உண்மை
ஜெயிக்கும் என்பர்
அதை எப்போதும்
ஜெயிக்க வைக்கவே
வேணும் -
இதற்கான போர்களும்
இருந்ததாகச் சொல்வர்
சொற்களின் ஜாலத்தில்
ஜெயிப்பதே நடைமுறை.
முன்னோர்களின் சொற்கள்
அப்படியொன்றும்
மகத்துவமானவையல்ல -
சப்பையானவை
தட்டையானவை.
கிளிகளிடமிருந்து
வரும் சொற்களின்
மகத்துவம் பெரிது.
உதிர்ந்து விழும்
இலைகளிடம்கூட
சொற்களை உணரலாம்.
மாலை வெயிலில்
இதமாய்த் தகதகக்கும்
சொற்களைச் சேர்த்துக்கொண்டு -
ஆற்றின் சலசலப்பிலும்
அம்மாவின் முகத்திலும்
கண்டெடுத்த சொற்கள்
நிஜமானவை.
உயிரின் நீட்சிக்கு
அடையாளமானவை -
நட்சத்திரங்கள்
சொற்களை உபயோகிப்பதில்லை
நேசம் சொல்ல
சிறு கண்சிமிட்டல்
போதுமானது -
சொற்கள் வண்ணம்
பூசிக்கொண்டால்
அர்த்தமிழந்து
போய்விடுகின்றன.
நிறமற்ற சொற்கள்
கேட்கவே செய்கின்றன
அபூர்வமாகவேணும்.
என் இருப்பும்
இதனோடு சம்பந்தப்பட்டதுதான்.