"நாம் ஒருவரையும் ஏமாற்றவுமில்லை. துரோகம் இழைக்கவுமில்லை.எனவே நம்மை யாரும் ஏமாற்றினால், துரோகமிழைத்தால் நாம் ஒரு போதும் பதிலடி கொடுக்கத் தயங்கமாட்டோம்”

- தேசியத்தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்கள்.

அரசியல் மொழியில் இவ்வுலகில் தன்னை தலைவர் என்று சொல்லிக்கொள்கிற எவரையும்விட உண்மையிலும் நேர்மையிலும், மனத்தூய்மையிலும் அறிவுக் கூர்மையிலும் ஆயிரம் மடங்கு உயர்ந்து நிற்கிற அந்த உன்னதத் தலைவரின் இச்சிந்தனை ஈழமண்ணில் செயலாக்கம் பெற்றிருந்த நாள் வரை, விடுதலைப் போராட்டத்தை வீழ்த்த எவனாலும் முடியவில்லை.ஒரு சில துரோகிகளுக்கு ‘கருணை’ காட்டியதன் விளைவுதான் நான்காம் கட்ட ஈழப்போர் தந்திருக்கும் முள்ளிவாய்க்கால் துயரம்.

கிரேக்க வரலாறு முதல் தமிழினத்தின் நேற்றைய வரலாறு வரை சாம்ராஜ்யங்களின் வீழ்ச்சியும், விடுதலைப் போராட்டங்களின் பின்னடைவும் நமக்குச் சொல்லும் பாடம்,துரோகத்தை மன்னிக்கக் கூடாது. துரோகிகளுக்கு கருணை காட்டக் கூடாது. அவர்களை முற்றாக அப்புறப்படுத்திவிட வேண்டும் என்பது தான்.

இது போராட்ட வாழ்க்கைக்கு மட்டும் பொருந்துகிற விதியல்ல.சனநாயகப் போர்வையோடு மக்களை வேட்டையாடுகிற, அதிகாரத்தால் நசுக்குகிற, நாடாளுமன்றத்தில் மக்கள் விரோத மசோதாக்களை நிறைவேற்றி சட்டத்திருத்தங்களை மேற்கொண்டு இந்தத் தேசத்தின் குடிமக்களை அழித்தொழிக்கிற துரோகிகளையும் நாம் அடையாளம் கண்டு அம்பலப்படுத்தத் தவறினால், ஒரு நள்ளிரவில் பன்னாட்டு நிறுவனங்களுக்கும், உலகப்பணக்காரர்களுக்கும் நாம் கொத்தடிமைகளாக விற்கப்பட்டுவிடுவோம். இப்போதே அந்தப் பணியை பகுதி பகுதியாகத் தொடங்கிவிட்டனர் இந்த நாட்டின் இறையாண்மையையும், ஒருமைப் பாட்டையும் காப்பதாக உறுதிமொழி எடுத்துக் கொண்ட உத்தமர்கள்.

வல்லரசுகள் விரித்து வைத்திருக்கும் வலைப்பின்னலுக்குள் சிக்கவைத்துவிட்டு நமது சிறகை அறுக்கும் வேலைக்கு சிறப்புப் பரிசு பெறுவதில் முனைப்போடு இருக்கிறார்கள் நாம் நம்பித் தேர்ந்தெடுத்த மக்கள் பிரதிநிதிகள்.

நாம் அவர்களை ஏமாற்றவுமில்லை. துரோகமிழைக்கவுமில்லை. ஆனால் அவர்கள் நம்மை ஏமாற்றுவதையும், துரோகமிழைப் பதையும் தவிர வேறெதையுமே செய்வதில்லை. கேட்டால்,அது தான் சனநாயகம் என்கிறார்கள்.

ஆக, மக்களாட்சி என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டு அல்லது அவர்களை சாட்சியாகக் கொண்டு அம்மக்களையே அழித்தொழிப்பது என்றாகிவிட்டது.

வாக்களித்த நமக்கு வாய்க்கரிசி போட்டுவிட்டு, அரை நிமிட மௌன அஞ்சலிக்குப் பிறகு அவையை ஒத்திவைப்பதே சனநாயகம் காப்பவர்களின் தலையாய கடமையாக இருக்கிறது.

இந்திய ஒன்றியத்தில் நெடுங்காலமாக ஒலித்துக் கொண்டிருக்கிற ஆகச் சிறந்த பொய்யாக மக்களாட்சி தத்துவம் மாறிவிட்டது.மக்களால்,மக்களுக்காக,மக்களே ஆள்வதே மக்களாட்சி என்று சொல்லிக் கொள்கிற நாட்டின் மக்கள் நலக் கொள்கைகளை அம்பானிகளும், டாட்டாக்களும் வரையறுக்கிறார்கள்.

 

நிறுவன அதிகார வர்க்கத்தின் மாயக்கைகளில் சிக்கியிருக்கும் ஆட்சி நிர்வாகம் ஏழை எளிய அடித்தட்டு மக்களின் எலும்புகளை உருக்கி, பெருமுதலாளிகளின் வளர்ச்சிக்கு உரமிடுகிறது.

ஒருபுறம் நமது வாழ்வாதாரங்களை அபகரிக்கிற ஒப்பந்தங்கள் கையெழுத்திடப் படுகின்றன.மறுபுறம் நாராயணசாமிகள் நாடாளுமன்ற வாசலில் நின்று கொண்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சி,தேசத்தின் பாதுகாப்பு, மக்கள் நலன், வேலை வாய்ப்புகள் என்றும், ஊர் சுற்றிவிட்டு வந்த ரங்கராஜன்கள் ‘தமிழீழம்’ அமைவதை ஈழத்தமிழர்கள் விரும்பவில்லை என்றும் ஏறுமாறாகப் பேசிச் செல்கிறார்கள்.

தேர்தல் காலங்களில் இவர்கள், நம்மிடம் வாக்களிப்பது உங்கள் உரிமை சனநாயகக்கடமை என்றெல்லாம் முழங்குவதன் மறைபொருள், உங்களுக்கான சவக்குழியை நீங்களே தோண்டிக்கொள்ளும் சுதந்திரம் உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது என்று அறிவிப்பதாகப்படுகிறது.சங்கரன் கோயில் இடைத் தேர்தலில் மக்கள் தமது சனநாயகக் கடமை ஆற்றி முடித்த மறுநாளே, கூடங்குளத்தில் ஆயிரக்கணக்கில் காவல் துறையினரும், துணை ராணுவமும் குவிக்கப்பட்டது இதை உறுதிப்படுத்தியது.

எல்லா இழிவுகளையும், அவமானங்களையும் எவருக்கோ நேர்ந்ததாகக் கருதிக்கொண்டு வெற்றுப் பார்வை யாளர்களாக வாழப் பழக்கப்படுத்தப் பட்டிருக்கிறது பெரும்பான்மை சமூகம்.இது திட்டமிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட பயிற்சியாளர்களைக் கொண்டு, நிறுவன அதிகாரவர்க்கத்தின் பிரச்சாரகர்களைக் கொண்டு நம் உடம்புக்குள் கொஞ்சம் கொஞ்சமாக செலுத்தப்பட்டிருக்கும் கொடிய விஷம் என்பதையும் உணராது, போதைக்கு அடிமையானவர்களைப் போல,வெந்நீரில் சுகமாக மிதக்கும் ஆமைகளைப் போல நாம் கிடப்பதின் விளைவாக பல்வேறு தேசிய இனங்களை, அவற்றின் பன்முகப் பண்பாடுகளை உள்ளடக்கியிருக்கும் இப்பெருந்தேசம் உலகப்பேரரசு எனும் ஒரே வல்லாதிக்கத்தின் காலடியில் அடிமைப் படுத்தப்படும் அபாயம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் நம்மை காப்பாற்றிவிடாது.

முதலாளித்துவ சனநாயகத்தின் முகத்திரையை, மக்கள் சர்வாதிகாரம் மட்டுமே கிழித்தெறிய முடியும்.

ஒற்றுமை கொண்டு கிளர்ந்தெழுகின்ற மக்கள் சக்தியால் மட்டுமே மாற்றத்தை சாத்தியப்படுத்த இயலும்.அவ்வாறு நாம் ஒன்று சேர்ந்துவிடக் கூடாதென்பதற்காகவே இங்கே சாதிகளும், மதங்களும், கட்சிகளும், கடவுள்களும் நிறுவப்பட்டிருக்கின்றன.

குமரி முனையில் ஒருவனது முதுகில் அநீதியான முறையில் சவுக்கடி வீசப்பட்டால், அது சென்னையிலிருக்கும் தமிழனின் ரத்தத்தை கொதிக்கச் செய்யும் வண்ணம் ஒற்றுமை வளரவேண்டும். கூடங்குளம் அணு உலை அந்தப் பகுதியின் பிரச்சனை அல்ல ; அது மாநிலம் தழுவிய மரண உலை என்பதை உணர வேண்டும்.

சுனாமி வராது,பூகம்பம் தோன்றாது & மிகவும் பாதுகாப்பான பகுதியில் தான் அணு உலை நிறுவப்பட்டிருக்கிறது என்று மத்திய மாநில அரசுகள் சொன்ன பொய்களை இயற்கை தனது நிலநடுக்க ஒத்திகை மூலம் நிர்வாணமாக்கிவிட்டது.இனியும் கூட விழித்தெழாவிட்டால், இந்த அநீதியான சமூக அமைப்பு பற்றிய விழிப்புணர்வு பெறாவிட்டால், நூற்றிஇருபது கோடி மக்களும் மீண்டும் அடிமைகளாவதைத் தடுக்க முடியாது.முன்பு கல்வியறிவில்லாத மக்கள் கூட்டம் சிக்கியிருந்த அறியாமை ஒருவகை என்றால்,இப்போதைய படித்த தலைமுறையை பீடித்திருக்கும் அறியாமை வேறு வகையாக இருக்கிறது.ஆய்வுப் பார்வை எதுவுமின்றி அரைத்துக் குடித்த படிப்பறிவின் முன்பாக பணம் மட்டுமே பெருங்கனவாக,எட்ட வேண்டிய இலக்காக அமைந்து விட்டது தான் அறியாமையின் உச்சக்கட்டம்.எனவே தான் எது நடந்தாலும் அது எனக்கான துயரமில்லை என்கிற மனோநிலை பெருகிவிட்டது.

ஆற்று வெள்ளத்தில் மூழ்கிக் கொண்டிருக்கும் தாயோ,தந்தையோ,தான் செத்தாலும் பரவாயில்லை என் பிள்ளை பிழைத்திருக்கட்டும் என்று குழந்தையை கரையில் வீசிக் காப்பாற்றுவது பாசத்தினால் விளைந்த ஈகம்.

என் பிள்ளைக்கு வேலை கிடைத்துவிட்டது.அணு உலை திறந்தால் தான் அவன் வேலைக்குப் போக முடியும். ஊரே செத்தாலும் பரவாயில்லை என்பது மானுடத்திற்கே இழைக்கும் துரோகம்.

மாநிலம் முழுவதும் மின்சாரம் இல்லை.மாணவர்கள் படிக்க முடியவில்லை. தொழில் செய்ய முடியவில்லை. அணு உலை திறந்தால் தான் மின்சாரம் கிடைக்கும் என்று பேசுவது நீங்கள் திருநீறு பூசவேண்டும் என்பதற்காக பல்லாயிரக் கணக்கான மக்களின் உடல்களை எரித்து அந்த எலும்புகளிலிருந்து சாம்பல் எடுப்பது போன்றது.

முதலாளித்துவ சனநாயத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் இருப்பவர்கள் அவிழ்த்துவிடும் எண்ணற்றக் கட்டுக் கதைகளை நம்புகிறவர்கள், எளிதாக புரிந்து கொள்ளும் வண்ணம், மத்திய அரசு வெளிப்படையாக பல சட்டங்களை இயற்றிய பிறகும் கூட தேசப்பற்றாளர்கள் தமது அறிவுக் கண்களை இறுக மூடிக்கொண்டு, பாரதமாதாவின் தரிசனத்தில் திளைப்பது தான் வியப்பு.

அவர்கள் யாருக்கும் அடிமையாக இருக்கத் தயார் என்று சாசனத்தில் முத்திரையை பதித்துவிட்டு,நுகத்தடியை தாமே முன் வந்து கழுத்தில் மாட்டிக் கொண்ட மாடுகளாக தலைகுனிந்தே நிற்கிறார்கள்.

மனிதவளத்திற்கும் இயற்கை வளத்திற்கும் எந்தக் குறையுமில்லாத நாட்டில் எதனால் ஏற்பட்டது வறுமை?பட்டினிச் சாவுகளும்,தற்கொலைகளும் ஏன் நிகழ்கின்றன? ஐநா கணக்கெடுப்பு, இந்தியாவில் 89 சதவீதம் மக்கள் பசி, பட்டினியோடு இருக்கிறார்கள் என்று கூறுகிறது.

“என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்?

ஏன் கைகள் ஏந்த வேண்டும் அயல்நாட்டில்?”

என்று கைகளை நீட்டி விரித்து இனி பாட முடியாது.இந்தத் திருநாட்டின் எல்லா வளங்களும் அயல்நாட்டான் கையில் இருக்கிறது.அதற்கு ‘கை’ கொடுத்த ‘கை’யாக ஆளும் காங்கிரஸ் கட்சியின் தலைமையும், அந்தத் தலைமை விரல் நீட்டினால் மட்டுமே அசைகிற பிரதமரும் இருக்கிறார்கள்.

மன்மோகன்சிங் அவர்களை இயக்குவது அம்மையார் சோனியா காந்தி என்பது எல்லோருக்கும் தெரியும்.வாக்களித்த நமக்கு அந்த உண்மையை தெரிந்து கொள்ளும் உரிமை வழங்கப்பட்டிருக்கிறது. மன்மோகன்சிங் மிகவும் வெளிப்படையாக தன் அடிமைநிலையை காட்டிக் கொள்ளத் தயங்குவதே இல்லை.அதில் ஒளிவுமறைவு இல்லை.ஆனால் இந்தியர்களுக்காக வாழ்வை அர்ப்பணித்திருக்கும் தியாகத் திருவிளக்கை இயக்குவது யார்?அது மிக மிக ரகசியமானது.அந்தரங்கமானது.அது தான் வல்லரசுகளின் வலைப் பின்னல்.இந்த நாட்டில் இயற்றப்படுகிற சட்டங்கள், நிறைவேற்றப்படுகிற திட்டங்களை கூர்ந்து கவனித்தால் இரும்புத்திரைக்குப் பின்னாலிருக்கும் அந்த உண்மைகளும் கூட நமக்குப் புலப்படும்.

இந்தியா ஏழை நாடாக இருந்தது.இனி ஏழை நாடாக இருக்காது!இந்த நாடு இருக்கும். ஏழைகள் இருக்க மாட்டார்கள்! எப்படி? ஏழ்மை ஒழிந்துவிட்டதா?என்று வியப்படைய வேண்டாம் ஏழைகளை முற்றிலுமாக ஒழித்துவிட முடிவு செய்து விட்டது, மத்திய அரசு.வறுமைக் கோட்டுக்குக் கீழே இனி யாரும் தொங்கிக் கொண்டிருக்கத் தேவையில்லை.நம்புங்கள் நீங்கள் பணக்காரர்களாகிவிட்டீர்கள்!

கிராமப்புறத்தில் வசிப்பவர்கள் நாள் ஒன்றுக்கு 22.42 ரூபாய் (மாதம் ரூ.670)செலவு செய்தால் அவர்கள் ஏழைகளில்லை.

நகர்ப்புறத்தில் ஒருவர் நாளன்றுக்கு 28.65 ரூபாய்(மாதம் 860 ரூபாய்) செலவு செய்தால் அவர்கள் பணம் படைத்தவர்கள்.

ஏழைகள் ஒழிந்துவிட்டார்கள்!மிச்சம் இருப்பவர்களை நாட்டின் நலத்திட்டங்கள் ஒழிக்கும்.

தமிழகத்தின் 70 விழுக்காடு மீன் பிடித் தொழில் து£த்துக்குடி, நெல்லை, கன்னியாக்குமரி மாவட்டங்களை நம்பியிருக்கிறது. கூடங்குளம் அணு உலை மீனவர் வாழ்வுக்கு உலை. சிங்களக்கடற்படையிடமும், சீன உளவாளி களிடமும் தப்பிய மீனவர்களும் இனி இருக்கமாட்டார்கள்.இருந்தால் மீனவர்களாக இருக்க மாட்டார்கள்.

சேற்றில் காலூன்றி நாற்று நட்ட விவசாயிகள் சிமிண்ட் கலவை சுமக்கும் சித்தாள்களாக மாறிவிட்டார்கள்.1997 முதல் இன்று வரை 2 லட்சத்து 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தேசிய குற்றப்பிரிவு ஆவணக் காப்பகம் சொல்கிறது. (அரசுத் தரப்பு எப்போதும் சாவு எண்ணிக்கையை நான்கில் ஒரு மடங்குதான் பதிவு செய்யும்.)

கடந்த ஐந்தாண்டுகளில் இரண்டு லட்சம் ஹெக்டேர் நிலங்களில் அரிசி உற்பத்தி அடியோடு நிறுத்தப்பட்டுவிட்டது. அரிசியும் கோதுமையும் இறக்குமதி செய்யப்படுவதால் உள்நாட்டுச் சந்தை கேள்விக்குறியாகிவிட்டது.எனவே நாம் எதற்காக உற்பத்தி செய்யவேண்டுமென்று விவசாயிகள் முடிவெடுத்துவிட்டார்கள் தேசிய நீர்க்கொள்கையை கேட்டுத் திகைத்த பலர் இனி வேளாண்மை செய்வதில்லை என்று சத்தியம் செய்திருக்கிறார்கள். மீனவர்கள் மற்றும் உழவர்களின் கதையை முடித்தாயிற்று.வேறு யார் சொந்தக்காலில் நிற்பது?

சிறுவியாபாரிகளா?

இருக்கவே இருக்கிறது! உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம்!

நாட்டு மக்கள் நலனில் அதீத அக்கறைக் கொண்டிருக்கும் மத்திய அரசு,அணு உலைகளால் மக்களுக்கு ஆபத்தில்லை,அணு உலைகள் மிகவும் பாதுகாப்பானவை.ஆனால் சாலையோர தேநீர்க்கடைகள், உணவகங்கள், மளிகைக் கடைகளால் தான் பாதுகாப்பே இல்லை. ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கான மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள்.அடுத்த தேர்தலில் வாக்களிக்க வாக்காளர்கள்உயிரோடு இருக்க வேண்டும் என்பதால் அவர்களை காப்பாற்றி ஆரோக்யமாக வாழ வைக்கும் நோக்கத்தோடு & 2006 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தை உடனடியாக அதிரடியாக நடைமுறைப்படுத்தும் முடிவுக்கு வந்து விட்டது.சோடா மற்றும் உள்ளூர் பானங்கள் தயாரிக்கும் தொழில் செய்த எண்ணற்ற குடும்பங்களை பெப்ஸி,கோக் நிறுவனங்களின் வருகை நிலைகுலையச் செய்தது போல &

இந்தியா முழுவதும் உள்ள ஏழு கோடி வியாபாரிகளின் வாழ்க்கையில், அவர்களை சார்ந்து தொழில் செய்கிற 21 கோடி மக்களின் உணவில் மண் அள்ளிப் போடப் போகிறது இந்தச் சட்டம்.

உணவும்,உணவுப் பொருட்களும் தரமாகவும், பாதுகாப்பானதாகவும் இருக்க வேண்டாம் என்று யாரும் சொல்ல மாட்டார்கள். அப்படி தரமாக இல்லாத பொருட்களை நாடிச் செல்லவும் மாட்டார்கள். பிறருடைய வயிற்றுவலியை பற்றி கவலைப்படத் தெரியாதவனுக்கும் தனக்கு வயிற்று வலி வந்து விடக்கூடாது என்ற அக்கறை இருக்கும் எனும் போது உற்பத்தியாகும் பொருட்களில் முதல் தரமானவற்றை ஏற்றுமதி செய்துவிட்டு சொந்தக் குடிமக்களுக்கு இரண்டாம்,மூன்றாம் தரப் பொருட்களே கிடைக்க வழி செய்யும் அரசு,தர நிர்ணயச் சட்டத்தை நிறைவேற்ற ஆணையிட்டு தமிழகத்துக்கு மட்டும் 560 அதிகாரிகளை நிர்ணயித்திருப்பதன் நோக்கம் & சிறு வணிகத்திலும் அந்நிய முதலீட்டை நிலை நிறுத்தும் முயற்சியின் மாற்று வடிவம் தான் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

இந்திய உணவுத் தொழில் மூலம் நடைபெறுகின்ற பதினைந்து லட்சம் கோடி வர்த்தக பலனைத் தமது எஜமானர்களான அந்நிய நிறுவனங்களுக்கு தாரை வார்த்துக் கொடுப்பது தான் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச்சட்டத்தின் முதன்மை குறிக்கோள்.

இனி முறுக்கு,கடலை மிட்டாய், போன்டா, பஜ்ஜியை கூட பன்னாட்டு நிறுவனங்கள் தான் தயாரிக்க முடியும் என்ற நிலை உருவாகலாம்.இந்தச் சட்டத்தின் மூலம் அரசு கொண்டு வருகிற கட்டுப்பாடுகள் அப்படி.இதனால் தமிழகத்தில் 20 லட்சம் வியாபாரிகள் நேரடியாக பாதிப்புக் குள்ளாகிறார்கள். அரசு சொல்கிற பன்னிரண்டு சாத்தியமற்ற நிபந்தனைகளும் மீறப்படுவது சோதனையின்போது கண்டறியப்பட்டால் & 5 லட்ச ரூபாய் அபராதமும் ஆறு மாத சிறைத் தண்டனையும் விதிக்கப்படும்.சென்னையில் ஏறத்தாழ ஆறாயிரம் தேநீர்க்கடைகள் உள்ளன.தேநீர்ச் சோதனை,உரிமையாளருக்கு சோதனையாக அமைந்துவிட்டால் 5 லட்ச ரூபாய் அபராதம் கட்ட ஆயுள் முழுவதும் அவர் தனது வாடிக்கையாளர்களை வதைக்க வேண்டும். சாலையோரம் இட்லி விற்கும் ஏழைப் பெண்கள்,மாலை நேரத்தில் வடை,பஜ்ஜி விற்கும் வயதான மூதாட்டிகள்,பள்ளி வாசலில் பிள்ளைகளுக்காக கடை வைத்திருக்கும் பாட்டிகள் இனி என்ன தொழில் செய்து பிழைப்பார்கள்? பிச்சையெடுத்து வாழ்தல் இழிவென்று கருதியே எம்மக்கள் கைக்கும் வாய்க்குமே எட்டாத வாழ்க்கையை மானத்தோடு வாழ முயல்கிறார்கள்.இந்திராவின் அவசரகாலச் சட்டத்துக்கு சற்றும் குறைவில்லாத ஒரு சட்டத்தை அவசரமாக நடைமுறைப்படுத்தி, பட்டினிச் சாவை அதிகரிக்க வழி செய்வதற்குத் தான் பாராளுமன்றமா?

உறுதி எடுத்துக் கொள்ளுங்கள்.

வெள்ளைச் சட்டையின் மீது விருப்பம் அதிகமிருந்தாலும் அதை அணிவதை அசிங்கமாக உணரச் செய்துவிட்ட அரசியல்வாதிகளுக்கும்,பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக ஆக்குகிற, ஏழைகளை மேலும் ஏழைகளாக்கி இல்லாமையும் கல்லாமையும் எங்கும் நிறையச் செய்கிற முதலாளித்துவ சனநாயகத்தின் தரகர்களுக்கும் நாம் ஒரு போதும் பதிலடி கொடுக்கத் தயங்கக் கூடாது.தவறினால் விரைவில் நாமும் முள்வேலிக் கம்பிகளுக்குள் நிற்கும் நிலை உருவாகும்.

Pin It