சமச்சீர் கல்வி, அரசு - தனியார் பள்ளிகளின் செயல்பாடுகள், கற்றல் கற்பித்தலில் உள்ள வேறுபாடுகள், நிறை குறைகள், மாணவர் - ஆசிரியர் உறவு, தனியார் பள்ளிகளில் 25% ஏழை மாணவர்களைச் சேர்த்துக் கொள்வது பற்றிய அரசின் கல்வி உரிமைச் சட்ட வலியுறுத்தல். இப்படி கல்வி சார்ந்த பல்வேறு சிந்தனைகளை,  'கருக்கல்' ஆசிரியர் குழு ஒரு மாலைப் பொழுதில் கலந்துரையாடிக் கொண்டிருந்தது.

       'கருக்கல்' ஆசிரியர் அவர்கள் இது குறித்தெல்லாம் ஆயிசா இரா.நடராசனிடம் நேர்காணல் செய்து தெளிவு பெற்று, இவ்விதழிலேயே பிரசுரிப்போமே என கருத்து தெரிவித்தார்; உடன் தொலைபேசியிலும், தொடர்பு கொண்டார். "கருக்கல்' பற்றியும் அதன் நோக்கம் குறித்தும் நல்ல புரிதலில் இருந்த இரா.நடராசன் அவர்கள், இது குறித்துப் பேச ஆர்வமுடன் ஒப்புதல் தந்தார்; உடனே வரும்படியும் அழைப்பு விடுத்தார்.

       சமீபத்தில் தமிழகத்தில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு, பின்னர் அந்த அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டும், மிகுந்த பரபரப்பில் திளைத்த கடற்கரை பகுதிகளில் கடலூரும் ஒன்று. இச்சூழலில் அடுத்த நாள் மதியம் 3 மணிக்கு கடலூருக்குச் சென்றோம், நேர்காணலின் பொருட்டு.

       அப்போது தான் 'தானே' புயலின் பாதிப்பிலிருந்து மெல்ல மீண்டிருந்தது ஊர். வழியெங்கும் சாய்ந்து நின்ற, தலையிழந்த தென்னை மரங்கள் வரவேற்றன. ஒரு பெட்ரோல் பங்கின் மேற்கூரை முழுவதுமாகப் பிய்த்து எறியப்பட்டிருந்தது. ஒரு உணவகத்தின் பெயர்ப்பலகை திருகிக் கொண்டிருந்தது. புயலில் கடலூர் எந்த அளவு பாதிப்புக்குள்ளாகியிருக்கும் என்பதை இவைகள் உணர்த்தின.

       மதிய உணவை ஒரு உணவகத்தில் முடித்துக் கொண்டு, நடராசன் அவர்களைத் தொடர்பு கொண்டோம். அவர், பள்ளி வழி கூறினார்.

       பள்ளி வாயிலில் காத்திருந்து, எங்களை அன்புடன் வரவேற்று, பள்ளிக்குள் அழைத்துச் சென்றார்.

       நினைத்ததற்கும் மேலாக எளிமையான மனிதர், சுலபமாகப் பழகக் கூடியவர், மிகப்பெரிய பள்ளியின் தலைமை ஆசிரியர், கல்வி சார்ந்த பல புத்தகங்களை எழுதியவர், (இவர் எழுதிய ஆயிஷா மட்டுமே 2.55 லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகி உள்ளது) "புத்தகம் பேசுது' மாத இதழின் ஆசிரியர், தமிழகத்தில் குறிப்பிடத்தக்க கல்வி சிந்தனையாளர், புத்தக வாசிப்பையே சுவாசமாகக் கொண்டவர் ஆயிசா இரா.நடராசன் அவர்கள். ஒரு நேர்காணல் என்பது போல அல்லாமல் பல்வேறு கருத்துக்களை எங்களுடன் கொட்டும் மழையென பகிர்ந்து கொண்ட விதம், பிரமிக்க வைத்தது. எங்களின் அனைத்து வினாக்களுக்கும், விரிவான விடை தந்தார். "உங்களுக்கு நான் சொல்வது சரியாகப் புரிகிறதா' என்று அய்யத்தோடு கேட்டு, விளக்கமாகவும் உதாரணத்தோடும் பேசினார். நேர்காணலில் இவர் கொட்டிய (?) கருத்துக்களுக்கு, கண்டிப்பாக ஒரு 'கருக்கல்' இதழ் பற்றாது என்ற நிலையில், முடிந்தவரை விரிவாகவே வெளியிட முயன்றிருக்கிறோம். அவர் தந்த சூடான மசாலா தேநீர் மணக்க, மணக்க பருகியபடியே இதோ எங்களின் நேர்காணல்...

நீங்கள் ஒரு படைப்பாளி, குழந்தைகளுக்காக தொடர்ந்து சளைக்காமல் எழுதுபவர், அறிவியல் எழுத்தாளர், கல்வியாளர், கல்வி குறித்த சிந்தனைகளை நூல்களாய் வடித்துள்ள சிறந்த எழுத்தாளர்.. இப்படி பன்முனை தளங்களில் அறியப்பட்டாலும்..மிக சிறந்த வாசகராகவும் அறியப்பட்டுள்ளீர்கள்.உங்கள் வாசிப்பு பயிற்சியின் அடித்தளம் என எதனை நினைக்கிறீர்கள்?

எழுத்தாளனாவதற்கு வெகுகாலம் முன்பே நான் தீவிர வாசிப்பு தளத்திற்குள் நுழைந்து விட்டேன்.சொந்த ஊர் தஞ்சை மாவட்டமாக இருந்தாலும், நாங்கள் அங்கே வசிக்கவில்லை. அரசு ஊழியரான தந்தையின் தொடர் இடப்பெயர்ச்சி காரணமாக திருச்சி, கரூர் மாவட்டங்களின் கிராமப்புற பள்ளிகளில் படித்தேன். ஆரம்பத்தில் படிக்கும் பழக்கம் என் அப்பாவிடமிருந்து தான் வந்திருக்க வேண்டும்.. ஆறாம் வகுப்பு, ஏழாம் வகுப்பு.. என ஞாபகம்.. அலுவலகநேரம் போக அப்பா ஆங்கில 'பல்ப் பிக்ஷன்' விடாப்பிடியாக வாசிப்பார்... பள்ளியின் நூலக அலமாரியிலிருந்து ஆசிரியர்களை ஐஸ்வைத்து, நான் எப்படியோ புத்தகங்களை வீட்டிற்கு எடுத்து வந்து விடுவேன்.

பின்னர் கரூரில் பதினோறாம் வகுப்பு படித்த காலத்தில் வழக்கறிஞர் பி.ஆர்.கே (பி.ஆர்.குப்புசாமி)அவர்களின் பகுத்தறிவு பாசறையில் இணையும் வாய்ப்பு கிடைத்தது.அவரது வீட்டில் ஒரு குட்டி நூலகமே வைத்திருந்தார்.காவேரி பிரச்சனை, ஈழ பிரச்சனை முதல் ஆந்த்ரப்பாலஜி வரை பல புத்தகங்களை எங்களோடு பகிர்வார்..

திருச்சியில் கல்லூரி பயிலும் போது நான் இந்திய மாணவர் சங்கத்தில்(SFI) இணைந்தேன்.அப்போது வாராவாரம் அரசியல் வகுப்புகளுக்கு எஸ்.எஃப்.ஐ ஏற்பாடு செய்யும். அதன் மூலம் பேராசிரியர் ஆத்ரேயாவோடு தொடர்பு ஏற்பட்டது.அவர் ஒரு தீவிர வாசகராக இருந்தார்..காந்தி அண்ட் ஹிஸ் இஸம் (இ.எம்.எஸ். எழுதியது) புத்தகம் அவரிடம் இரவல் வாங்கினேன் (இன்று வரை திருப்பி தரவில்லை.அவரும் விடாமல் கேட்டுக் கொண்டே இருக்கிறார். அதுவேறு விஷயம்!) அதுவே புத்தக வாசிப்பு, கூட ஒரு அரசியல்... எதை தேர்ந்தெடுத்து வாசிக்கிறோம் என்பது கூட நாம் யார் என்பது பற்றிய தேடலே எனும் மனக்கண்ணை திறந்து விட்டது.. இப்படியான ஒரு எண்ணம் போதும்.. அது ஒரு பிசாசு போல, புயல் போல வாழ்வை மையம் கொண்டு சுற்றிச் சுற்றி வீசுகிறது... புத்தக சூறாவளியிடம் சிக்கிய நான் அதன் ஒரு அங்கமாகி... தத்துவம், உலக நாவல், அரசியல், பொருளாதாரம், இயங்கியல் , கார்சியா மார்க்வெஸ், கீகேகார்ட்... இலியட், சார்த்தர்... ஓரன் ஃபாமுக்..என திக்குகள் எட்டும் சிதறி.. பதறி.. ஸ்டீபன் ஹாக்கிங்ஸ், அல்த்து£ஸர், காஃப்கா, ரிச்சர்ட் டாக்கின்ஸ் என உறக்கம் முதல் உறவுகள் வரை பலவற்றை அந்தத் தேடலின் முன் ஒப்படைத்து சரணடைந்து... வருடங்கள் பல ஆகிறது... சார்த்தர் சொல்கிறார் 'ஒரு நல்ல புத்தகம் முடிவதே இல்லை' எவ்வளவு பெரிய உண்மை!

வாசிப்பு என்பது என்ன? அதற்கு ஒரு நோக்கம் இருக்க வேண்டுமா என்ன?

லண்டனின், அருங்காட்சியக நூலகம் உலகப்பிரசித்தி பெற்றது.அந்த நூலகத்தின் லட்சக்கணக்கான பிரதிகளை படித்து கரை கண்டவர்கள் என இருவரது புகைப் படங்களை மாட்டி வைத்திருக்கிறார்கள். ஒருவர் கார்ல் மார்க்ஸ்.அவர் உட்கார்ந்து வாசித்த அந்த எட்டாம் எண் இருக்கை கூட பாதுகாக்கப்படுகிறது.மற்றவர் நமது அண்ணல் அம்பேத்கார். நம் சிந்தனை சிற்பியாம் சிங்காரவேலர் தாம் முதன் முதலில் நம் தேசத்தில் மே தினத்தை தொழிலாளர் வர்க்க எழுச்சி தினமாகக் கொண்டாடியவர்..1960களின் தொடக்கத்தில் ரஷ்யாவின் மிகப்பிரபலமான லெனின் நூலகத்திற்கு விஜயம் செய்த அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு அங்கே ஒரு பெரிய அறை முழுதும் இருந்த புத்தங்களுக்கு 'இது சிங்காரவேலர் கலெக்ஷன்' என அவரை முன்னிறுத்தி தலைப்பிடப்பட்டிருந்ததை கண்டு அசந்து போய் நின்றாராம். இந்தச் செய்தி அவரது மாஸ்கோ விஜய கோப்புகளிலேயே பதிவாகி உள்ளது...உலகின் பல மூலைகளிலிருந்து அறிஞர் பெருமக்கள் புத்தகங்களைத் தேடி சிங்காரவேலரிடம் வருவார்களாம். பின் நாட்களில் இந்தியா வந்த சேகுவேரா.. சிங்காரவேலர் நினைவில்லம் வந்து சில புத்தகங்களை தேடியதாய் வரலாறு பதிவு செய்திருக்கிறது. து£க்கிலிடப்படும் கடைசி நிமிடம் வரை வாசித்துக் கொண்டிருந்தவர் பகத்சிங். வாசிப்பு, நோக்கம் மிகுந்தது... வாசிப்பு, பொழுதுபோக்கு அல்ல.. வாசிப்பு, ஒரு இயக்கம். It is a political activity

இன்று வாசிப்பு எப்படி இருக்கிறது?

தேர்வுக்காக வாசிக்கிறார்கள்...பாடம் நடத்தும் ஒரு ஆசிரியர், பேராசிரியர் கூட, பாடப் புத்தகத்திற்கு வெளியேயும் வாசிக்க, பழக வேண்டிய கட்டாயத்தை உணரவில்லை.வேலைக்காக படிப்பது... வேலை கிடைத்ததோடு நின்றுபோகிறது.. பொழுதுபோக்கு வாசிப்பு கூட இன்று குறைந்துவிட்டது.. லட்சுமி, சிவசங்கரி என வாசித்த பெண்கள், டி.வி. சீரியலுக்கு மாறி... நாளாகிவிட்டது.. உலகின் நம்பர் ஒன் பத்திரிகை என்றே ஒரு நூறு தமிழ் பத்திரிகைகள் வருகின்றன. இருந்தும் தீபாவளி மலர் கூட இலவசங்களின் இணைப்பால் தான் விற்கிறது.ஊர் ஊராக புத்தகக் கண்காட்சிகள்.. ஆனால் சாமியார்களின் வழிகாட்டி நூல்களும், பணம் சம்பாதிப்பது எப்படி வகையறா புத்தகங்களும்... சமையல் குறிப்பும் அமோகமாக விற்கிறது... புத்தகப் புதையலை அள்ளத் துடிக்கும் குழந்தைக்கு கூட, தலையணை சைஸ் 'ஐ.ஏ.எஸ் ஆவது எப்படி?' புத்தகத்தை இரக்கமின்றி வாங்கி கையில் திணிக்கிறார்கள்...இது ஒரு பக்கம்.

மறுபக்கம்.. 'இ&பப்ளிஷிங்'.. கணினியில் இணையத்தில் வருவதே எழுத்து என்று நம்பும் ஒரு கூட்டம். இதோ இந்த பென்&டிரைவில் 150 புத்தகங்கள் உள்ளன. ஆனால் எனக்கு டிஜிட்டல் எழுத்தின் மீது ஈர்ப்பு இல்லை. பாடப் புத்தகங்களுக்குள் வைத்து பகுத்தறிவையும் இயங்கியலையும் வாசித்து வளர்ந்தவர்கள் நாங்கள்..புத்தகம் என்பது வேறு... அதைத்தொட்டு பிரித்து நுகர்ந்து.. நெஞ்சோடு அணைத்து.. நடந்தபடி.. படுத்தபடி.. சாப்பிட்டபடி.. திண்ணையில், ரயிலடியில், அரசமர நிழலில்.. எங்கெங்கும் கொண்டு சென்று வாசிக்கும்.. அது ..அது தான் முழுமைபெற்ற வாழ்வு..

நீங்கள் அப்படி வாசித்த நூல்களில், உங்களை நிறைவடையச் செய்த புத்தகங்கள் என்று எதையாவது குறிப்பிட முடியுமா...? எந்த புத்தகத்தையாவது திரும்ப வாசித்தது உண்டா?

பதிவு செய்யத்தக்க மனித வரலாற்றின் மூவாயிரம் ஆண்டுகளில், தலைசிறந்த&மனித சிந்தனை போக்கையே மாற்றியமைத்த பல நூல்கள் உள்ளன.ஏராளமான புத்தகங்கள் என்னை நிறைவடைய வைத்த பட்டியலில் உண்டு.டிமோதி பெரிஸ் என்று ஒரு விஞ்ஞானி, இவர் கம்மிங் ஆஃப் ஏஜ் இன் தி மில்கி வே (comming of Age in the milky way) என்று ஒரு புத்தகம் எழுதினார். வரலாற்றில் இன்று வரை மனிதனை பதப்படுத்தி, உலகில் வென்று நின்ற இனமாக்கிய புத்தகங்களை அதில் பட்டியலிடுவார்.

 

நான் என்னை பதப்படுத்தியதாய் மூன்று புத்தகங்களை கருதுகிறேன். நியூட்டனின் பிரின்சிபியா புத்தகம், கலீலியோவின் & சூரியன் மைய கோட்பாட்டு அரசியல் ஆய்வு நூலைவிட பல மடங்கு அற்புதங்கள் கொண்டது என பொதுவாக ஐன்ஸ்டீன் வரை அனைவராலுமே முன் மொழியப்படுகிறது. டெஸ்கார்ட்டஸ் (தெகார்த்தே), ரூசோ, மார்க்ஸ், நீட்சே... இவர்களை எல்லாம் நாம் புறந்தள்ளிவிடவே முடியாது.

ஆனால் உண்மையிலேயே உலகின் மந்த மனநிலை மீது ஒரு ஆதர்ச தாக்குதல் தொடுத்து அனைத்து மூட நம்பிக்கைகளின் மீதும் ஓங்கி அறைந்த புத்தகம் டார்வினின் & உயிரிகளின் தோற்றம். (The origin of species). மார்க்ஸே, தனது மூலதனத்தை டார்வினுக்கு சமர்ப்பிக்கிறார்.ஆரிஜின் ஆஃப் ஸ்பீசிசை நான் திரும்பத் திரும்ப வாசித்துக் கொண்டே இருக்கிறேன்.சில அத்தியாயம் சில பகுதிகளை மனப்பாடமாகக்கூடச் சொல்வேன். நான் கல்லூரியில் படித்தது இயற்பியல், பிறகு உளவியலும்,ஆங்கில இலக்கியமும், கல்வியியலும் விரும்பி வாசித்த முதுகலைப்பட்டங்கள். ஆனால் உயிரிகளின் தோற்றம் என்னை கட்டிவிடுகிறது. முதல் பக்கம் படித்ததும், பிறகு உங்களால் அதை கீழே வைக்க முடியாது. கடவுள் என்பவன் உலகை ஆறே நாட்களில் படைத்ததாக அதுவரை இருந்த புளுகை இது உடைத்தது.படைப்பு & சாத்தியம் இல்லை.பரிணாமமே ரகசியம் என உணர்த்தியது.போப்பாண்டவர் டார்வினுக்கு அவர் உயிருடன் இருக்கும் போதே மரண சர்டிபிக்கேட் அனுப்பினாராம்.அத்தனை தாக்கத்தை அது ஏற்படுத்தியது.

வில்டுராண்டின், தி ஸ்டோரி ஆஃப் ஃபிலாசஃபி (The story of philosophy) படித்திருக்கிறீர்களா... நான் திரும்பத் திரும்ப வாசித்துக் கொண்டே இருக்கிறேன். கல்வியில் மாற்று சிந்தனைக்கு வித்திடும் & நான் தமிழில் மொழி பெயர்த்துள்ள & பாப்லோ பிரையரேவின் & ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்கான கல்வி முறை திரும்பத் திரும்ப வாசிக்கிறேன்...ஒரு ஆசிரியனாய் என்னை நெறிப்படுத்தும் நூல் அது..

பாப்லோ பிரையரே காட்டும் 'பிரச்சனைகளை மையப்படுத்திய கல்வி' இங்கே இந்தியச் சூழலில் சாத்தியமா...தமிழ் சமூகச் சூழலில் மாற்று வகுப்பறையை கண்டடைய முடியுமா?

பாப்லோ பிரையரே & ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கல்வியை வென்றெடுத்த மார்க்சிய கல்வியாளர்.இந்திய சூழல் மட்டுமல்ல உலக அளவில்கூட கல்வி என்பதே இருப்பை தக்கவைக்கும் அதிகார வர்க்கத்தின் யுக்தியாகவே உள்ளது.

தமிழ் சூழலுக்கான,சமுதாயத்திற்கான கல்வியை வென்றெடுக்க நாம் தவறி விட்டோம். உங்கள் கேள்வி நியாயமானது. எழுபதுகளின் இறுதி தொடங்கி முழு வியாபாரமாகவும், தமிழை புறக்கணிக்கும் ஆங்கில ஆதிக்கமாகவும் நம் கல்வி அனைத்துவகை அதிகார பரிவாரங்களின் முழு ஆதரவோடும் புரையோடிப் போய்விட்டது. இது நமது கல்வியே அல்ல.தார்மீக ரீதியில் இந்தியை, இந்தி திணிப்பை உக்கிரமாக எதிரித்து வெற்றிகண்ட நம் தமிழ் அரசியல் ஜாம்பவான்கள், நமக்கான கல்வியை வென்றெடுக்க தவறினார்கள். வரலாற்றில் மன்னிக்க முடியாத துரோகம் இது.

கிட்டத்து மாநிலங்களான கேரளா, கர்நாடகாவில் கூட நிலைமை இவ்வளவு மோசமாக இல்லை.அங்கே சரளமாக குழந்தைகள் (85% குழந்தைகள்) ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழியில் கல்வி கற்கின்றனர். கல்லூரியில் உயர்கல்வி மலையாளத்தில், தெலுங்கில் உள்ளது.நாம் தவறி விட்டோம். மாண்டசோரி முறைப்படி கல்வி அளிப்பதாய் பொய் சொல்கின்றன, நர்சரி பள்ளிகள். மாண்டசோரி தாய்மொழி கல்வியை ஆதிரித்தவர். இந்தியாவுக்கே பலமுறை வந்து சென்றவர். மாண்டசோரி பெயரில் ஆங்கில கல்வி எனும் மோசடிக்கு துணிந்து அரசு ஆதரவு அளித்து வரும் அவலம், வேறு எந்த சமூகத்திலும் நிகழவில்லை.

1169--/1200 எனும் அதீத மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் சாதனை படைக்கும் ஒரு தமிழ் வழி கல்வி மாணவர் பொறியியல் கல்லூரியின் ஆங்கில & வழி கல்வியால் கொலை (தற்கொலை அல்ல) செய்யப்படும் மனம் பதறவைக்கும் கொடுமை, இனப்படு கொலைக்கு இணையானது. நம் குழந்தைகளுக்கான கல்வி நம் தாய் மொழியில் இல்லை என்றால் அது என்ன கல்வி?

உலக அளவில் தகுதி பெற ஆங்கில வழி கல்வி தான் தேவை என்கிறார்களே?

ஆங்கிலம் அவசியம் என்பது உலகமயமாதல் ஏற்படுத்திய ஒரு மாயை. இது ஒரு வகை ஆதிக்கம்.தமிழ் உணர்வு, ஆங்கிலம் உயர்வு என்றெல்லாம் சமூக பொது புத்தியில் புகுந்து கொண்டு ஆக்கிரமிப்பு செய்கிறார்கள்.

இந்த ஆங்கில கல்வியில் பெரிய சாதனை எதுவும் இல்லை.ஆங்கில பள்ளிகளில் நான் அரை நூற்றாண்டாக வேலை பார்க்கிறேன்.நம் குழந்தைகளுக்கு தமிழும் ஒரு வரி சரியாக எழுதத் தெரியாது.ஆங்கிலமும் சரியாக எழுத பேசத் தெரியாது.அவர்கள் மனப்பாடம் செய்வது தவிர,வேறு எந்த வேலையும் பெரிதாய் செய்வது இல்லை...இப்படி நாளன்றிற்கு எட்டுமணிநேரம் இளமை முழுதையும் பணம் தேடும் வெறிக்கு பலியிடும் கொடுமை, உலகில் வேறு எங்குமே நடந்திருக்க முடியாது.மத்தியதரவர்க்கத்தின் பணம் தேடும் & செல்வம் கொழிக்கும் குபேர வாழ்க்கை & வெறி, ஆங்கில கல்வியை து£பம் போட்டு வளர்க்கிறது.

2005ம் ஆண்டின் தேசிய கல்வி அறிக்கை தாய் மொழி கல்வியை கோருகிறது.யஷ்பால் கமிட்டி அறிக்கையை முன் வைத்து தயாரான அந்த கொள்கை ஆவணத்தை கருத்தில் கொண்டு மற்ற மாநிலங்கள் தங்களுக்கான கொள்கை ஆவணங்கள் தயார் செய்து விட்டன. தமிழகத்தில் இப்போது தான் அதற்கு முதல் படியே எடுத்து வைத்திருக்கிறார்கள்.அதுவும் கல்வியாளர்கள் வழக்குமன்றம் போய் விடுவார்களோ எனும் அச்சம் ஒரு புறம். குழந்தைகளுக்கான கல்வி உரிமை சட்டம் ஒருபுறம்.இல்லையேல் இவ்வளவேனும் நடந்திருக்குமா.இப்போதும் இக்கல்விக் குழுவில் பெரும்பாலும் அதிகாரிகள் உள்ளனர். சமூக போராளிகளும் குழந்தை உரிமைப் போராளிகளும் புறந்தள்ளப் படுகிறார்கள்.

தேர்வு மதிப்பெண்களை வைத்து உயர்கல்வி என்பதால் தான் இவ்வளவு மனஅழுத்தமா? இதன் மூலம் தற்கொலைகளும் அதிகரித்து வருவதைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்?

இங்கே நடப்பது கல்வியல்ல, தேர்வுக்கான பயிற்சி. கல்வியை கேள்வி& பதிலாக கூறுபோட்டு வைத்திருக்கிறோம். இதனை பாப்லோ பிரையரே வங்கிமுறை கல்வி என அறிவித்தார்.வங்கியில் பணம் போடுவது போல மாணவரின் தலையை திறந்து பாடம் என அரசு கருதுவதை பொத் பொத்தென கொட்டுவதே ஆசிரியரின் வேலையாக உள்ளது.'குழந்தைகளை தேர்வர்களாக வளர்க்கிறீர்களே.. வெட்கமாக இல்லையா' என்று ஜான்ஹோல்ட் கேட்கிறார்.புத்தகமற்ற கல்வியை, மரியா மாண்டசோரி முன் மொழிந்தார்.நமது கல்வி கல்வி பயிற்சியாகவே உள்ளது.

தேர்வு முறை பலவிதமான பலவீனங்களால் ஆனது.முதலில் உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றி தெரிந்திருந்தால் போதாது.. எழுதத் தெரியவேண்டும். ஒரு யானை பராமரிப்பாளன், யானை பற்றிய தேர்வில் பாஸ் பண்ண முடியாது..எழுதத்தெரியணுமே. சரி எழுதத் தெரிந்த ஒருத்தரை எடுத்துக் கொள்வோம்.டெண்டுல்கர் வந்தால் கிரிக்கெட் பற்றிய பாடத்தின் தேர்வில், பெயில் தான் ஆவார்!ஏனென்றால் எழுதத்தெரிந்தால் போதாது..உங்கள் புத்தகத்தில் உள்ளதை 'அப்படியே' எழுதத் தெரிய வேண்டும்..இந்தத் தேர்வுகளில் நகலெடுக்கும் இயந்திரங்களே தேர்ச்சி பெற முடியும்; சராசரி குழந்தைகள் அல்ல. பதினான்கு ஆண்டுகாலம் படித்ததை, பிளஸ்&டூ வகுப்பு இறுதி தேர்வின் நான்கே மைய & தாள் மதிப்பெண்களைவைத்து மதிப்பீடு செய்வது அதைவிட பெரிய அபத்தம். அதனால் தான் ராசிபுரத்திலும் நாமக்கல்லிலும் கோழிப்பண்ணைகளை மூடிவிட்டு பயிற்சி மையங்களை ஆரம்பிக் கிறார்கள்.

இப்போது குழந்தைகள் மைய கல்வி என்பது பற்றி நிறைய பேசப்படுகிறதே.? சமச்சீர் கல்வி என்பது அது தானா?

ஏதோ இதுவரை கல்வி என்கிற ஒன்று, ஆசிரியரை மையப்படுத்தி இயங்கியது போலவும் இப்போது அது குழந்தைகளை மையப்படுத்தி மாற்றப்பட்டுள்ளதாகவும்.. அடிக்கடி அறிவிப்பு போல செய்து கொண்டே இருக்கிறார்கள்.எல்லாமே அதிகார வர்க்கத்தை மையப்படுத்தி இயங்கும் கல்விதான். நமக்கான கல்வி சமச்சீர் கல்வி அல்ல. அது நமக்கு நன்றாகத் தெரியும். ஆனாலும் அதிகாரமே வழங்கிய இரு நகல்களில் ஒன்றைப் பெறவே இவ்வளவு போராட வேண்டியாகிவிட்டது. இந்தக் கல்வி அதிகார மையக் கல்வி.அமைச்சர் சொல்வதை இயக்குனரக அதிகாரிகள் கேட்கிறார்கள்.. அவர்கள் சொல்வதை மாவட்ட அதிகாரிகள் கேட்கிறார்கள்.. சீ.இ.ஓ...டி.இ.ஓ சொல்வதை தலைமை ஆசிரியர்கள் கேட்கிறார்கள். தலைமை ஆசிரியர் சொல்வதை ஆசிரியர்கள் கேட்கிறார்கள். ஆசிரியர்கள் சொல்வதை மாணவர்கள் கேட்க வேண்டும். மாணவர்களான குழந்தைகள் சொல்வதை கேட்கத் தான், ஆள் கிடையாது.

அதிகாரிகளுக்கு தேர்வு முடிவு, விழுக்காடுகளின் மேல்தான் குறி. தேர்வு விழுக்காடு அதிகரிக்க வேண்டும் என்ற ஒரு உத்தரவு போதும், குழந்தை சித்திரவதை என வேறு எதையுமே காட்ட வேண்டியதில்லை. எதற்கெடுத்தாலும் ஆசிரியர்களை குறை சொல்வது இன்று ஒரு ஃபேஷன். இந்தக் கல்வி முறை குழந்தைகளை மையப்படுத்தி இயங்கும் கல்வி முறை அல்ல; ஆசிரியர்களை மையப்படுத்தியும் அது இயங்கவில்லை. அதிகாரத்தையும், அதிகாரிகளையும் மையப் படுத்தி இயங்கும் கல்வி முறை இது.முரட்டுத்தனமாய் தேர்வு முடிவு விழுக்காடுகளை மாணவர் ஆசிரியர் மீது வன்மமாகத் திணிக்கும் இந்தக் கல்வி முறை மாணவரையும் ஆசிரியரையும் ஒருவருக்கு எதிராக ஒருவரை எதிர் நிறுத்துகிறது.ஆசிரியரின் மீதான அபிப்ராயம் அந்த பாடத்தின் மீதான வெறுப்பாகவும், ஒரு பாடத்தின் மீதான வெறுப்பு அந்த ஆசிரியரின் மீதான ஆத்திரமாகவும் இங்கே மாறிவிடுகிறது.

அதனால் தான் ஆசிரியர்&மாணவர் உறவு பாதிக்கிறதா? வகுப்பறையில் கொலை...

குழந்தைகள் பேச அனுமதிக்கப்படாத ஒரு கல்வி முறை இப்படித்தான் போய் முடியும்.இங்கே குறைந்தபட்ச உரையாடலுக்கும் இடமில்லாமல் இருக்கிறது. எப்போதும் 'கையை கட்டு.. வாயை பொத்து' தான். வீட்டிற்குப் போனால் அப்பா அம்மா இருவருமே வேலைக்குப் போய்விட்ட தனிமை.குழந்தைகள் விளையாடும் மரத்தடிகளும், குது£கலிக்கும் வீதிகளும் இன்று காணக் கிடைப்பதில்லை. கிராமப்புறங்களில் கூட இன்று இது தான் நிலைமை. குழந்தைகள் பேச விரும்புகின்றன... சொல்ல விரும்புகின்றன... வகுப்பறையில் ஆசிரியரின் அதிகார ஒலி கேட்டுக் கொண்டே இருக்கிறது... 'கீப் கொயட்... கவனி' 'இங்கே கவனி' குழந்தைகள் சொல்ல விரும்புகின்றன '..நாங்கள் சொல்வதை கவனியு-ங்கள்..' எப்போ தெல்லாம் உங்கள் கல்வி குழந்தைகளை மையப்படுத்தாமல் வெகு து£ரம் விலகுகிறதோ, அப்போதெல்லாம் மீண்டும் தங்களை மையப்படுத்துவதாய் ஆக்கிட அவர்களது குரல் கேட்கும். அவர்கள் மொழி வேறு, வழிமுறைவேறு. செய்தி ஒன்று தான்...நாங்கள் சொல்வதைக் கேளுங்கள்.சிலர் பள்ளிக்கு கட் அடிக்கிறார்கள்.ஊரைவிட்டே ஓடுகிறார்கள் சிலர்.வேறு வழியின்றி தற்கொலை செய்து கொள்கிறார்கள் சிலர்...ஒரு மாணவன் பள்ளிக்கு எடுத்துப் போக கத்தி வாங்குவதென முடிவு செய்கிறான்...செய்தி ஒன்று தான்.. 'நாங்கள் சொல்வதை கேட்பீர்களா இல்லையா'...எனும் குழந்தைகளின் வழி அது..

எதற்கெடுத்தாலும் தற்கொலை...

இது கல்வி முறை, சமூக அணுகுமுறை இவற்றின் கோளாறு. குழந்தையின் கோளாறு அல்ல.முற்றிலும் வணிக மயமாகிப்போன கல்வியின் அவலம் இது.முழுக்க முழுக்க பயிற்சி மட்டுமே தரப்படும்போது,வாழ்க்கை பிரச்சனைகள் குறித்து அளவளாவ இக்கல்வியில் இடமில்லை.

இது மெக்காலே&கல்வியால் வந்த வினை தானே... நமது குருகுலக் கல்வி இப்படி இல்லையே...

(இடைமறிக்கிறார்)இல்லை..இல்லை.இந்த வகை பார்வையில் பல கோளாறுகள் உள்ளன...நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். ஒட்டு மொத்தமாக நாம் மெக்காலே மீது குற்றம் சுமத்திவிட முடியாது. பிரிட்டிஷ் ஆட்சிக்கு தேவையான வேலையாட்களை உற்பத்தி செய்ய வந்தது தான்,இன்று பில்கேட்ஸ் போன்றவர்களுக்கு வேலையாட்களை உற்பத்தி செய்து கொண்டிருக்கிறது.நான் மறுக்கவில்லை ஆனால் டாக்டர் அம்பேத்கார்,தந்தை பெரியார் ஏன் பகத்சிங் போன்றவர்கள் கூட மெக்காலே கல்வி முறையை ஆதரித்தார்கள் என்பதை பார்க்க வேண்டும்.

ஏனென்றால் மெக்காலே முறை கல்வியை, ஆங்கிலேய அரசு கொண்டு வரும் வரை இங்கே கல்வி அனைவருக்கும் பொதுவானதாக இருக்கவில்லை. எத்தனையோ குறைபாடுகளை இக்கல்வி கொண்டிருந்தாலும், ஆணும் பெண்ணும் சமமாக உட்கார்ந்து பயிலும் பொதுப் பள்ளிகளை, சாதி மத வர்க்க வர்ணாசிரம பேதமற்ற பொதுப் பள்ளிகளை நமக்கு கொடுத்தது மெக்காலே கல்வி முறை தான். குருகுலக் கல்வி என்பது ஒரு ஆதிக்க மோசடியாகவே இருந்தது.திண்ணை கல்வி என்கிறீர்கள்.பள்ளி திண்ணையில் ஏன் இருக்க வேண்டும்? வீட்டிற்குள் வர முடியாதது ஏன்..என்கிற இடத்திலேயே அதன் தீட்டு பார்க்கிற முகமூடி கிழியவில்லையா?இதனை மெக்காலே கல்வி தான் உடைத்து, பொது பள்ளிகளை உருவாக்கியது...அதன் செயல்பாடு உலக மேடையோடு நம்மை ஒன்றிணைய வைத்தது.கல்வியின் பலம், பலவீனம் இருக்கட்டும்...மெக்காலே வகை பள்ளிகள் வந்திராவிட்டால் கல்விக் கற்கும் உரிமையே நமக்கு வந்து சேர்ந்திருக்குமா என்பதே சந்தேகம் தான்.

இப்போது குழந்தைகளுக்கான துவக்கக்கல்வி அடிப்படை உரிமை ஆக்கப்பட்டுள்ளது..அதன் முக்கியத்துவம் என்ன?

பகத்சிங் போன்றவர்களின் எழுச்சி முழக்கங்களை அடுத்து, கோபாலகிருஷ்ண கோகலே 1910ல் அப்போதைய பிரித்தானிய&தற்காலிக பிரதிநிதிகள் சபையில் ஆரம்பக் கல்வியை கட்டாயமாக்க வேண்டுமென ஒரு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.2009ல் பல்வேறு நிர்பந்தங்களுக்கு பணிந்து, இந்திய அரசு குழந்தைகளுக்கான கட்டாய கட்டணமற்ற கல்வியை உரிமையாக்கி சட்ட ஷரத்து 86ஐ நிறைவேற்றியது. எனவே கல்வி உரிமைக்கான போராட்டம் என்பது ஒரு நூறு வருட போராட்டம். 1948ல் இந்திய பிரஜைகளுக்கு கல்வியை அடிப்படை உரிமை ஆக்கிட அண்ணல் அம்பேத்கார் முயன்ற போது, அப்போதைய நேரு அரசாங்கம்...காஹர் கமிட்டி என்கிற ஒன்றை அமைத்து, அதற்கு ஆகின்ற செலவை காரணம் காட்டி, கல்வியை அடிப்படை உரிமை பட்டியலான 24ம் பிரிவிலிருந்து நீக்கி, அரசு பத்தாண்டுக்குள் தரவேண்டியவைகளான 'தேவை' பட்டியலில் சேர்த்தது.

இப்போதும் கூட ஒரு சராசரி பள்ளி நாளில் கல்வி கற்க பள்ளிக்குப் போகிறவர்களை விட, போகாத குழந்தைகளின் எண்ணிக்கை இந்தியாவில் ஏனைய ஆப்பிரிக்க நாடுகளைவிட அதிகம் என்று அமெர்தியா சென் குறிப்பிடுகிறார்.

கல்வி வர்த்தகமாகிவிட்ட நிலையில், இந்த சட்டம் எப்படி வேலை செய்யும்... வெறும் கண்துடைப்பாக மாறவும் வாய்ப்பு உள்ளதல்லவா?

மிக சரியாகச் சொன்னீர்கள்...தனியார் பள்ளிகளும் 25 சதவிகித இடங்களை நலிவடைந்த பிரிவினருக்கு ஒதுக்க வேண்டுமென இச்சட்டம் கோருகிறது. உன்னிகிருஷ்ணன் வழக்குக்கான உச்ச நீதிமன்ற தீர்ப்பும், மாணவர் சங்கங்கள் நடத்திய உக்கிரமான போராட்டங்களும் இல்லையேல் இது கூட கிடைத்திருக்காது. 70களில் அரசு பள்ளிகளில் மேட்டுக்குடி குழந்தைகளும் ஒடுக்கப்பட்ட வர்க்கத்து குழந்தைகளும் ஒன்றாக அமர்ந்து கல்வி கற்ற ஒரு மிக்ஸட் சூழல் இருந்தது.தனியார்மய நர்சரி பள்ளிகள், மெட்ரிக் பள்ளி கலாச்சாரம் வந்த பிறகு இந்த வசதி படைத்த கூட்டம், அரசு பள்ளிகளை காலி செய்து கொண்டு போய்விட்டது.இன்று அரசுப்பள்ளி என்பதே நலிவடைந்த பிரிவு மாணவர்களுக்கு என்று ஆகிவிட்டது.இப்போது இந்த சட்டம் மீண்டும் கலப்புப் பள்ளிகளான பொதுப் பள்ளிகளை கோருவது நாம் போராடிப் பெற்ற உரிமை.அதனைவிடாமல் பாதுகாப்பது நமது முழுமுதல் கடமை.அதற்காக சமூக நல போராளிகளும், ஆர்வலர்களும் இந்த சட்டத்தின் அமுலாக்கத்தை கண்காணிக்க வேண்டியுள்ளது.

சரி..இப்போது இலக்கியத்தின் பக்கம் திரும்புவோம். சிறுவர்களுக்கான இலக்கியத்தில் இன்று உங்களது பங்களிப்பு அபாரமாக உள்ளது.உங்கள் நூல்களை குழந்தைகள் விரும்பி வாசிக்கின்றனர். அவர்களுக்கான மொழியை எப்படி கண்டடைந்தீர்கள்?

குழந்தைகள் மூன்று விதமான மொழி உலகில் பரிணமிக்கிறார்கள்.முதலாவது வீட்டின் பேச்சு மொழி.இரண்டாவது ஊடக மொழி.அதாவது டி.வி. கார்டூன் நெட் ஒர்க்...அந்த மொழி.மூன்றாவது பள்ளியின் பாடப்புத்தக மொழி..நான் பாடப் புத்தக மொழியை அவர்களை அடையும் எனக்கான வழியாக தேர்வு செய்தேன்...காரணம், பிற்காலத் தொடர் தமிழ் இலக்கிய வாசிப்பினை நோக்கி அது தான் அவர்களை ஊக்கப் படுத்தும். அதில் ஓரளவு வெற்றி கண்டது எனக்கே...கொஞ்சம் ஆச்சரியம் தான்...ஆனால் இன்னமும் அதற்கான வேலைகள் நிறைய உள்ளன.

அறிவியலை பிடிவாதமாக எடுத்து எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்...தமிழில் அதற்கான வரவேற்பு எப்படி உள்ளது.

அந்த திசையில் உண்மையிலேயே சவால்கள் மிக அதிகம். தமிழில் அதற்கான சொல் செழிப்பு இன்னமும் உருவாக வில்லை.இங்கே அறிவியல் கல்வி&குறிப்பாக உயர்கல்வி, தமிழில் இல்லை.எனவே தொடர்ச்சியான வாசக பின்புலம் கிடையாது..ஒரு காரல் சாகன் போலவோ, ரிச்சர்ட் டாக்கின்ஸ் போலவோ இங்கே எழுதினால் வாசிக்க ஆள் கிடையாது.இங்கே தகவல் நூல்கள் தான் அறிவியல் நூல்கள் என்று அழைக்கப்படுகின்றன! ஒரு மாதத்திற்கு 600 பி.எச்.டி தீசிஸ், சமர்ப்பிக்கப்படும் நம் பல்கலைகழக அறிவியல் பொறியியல் துறைகளுக்கு தமிழ் அறிவியல் வளர்ச்சி பற்றி எந்த அக்கறையும் கிடையாது.சமர்பிக்கப்படும் நாலு பிரதியில் ஒன்று தமிழில் இருக்க வேண்டும் என குட்டியாய் ஒரு உத்தரவு போதும்..தமிழ் அறிவியல் வளர்ச்சியுறும்..கூகுள் போன்ற இணைய தளங்கள் அளவுக்கு கூட, மக்கள் வரிப்பணத்தை தின்று கொழுத்த பல்கலைகழகங்கள் அறிவியல் தமிழை வளர்க்க முனையவில்லை என்பது மிகப் பெரிய சோகம்.

உங்கள் சிறுகதைகள் தமிழ் படைப்புலகில் தீவிர வாசக தளத்தை அடைந்தவை..இப்போது மிக அபூர்வமாக எழுதுகிறீர்களே...

எழுதுவதை நிறுத்திவிடவில்லை...என் கதைகள் ஒவ்வொன்றுமே ஒருவிதத்தில் சோதனை முயற்சிகளே..தினம் ஒன்றும் உருவாகலாம்..இரண்டாண்டுக்கு ஒன்றும் கூட எழுதலாம்..ஏன் என்ன அவசரம்?

புத்தகங்களை அறிமுகம் செய்வதில்.. உங்களது முன்னோடிகளாக யாரையாவது கருதுகிறீர்களா?குறிப்பாக மொழி பெயர்ப்புகள் கூட தீவிர அரசியல் நோக்கம் கொண்ட படைப்புகளாய் உள்ளனவே..

எல்லாவற்றுக்கும் முன்னோடிகள் இருக்க வேண்டுமா என்ன? பிற மொழி நூல்களை தமிழில் அறிமுகம் செய்வதில் பாரதியை விட பல படிகள் முன் சென்றார் சிங்காரவேலர்.புதுமைப்பித்தனும்,க.நா.சுவும் ஏன் சுஜாதாவும் கூட அதில் பெரும் பங்களிப்பு செய்தவர்களே.. மொழி பெயர்ப்பைப் பொறுத்தவரை நான் இந்திரனைத்தான் சொல்வேன். ஐம்பதாண்டு களாக தமிழில் அற்புத ஆப்பிரிக்க லத்தீன் அமெரிக்க கவிதை,கதை என தொடர்ந்து பங்களிக்கும் அவர் தான், தனது தீரா நட்பின் மூலம் மொழிபெயர்ப்பு ஆர்வத்தை எனக்குள் விதைத்தவர்.

'புத்தகம் பேசுது' இதழ் வேலைகளில் உங்களது வாசிப்பின் நேர்த்தியை பார்க்கிறோம். இதழை எப்படி திட்டமிடுகிறீர்கள்.?

'புத்தகம் பேசுது' இதழ் ஒரு கூட்டு முயற்சி. தோழர்கள் தமிழ்ச்செல்வன், நாகராஜன்,கமலாலயன் எஸ.வி.வேணுகோபால், கீரனு£ர் ஜாகீர் ராஜா என தீவிர நோக்கத்தோடு நாங்கள் செயல்படுகிறோம்..வாசிப்பு ஒரு அரசியல் செயல்பாடு.. Reading is also a political Activity என நாங்கள் நம்புகிறோம். 

இப்போது என்ன வாசித்துக் கொண்டிருக்கிறீர்கள், என்ன எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்.?

ஜப்பானிய அறிவியலாளர் மிச்சியோ காக்கூ எழுதிய பிசிக்ஸ் ஆஃப் தி பியூச்சர் (Physics of the Future) நூலை வாசித்துக் கொண்டிருக்கிறேன்.

'டார்வின் ஸ்கூல்' என்று, சிறுவர்களுக்கான அடுத்த நாவலை எழுதிக் கொண்டிருக்கிறேன்.