தொலைபேசியின் வழியாகவும், கடிதங்கள் வாயிலாகவும், நேரிலும் கேட்கிறார்கள், நாஞ்சில் நாடன் குறித்து நீங்கள் எவ்வாறு அவ்வாறு கூறலாம்? என்று. நாஞ்சில் குறித்து நான் ஒன்றுமே கூறவில்லை.  அவருடைய கதைகளை விரும்பி வாசித்திருக்கிறேன்; திரும்பத் திரும்ப வாசித்திருக்கிறேன். என் பிரச்சனை விருது அல்ல. நாம் என்ன சின்னப்பிள்ளைகளா, அவனுக்கு ஏன் முதல் பரிசு எனக்கு ஏன் இல்லை என கண்கசக்க அல்லது திட்ட, அல்லது தூர நின்று கல்லெறிய? சாகித்ய அகாதெமி விருது அவருக்குக் கொடுக்கப்பட்டது குறித்து மகிழ்ச்சியே; மட்டுமல்லாது நான் கவிஞனும் அல்ல; கதை எழுதுபவனும் அல்ல. எந்தப் பொறாமையும் இல்லை. மயிருள்ள சீமாட்டி அள்ளி முடியுறான்னு இருக்கிறவன் நான் (‘மயிர்’ என்பது கெட்டவார்த்தை அல்ல ‘மயிர் நீப்பின் உயிர் வாழாக்கவரி மான்’) தொலைபேசி, கடிதம் வாயிலாகக் கோபப்படுவோர் ‘சூடிய பூ சூடற்க’ தொகுப்பின் கதைகளை மீண்டும் ஒரு முறை படித்துப் பார்க்கவும்.

கும்பமுனியாகத் தன்னை வரித்துக் கொண்ட நாஞ்சில் நாடன், சமகால இலக்கியம், பத்திரிகைகாரர்கள், அரசியல் என அனைத்தையும் சாடுகிறார்.  நாஞ்சில் நாடனாகவே பேசலாமே. ஏன் வேறு முகம்? கும்பமுனியின் வார்த்தைகள் அத்தனையும் கூசச் செய்பனவாக உள்ளன. அழுக்காகவும், கெட்டுப்போனவைகளாகவும் வேறு உள்ளன. எனவே அவர் கும்பமுனியின் குரலில் பேசுகிறார்.  அவருக்கே பிடிக்காத வார்த்தைகளை வாசகனுக்கு மட்டும் தரலாமா?எங்கள் பக்கம் பெண்பிள்ளைகளுக்குள் வாய்ச் சண்டை வரும்போது சிலர் வண்டை வண்டையாகப் பேசுவார்கள். பலர் அவ்வித வார்த்தைகளுக்கு நாணப்பட்டு ‘நல்லால்ல வருது வாயில’ என்று சொல்லிக் கொண்டேயிருப்பார்கள்.  கடைசிவரை அந்த நல்லதைக் கூறவே மாட்டார்கள். அது போன்ற ஆட்களாக நாம் இருப்பதால், கும்பமுனி சர்வ சகஜமாக பேசும் வக்காளி, தாயேளி கிழக்...., போன்றவைகள் காதில் ஈயம் காய்ச்சி ஊத்துவதைப் போல் இருக்கின்றன (பழைய உவமைதான் அதற்கு இணையாக வேறு ஒன்றும் இல்லை)

கும்பமுனி வேண்டுமானால் இப்படிப் பேசலாம். நாஞ்சில் இப்படி எழுதலாமா? என்பது தான் கேள்வி. படம் போட்டு இதற்கொரு கதை அனுப்பு என்றாலும் ஆயிரம் வார்த்தைகளுக்கு மிகாது ஒரு கதை பண்ணி அனுப்புக என்றாலும் மரியாதைப்பட்ட எழுத்தாளருக்குக் கோபம் வரத்தான் செய்யும். எதிர்ப்பைக் காட்டுவது எப்படி. . .?  அவர்களுக்கு கதை அனுப்பக்கூடாது. அதை விட்டுவிட்டு கலை இலக்கியப் பண்பாட்டு மாத இதழ்களின் வழியாக “தாயோளி, பள்ளிக்கூடத்துல வாத்தியாரா இருந்திருப்பான் போல இருக்கு (வாத்தியார்னா அவ்வளவு எளக்காரம்) மார்க்கு போடுறதுக்கு கேள்வி கேக்கான்.  அவனுக்கு அம்ம எழுது வா கதை ஆயிரம் வார்த்தைகள் எண்ணிக் கணக்குப் பார்த்து.  இன்னிக்கு மலருக்குக் கதை கேட்டு வருது, ஆயிரம் வார்த்தையில நொட்டுன்னு. முப்பது நாப்பது வருஷத்துக்குப் பொறவு காத்துல விட்டக் குசுப்போல ஒன்னுமில்லாமப் போற கதையளுக்காக இவ்வளவு செறையா”ன்னு எழுதறவனுக்கெல்லாம் ஒரு பாட்டு.

“இதுவரைக்கும் எம்பது கதைக்கும் கெடைச்ச மொத்த சன்மானத்தையும் இப்பம் ரெண்டு கதை எழுதினா வாங்கீரலாம். ஆனா மூதி வரமாட்டேங்குது. . . காலம்பற கக்கூசு போனாலும் இதே எழவு தான்.  பழத்தைத் தின்னு, கீரைத் தின்னு, பச்சைக் கறிதின்னு வரமாட்டேங்குது.  கேவலம் பீ, அது சொன்ன பேச்சைக் கேட்க மாட்டேங்குதுவே.  பொறவுல்ல கத இலக்கியம்.”

கதை இலக்கியம்லாம் கும்பமுனி கிட்ட எப்படி ஆயிடிச்சுப் பார்த்தீங்கள்ல? இடக்கரடக்கல் என்பது இலக்கணம் அல்ல மொழிதல் நாகரிகம் என்று யார் சொல்வது.  சொல்ற இடத்திலயா நாம இருக்கோம்.  கேவலம் ஒரு வாசகன் இதுபத்தியெல்லாம் பேசலாமா?

“சாமியே. . . . . . . . . . . . . . . . . . . . . . .  அடிக்குதாம் பூசாரி பொம்புளவரங் கேட்டனாம்”

“மலையாளத்துலே சில சாகித்யமாரு உண்டும். ஓணம் மலர்லே மாத்திரம் எழுதுவான். வருசத்துக்கு அஞ்சு கதை சொளையா ரூ.பத்தாயிரம் பொறவு நல்ல ஊணு, நல்ல . . . . , நல்ல உறக்கம். ”

புள்ளி வைத்த இடமெல்லாம் நாம போட்டது, கும்பமுனிக்கு எதப்பத்தியும் கவல இல்ல. அவரு புள்ளியெல்லாம் போடல; நேரடியா எழுதுறாரு.  இப்படியெல்லாம் எல்லாரும் எழுதிட முடியுமா என்ன...  அப்படியெல்லாம் எழுதறதுக்கு நீங்க பென்னம் பெரிய எழுத்தாளனா இருக்கணும். பெருமாளா இருந்தா பத்தாது, பெத்த பெருமாளா இருக்கணும்.  அப்படியும் நம்ம பக்கத்து இளைஞர்கள் சிலர் வக்காளி, தக்காளியெல்லாம் போட்டு கத எழுதி அனுப்புவார்கள். எங்க அனுப்புறதுன்னு தெரியாம ஆனந்த விகடனுக்கும், கல்கிக்கெல்லாம் அனுப்பிவைச்சுட்டு காத்திட்டு இருப்பார்கள். என்ன, நம்ம காவிரிக்கரை மக்கள் ழ,ள ல்லொம் ஒழுங்கா பேசுவானா இன்னும் கெட்ட வார்த்தைங்க ஸ்பஷ்டமா ஒலிக்கும். இந்தத் தொகுப்பில் ஆனந்த விகடன்லயும் ஓம் சக்திலையும் எழுதுன கதைகள், உயிர்மை, உயிரெழுத்துல எழுதுனது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கு.  ஆனந்த விகடன்ல எழுதுனது ஓம் சக்தியில் எழுதுனதெல்லாம் நீங்களும் நானும் (அவ்வளவுக்குத் தெளிவு இல்லாதவனுங்க) படிக்கிற மாதிரியும், பெரிய தீவிர இலக்கிய ரசிகனுங்களுக்கு மட்டும் எழுதுன கதைங்க (குறிப்பா கும்பமுனி குளறியது) மத்ததுலையும் வந்திருக்கு.  பத்திரிகைக்குத் தக்கன எழுதறப்ப கோவம் என்னாத்துக்குங்கறேன்?

நாஞ்சில் கதைகளின் மையம் என்னான்னு கண்டுபிடிக்கிறதுக்குள்ள தாவு தீந்து போயிடுது. (‘மையம்’ னோன்ன கும்பமுனி எதாச்சும் சொல்லி திட்டிடப்போறாரு) கதையின் கரு அவ்வளவு தான்.  வாசகர்களுக்கு நிறைய தகவல்கள் கதைகள் வழிதருகிறார். தகவல் ஒன்றும் இல்லாட்டி பட்டியல் , பட்டியலாப் போடுறாரு, இப்ப்ப்ப. . . . . . . . . . . . . . . . . . . . .  கதைக்கு வந்துடுவார்னு நெனைக்கிறப்ப அடுத்த பட்டியல் போட ஆரம்பிச்சிடராரு “வெறுந் தகவல்கள் ஒரு நாவலுக்கு மிகப்பெரிய சுமை. நடை தள்ளாடுவது இப்போது தான்.  ஒரு அறையை வாசகனுக்குக் காட்ட வேண்டுமென்றால் அந்த அறைக்குள் இருக்கக்கூடிய எல்லாவற்றையும் விரிவாகச் சொல்லிவிட வேண்டுமென்பதில்லை.  அந்த அறையின் பொதுத்தன்மை, தனித்தன்மை இரண்டையும் மட்டும் சொன்னால் போதும், சுஜாதா இதில் விற்பன்னர்” (ஜெயமோகன் - எழுதும் கலை)

‘சூடிய பூ சூடற்க’ தொகுப்பில் ஒரு கதை ‘சங்கிலி பூதத்தான்’ அதில் எதிரே உழவுச் சாமான்கள் போட்டுவைக்கும் புரை.  உழவுச்சாமன்கள் எனில் பொடிக்கலப்பை, தொழிகலப்பை, கோடிக்கலப்பை என ஆரம்பித்து வேப்பெண்ணைய் கிண்ணம் ஈறாக முப்பத்தாறு பொருள்களைப் பட்டியலிட்டுவிட்டு, இரண்டு வரி எழுதுகிறார்.  பிறகு மீண்டும் ஒரு பட்டியல்.  சுடலைமாடன் என ஆரம்பித்துப் பதினான்கு நாட்டுப்புறத் தெய்வங்களின் பெயர்ப் பட்டியல், அலுத்துப்போகிறது.  எழுதிக் கொண்டே வரும் பொழுது சம்பந்தமற்ற தளத்தில் விவரணை செல்கிறது. அது அவருக்கே உறுத்தலாக இருக்க ‘நாம் தற்போது பெருவழியை விட்டு கிளை வழியில் பயணமாவதைத் தவிர்க்கலாம்’ என்கிறார். நம்பிப்போக முடியவில்லை, மறுபடியும் நம்மை கிளைவழியில் தான் அழைத்துச் செல்கிறார். ஊர்போய்ச் சேர்ந்த மாதிரி தான்னு ஆகிப்போவுது.

“எழுதும் பொழுது ஒரு குறிப்பிட்ட தோரணை வந்துவிடுவது, நடையை நிலைக்கச் செய்து மலினமாக்கும்.  வண்ணதாசன், வண்ணநிலவன் போன்றோரிடம் எப்போதும் ஒருமென் கவித்துவ சோகத்துடன் தனக்குத்தானே பேசிக்கொள்வது போன்ற பாவனை உள்ளது.  இது எல்லாக் கதைகளிலும் வரும் போது தேய்வழக்கு ஆகிவிடுகிறது.” (ஜெயமோகன் - எழுத்துக்கலை) எனக்கு என்னவோ வண்ணதாசன், வண்ண நிலவனுடன் நாஞ்சிலையும் சேர்த்துக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது.

‘யாம் உண்பேம்’ அர்த்தமற்றதான வாழ்வின் அவலத்தைச் சொல்லும் கதை. பசியின் குரூரம் குரூரமாகவே வெளிப்படும் அற்புதமான கதை.  அதில் ‘கும்பி என்பது தூர்ந்த கிணறு. அவியாத நெருப்பு.  ஆறாத புண். தன்னையே தான் தின்னும் வெறியான மிருகம், உள் ஒளிந்துகிடக்கும் உருவமிலா அணங்கு, எங்கு கொண்டுபோய்த் தொலைப்பது நிழலை’ என மென் கவித்துவ சோக நடையில், பசியின் குரூரம் மறைந்து போகிறது.

மிகையான அறச்சீற்றம், கெட்டுப் போன வார்த்தைகள், தகவல்கள் தருதல், பட்டியலிடுதல், கிளைத்த வழிகளிளெல்லாம் பயணித்தல் என இத்தொகுப்பில் பல கதைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. அடுத்து கதை சொல்வதற்காக அவர் தேர்ந்தெடுத்த வடிவங்கள். அங்கத நடையில் கதை சொல்ல நேரும் பொழுது வடிவம் மிகவும் முக்கியம். இந்தத் தொகுப்பிலுள்ள ‘தேர்தல் ஆணையத்துக்கு ஒரு திறந்தவெளிக் கடிதம்’ மற்றும் ‘மணமானவர்க்கு மட்டும்’ என்ற இரண்டு கதைகளிலும் தேர்ந்து கொண்ட வடிவம் கதையின் அங்கததைச் சிதைத்து விடுகிறது.

ஏதோ தேடித்தேடிக் குறைகூறவில்லை, மனுஷ்யபுத்திரன் சாகித்ய அகாதெமி விருது நான்கு வகைப்பட்டதாகக் கூறி, நல்ல எழுத்தாளரின் மோசமான எழுத்துக்கு எடுத்துக்காட்டாக எதுவும் தராததால், ‘சூடிய பூ சூடற்க’வை விமர்சிக்க நேர்ந்தது.

‘என்னால் சீரணிக்க முடியாத கசப்பை எவ்வாறு உள்ளே வைத்துக்கொண்டிருப்பது’ என்று நாஞ்சில் நாடன் இத்தொகுப்பின் முன்னுரையில் கேட்கிறார்.  அதையேதான் நானும் கேட்கிறேன்.  என்னால் சீரணிக்க முடியாதவற்றை எவ்வாறு உள்ளே வைத்துக் கொண்டிருப்பது?

= = =

காலக்கோளாறு

“பாலியல் விவகாரத்தையே ஒரு இன்மைப் பொருளாக்கிப் பாவனை பண்ணிக்கொள்ளும் நம் சமூகம் தன் கவனம் முழுவதையும் அதிலேயே குவித்துள்ளது என்பதை ராகவன் கட்டவிழ்க்கிறார். ஆதிப் பொதுவுடைமை காலத்தில் இருந்தபோது மனித சமூகம் கட்டற்ற பாலியல் சுதந்திரத் தோடு இருந்தது. தாய் மகனோடும், தந்தை மகள்மாரோடும், சகோதரன் சகோதரி களோடும் வேறு பாடின்றி மாறி மாறிப் புணர்ந்தார்கள். நாகரிக விழிப்பு ஏற்பட்டப் பின்னரே வேறுபாடுகள் பார்க்கப்பட்டன.  கட்டுகள் போடப்பட்டன. ஆயினும் நம் கீழதேயப் பண்பாடு ஆண், பெண் குறிகளையே வணக்கத்துக் குரியவையாக வைத்துப் புணர்தலையே சக்தி&சிவம் இணைவாக ஜீவாத்மா பரமாத்மா கலப்பின் குறியீடாக,அதன் பல கோணங்களைத் தாந்ரிகம் எனப்பெயரிட்டு நடைமுறையாக்கி அதன் போக முத்திரைகளை அழகியலாகவும் ஆன்மிகமாகவும் பார்த்த இப்பெரும் பண்பாட்டு மரபில் வந்த நம் சமூகம் இன்று அதை அசிங்கமானதாகவும் மறைப்பிற்குரிய ஒன்றாகவும் பாவிக்கிறது. இது பௌத்தம், சமணம்,கிறித்தவ மிஷினரி வருகை மொகலாய ஆதிக்கம் என்பனவற்றின் தாக்கமா? எது எவ்வாறிருந்தாலும் செக்ஸை ஒரு பொருட்டாகவே எடுப்பதாக இல்லை என்பது போல் பாவனை பண்ணிக்கொண்டு மறைவாக முழுகவனத்தையும் அதன் மேல் குவித்து, அதைக்கட்டித்த மையப் பொருளாக்கியுள்ள நம் சமூகத்தின் மீது ராகவன் மேற்கொள்ளும் அதிரடித் தாக்குதல் அந்தக் கட்டித்துப்போன பால்விவகாரம் என்னும் பனிப்பாறையைச் சிதறவைக்கிறது. ”

காலச்சுவடு (இதழ்148) ஏப்ரல் 2012 இதழில் மு.பொ.  என்பவர் ராகவனின் எழுத்துக்களை ‘வடிவங்களைக் கடந்த வடிவம்’ என்ற தலைப்பில் திறனாய்வு செய்துள்ளார். அக்கட்டுரையின் ஒரு பகுதி தான் மேலே உள்ளது.

ராகவன் மற்றும் அவரைப் போல் எழுதுவோர்களின் எழுத்துக்களை வாசித்து சப்புக்கொட்டித் திரியும் விஷயமறிந்த வாசகக் குழாத்தினுள் நான் இல்லை. ஏனெனில் அந்த அளவு கூடிய விஷய ஞானம் என்னிடம் இல்லை. எனவே ராகவன் எழுத்து குறித்தான எந்த விமர்சனமும் எனக்கு இல்லை. பின் எதற்காக எழுத வேண்டும் எனில், காலச்சுவடு என்ற இலக்கியப் பண்பாட்டு இதழின் பால் எனக்குள்ள மரியாதை, ‘காலச்சுவடு வாசித்தீர்களா?’ என்று நண்பர்களுக்குள் பேசிக்கொள்வதையே கௌரவமானதொரு நிலையாகக் கொண்டிருந்த (பத்தாம்பசலித்தனமான) எண்ணம் உடைந்து போகிறதே என்ற ஆதங்கம் தான்.

காலச்சுவடு இவ்வாறான கட்டுரைகளையும் கவிதைகளையும் பட விளக்கத்தையும் (பார்க்க இதழ் எண் 140 ஆகஸ்டு 2011 & பக்கம் 53) தொடர்ந்து வெளியிட வேண்டியத் தேவை என்ன?

உங்கள் இதழ் வாயிலாக மு.பொ.  தாய்மை, தந்தைமை, சகோதரம் என்ற தூய்மையான உறவுகளைக் கொச்சைப்படுத்தியுள்ளதை நீங்கள் ஏன் அனுமதித்தீர்கள்? விளங்கவில்லை. உங்கள் இதழ் குடும்பத்தில் உள்ளோரால் வாசிக்கப்படுகிறது.  மாணவருக்கான சலுகைக்கட்டணத்தில் பள்ளிகளிலும் வாங்கப்படுகிறது, வாசிக்கப்படுகிறது. வணிகப்பத்திரிகைகளான வார இதழ்கள் கடைபிடிக்கக்கூடிய குறைந்தபட்ச இதழறம் கூட உங்களால் கடைபிடிக்கப்படவில்லையே? வருத்தமாக இருக்கிறது.

தம்பி மு.பொ., ராகவன் எழுத்துக்களில் உள்ள அழகியல் சமாச்சாரங்களை வாசித்துப் புளகாங்கிதம் அடைந்து புல்லரித்துக் கிடக்கும் விஷயமறிந்த இளைஞர்களில் நீங்கள் தலைமையானவராக இருப்பீர்கள் என்றே கருதுகிறேன். நீங்கள் இளைஞராதலால் தான் அந்தத் 'தம்பி'.

ஆதிப் பொதுவுடைமைப் சமூகம் என்பது வேட்டைச் சமூகம். அச்சமூகத்தின் பொதுவுடைமை, கூட்டாக வேட்டை யாடுவதும், வேட்டைப்பொருளை தமக்குள் சமமாகப் பங்கிட்டுக் கொள்வதும், விலங்குகளிடமிருந்தும் பகைகளிடமிருந்தும் தம்மைக் காத்துக் கொள்வதுமாகத்தான் இருந்திருக்கும். போகிறபோக்கில் பொதுவுடைமை என்ற தத்துவத்தையும் இழிவுபடுத்திவிடாதீர்கள்.

தாய், தந்தை, சகோதரன், சகோதரி, மகன், மகள் என்ற உறவுகள் குறித்து எந்த எண்ணங்களும் இல்லாதிருந்த, பேச்சும், சிந்தனைகளும் ஏற்படாதிருந்த, ஒலிகளையும், கைகால் அசைவுகளையும் மாத்திரமே தகவல் பரிமாற்றத்திற்காகக் கொண்டிருந்த ஆதிமனித கூட்டம் என்பது சமூகம் என்ற வரையறைக்குள் வராது.  அது மந்தை, அவ்வளவுதான். இதனை எப்படி ஆதி பொதுவுடைமைச் சமூகம் என்று கூறுகிறீர்கள்? நெருங்கிய உறவுகளைக் கூறி மேற்கோள் குறிக்குள் ‘நாகரிகநிலை’ என்று கிண்டலடித்து ‘மாறி மாறி’ என்று அசிங்கப்படுத்தி என்ன மாதிரியான சிந்தனை அய்யா உமது?ரொம்ப கவலைப்பட வேண்டாம். இது ஆரம்ப நிலையாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன் உடன் நல்ல மனோதத்துவ நிபுணரைத் தொடர்பு கொள்வது நலம் என்று கருதுகிறேன்.

மு. பொ.  தம்பி, இதைத் தாண்டி தன்வக்கரிப்புப்பார்வையை இந்து மதத்திற்குள்ளும் வீசுகிறார். ஆயினும் நம்கீழ்தேயப்பண்பாடு ஆண், பெண் குறிகளையே வணக்கத்துக்குரியவையாக வைத்து புணர்தலையே சக்தி&சிவம் இணைவாக, ஜீவாத்மா பேராத்மா கலப்பின் குறியீடாக அதன் பல கோணங்களை தாந்ரீகம் எனப் பெயரிட்டு நடைமுறையாக்கி அதன் போக முத்திரைகளை அழகியலாகவும், ஆன்மிகமாகவும் பார்த்த இப்பெரும் பண்பாட்டு மரபில் வந்த நம் சமூகம்-------------. . . . . . . . .  (அடிக்கோடு என்னுடையது)

நம்சமூகம் எதனை அழகியலாகவும், எதனை ஆன்மிகமாகவும் பார்த்தது பார்த்தீர்களா?ஆகா. . .  என உச்சி மீது வைத்து மெச்சத்தோன்றுகிறது. என்ன ஒரு ஆராய்ச்சி. . .  என்ன ஒரு மேதைமை. . . .

தாந்ரிகம் மட்டுமே தனது முற்று முடிந்த முடிவாக நம்சமூகம் கைக்கொண்டிருந்ததாகக் கூறுவதை ஆன்மிகர்களும்,ஆதீனங்களும் ஏற்கிறார்களா? ஏற்கவில்லையெனில் உங்கள் எதிர்வினை என்ன? ஏற்கிறீர்கள் என்றால் பேச ஒன்றும் இல்லை.

விஷ்ணுமதம், சிவமதம் என இருபெரும் பிரிவுகளாகவும், வேதமதமாகவும் ஒன்றித்து ஆதி இனக்குழு சமூகங்களில் தனித்தனியே பின்பற்றிய நியாயம், வைசேசிகம், ஸாங்க்யம், சாக்கதம், யோகம், மீமாம்சம், பாசுபதம், காபாலிகம், காளாமுகம் போன்ற பல்சமயத்தத்துவங் களையும் கடவுளர்களையும் ஒருங்கிணைத்து அல்லது உள்வாங்கிக் கொண்டு, அவற்றின் வேதங்களான ரிக், யஜூர், சாமம், அதர்வணம் என உட்செரித்து, வேதங்களின் நீட்சியாக உரைகளாக உபநிஷத்துக்கள் ஸ்மிருதிகள் எனக் கிளைவிரித்து,கர்ம யோகம், ஞானயோகம், ஸாங்க்யயோகம் என பகவத்கீதையாக விரித்து, ராமாயணம், மகாபாரதம் என இருகாவியங்களின் வழி, பல்வேறு புராணங்களுக்கான அடிப் படைகளையும் கூறி,பரந்து விரிந்த இந்து தத்துவ, வியாக்கியானங்கள் என அத்தனையையும் புறந்தள்ளி, இந்த தேசத்தின் பல்வேறு வகைப்பட்ட மொழிகளைப் பேசும் இனத்தாரிடையே பயின்று வரும் பக்தி வழிப்பட்ட அத்தனை சாத்திர, சம்பிரதாய, சடங்குகளை நல்லதோ கெட்டதோ கண்டுகொள்ளாது, தாந்திரிக சடங்குகளை மாத்திரமே அழகியலாகவும், ஆன்மிகக் கூறாகவும் அதுவே நம் சமூகத்தின் பெரும் பண்பாட்டு மரபாகவும் கூற உண்மை யிலேயே துணிச்சல் வேண்டும்.

சாக்தமதக் கோட்பாட்டினைக் கடைபிடித்த ஒரு பழைமையான இனக் குழுவினர் மாத்திரமே கடைபிடித்தது தாந்ரிகம்.  அதிலும் சாக்தம் தட்சிணாச்சாரிகள், வாமாசாரிகள் என இரண்டு கூறாகி வாமாசாரிகள் மாத்திரமே கடைபிடித்த, வெகுமக்களால் புறந்தள்ளப்பட்ட சடங்கு தாந்ரிகம். பெண் தெய்வ வழிபாடு என்பது இந்தியாவில் தோன்றிய அனைத்து மதங்களுக்கும் பொதுவானது தான்.  சமணத்தில் கூட அது இயக்கி வழிபாடாக இருந்து, நாட்டுப்புறங்களில் இசக்கி அம்மனாக வழிபடப்பட்டு வருகின்றது.

இந்தத்தம்பியின் கட்டுரையில் நமக்கென்ன ஆட்சேபம் என்றால் ஆதி மனிதன் முற்றிலும் நாகரிகம் அடையாத காலத்தில், மனித மந்தையில் இருந்திருக்கலாம் என்று எண்ணக்கூடிய உறவுச்சிக்கலைச் சமூகம் புறந்தள்ளிவிட்டதே என்ற அவரின் ஆதங்கம் குறித்து நமது மறுப்பு மற்றும் தனது மனவக்கரிப்புகளை நியாயப்படுத்த மதத்தை துணைக்கழைக்கும் அசால்ட்டான துணிச்சல். இவை குறித்து நமது எண்ணம், இவ்வாறான கட்டுரையை வெளியிட்டுள்ள காலச்சுவடு இதழறம் குறித்த விமர்சனம் அவ்வளவே.

இப்படி இந்துமதம் குறித்து எழுதுவது என்பது அதன் பல்வேறு வகைப்பட்ட தத்துவங்களை ஏற்றுக்கொள்வதோ, வருணாச்ரமதர்மம் போன்ற மனிதகுல எதிர்சிந்தனைகளுக்கு,சாதிய படிநிலைகளுக்கு வக்காலத்து வாங்குவதோ ஆகாது.  இப்போதே சிலர் என் முதுகைத்தடவி சட்டை,பனியனைத் தாண்டி நு£ல் எதுவும் தட்டுப்படுகிறதா என அறிய ஆவலுடன் இருப்பார்கள் என்று கருதுகிறேன். மதம் குறித்தல்ல நான் பேசுவது பொது அறம் குறித்தது. எதனை மக்களுக்குத் தருகிறோம் தர வேண்டும் என்பது குறித்தது.

ஆன்மிகர்களே,ஆதினங்களே ‘தாண்டவபுரம்’ நாவல் குறித்து சோலை மீது பாய்ச்சல் காட்டும் உங்களுக்கு,மு. பொ.  வின் நுண்ணிய எள்ளல் எழுத்து புரியவில்லையா? கூர்ந்து வாசியுங்கள். என்ன சொல்கிறது அந்தத்தம்பி என்று பிடிபடும். இப்படி ஒரு திராவிட இயக்கம் சார்ந்த எழுத்தாளன் எழுதியிருந்தால் உங்கள் எதிர்வினை என்னவாக இருந்திருக்கும்?இப்ப மட்டும் சாச்சாப்புல போறீங்களே ஏன்? எதை எழுதுகிறார்கள் என்பதை விட யார் எழுதுகிறார்கள் என்பது தான் உங்களுக்கு முக்கியமோ? இதைத்தான் காலக்கோளாறு என்கிறேன்.

= = =

கவிதை புரிந்துகொள்ளுதல்

காலத்தின் கள்ள மௌனத்தை உடைத்து

அப்பாலுக்கும் அப்பாலான

அந்தரமான பாழ் வெளியில்

விஸ்வரூபமெடுக்கும் பிம்பங்களின்

காலாதீதமான பிதுக்கலின்

ஜாலம்,சமிக்ஞை,பிரக்ஞை என

ரீங்கரித்து பால்ய காலத்தின் விழுமியங்களை விகசித்து

கசித்து,சித்து,த்து,து,தூ வென

கனவுகளை உமிழும்

விச்ராந்தியான        மனோலயக்கட்டுடன்

சுகந்தமானநாற்றத்தினு£டே

பயணித்து, மரணித்து

தூலமான சொப்ன பிரதிமைகளை

நிஜமென நம்பி ஸ்பரிசிக்கும்

கரங்களை வெட்டி

வேள்வித்தீயில் இடுவாள் என்

ஆதித்தாய் காளாமுகி.

“பத்திரமடி கண்ணகி

எரித்து விடாதே!”

 - கவிதாங்கதன்

       கவிதய படிச்சீங்களா? இது சம்பந்தமா 'கருக்கல்' ஆசிரியருக்கும் சம்பந்தப்பட்ட கவிஞருக்கும் நடந்த தொலைபேசி உரையாடலை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

நான் : யாருக்கு போன்?

ஆசி : இதோ. . . இந்தக் கவிதய எழுதுன கவிஞருக்குத்தான்

நான் :     இப்ப எதுக்கு அவருக்கு போன்?

ஆசி : கவித ஒரு மண்ணும் புரியல.

நான் : புரியலன்னா. .  தூக்கிப்போடுங்க. . அவருகிட்ட என்ன. . . இதபத்தி. . .

ஆசி : பேசுவோம்(என்னிடம் பேசிக்        கொண்டே கவிஞருடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்கிறார்) இல்ல. . .

       நா லூஸா அந்த ஆளு லூஸான்னு தெரியணும். . . அதான்.

நான் : அப்ப சரி

ஆசி : என்ன சரி?

நான் : சரின்னேன்.

= = =

ஆசி : அலோ. . .  கவிதாங்கதனா?

கவி :  ஆமா. . .  நீங்க. . . ?

ஆசி : நா. . கருக்கல் ஆசிரியர் பேசுறேன். . .

கவி :  ஓ. . . சார். . . . நீங்களா. . . வணக்கம், நான் எதிர்பார்க்கவே இல்ல.

ஆசி : உங்கள்ட்ட ஒன்னு கேக்கணும். . .        அதான்.

கவி :  கேளுங்க சார்

ஆசி : ஒன்னுமில்ல. . .  நீங்க அனுப்பியிருந்த கவித. . .

கவி :  கவிதயா. . .  படிச்சீங்களா. . .        நல்லாருக்கா. . .  நல்லாருக்கா. . .

ஆசி : நல்லாருக்கு. . . ஆனா. . . புரியல.

கவி :  என்ன புரியல?

ஆசி : கவித. . . புரியல.

கவி :  புரியலையா. . . எங்க புரியல?

ஆசி :        எங்கையுமே புரியல.

கவி :  குறிப்பா. . .

ஆசி : குறிப்பாவா. . .  ஒன்னுமே புரியலேங்குறேன். . .

கவி : நல்லா படிச்சிங்களா?

ஆசி : நாலு தடவை படிச்சுட்டேன்

கவி :  சார். . .  தப்பா நெனைக்கக் கூடாது கவிதங்கறது அப்படியே ‘சட்’ ன்னு புரிஞ்சுடணுங்கிறது இல்ல... அப்புறம் எல்லாருக்கும் புரியணும்ங்கறதும் இல்ல.

ஆசி : சரிங்க கவிஞரே. . .  எனக்குப்பத்தாது. . .       என்னால புரிஞ்சுக்க முடியல. . .  நீங்க       தான் சொல்லுங்களேன்.  என்ன தான் எழுதியிருக்கீங்க?

கவி :  அது வந்து சார். . . எப்பிடி சொல்றது. . .        ஆங். . .  ஒரு மன அவஸ்த.  இதுவா. .        இது இல்லையா, அதுவா. . .  அது        இல்லையா, சரியா. . .  சரியில்லையா. . .        ஒரு மனத்தகிப்பு. . .  இப்படி. . . .

ஆசி : காதுக்குள்ள யாரோ கிசுகிசுப்பா பேசறா மாதிரி இருக்கா. . . ?

கவி :  என்ன சார். . . கிண்டலா?

ஆசி :ஆமாய்யா. . . ஒரு புண்ணாக்கும்  புரியலேங்கிறேன்.  மேக்கொண்டு குழப்பி கும்மியடிக்கிறீங்க?      கவிதன்னா. . .  ஏதாச்சும்       சொல்லணும்ல. . .  எளிமையா. . .        இதுதான்னு கொஞ்சமாச்சும்       புரியணும்ல. . .

கவி :  நவீன கவிதைகளை நீங்க சரியா       புரிஞ்சிக்க முயற்சி பண்ணணும்.        கவிதன்னா கவித தான்.  அது        ஒன்னும் செய்தி பத்திரிகை இல்லை.        கவிஞன் ஒன்னும் பத்திரிகை       நிருபனும் இல்ல. அப்பறம் கவித        எளிமையா இருக்கணும், சட்னு        புரியணும் அப்பிடின்னு உங்களுக்கு       யார் சொன்னா? திருக்குறள் படிங்க        ‘சட்’ னு புரியும் எளிமையாவும் இருக்கும்.

ஆசி :ஓ. . . உங்க கவிதையெல்லாம்       திருக்குறளுக்கு மேலயாக்கும். . .

கவி :  நா. . . அப்படி சொல்லல. . . கவித இப்ப உங்களோட அளவீடுகளையெல்லாம்        தாண்டி எங்கையோ போயிடிச்சு. . . இருண்மை,மாஜிக்கல் ரியலிசம்        இப்படி. . .  நீங்க        இன்னும் நெறைய       படிக்கணும்னு நெனைக்கிறேன். . .        போர்ஹே என்ன சொல்றார்னா. . .

ஆசி : இருங்க. . . இருங்க. . .        போர்ஹேயெல்லாம் வேணாம். . .        பக்கத்துல இருக்காரு,        ராமசாமி        என் நண்பர், அவருக்கும் ஒன்னும்       புரியலையாம்.  அவருக்கிட்ட       பேசுறீங்களா. . .  என்ன அவரு பேச்சு        கொஞ்சம் கரடா இருக்கும். . .  

கவி :பரவால்ல. . .  பரவால்ல. . .  நமக்குள்ளேயே பேசுவோம். நீங்க இன்னும் நெறைய வாசிக்கணும். . .        அதான்.

ஆசி : எத. . . இந்த மாதிரி கவிதகளையா?       அப்புறம் எங்காதுக்குள்ள யாராவது         பேசுவாங்க. . . ஆமா. . . அதென்ன

       இருண்மை?

கவி :  இருண்மையா. . .  உங்களுக்குப்       புரியறா மாதிரி சொல்றேன்.        இப்ப. . . நல்ல இருட்டு. . தூரத்துல       ஒரு மாடு நிக்கிதுன்னு நீங்க       சொல்றீங்க.  ஆனா எனக்கு அது       யானையா தெரியுது. உங்களுக்கு       மாடு, எனக்கு யானை.  இதுல எது       உண்மை. . . ? சொல்லுங்க சார். என்ன       பேச்சையே காணும்.

ஆசி : எனக்கு வாயடைச்சுப்போச்சு. . .        அதாவது ‘நீ பார்த்த பெண்ணை நான்       பார்க்கவில்லை.  நான் பார்த்த        பெண்ணை நீ பார்க்கவில்லை’,       அதான. . . ?

கவி :  இல்ல. .  இதுல நாம ரண்டு பேரும்        பாக்குறது ஒன்னுன்னு ஆவுது.  அது       அப்படியில்ல.

ஆசி : சரி. . . ‘உன் பார்வை போலே என்        பார்வை இல்லை.  நீ கண்ட காட்சி        நான் காணவில்லை’ சரிதான?

கவி :  அதான் அதேதான். . .  சரியா. .        வந்துட்டீங்க!இப்ப கேள்வி       என்னன்னா மாடு     உண்மையா       யானை உண்மையா. . .  நல்லா        கவனிங்க.  ரெண்டும் உண்மை       மட்டுமல்ல, ரெண்டும் பொய்.        எப்பிடி. . .  புரியுதா?

ஆசி : சரி. . . மேல சொல்லுங்க.

கவி :  மேல என்ன. . .  அவ்வளவுதான்.        கவிதயில கவிஞன் என்ன       சொல்றாங்கறது முக்கியமில்ல.        படிக்கிறவன் என்ன புரிஞ்சுக்கிறான்.        அவன் ஒன்னு புரிஞ்சிக்கிறான்        இவன் ஒன்னு புரிஞ்சுக்கிறான். . .  நா        வேறொன்ன புரிஞ்சிக்கிறேன்.         வாசகன்கிறவன் வெறும       படிக்கிறவன் மட்டுமில்ல அவனே        கவிஞனும் ஆகிறான், அவன்       கவிஞனையும் தாண்டிப்போகிறான்,        எழுதி முடிக்கிற மட்டும் தான் கவித        கவிஞனுடையது. அப்புறம் அது        தானே பயணிக்குது.  அப்படி கவித       தன்னைத் தானே வழிநடத்திக்கலன்னா அது கவித இல்ல.  புரியச்       செய்கிறது, புரியாமல் இருக்கிறது,       காலத்துக்காலம், கணத்துக்குக்கணம்,        இடத்துக்கு இடம் வேறுபாடு       காட்டுறது.  அதுமட்டுமில்ல சில       நேரங்கள் அது வெறும் வார்த்தையாக              மட்டும் கிடக்கிறது. அதுக்காவ       கவலைப்படக்கூடாது.

ஆசி : யார் கவலப்படக் கூடாது?

கவி :  எழுதுபவனும் கவலப்படக்கூடாது,        படிக்கிறவனும் கவலபடக்கூடாது.

ஆசி : சரி. . . போதும். . . புரிஞ்சிக்கிட்டேன்       போன வச்சிடறேன்.

= = =

நான் :        என்ன. . . சார்?

ஆசி : என்ன நொன்ன சார்?

நான் : இல்ல பேசுனீங்கள. . .  முடிவு        பண்ணிட்டிங்களா?

ஆசி : என்ன முடிவு பண்றது?

நான் : இல்ல. . . யாரு லூசுன்னு. . . ?

       (ஆசிரியர் முறைத்தார் ;நான் அவரை        அப்படியே விட்டு விட்டு வெளியில்         சென்று        விட்டேன்)

       நமக்கு ஒன்றும் கவிதைகள் மீது பகையோ கவிஞர்கள் மீது காழ்ப்போ கிடையாது. சொல்லப்போனால், கவிதைகளைத் தேடித்தேடி வாசிப்பவன். ஒரு நல்ல கவிதை வாசிக்கக்கிடைத்தால், உடனடியாக நண்பர்களுடன் பகிர்ந்து கொள்பவன் நான். ஒரே ஒரு நல்ல கவிதை ஒரு மனிதனின் ஒரு நாளையேனும் மகிழ்ச்சிகரமானதாக்குகிறது. வேறென்ன, அதுபோதும்.  ஆனால், சமீபகாலமாகப் படிக்கக் கிடைக்கும் கவிதைகளெல்லாம் மனதில் எந்த வித அசைவையும் ஏற்படுத்த மறுக்கின்றன. செத்து விரைத்துக் கிடக்கும் எலியைப் போல அறுவருப்பைத் தருகின்றன.

ஒரு நல்ல கவிதை மலர்ச்சியைத் தர வேண்டும், படித்து முடித்தால் பெருமூச்சு வர வேண்டும், மனதைக் கிளர்த்த வேண்டும்.  ஒரு கவிதை மனிதனை எதுவுமே செய்யவில்லை என்றால், என்னத்துக்கு அது? கவிதைகள் கோட்பாட்டுச் சிக்கலுக்குள் சிக்கிக்கிடக்கின்றன.  இருளை வெறித்துக் கொண்டிருக்கின்றன. அலுப்பான மொழியில், சகிக்க முடியாத வகையில் செய்யப் படுகின்றன.

எனவே, வாசிப்பவன் கவிதை களிடமிருந்து ஒதுங்கி நிற்கிறான்.  தங்களுடைய துயரங்களையும் மகிழ்ச்சி யையும் எளிய வடிவில் தங்களுக்குத் தெரிந்த புரியக்கூடிய சொற்களில் எழுதிக் கொண்டிருந்த கிராமத்து இளைஞர்களை, தற்போதைய, நவீன கவிதைகள் மிரட்சி கொள்ளச் செய்கின்றன.

இருண்மைக்கவிதைகளுக்கு இடையில், எப்போதாவது ஓரிரு அசலான கவிதைகள் கிடைக்கின்றன, அப்படி ஒரு கவிதை ஏப்ரல் 2012 ‘உயிர்எழுத்து’ இதழில் வாசிக்கக் கிடைத்தது.

பாடவேளை &ஆர். ஜெயந்தி என்பவர் எழுதியது. பள்ளியின் மதிய உணவு இடைவேளையின் போது முதல் வகுப்பு மாணவி ஒருத்தி, தன்னைத்தானே ஆசிரியையாக நியமித்துக் கொண்டு வகுப்பு நடத்தும் அழகு, கவிதையாக்கப்பட்டுள்ளது.

‘நிமிடங்களுக்கு ஏற்றவாறு

முகத்தை மாற்றிக் கொண்டேயிருந்தாள். -

வீட்டுப் பாடங்களைச் சொல்லிக் கொண்டே

குறுக்கும் நெடுக்குமாக நடந்தாள்,

இடது கையைத் திருப்பித் திருப்பி

மணி பார்த்துக் கொண்டேயிருந்தாள். ’

கவிஞர் தன் கவிதைக்காகத் தேர்ந்த சூழலும், கருப்பொருளும்,வடிவமும் மனதில் அலையாக நிகழ்வை கண்முன் காட்சிப் படுத்துகிறது. அந்த மாணவியின் உருவம், அவள் உடை, அவளின் ஒற்றை சடை என கற்பனை செய்துகொள்ள கவிதை நம்மை அனுமதிக்கிறது.

       ‘மதிய பாடவேளை தொடங்க

       என் வகுப்பு ஆரம்பமானது

       நான் என்ன பாடம் நடத்த?’

என்ற முடிப்பில் கவிதையின் முழு அழகும் நம்மை வீழ்த்திவிடுகிறது.

இப்படியான ஒரு கவிதையை வாசிக்க எப்போதாவது தான் வாய்க்கிறது.