அந்த வெறுமையைத்
 தோட்டம் அறிந்திருக்கிறது.
கைநிறைய மலர்களோடும் கனிகளோடும் உறவாடும்
அந்த ஸ்பரிசத்தை இழந்த தென்னையும் மாவும்
ஒற்றைக் குயிலைச் சுமந்தபடிக்கு
காற்றின் மௌனத்தைச் சுவைக்கிறது.
அசையும் அசையா
பொருட்களெல்லாம்
அறிந்திருக்கின்றன அப்பாவையென்பது
எவ்வாறாகவோ உணரப்படுகிறது.
முதுமையும் குழந்தைமையுமான
தனி வாசனை வீடெங்கிலும் இருக்கிறது.
அப்பா இருந்தபோது
அது அப்பாவின் வாசனை என்பதை
அறியாமலேயே இருந்தோம்.
விதவிதமான குருவிகள்
வந்தபடியுள்ள தோட்டம்
அப்பாவால் பேணப்பட்டது.
குருவிகளைத்
தோட்டம் அறிந்திருக்கிறது.
ஜன்னல் கம்பிகளில்
கை பதித்த படிக்கு அவற்றோடு
கண்களால் உறவாடுவார்.
இன்றைக்கும்
தோட்டம் குருவிகளால் நிறைந்திருந்தாலும்
கை நிறைய மலர்களோடும் கனிகளோடும்
உறவாடும் அந்த ஸ்பரிசத்தை
இழந்த தவிப்பு
தோட்டத்திற்கிருக்கிறது.
அப்பாவின்
மேல் துண்டையும்
கால் செருப்பையும்
கண்ணுரும்
எங்களது
தவிப்பைப் போல.
Pin It