"எம்மாஞ் சீக்கிரம் காலையில போக முடியுமோ, போயிடுங்க. அப்பதான் துருகத்துல முள்ளங்கி விக்க முடியும். வேற யாராவது காய்காரன் உங்களுக்கு முன்னாடி ஊருக்குள்ள நுழைஞ்சிட்டான்னா உங்ககிட்ட யாரும் வாங்க மாட்டாங்க. அப்புறம் கஷ்டமாயிடும்' என்று ஆறுமுகம் சொன்னதை ஞாபகப்படுத்தினான், வெங்கடேசன். மலருக்கு கோபம் கோபமாய் வந்தது. “நேத்து சாயந்தரமே முள்ளங்கிய பிடுங்கி கத்தகட்டி வச்சிருந்தா இந்நேரம் அங்க போயிருக்கலாம். மனுஷன் போனா போன எடம்னு கெடந்தா நான் ஒண்டிக்காரி வேற என்ன செய்யமுடியும்?'' என்றாள். “மிளகாய் பூவெடுக்கிற சமயம். பூச்சி இறங்கி சிட்டை கட்டியதுபோல செடிங்க நிக்குது. மருந்துவாங்க கண்ணமங்கலம் போனா கடக்கார பையன் ஆளு தெரியாம கடன்தர முடியாதுன்னுட்டான். கடைமொதலாளி வெளியூருக்கு போயிருக்காரு வர்ற திங்கட்கிழமை வாங்கன்னு சொல்லிட்டு வெறப்பா டி.வி.பாக்குறான். அதே யோசனையா வீட்டுக்கு வரும்போது வண்ணாங்குளம் சீனு கடையில டீ குடிக்க உக்காந்தேன். இது மறந்துபோச்சு. இப்ப என்ன? எட்டு மணிக்கெல்லாம் போயிறலாம்'' என்றான்.

       மிளகாய்த் தோட்டத்தில் இறங்குகிற போது பனியின் ஈரம்பட்டு கெண்டைக் கால்வரை சிலிர்த்தது. புடவையை உள்ளே சுருட்டி பாவாடையை லேசாய் மடித்து இடுப்பில் செருகுகிறபோது இளவெயிலில், மஞ்சள் பூசிய கால்கள் மினுமினுத்தன. புது மனைவியின் மெருகு, பனி ஈரத்தில் ஜொலித்தது. கல்யாணமாகி இரண்டு மாதம் தான் ஆகிறது. வீட்டுக்கு மருமகளாய் வந்து, தக்காளி, மிளகாய், முள்ளங்கி என்று ஒரு துண்டில் தோட்டக்கால் பயிராய் நடவேணும் என்று மலர்தான் அடம்பிடித்தாள். ரெண்டேகால் ஏக்கர் வெங்கடேசனின் அப்பா தணிகாசலம் சம்பாதித்தது. கிணறு வெட்டும் போது தவறி கிணற்றில் விழுந்தவரை பிணமாகத்தான் தூக்கி வந்தார்கள். அப்போது ஏழாவது படித்துக் கொண்டிருந்தான் வெங்கடேசன். "கழனியில் இவ்வளவு வேலையை விட்டு பள்ளிக்கூடம் எங்கடா போகப்போற?' என்ற அம்மாவோடு களை கொத்த ஆரம்பித்தவன், அடுத்தடுத்து ஒண்டியாளாக நிலத்தில் மல்லுகட்டிக் கொண்டிருந்தான். கிணற்றில் தண்ணீர் இருந்தால் ஒரு ஏக்கர் போல நெல் நடுவார்கள். மற்றதெல்லாம் கடலை, கம்பு, சோளம் விதைப்புதான். பொண்ணுகளோடு அங்க பேசுறான் இங்க பேசுறான்னு பேச்சு வந்த கையோடு பெண் தேடினாள் வெங்கடேசனின் அம்மா யசோதா. பக்கத்து ஊரான புதுப்பாளையத்தில் அமைந்தது. கஷ்டவாளி குடும்பம். பொறுப்பான பெண் என்று சொல்லச்சொல்ல மனசு குளிர்ந்தாள் யசோதா. கழனிக்காட்டில் வேலை செய்தே முதுகு வளைந்துபோனது. குனிந்த மேனியாகவே ஆகிவிட்டாள். மருமகளிடம் கழனி வேலையை விட்டு விட்டு வீடே கதியாகிப் போனாள் யசோதா.

       தோட்டக்கால் பயிர் பண்ணினால் செலவுக்கு காசு ஆகும் என்று யோசனை சொன்னது சரிதான் போல. ஒரு மாதத்தில் முள்ளங்கி திரண்டு வந்தது. நேற்று தண்ணீர் கட்டிய ஈரம் நசநசத்தது. முள்ளங்கியில் செம்மண்சேறு ஒட்டிக்கொண்டு வந்தது. ஐபிரேடு முள்ளங்கி ஒவ்வொன்னும் கைசோடு இருந்தது. பிடுங்கி, பிடுங்கி கைமடிப்பில் ஏந்திக்கொண்டுவந்து வெங்கடேசனிடம் தரும்போது அவள் முகத்தில் பூரிப்பு மின்னியது. முதன் முதலில் காணுகிற வெள்ளாமை. நிலத்தில் இவள் கால்வைத்த நேரம் தாயாய் கனிந்ததாய் வெங்கடேசன் நினைத்தான். ஆனால் இந்த பூச்சிதான் மிளகாய்க்கு எப்படி வந்ததோ தெரியவில்லை. சிட்டங்கட்டியது போல ஒன்றிரண்டு செடிகள் நின்றன. ஒருவாரத்தில் தோட்டமே அப்படி ஆகிவிடும் என்று சொன்னார்கள். முள்ளங்கி காசில்தான் மருந்து வாங்கியாகணும். தக்காளி விதை, முள்ளங்கி விதை, மிளகாய் விதையெல்லாம் தோட்டக்கலை ஆபீஸில் வாங்கியது. அதுவே ஆயிரத்து முன்னூறு ரூபாய் ஆகிவிட்டது. மிளகாய், தக்காளி விதைகள் கழனியில் விட்டு நாற்றாக்கி நட்டதெல்லாம் அந்தக் காலம். அதற்கென்று ரப்பர் சீட்டு வந்துவிட்டது. குழியில் மண் நிரப்பி ஒன்றொன்றாய் நட்ட பதத்தில் நாற்று நடவேணும். இடுப்பளவு மிளகாய்ச் செடி வளரும் என்றார்கள். ஆனால் பூச்சிதான் என்ன செய்யும் என்று தெரியவில்லை.

       பனி ஈரத்தில் முள்ளங்கிக் கீரை விரைத்துக்கொண்டு நின்றது. பிடுங்கிப் பிடுங்கி சேறும் சகதியுமாய் கைமடிப்பில் ஏந்திக்கொண்டு வந்து வரப்பில் இருந்த வெங்கடேசனிடம் தந்தாள். அப்படியே எடுத்துப்போய் தண்ணீர்த்தெட்டியில் போட்டு அலசினான். பளிங்குபோல் இருந்த தண்ணீர் செம்மண் நிறத்தில் கலங்கி கால்வாயில் வழிந்து ஓடியது. காலை கரண்ட் என்பதால் அலசுவதற்குத் தோதாய் இருந்தது. அலசி அலசி தண்ணீர்த் தொட்டி சுவற்றில் வைத்தான். துணி துவைக்க வசதியாய் பெரிதான தொட்டி அது. மாட்டுக்குத் தண்ணீர் காட்ட, மொண்டு குளிக்க, ஒதுங்கிவிட்டு வந்தால் கால் கழுவ என்று அந்தத்தொட்டி எப்போதும் சலசலத்துக் கொண்டே இருக்கும். இளம் வெயிலில் முள்ளங்கி மின்னியது. ஒவ்வொன்றும் கைசோடு இருந்தது. சிறுசிறு முடிகள் போல அங்கங்கு வேர்கள் இருந்தன. நல்ல இளம் முள்ளங்கிகள் ஒன்றிரண்டு நாட்கள் போனால் தக்கையோடிப் போகலாம். முன்னும் பின்னுமாக நட்டதனால் தேறிய முள்ளங்கியாய்ப் பார்த்துப் பார்த்துப் பிடுங்கினாள் மலர்.

       பால்கார கணேசன் சைக்கிளில் வரும் சத்தம் கேட்டவுடன் கன்றுக்குட்டிக்கு காது விடைத்தது. தாயை அழைத்தவுடன் கட்டுத் தறியில் இருந்த பசுவும் அப்படியும் இப்படியுமாக நடந்தது. கொட்டகையில் இருந்த மாட்டை மாமரத்தின் அடியில் கட்டியிருந்தான் வெங்கடேசன். காலையில் கஞ்சி காய்ச்சக்கூட நேரம் இல்லை. பொட்டு தவிடு மட்டுமே கலக்கிக் காட்டினான். மோந்து மோந்து பார்த்துவிட்டு போனால் போகிறது என்று குடித்தது. பிறகு இழுந்து வந்து கட்டுவதற்கும் பால்காரன் வருவதற்கும் சரியாக இருந்தது. அதற்குள் முள்ளங்கிகளை கத்தை கட்டி முடித்திருந்தாள் மலர். ஐந்து ஐந்து முள்ளங்கியாய் வைத்திருந்தாள். பாலைக் கறந்து கொண்டே “எந்த ஊருக்குப் போகுது முள்ளங்கி'' என்றாள் கணேசன். “துருகம்'' என்றாள் மலர்.

       “வேலூர் ஆரணி டவுனுங்க பக்கம் கொண்டு போயி, மொத்த யாவாரிங்க கிட்ட குடுக்கலாமே!''.

       “குடுக்கலாம்னா, அம்மாந் தொலவு வண்டி பிடிச்சிப்போயி என்னத்த கிடைக்கப் போவுது? நாமளா கொண்டு போனா படிக்குப் பாதியா கேப்பானுங்க. கட்டுப்படியாவாது''.

       “மேல் நகருக்குப் போங்களேன். அந்தப் பக்கம் காய்காரங்க அதிகமா வரமாட்டாங்க'' என்றான் கணேசன். “போனா போச்சு'' என்றான் வெங்கடேசன். பால்கறந்து போவதற்கும் முள்ளங்கியை கட்டி முடிப்பதற்கும் சரியாக இருந்தது.

       இப்படி ஆகுமென்று எதிர்ப்பார்க்க வில்லை. ஒரே சுமையாகக் கட்டி வெங்கடேசன் மட்டும் சைக்கிளில் எடுத்துப் போய் விற்பதாய் இருந்தான். இப்ப என்னடா வென்றால் கன சுமையாகவே ரெண்டு ஆகிவிட்டது. ஒவ்வொன்னிலும் இருபது கத்தைக்கு மேலிருக்கும். ஒன்றை விற்றுவிட்டு வந்து ரெண்டாவது நடையாக இத எடுத்துப்போகிறேன் என்றவனிடம், மலர் ஒரு யோசனை சொன்னாள். “நீ வேணும்னா மேல் நகர்போ. நான் துருகத்துக்கு தலை சுமையாகவே தூக்கிப்போறேன். எங்கூட படிச்ச புள்ளங்க சிலது இருக்கு. விக்கிறதுக்கும் தோதா இருக்கும்'' என்றாள். “சரியான யோசனைதான். நாவேண்ணா துரகத்தாண்ட கொண்டுவந்து விட்டு வரேன்; அதன் பிறகு வந்து இத எடுத்துப்போறேன்'' என்றான்.

       மனைவியை முன்னாடி அமர்த்திப் போகிறபோது சுகமாகத்தான் இருக்கிறது. பின்னால் முள்ளங்கி வாசம் முன்னால் புதுப்பெண்ணின் வாசம். கைகளுக்குள் இருக்கிற மனைவி இப்படி பொருந்திப் போவாள் என்று வெங்கடேசன் நினைத்த தில்லை. முன்னால் அமர்ந்திருக்கிறது வாழ்க்கை. பின்னால் இருக்கிறது வருமானம். பயணம் இப்படித்தான் இருக்கும்போல. மின்கம்பிகளில் தத்தித்தத்தி உட்கார்ந்து விளையாடும் சிட்டுகளையே வேடிக்கைப் பார்த்துக் கொண்டு வந்தாள் மலர். கீரிப்பிள்ளை ஒன்று பாதையைக் கடந்து போகிறபோது, இவர்கள் வருவதை ஒருகணம் நின்று பார்த்துவிட்டு பக்கத்து வயலில் நுழைந்தது. பின்னாலேயே இன்னொரு கீரிப்பிள்ளை இவர்களைச் சட்டை செய்யாமல் துரத்திக்கொண்டு போனது. கோடாக நெற்கதிர் அசைந்ததைப் பார்த்து சிரித்துக் கொண்டாள். மேடாக இருந்ததால் வெங்கடேசனுக்குக் கொஞ்சம் மூச்சுவாங்கியது. கொஞ்ச தூரம் இறங்கித் தள்ளிக்கொண்டுபோய் மறுபடியும் ஏறிக் கொண்டனர்.

       ஊரின் எல்லையிலேயே தலையில் தூக்கி விட்டுவிட்டு வெங்கடேசன் திரும்பியதும், முதலில் எந்தத் தெருவிற்குப் போவது என்று சிறிது யோசனையாக இருந்தது. யாராவது நமக்குமுன் வந்திருப் பார்களோ, அப்படி வந்திருந்தால் எந்தத் தெருவில் இருக்கிறார்களோ அதை விட்டுவிட்டு வேறு தெருவிற்குப் போகலாம் என்று தோன்றியது. துணி துவைக்க குளத்திற்குப் போகும் பெண் எதிர்ப்பட, அவளிடம் கேட்டபோது அப்படியாரும் வரவில்லை என்று சொன்னது ஆறுதலாக இருந்தது. குளத்தில் இறங்கி முகம் கழுவிக் கொண்டு போனால், கொஞ்சம் நல்லாயிருக்குமே என்று அந்தப் பெண்ணின் உதவியோடு சுமையை இறக்கி முகம் கழுவிக்கொண்டாள். மறுபடியும் சுமை தூக்கி விடும்போது “திரும்பி வருகையில் உனக்கு ஒரு கத்தை தந்துவிட்டுப் போறேம்மா'' என்றதற்கு அவள் சிரித்தாள். “ஐயோ, பொய் சொல்லலம்மா கண்டிப்பா தர்ரேன்'' என்று ஊரைப்பார்த்து நடந்தாள்.

       நீளநீளமாய் ரெண்டே ரெண்டு தெரு தான். நூற்றைம்பது வீடுகள் கொண்ட ஊர். எல்லாம் தறிநெய்கிற குடும்பங்கள். சதுரகட்டு ஓட்டு வீடுகள். காலையில் தெரு முழுக்க அல்லு பிடித்துக் கொண்டிருப்பார்கள். வண்ணவண்ணமாய் நூல்கள் காலை வெயிலில் உலரும். இழுத்துக் கட்டிவிட்டு சிறுசிறு கோலால் தட்டி தட்டி இழையிழையாய் சிக்கு இல்லாமல் பிரிக்கிற நேரத்தில் தெருவில் வண்டி போகக்கூட வழி இருக்காது. சில வீடுகளில் பட்டுத்தறி, சிலவற்றில் மிஷின் தறி. மற்றதெல்லாம் கைத்தறிதான். ஒவ்வொரு வீட்டின் முன்பும் நின்று பின்வாசல்வரை கேட்கும்படியாகக் கூவினால் தான் கதைக்கு ஆகும். கல்யாணம் கட்டி தாலி கூட பிரித்துக்கட்டாமல் இருக்கிற கோலத்தோடு இப்படிக் கூவுவது சிலருக்கு விநோதமாகப்பட்டதோ என்னமோ அவளையே முறைத்து முறைத்துப் பார்த்தார்கள். பஜனை கோயில் தெருவில் நடக்கிறபோது கொஞ்சம் கூச்சம் பிடித்துக் கொண்டது. உடன் படித்த பிள்ளைகள் என்றாலும் என்ன நினைப்பார்களோ என்று தோன்றியது.

கீச்சு குரலில் “முள்ளங்கி'' “முள்ளங்கி'' என்றாள். வாசல்வரை வந்து பார்த்துவிட்டு "முள்ளங்கியா' என்று சிலர் உள்ளே போனார்கள். பின்வாசலில் இருந்தே எட்டிப் பார்த்துவிட்டு உதட்டைப் பிதுக்கினார்கள் சிலர். திண்ணையில் இருந்த பெண்களை நெருங்கினால் “ஏண்டியம்மா வேறெதாச்சும் காய் கொண்டு வரக்கூடாதா?'' என்றார்கள். உடன் படித்த பெண்கள் யாராவது தென்பட மாட்டார்களா என்று தோன்றியது. யாரையாவது கேட்கலாம் என்றால் என்னத்துக்கு முள்ளங்கி விக்கவா என்ற நினைப்பு வந்து தயங்கியது. ஆசையாய் இந்த ஊருக்கு வந்ததுதான். அவர்களாக ஆர்வப்பட்டு வந்து நல்லவார்த்தை பேசினால் உண்டு. இல்லையென்றால் நல்லாவா இருக்கும்? தெருக்கோடிவரை கூவிக்கொண்டே வந்தாயிற்று ஒருத்தரும் என்னவென்று சீந்தவில்லை. சும்மாடு கொஞ்சம் ஒதுங்கி முள்ளங்கி அழுத்தியது. தூக்கும்போது திட்டமாய் இருந்த சுமை தற்போது கொஞ்சம் கனக்கிற மாதிரி தோன்றியது. ஏதேனும் திண்ணையில் இறக்கி அங்கிருந்தவாறே குரல் கொடுக்கலாம் என்று திண்ணையைத் தேடினாள். திருப்பத்தில் ஒரு கிழவி இவள் வருவதையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

       அப்பாடா மொத போனி கெடச்சிருச்சு. தெலுங்கு ஜாடர் பொம்பளைங்ககிட்ட ஒரு பழக்கம். ஒருத்தர் வாங்கினா போதும் அப்புறம் கூட்டம் சேர்ந்திடும். இந்த பாட்டிகிட்ட கத்த ஐந்து ரூபா சொல்லி நாலு ரூபாய்க்கு தரலாம். பக்கத்து வீட்டு பொம்பளைகிட்ட கூப்பிட்டு சொல்லும் என்று நினைத்தபடி நெருங்கினாள். "எவ்வளடியம்மா கத்த' என்றதற்கு "ஐந்து ரூபாய்' என்றாள். "முள்ளங்கி கெட்டகேட்டுக்கு ஐந்து ரூபாயா, ஒரு ரூபாய்க்கு தருவியா' என்றாள். சுருக்கென்று கோபம்தான் வந்தது. இருந்தாலும் என்ன செய்ய. "நாலு ரூபான்னா தரேன் பாட்டி' என்றாள்.

       இந்த பேரம் நடந்து கொண்டிருக்கும் போது பக்கத்து வீட்டிலிருந்து நிறைமாசக் காரி ஒருத்தி வந்தாள். பூசினால் போல உடம்பு இருந்ததால் சட்டென அடையாளம் தெரியவில்லை. ஆமாம் அவ, கலைவாணியேதான். இந்த பேரம் படிவதாய்த் தெரியவில்லை. விடு கழுத, கூட படிச்சவ கெடச்சுட்டா. அவள புடிப்போம் என்று, “கலைவாணி நல்லாயிருக்கியா?'' என்றாள், ஆசையாக. அந்தப் பெண் உற்றுப் பார்த்துவிட்டு "உம் உம்' என்று கூம்பின முகம் கொஞ்சமும் மாறாமல் வீட்டுக்குள் போகத் திரும்பினாள். “என்ன தெரியலயா கலை? நான்தான் புதுப்பாளையம் மலர்'' என்றாள். “தெரியுது'' என்று குப்பைத் தொட்டியில் குப்பை கொட்ட எடுத்து வந்தவள், தூரத்திலிருந்தே கொட்டியபடி சொன்னாள்.

       கொஞ்சம் வழுக்கியது என்றாலும் பிடிவிடாமல் “முள்ளங்கி வாங்கிக் கோயேன்'' என்றவளிடம் “வேணா வேணா சளி பிடிக்கும்'' என்றாள். “கீரை சாப்பிடு கலை, நீர் இறங்கும்'' என்றதற்கு, “அதுக்கெல்லாம் டாப்லெட் இருக்கு'' என்று திரும்பிக்கூட பார்க்காமல் உள்ளே போய்விட்டாள். சை என்றானது. இந்தப்பக்கம் திரும்பினாள். அந்தப் பாட்டியைக் கூட காணோம். மறுபடியும் கூவிக்கொண்டே பள்ளத் தெருவில் நுழைந்தாள். எடக்கு பண்ணினார்களே தவிர ஒருத்தரும் வாங்க வில்லை. “நாளைக்கு அவரைக்கா எடுத்துவாம்மா'' என்றார்கள். “மார்கழி பனியில் வேற காயே கெடைக்கலாயா'' என்றார்கள். “முள்ளங்கி ஐந்து ரூபா டாக்டர் பீஸ் அம்பது ரூபாயா'' என்றார்கள். இன்னொரு ரவுண்டு வருவோம். மனசு மாறாதா என்றபடி பஜனை கோயில் தெருவிற்கே மறுபடி போனாள். கத்தி கத்தி தொண்டை வலித்தது. கீச்சுகுரல் கொஞ்சம் உடைந்து கட்டையாய் சிதறியது. பளுவேறு முன்னைவிட அதிகமாக அழுத்தியது. சிமெண்ட் ரோட்டில் வெறும் காலில் சிறுசிறு கற்கள் தாக்கின. மறுபடியும் அதே திருப்பம். அந்தக் கிழவியிடம் ரெண்டு ரூபாய்க்காவது விற்றுவிட வேண்டும். போனி ஆனால்தானே. அதற்கும் வழியில்லைன்னா என்ன பண்றது.

       திருப்பத்தில் திருப்பியபோது சட்டென மனசு சுளுக்கியது. அங்கு ஒருவன் கூடையில் அவரைக்காய் விற்றுக் கொண்டிருந்தான். அவனிடமும் கிழவி பேரம் பேசிக் கொண்டிருந்தது. கிட்ட நெருங்கி “பாட்டி முள்ளங்கி கேட்டியே ரெண்டு ரூபா கத்த வாங்கிக்கிறியா'' என்றாள். அவனோ பிலுபிலு என்று பிடித்துக் கொண்டான். “வியாபாரம் பண்ற எடத்துல பொழப்ப கெடுக்கிறியே நீயெல்லாம் பொம்பளையா, வயித்துக்கு என்ன தின்ற?'' என்று ஏகமாய் பேச, இவள் எவ்வளவோ கெஞ்சினாள். அந்தநேரம் பார்த்து கலைவாணி வெளியில் வந்து நின்று கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். உடம்பெல்லாம் சிவுக் கென்றது. ஏளனமாய் அவள் பார்ப்பது போலத் தோன்றியது. விடுவிடு என்று நடந்தாள்.

       குளத்துப்படிக்கட்டில் துணி துவைத்துக் கொண்டிருந்தாள் அந்தப் பெண். நெருங்கி கொஞ்ச நேரம் நின்றாள். சுமை பிரிக்காமலேயே அப்படியே இருந்ததை அந்தப் பெண்ணும் கொஞ்ச நேரம் பார்த்து விட்டு, “என்ன, எறக்கணுமா'' என்றாள். “பரவாயில்ல, உனக்கு ஒரு கத்த வேணுமா'' என்றாள். “இந்த பனி நாள்ள சொம்மா குடுத்தா கூட எவ தின்னுவா, வேணாண்டியம்மா'' என்றதும், கண் கலங்கியது மலருக்கு. இன்னமும் இங்கு நிற்கக் கூடாதென்று குறுக்கு வழியாக கொல்லை மேட்டின் தடத்தில் ஊரைப் பார்த்து நடந்தாள்.

       தலைச்சுமையை என்ன செய்வது என்று தெரியவில்லை. போகிறவழியில் ஏதேனும் குட்டையாகப் பார்த்து போட்டு விட்டுப் போகலாமா என்றால் மனசு வரவில்லை. கழுத்து உடம்புக்குள் புதைந்து முதுகுத்தண்டெல்லாம் வலிக்க ஆரம்பித்து விட்டது. எப்படியும் ரெண்டு மைல் நடக்க வேணும். தூக்கிக் கொண்டு போய் கொட்டகையில் போட்டு வைத்தால் சாயந்தரமோ, நாளைக்கோ ஊர் மேல் போய் விக்கலாம். எப்படியாவது சுமந்து கொண்டு போகத்தான் வேண்டும். ரோட்டு வழி போயிருந்தால் ஒருவேளை வெங்கடேசன் வந்தாலும் வந்திருக்கக் கூடும். ஒருவேளை இல்லையென்றால் கூடுதலாக ஒருமைல் சுற்றிப் போகணும்.

       கருத்தான பொண்ணு என்று அம்மா சொல்லிச் சொல்லி வளர்த்தாள். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது பெரிய மனுஷி ஆகி, அத்தோடு பள்ளியைவிட்டு நிறுத்தி விட்டாள். நிலம் கிடையாது. அப்பா, மாட்டுத்தரகு என்று சந்தை சந்தையாய் சுற்றியதுதான் மிச்சம். அம்மாதான் எல்லாம். எங்கெங்கு வேலை கிடைக்கிறதோ, தாயும் பெண்ணும் ஓடுவார்கள். நெலம் நீச்சி இருக்கிற மாப்பிள்ளை என்று வெங்கடேசனுக்கு தலையாட்டியது அதனால் தான்.

       கழனி வேலையே சரியா இருக்கு. கூலிக்குப் போனா கையில் காசு கெடைக்கும். இந்த வேலைய யார் செய்யறது. செலவுக்கு ஆகட்டுமேன்னு காய் நடச்சொன்னது. விதைக்கே ஆயிரம் ஆச்சு. ரெண்டு முறை பூச்சி மருந்து அடிச்சாச்சு. களைவெட்டி ஒருமுறை ஒரம் வச்சாச்சு. வெள்ளாமை சரிதான். இத எப்படி காசாக்கிறது. வச்சிருக்கிற பொருள்னா பரவாயில்ல. ஒருமாச உழைப்பு. நாலு நாள் வச்சிருக்க முடியாது. கருப்பு மணியாக விதைகளை ஒவ்வொன்றாய் கரையில் குச்சியால் குத்தி நட்டது. ரெட்டைத் தளிர்விட்டு வெளியே வந்தபோது கரை அலைபுகாமல் தண்ணீரை வாய்க்காலில் இருந்து தெளித்தது. போகும்போது வரும் போதெல்லாம் கைக்களையாய் பிடுங்கிக் கொண்டே இருந்தது. மருந்தள்ளித் தூவியது. பூச்சி மருந்தடித்தது. இப்படியாய்ப் பார்த்த முதல் உழைப்பு வீணாய் தலையில் கனக்கிறது.

       குறுக்கு வழியென்று வந்தால் ஏகப்பட்ட வரப்புகள். ஒவ்வொரு வரப்பில் ஏறி இறக்கும் போதும் கண்ணில் மின்னலாய் பூச்சிகள் பறந்தன. துவரஞ்சாலைகள் பின்னிக் கொண்டு தலைச்சுமையை இழுத்தது. வெறுங்காலில் குரங்கு முள் பொத்துகிற போதெல்லாம் தரையிலேயே தேய்க்க வேண்டியதாயிற்று. நடக்க நடக்க போய்க் கொண்டே இருந்தது கொடி வழி. யாரோ ஒருசிலர் கொல்லைப்பக்கம் பாடு பிடித்துக் கொண்டு போய்க் கொண்டிருந்தனர். மற்றபடி அத்துவானக் கொல்லை வழி. தனியாளாய் போவதில் கொஞ்சம் அச்சமாகத் தான் இருக்கிறது. நுனாமரத்தின் காய்ந்த கிளையில் ஓணான் ஒன்று தலையைத் தூக்கித் தூக்கிப் பார்த்துக் கொண்டிருந்தது. செடிகளின் புதரருகில் போகிறபோது காடைக் குருவிகள் "புர்' என்று வேகமாக பறந்து போயின. தாகம் வறட்டியது. எங்காவது சுனை தென்பட்டால்கூட சுமையை இறக்க தூக்க என்று ஆள் வேணும். ஒரு முள்ளங்கியை இழுத்துக் கடிக்கலாம் என்றால், நாட்டு முள்ளங்கியை நசுக்கி உப்பு மிளகாய் வைத்துத் தேய்த்து கூழ்குடிக்கலாம். இதைத் தின்றால் ஒருமாதிரியாக இருக்கும்.

சும்மாடு ஒதுங்கி தலை அழுந்தியது. கழுத்து நரம்பு அழுத்த அழுத்த தோள்பட்டை பிய்ந்தது போன்ற வலி. இடுப்பு விட்டுப் போய்விடும் போல. கால்கள் பின்னப் பின்ன எங்கயாச்சும் விழுந்துவிடுவோமோ என்றாகியது. இதோ வந்துவிட்டோம். மூக்காலம் பாறை தாண்டினாள் கழனி. கழனி ஓரம் கிணற்றடியில் கொட்டகை. கொட்டகையின் முன்வாசலில் போட்டு விடலாம் என்று கழனியின் பக்கவாட்டி லிருந்து ஒதுங்கி கிணற்றங்கரை வழியாய் நடந்து வாசல் பக்கம் போனாள். சைக்கிள் இருந்தது. பாவி மனுஷன் வித்துபுட்டு வந்து தூங்கறானோ. எதிர்த்தாப்புல வந்திருக்கக் கூடாதா. அட இறக்கி வைக்கக் கூட ஆளக்காணுமே, எங்க போயிட்டான் இவன் என்று நின்ற மேனிக்கே தொப்பென்று சுமையைப் போட்டாள். பாறாங்கல் ஒன்று தலையில் இருந்து இறங்கியது போலிருந்தது. கழுத்து திருப்ப முடியவில்லை. ஒரு சுழற்று சுழற்றி எங்க அந்த மனுஷனக் காணோம் என்று தேடினாள்.

       மாமரத்தடியில் பசுமாடு சுழன்று சுழன்று வந்தது. கை கனத்தில் கொம்பொன்று பிடித்தபடி மூக்காந்தண்டிலும் காலிலுமாக சாத்து சாத்து என்று அடித்துக் கொண்டிருந்தான் வெங்கடேசன். காலடியில் முள்ளங்கி கத்தைகள் மிதிபட்டுக் கொண்டிருந்தன. ஓடிப்போய் கொம்பைப் பிடுங்கி “பைத்தியமா புடிச்சிருக்கு உனக்கு'' என்று நெட்டித் தள்ளினாள் மலர். “எவளாவது இந்த முள்ளங்கிய சீண்டிப் பார்த்தாளா? வெறுத்துப்போய் ஊர் ஊரா அலைஞ்சி கடைசியா மாடு தின்னட்டும்னு வந்து போட்டா, மோந்துகூட பார்க்க மாட்டேங்கிது இது. கோவம் வருமா வராதா... என்னடி பொழப்பு இது?'' என்று தண்ணீர் தொட்டிமீது போய் உட்கார்ந்தான். இறக்கிய பாரம் மீண்டும் நூறுமடங்காய் அழுத்த கண்கலங்கியபடி அப்படியே உட்கார்ந்தாள் மலர். இவர்களையே பார்த்துக் கொண்டிருந்தது அந்தப் பசுமாடு.