விற்கச் சென்ற
சிலம்பின் சாயலைக்கொண்டு
எவனோ ஒருவனை
குற்றவாளியாக்கும் கசடர்கள் நிறைந்த
இத்தெருவில்
எப்போதும் யாரோ ஒருவன் கோவலானாகிறான்

எரிந்து சாம்பலாகும்
சிதையிலிருந்து
ஓராயிரம் கண்ணகிகளின்
பெருஞ்சாபங்கள் கிளைத்தெழும்
எல்லா நகரங்களிலும்
எரிந்து சாம்பலாகாத
சபிக்கப்பட்ட ஏதேனும் ஒரு தெரு
துயர்கொண்டு விம்முகின்றது -

எவனோ ஒருவன் பேச்சு கேட்டு
வாழ வந்தவளை
நெருப்பிட்டு பரிசோதிக்கும் உலகின்
ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து
தீயின் கருகிய வெம்மையில்
புகையாய் கழிகிறது
கற்பின் பெருந்திணை அன்பு.

இவர்கள் வாழும்
தெருக்களில் ஒன்றில்தான்
அன்பே நீயும் நானும் வாழ்ந்தபடியிருக்கிறோம்.

Pin It