாதகத்தி குறைபட்டு கோபித்துக் கொள்ளத்தான் செய்வாள்கள்.

                “நடுவைக்கு நீ வருவேன்னு ஒத்தையடிப்பாதையை உத்து உத்துப் பாத்து, கண்ணு பூத்ததுதான் மிச்சம்”.

                “வாரேன்னு ஓங்கிட்டே எப்பச் சொன்னேன்?”

                “கூப்புட்டேன்லே? பாப்போம்னு சொன்னது யாவுகத்துலே இல்லியா?”

                “பாப்போம்னு சொன்னேன். வாரேன்னு சொல்லலியே”.

                நித்தம் சாயங்காலம் இந்தப் பிடுங்கல்கள்தாம். யாராவது நாலு பேர் வார்த்தைகளால் பிய்த்துப் பிடுங்குவார்கள். “ஒங்களுக்கு இது காலமா போச்சு, புஞ்சைக்காரவுகளுக்கு ஒரு காலம் வராமலா போயிரும்?” என்ற பயமுறுத்தல்களும் முகத்தில் தெரியும்.

                ஆத்திர அவசரப்பாடுகள் யாவும் வடிந்து வற்றிவிட்டது.

                இனி கொஞ்ச நாளைக்கு இவளைச் சீந்த நாதியிருக்காது. "இருக்காளா, செத்தாளா' என்று ஒருத்தரும் எட்டிக்கூட பார்க்க மாட்டார்கள்.

                இவளை தெருவில் பார்த்தாலும், பார்க்காதது போல நிமிர்ந்தாற் போல நடப்பார்கள். ஏதும் விசாரிப்பதில்லை.

                இவளாக... வலியப்போய் வாய் கொடுப்பாள்.

                “என்ன... புஞ்சையிலே ஏதாச்சும் சோலி கீலி இருக்குதா?”

                “இப்ப என்ன சோலி? இனிமே... மார்கழி பத்துக்கு மேலே தான் ஆளுக தேவைப்படும்”.

                இதுதான் கூலிக்காரிகள் நிலவரம். தொடர்ந்தாற் போல ஏழெட்டு நாட்களுக்கு கூலிவேலை கிடைக்காவிட்டால் அடுப்பில் உலை ஏறாது. ஒரு நாளை நகர்த்துவதற்கு "ஆத்தாடி அம்மாடி' என்றாகி விடும். கடைகண்ணியில் கடன் வாங்கித் தான் வயிற்றுக் கொதிப்பை தணிக்க வேண்டும்.

                ஒத்தை மனுசி ஆவுடை. இவள் பாடே இம்புட்டுத் துன்பமென்றால், ரெண்டு புள்ளை குட்டிக வைத்திருக்கிற ராசாத்தி மாதிரிப் பட்டவர்களின் பாடு, பெரும்பாடுதான். அன்றாடப் பிழைப்பு திண்டாடின திணறல் தவிப்புதான்.

                எப்படி பொழுதைக் கழிக்கப் போகிறோமோ...? கூரை நிழலில் கால் நீட்டி உட்கார்ந்து எம்புட்டு நேரந்தான் பேன் பார்த்துக் கொண்டிருப்பது? ஊர்ப் புரணிகளை எம்புட்டு நேரந்தான் பேசித் தீர்ப்பது?

                ஆயாசப்படுகிற ஆவுடை மனசுக்குள் ஒரு மின்னல் தெறிப்பு. "பாடு சோலிகள் மட்டுப்பட்டிருக்கிற இந்த இடைப்பட்ட நாட்களில் மெட்ராஸ் போய்ட்டு வந்தால் என்ன?'

                முந்திச் சீலையை விரித்து ராத்திரி தலை சாய்த்தால், கண்ணில் உறக்கம் ஒட்ட மாட்டேன் என்கிறது. நினைவெல்லாம் மகன் வயிற்றுப் பேரன்களிடம்தான். மனசுக்குள் அதுகளின் எச்சில் வடிகிற மழலைக்குரல்கள். அதன் பிஞ்சுக் கூப்பாடு.

                “யாச்சி... யாச்சி... யாச்சி” என்று பேரன்கள் கூப்பாடு போட்டு கூப்பிடுகிற பாச உரிமையில் உயிர் கிடந்து உருகிப் போகும். வருசத்துக்கொருதடவை வைகாசி மாசம் சக்தி மாரியம்மா கோவில் திருவிழா ஊரில் நடக்கிற போது மகனும் மருமகளும் பேரன்களுடன் வந்திறங்குவார்கள். மூன்றே மூன்று நாள் இருப்பார்கள்.

                அந்த மூன்று நாளும் ஆவுடை மனசுக்கு சிறகு முளைத்துவிடும். சின்னப் பிள்ளை மாதிரி கால்கள் தரையில் பாவாமல் பறந்து திரிவாள். முகமெல்லாம் பொங்கிப் பெருகுகிற சிரிப்ப(ô)ணிகள்.

                பேரன்களும் ஆச்சியிடம் அப்படியே அப்பிக் கொள்ளும்.

                ஒரு பேரனை இடுப்பிலும், ஒருத்தனை பிடறியிலும் சுமந்து திரிவாள் ஆவுடை. அப்படி சுமந்து கொண்டே தெருக்காட்டில் ரவுண்டடிப்பதில் அவளுக்கு ரொம்ப மகிழ்ச்சி. ரொம்பப் பெருமை. காலடிக்குருத்துகளை பார்க்கிற வாழையின் பரவசம்.

                “யாச்சி, யாச்சி” என்று எச்சில் வடிய அதுகள் கூப்பிடுவதைக் கேட்பதில் ஒரு பெருமிதம். “தூக்கு... என்னைத் தூக்கு” என்று ஓடிவந்து அப்புவதும், ஆசையும் பாசமுமாக முட்டி மோதுவதும் இவளுக்கு ஏகப்பெருமை. உடம்பின் தள்ளாமை, முதுமைத் தடுமாற்றம் எல்லாம் மாயமாகி விடும். இளமை திரும்பின மாதிரி துள்ளலும் துடிப்புமாகிவிடுவாள்.

                பிடறியில் உட்கார்ந்திருக்கிற மூத்த பேரன் குதிகால்களால் நெஞ்சில் உதைக்கிற உதையில் மனசு கிடந்து கும்மாளமிடும். இடுப்பில் உட்கார்ந் திருக்கிற இளைய பேரன் எம்பி எம்பிக் குதிக்கிற குதிப்பில் உடம்பே கிடந்து தள்ளாடும். மனசு சந்தோஷப்படும்.

                அந்த மூன்று நாள் சந்தோஷம்தான், முந்நூத்திச் சொச்ச நாள் துன்பத்தையும் தாங்குகிற பலம் சேர்க்கும். மன தைரியம் தரும்.

                முந்நூத்திச் சொச்ச நாள் துன்பங்களுடன், பேரன்களை நினைக்கிற ஏக்கமும் சேர்ந்து கொள்ளும். நினைவின் ஆழத்தில் பேரன்களின் குரல்கள். நடுச் சாமத்தில் உறக்கம் கலைந்து, உட்கார்ந்து பார்ப்பாள். “யாச்சி, யாச்சி” என்று கூப்பிட்ட மாதிரி ஒரு மாயம் தோன்றும்.

                "யாச்சி' என்ற சத்தம் கேட்டு துள்ளத் துடிக்க எழுந்து இருட்டை வெறித்த ராத்திரிகள், வண்டி வண்டியாக.

                உயிரைச் சுண்டியதிரவைக்கிற ஏக்கம். பேரன்களை நினைத்துக் கொண்டே இருட்டுள் ஓர் இருட்டாக உட்கார்ந் திருப்பதில், விடிந்தது கூடத் தெரியாது.

                "மெட்ராஸ் போய் பேரன்களைப் பார்த்தாலென்ன?' மீண்டும் அந்த மின்னல் தெறிப்பு.

                இந்த ஊரில் பிறப்பு. இந்த ஊரிலேயே கல்யாணம். இந்த ஊரிலேயே எல்லாம். அடுத்த ஊர்கள் எட்டிப் பார்க்காத ஆவுடை. அவளுக்கே இந்த ஊர் மட்டுமே உலகம். மற்ற ஊர்களெல்லாம், தூரத்துச் சீமை. வேற்றுச்சீமை.

                "மெட்ராஸ் போய் பேரனைப் பார்க்கலாம்னு ஆசையாகத்தான் இருக்கு. உசுருகெடந்து துடிக்குது. மெட்ராஸ், இங்கனே எட்டுற தூரத்துலேயாயிருக்கு? தொலை தூரத்துச்சீமை. பஸ்லேயும் ரயில்லேயும் போகணுமாம். இந்தக் கிழட்டுச் சிறுக்கிக்கு என்ன இழவு தெரியும்? காரைக்கண்டேனா, ரயிலைக் கண்டேனா? போற வழி தெரியுமா, வர்ற வழி தெரியுமா? எங்க எறங்குறது? எங்க ஏறுறது? எப்படிப் போறது?'

                நினைத்தால்... ஒரே ஆயாசமாக வருகிறது. திகைத்த மனசுக்குள் கண்ணைக் கட்டிக்கொண்டு வருகிறது. பயப் படபடப்பு. அச்ச நடுக்கம். மலையைக் கட்டியிழுக்கிற மாதிரி, மாயத்தோடு மல்லுக் கட்டுகிற மாதிரி ஒரு மலைப்பு.

                குறுக்கில் மறித்துக் கொண்டு மலை மாதிரி மலைப்பு நின்றாலும், பேரன்களைப் பார்க்கிற ஆசையும் ஆர்வமும் அவளை நெட்டித் தள்ளுகிறது. "முட்டிப்பார், மோதிப்பார்' என்று முரட்டுத் தைரியம் தருகிறது. பாசமூர்க்கம். பாதையை உண்டாக்குகிற பாசப் பெருக்கு.

                எல்லாம் தெரிந்தா... இந்த மண்ணுலே பொறந்தோம்? பெறந்த பெறகு உருண்டு புரண்டு ஒவ்வொண்ணா தெரிஞ்சுக்கலியா?

                எல்லாம் தெரிந்தா... கல்யாணம் மூய்ச்சோம்? கண்டு முழிச்சு, தெரிஞ்சி, தெளிஞ்சி வாழலியா? கண்ணீரும் சிரிப்புமா காலம் போகலியா? பேரன்களையும் பாத்தாச்சே...!

                பேரப்புள்ளைகளைப் பாத்துக் கொஞ்சுறதுக்கு மெட்ராஸ் பெறப்புட்டா என்ன? பாடுசோலி கொறைவா இருக்கிற காலத்துலே... பத்துநா இருந்துட்டு வந்துரலாமே...

                போகத் தெரியாம... போக முடியாம... போற வழி தெரியாம திசை மாறித்திரிஞ்சு, செத்தாத்தான் என்ன நட்டமாயிரப்போகுது? இருந்து, பட்டம் கட்டி ராஜ்யமா ஆண்டுக்கிட்டிருக்கோம்? பாத்தா... பேரப்புள்ளைக. பாதை தெரியாட்டா மயானம். போய்ச் சேர்ந்தா... என்ன நட்டம்?

                கார்த்திகை தேதி பதினைந்தாகி விட்டது. ஒற்றை ரூபாய் நாணயங்களை முந்தியில் முடிச்சுப் போட்டு வைத்துக் கொண்டு பெட்டிப் போன் இருக்கிற கடைக்குப் போனாள். உள்ளங்கைக்குள் கசங்கிய காகிதத்தில் மகனின் நம்பர்.

                கடைக்காரர் காகிதத்தை வாங்கி நம்பர் போட்டு அவளிடம் நீட்டினார். ரெண்டு கைகளாலும் பவ்யமாக ரிசீவரைப் பற்றி காதில் பொருத்தினாள்.

                “யம்மா... என்னம்மா...” நம்பரைப் பார்த்த தெளிவில் மகன் குரல்.

                “நல்லாயிருக்கீயாப்பா? மருமக நல்லாயிருக்காளா?”

                “நல்லாயிருக்கோம். நீ நல்லாயிருக் கீயாம்மா?”

                “யப்பா... பேரப்புள்ளைகளைப் பாக்கணும்னு ஒரே கிறுக்கா இருக்குப்பா. கண்ணுக்குள்ளேயே நிக்குதுக”.

                “அடுத்த வைகாசியிலே தானே வர முடியும்மா. ஊடாலே... திடுதிப்புன்னு பெறப்புட்டுற முடியாதும்மா...”

                “இல்லைய்யா ராசா. ரவ்வுல படுத்தா, கண்ணுலே முள்ளா குத்துது, புள்ளைக நெனைப்பு. பாக்கணும்னு உசுரு கெடந்து தவிக்குதுப்பா...”

                “என்ன செய்யம்மா, இப்ப? வேற வழி ஒன்னும் தட்டுப் படமாட்டேங்குதே”

                “நா வேணும்னா... பெறப்புட்டு வரட்டா?”

                “ஒனக்கு ஒன்னும் தெரியாதே. நீ எப்படிம்மா வந்து சேர்வே?”

                “வந்து தான் பாக்கேனே? காலுக்கு முன்னாலே பாதை வந்து சேராதா?”

                “நீ எப்புடி வருவே? ஒன்னும் தெரியாம சீரழிஞ்சுருவேம்மா”

                “நீ ஒன்னும் கவலைப்படாதே. மனசுக்குள்ளே பயப்படாதே. கெழட்டுச் சிறுக்கி நா. அங்குட்டானாலும் சரி, இங்கிட்டானாலும் சரி. கடைசிக் காலத்துலே பேரப்புள்ளைகளை பாக்குற பாக்கியம் கெடைக்கட்டும்”.

                “எனக்கொன்னும் சரின்னு படலேம்மா”.

                “நீ ஒன்னும் மருகித்தவிக்காதே. மண்ணோட மல்லுக்கட்டி ஒன்னை வளத்து ஆளாக்குன எனக்கு, ரயிலைப் புடிச்சு வர்றது, பெரீய சீமை வித்தையா? நீ மட்டும் அயத்துராம... ரயில் கெடிக்கு (ரயில் நிலையம்) வந்து, என்னைக் கூட்டிக் கிட்டுப் போயிரு”.

                “வழி தெரியாம, எங்கேயும் தெசை மாறிப் போயிராதே...”

                “அதெல்லாம் வந்து சேர்ந்துரு வேன். நீ மட்டும் ரெயில் கெடிக்கு யாவுகமா வந்துரு...”

                “ஆட்டும்மா...”

                “நா காத்திகை பத்தொம்பதாம் தேதி பெறப்புட்டு வாரெண்டா. திங்கக் கெழமைடா. அயத்துராதே. சீமைப் பட்டணத்துலே பேரப் புள்ளைகளை கண்ணுலே காட்டுடா”.

                நாலைந்து நாணயங்கள் செலவாகி விட்டன. பேரப் பிள்ளைகள் மீதான பாசப் பரவசத்தில், தேதி உட்பட சொல்லி விட்டாள்.

                கார்த்திகை பத்தொன்பதாம் தேதி, அந்தா இந்தா என்று தொலைவில் நிற்பது மாதிரி மாயம் பண்ணிவிட்டு, திடுதிப் பென்று காலடியில் வந்து நிற்கிறது.

                உணர்ச்சி பூர்வமான வீம்பு வீராப்பான வேகத்திலும், பாசப் பரபரப்பிலும் முடிவெடுத்து விட்டாள். பின் வாங்க முடியாத முடிவு.

                நாள் நெருங்க நெருங்க நடுக்கம் வந்தது. அடிவயிற்றில் பரவுகிற பகீர் சூன்யம். பலவாறாக கிளை பிரிந்தோடுகிற நினைவுக் கொப்புகள். திசை தெரியாமல் தட்டழிந்து வருகிற மன அலைபாய்வுகள். குழப்பமும் திகைப்புமான எண்ணக் குளறுபடி.

                என்ன செய்ய? எப்படிப் போக? என்ன பாதை? எப்படி பயணப்பட? ஒன்றும் தெரியவில்லை. பல பேரிடமும் வாயைக் கொடுத்து வாயைக்கிளறி, விசாரித்தறிந்து கொண்டாள்.

                அடிக்கடி சென்னை சென்றுவருகிற பெண்களிடம் போய் வாய் கொடுத்தாள். திகைப்பும் மலைப்பும் அவளைப் புரட்டி எடுத்துக் கொண்டிருந்தது. ஒவ்வொருத் தரிடமும் விசாரித்தறிந்தாள்.

                இன்றைக்குப் புறப்பட வேண்டும்.

                பேரப்பிள்ளைகளுக்காக ஆசை ஆசையாக அவள் தயாரிப்புப் பணியில் மும்முரமாகிறாள்.

                பணியாரம், ஓலைக் கொழுக் கட்டை, கருப்பட்டி மிட்டாய், காராச்சேவு எல்லாம் செய்து தயார் பண்ணி, மூங்கில் குச்சி கைப்பிடி உள்ள சாக்குப் பையில் வைத்துக் கொண்டாள் ஆவுடை.

                ராசபாளையம் வண்டி, மூன்று மணி பஸ் என்று பெயர். மூன்றே கால் மணிக்கு வந்து, மூன்றரைக்குத்தான் புறப்படும். அதில் ஏறி உட்கார்ந்து கொண்டாள். ஆலங்குளம் முக்குரோட்டில் இறங்கி, சாத்தூர் போகிற டவுன்பஸ் "எங்க வரும், எப்ப வரும்' என்று விசாரித்தறிந்து, அந்தப் பஸ்ஸிலும் ஏறி விட்டாள்.

                சிவகாசி, சாத்தூர், கோவில்பட்டி, ராசபாளையம் நாலு நகரங்களும் இந்த ஊரைச் சுற்றிலும் சமதூரத்தில் இருக்கின்றன. திகைப்பிலும், மலைப் பிலும், பயப்படபடப்பிலும் ஆள் ஆளாக கேட்டறிந்த விபரங்களில், "சாத்தூர் ரெயில் கெடிதான் பஸ்ஸ்டாண்டுக்குப் பக்கம்' என்ற தகவல் பிடிபட்டிருந்தது.

                சாத்தூர் பஸ்ஸையும் பிடித்து விட்டாள். ஏகத்திகைப்பு. ஏகக்குழப்பம். சாத்தூர் பஸ்ஸிற்குள் ஏறுவதற்குள் பத்துப் பேருக்கும் மேலாக நச்சரித்து விட்டாள்.

                இது எங்க போகுது? சாத்தூருக்கு தானே? வேற பஸ் இல்லியே? நேர்ப் பாதையா? குறுக்குப்பாதையா?

                அவளது பயப்படபடப்பு எனும் சந்தேக இருட்டுக்குள்ளிருந்து வந்த மூட்டம் மூட்டமான கேள்விகளை யெல்லாம், கேட்டறிந்து கேட்டறிந்து வெளிச்சப்படுத்திக் கொண்டாள்.

                ஒரு சிலரைத் தவிர பெரும்பலர் கோபப்படாமல் பதில் சொல்லி வழி காட்டி தெளிவுபடுத்தினர்.

                சாத்தூர் பஸ்ஸ்டாண்டும் பஜாரும் ஜேஜே என்று வாகன நெரிசல், ஜன சந்தடிகள். இவளை ரொம்பவே மருட்டியது. "இதுலே எப்படி நீந்திக் கரை சேரப் போறோமோ?'

                கண்கைக்கட்டி காட்டில் விட்ட மாதிரியிருந்தது. "என்ன செய்ய, எங்கிட்டுப் போக?' என்று புரியாமல் பொறி கலங்கிப் போயிருக்கிற ஆவுடை. தலைமட்டத் துக்கும் உயரமாக இருந்தது, அவள் இடுப்பில் வைத்து சேர்த்துப் பிடித்திருந்த பைக்கட்டு.

                "ரெயில் கெடி எங்கிட்டு இருக்கு?'

                திருவிழாக் கூட்டத்தில் உற்றாரை தவறவிட்ட சிறுமியைப்போல திகைப்பும் மருட்டலுமாக நின்ற ஆவுடையின் பரிதாப கோலம், பார்த்தவருக்கு கருணை வரும்.

                ஒரு சந்தனக் கலர் சட்டைக்காரர். ஜிப்பா மாதிரி முழங்கால் வரைக்கும் இறங்கிய பெரிய சட்டை. சட்டையைப் போலவே சந்தன நிறத்திரேகம். செதுக்கி வைத்த மாதிரி கறுப்பு மீசை. கையில் சூட்கேஸ÷ம் ஒரு மஞ்சள் பையும் வைத்திருந்தார்.

                “என்னம்மா, டவுனுக்குப் புதுசா?”

                “ஆமய்யா... பட்டிக்காட்டுக்கெழடி”

                “எங்க போவணும்?”

                “ரெயிலுகெடிக்கு”

                அந்தச் சொல்லின் பழைய வாசத்தில் புன்னகைத்த அவர், “வாங்கம்மா ஏங்கூட. நா அங்கதான் போறேன்”.

                “நல்லா...யிருப்பீகய்யா...”

                “பையை சுமக்க முடியுதா? நா வாங்கிகிடட்டா?”

                “அவரவரு தலையெழுத்தை அவரவருதானே சொமக்கணும்? நா கொண்ணாந்துருவேன்யா”.

                ரெயில்கெடி பக்கத்தில்தான் இருந்தது. ஆனால் உயரத்தில் இருந்தது. நட்டுக் குத்தலாக ஏகப்பட்ட படிகள் ஏற வேண்டிருந்தது. இடுப்புப் பாரத்துடன் தம் பிடித்து ஏற முடியுமா? அவள் மலைத்தாள்.

                சட்டைக்காரர் முந்திப் போய் சூட்கேஸை வைத்துவிட்டு, திரும்பி வந்து இவளது சுமையை வாங்கிக் கொண்டார். அவளையும் கைத்தாங்கலாக தொட்டுப் பிடித்து, படி ஏற உதவி செய்தார்.

                ரெயில் கெடியில் பத்து முப்பது பேர் தான் நடமாட்டம். தரை, பளிங்குத் தரை. இலை போடாமல் சோறு போட்டுச் சாப்பிடலாம்.

                சுமைப்பாரத்தை ஓரிடத்தில் வைத்து, இரும்பு நாற்காலியில் உட்கார வைத்தார், இவளை. அவரது சூட் கேஸையும் இவள் பாரத்தின் பக்கத்தில். நாலைந்து போலீஸ் வந்தனர். எல்லார் பெட்டிகளையும், பைகளையும் சோதனை போட்டனர். இவர்கள் லக்கேஜ்களையும் சோதனை செய்தனர். ஆவுடை பயத்தில் வெலவெலத்தாள்.

                சந்தனக்கலர் தைரியம் சொல்ல, ஆவுடை தன்னிலைக்கு வந்தாள்.

                “எந்த ஊரும்மா... நீங்க?”

                “அய்யா... நா ஆமர்நாடுய்யா...”

                “பெரியம்மா எங்க போகணும்”.

                “சென்னப் பட்டணத்துக்கு. எம்மகன் இருக்கான். பேரப் புள்ளைகளைப் பாக்கப் போறேன்”.

                “கூட... தொணைக்கு யாரும் வரல்லியா?”

                “படைச்ச கூத்துவன்தா தொணை. வேறயாரு?”

                அவள் குரலிலிருந்த தனிமைச் சோக அவலம் அவரைத் தாக்கி உலுக்கியது. அந்தக் கிழவியை பரிவுடன் பார்த்த அவரது கண்களில் கருணைச்சுனை. பாசக் குழைவுடன் விசாரித்தார்.

                “எந்தக் கோச்ம்மா?”

                “அப்படீன்னா... என்னய்யா?”

                “ரிசர்வேஷன் தானேம்மா?”

                “என்னமோ தஸ்ஸø புஸ்ஸøன்னு பேசுதீக. கண்ணவிஞ்ச இந்தக் கெழட்டுச் சிறுக்கிக்கு ஒரு இழவும் புரிய மாட்டேங்குது”.

                வெடித்த பருத்தியாக சிரித்தார் அந்தச் சிவந்த மனிதர். அவரது சிரிப்பின் மென்மையில் அவரது மனக் கனிவும் பெருந்தன்மையும் வாசமாக மணந்தது.

                “அப்ப... கையிலே டிக்கட் இல்லே. அன்ரிசர்வ்டு. டிக்கட் எடுக்கணுமாம்மா?”

                “எங்க எடுக்கணும்யா? என்ன ஏதுன்னு ஒன்னும் தெரியலே”.

                அவரது முகத்தில் யோசனைத் தீவிரம். சூட்கேஸையும், மஞ்சள் பையையும் இவளிடமே ஒப்படைத்து விட்டு கொஞ்சம் தள்ளிப் போனார். ஏழெட்டுபேர் ஒருத்தர்பின் ஒருத்தராக வரிசையில் நின்றனர். சின்ன ஓட்டைக்குள் குனிந்து பார்த்து, கை நீட்டிக் கொடுத்து ஏதோ வாங்குகின்றனர். இவரும் அந்த வரிசையில் ஒருத்தராக.

                “இந்தாங்கம்மா, உங்களுக்கு ஒரு டிக்கட். தர்றதுக்கு பணம் இருக்கா, இல்லியா?”

                “இருக்குய்யா...” என்ற ஆவுடை எம்புட்டு என்று கேட்டு, அந்தப் பணத்தைத் தந்தாள்.

                “நானும் அன்ரிசர்வ்டு தாம்மா. ஜெனரல் கம்பார்ட்மெண்ட்தான்”.

                “அப்படியாய்யா? இந்தச் சொமை யையும் தூக்கிக்கிட்டு ஏறவேண்டிய பொட்டிய எப்புடி கண்டுபிடிச்சு... எப்புடி ஏறப் போறேனோ...? தெரியலே...”

                திசையற்ற திகைப்பில் தெரிகிற அந்த முதுமைத்தவிப்பை உணர்ந்து பரிதாபப்படுகிற அந்தச் சந்தனக்கலர் மனிதர் மூதாட்டியின் கிராமத்து அறியாமை, மனக்குழப்பம் தனது தாயாராக அவளை நினைக்கிற அவரது மனசு.

                “பயப்படாதீகம்மா நா இருக்கேன். உங்க பையையும் தூக்கிக்கிடுதேன். உங்களையும் கைத்தாங்கலா கைப்புடிச்சு ட்ரெயின்லே ஏத்திவுட்டுருதேன். நானும் மெட்ராஸ் வரைக்கும் தொணையா வர்ரேம்மா. தெம்பா இருங்க. உங்க மகனை மாதிரி என்னை நெனைச்சுக்கோங்க...”

                குழம்பித் திகைத்து மருண்டு கிடந்த இவள் மனசுக்குள் அவரது பரிவும் கருணையும் அருஞ்சுனை நீரெனப் பரவிப் படர்ந்தது. ஒரு பாதுகாப்பு கிடைத்துவிட்ட மனதைர்யம் வந்தது.

                சாத்தூர் ரெயில்கெடியில் கூட்டம் அலை மோதியது.

                அத்தனை கூட்ட நெரிசலிலும் இவளை பத்திரமாக ஏற்றிவிட்டார். உள்ளுக் குள்ளும் கால் வைக்க இடமில்லாத ஜனநெரிசல். மூச்சு முட்டியது. உட்காரும் இடங்களில் எல்லாம் நிரம்பி வழிந்த ஜனம்.

                இவர் அலைபாய்ந்து வந்தார். அங்கும் இங்கும் அலைந்தார். யார் யாரிடமோ குழைவாகப் பேசி, கெஞ்சிக் கூத்தாடி இவளை ஓரிடத்தில் உட்கார வைத்துவிட்டார். அவர் நின்று கொண்டே வந்தார். கொய்யாப்பழம் வெட்டித் தந்தார். பிஸ்கட் தந்தார். சப்பாத்தி வாங்கித் தந்தார். தண்ணீர் பாட்டிலும் தந்தார்.

                "பெத்தமகன் துணைக்கு வந்திருந் தால் கூட... இம்புட்டு அரவணைப்பும் உபசரிப்பும் கிடைத்திருக்குமா?'

                நினைக்க நினைக்க நெகிழ்ச்சியாக இருந்தது. அந்தப் பிள்ளையாண்டானை பாசமும் பிரியமுமாகப் பார்க்கிற ஆவுடை. "திக்கத்தவுகளுக்கு தெய்வம் தொணைம் பாக. இந்தப் புள்ளாண்டனும் தெய்வம் மாதிரிதான்'.

                ஒவ்வொரு கெடியிலும் போலீஸ் நடமாட்டம் கூடுதலாக இருந்தது. கூட்டம் கூட்டமாக போலீஸ்படை. ஒவ்வொருத் தரையும் பைகளையும் சோதனை போடுகிற தீவிரம். ஒரு தடபுடல். தாட்டு, பூட்டென்கிற அதட்டலும் மிரட்டலுமாய் ஒரு பரபரப்பு.

                ஏதோ பயங்கரவாதிகளை மடக்கப் பார்க்கிற தீவிரக் கவனிப்பும், துரிதப் படுத்தலும் தூள் பறந்தது. எல்லாரையும் பரிசோதிக்கிற தீவிரம். பரிசோதனை களுக்கு ஆளான பயணிகள் ரயிலுக்குள் வந்து ஆத்திரம் ஆத்திரமாகப் பேசினர். கோபம் கோபமாகக் கொந்தளித்தனர். இலக்குத் தெரியாத முரட்டுக் கோபம்.

                “ச்சேய்... ஒவ்வொரு ஸ்டேஷனி லேயும் போலீஸ் பண்ற டார்ச்சர் ரொம்பக் கொடுமையாயிருக்கு. தாங்கலே”.

                “பையைத்திற... வாயைத்திறன்று வகை தொகையில்லாத டார்ச்சரு”.

                “ராவுத்தமாராலே எல்லா பாசஞ்சருக்கும் தொல்லை. ஏகக்கெடுபிடி. செக்கப். ச்சேய்” வெறுப்பும் குரோதமுமாய் வெடித்துச் சிதறுகிற வார்த்தைகள்.

                ஆவுடைக்கு ஒன்றும் புரியவில்லை. நடக்கிற வாக்குவாதம் சண்டை சத்தத்துலே போய் முடிஞ்சிருமோ என்று கலவரப் பட்டாள். அவள் பக்கத்தில் உட்கார இடம் கிடைத்து உட்கார்ந்திருந்த சந்தனக்கலர், வாக்குவாதத்தை கூர்ந்து கவனிக்கிறார். அவர் முகம் இறுக்கமாவதை கவனிக்கிறாள். கண்ணில் ஒரு வேதனை துடிக்கிறது, வெட்டுப்பட்ட பல்லிவாலாக.

                “டிசம்பர் அஞ்சுன்னாலே ட்ராவல் பண்ணுற அம்புட்டுப் பேருக்கும் அக்கப் போருதான். தாங்க முடியாத டார்ச்சர். களவாணிப் பயலைப் போல அத்தனை பேரையும் சோதனை போடுறது, பெட்டியை தொற... அதைத் தொறன்னு மிரட்டுறது... எல்லாத்துக்கும் காரணம், ராவுத்தமாரு வைக்குற குண்டுகதானே? ஒன்னு ரெண்டு பேர்னாலும் அதுவும் முஸ்லீம்கள் தானே?”

                கதர்சட்டை போட்டிருந்த காந்தி படம் போட்ட புத்தகக்காரர் பொறுமை காத்து நிதானமாக வார்த்தைகளை விதைத்தார்.

                “டிசம்பர் 6 நானூறு வருஷப் பழமையான பாபர் மசூதியை மதவெறி இந்துக்கள் கடப்பாறையாலே இடிச்சுத் தள்ளுனாங்க. நல்ல இந்துக்கள் வெக்கப் பட்டாங்க. சும்மா இருந்த மசூதியை இடிச்ச பயங்கரவாதத்தைப் பார்த்து நல்ல முஸ்லீம்கள் ரத்தம் கொதிச்சாக. ஆனா... சகிச்சுக்கிட்டாக. மதவெறி முஸ்லீம்கள் குண்டு வைக்கிறாக. இதுலே, முஸ்லீம்களை மட்டும் குத்தவாளி யாக்குறது என்ன நாயம்?”

                “இப்ப... ரெயில்வே ஸ்டேஷன் கள்லே இன்னிக்கு சோதனை போட்டு பண்ணுற ரவ்ப்சர், முஸ்லீம் மதவெறி யாளுக குண்டு வைச்சதாலே தானே? கொலை பாதகம் செய்ததாலே தானே?”

                சந்தனக்கலர் ஆவுடையைப் பார்த்து கேட்டார்.

                “பெரியம்மா... என்னப் பாருங்க, நா கொடுமைக்காரனா? கொலை பாதகம் செய்றவனா?” ஆவுடை குலுங்கிப் போனாள்.

                “அப்படிச் சொன்ன வாய் வெந்து போகும். நெனைச்ச மனசு கருகிப் போகும். எம் மகனைவிட உசத்தி. எனக்கு செய்ஞ்ச ஒத்தாசையிலே... திக்கத்து திரிஞ்ச எனக்கு தந்த தைர்யத்துலே... நீங்க தெய்வத்துக்குச் சமதை. தங்கமான சந்தனம். கையெடுத்துக் கும்புடவேண்டிய மனுசரு”

                ஆவுடை நடுங்கும் கைகளை குவித்து, உணர்ச்சி வசப்பட்ட மனப்பரவசக் கண்ணீரோடு பேச முடியாமல் திணறினாள்.

                “எம்பேரு... இஸ்மாயில்”

Pin It