1970களில் துவங்கிய சங்கமித்ராவின் எழுத்துகளுக்கு 07.04.2012 அன்று “முற்றும்'' போடப்பட்டு விட்டது.

                எழுத்துகளா அவை? பார்ப் பனியத்தைப் பதற வைத்த நெருப்புத் துண்டங்கள். “குடி அரசு''க்கு ஒரு கைவல்யம். சங்கமித்ரா “விடுதலை''க்குக் கிடைத்த “சின்ன கைவல்யம்''. புரட்சிக்கவிஞர், பாவேந்தர் - பெரியாரின் இலக்கிய வடிவம். சங்கமித்ராவை - பெரியாரின் உரை வடிவம் என்று சொல்லலாம்.

                பெரியார் நூற்றாண்டு விழா நடைபெற்ற அந்த ஓராண்டுகால விடுதலையில் - “பெரியார் நூற்றாண்டு விழா சிந்தனைகள்'' என்ற தலைப்பில் அவர் எழுதிக் குவித்த கட்டுரைகள் பல்வேறு துறைகளில், பெரியாரியலின் உரை வடிவங்கள் என்று சொன்னால் மிகை யில்லை.

                “யார் இந்த சங்கமித்ரா?''. பெரியார் திடலுக்குள்ளும், திராவிடர் கழக மாநாட்டு கூட்டங்களிலும் யாரையெல்லாமோ, எவரையெல்லாமோ அவராக இருக்குமோ, இவராக இருக்குமோ என்று இளைஞர்களை தேடவைத்தது அந்த எழுத்து. ஒரு உச்சத்தில் அவரே எழுதினார் விடுதலையில், “எப்போது தேவையோ அப்போது உங்கள் முன் பொதுமேடைக்கு வருவான் இந்த சங்கமித்ரா, எலும்பும், சதையுமாக'' என்று.

                “சங்கமித்ரா என்கிற பா.இராமமூர்த்தி''யாக “எலும்பும், சதையுமாக'' பொதுமேடைக்கு வந்தபோது, பெரியார் திடலிலிருந்தும், திராவிடர் கழக மாநாட்டுப் பந்தல்களிலிருந்தும் அவர் வெளியேறியிருந்தார் என்பது வேடிக்கையான உண்மை.

                பல ஓநாய்களுக்கு மத்தியில் ஒரு எருதாய் ஆம், பார்ப்பனர்களுக்கு மத்தியில் ஒரு பார்ப்பனரல்லாதவனாய் அவரின் பாரத ஸ்டேட் வங்கி வாழ்க்கையை தூக்கி எறிந்துவிட்டு பொது வாழ்க்கைக்கு வந்தபோது தமிழ்ச் சமூகத்திற்கு வாழ்வியல் சிந்தனைகள் அல்ல, தன்முன்னேற்றத் தகவல்கள் நிறையக் கிடைத்தன.

                ஊரெங்கும் மனிதர்களை உண்மையின் ஊர்வலமாக்கினார். அவர்கள் வெற்றியடைந்த வியாபாரிகள். வியாபாரக் கனவுகளை வெளிச்சமிட்டுக் காட்டி வெற்றி என்பது பார்ப்பனர்களின் சோற்றுப்படை சித்தாந்தமல்ல அதைத்தாண்டிய சுரண்டலற்ற சமூகத்திற் கானது என பொருளாதாரத்தைப் பெரியாரியலில் பொருத்திக் காட்டினார்.

                அவர் சொன்னார், “மனிதர்களை சொத்தின் அடிமைகளாக்கும் "கேபிடலிசம்' ஆகட்டும்; மனிதர்களை அரசின் அடிமைகளாக்கும் "கம்யூனிசம்' ஆகட்டும்; மனிதர்களை ஊழியர்களின் அடிமை களாக்கும் "சோசலிசம்' ஆகட்டும் இவைகளை எல்லாம்விட மனிதர்களை - மனிதர் களாக்கும் பெரியார் அவர்களுடைய முயற்சியே மிகவும் புகழ்ந்து போற்றுதலுக் குரியது''

                ஆம்,நிறுவனமயப்படுத்தப்பட்டு விட்ட பெரியாரை தத்துவமயப்படுத்த வேண்டும் என்பது என் போன்றோர் ஆதங்கம்! அதற்குத் தகுதி வாய்ந்த ஒருவர்

                “முற்றும்'' ஆனார்......!

Pin It