சிவதாணு, வங்கிப் பணியில் இருந்து ஓய்வு பெற்று ஓராண்டாகிறது. இப்போது தான் அவருக்கு பணிச்சுமை கூடுதலாகி இருப்பதாக உணர்ந்தார். பிறந்தது முதல் இன்றைய நாள் வரையிலும் வறுமை எப்படியானது என்று தெரியாத வாழ்க்கை. பட்டதாரி ஆன மறுமாதமே வங்கியில் லங்குசாக வேலை கிடைத்தது. அன்று முதல் சென்னை நகர வாழ்க்கை தான். இப்படியான வாழ்க்கை அவர் மனசுக்கும், உடம்புக்கும் ஒத்துப் போயிற்று.

       அன்றைய நாளைப் போல இன்றைய சென்னை இல்லை. அன்று நின்று நிதானித்து மூச்சு விட முடிந்தது. வாழ்க்கையை ரசித்து ஆசுவாசப்படுத்திக் கொள்ள முடிந்தது. அவர் மனசுக்குப் பிடித்த மனைவி அமைந்ததும் தான் அவர் வாழ்க்கை லகுவாக இருக்கிறது என்ற எண்ணம் அவருக்கு உண்டு. அவளைப் பிரிந்து அவர் இருந்த நாட்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

       இரண்டு பெண்பிள்ளைகளுக்குப் பிறகு மூன்றாவதாக பிறந்தவன் தான் தமிழ்வாணன். இந்த மகன் மீது கூடுதலான அன்பை வைத்திருந்தாலும் தன் மக்கள் மூவருக்கும் இடையே ஏற்றத்தாழ்வை காட்டியதில்லை. அவர்களுக்கு நல்ல படிப்பு கிட்டியது. பெண்பிள்ளைகளின் மனசுக்குப் பிடித்த வாழ்க்கையை அமைத்துக் கொடுத்து இருந்தார். அவர்களும் மகிழ்ச்சியோடு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அதனால் அவர் வங்கிப் பணியில் இருந்து ஓய்வு பெறும் போது எந்த மனச்சுமையும் இல்லாமல் தான் இருந்தார். மகனுக்கும் பெரிய நிறுவனத்தில் வேலை கிடைத்தது. முதல் சம்பளமே லட்சத்தைத் தாண்டி வாங்கியவன், பெற்றோர்களிடம் ஆசி பெற்றுக் கொண்டபோது அவர்களுக்கு பிரமிப்பாகத்தான் இருந்தது.

       அவர் ஓய்வு பெறும் போது கூட இவ்வளவு சம்பளம் பெற்றவர் இல்லை. அதற்குள்ளேயே வளமான வாழ்க்கை வாழ முடிந்தது. மாநகரில் அவர் கட்டி வாழ்ந்து கொண்டு இருக்கும் இரண்டு அடுக்கு வீடு இன்றைக்கு சில கோடிகளாவது பெறும். ஓய்வின் போது கிடைத்த பணத்தை வங்கியிலேயேப் போட்டு வைத்துக் கொண்டார். அத்தொகைக்கு மாதாமாதம் நாற்பதாயிரமாவது வட்டியாக சேர்ந்து கொண்டு இருக்கும்.

       அவரும், அவர் மனைவியும் தங்கள் மகனுக்கு நல்ல வரனாகப் பார்த்து திருமணத்தை முடித்துவிட்டால் போதும் தங்கள் வாழ்க்கை பொருள் பொதிந்ததாக நிறைவு பெற்றுவிடும் என்ற எண்ணத்திற்கு வந்திருந்தார்கள். அப்படி வரும் அந்தப் பொழுது, "என்னங்க! நம்ம மவனுக்கு ஏத்தாப்போல ஒரு பொண்ணு அமையணும். இவ்வளவு பெரிய நகரத்தில் நாம போய் தேடிக்கிட்டு இருக்க முடியாதுங்க. தி.நகரில் உள்ள நம்ம சாதிச்சங்கத்தில் பதிவு பண்ணிடுவோம். பொண்ணப்பெத்தவங்களே தேடிக்கிட்டு வந்துடுவாங்க. அவனுக்குப் பிடிச்சப் பொண்ணா எடுத்திடலாங்க...' என்று சொன்னதும் இது தான் இப்போதைக்கு சரியா இருக்கும் என்ற முடிவுக்கு வந்து விட்டார் சிவதாணு.

       "...ம்மா! எனக்கு மனைவியா வரப் போறவ நம்ம எல்லாரையும் அனுசரிச்சிப் போறவளா இருக்கணும். அப்படியான மனசு உள்ளவளாத்தான் பாத்தாகணும். கிராமத்தில் கூட்டுக்குடும்பத்தில பொறந்தவளா இருந்தா தான் இது சாத்தியப்பட்டு வரும். ஏதோ ஒரு பட்டப்படிப்பு படிச்சிருந்தா போதும். இது தான் எனக்கு நல்லதாப்படுதும்மா...' மகன் தன் விருப்பத்தைச் சொல்லிவிட்டான்.

       "கிராமச் சூழ் நிலையில் பிறந்த பொண்ணுங்க தான் கள்ளம்கபடம் இல்லாம பச்சை மனசோட இருக்குங்க. மாமா மாமின்னு ஒட்டுறவா பற்று பாசமாவும் இருக்குங்க...' என்று அவள் சொன்னதை அவரும் வேதவாக்காக எடுத்துக் கொண்டு விட்டார்.

       இப்படியான மருமகளைத் தேடி எடுப்பது அவருக்கு சிரமமாக இருக்காது தான். அவரோடு கூடப்பிறந்த தம்பி, நிலம் நீச்சோடு அவர் பிறந்த கிராமத்தில் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். அண்ணன் காரர் ஒரு சொல் சொல்லிவிட்டால் போதும் தன் தலைமேல் சுமந்து நல்ல பெண்ணாகப் பார்த்து முடித்து விடுவார் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. அவர் தம்பிக்காரரும் அடுத்த ஒரு வாரத்திற்குள்ளேயே அதை உறுதிப்படுத்திவிட்டார்.

       “அண்ணே! என் மாமனாரோட தூரத்து உறவில நீங்க விரும்புறாப்போல ஒரு பொண்ணு இருக்காளாம்... ஆனா, அது ரொம்ப உட்கிராமம். நம்ம மாவட்டத்தில இருக்கிற ஆழியூர்லருந்து வடக்கால பத்து கிலோமீட்டர் தொலைவில உள்ள சின்ன ஊர் தான் வங்காரமாவடி. ஏழெட்டு வேலி நஞ்சைபுஞ்சையோட இரால் பண்ணையும் செங்கல்காளவன்னு ஏகமான வரவுசெலவு உள்ள பெரிய கூட்டுக்குடும்பமாம். ஏழுபேர் அண்ணன் தம்பிங்களாம். நடுவிலவரோடு தலைச்சன் பொண்ணு லட்சணமா இருக்கிறாளாம். பி.ஏ. படிச்சிருக்கு. நீங்க சொன்னபடி என் மாமனாரோட கிட்ட இருந்து அந்தப் பொண்ணு பிறந்த குறிப்பையும் நம்ம பையன் பிறந்த குறிப்பையும் வச்சி பொருத்தம் பாத்துட்டோம்...

       ...அவங்களும் நம்ம குடும்பத்தில சம்பந்தம் செஞ்சிக்க விருப்பம் தெரிவிச்சி இருக்காங்களாம். ஒண்ண மட்டும் நல்லா யோசிச்சிக்க சொன்னாங்களாம். கிராமத்தில கட்டுபெட்டியான கூட்டுக்குடும்பத்தில வளர்ந்தவ. நகரத்தில் சொகுசா வாழ்ற குடும்பத்துக்கு ஒத்துக்கும் நினைச்சா செஞ்சிக்கலாம்னு சொல்லிருக்காங்க. என் மாமனாரு இப்படியான சூழலில் பொறந்த பொண்ணத்தான் தேடிக்கிட்டு இருக் காங்கன்னு சொல்லி வச்சிருக்காராம். நீங்க தம்பியோட வந்து பாத்தாப் பிடிச்சிப் போயிடும். அடுத்த வாரம் புதன் கிழமை நல்ல நாளா இருக்கு. அன்னிக்கு பாத்து முடிச்சிடலான்னு சொல்லிருக்காங்க. ரெண்டு நாளைக்கு முன்னாலயே தம்பியோட வந்திடுங்க. பத்து நாளைக்கு ஊர்ல தங்கி இருந்துட்டுப் போவலாம்...'' தொலை பேசியில் சொன்னதும் சிவதாணுக்கு மகிழ்ச்சி கூடிட்டு.

       “...வந்து பார்த்து மனசுக்கு பிடிச் சிட்டா நிச்சயம் கூட பண்ணிக்கிட்டு வந்துடுறோம்...'' என்ற சொன்னதோடு விட்டு விடாமல் மூனாம் நாளே மவனோடு காரிலேயே வந்து சேந்திட்டாங்க. சிவதாணு பிறந்த ஊருக்கு வந்து தங்கிப்போய் அஞ்சு வருசத்திற்கு மேல் ஆகியிருந்தது. அன்றைக்கு பார்த்தது போல தான் ஊர் இருந்தது. அவரை ஒத்த நண்பர்களும் உறவினர்களும் வந்து போய்க் கொண்டு இருந்தார்கள். பொழுது மகிழ்ச்சியாகத் தான் போய் கொண்டிருந்தது.

       தமிழ்வாணனின் சித்தப்பா மகள், "அண்ணே! பொண்ணோட படத்தைப் பாரேன். நேரிலப் பாத்தா இன்னும் ரொம்ப அழகா மஞ்சள் கிழங்காட்டம் இருக்கும். நான் படிக்கிற நாகப்பட்டினம் கல்லூரியில எனக்கு முன்னால ரெண்டு வருசத்துக்கு முந்தி சேந்திருந்துச்சு. அதுக்கும் எனக்கும் அதிகமா பழக்கம் இல்லாட்டாலும் நல்லாத் தெரியும். எந்த நேரமும் கலகலப்பா இருக்கும். நீ பாத்தீன்னா சட்டுன்னு புடுச்சிப் போயிடும்' என்று சொல்லித்தான் படத்தைக் கொடுத்தாள்.

       அவள் சொன்னது போல பார்க்கப் பாந்தமாகத் தான் இருந்தாள். கள்ளம்கபடம் இல்லாத முகவெட்டு. படத்தைப் பார்த்ததுமே அவனுக்குப் பிடித்துப் போயிற்று.

       திட்டமிட்ட அந்தக் காலைப் பொழுதில் புறப்பட்டு ஆழியூர் போய்ச் சேர்ந்தார்கள். "அண்ணே! நானும் அந்த ஊரைப்பத்தி கேள்வித்தான் பட்டு இருக்கேன். போனதில்லை. வடக்கால போற கருங்கல்சல்லி போட்ட ரோடுன்னு சொன்னாங்க. பெருங்கடம்பனூர் தாண்டிட்டா பொட்டல் வயல் வெளியிலத்தான் போகணும். எதுக்கும் அந்த ஆட்டோக்காரர்கிட்ட விசாரிச்சிக்கிட்டு வந்துடுறேன்னு எறங்கிப் போனார். விசாரிச்சிக்கிட்டு வந்து, "அந்த ரோட்டுலேயே போவலாம்' என்று சொல்லியபடியே காரில் ஏறிக் கொண்டார்.

       பெருங்கடம்பனூர் தாண்டினதுமே ஒரே பொட்டலாய் இருந்தது அந்த குறுகலான சாலை. கொஞ்ச நாளைக்கு முன்னர் தான் தார்ச் சாலையாகப் போட்டு இருக்கிறார்கள் என்று உணர்ந்து கொள்ள முடிந்தது. ஆள் நடமாட்டமே இல்லை. சில இடங்களில் சாலை ஓரத்தில் பனைமரங்கள் மட்டும் நின்றிருந்தன. பத்து மணிக்குள்ளேயே வெப்பல் அதிகமாக இருந்தது.

       “தம்பி! போயிக்கிட்டே இருக்கோமே... யாருக் கிட்டயாவது விசாரிச்சிக்கிட்டு போனா அலைச்சலைத் தடுத்துக்கலாம்...'' அண்ணன்காரர் சொன்னதுக்கு "சரிண்ணே' என்று சொல்லும் போது அவர் மனசுக்குள்ளவும் சந்தேகம் வந்துட்டு. அவர் மாமனார், வழி சொல்லும் போது "வங்காரமாவடிக்குப் போற ரோடு குண்டும் குழியுமாத்தான் இருக்கும்' என்று சொன்னது நினைவில் வந்து நின்றது.

       “அதோ ஒரு வயசான அம்மா போயிக்கிட்டு இருக்கு. அதுக்கிட்ட விசாரிச் சிடலாம்'' என்று டிரைவர் சொல்லியபடியே, போய் கொண்டிருந்த அந்த அம்மா பக்கத்தில் காரை நிறுத்திட்டான். அந்த அம்மா ஒடிசலான தேகத்தில் வெயிலை தடுத்துக் கொள்ள தலையில் தன் முந்தியைப் போட்டுக் கொண்டு மெல்ல நடந்தவாறு இருந்தாள். எண்பது வயதைக் கடந்திருப் பவளாகத் தெரிந்தாள்.

       “ம்மா! வங்காரமாவடி?''

       “ரால் பண்ணைக்குப் போறீயலா?''

       “இல்லம்மா. கிட்டுப்பிள்ளை பண்ணை வீட்டுக்கு...''

       பொக்கைவாய் திறந்து நமட்டாக சிரித்து, “நாங்க மொட்டப்புள்ள பண்ணைன்னு தான் சொல்லுவோம். அந்தப் பண்ணை வீட்டுக்குப் போற பாதைக்கு முன்னாடியே என்னோடு வீடும் இருக்கு'' என்று அவள் சொன்னதும் "பாவம் வயசான காலத்தில் இந்த வெயிலில்...' மனதில் நினைத்துக் கொண்டவர்கள், "காரில் ஏறிக்குங்கம்மா...' ஏற்றிக் கொண்டார்கள். வீணா அலைச்சல் இல்லாம நாம சொன்ன நேரத்தில் போயிடலாங்கிற நம்பிக்கை பிறந்தது.

       “நான் பத்து நாளா ஆழியூர் ஆஸ்பத்திரிக்கு போயிக்கிட்டு வந்துக்கிட்டு இருக்கேய்யா. என்னை நடக்க விடாம, உங்களப்போல போற வர்றதுங்க அழைச்சிக் கிட்டு போவாங்க. இப்பக் கூட பெருங்கடம்பனூர் வரைக்கும் ஒரு படிக்கிறப்புள்ளை கொண்டாந்து விட்டுச்சி. நடந்து வந்துக்கிட்டு இருந்தேன். இப்ப என் மனசு குளுந்து போயிட்டுங்கய்யா'' என்று சொல்லிக் கொண்டே வந்தாள்.

       "இந்த வயசுலயும் வெள்ளந்தியான மனசோட நம்பிக்கையா நடந்து போறாங்களே. கிராமத்து மனுசியில்ல' என்று நினைத்துக் கொண்டார் சிவதாணு.

       "ஆழியூருலருந்து போற ரோட்டுல ஒரு மதகடி வரும். அதோரமா கிழக்காலத் திரும்புற பாதையிலப் போனா வங்காரமாவடி வரும்' என்று மாமனார் சொன்னது நினைவில் நின்றது. “நாம போற பாதை சரிதானே?'' என்று கேட்டார். “அதில என்னாய்யா சந்தேகம். கண்ணை மூடிக்கிட்டு போங்க. இன்னும் கொஞ்ச தூரத்தில நான், என் வீட்டுக்குப் போற முனையில இறங்கிக்கிறேன். நீங்க கொஞ்ச தூரம் போகணும்...'' என்று மடையடைத்தாள்.

       “அதோ தெரியிதே மாமரம், அந்த எடத்தில நிறுத்துங்கய்யா. நான் எறங்கிக்கிறேன்...'' இறங்கிக் கொண்டவள், “கண்ணை மூடிக்கிட்டு நேராப் போங்க. பெரிய காளவாய்க்கரை வரும். அங்கக் கேட்டீங்கன்னா மொட்டப்புள்ளை பண்ணை வீட்டைக் காட்டிவிடுவாங்க...'' என்று சொல்லிவிட்டுப் போனாள். அவள் சொன்ன படியே போய்க் கொண்டு இருந்தார்கள். சிவதாணுவின் தம்பிக்காரருக்கு குழப்பமாக இருந்தது. இவ்வளவு தூரம் வந்தாச்சே. ஆழியூர்லருந்து பத்துக்கிலோ மீட்டர் தூரம் தான் இருக்குன்னு சொன்னாங்களே. உத்தேசமா சொல்லியிருப்பாங்களோ?' என்று யோசித்தபடியே வந்தார், தூரத்தே பெரிய காளவாய்கரை தென்பட்டது. அஞ்சாறு ஆட்கள் கல் அறுத்துக் கொண்டு இருந்தார்கள். இரண்டு பேர் கல் அறுக்க பயன்படுத்தும் இறுகலான மண்சாந்தைத் தட்டுப்பலகையில், முட்டுக் கட்டி தூக்கி வந்து கொட்டிக் கொண்டு இருந்தார்கள்.

       காரை நிறத்தச் செய்து அவர் இறங்கி களத்தை நோக்கிப் போனார். அவர் வருவதைப் பார்த்த ஒருத்தர் எதிர் கொண்டு வந்தார். அவரிடம் “கிட்டுப்புள்ளை பண்ணை...'' என்று இழுத்தார். வந்தவர் திருதிருவென்று விழித்தார். அவர் மனசுக்குள் அந்தக்கிழவி சொன்னது போல, மொட்டப் புள்ள பண்ணைன்னு கேட்கணுமோ? என்ற நினைப்பு உந்தும் போது, “அய்யா நீங்க வங்காரமாவடிக்குப் போகணுமா?'' என்று கேட்டார். "ஆமாம்' என்பது போல தலையசைத்தார்.

       “நீங்க ரொம்ப தூரம் தாண்டி வந்துட்டீங்களே! இந்த ரோடு வெட்டாத்துக்கரையில போய் சேருங்க. வங்காரமாவடிக்குப் போறதா இருந்தா நீங்க திரும்பவும் வந்த வழியே திரும்பிப் போயி ஒரு மதகடி வரும். அதோரமா கிழக்குப்பாத்தாப்போல குறுகலான ரோடு போவும். அங்கருந்து கண்ணுக்கு எட்டினத் தூரத்தில இருக்கு வங்காரமாவடி. அங்கவும் நாலஞ்சி காளவாக்கரை இருக்கு. அங்க கேட்டிங்கன்னா அந்தப் பண்ணை வீட்டக் காட்டிவிடுவாங்க...'' என்று சொல்லி விட்டு திரும்பினார்.

       காதில் வாங்கின சிவதாணுவின் மனசு உள்பட எல்லோருக்கும் பொசுக் கென்று போனது. "அந்தக் கிழவி பேச்சைக் கேட்டு ஏமாந்து போயிட்டோமே' எங்கிற ஆதங்கம் வழிந்தது. ஒரு வழியாய் மதகைக் கடந்து போய்க் கொண்டு இருந்தார்கள். அந்தக் காளவாய்க்கரை தென்பட்டது. கண்ணுக்கு எட்டியத் தூரத்தில் பண்ணை வீடு தெரிந்தது. அதுதானா கிட்டுப் பிள்ளை வீடு என்று உறுதிபடுத்திக் கொண்டார்கள். சாலையோரம் இருந்த பெரிய ஆலமரத்தடியில் காரை நிறுத்தச் செய்து ஆசுவாசப்படுத்திக் கொண்டு போக விரும்பி காரை நிறுத்தச் செய்து இறங்கினார்கள்.

       அப்போது வீசிய சிலுசிலுப்பான தென்றல் இதமாக அவர்களை வருடி விட்டது. அந்த நிழல் வாடலில் அங்கஅங்க உட்காந்திருந்த காக்கைகளும், ஒன்றைஒன்று துரத்தியபடி ஓடிய அணில்களும் விருட்டென்று மரத்தில் போய் ஏறிக் கொண்டன. அவர்களைக் கண்ட நான்கைந்து வண்ண வண்ண சிறகுகளைக் கொண்ட வாலாட்டிக் குருவிகள், சினேகிதமாய் அவர்கள் காரின் மீது வந்து உட்காந்து விழியை உருட்டி உருட்டிப் பார்த்தபடியே நீண்ட வாலை ஆட்டிக் கொண்டன. அதன் அழகை ரசித்தபடியே நின்ற சிவதாணுவுக்கு வியப்பாக இருந்தது.

       வங்காரமாவடி கிட்டுப்பிள்ளை, வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தார்கள். குறித்த நேரத்தில் போய் சேர முடியவில்லை. ஒரு கிழவியால் ஏமாற்றப்பட்டதால் நேரம் கடந்து விட்டது என்று சொல்ல அவர்களுக்கு வெட்கமாக இருந்தது. புறப்படும் நேரத்திற்கு கார் டிரைவர் வரல. அதான் என்று சமாளித்துக் கொண்டார்கள்.

       அவர்களும், வர்ற போற இடத்தில இப்படி ஆகிறது தான். அதுக்கு ஏன் நீங்க சங்கடப்படுறீங்க? என்று ஆறுதலாய் பேசி, அவர்கள் மனம் சிலிர்க்கும்படியாய் வரவேற்பு செய்தார்கள். கொஞ்ச நேரம் உறவு முறைகளைப் பற்றிப் பேசினார்கள். அந்த பேச்சும் கூட மனம் விட்டு பேசுவது போல அமைந்து போனது.

       பெண்ணின் அப்பா, “என்னோட பொண்ணு ரொம்ப கெட்டிக்காரி. எல்லார் கிட்டவும் கள்ளம்கபடம் இல்லாம கலகலன்னு இருப்பா. எங்க குடும்ப வரவு செலவு எல்லாத்தையும் அவதான் பாக்கிற. என் அண்ணன் தம்பி, பொண்டுவ புள்ளைங்க எல்லாம் அவளை நத்திக்கிட்டு தான் கிடக்குங்க. வேத்துகலப்பாவே தெரியாது...'' என்று தன் பெண்ணைப்பற்றி பெருமையாக பேசிக் கொண்டு இருந்தார்.

       பெண்ணும் அவர்கள் எதிர்பார்த்து வந்தது போல பிடித்தும் இருந்தாள். சிவதாணுவுக்கு இப்படியான பெண் அமைவாளா என்ற அச்சப்பாடு போய் விட்டது. இப்படியான மருமகள் கிடைத்து விட்டதில் மகிழ்ச்சியடைந்திருந்தார். அந்தப் பெண்ணோட பெரியப்பா, “பொண்ணும் புள்ளையும் கொஞ்சம் மனம்விட்டுப் பேசிக் கிட்டுங்கன்னா நல்லா இருக்கும். பழைய காலம் போலவா இப்ப நாம பாத்து முடிச்சுக்க முடியுது?'' என்று சொன்னதும் அந்தப் பெண்ணோட அத்தைக்காரி அந்தப் பெண்ணையும் தமிழ்வாணனையும் சாமி அறைக்கு அழைத்துப் போய்விட்டாள்.

       அந்தப் பெண், இப்படியான தருணத்தை எதிர்பார்த்தாலும் வெட்கப் பட்டாள். தமிழ்வாணன் தான், “என்னை பிடிச்சிருக்கா?'' என்று கேட்டு அவள் மௌனத்தைக் கலைத்தான். அவளும் முக மலர்ச்சியோடு தலையாட்டினாள். “எனக்கும் உன்னைப் பிடிச்சிருக்கு. நீ கிராமத்துப் பொண்ணாவே வளர்ந்துட்டே. நான் நகரத்திலேயே வளர்ந்துட்டேன். நாம புரிஞ்சிக்கிட்டோம்ன்னா கொஞ்சம் காலத்தில சகஜமாயிடலாம். என் அப்பாவும் அம்மாவும் உன்னைப் பார்த்ததும் சந்தோச மாயிட்டாங்க. நான் ஒரே புள்ளை இல்லையா? நீ என்னா நினைக்கிறே?'' என்று கேட்டு அவள் முகத்தை ஏறிட்டுப் பார்த்தான்.

       “கல்யாணம் பண்ணிக்கிட்டு கூட்டுக் குடும்பமாத்தான் இருக்கணுமா?'' என்று கேட்டு அவன் முகத்தைப் பார்த்தாள். அவன் "ஆமாம்' என்று சட்டென்று தலை யாட்டினான். “எனக்கு கூட்டுக்குடும்பம் பிடிக்கல...'' என்று சட்டென்று பதிலளித்து விட்டாள். அவன் மனசு சப்பென்று வடிந்து போனது. அதை அவன் வெளிப்படுத்திக் கொள்ளவில்லை.

       வழக்கமான சம்பிராதாயப்படி பேசி விட்டு புறப்பட்டு விட்டார்கள். காரில் வரும் போது தான் அந்த பெண்ணின் மனதில் உள்ளதை மற்றவர்களிடம் சொன்னான் தமிழ்வாணன். அவ்வளவு நம்பிக்கையா வந்து இப்படி ஆயிட்டே என்ற ஆதங்கம் அவர்கள் மனதில் உறைந்து போனது. அதைப் போக்கிக் கொள்ள, “ஆலமர நிழலில் சிறிது நேரம் நின்று போகலாம்'' என்று சொல்லியபடி சிவதாணு காரை நிறுத்தச் செய்தார். அந்த ஆலமரத்தடியில் காரை நிறுத்தும் போது அணில்களும் காக்கைகளும், போகும் போது ஓடிமறைந்தது போலவே செய்தன. அதே நேரம், அந்த வண்ண வாலாட்டிக் குருவிகள் சினேகிதமாய் வந்து காரில் உட்கார்ந்து வாலை ஆட்டிக் கொண்டிருந்தன. வண்ணமயமாய் காரின் மீது உட்காந்திருந்த அந்த வாலாட்டிக் குருவிகளை, சிவதாணுவால் ரசிக்க முடியவில்லை.

Pin It