படுக்கப் பாயில்லே
பசியெரிச்ச அடங்கலே
பொரள இடமில்லே
பொகைக்க சுருட்டு இல்லே
நடக்கமாட்டா கால்லே
நரம்புளைச்ச தாளலே
திட்டப் பொட்டையில்லே
திரும்பிப் பார்க்க நாதியில்லே
குழறும் வாயாலே
அம்மான்னு முனக ஏலலே

கூரைக் குடிசையிலே
குனிஞ்சு நொழைஞ்ச
சின்னவயசு சேக்காளி
முகம்மது ராவுத்தன்
“கதிர்வேலு பண்ணை இருக்காகளா
கடக்குட்டிக் கதிசாவுக்கு நிஹ்ஹா''ன்னு
கடுதாசி நீட்டினான்.

“மேலருந்து எப்படா மம்மூது
கடுதாசு வரும்''னேன்
புறங்கையால கண்ணத் தொடச்சபடி
“அல்லாவே''ன்னுட்டு அவன் போனான்.

Pin It