விரிந்து பரந்து கிடக்கும்
மான்திரி காடு...

காட்டை ஒட்டியே
தங்கையன் தாத்தாவின்
கடலைக்காடு

நெடுங் கம்பு ஊன்றி
மாடுகள் மேய்க்கும்
தங்கையன் தாத்தாவை
மரக்காளை ஒன்று
பிரியாமல் பின்தொடரும்...

கரிச்சான் குருவிகள்
வால்தூக்கி
இரண்டாம் ஈற்றெடுத்த
எருமை மீது அமர்ந்து
ஊர்வலம் போகும்

செவலை ஆட்டின்
மூத்திரம் முகர்ந்து
சப்பாணிக் கருப்புக்குவிட்ட
கிடாய் சென்று கொண்டிருக்கும்...

அடை மழைக் காலங்களில்
கோணிச் சாக்கில் கொங்காணி மடித்து
குளிரில் நடுங்கியபடி
ஆடு மாடுகளை
மேய்ச்சலுக்கு விரட்டுவார் தாத்தா...
பற்றையில் தாவி வெள்ளாடு
முஷ்டை இலை மேயும்...
செம்மறிகள்
அருகம்புல் பொறுக்கும்...

மேகங்கள் இருண்டு
மழை கொட்டத் தொடங்கும்
குட்டிகள் வெடவெடத்து
தாத்தாவின்
குடங்கையில் கிடக்கும்

முஷ்டை இலை பறித்து
குட்டிகளுக்கு ஊட்டும்
குணத்தில்தான்
தாத்தாவிற்கும்
குட்டிகளுக்குமான
உறவு நிமிரும்

ஆடு மாடுகளுக்கு
தாத்தாவின் மொழி புரியும்
கிளுவைப் பற்றை
வேலிக்கு அடியில்
புழுக்கள் பொறுக்கும்
போந்தாக் குருவிகளுக்கும்
மைனாக்களுக்கும்
தாத்தாவின் குரல்
தாள லயம்போல் தெரிந்திருக்கும்.

மான்திரி காட்டில் இன்று
மகிழுந்துகள் நிற்கின்றன
தாத்தாவும் இல்லை
அவர் மேய்த்த
உறவுகளும் இல்லை...

மான்திரி காடு
மான்சாண்டோ லேண்ட் என்று
மாற்றம் பெறுகிறது.

திடல் திடலாய் மனை வணிகம்
தடபுடலாய் நடக்கிறது!

நொண்டி மாணிக்கமும் தாளமுத்துவும்
இடைத் தரகர்களாய்
இடம்பேசி அலைகிறார்கள்....

Pin It