ஒரு சன்னலோர பேருந்து பயணத்தில், த.ரெ.தமிழ்மணியின் “நத்தையின் அழுகை' கவிதை நூலைப் படித்தேன். படித்து முடித்தவுடன் கண்களை மூடி தொலைந்து போன வாழ்வியலை அசைபோட்டு, துளிர்த்த கண்ணீரைத் துடைத்து, மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டுகிற மனநிலையை உணரக்கூடிய வாய்ப்புக் கிடைத்தது.

                இலக்கற்ற எழுத்து என்பது பயனற்றதாகவே அமையும். கவிதைக்கான களங்கள் நடைமுறைகளில் பொதிந்து கிடக்க எதை வேண்டுமானாலும் எழுதலாம்... அது வாசகனைச் சென்றடைகின்றதா என்பது பற்றிய யோசனை எதுவுமின்றி பயணிக்கின்ற தமிழ்ச்சூழலில், தமிழ்மணி காட்சிப் படுத்துகின்ற தமிழ், தமிழர், தமிழர் மரபு, இழந்த குழந்தைமைகள், எளிய மக்கள் இயற்கையோடு உறவாடும் பெருவாழ்வு, போர்க்குண மனித நேயம்.. இத்தொகுப்பு முழுவதும் விரிந்துக் கிடப்பதைக் காணலாம்.

“குஞ்சுகளை ஒப்படைத்த

குருவிக்கு என்ன சொல்லுது

கண்ணீரோடு வெட்டப்பட்ட மரம்''

                தன் அழிவைப் பொருட் படுத்தாது, குஞ்சுகளைக் காப்பாற்ற முடியவில்லையே என்று ஆதங்கப்படும் மரத்தின் கண்ணீரை கவிதையாக்கி இருக்கின்றார்.

                குளியலறையில் குளிப்பவர்களுக்கு குளத்தின் கொண்டாட்டங்கள் தெரியாது. கரையோர நெடுமரத்தின் உச்சியிலிருந்து குதித்து மண் அள்ளிய குளம், நீந்தித் தம்பட்டம் அடித்து விளையாடிய குளம், குத்தகை எடுத்த குளத்தில் திருட்டுத் தூண்டில் போட்டு மீன் பிடித்து அடிவாங்கி அழவைத்தக் குளம், அனைத்து உயிரினங்களுக்கும் அடைக்கலம் கொடுத்து அடைகாத்த குளம் இன்று கட்டு மனைகளாகக் காணாமல் போய்விட்டச் சூழலை,

                “இப்போது வந்த நாரை

                குளத்தில் மீன் தேடவில்லை

                குளத்தையே தேடுகிறது''

என்கிறார்.

                “காடழித்த வீட்டு

                கண்ணாடியைக் கொத்தும் குருவிகள்

                வாழ்வு மீட்புப் போராட்டம்''

                கண்ணாடியைக் கொத்தும் குருவிகளை அழகியலாகவே பார்த்துப் பழக்கப்பட்டவர்கள் நாம், நிலவை காதலியின் முகமாகவே பார்த்தது மாதிரி. அதனை, காடழித்தவர்களின் உறக்கம் கலைத்து, உலுக்கி எடுத்து முகத்திலறைகின்ற வாழ்வு மீட்புப் போராட்டத்தின் குறியீடாகப் பார்க்கின்ற தமிழ்மணி, அய்யா "உணர்ச்சிக் கவிஞர்' காசி ஆனந்தன் சொன்னதைப்போல "தமிழ்த்தனி'.

                யாருமற்ற வெற்றுத் தடத்தில் உதிர்ந்து கருகிக்கிடக்கும் புளியம்பூக்களாய்ப் போன தமிழரின் வேரினை மீட்டெடுக்கும் முயற்சியை, நேயத்தை,

                “நத்தாங்கூட்டில் மழையோசை

                பிசுக்கு டப்பாவில் சாரல்

                ஏமாறும் நண்டுகள் சட்டியில்''

                “எந்திரத் தேள் கொட்ட

                வலியில் துடிக்கும் ஆறு

                மணல் திருட்டு''

                “பட்டமரம்

                உயிர் காத்தது

                பொந்துக்குள் கிளிகள்''

                இப்படியாக ஒரு சோற்றுப் பதமாய் இத்தொகுதி முழுவதும் காணமுடிகின்றது.

                இளநீர் விற்றவனின் பேரன் குளிர்பதனப்பெட்டியில் இருந்து கோக் குடித்து நாகரிகத்தை வெளிப்படுத்துகின்றான். நுங்கு, வெள்ளரி, பனங்கிழங்கு என தலைசுமந்து வாசலில் விற்ற பட்டம்மாளின் பேரன் முதலாளித்துவ காய் - கனி கடைகளில் சீருடையணிந்த விற்பனை யாளனாய்க் காணக் கிடைக்கின்றான். நாள் முழுவதும் உழைத்துக் களைத்தவனின் ஊதியத்தை, மாலை கொள்ளையடிக்கின்றது மதுபானக்கடைகள். விவசாயிடமிருந்து விவசாயத்தை அப்புறப்படுத்தி உழவர் பெருவிழாக்கள் நடந்தேறுகின்ற வாழ்க்கைச் சூழலில்,

                “வளமனைகளில்

                எல்லைக் கற்கள்

                உழவின் நடுகற்கள்''

                “கள்இறக்காப் பனை

                மரத்தடியில்

                மதுப்புட்டிகள்''

                “அழிவு அறிவியலை

                மூட்டைக்கட்டு

                காம்புகளில் கதிர்வீச்சு கசியுமுன்''

போன்ற கவிதைகள் இன்றைய தேவையாக இருக்கின்றன. நிர்வாண புத்தன் மீன் தின்ற கதையை தடுத்து நிறுத்தும் ஆற்றல் தமிழ்மணியின் எழுத்துக்களுக்கு உண்டு. வாழ்வை இயக்கமாகவும், இயக்கத்தை வாழ்வாகவும் வரித்துக்கொண்ட தமிழ்மணியின் மனிதநேய வெளிப்பாட்டை இத்தொகுப்பை முழுவதுமாய் வாசிக்கும் போது உணரலாம்.

= = =

நத்தையின் அழுகை, பாவாணர் பதிப்பம், வேலங்குடி, கீழப்படுகை, திருவாரூர் - 610 109. தொடர்புக்கு : 9842011344 விலை ரூ.20-