காற்றின் காதலன் காற்று வாங்கவே
கடற்கரைக்குப் போவான்
ஆறுள்ள ஊரென்றால்
ஆற்றங்கரைக்குப் போவான்
குளமுள்ள ஊரில்
குளத்தங்கரை செல்வான்
கோடைக்காலத்தில் தவறாமல்
குளிர்வாசஸ்தலம் செல்வான்
வீட்டு வளாகத்தில் காற்றுக்காகவே
வேப்பமரங்கள் வைத்திருக்கிறான்
காற்று வேண்டியே வீட்டுக்கு
பெரிய ஜன்னல்கள் வைத்திருக்கிறான்
காற்றில்லாமல் இருக்க முடியாதென்றுதான்
பயணத்தின் போது ஜன்னலோரம்
 இடம்பிடிப்பான்
காற்றுக் குறைவான நாள்களிலெல்லாம்
காற்றே இல்லையென்று புலம்பிக்
 கொண்டிருப்பான்
விசிறிகள் புழக்கத்திலிருந்து மறைந்து
 விட்டதற்காய்
வெகுவாக வருத்தப்பட்டுக் கொள்வான்
காற்று நன்கு வீசும் போதெல்லாம்
என்ன இருந்தாலும் இயற்கைக் காற்றுப் போல
 வருமா என்பான்
வேதத்தில் வாயு பகவான் பற்றிய
வர்ணனையை
விரும்பி ரசித்துப் படிப்பான்
காற்றின் காதலன் பிறந்த ஊர் ராசியோ
என்னவோ இப்படி.

= = =

கவிதை என்பது கவிஞன் என்பவன்

கவிதையென்பது
கழைக்கூத்தல்ல
கவிஞனென்பவன்
கழைக்கூத்தாடியல்லன்

கவிதை என்பது
சித்து விளையாட்டில்லை
கவிஞன் என்பவன்
சித்து விளையாட்டுக் காட்டுபவனில்லை

கவிதையென்பது
ஜிம்னாஸ்டிக் அல்ல
கவிஞனென்பவன்
ஜிம்பாய் அல்லன்

கவிதை என்பது
மனசு
கவிஞன்
ஒரு குழந்தை

கவிதையென்பது
உணர்வு
கவிஞனென்பவன்
சஞ்சாரி

கவிதை என்பது
அனுபவம்
கவிஞன் என்பவன்
சேகரன்

கண்டுகொள்பவர்கள்
பேறுபெற்றவர்கள்
காணாமல் போகிறவர்களைப்பற்றி
கவலையெதற்கு

Pin It