பயணங்கள்
முடிவை நோக்கிய
தேடல்களாய்.

பாதைகள்
நெளிகிறது நீள்கிறது.
ஓரங்களில்
காட்சிகள் விரைவாய் சுழல்கிறது.

வரிசைக் கிரமமாய்
புளியமரங்கள்
யார் நட்டது என்ற
கல் நடப்படாமல்,
சருகாய் உதிர்ந்த
இலைகள் பற்றிய
கவலையின்றி,
வசந்த காலத்தில்
துளிர்த்து விடும்
நம்பிக்கையில்.

இடையிடையே
மண்கொண்டு
மனிதன் வளர்த்த மரங்கள்,
மூங்கில் கிளைகள்,
தென்னங் கீற்றுகள்,
வைக்கோல் இலைகள்,
சருகாய் போய் சிந்தியவற்றை
சவ்தாள் கொண்டு
நிரப்பி
துளிர்க்கும் நம்பிக்கையற்ற
குடிசை மரங்கள்.

உள்ளே
உலர்ந்த உதடுகள்,
வற்றிய வயிறுகள்,
கருத்துக் கன்றிய உயிர்கள்
குடியரசின் குடிமக்கள்.

அவர்களின்
வெகு அருகாமைகளில்
சாலையோரங்களில்
தெருக்கோடிகளில்
முச்சந்திகளில்
அவரவர்களின் கொடிமரங்கள்.
தேர்தல் வந்தால்
தலைவர்கள் வந்தால்
அந்த மரங்கள் கூட துளிர்க்கும் பூக்கும். அவைகளுக்கு
ஓட்டு உரமிடும்
அவர்களின்
வீடுகளும் தேடல்களும்?

Pin It