தூங்குபவர்களை எழுப்பலாம்; தூங்குவது போல நடிப்பவர்களை எழுப்ப முடியாது. அண்மையில் எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணன் "சன்டே இந்தியன்' இதழுக்களித்த நேர்காணலைப் படித்தபோது, இது ஏனோ ஞாபகத்திற்கு வந்தது.

                “தமிழில் தற்போது நாவல் எழுதுகிற எழுத்தாளர்களே இல்லை” என்பது அவரது குற்றச்சாட்டு. தமிழின் தற்சமயப்போக்குகளை கவனிக்காததன் விளைவோ அல்லது குறிப்பிட்ட சிலரை மட்டுமே எழுத்தாளர்களாக பாவிப்பதனால் ஏற்படுகிற சிக்கலோ அவரை இப்படிப் பேச வைத்திருக்கிறது.

                அண்மையில் நான் வாசித்த அன்வர் பாலசிங்கம் அவர்களின் “செந்நீர்” நாவல் புதியதொரு வெளிச்சத்தை தமிழில் ஏற்படுத்துவதாக அமைந்திருக்கிறது. இதற்கு முன் “கருப்பாயி என்கிற நூர்ஜகான்” எழுதி, விளிம்பு நிலை இஸ்லாமியர்களின் இருப்பைப் பேசியவர், பலரை பதைபதைக்க வைத்தவர், உண்மைகளை வெளிச்சம்போட்டு காட்டியவர் என்கிற வகையில் அன்வர் பாலசிங்கம் நம்முன் நம்பிக்கையை விதைத்து, இன்று “செந்நீர்” மூலம் அது விருட்சமாகத் தளிர்விட துலங்கியதை அனுமானிக்க முடிகிறது.

                தஞ்சையில் "வளையல் வம்சம்' என்ற தஞ்சாவூர்க் கவிராயரின் நூல் வெளியீட்டுக்குச் சென்றிருந்தேன். ஓவியர் வீரசந்தானம் வைத்த ஒரு கருத்து என்னை கையொலி எழுப்ப வைத்தது. “சம கால பிரச்னைகளைப் பேசாமல் - எழுதாமல், பழம்பெருமைகளை மட்டுமே பேசி களிப்பது சரிதானா?” இந்த கருத்தோடு நான் உடன்படுகிறேன். ஈழத்தில் நம் சொந்தங்களுக்கு நடந்த கொடுமைகள் முதல் இன்று தமிழக மீனவர் தொடங்கி முல்லைப்பெரியார் வரை நமக்கிழைக் கப்படும் அநீதிகளைக் கண்டு கொதிக் கிறோம்; குமுறுகிறோம். ஆனால் அவற்றை தமிழகத்தில் படைப்பாக்கி இருக்கிறோமா? இந்தக் கேள்வி இன்று வரை தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.

                அன்வர் பாலசிங்கம் ஒன்றும் நாடறிந்த எழுத்தாளரில்லை. தமிழகத்தில் அவரை எத்தனை பேருக்குத் தெரியும்? குறைந்தபட்சம் எஸ்.ரா. போன்றவர்களுக்காவது தெரியுமா? ஆனால் அவர் சமூக அநீதி கண்டு கொதிக்கிறார்; குமுறுகிறார். அதனை தனக்குத் தெரிந்த மொழியில் அப்படியே நூலாக்கித் தருகிறார். இவரது எழுத்துக்களை எல்லாம் நிராகரித்துவிட்டு தமிழிலக்கிய வரலாற்றை அவ்வளவு சீக்கிரம் எழுதிவிட முடியாது.

                ஈரானிய திரைப்படங்களைப் போல பெரிதாக கதை என்ற ஒன்றில்லை. சுப்பன், முத்தம்மா இருவரும் காணாமல் போன வழக்கறிஞர் ஆக ஆக்க நினைக்கிற கிட்டு என்கிற மகனை மூணாறில் தேடித்தேடி, நீதி கேட்டு அலைகிற அலைச்சல்தான் கதை. சொல்லப்படுகிற விதத்தில், கதை நிகழும் களத்தில், பேசுகிற வழக்கில் உள்ளத்தை உலுக்கி எடுக்கிற உண்மையைப் பேசுகிற ஆவணமாகிறது இது.

                ஒரு மனிதனை காவல்துறை நினைத்தால் எப்படியும் பழி வாங்கிவிட முடியும் என்பது உலக யதார்த்தம். அதிலும் அவன் உரிமை கேட்டுப் போராடு கிறவனாக - தங்களுக்கான தாய் மண் நில மீட்சிக்காக குரல் கொடுப்பவனாக இருந்து விட்டால், அதிலும் இந்திய தேசியம் பேசுகிற தேசத்தில் தமிழனாகப் பிறந்து விட்டால், படுந்துயர் கொஞ்ச நஞ்சமா?

                சுப்பன் ஒரு இடத்தில், “இந்த மண்ணு எங்க பாட்டம் பூட்டன் உருவாக்குன மண்ணு டாக்டர். இத இப்ப சொந்தங் கொண்டாடுத மலையாளிகளுக்கு 50 வருசத்துக்கு முன்னால இப்படி ஒரு பூமி இருந்ததே தெரியாது டாக்டர். எங்க பார்த்தாலும் பச்சையாக கிடக்கிற இந்த தேயிலைக் காடுகளுக்கு கீழே கிடக்கிறது எல்லாம் உரம்... கிரம்னு நெனச்சீகளா... இல்ல டாக்டர் இல்ல.... அது அம்புட்டும் எங்க பாட்டன் பூட்டனும் நாங்களும் சிந்துன இரத்தம் டாக்டர்” என்பது எவ்வளவு உண்மை என்பதை நாவலுடாகச் சொல்லிச் செல்கிறார் அன்வர் பாலசிங்கம்.

                உலகத்தில் ஓட்டுப்போட்டு கம்யூனிசம் முதன் முதலில் ஜெயித்த பூமியில் - கோடி ரூபாய் சொத்தை கட்சிக்கு எழுதிக் கொடுத்துவிட்டு கடைசி வரை ஒண்டுக் குடிசையில் வாழ்ந்த ஈ.எம்.எஸ். பிறந்த மண்ணில் - கம்யூனிசத்தின் பேரில் நடமாடும் போலிகளையும், அதற்கு சற்றும் குறையாமல் தமிழராக இருந்தும் மலையாளிகளின் காவலனாக விளங்குகிற காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரின் வஞ்சகச் செயல்களையும், தொழிற்சங்கம் என்ற போர்வையில் தோட்டத் தொழிலாளி களை உசுரோடு கசக்கிப் பிழிந்தெடுக்கும் அவலத்தையும் எந்தச் சமரசமுமின்றி சொல்லிச் செல்வதில் அன்வரின் பேனா செம்மாந்து நிமிர்கிறது.

                “கட்சிக் காரங்க மட்டும் நினைச் சிருந்தா இந்தக் கலிகாலத்துல ஒரு முழுத்து ஆம்பளைக்கு 57 ரூபா சம்பளம் கொடுப்பானா இந்த கம்பெனிக்காரன்? கம்பெனிக்காரன் கிட்ட இவமாரு காலக் கழுவப் போய்த்தான் மூணாறு டவுன்ல வெள்ளையுஞ் சொள்ளையுமா அலைய முடியுது” என்று காட்டுராஜா போன்ற கம்யூனிச போலி வேடதாரிகளைக் காட்சிப்படுத்தலில் அன்வர் சற்றும் தயக்கம் காட்டவில்லை.

                “தெக்கயிருந்து நம்ம ஆளுக மட்டும் வந்து இதுகள உருவாக்கலன்னா புல்லு முளைச்ச வனமாத்தான் கிடந்திருக்கும்... என்ன செய்ய... அத்தனையும் பாடுபட்டு, உண்டாக்கிக் கொடுத்துட்டு உழக்கு இடத்துக்கு வழியில்லாம நிற்கிறோம். சர்வீஸ் முடியறதுக்குள்ளயே கம்பெனிகாரன் நோட்டீஸ் கொடுத்து ஓடுறாங்கிறான். ஊர் நாட்டுக்குப் போயி சொந்த பந்தங்களோட வாழணும்னு நினைச்சா அவமாரு நம்மள மலைக்காரன்னு ஒதுக்கி வைக்கிறாக” என்கிற முனியாண்டியின் பேச்சில் உறைக்கிறது நிஜமும், துயரமும், கோபமும்.

                காணாமல் போன கிட்டு மேல் மலையாள காவல்துறை சுமத்துகிற குற்றச் சாட்டு என்ன தெரியுமா? பிரபாகரன் படத்தை வச்சிருந்ததுதான். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் “அவரொன்னும் மகாத்மா இல்லை. அல்லாம அவரு இந்த நாட்டுல உள்ள ஆளும் அல்ல. அவரு ஸ்ரீலங்காவோட சிட்டிசனாக்கும் அவரு போட்டோவை இந்த கிட்டு பீரோவுக்குள்ள ஒட்ட வேண்டிய அவசியம் என்ன?”

                அதற்கு அன்வர் கதாபாத்திரம் வழி சொல்லும் பதில் காத்திரமானது... “சார்... இங்க உள்ள கம்யூனிஸ்ட் கட்சிக்காரங்க வீடுகள்ல எல்லாம் சேகுவேரா படம் இருக்குது. அந்த சேகுவேரா கம்யூனிஸ்டு களுக்குத்தான் ஹீரோ... இன்னை வரைக்கும் அவரு அமெரிக்காவோட விரோதிதான். குற்றவாளின்னு தான அவரை சுட்டுக் கொன்னாங்க? எல்லாத்துக்கும் நல்லவரா யாராலயும் வாழ முடியாது சாரே... பிரபாகரன் இந்திய அரசாங்கத்துக்குவேணா குற்றவாளியா தெரியலாம். ஆனா தமிழ் உணர்வுள்ள மானமுள்ள இளைஞர்களுக்கு அவர் ஹீரோ”. சபாஷ் அன்வர் பால "சிங்கம்!'.

                சமீபத்தில் மூணாறு சென்றி ருந்தேன். குண்டுமலை, சோத்துப்பாறை, பெரியபாறை, இரவுக்கடை, அலுமினிய பாலம், அடிமாலி உட்பட எல்லா இடங்களையும் நாவலில் சரியாகக் காட்சிப்படுத்தி இருப்பதை இதனால் என்னால் உணர முடிகிறது. சற்றும் பிச்சாரம் இல்லாமல் சுவையோடு கதை நகர்வதால் ஒரே இரவில் நாவலை படித்து முடித்தேன். ஆனால் அதன் நிஜங்கள் நெஞ்சைச் சுடுவதால், "என்ன செய்யலாம் இதற்காக' என்று வெகுநேரம் அந்த இரவை தூக்கமின்றியே நகர்த்தினேன்.

                முன்னுரையில் அன்வர் சொல்வது போல நீங்கள் தொடரப் போவது ஒரு கனமான கதைத்தளத்தை. அது முழுக்க முழுக்க கற்பனை என்பதை நினைவில் வைத்துத் தொடருங்கள். துரதிர்ஷ்டவசமாக கற்பனை கதையாகவும் கதை, களமாகவும் சில இடங்களில் மாறிவிடுகிறது. அன்வர் நீங்கள் மட்டுமல்ல, நாங்களும் களமாட வேண்டிய நேரம் வந்து விட்டது...

*

வெளியீடு: கொற்றவை பதிப்பகம்,

40/1, நூறு அடிச்சாலை,

காரைக்குடி.

தொடர்புக்கு : 9445801247 - 9791498999

விலை : ரூ.135/-

Pin It