நிராகரிப்பை நெருப்பெனலாம்
சிறுதுளியும் ரணவலிதரும்
கதவு மூடும் சப்தம்
கண்பார்வையின் மாற்றம்
எல்லாவற்றிலும் கசிகின்றது
நிராகரிப்பின்
தீத்திரவம்
நிராகரிப்புகள் இயல்பாய்
நிகழினும்
வருத்தங்கள்
வடிகால் தேடும்
நீட்டிய கைகளை
நிராகரிக்கும் குழந்தை,
விரும்பிய பெண்ணின் வீட்டு
வெறுமை சன்னல்,
சிநேகப் புன்னகையை
எதிர்கொள்ளா நண்பர்கள்,
வைத்த வணக்கத்தை
வாங்கிக்கொள்ளா
அதிகாரங்கள்,
நிறுத்தத்தில் நிற்காது
செல்லும் பேருந்துகள்,
உணவுக்கானத் தட்டு
வைக்கப்படும் ஓசை,
கைகழுவியபின்
இடமற்றுப்போகும் பந்தி,
சாலையோர வியாபாரியிடம்
பேரம்பேசி வாங்கியபின்
அவன் இயல்பாய்
துப்பிய எச்சில்.
இப்படி எல்லாவற்றிலும்
இருக்கிறது
நிராகரிப்பின் கரிப்பு.
நிராகரிப்பு
நிரம்பிய வாழ்வில்
நிராகரிப்பதில்லை
யாரையும் வாழ்வு