அண்மைப் படைப்புகள்

கீற்றில் தேட

 dmlogo

தொடர்பு முகவரி: எஸ்-5, மகாலட்சுமி அடுக்ககம், 13/26, குளக்கரை சாலை, சென்னை - 600 0034. பேச: 044 - 2822 1314

(கடந்த மூன்று இதழ்களில் வெளிவந்த பேராசிரியர் ராமு. மணிவண்ணன் பேட்டி இந்த இதழுடன் முற்றுப் பெறுகிறது)

பர்மாவில் நிலவும் பண்பாட்டு முரணை எப்படி தீர்ப்பது?

இத்தகைய அணுகுமுறையை மாற்றுவதற்காக கல்வி, பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்புகள், அரசமைப்புச் சட்டத் திருத்தங்கள் என இவை அனைத்திலும் இவர்களுடைய பார்வை செலுத்தப்பட்டு வருகிறது. இவற்றை எவ்வாறு மாற்றியமைக்க வேண்டும், கல்வியில் எத்தகைய அடிப்படை மாற்றங்களை செய்ய வேண்டும், அரசியலமைப்பில் எந்தவித மாற்றங்கள் ஏற்பட வேண்டும், பணி நியமனத்தில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் என்ன என்பன போன்றவை இவர்களுடைய கலந்துரையாடலில் இடம் பெறுகின்றன. புறநிலை அரசின் கீழ் தாய்லாந்து, இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய பகுதிகளிலும் பல கருத்துகளைப் பரிமாறிக் கொண்டிருக்கின்றனர். மாற்றங்கள் ஏற்படக்கூடிய தருணத்தில் நிச்சயமாக ஒரு தேசிய ஜனநாயகக் கூட்டமைப்பாக இவர்கள் அமையக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன.

ஜனநாயக ரீதியான போராட்டத்தை ஆங் சாங் சூகியி வலிமையாக மேற்கொண்டு வருகிறார். அய்ம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் ஜனநாயகப் போராட்டத்தை தற்பொழுது மிகச் சிறந்த முறையில் அவர் வழிநடத்தி வருகிறார். ஆங் சாங் சூகியி மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டமைப்பைச் சார்ந்தவர்கள் இந்திய அரசாங்கத்திடம் கேட்பது என்னவெனில், எங்களுக்கு நீங்கள் எந்த உதவியையும் செய்யாவிட்டாலும் தாழ்வில்லை; குறைந்தபட்சம் எங்கள் போராட்டத்திற்கான அங்கீகாரத்தையாவது தர வேண்டும் என்பதே. உங்களுக்கு இவ்வளவு அருகில் ராணுவ ஆட்சியை எதிர்த்து ஜனநாயக ரீதியில் போராடி வரும் நாங்கள் இருக்கிறோம்.

பண்பாட்டு ரீதியாக இந்தியாவுடனும், மொழி ரீதியாக வடகிழக்கு மாநிலங்களுடனும் எங்களுக்கு நல்ல தொடர்பு இருக்கிறது. நாங்கள் பின்பற்றும் புத்தமதம் இந்தியாவில் தோன்றிய ஒரு பண்பாடு. இந்தியா எங்களுக்கு ஒரு முக்கியமான நாடு. பண்பாட்டு ரீதியிலான தாய் வீடு. இத்தகைய ஒரு நாடு 50 ஆண்டுகளுக்கும் மேலாக ராணுவ ஒடுக்குமுறைக்கு ஆட்பட்டுள்ள மக்களுக்கு உதவாமல், ராணுவத்திற்கு உதவி செய்யும் நிலையையே மேற்கொண்டு வருகிறது. ஆயுத உதவிகளையும் வழங்குகிறது. இதுவரை அகிம்சை வழியில்தான் போராடி வருகிறோம். இந்தியா எங்கள் போராட்டத்திற்கு உதவி செய்யவில்லை என்றாலும், போராட்டத்திற்கான அங்கீகாரத்தையாவது வழங்க வேண்டும் என்றே இவர்கள் கோருகிறார்கள்.

திபெத் பிரச்சினை பற்றி சற்று விரிவாகச் சொல்லுங்கள்...

திபெத்தில் ஒரு தேசிய இனம் தன்னுடைய சொந்த மண்ணை இழந்து, மற்றொரு அண்டை நாட்டால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள திபெத் பகுதியிலிருந்து கடந்த அய்ம்பது ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் வெளியேறிக் கொண்டே இருக்கிறார்கள். இப்பொழுது சீனா திபெத்தைத் தன் பகுதிக்கு உட்பட்ட இடமாகக் கூறி, ஏறக்குறைய அதற்கான அங்கீகாரங்கள் அனைத்தையும் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, திபெத்தின் அண்டை நாடுகளுள் ஒன்றான இந்தியாவும் "திபெத் சீனாவின் உள்நாட்டுப் பிரச்சனை' என்று அவ்வப்போது கூறி வருகிறது. இது மிகவும் வருந்தத்தக்கது. திபெத்திய மக்கள் அவர்களுடைய சொந்த மண்ணில் சுதந்திரமாகவும், பண்பாட்டு ரீதியாகவும், சமூக ரீதியாகவும் ஒரு தேசிய இனமாக வாழ்ந்ததற்கான அடையாளங்களைத் தேடிச் செல்வதற்கு, நாம் வெகுகாலம் செல்ல வேண்டியதில்லை. ஓர் அய்ம்பது ஆண்டு காலத்திற்கு முன்னதாக ஏறக்குறைய இரண்டு தலைமுறைகளுக்கு முன்னால் அதற்கான வரலாற்றுப்பூர்வமான ஆதாரங்கள் அனைத்துமே இருக்கின்றன.

நாம் தற்பொழுது திபெத்திற்கான எல்லா உறவுகளையும் சீனா வழியாகவே செய்து வருகிறோம். திபெத் மக்களுக்கும் இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசம் மற்றும் வடமேற்கு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதி மக்களுக்கும் வரலாற்றுப்பூர்வமாக, பண்பாட்டு ரீதியாக ஓர் உறவு இருக்கிறது. எப்படி தமிழக மக்கள் ஈழ மக்களை தம்முடைய தொப்புள் கொடி உறவாகப் பார்க்கிறார்களோ, அதே போலத்தான் காஷ்மீர் பகுதி மக்களும் திபெத்தைத் தங்களுக்கு மிக நெருக்கமான மண்ணாகப் பார்க்கின்றனர். 1945 முதல் சீனா திபெத்தை படிப்படியாக ஆக்கிரமித்தது. இந்தியாவும் சீனாவும் சகோதர நாடுகள் என்று நாம் உரக்கக் கூறிக் கொண்டிருக்கும் போதே, சீனா திபெத்தை நரித்தனமான திட்டத்துடன் ஆக்கிரமித்துக் கொண்டது. திபெத் விஷயத்தில் அரசியல் மற்றும் ராணுவ ரீதியான நெருக்கடியை கொடுக்க முடியாத சூழலில் இந்தியாவும் சீனாவின் நிலையை ஏற்றுக் கொண்டுள்ளது.

ஆக்கிரமிப்புக் கட்டாயத்துக்குள்ளாக்கப்பட்ட சூழலில், திபெத் மக்களுள் பெரும்பாலானோர் தலாய் லாமா தலைமையில் திபெத்தை விட்டு வெளியேறி இந்தியா வந்தனர். இன்று சுமார் ஒன்றரை லட்சம் திபெத் மக்கள் இந்தியாவில் இருக்கின்றனர். இவர்கள் இந்தியா வந்த பிறகு பிற நாடுகளுக்கும் சென்றிருக்கின்றனர். அவர்களுடைய மதம் பவுத்தம். அவர்களுடைய கல்வி அமைப்பு, பண்பாடு என்பவை பவுத்தத்தைத் தழுவியே அமைக்கப்பட்டுள்ளன. அவர்களுடைய இந்தப் பண்பாட்டு நிலைக்கு எதிரான நிலை அங்கு உருவானபோது, அவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டிய கட்டாய சூழ்நிலை உருவானது. சொந்த மண்ணை, சொந்த அடையாளங்களை இழந்த, விரட்டியடிக்கப்பட்ட அந்த மக்களுக்காக நாம் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்.

சீனா படிப்படியாக திபெத் பகுதியை ஆக்கிரமிப்பதற்கு முன்பு இருந்த அந்நிலப்பரப்பின் வரலாறு என்னவாக இருந்தது?

1950 வரையில் திபெத் ஒரு தனி நாடாக, ஒரு சுதந்திர நாடாகத்தான் திகழ்ந்தது. ஆனால் அதனுடைய அமைப்பானது நிழற்குடை சாசனப்படி, 1914 ஆம் ஆண்டிற்குப் பின் "ஸ்வீதர் கீ சைனீஸ் வீதர்கீ' என்ற அமைப்பிற்கு வந்தது. அதாவது, சீனாவின் ஆளுகைக்குள் அந்நிலப்பரப்பு கொண்டு வரப்பட்டது. அதற்குக் காரணம், திபெத் மக்கள் சீனாவின் இறையாண்மையை ஏற்றுக் கொண்டதால் அல்ல. அதற்கான உண்மை யான காரணம், அப்போது இந்தியாவில் நிலவி வந்த பிரித்தானிய ஆட்சி, தெற்காசிய பிராந்தியத்தை ரஷ்யாவின் ஆக்கிரமிப்பிலிருந்து தடுப்பதற்காக சீனாவுடன் ஓர் ஒப்பந்தத்தைப் போட்டுக் கொண்டது.

ரஷ்யாவை தென்னாசியப் பகுதிக்குள் நுழையவிடாமல் தடுக்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் திபெத்தை சீனாவின் ஆளுகைக்கு உட்படுத்தி விட்டார்கள். இதுதான் சீனாவின் ஆளுகைக்குள் திபெத் வந்ததற்கான உண்மையான காரணமே தவிர, திபெத் மக்கள் சீனாவின் இறையாண்மையை ஏற்றுக் கொண்டு விட்டனர் என்பதில் எந்த உண்மையும் கிடையாது.

சீனாவின் ஆளுகைக்குள் திபெத் உட்பட்டதற்குச் சரியான அரசியல் தலைமை இல்லாததுதான் காரணமா?

அரசியல் தலைமை இல்லை; ஆனால், மத ரீதியான தலைமை அமைப்புகள் இருந்தன. அரசியல் குழப்பங்கள் நிலவிய சந்தர்ப்பமும் அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். கடந்த அய்ம்பது ஆண்டுகளுக்கும் மேலாக "அன்சைனீஸ்' என்று அழைக்கப்படுகின்ற மக்கள் அங்கு சீனாவால் குடியேற்றப்பட்டு வருகின்றனர். இன்னும் பத்திருபது ஆண்டுகளில் "அன்சைனீஸ்' மக்கள் திபெத்தியர்களைவிட எண்ணிக்கையில் மிகுந்திருப்பார்கள். திபெத்திய பண்பாட்டு அடையாளங்கள், வாழ்வியல் அடையாளங்கள் எல்லாம் வேகமாக மாற்றப்பட்டு வருகின்றன. இன்னும் சொல்லப்போனால், வட அமெரிக்கப் பகுதிகளில் அங்கு பூர்வீகக் குடிகளாக இருந்த மக்கள் "நேட்டீவ் அமெரிக்கன்ஸ்' என்று அழைக்கப்படுகின்ற மக்கள் வாழும் பகுதிகளில், சூதாட்டமும் இரவு நேர கேளிக்கை விடுதிகளும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் பிற பகுதிகளில் இவற்றிற்கான அங்கீகாரம் வழங்குவது என்பது, மிகுந்த கட்டுப்பாட்டுடனே உள்ளது. எங்கு பூர்வீகக் குடிகள் இருக்கிறார்களோ, அங்கு இவற்றிற்கான அங்கீகாரம் என்பது எளிதில் வழங்கப்படுகிறது. பூர்வீகக் குடிகள் வாழும் பகுதிகளில் இவ்வகை சூதாட்டங்களையும் கேளிக்கை விடுதிகளையும் அதிகரிக்க வைப்பதன் மூலம் அவர்களுடைய பண்பாட்டு அடையாளங்கள் மெல்ல மெல்ல அழிக்கப்படுகின்றன என்பதே உண்மை. சட்ட அமைப்பைச் சாதகமாகப் பயன்படுத்தும் இந்த அமைப்பைப் போலவே, சீனாவும் திபெத் பிரதேசங்களில் இத்தகைய சூதாட்ட கேளிக்கை விடுதிகளையும், மதுபானக் கடைகளையும் ஏராளமாகத் திறந்து வருகின்றன.

மேலும் அப்பகுதிகளில் ஏழு ராணுவத் தளங்களையும் சீனா அமைத்துள்ளது. இதன் மூலம் திபெத் மக்கள் தனித்து இயங்காத வண்ணம் மீண்டும் அது ஒரு தனி நாடாக செயல்படாதவாறு எல்லா வழிகளையும் அடைத்து வருகின்றனர். இதே நிலையைத்தான் இலங்கை அரசும் ஈழப் பகுதியில் செயல்படுத்தி வருகிறது. இதே வகையிலான ஒடுக்குமுறை பர்மாவிலும் செயல்படுத்தப்படுகிறது. சுதந்திரத்திற்காகப் போராடுகிற மக்களுக்கு நாம் உதவி செய்ய வேண்டும் என்பது மட்டுமில்லாமல், இந்த மக்களின் துன்பங்களுக்குப் பின்னால் ஏதோ ஒரு பொதுவான அடையாளம் தெரிகிறது. நாம் அதை வெளிக் கொண்டுவர வேண்டும்.

மதத்தை முன்னிறுத்திய திபெத் விடுதலைப் போராட்டம், பிற்போக்கான ஒன்றாகப் பார்க்கப்படுகிறதே?

திபெத் மக்களை ஒரு தேசிய நீரோட்டத்தில் இணைப்பதற்கு பவுத்தமே உதவுகிறது. பண்பாட்டு ரீதியாகவும் வரலாற்று ரீதியாக வும் பவுத்தமே அவர்களை அரவணைத் துள்ளது. மேலும் பவுத்தத்தை ஒரு மதமாகக் கொள்வதைவிட, அதை ஒரு வாழ்க்கை நெறியாகக் கொள்வதுதான் பொருத்தமானது. அந்த அடிப்படையில் பவுத்தத்தை முன்னிறுத்திய அவர்களுடைய விடுதலைப் போராட்டத்தை மதத்தை முன்னிறுத்தியதாக நாம் குறுக்கிவிட வேண்டாம். மேலும், இலங்கையில் பின்பற்றப்படும் பவுத்தத்திற்கும் உலகின் பிற பகுதிகளில் பின்பற்றப்படும் பவுத்தத்திற்கும் அடிப்படையில் நிறைய வேறுபாடுகள் உள்ளன.

இலங்கையில் பின்பற்றக்கூடிய பவுத்த மத தத்துவம், புத்த மதத்திற்கே ஒரு சவாலாகும். பவுத்தத்திற்கு அடிப்படையான தம்மம், கருணை, அமைதி போன்ற எந்த கருத்துகளும் இலங்கையில் உள்ள பவுத்தத்தோடு சற்றும் பொருந்துவதில்லை. தன்னுடைய சொந்த மக்களைக் கொல்லும் ராணுவத்தை இலங்கையில் உள்ள பவுத்தத் துறவிகளால் மட்டுமே ஆசிர்வதிக்க முடிகிறது.

ஒருமுறை திபெத்தைச் சேர்ந்த ஒரு பவுத்த பிக்கு என்னிடம் கூறினார் : "நாங்கள் இலங்கை பவுத்த பிக்குகளைக் கண்டால் பயப்படுவோம். ஏனெனில், இவர்கள் பவுத்தத்தை வெகு விரைவில் சீரழித்து விடுவார்கள். மற்ற நாடுகளுக்கு அவர்களுடைய பவுத்தம் பரவினால் வன்முறை கலாச்சாரமும் இனவெறியும் அந்நாடுகளுக்குப் பரவிவிடும்.'' மாறாக, திபெத் பவுத்தம் என்பது ஒரு மிகப் பெரிய பண்பாடாகப் போற்றப்பட வேண்டியதாயிருக்கிறது. ஒரு நாட்டிற்கும் இன்னொரு நாட்டிற்கும் இடையே உள்ள பவுத்தத்திற்கிடையே நிறைய வேறுபாடுகள் உள்ளன.

சீனாவின் திபெத்திய ஆக்கிரமிப்பால் இந்தியத் துணைக் கண்டத்திற்கு பாதிப்புகள் ஏற்படுமா?

இந்த விஷயத்தில் நாம் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம், சீனாவின் ஆக்கிரமிப்பில் திபெத் வந்ததால், இந்தியாவிற்குதான் மிகப்பெரிய இழப்பு. பூகோள ராணுவ அமைப்பு ரீதியாக நமக்கு மூன்றாம் நிலையிலிருந்த சீனா, தன்னுடைய பூகோள ராணுவ அமைப்பை முதல் நிலைக்கு எடுத்து வந்து இன்று நமக்கு நேரடி அண்டை நாடாக மாறியுள்ளது. காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் நம்மிடமிருந்து ஆக்கிரமித்த சில பகுதிகளை சீனா வசம் ஒப்படைத்துள்ளது. கரோக்கிராம் பாஸ் மற்றும் சீனாவின் வசமுள்ள லடாக் பகுதிகளையும் சேர்த்துப் பார்த்தீர்களென்றால், இந்தியாவிற்கு எதிரான மலைப்பாதைகளை அமைப்பதற்கு ஏதுவாக இருக்கிறது. இது, இந்தியாவுக்குதான் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் இந்தியா 1962 போருக்குப் பிறகு ஏற்பட்ட போர் ஒப்பந்தத்தின்படி, இன்னமும் நம்முடைய பிரச்சனைகளை சீனாவுடன் தீர்த்துக் கொள்ளாமலேயே இருக்கிறது.

சீனாவிற்கு பிரச்சனைகள் குறித்து ஒரு வித்தியாசமான அணுகுமுறை உண்டு. "பென்ஜிஓபிங் லைன்' என்று அதைக் குறிப்பிடுவார்கள் அதாவது "பிரச்சனைகள் இருக்கும்; அது தீரும் வரை நாம் பேசிக் கொண்டிருக்க வேண்டும்; அதைத் தீர்க்க வேண்டும் என்று நாம் முற்பட்டால் அந்தப் பிரச்சனைகள் தீராது; அது எப்போது தீர்வதற்கான வாய்ப்புகள் உருவாகுமோ, அந்த சமயத்தில் பிரச்சனைகளுக்குத் தானே தீர்வுகள் வரும்; அதற்காக நாம் இப்பொழுது முரண்பட்டுக் கொள்ள வேண்டியதில்லை.' இத்தகைய ஒரு கருத்து மூலம் பென்ஜிஓபிங் எல்லா பிரச்சனைகளையும் காலம் தாழ்த்தியே வந்தார். இந்த நடைமுறையையே திபெத்திய தலைவர்களுடனும் இந்தியத் தலைவர்களுடனும் சீன அரசு கடைப்பிடித்தது. சொல்லப்போனால், சீனா தனக்குப் பிரச்சனைகள் உள்ள எந்த நாட்டுடனும் "பென்ஜிஓபிங் லைன்' அடிப்படையிலேயே அணுகியது. உண்மையிலேயே பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான நெறிமுறைகளை அவர்கள் உருவாக்குவதே இல்லை.

இன்றைய நிலையில் இந்தியாவைச் சுற்றி வடக்கு, கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் சீனா தன்னுடைய ராணுவத் தளங்களை அமைத்துள்ளது. வடக்கில் பாகிஸ்தானின் கராச்சி மற்றும் குவாடர் பகுதிகளிலும், கிழக் கில் சிட்வே என்று அழைக்கப்படுகின்ற பர்மா பகுதியிலும், தெற்கில் இலங்கையின் அம்பன் தோட்டா பகுதியிலும் குறிப்பாக துறைமுகப் பகுதிகளில் தங்களுடைய ராணுவத் தளங்களை அமைத்துள்ளது. மற்றொரு விஷயம், நமது வடகிழக்குப் பகுதிகளில் இன்றைக்கு குறைந்தபட்சம் அய்ந்தாயிரம் சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பு, சீனா ஆக்கிரமித்துள்ள பகுதியாக உள்ளது.

சீனா மிகப் பெரிய ராணுவ ரீதியான சவாலாகவே இருந்து வருகிறது. இதே சீனாதான் திபெத், பர்மா, இலங்கை ஆகிய மூன்று இடங்களிலும் நடைபெறும் மக்கள் விடுதலைப் போராட்டங்களை ஒடுக்குவதற்கான பின்னணியாகவும் செயல்பட்டு வருகிறது. இதுவும் குறிப்பாக நாம் கவனிக்க வேண்டிய ஒன்று. திபெத் சீனாவின் ஆளுகைக்குள் சிக்குண்டுள்ளது. பர்மாவைப் பொருத்த மட்டில் அங்கு நடைபெறும் ராணுவ ஆட்சிக்கு வெளிப்படையாகவே சீனா எல்லா உதவிகளையும் செய்து வருகிறது. ஈழப் போராட்டத்தைப் பொருத்தவரை, அதனை ஒடுக்குவதற்கான சகல ராணுவ மற்றும் பொருளாதார ரீதியிலான உதவிகளையும் சீனா செய்து வருகிறது. சீனாவின் இன்றைய அரசியல் நிலைப்பாடுகள் மனித உரிமைகளுக்கு எதிராக உள்ளன.

இவ்வாறு நான் கூறினாலும் உண்மையில் சீனப் போராட்டத்தின் மீதும், சீனப் புரட்சியின் மீதும் நான் பெரிதும் மரியாதை கொண்டிருக்கிறேன். அதே சமயம் அவர்களது பொதுவுடைமைப் புரட்சியானது, ஒரு பரந்த அளவில் செல்லாமல் ஒரு பரந்த நோக்குடன் உலகளாவிய முதலாளித்துவத்திற்கு எதிரானதாக அமையாமல், ஓர் உலகம் தழுவிய கம்யூனிசத்தை வளர்க்காமல் குறுகிவிட்டது. சீனாவே தற்பொழுது ஒரு ஏகாதிபத்திய மனப்போக்குக்கு மாறிவிட்டது. சீனா தன்னுடைய ஏகாதிபத்திய அரசமைப்பை தெற்காசியப் பிராந்தியத்தில், சொல்லப் போனால் ஆப்பிரிக்க கண்டத்தின் பல பகுதிகளிலும் பரவ விட்டிருக்கிறது. ஆப்பிரிக்க கண்டத்தில் சீனா முதலீடு செய்து, அங்குள்ள பொருளாதாரக் கட்டமைப்புப் பணிகளில் அமர்ந்து, நிலச்சுரங்கம் மற்றும் கனிம வளங்களைச் சுரண்டி தன்னுடைய தேசிய சுயநலத்திற்கு எடுத்துச் செல்வதாகவும் ஒரு குற்றச்சாட்டு உள்ளது.

பர்மா, திபெத், ஈழம் இந்த மூன்று இடங்களிலும் நடைபெறும் மக்கள் போராட்டங்களுக்கு எதிராக சீனா இருக்கிறது என்கிறீர்கள். ஆனால் இந்தியாவின் நிலைப்பாடு என்பது, ஈழத்திற்கும் பர்மாவிற்கும் ஒன்றாகவும், திபெத் திற்கு மற்றொன்றாகவும் இருப்பது ஏன்?

உண்மைதான். பர்மா, திபெத், ஈழம் இந்த மூன்று விஷயங்களிலும் இந்தியாவின் நிலைப்பாட்டில் வேறுபாடு இருக்கிறது. திபெத்தை பொருத்தளவில், திபெத்திற்காக சீனாவுடன் எந்தவித ராணுவ நடவடிக்கைகளையும் மேற்கொள்ள இந்தியா தயாராக இல்லை. திபெத்தில் சீனாவின் நிலையை ஏறக்குறைய இந்தியா ஏற்றுக் கொண்டு விட்டதாகவே சொல்ல முடியும். எனினும் திபெத்திய தலைவர்கள் இங்கு தங்குவதற்கும் மக்கள் அகதிகளாக இருப்பதற்கும், அவர்கள் தங்களுக்கான புறநிலை அரசை அமைத்துக் கொள்வதற்கும் போதிய வாய்ப்புகள் இந்தியாவில் உள்ளன. முக்கியமாக, அவர்களுடைய பண்பாட்டு அடையாளங்கள் காப்பாற்றப்படுவதற்கு இந்தியா துணை நிற்கிறது.

பர்மிய ஜனநாயகப் போராட்டத்தைப் பொருத்தளவில், அப்போராட்டத்திற்கும் அம்மக்களுக்கும் எந்தவித உதவியையும் இந்தியா செய்யவில்லை. 1995 ஆம் ஆண்டிற்கு முன்பாக குறிப்பாக 1988இல் ஜனநாயகப் போராட்டத்திற்கான ஆதரவு மனநிலை ஓரளவிற்கு இந்தியாவிற்கு இருந்ததும் உண்மை. ஆனால் தற்பொழுது அங்கு நடைபெறும் ராணுவ ஆட்சிக்கு உதவவில்லையென்றால், பர்மிய ராணுவ ஆட்சி நமக்கு எதிராகத் திரும்பி, நமக்கு எதிரான சக்திகளுடன் இணைந்து அவர்களுக்கு உதவக்கூடிய வாய்ப்புகள் அதிகரித்துவிடும் என்ற எண்ணத்தில், அவ்வாட்சிக்கு உதவும் போக்கையே இந்தியா கடைப்பிடிக்கிறது.

உண்மை என்னவெனில், பர்மிய ராணுவ ஆட்சி நமக்கு எதிராக நம்மைக் கட்டுப்படுத்தக்கூடிய சக்தி அல்ல. இந்திய பர்மிய எல்லைப் பகுதி முழுவதிலும் உள்ள மக்கள் திரள், பர்மிய ராணுவ ஆட்சிக்கு எதிரான நிலையில் தீவிரமாக உள்ளனர். இவ்வெல்லைப் பகுதி மக்களைக் கடந்து பர்மிய ராணுவம் இந்தியப் பகுதிக்குள் ஒன்றும் செய்துவிட முடியாது. ஆனால் நம்முடைய வெளியுறவு சிந்தனை தான் மக்கள் விரோதமாக உள்ளது.

ஈழத்தைப் பொருத்தளவிலும் இந்தியாவினுடைய நிலைப்பாட்டில் ஒரு தெளிவு இருப்பதாகக் கூறுவதற்கில்லை. சீனாவின் ஆளுகை இலங்கையில் மேலோங்கிவிடும் என்ற காரணத்திற்காகவும், இலங்கை இந்தியாவின் பிடியிலிருந்து விலகிப் போய் விடும் என்ற எண்ணத்திலும், இந்திய அரசு இலங்கையின் இன அழிப்புப் போருக்கு எல்லாவித மனிதநேய சிந்தனைகளையும் புறந்தள்ளிவிட்டு துணை போயுள்ளது. மாறாக, இந்திய அரசு இலங்கைக்கு இத்தனை உதவிகளைச் செய்தும் இலங்கையில் சீன ஆதிக்கத்தை இந்தியாவால் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை ஒரு தெளிவான நிலையில் இல்லாததால்தான் திபெத், பர்மா, ஈழம் உள்ளிட்ட விஷயங்களில் இந்தியாவால் ஒரு நிலையான, மக்கள் விரோதமில்லாத நிலைப்பாட்டை எடுக்க முடியவில்லை.

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை வகுக்கும் அதிகாரிகளின் பிழையால் இந்திய தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இருப்பது உண்மையா?

நீங்கள் சொல்வது பெரும்பாலும் சரி. இந்திய வெளியுறவுக் கொள்கையில் குறிப்பாக ஈழத்தில் மேற்கொண்ட நிலைப்பாட்டால், இந்தியாவால் சீனாவின் ஆளுகையை இலங்கையில் தடுத்து நிறுத்த முடியவில்லை. இன்று இந்தியா, சீனாவின் ராணுவத் தளங்களால் நான்குபுறமும் சூழப்பட்ட ஒரு பகுதியாக மாறியுள்ளது. இந்திய வெளி யுறவுக் கொள்கையில் ஒரு சீர்திருத்தம் வேண்டும். ஒரு தன்னிச்சையான, சுயநலமான பாதையில் நாம் சென்று கொண்டிருக்கிறோம். நமமுடைய பார்வை ஒரு குறுகிய பார்வையாக மாறிவிட்டது. பர்மாவில் போய் எண்ணெய்க் கிணறுகளைப் போராடிப் பெறுவதும், அதற்காக ராணுவ ஆட்சியை அங்கீகரிப்பதும்; அதுபோலவே இலங்கையில் உள்ள எண்ணெய்க் கிணறுகளுக்காக இலங்கை அரசுக்கு எந்தவித நிர்பந்தமும் இல்லாமல் ஒத்துழைப்பதும், ஆயுதங்களைக் கொடுப்பதும் என பொருளாதார, வியாபார விஷயங்களை மய்யமிட்டே நமது கொள்கைகள் வகுக்கப்படுகின்றன.

ஆனால் 1940களில் இந்தோனேசிய சுதந்திரப் போராட்டக் காலத்தில் அதன் சுதந்திரத்திற்காக பிஜு பட்நாயக், இங்கிருந்து விமானத்தை ஓட்டிக் கொண்டு போய் அங்கிருந்த தலைவரை பாதுகாப்பாக கூட்டிக் கொண்டு வந்தார். ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ், தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராகப் போராடிக் கொண்டிருந்தபோது அதனை அங்கீகரித்து ஆதரித்த ஒரே நாடு இந்தியா. இத்தகைய வரலாறுகள் பலவற்றைக் கொண்ட நாடு உயர்ந்த வரலாற்றுப்பூர்வமான கொள்கைகளை விட்டுவிட்டு பொருளாதாரம், சில தனிப்பட்ட நபர்களின் சுயலாபம் உள்ளிட்ட காரணங்களுக்காக இந்தியாவின் வரலாற்றையே மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளில் மாற்றம் வேண்டும் என்ற உரையாடல் மேலெழும்போது, மக்கள் இயக்கங்கள் எத்தகைய அழுத்தங்களைத் தர வேண்டும்?

ராணுவம் மற்றும் வெளியுறவுக் கொள்கை பற்றிப் பேசும்போது, ஏதோ சட்டத்திற்கு அப்பாற்பட்ட விஷயமாக அது பார்க்கப்படுகிறது. முன்பு, 40 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் அளவிலான மணிப்பூர் பகு தியை நேரு பர்மாவிற்குத் தானமாக வழங்கி விட்டார். அதே போல, இந்திரா காந்தி அம்மையார் 1970களில் கச்சத் தீவுப் பகுதியை இலங்கைக்குக் கொடுத்துவிட்டார். இது போன்ற சமயங்களில் அந்த நிலப்பரப்பைச் சார்ந்து அல்லது அருகில் வாழும் மக்களிடம் எந்தவிதக் கருத்தும் கேட்கப்படவில்லை. இத்தகைய வெளியுறவுக் கொள்கைகளால் மக்கள் நேரடியாகப் பாதிப்பிற்குள்ளாகி யுள்ளனர். வெளியுறவுத் துறையின் கருத்துகள், கொள்கைகள் மக்களுடன் விவாதிக்கப்பட வேண்டும். இந்த விஷயங்களில் மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துகின்ற பொறுப்பு, சமூக அமைப்புகளுக்கும் சமூக சிந்தனையாளர்களுக்கும் இருக்கிறது.

இலங்கையுடனான இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்ட நிலையற்ற தன்மை யினால், தமிழகக் கடலோர மீனவர்கள் எண்ணற்ற பாதிப்புகளை சந்திக்கிறார்கள். மக்களுக்கு பிரச்சனை தரக்கூடிய வெளியுறவுக் கொள்கைகளை மக்கள் விவாதிக்க வேண்டும். இன்றைக்கு கச்சத் தீவை எடுத்துக் கொண்டால், நம்முடைய வெளியுறவுத் துறை அமைச்சர் சொல்கிறார் : “அந்தத் தீவில் மீன் பிடிப்பதற்கும் இறங்குவதற்கும் உள்ள உரி மைøயத்தான் நாம் பேச முடியுமே தவிர, அந்தத் தீவை திரும்பப் பெறுவதற்கான பேச்சுக்கே இடமில்லை'' என்கிறார். பேச்சுக்கே இடமில்லாத விஷயம் என்று எதுவும் கிடையாது. மக்கள் இதைப்பற்றி என்ன நினைக் கிறார்கள்? விஷயம் வெளியே வர வேண்டும் என்றால், விவாதம் தேவை. அத்தகைய விவா தங்களை முன்னெடுக்கின்ற பொறுப்பு, சமூக அமைப்புகளையும் சமூக ஆர்வலர்களை யும் ஊடகங்களையும் சார்ந்தது.

சந்திப்பு : அ. செந்தில் நாராயணன்

Pin It

இந்தியாவின் சுவிட்சர்லாந்து என வர்ணிக்கப்பட்ட காஷ்மீர், இயற்கை எழில் சூழ்ந்த உலகின் மிக அழகான நிலப்பரப்புகளின் பட்டியலில் முதன்மையாகத் திகழ்ந்தது.ஆனால் இன்று, காஷ்மீர் பள்ளத்தாக்கு காணும் இடமெல்லாம் மரணப் புதைகுழிகளால் நிரம்பி யுள்ளது. ஈழத்தில் நடைபெறும் இலங்கை அரசின் இனப்படுகொலைக்கு மவுனசாட்சியாக

இந்திய அரசு இருப்பதன் காரணம், அது தன்னளவில் அதே இனப்படுகொலையை தன் நாட்டு மக்கள் மீதே நடத்திக் கொண்டிருப்பதுதான் என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது. உலகின் மிகக் கொடூரமான ராணுவ அடக்குமுறையின் மூலம், காஷ்மீரில் ஓர் இனப்படுகொலையை இந்திய ராணுவம் நிகழ்த்தி வருகிறது. இவற்றையெல்லாம் அரசு மூடி மறைத்து வந்தாலும், அங்கு புதைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு சடலமும் தன் கதையை இந்த உலகுக்கு அறிவிக்க துடித்துக் கொண்டிருக்கிறது.

தாயின் முன்பு மகளை வன்புணர்வுக்கு உட்படுத்த வேண்டும். இதுதான் அந்த ராணுவ வீரனின் ஆசை. "வேண்டாம் எங்கள் இருவரையும் விட்டுவிடுங்கள்' என அந்தத் தாய் ராணுவ வீரனின் மிதியடிகளைப் பிடித்து மன்றாடுகிறார், கதறுகிறார். "என்னால் இதை நிச்சயம் காண இயலாது, என்னை வேறு அறைக்கு அழைத்துச் செல்லுங்கள் அல்லது கொன்று விடுங்கள் என்கிறார் அவர். அந்த ராணுவ வீரன் வன்புணர்வுக்கு ஆயத்தம் ஆகும் வகையில் தன் உடைகளைக் களைந்து கொண்டே, உன் ஆசைப்படியே நடக்கட்டும் என அவருடைய நெற்றியில் தானியங்கி துப்பாக்கியை வைத்து சில சுற்றுகள் தோட்டாக்களை செலுத்துகிறான். தன் காரியத்தை தொடர்கிறான்.''

துபோன்ற ஓராயிரம் கதைகளை, காஷ்மீர் சென்று வந்துள்ள    மனித உரிமைக் குழுக்கள் பதிவு செய்துள்ளன. இந்த சம்பவம் கொடுங்கோல் ஆட்சி நடக்கின்ற தேசத்திலோ, ராணுவ சர்வாதிகார ஆட்சி நடக்கின்ற நாட்டிலோ நடைபெறவில்லை. மாறாக, வளர்ந்து வரும் வல்லரசு, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என செல்லமாய் உலக ஊடகங்களால் வர்ணிக்கப்படும் இந்தியாவில்நடைபெற்ற ஒரு நிகழ்வே. இந்திய ராணுவமும் அதன் துணைப் படைகளும் நாள்தோறும் காஷ்மீரிலும், வடகிழக்கிலும் வாடிக்கையாக நடத்தும் அட்டூழியங்களில் ஒன்றே. 1989 2009 வரையிலான காலப்பகுதியில் மட்டும் காஷ்மீரில் 8,000 பேரை காணவில்லை. 70 ஆயிரம் பேர் போலி மோதல் சாவுகளிலும் அரசின் பாதுகாவலிலும் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களைப் பற்றிய தகவல்களை அறிய 1990 முதல் மட்டும் 15,000 மனுக்களை வழக்குரைஞர்கள் நீதிமன்றங்களில் பதிவு செய்துள்ளனர். இந்த மரண எண்ணிக்கை கூட, மிகக் குறைந்த அளவில்தான் கணக்கிடப்பட்டுள்ளது.

இவ்வாறு சட்ட விரோதமாகக் கொல்லப்படுபவர்களை ராணுவம், துணை ராணுவப் படைகள், ஜம்மு காஷ்மீர் காவல் துறை என அனைவரும் ஒரே முறையில்தான் அப்புறப்படுத்தி வருகிறார்கள். இவ்வாறு கொல்லப்படுபவர்களின் சடலங்களை ஏதேனும் ஒரு கிராமத்தில் அல்லது சிறு நகரத்தில் உடனே புதைத்து விடுவது என்பதை வழக்கமாக மாற்றிவிட்டிருக்கின்றனர். அண்மையில் காஷ்மீரில் (இந்தியா நிர்வகித்து வரும் காஷ்மீர் பகுதியில்) பல கும்பல் புதைகுழிகளை "உலக மனித உரிமைகள் மற்றும் நீதிக்கான தீர்ப்பாயம்' கண்டுபிடித்துள்ளது. இந்த அமைப்பைச் சேர்ந்த அங்கனா சாட்டர்ஜி, பர்வேஸ் இம்ரோஸ், கவுதம் நவ்லகா, ஜாகிர்உத்தின், மீகிர் தேசாய், குர்ரம் பர்வேஸ் ஆகியோர் மேற்கொண்ட மிகத் தீவிரமான ஆய்வுப் பணிகளின் விளைவாக "புதையுண்ட சாட்சியம்' என்று தலைப்பிடப்பட்ட அறிக்கை நவம்பர் 2009இல் வெளியிடப்பட்டது. உலக மனித உரிமைகள் மற்றும் நீதிக்கான தீர்ப்பாயத்தைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்களுடன், "காணாமல் போனவர்களின் பெற்றோர் அமைப்பும்' இந்த ஆய்வை மேற்கொள்வதில் உறுதுணையாக இருந்தது. பாந்திபூரா, பாராமுல்லா, குப்வாரா பகுதி மக்களும் இந்த ஆய்வறிக்கை முழு வடிவம் பெற ஊக்கமளித்தனர்.

காஷ்மீரின் குப்வாரா, பாராமுல்லா, பாந்திபூரா மாவட்டங்களில் மட்டும் 2,700 கும்பல் புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவை எல்லாம் எங்கோ ரகசியமாக உள்ள புதைகுழிகள் அல்ல. பள்ளிக் கூடங்கள், நகர சதுக்கங்கள், வழிபாட்டு மைதானங்கள், காடுகள், வயல்வெளிகள் என மக்களின் வாழ்விடங்களெங்கும் இது போன்ற திடீர்புதை குழிகள் அரும்பியுள்ளன. அலங்கரிக்கப்படாத, பெயரிடப்படாத, குறிக்கப்படாத மயானங்களாக இவை அங்கே முளைத்துள்ளன. இவற்றை மக்கள் தங்களின் அன்றாட பணிகளின் ஊடாக கவனித்து வருகின்றனர். அவர்களின் நினைவுகளில் இந்தப் புதை குழிகள் அசைக்க முடியாத இடத்தை ஆக்கிரமித்துள்ளன. ஆனால், இதைப் பற்றி அங்கு யாரும் அடுத்தவர்களிடமோ, தங்கள் குடும்பத்தாரிடமோ கூட பகிர்ந்து கொள்வதில்லை. உள்ளிருந்தே கொதிக்கும் நினைவு களாக, அடக்குமுறையின் உறைந்த படிமங்களாக அவை உள்ளன.

அடையாளம் காணப்பட்ட 2,700 புதைகுழிகளில் 2,943 சடலங்கள் இருந்தன. இதில் பெரும் பகுதியானவை ஆண் சடலங்கள். 154 புதைகுழிகளில் இரண்டுக்கும் மேற்பட்ட சடலங்கள் இருந்தன. இந்த சடலங்கள் எல்லாம் பெரும்பாலும் இரவு நேரங்களில் கொண்டு வரப்பட்டு புதைக்கப்பட்டுள்ளன. பொதுவாக, இங்குள்ள கிராமப் பெரியவர்களுக்கு மாலையில் பிணங்கள் வருகின்றன என்ற தகவல் மட்டுமே ராணுவத்தினரிடமிருந்து வரும். இந்த சட்ட விரோதமான காரியத்தை செய்ய மறுத்தால், அடுத்த நாளே நீங்கள் எங்காவது அருகில் உள்ள மாவட்டத்தில் புதைக்கப்படும் பிணங்களின் குவியலில் இடம் பெறக்கூடும்.

பிறகு ஊர் பெரியவர்கள் ஆட்களை தயார் செய்து, குழிகளை வெட்டிவிட்டு கடும் குளிரில் காத்திருக்க வேண்டும். ராணுவ வாகனம் இரவில் மரண ஊர்தியாக வந்து சேரும். பெரும் பகுதியான சடலங்களில் வன்கொடுமைக்கான தடயங்கள், தீக்காயங்கள், தோட்டாக்கள் துளைத்த அடையாளங்கள் தான் இருக்கும் என புதைத்தவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த வேலைகளில் ஈடுபடும் எவருக்கும் எந்த ஊதியமும் வழங்கப்படுவதில்லை. பொதுவாக, புதைக்கப்படுபவர்களைப் பற்றிய தகவல்களை ஆவணப்படுத்தும் நடைமுறைகள் எதுவும்பின்பற்றப்படுவதில்லை.

இருப்பினும் ராணுவத்தின் வாய்மொழியான அல்லது எழுதப்படாத ஒரே விளக்கம் இதுவே: “இவர்கள் அனைவரும் வெளிநாட்டுத் தீவிரவாதிகள். இவர்கள் நம் நாட்டு எல்லைக்குள் நுழைய முயன்றனர் அல்லது வெளியே தப்பிக்க முயன்றனர்.'' இத்தனை அடக்குமுறைகளையும் கடந்து மக்களிடையே இந்த சடலங்களைப் பற்றி துல்லியமான விவரணைகள் நாட்டார் வழக்காறு போல, இந்த கிராமங்களில் இருளில் மிதக்கும் இரவு பனி மீது ஏறி தன் பயணத்தைத் தொடங்கும். இந்த அடையாளங்களை பெண்கள், ஆண்கள் தங்கள் சங்கேதக் குறியீடுகளின் மூலம் பகிர்ந்து கொள்வர். பல நேரங்களில் மாவட்டங்களை கடந்தும் கூட தொலைவிலிருந்து முதியவர்கள், பெண்கள் இங்கு வந்து இன்னும் தெளிவாகக் குறிப்புகளை கேட்டுச் செல்வார்கள். சில நேரங்களில் அவர்கள் தங்களின் பிள்ளையை, கணவரை மீட்டும் சென்றுள்ளனர். மீண்டும் தோண்டி எடுத்து அடையாளத்தை தக்க சான்றுகள் மூலம் நிரூபித்து, தங்களின் சொந்த கிராமத்திற்கு எடுத்துச் சென்று அடக்கம்செய்துள்ளனர்.

பாராமுல்லா மாவட்டத்தில் மட்டும் 1,122 புதைகுழிகள் காணப்பட்டுள்ளன. குப்வாரா மாவட்டத்தில் 1,453 புதைகுழிகளும், பாந்திபோரா மாவட்டத்தில்125 புதைகுழிகளும் இருக்கின்றன. மூன்று மாவட்டங்களில் மட்டும் 2,943 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. "உலக மனித உரிமைகள் மற்றும் நீதிக்கான தீர்ப்பாய'த்தின் ஒருங்கிணைப்பாளரான டாக்டர் அங்கனா சாட்டர்ஜி, “இத்தகைய மரணக் குழிகள், இனப்படுகொலை அல்லது போர்க் குற்றங்கள் மற்றும் மனித நேயத்திற்கு எதிரான குற்றங்களிலிருந்து அரசு தப்பிக்க முடியாது. இந்திய ராணுவத்தினரும் துணை ராணுவத்தினரும் தண்டனை மற்றும் விசாரணையிலிருந்து தப்பித்துக் கொள்ளவே, இத்தகைய மரணக் குழிகளை உருவாக்கி இருக்கலாம்'' என்கிறார்.

பாராமுல்லா மாவட்டத்தில் உள்ள கிச்சாமா கிராமத்தில் இரு மரணப் புதைகுழிகள் வெவ்வேறு இடங்களில் காணப்பட்டன. முதல் பகுதியில் 105 மரணக் குழிகள் இருந்தன. அதன் அருகில் 60 மரணக் குழிகள் இருந்தன. அந்தக் கிராமத்தில் உள்ள சமூகப் பெரியவர், தாங்கள் இது வரை 230 சடலங்களை அடக்கம் செய்ததாகத் தெரிவிக்கிறார். கட்டுப்பாட்டு எல்லைப் பகுதிக்குள் நுழைய முயன்ற வெளிநாட்டுத் தீவிரவாதிகள் தான் இவர்கள் என ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். சில மரணக் குழிகளின் மீது மண்ணை குவியலாக குவித்தும், கற்களை குவித்தும் அடையாளப்படுத்தியிருக்கிறார்கள்.

அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் கூறும் பொழுது, “ஒரு முறை மூன்று பேருடைய எலும்புகள் மட்டுமே இங்கு கொண்டு வரப்பட்டன. தீவிரவாதிகளாகக் கருதப்பட்ட இந்த மூவரின் உடல்களும் முற்றாக எரிக்கப்பட்டிருந்தன. பாராமுல்லா வில் நடந்த தாக்குதல்களில் ஒரு வீட்டில் வைத்து இவர்கள் கொல்லப்பட்டதாக அவர்கள் தெரிவித்தார்கள். நாங்கள் ஒரே புதைகுழியில் அந்த மூவரின் எலும்புகளையும் புதைத்தோம். அவர்களின் உடைகளை அருகில் இருந்த மரத்தில் கட்டினோம். அந்த உடைகளில் இருந்த லேபிள்கள் அகற்றப்பட்டிருந்தன. அவர்களின் உடைமைகளிலிருந்த தாயத்துகளையும் மரத்தில் கட்டிவிட்டோம்'' என்கிறார்.

அதே கிராமத்தைச் சேர்ந்த வேறு ஒருவர் திடுக்கிடும் மற்றொரு செய்தியை தெரிவிக்கிறார்: “பல சமயங்களில் இந்திய ராணு வம் என்னை கைது செய்து சித்திரவதை செய்துள்ளது. நான் தீவிரவாதத்திற்கு உடன்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டினர். இங்குள்ள பல மரணப் புதைகுழிகளை நான் பாகிஸ்தானியர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு புதைத்ததாக அவர்கள் கூறினார்கள். அதுவும் சடலத்திற்கு 35,000 ரூபாயை நான் பெற்றதாகக் குற்றம் சாட்டினர். என்னைத் தொடர்ந்து எங்கள் கிராமத்தில் பலரையும் ராணுவத்தினர் அழைத்துச் சென்று சித்திரவதை செய்தனர். அதன் பிறகு எங்கள் கிராமமே கூட இனி, இது போல் பெயரிடப்படாத அடையாளமற்ற பிரேதங்களைப் புதைப்பதில்லை என முடிவெடுத்தோம். ஏறக்குறைய 2002 முதல் எங்கள் கிராமத்தில் யார் இறந்தாலும் இங்கு புதைக்காமல் அருகில் இருக்கும் சேஹால் கிராமத்தில்தான் புதைத்து வருகிறோம்'' என்கிறார்.

உலக மனித உரிமைகள் மற்றும் நீதிக்கான தீர்ப்பாயம் தனது அறிக்கையில் பட்டியலிட்டுள்ள 2,943 பிரேதங்களும் தங்களுள் ஒரு மிகப்பெரிய வரலாற்றை சுமக்கின்றன. அந்த சடலங்களின் பின்புலத்தில் தாய்மார்கள் மாரடித்து அழும் ஓலக்குரல், கேட்கும் எவர் மனதையும் கனக்கச் செய்யும். கடந்த 30 ஆண்டுகளாக இம்மக்கள் சந்தித்து வரும் அலைக்கழிப்பான வாழ்க்கை பெரும் சலிப்பையும், வாழ்வின் மீது பற்றற்ற நிலையையும் ஏற்படுத்தியுள்ளது. எல்லா குடும்பங்களிலும் யாரேனும் ஒருவர் இருவர் இல்லாத ஊனம் பெரும் மவுனமாய் உலவுகிறது. காஷ்மீரில் உள்ள ஒரே ஒரு மனநல மருத்துவமனையில் மட்டும் இதுவரை 68 ஆயிரம் பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சமூக, பொருளாதார, நிலைகளின் சீர்குலைவு, பதற்றம் தரும் மன அழுத்தம் என அன்றாட வாழ்வே பெரும் துன்பம்தான். அரசுகளின் தோல்விக்கு மக்கள் மிகப் பெரும் விலையை கொடுத்து வருகின்றனர். ஒடுக்குமுறை, பலாத்காரம், சித்திரவதை, சுயநிர்ணய உரிமைக்கான போராட்டங்களை ஒடுக்குதல், சர்வதேச அழுத்தங்களை மதிக்காத போக்கு என காஷ்மீரில் துயரத்தின் புதிய அத்தியாயத்தை நடைமுறைப்படுத்துவதில் ராணுவமும் அரசும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இவர்களுக்கு வலு சேர்க்கும் வகையில், எல்.கே. அத்வானி இங்கு அடிப்படைவாத சூத்திரத்தை மீண்டும் மீண்டும் ஒப்பித்து வருகிறார். அத்வானியின் புனைவுப்படி, ஜம்முவை சேர்ந்த பண்டிதர்கள் தேசபக்தர்கள் என்றும், காஷ்மீர் முஸ்லிம்கள் தேச விரோதிகள் என்றும் தொடர்ந்து கூறி வருகிறார். அமர்நாத் யாத்திரைக்கு மெல்ல மெல்ல காவிச் சாயம் பூசிவிட்டது இந்த கும்பல். 1989 இல் 20 ஆயிரம் பேர் மட்டுமே அமர்நாத் யாத்திரையில் பங்குபெற்றனர். கடந்த ஆண்டு அது 5 லட்சத்தை எட்டி நிற்கிறது. இந்தப் பயணத்தை அண்மைக் கால இந்தியாவின் பெரும் தொழில் நிறுவனங்கள் வழங்கி வருவது கவனத்துடன் பார்க்கப்பட வேண்டிய ஒரு செய்தி. 100 ஏக்கர் நிலத்தை அமர்நாத் வாரியத்திற்கு வழங்கி அரசாங்கம் மீண்டும் அந்தப் பள்ளத்தாக்கு சந்தித்திராத சூழலை உருவாக்கி மேலும் பதற்றத்தை அதிகரித்தது. இத்தனை பெரும் எண்ணிக்கையில் ஆட்கள் கூடினாலே அந்த லிங்கம் கரைந்து விடும் என திணையியல் அறிஞர்கள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

அய்ந்து லட்சம் பயணிகளுக்கு அனைத்து வசதிகளையும் முஸ்லிம்கள் தான் செய்து வருகின்றனர். அங்கு சென்று வந்த அனைவரும் அந்த உபசரிப்பில் லயித்து வந்த தங்கள் பயண அனுபவங்களை கூறி வருவதை, பல செய்திகளின் வாயிலாகவும் தெரிந்து கொள்ள முடியும். ஆனால் இந்தப் பயணிகளின் எண்ணிக்கை, அண்மைக்காலமாக அதிகரித்து வருவதற்குப் பின்னால் பல ரகசிய திட்டங்கள் இருப்பதை நம்மால் உறுதியாகக் கூற முடியும். இந்த 100 ஏக்கர் நிலம் அமர்நாத் வாரியத்திற்கு சுமூகமாக கைமாற்றப்பட்டு எந்த சர்ச்சையும் ஏற்படாமல் அமைதி நிலவியிருந்தால், மெல்ல மெல்ல அங்கு இஸ்ரேல் பாணியிலான குடியிருப்புகளை நிறுவும் மறைமுகத் திட்டம் ஒன்று இந்து வலதுசாரிகள் வசம் இருந்தது.

இத்தகைய விஷமமான திட்டங்கள் அனைத்தும் அந்தப் பள்ளத்தாக்கின் அமை தியை மேலும் சீரழிக்கவே உறுதுணை புரி யும். இந்த யாத்திரைகளைப் பின்புலமாக வைத்து அங்கு அமைதி நிலவி வருவதாக அரசு உலக நாடுகளுக்கு அறிவித்து வருகிறது. அண்மைக்கால அறிக்கைகளில் காஷ்மீரை விவரிக்கும் பொழுது, அதனை 'கலவரம் நடந்து முடிந்த பகுதியாக' அழைத்து வருகிறது. இது, உலக சுற்றுலா பயணிகளை கவருவதற்கான திட்டமே. இருப்பினும் உலகின் பல முக்கிய நாடுகள் தங்கள் குடிமக்களை காஷ்மீருக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்துகின்றன.

கலவரம் நடந்து முடிந்த பகுதி என அரசு அழைக்க விரும்பினால், முதலில் அந்த சமூகத்துடன் உரையாடலைத் தொடங்கி, பதற்றங்களைத் தணித்து, மக்களின் பங்களிப்பை அதிகரித்து, அமைதியை சென்றடையும் வழிமுறைகளை அல்லவா கண்டறிய வேண்டும்!

காஷ்மீர் பிரச்சனையை புரிந்து கொள்வதற்கு அதன் வரலாற்றை அறிந்து கொள்வதுதான் தீர்வை அடைவதற்கான முதல் நடவடிக்கை. காஷ்மீர், வடகிழக்கு ஆகிய இந்தியாவின் இரு மாநிலங்களிலும் கடந்த 40 ஆண்டுகளாக பெரும் பதற்றமும், வன்முறையும் நிலவி வருகிறது. 1947இல் இந்தியா சுதந்திரம் பெற்று தனி நாடாக உருவானது முதல் இன்று வரை, அடுத்தடுத்து ஆட்சியில் உள்ள அரசுகளின் குளறுபடியான முடிவுகள், ஆட்சியாளர்களின் குறுகிய நலன்களின் அடிப்படையிலான செயல்திட்டங்கள், மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கைகள் என எல்லாம் ஒருங்கிணைந்து, அந்தப் பகுதிகளின் நிரந்தர சீர்குலைவிற்கு வழிவகுத்துள்ளன. பிரிவினையை மூலதனமாகக் கொண்டு செயல்படும் மதவாத சக்திகளும் தங்களின் தீவிர பிரச்சாரத்தால் ஒட்டுமொத்த சூழலை மேலும் இறுக்கமாக்கியுள் ளன.இது அங்கு ஓர் உரையாடலுக்கான சாத்தியத்தை நிராகரித்து, மேலும் தவறான புரிதல்களுக்கே வழிவகுத்துள்ளது.

காஷ்மீர் பற்றி அரசும் ஊடகங்களும் இடையறாது செய்து வரும் அவதூறான பரப்புரையால், காஷ்மீரை தவிர்த்த இந்தியாவிற்கு இவர்களின் புனைவு சார்ந்த சித்திரம்தான் மனதில் தங்கியுள்ளது. இது ஏதோ அப்பாவி காஷ்மீர் பண்டிதர்களுக்கும், எந்நேரமும் ஆயுதம் ஏந்தி நிற்கும் காஷ்மீர் முஸ்லிம்களுக்குமான பகையாகவே சித்தரிக்கப்படுகிறது. இதில் மெய் எது பொய் எது என்பதை எடுத்துக் கூற வேண்டிய ஊடகங்களும், அறிவுஜீவிகளும் தோல்வியை தழுவி நிற்கின்றனர்.

அன்றைய பிரதமர் ஜவகர்லால் நேரு முதல் பின்னர் அங்கு ஆளுநராகப் பதவி வகித்த ஜக்மோகன் வரை, தாங்கள் ஏதோ ராஜதந்திரத்தின் மூலம் ஒரு பெரிய சாதனையை செய்யப் போவதாக கற்பனை செய்து கொண்டு, மென்மேலும் காஷ்மீர் மக்களின் வாழ்வை சீர்குலைத்ததுதான் மிச்சம். புவி அரசியலில் ஈடுபட்டு அந்தப் பகுதியின் "பெரிய அண்ணனாக' உருவெடுக்க முயன்ற இந்தியாவுக்கு, இன்று நிரந்தர தலைவலியான காஷ்மீர் பிரச்சனை, அந்தப் பகுதி மக்களின் வாழ்வை மட்டும் சீர்குலைக்க வில்லை; இந்திய அரசின் நிதிநிலையையும் அது ஆண்டுதோறும் கடு மையாக பாதிக்கிறது. இத்தனை லட்சம் கோடிகள் வீணாக்கப்பட்ட பிறகும் கூட, இந்தியா வசம் உள்ள காஷ்மீரின் வரைபடத்தை வெளியிட அரசு இன்று வரை தயாராக இல்லை. காஷ்மீர் வரைபடம் என நாம் நம்பும் ஒரு வரைபடம் முற்றிலும் கற்பனையானது. அதனை கல்விக் கூடங்கள், ஊடகங்களின் வாயிலாக மக்களின் மனங்களில் பதிய வைத்து மொத்த சமூகத்தை யும் மூளைச் சலவை செய்கிறது.

காஷ்மீர் பண்டிதர்களை அரசு பள்ளத்தாக்கிலிருந்து வெளியேற்றியது பெரும் முட்டாள்தனம் என்பதை பல்வேறு நிகழ்வுகள் எடுத்துரைக்கின்றன. ஜனநாயக வழியிலான எந்த செயல்பாட்டுக்கும் அங்கு சாத்தியம் இல்லை என உணர்ந்த பிறகுதான் இளைஞர்கள் வேறு வழிகளை நோக்கிச் சென்றனர். சகோதரர்களாக வரலாறு நெடுகிலும் வாழ்ந்து வந்த பண்டிதர்களையும் முஸ்லிம்களையும் எதிர் எதிராக நிறுத்த முடிவு செய்த இந்திய அரசின் நிலைப்பாடு கண்டனத்திற்குரியது. பண்டிதர்களை அவர்களின் விருப்பத்திற்கு மாறாகவே அரசு வெளியேற்றியது. காஷ்மீர் பண்டிதர்களின் வீடுகள் அனைத்தையும் இந்திய ராணுவப் படையினர் தங்கள் அலுவலகங்களா கவும், முகாம்களாகவும் மாற்றிக் கொண்டன. அங்கிருந்து வெளியேற்றப்பட்ட காஷ்மீர் பண்டிதர்களின் குடும்பங்களுக்கு, அதன் உறுப்பினர்களின் எண்ணிக்கை யைப் பொறுத்து நிவாரணமும், அவர்களின் வீடுகளுக்கு பெரும் தொகையை வாடகையாகவும் மத்திய அரசு வழங்கி வருகிறது. இவர்களைப் போல் இந்திய அரசு வேறு எந்த இனக்குழுவிற்கோ, பாதிக்கப்பட்டவர் களுக்கோ நிவாரணம் வழங்கியதில்லை. பார்ப்பன அதிகார வர்க்கம்தான் நம்மை ஆண்டு வருகிறது என்பதற்கு வேறு சான்றுகள் வேண்டுமா?

உலகின் மிகக் கொடூரமான மனித உரிமை மீறலை அமெரிக்கா ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் நிகழ்த்தி வருவது நம் காலத்து வரலாறு. பிற நாடுகளை ஆக்கிரமித்துள்ள அமெரிக்கா ஈராக்கில் ஒரு லட்சத்து 65 ஆயிரம் படையினரையும், ஆப்கானிஸ்தானில் 67 ஆயிரம் அமெரிக்க படையினரையும் நிறுத்தியுள்ளது. ஆனால், கடந்த 30 ஆண்டுகளில் தனது படை பலத்தை காஷ்மீர் பள்ளத்தாக்கில் பெருக்கியுள்ள இந்திய அரசு, இன்றைய தேதியில் மட்டும் 6 லட்சத்து 67 ஆயிரம் ராணுவ வீரர்களை அங்கு நிறுத்தியுள்ளது. இது நமக்கு பல உண்மைகளை எடுத்துரைக்கிறது. உலக அளவில் ஒரு நிலப்பரப்பில் மட்டும் இத்தனை அடர்த்தியான ராணுவ இருப்பு எப்பொழுதும் இருந்ததில்லை.

காஷ்மீர் மக்களின் விருப்பமெல்லாம் அவர்களின் இனக்குழு தன்மையைப் பாதுகாப்பதும், இந்திய அரசின் இணைப்பு ஒப்பந்தப்படி காஷ்மீரின் தற்சார்பைப் பேணுவதும்தான். 2000இல் "அவுட்லுக்' ஆங்கில ஏடு நடத்திய கருத்துக் கணிப்பை இங்கே நினைவுபடுத்துவது பொருத்தமானது. அது இவ்வாறு கூறுகிறது : 74 சதவிகித மக்கள் தங்களின் காஷ்மீரி அடையாளத்துடனேயே வாழ விரும்புகின்றனர்; 16 சதவிகித மக்கள் காஷ்மீருக்கு கூடுதல் அதிகாரங்களுடன் கூடிய தற்சார்புவேண்டும் என்கின்றனர்; 2 சதவிகிதத்தினர் பாகிஸ்தானுடன் இணைய விரும்புகின்றனர். 37 சதவிகிதத்தினர் இந்திய அரசியல் அமைப்புக்கு உட்பட்டுத் தீர்வு காணவே விரும்புகின்றனர். காஷ்மீரிகளின் உண்மை மனநிலையை மிகத் துல்லியமாக வெளிக்கொணர்ந்த கருத்துக் கணிப்பு இது. ஆனால் இந்த 2 சதவிகித பிரிவினை மனநிலை உள்ளவர்களுக்காக இந்திய அரசு மொத்த பள்ளத்தாக்கையே ஆயுதக் கிடங்காக மாற்றி, மக்களை சித்திரவதை செய்வது எப்படி நியாயமாகும்?

அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு தீர்வு காண்பதைத் தவிர்த்து, காஷ்மீர் மக்களை போருக்கு மத்தியில் வாழ நிர்பந்தித்து வருகிறது இந்திய அரசு. காஷ்மீர் இந்தியாவின் ராணுவ சோதனைக்கூடமாகவே உள்ளது என்றால் அது மிகையல்ல. அங்கே நீங்கள் யாரை வேண்டுமானாலும் வீடு புகுந்து கைது செய்யலாம், பள்ளிக்குச் செல்லும் மாணவியை வீதியில் வைத்து சுடலாம், பேருந்து நிலையத்தில் காத்திருப்பவரை கைது செய்து என்ன குற்றச்சாட்டை வேண்டுமானாலும் சுமத்தலாம், பெண்களை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தலாம், ஆயுதத்தை சோதித்துப் பார்க்க சிலரை கொல்லலாம். இன்னும், இன்னும்... எது வேண்டுமானாலும் செய்யலாம். ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் 1958, பதற்றப் பகுதிச் சட்டம் 1976, ஜம்மு காஷ்மீர் பொது மக்கள் பாதுகாப்பு சட்டம் 1978, தீவிரவாத மற்றும் சீர்குலைவு நடவடிக்கைச் சட்டம் 1985, பொடா 2002... "இந்தப் படை போதுமா, இன்னும் கொஞ்சம் வேண்டுமா' என தேசபக்தர்களின் முழக்கங்கள் காதில் கேட்கின்றன.

உங்களுக்கு தேவையானது எல்லாம் நீங்கள் இந்திய ராணுவத்தின் உடையை அணிந்திருக்க வேண்டும். இப்படி நீங்கள் செய்யப்போகும் "தேசபக்த காரிய'ங்களுக்கு ஏற்ப இந்திய அரசியல் சாசனத்தை வளைத்து, நிமிர்த்தி, திருத்தி நாள்தோறும் ஒரு சட்டத்தை உருவாக்கி தேச பக்தராக அறிவித்துக் கொண்டேயிருக்கும். தேசத்தின் பெயரால் அரசு வன்முறையை நியாயப்படுத்தும் ராணுவத்தினருக்கு, ஒவ்வொரு குடியரசு நாள் விழாவிலும் பதக்கங்கள் வழங்கிப் போற்றும் சிந்தனையில் மாற்றம் ஏற்படாதவரை, காஷ்மீரில் மாற்றம் என்பதற்கு சாத்தியமில்லை.

காஷ்மீரில் மட்டும் கடந்த 20 ஆண்டுகளில் ஒரு லட்சம் பேர் ராணுவத்தால் அனாதைகளாக ஆக்கப்பட்டுள்ளனர். காணாமல் போனவர்களின் மனைவிகளுக்கு விதவை ஓய்வூதியத்தை தர மறுக்கிறது அரசு. இவர்கள் "அரை விதவைகள்'. இவர்களின் கணவர்கள் இறந்து விட்டதற்கான ஆதாரம் இருந்தால் மட்டுமே ஓய்வூதியம்வழங்க முடியும் என்கிறது அரசு. மறுபுறம் ராணுவ வீரர்களின்தற்கொலை விகிதம் ஏறுமுகத்தில் உள்ளது. 2002 2009க்குள் மட்டுமே 169 ராணுவத்தினர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

கடந்த 50 ஆண்டுகளாக காஷ்மீரில் நடைபெற்று வரும் சூழலை கூர்ந்து கவனித்தால், ஒன்று மட்டும் தெளிவாகப் புரிகிறது. இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாட்டு மக்களும் இணக்கமான நல்லுறவையே விரும்புகின்றனர். இருநாட்டு எல்லை நெடுகிலும் உள்ள மக்களிடையே பண்பாட்டு ரீதியிலான ஒத்திசைவும் பரிமாற்றமும் இன்றளவும் நிலவுகின்றன. ஆனால் இரு நாட்டு அரசுகளும் இருபுறமும் பதற்றம் நிலைப்பெறவே விரும்புகின்றனர். மக்களின் கோரிக்கைகள் முன்னிலை பெறும்போதும், மக்களுக்கு எதிரான சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் பொழுதும் காஷ்மீர் பிரச்சனை இயல்பாகவே ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக இடம்பெறுவது, திட்டமிட்ட ஒன்றாகவே தோன்றுகிறது.

இந்த மரணப் புதைகுழிகளை, சடலங்களை மேலும் சிதைக்காமல் பாதுகாத்து, வெளிப்படையான ஒரு விசாரணைக்கு அரசு உத்தரவிட்டு, குற்றம் நிரூபணமாகும் தருணத்தில் கடும் நடவடிக்கைகளை எடுக்கபட வேண்டும். கொடூரமான இந்த சட்டங்களை அரசு திரும்பப் பெற்றால் தான் அங்கு மக்கள் ஜனநாயக வழியிலான தங்கள் உரிமைகளை முன்வைத்துப் போராடி, தங்கள் சுயநிர்ணய உரிமையைப் பெற இயலும். இல்லை எனில், பாராமுல்லாவில் ஒரு கிராமப் பெரியவர் கூறியது போல்தான் எதிர்காலத்தில் நடக்கும் :

குழந்தைகள் எங்களிடம் இந்த புதைகுழிகளைப் பற்றி கேட்கிறார்கள். ஏன் இங்கே இத்தனை ராணுவத்தினர் உள்ளனர் என்பதைப் பற்றியும் மீண்டும் மீண்டும் கேட்கிறார்கள். வன்முறையில் இறப்பது இயற்கையானது தான் என்கிற புரிதலை அவர்கள் வளரும் போதே ஏற்படுத்திக் கொள்கிறார்கள்'' இந்தப் பெரியவரின் வரிகளுக்கு பதில் சொல்ல முடியாமல் மொத்த தேசமும் இந்த கணத்தில் தலை குனிந்துதான் நின்றாக வேண்டும்.

எங்கிருக்கிறது கார்கில்?

கார்கில் என்றவுடன் இந்திய ராணுவம் வெற்றிக் கொடி நாட்டியதுதான் நம் மனங்களில் வந்து கம்பீரமாய் நிற்கும்! ஆனால், கார்கில் காஷ்மீரில் எங்கு உள்ளது என்பதை நீங்கள் யாராவது வரைபடத்தை எடுத்துப் பார்த்திருக்கின்றீர்களா? பார்த்தால் பெரும் அதிர்ச்சி மட்டுமே மிஞ்சும். நம் மனங்களில் பதிந்துள்ள ஜம்மு காஷ்மீர் வரைபடத்தின் எல்லைக் கோடு நெடுகிலும் தேடினாலும் கார்கில் எங்கும் கிடைக்காது. கார்கில், மிகச்சரியாக காஷ்மீர் வரைபடத்தின் மய்யத்தில் இருக்கிறது. மய்யத்தில் இருக்கும் கார்கிலை ராணுவம் யாருடன் போரிட்டு மீட்டது?

அதன் பிறகு, பல காஷ்மீர் வரைபடங்களை எடுத்துப் பார்த்த போதுதான் உண்மை விளங்கியது. காஷ்மீரின் ஒரு பகுதி சீனா வசம் உள்ளது. அதனை அக்சாய் சீன் என்று அழைக்கிறார்கள். அடுத்து வடக்கே உள்ள காஷ்மீரின் பெரும் பகுதி பாகிஸ்தான் வசம் உள் ளது. அதனை "பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர்' என்றும் ஆசாத் ஜம்மு காஷ்மீர் என்றும் இரு சாரரும் அவர்களது வசதிக்கேற்ப அழைக்கிறார்கள். இது தவிர்த்து இரு தேசங்களிலிருந்தும் தங்களை விடுவித்துக் கொண்டுள்ள ஒரு பெரும் நிலப்பரப்பு உள்ளது, அது "ஆசாத் காஷ்மீர்' (விடுதலையடைந்த காஷ்மீர்) என்று அழைக்கப்படுகிறது.

எஞ்சியுள்ள பகுதி மட்டும்தான் இந்தியா வசம் உள்ளது. அதனை நாம் ஜம்மு காஷ்மீர் என்றும், பிறர் இந்தியா நிர்வகிக்கும் காஷ்மீர் என்றும் அழைக்கின்றனர்.இந்தப் பகுதிகளை எல்லாம் பிணைக்கும் கோடுதான் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (Line ofControl) என்று அழைக்கப்படுகிறது. 

உடனடி விசாரணை தேவை’ - அம்னஸ்டி

சிறீநகரில் இருந்து செயல்படும் "காணாமல் போனவர்   களின் பெற்றோர் அமைப்பு' மார்ச் 29, 2008 அன்று தனது ஆய்வறிக்கையை வெளியிட்டது. அதன்படி, உரி மாவட்டத்தின் 18 கிராமங்களில் மட்டும் இதுவரை 940 சடலங்கள் பல கும்பல் புதைகுழிகளிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது. 2006 முதல் அவர்கள் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் இந்த தகவல்கள் சேகரிக்கப்பட்டன. உலக மனித உரிமைஅமைப்பான "அம்னஸ்டி இன்டர்நேஷனல்' இந்த தகவல்களின் அடிப்படையில், இந்திய அரசு உடனே விசாரணையை நடத்த வேண்டும் என கண்டிப்பான குரலில் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு முழு நிவாரண உதவிகள் வழங்கப்பட வேண்டும். குற்றம் புரிந்தவர்கள் மீது முறையான விசாரணை மேற்கொள்ளப்பட்டு, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் "அம்னஸ்டி' கேட்டுக் கொண்டது.

Courtesy: International People’s Tribunal of Human Rights and Justice in India Administered Kashmir. ‘Buried Evidence : Unkown, Unmarked, and Mass Graves in India Adminisrered Kashmir’ by Angana P.Chatterji, Parvez Imroz, Gautam Navalakha, Zahir Parez Imron, Gauam Navlakha, Zahir Ud-Din, Mithir Desai, Khurram Parvez

-அ.முத்துக்கிருஷ்ணன்

Pin It

நீதிமன்ற விசாரணை குறித்தஅம்சங்களைப் புரிந்து கொள்ள ஏதுவாக, ஒரு வழக்கில் பல்வேறு வகைப்பட்ட சாட்சிகளின், சாட்சியங்களின் பதிவுகளை ஓர் எடுத்துக்காட்டாக ஆய்வு செய்யும்போதுதான் அவற்றின் முழுமையான பரிமாணங்களை உணர முடியும்.இந்த அடிப்படையில் மேலவளவு வழக்கின் சாட்சிகளின், சாட்சியங்கள் கடந்த இதழின் தொடர்ச்சியாக இந்த இதழிலும் வெளியிடப்படுகிறது.

அ.சா. 2 : குமார் (கண்ணுற்ற சாட்சி) முதல் விசாரணை :

நான் மேலவளவு காலனியில் குடியிருக்கிறேன். நான் கூலி வேலை செய்கிறேன். நான் பறையர் இனத்தை சேர்ந்தவர். அ.சா. 1 கிருஷ்ணனை எனக்கு தெரியும். இந்த வழக்கில் இறந்துபோன முருகேசன், மூக்கன், சேவகமூர்த்தி, பூபதி, செல்லதுரை, ராஜா ஆகியோர்களை எனக்கு தெரியும். எதிரிகள் அனைவரையும் எனக்கு தெரியும். பஞ்சாயத்து போர்டு தேர்தல் விஷயமாக, எதிரிகளுக்கும் எங்கள் இனத்தவர்களுக்கும் விரோதம். 30.06.97 ஆம் தேதியன்று சம்பவம் நடந்தது. 30.06.97 ஆம் தேதி மேலூர் பஸ் ஸ்டாண்டிலிருந்து நான், சின்னய்யாவும் கே.என்.ஆர். பஸ்சில் எங்கள் ஊருக்கு போவதற்கு ஏறினோம். எங்களுடன் எதிரிகள் அழகர்சாமி, துரைபாண்டி, ஜெயராமன், பொன்னய்யா, ஜோதி, மணிகண்டன் ஆகியோர்களும் ஏறினார்கள். ஜெயராமன் தற்போது இறந்துவிட்டார். பஸ்சில் முருகேசன், நித்தியானந்தம், பாண்டியம்மாள், சேவகமூர்த்தி, செல்லதுரை, ராஜா, பூபதி, மூக்கன், கிருஷ்ணன் ஆகியோர்களும் இருந்தார்கள்.

அக்ரஹாரம் கள்ளுக்கடை மேடு அருகே பஸ் வரும்போது துரைபாண்டி என்பவர் டிரைவரிடம் பஸ்சை நிறுத்தச் சொன்னார். 40ஆவது எதிரி ராமர் தலைமையில் வண்டியை சுற்றி கும்பலமாக இருந்தார்கள். முருகேசனை அழகர்சாமி (முதல் எதிரி) முடியைப் பிடித்து உனக்கு என்னடா பஞ்சாயத்து தலைவர் பதவி உனக்கு என்னடா நஷ்ட ஈடு? என்று சொல்லி பட்டாக் கத்தியால் வெட்டினார். முருகேசனின் தலையை எடுத்துக் கொண்டு அழகர்சாமி மேற்காக ஓடிவிட்டார். அங்கிருந்தவர்கள் மற்றவர்களை வெட்டினார்கள். தமிழனும், சேவகப் பெருமாளும், எனது இடது நடுவிரல் வலது கையிலும், பின் கழுத்திலும் வெட்டினார்கள். நான் எங்கள் ஊருக்கு ஓடினேன். எனக்கு முன்னாடி சின்னய்யா ஊருக்கு போயிருந்தார். சின்னய்யாவுக்கு காயம் இருந்தது.

நாங்கள் இருக்கும்போது கிருஷ்ணனும் ஊருக்கு வந்துவிட்டார். கிருஷ்ணனுக்கு தோள்பட்டையில் காயம் இருந்தது. என்னை யும், கிருஷ்ணனையும், சின்னய்யாவையும் சைக்கிளில் வைத்து மேலூர் ஆஸ்பத்திரிக்கு கூட்டிப் போனார்கள். அங்கிருந்து எங்கள் மூவரையும் மதுரை அரசு பெரிய மருத்துவமனைக்கு கூட்டிப் போனார்கள். மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் நான் ஒரு வாரம் உள்நோயாளியாக இருந்தேன். மறுநாள் என்னை டி.எஸ்.பி. வந்து விசாரித்தார்.

1, 4, 5, 6, 10, 19 மற்றும் 40ஆவது எதிரிகளின் தரப்பில் குறுக்கு விசாரணை :

நான் தினந்தோறும் கூலி வேலைக்குப் போகிறேன். என்னைப் போல் எங்கள் ஊரிலிருந்து பல ஊர்களுக்கு கூலி வேலைக்குப் போகிறார்கள். சம்பவ தினம் அன்று மதியம் 12.30 மணிக்கு மேலூர் வந்தேன். மேலூர் பஸ் ஸ்டான்டில் சின்னய்யாவை எதேச்சியாகப் பார்த்தேன். கே.என்.ஆர். பஸ் மேலூருக்கு நிறைய பயணிகளுடன் வந்தது. இந்த வழக்கில் இறந்த 6 பேர்களும் நான் பார்க்கும்போது பஸ்சில் உட்கார்ந்து கொண்டு இருந்தார்கள். பரவலாக 6 பேர்களும் மாறி மாறி பஸ்சில் உட்கார்ந்து கொண்டு இருந்தார்கள். மேலூரில் பஸ் ஸ்டாண்டை விட்டு புறப்பட்டு சென்ற பஸ் மேலவளவு கள்ளுக் கடை அருகில் துரைபாண்டி வண்டியை நிறுத்தச் சொல்லும்வரை பஸ் எந்த இடத்திலும் நிற்கவில்லை.

நான் பார்த்தபோது அழகர்சாமி முருகேசனின் தலையை வெட்டி துண்டித்தது எல்லாம் பஸ்சுக்குள்தான். நான் பயந்துகொண்டு பஸ்சை விட்டு வெளியே வந்த பிறகு, தமிழனும், நான் அடையாளம் காட்டிய சேவகப் பெருமாளும் என்னை தாக்கினார்கள். அவர்கள் தாக்கியவுடன் எனக்கு காயம் ஏற்பட்டவுடன் நான் பயந்து கொண்டு ஊருக்கு வந்துவிட்டேன். அங்கிருந்த பொது மக்களிடம் 1ஆவது எதிரி முருகேசனின் தலையை துண் டித்து எடுத்து போன விஷயத்தை சொன்னேன். நான் சொன்னதை கேட்டவுடன் ஊர்மக்கள் சம்பவம் நடந்த இடத்திற்கு அலறி அடித்துக் கொண்டு ஓடிவந்தார்கள்.

ஊருக்கு போன இரண்டு நிமிடத்திலேயே என்னை சைக்கிளில் அழைத்துக் கொண்டு மேலூர் ஆஸ்பத்திரிக்கு வந்தார்கள். அடிப்பட்ட எங்கள் மூவரையும் ஊரைவிட்டு மேலூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். மேலூர் ஆஸ்பத்திரியில் 5 அல்லது 10 நிமிடங்கள்தான் இருந்தோம். மூவரும் ஒன்றாகத்தான் மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு போனோம். டி.எஸ்.பி. விசாரணையில் 8 எதிரிகளின் பெயர்களை மட்டும் சொல்லி உள்ளேன் என்றும் மற்ற எதிரிகளின் பெயர்களை நான் சொல்லவில்லையென்றும் சொன்னால் அது சரியல்ல. நான் பஸ்சில் போனேன் என்று பொய் சொல்கிறேன் என்றால் சரியல்ல. 30.6.97 ஆம் தேதியன்று மேலூர் டவுனில் கலவரமொன்று ஏற்பட்டபோது அந்தக் கலவரத்தில்தான் எனக்கு காயம் ஏற்பட்டது என்றும் அதைக் கொண்டு என்னை வழக்கில் போலிசார் சாட்சியாக உட்புகுத்தியுள்ளார்கள் என்றும் சொன்னால் சரியல்ல.

அ.சா. 3 : சின்னையா (கண்ணுற்ற சாட்சி) முதல் விசாரணை :

நான் மேலவளவு காலனியில் குடியிருக்கிறேன். நான் பறையர் வகுப்பைச் சேர்ந்தவர். இங்குள்ள எதிரிகள் அனை வரையும் எனக்கு தெரியும். 8ஆவது எதிரி மனோகரன் பாரதிதாசன் ஆகியோர்களைத் தவிர மற்ற எதிரிகள் அம்பலக்காரர் இனத்தை சேர்ந்தவர்கள். இறந்துபோன முருகேசன், பூபதி, ராஜா, செல்லதுரை, மூக்கன், சேவகமூர்த்தி ஆகியோர் தாழ்த்தப்பட்ட என் இனத்தை சேர்ந்தவர்கள். மேலவளவு பஞ்சாயத்தை தனித் தொகுதி ஆக்கி எங்கள் இனத்தைச் சேர்ந்த முருகேசன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதால், எதிரிகள் வகையறாவுக்கும் எங்கள் வகையறாவுக்கும் விரோதம் இருந்து வந்தது. சம்பவ தினத்தன்று நான் மேலூருக்கு மாட்டுத்தீவனம் வாங்குவதற்காக சென்றுவிட்டு ஊருக்கு திரும்புவதற்காக மேலூர் பஸ் ஸ்டாண்டுக்கு பகல் 3 மணியளவில் வந்தேன்.

அங்கு எங்கள் இனத்தைச் சேர்ந்த குமாரும் நானும் இருந்தோம். அம்பலக்காரர் ஜாதியை சேர்ந்த எதிரிகள் அழகர்சாமி, 1ஆவது எதிரி, 2ஆவது எதிரி துரைபாண்டி, 3ஆவது எதிரி பொன்னய்யா, இறந்துபோன ஜெயராமன், ஜோதி 4ஆவது எதிரி, 5ஆவது எதிரி மணிகண்டன் ஆகியோர்கள் வந்து எங்களுடன் கே.என்.ஆர். பஸ்சில் ஏறினார்கள்.

பஸ்சுக்குள் தலைவர் முருகேசன், பாண்டியம்மாள், மூர்த்தி, சேவகமூர்த்தி, செல்லதுரை, ராஜா, பூபதி, மூக்கன், கிருஷ்ணன் (அ.சா. 1) ஆகியோர்களும் இருந்தார்கள். அப்போது பஸ்சை சுற்றிலும் ராமர் கோஷ்டியைச் சேர்ந்த 40 பேர்கள் ஆயுதங்களுடன் இருந்தார்கள். அப்போது முருகேசனை, அழகர்சாமி (1ஆவது எதிரி) மாறி மாறி வெட்டினார். நானும், முருகேசனுக்குப் பின்னாடி இறங்கியபொழுது எதிரி கறந்தமலை (16ஆவது எதிரி) என்னுடைய வலது கன்னத்தில் வெட்டினார். குமாரை எதிரி தமிழனும், சேவக பெருமாளும் வெட்டினார்கள். (19 மற்றும் 27ஆவது எதிரி) சேவகமூர்த்தியை, சேதும், மணிவாசகமும் வெட்டினார்கள். (24, 6ஆவது எதிரிகள்).

நான் மிரண்டு போய் எங்கள் காலனிக்கு ஓடினேன். நான் ஊருக்குப் போனபோது எனக்கு முன்னாடியே குமார் காயத்துடன் அங்கு இருந்தார். நான் ஊருக்கு போன பிறகு அ.சா. 1 கிருஷ்ணன் வலது தோள்பட்டையில் காயத்துடன் வந்தார். எங்கள் மூவரையும் தும்மப்பட்டி வழியாக மேலூர் ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் போனார்கள். மேலூர் ஆஸ்பத்திரியிலிருந்து பிறகு எங்களை மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு காரில் அனுப்பி வைத்தார்கள். அங்கு வந்த ஆய்வாளர் அ.சா. 1 கிருஷ்ணன் விசாரித்தார். மறுநாள் என்னை டி.எஸ்.பி. விசாரித்தார். காயம்பட்ட சேவகமூர்த்தி இறந்து விட்டார். முருகேசனும் இறந்துவிட்டார். ஒருவருடம் கழித்து எனக்கு வயிற்றில் ஆப்ரேசன் செய்யப்பட்டது. எனக்கு நெத்தியில் அடிபட்டது.

1, 4, 5, 6, 10,19 மற்றும் 40ஆவது எதிரிகளின் தரப்பில் குறுக்கு விசாரணை :

சம்பவ தினம் நான் மேலூருக்கு வந்ததன் காரணம் மாட்டு தீவனம் வாங்குவதற்காக மட்டுமே. நாங்கள் பேருந்தில் ஏறியபோது உள்ளே இருக்கை காலியாக இருந்தது. நாங்கள் இருக்கையில் உட்கார்ந்து விட்டோம். அப்போது பேருந்துக்குள் அ.சா. 1 கிருஷ்ணனையும் மற்றும் இறந்துபோன 6 பேர்களையும் நான் பார்த்தேன். எனக்கு வெட்டுப்பட்ட உடனேயே பயந்து ஓடவில்லை. கொஞ்ச நேரம் அங்கேயேதான் இருந்தேன். சுமார் 2 நிமிடங்கள் நின்று இருப்பேன். அதற்கு முன்பாகவே முருகேசனை அழகர்சாமி வெட்டுவதை பார்த்துவிட்டேன்.

பஸ்சுக்கு வெளியே நின்று கொண்டு இருந்தபோதுதான் மற்ற நபர்கள் வெட்டுப்பட்டதை நான் பார்த்தேன். குமார் வெட்டுப்பட்டதை தான் நான் முதன் முதலாகப் பார்த்தேன். குமாரை வெட்டியவர்கள் இரண்டு பேர்கள். அந்த வெட்டுப்பட்ட குமார் ஓடிவிட்டான். நானும் குமார் பின்னாடியே ஓடினேன். 40ஆவது எதிரி ராமரை எனக்கு சிறு வயது முதல் தெரியும்.

நான் எங்கள் ஊருக்கு போகும்போது எங்கள் கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆண் களும் பெண்களும் கலந்து கூடி கூச்சல் போட்டுக் கொண்டு இருந்தார்கள். அந்தக் கும்பலில் எங்கள் இனத்தைச் சேர்ந்த இறந்தவர்களின் மனைவிமார்களும், உறவினர்களும் இருந்தார்கள். அவர்கள் என்ன நடந்தது என்று என்னை விசாரித்தார்கள். நான் கண்ட சம்பவம் பற்றி அவர்களிடம் தெரிவித்தேன். நான் காயம்பட்டதின் விளைவாக, எனது துணிமணிகளில் ரத்தம் இருந்தது. டி.எஸ்.பி. விசாரணையின்போது என்னையும் குமாரையும் அ.சா. 1 கிருஷ்ணன் தான் மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றார் என்று கூறியுள்ளேன் என்றால் அது சரிதான்.

மேலூர் அரசு மருத்துவமனையில் சுமார் 10 நிமிடங்கள்தான் இருந்திருப்போம். என்னை டாக்டர் பரிசோதனை செய்தபோது அ.சா. 1 கிருஷ்ணனும் அ.சா. 2 குமாரும் அங்கு இருந்தார்கள். டாக்டர் சொல்லியதன் பேரில் தான் மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு நாங்கள் சென்றோம். மேலூர் நகரத்தில் நடந்த கலவரத்தில்தான் எனக்கு காயம் ஏற்பட்டது என்று சொன்னால் அது சரியல்ல. டி.எஸ்.பி. என்னை விசாரித்தபோது 10 பெயர்களை மட்டும் குறிப்பிட்டு சொல்லி உள்ளேன் என்றால் சரியல்ல. 13 பெயர்களை கூறியுள்ளேன்.

அ.சா. 4 : கூ. சத்தியமூர்த்தி (பிறழ் சாட்சி) முதல் விசாரணை :

நான் எட்டிமங்களத்தில் குடியிருக்கிறேன். நான் தாழ்த்தப்பட்ட பறையர் வகுப்பைச் சேர்ந்தவர். மேலவளவு பஞ்சாயத்து தேர்தல் நடந்த விஷயம் பற்றி எனக்கு தெரியாது. இந்த வழக்கு பற்றி எனக்கு எதுவும் தெரியாது. (இச்சாட்சி பிறழ்சாட்சியாக கருதப்பட்டு பின்னர் அரசு வழக்குரைஞரால் குறுக்கு விசாரணை செய்யப்பட்டார்).

அ. சா. 5 : பெரியவர் (கண்ணுற்ற சாட்சி) முதல் விசாரணை :

நான் மேலவளவு காலனியில் வசிக்கிறேன். ஆஜர் எதிரிகளில் சில பேரை தெரியும். சில பேரை எனக்கு தெரியாது. அதில் எங்கள் ஊரைச் சேர்ந்தவர்களும் சேராதவர்களும் இருக்கிறார்கள். நான் தாழ்த்தப்பட்ட பறையர் வகுப்பைச் சேர்ந்தவர். 30.6.97 அன்று திங்கட்கிழமை நான் மற்றும் ஏகாதேசியும் அக்ரஹாரத்திற்கு சென்றோம். அப்போது பகல் 3.15 மணி இருக்கும். அப்போது நத்தம் செல்லக்கூடிய கே.என்.ஆர். பஸ் வந்து நின்றது (எங்க ஊரைச் சேர்ந்த அம்பலக்காரர் ஜாதிக்காரர்களும் மற்ற ஊரைச் சேர்ந்தவர்களும் பஸ்சை சுற்றி அரிவாளுடன் நின்றனர். அதில் என் ஊரைச் சேர்ந்த எதிரிகள் ராமர், தங்கமணி, கண்ணன், எதிரி ரசம் என்கிற அய்யாவு, எதிரி மார்கண்டன் (11ஆவது எதிரி) மற்றும் பலரும். எங்கள் ஊரைச் சேர்ந்த எங்கள் இனத்தைச் சேர்ந்தவர்களை, எங்கள் ஊரைச் சேர்ந்த அம்பலக்காரர்களும் மற்ற ஊரைச் சேர்ந்தவர்களும் வளைத்து வளைத்து வெட்டினார்கள். அவர்கள் அரிவாள், கத்தி, ஆயுதங்களுடன் வந்தனர். எங்கள் இனத்தைச் சேர்ந்த தலைவர் முருகேசனை முதல் எதிரி அழகர்சாமி வெட்டி, தலையை துண்டாக எடுத்துக் கொண்டு வயல்காட்டுப் பக்கம் ஓடிவிட்டார்.

எதிரி ராமர், எங்கள் இனத்தைச் சேர்ந்த ராஜாவை மாறி, மாறி தலை பக்கம் வெட்டினார். எதிரி ஆண்டிச்சாமி, அதே ராஜாவை பின்பக்கம் வெட்டினார். என் இனத்தைச் சேர்ந்த சேவகமூர்த்தியை எதிரி மனோகரன் வலது கையில் வெட்டினார். என் இனத்தைச் சேர்ந்த மூக்கனை எதிரி ராஜேந்திரன் கையில் வெட்டினார். எதிரி கறந்தலை, எங்கள் இனத்தை சேர்ந்த சின்னய்யாவை (அ.சா. 3) அருவாளால் வெட்டினார். நான் நெருங்கிச் சென்றபொழுது, அவர்கள் எங்களையும் வெட்டி விடுவதாக மிரட்டியதால் நான் பயந்து ஓடினேன்.

1, 4, 5, 6, 10, 19 மற்றும் 40ஆவது எதிரிகளின் தரப்பில் குறுக்கு விசாரணை :

நான் மேலவளவு கிராமத்திலேயே பிறந்து வளர்ந்தவன், மேலவளவு கிராமத் தைச் சேர்ந்த எனக்கு தெரிந்த நபர்களின் பெயர்களை முன் விசாரணையில் குறிப்பிட்டுள்ள நானும், ஏகாதேசியும், ஒரே காரணத்திற்காகத்தான் அக்ரஹாரம் கிராமத்திற்கு சென்றோம். மாடு வாங்குவதற்காக சென்றோம். 20 மீட்டர் தூரத்திலிருந்து பஸ் நின்றதையும் ஜனங்கள் சூழ்ந்து நின்றதையும் பார்த்தோம். பஸ்சுக்கு வடபுறமாக நின்று நாங்கள் பார்த்தோம். மேலும் பஸ்சை நோக்கி நகர்ந்து நாங்கள் சென்றோம். அப்படி நாங்கள் சென்றபோது பஸ்சிலிருந்து இறங்கி வந்தவர்கள் எங்களை நோக்கி யாரும் ஓடிவரவில்லை. எங்கள் இனத்தை சேர்ந்தவர்களை தவிர மற்றவர்கள் இறங்கி ஓடிவிட்டனர்.

எங்கள் இனத்தை சேர்ந்தவர்களை இறங்க விடவில்லை. இரண்டு வழிகளிலும் அடைத்துக் கொண்டதால் எங்கள் இனத்தவர்கள் பஸ்சுக்குள்ளே இருந்து இறங்க இறங்க வெட்டினார்கள். அம்பலக்காரர் இனத்தை சேர்ந்தவர்களும் பஸ்சுக்குள் இருந்தார்கள். அவர்கள் எங்கள் இனத்தை சேர்ந்த ஒவ்வொருவரையும் வெட்டி வெளியே தள்ளினார்கள். அப்படித் தள்ளப்பட்டவர்களை வெளியில் இருந்தவர்கள் மீண்டும் அவர்களை வெட்டினார்கள். அப்படி வெட்டுப்பட்டவர்களும் ஆங்காங்கே விழுந்து விட்டார்கள். நானும் ஏகாதேசியும் கூச்சல் போட்டோம்.கூச்சல் போட்டவுடன் எங்களை மிரட்டியதால் நாங்கள் எங்கள் ஊருக்கு ஓடிவிட்டோம். நாங்கள் சென்றதும் எங்கள் இனத்தைச் சேர்ந்த 6 பேர்களையும் கொன்றுவிட்டார்கள் என்று பொதுவான ஊர் ஜனங்களிடம் சொன்னோம். நாங்கள் சொன்னதும் அவர்கள் அலறி அடித்துக்கொண்டு சம்பவ இடத்தை நோக்கி ஓட ஆரம்பித்து விட்டனர். இரவு 10 மணி வரை போலிசார் யாரும் மேலவளவு காலனிக்கு வரவில்லை. இரவு 10 மணியளவில் நான் சம்பவ இடம் வந்த பிறகு தான் போலிசார் அங்கு வந்திருப்பது எனக்கு தெரிய வந்தது. வெட்டுப்பட்ட சம்பவத்தை நான் பஸ் நின்ற இடத்திற்கு மேற்குப் பக்கம் நின்று பார்த்தேன்.

அ.சா. 6 : ஏ.கே. பழனி (கண்ணுற்ற சாட்சி) முதல் விசாரணை :

நான் மேலவளவு காலனியில் வசிக்கின்றேன். எங்கள் ஊரில் பஞ்சாயத்து தேர்தல் நடந்தது. அது தனித் தொகுதி. முருகேசன் தேர்தலில் வெற்றி பெற்றார். அதன் காரணமாக கள்ளர் சமுதாயத்திற்கும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கு விரோதம் ஏற்பட்டது. 30.6.97 ஆம் தேதி அன்று பகல் 2.45 மணியளவில் நான் மேலூர் பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டு இருந்தேன். என்னுடன் கணேசன் என்பவரும் நின்று கொண்டு இருந்தார். மேலவளவுக்கு செல்வதற்காக நான் நின்று கொண்டு இருந்தேன். அப்போது கே.என்.ஆர். பஸ் திண்டுக்கல் போகும் பஸ் வந்தது. உடனே பஸ்சில் நானும் கணேசனும் ஏறிவிட்டோம். எங்களுக்குப் பின்னாடி அ.சா. 2 குமாரும், அ.சா. 3 சின்னய்யாவும் ஏறினார்கள். அதன் பிறகு எதிரி அழகர்சாமி, இறந்து போன எதிரி ஜெயராமன், எதிரி ஜோதி, மணிகண்டன் மற்றும் பலரும் பஸ்சில் ஏறினார்கள். பஸ்சுக்குள் எங்க ஊர் தலைவர் முருகேசன் ராஜா, செல்லதுரை, சேவகமூர்த்தி, கிருஷ்ணன், நித்தயானந்தம், பாண்டியம்மாள் ஆகியோர்களும் இருந்தார்கள்.

பஸ் அக்ரஹாரம் கள்ளுக்கடை மேடு வந்தபோது பஸ்சில் இருந்த எதிரி துரை பாண்டி பஸ்சை நிறுத்துடா என்று கூச்சல் போட்டவுடன் டிரைவர் பஸ்சை நிறுத்திவிட்டார். உடனே எதிரி தலைவர் அழகர்சாமி அரிவாளால் முருகேசனை வெட்டினார். எதிரி அழகு முருகேசனை இடது கன்னத்திலும், வலது தோள்பட்டையிலும் அரிவாளால் வெட்டினார். எதிரி பாரதிதாசன், முருகேசனை இடது கையில் அரிவாளால் வெட்டினார். எதிரி நாகேஷ், முருகேசனை இடது முழங்கையில் வெட்டினார். எதிரி கதிர்வேல், எதிரி தங்கமணி, எதிரி கணேசன், எதிரி மணி ஆகியோர்களும் முருகேசனின் வயிற்றுப் பகுதியிலும் நெஞ்சுப் பகுதியிலும் வெட்டினார்கள். எதிரி ரங்கநாதன், சேவகமூர்த்தியை இடது கணுக்காலில் வெட்டினார்கள். எதிரி சேகர் பூபதியுடைய வலது கையில் வெட்டினார்.

எதிரி தமிழன் அ.சா. 2 குமாருடைய வலது கையில் வெட்டினார். எதிரி ராஜேந்திரன், மூக்கனுடைய வலதுபுற தலையில் வெட்டினார். எதிரி ராஜேந்திரன், மூக்கனுடைய வலதுபுற தலையில் வெட்டினார். மேலும் எதிரி ராமர், எதிரி மனோகரன், எதிரி சக்கரமூர்த்தி ஆகியோர்களும் மற்றவர்களும், சேர்ந்து பக்கத்தில் யாராவது வந்தால் வெட்டிவிடுவோம் என்று மிரட்டினார்கள். நாங்கள் பயந்து கொண்டு ஓடிவிட்டோம். பிறகு வெட்டுப்பட்ட 6 பேர்களும் இறந்துவிட்டதாக தெரிந்து கொண்டேன். 35 நாட்கள் கழித்து டி.எஸ்.பி. வந்து என்னை விசாரித்தபோது நான் இந்த சம்பவம் பற்றி சொன்னேன்.

1, 4, 5, 6, 10, 19 மற்றும் 40ஆவது எதிரிகளின் தரப்பில் குறுக்கு விசாரணை :

நான் பஸ்சில் ஏறியபோது உட்காருவதற்கு சீட் கிடைத்தது. என்னுடன் கணேசனும் பஸ்சில் சீட் கிடைத்து உட்கார்ந்து விட்டார். நான் குறிப்பிட்டுச் சொல்லிய நபர்களைத் தவிர வேறு பல நபர்களும் பஸ்சில் ஏறினார்கள். நான் எங்கள் இனத்தை சேர்ந்த நபர்களை இச்சம்பவத்தில் இறந்து போனவர்களிடமும் சாட்சிகளிடமும் நான் பேசவில்லை. நான் பஸ்சில் உட்கார்ந்திருந்தபடியே அழகர்சாமி 1ஆவது எதிரி முருகேசனை வெட்டுவதைப் பார்த்தேன். அவர் வெட்டுப்பட்டதை பார்த்தும் உள்ளே இருந்த பயணிகள் கீழே இறங்கி ஓட ஆரம்பித்தார்கள். 1ஆவது எதிரி அழகர்சாமி வெட்டிய முதல் வெட்டு முருகேசனின் வலதுபுற தோள்பட்டையில் பட்டது. வெட்டு வாங்கும்போது முருகேசன் குனிந்தபடி இருந்தார். மேலும் முருகேசனை இழுத்துக் கொண்டே வந்தார்கள். மற்ற அம்பலக்காரர் ஜாதியை சேர்ந்தவர்கள் அப்போது முருகேசனை வெட்டிக் கொண்டும் குத்திக் கொண்டும் வந்தார்கள். அன்று அழகர்சாமி மற்றும் அம்பலக்காரர்களும் முருகேசனை வெட்டியதை முதல் முதலில் பார்த்தேன்.

நான் மற்ற நபர்களை வெட்டியதையும் பார்த்துவிட்டுத்தான் ஓடினேன். முருகேசனை தவிர மற்ற நபர்கள் வெட்டுப்பட்டதை பஸ்சுக்கு வெளியே நின்றுதான் நான் பார்த்தேன். நான் பார்த்த சம்பவம் சுமார் 10 நிமிடங் கள் நடத்திருக்கும். நான் பயந்து ஊருக்கு ஓடியபோது என்னுடன் வேறு யாராவது ஓடி வந்தார்களா என்பதை நான் கவனிக்கவில்லை. நான் ஊருக்குப் போனவுடன் என் தாயாரிடம் நடந்த சம்பவத்தை கூறினேன். நான் ஊருக்கு ஓடிப்போய் சேர்ந்தபோது, அங்கு ஜனங்கள் கூடியிருந்தார்களா இல்லையா என்பது எனக்கு ஞாபகமில்லை.

என் தாயார் யாரிடமும் சொல்லாதேஎன்று கேட்டுக் கொண்டதால், புலன் விசாரணைக்கு வந்தவர்களிடம் நான் எதுவும் சொல்லவில்லை. அப்போது என் தாயாரை அந்த போலிஸ் அதிகாரி விசாரிக்கவில்லை. நான் சொல்வது போல் சம்பவம் எதையும் நான் பார்க்கவில்லையென்றும் காலதாமதமாக ஜோடிக்கப்பட்ட வழக்கில் என்னை சாட்சியாக போலிசார் உட்புகுத்தியுள்ளார்கள் என்றால் சரியல்ல.

-சு.சத்தியச்சந்திரன்

Pin It

டாக்டர் உமாகாந்த், புகழ்பெற்ற தலித் செயல்வீரர். கல்வியாளர். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இவர், பல்வேறு தளங்களில் தலித் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்து வருகிறார். தன்னுடைய இளங்கலைப் படிப்பை தில்லி பல்கலைக் கழகத்திலும், உயர் கல்வியை ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்திலும் படித்த இவர், "பீகாரில் உள்ள தலித்துகளின் மனித உரிமைகள் ஓர் ஆய்வு (1977 1997)' என்ற தலைப்பில் 2000 இல் முனைவர் பட்டம் பெற்றார். தில்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் உருவாக்கப்பட்ட "தலித் மாணவர் பேரவை'யின் நிறுவனர்களில் ஒருவர். "தேசிய தலித் மனித உரிமைகளுக்கான பரப்புரை'

அமைப்பிலும், தலித் ஆய்வு நிறுவனத்திலும் (IIDS) உலகளாவிய தலித் ஆதரவு ஒருங்கிணைப்பு (IIDS) ஆகிய அமைப்புகளிலும் இணைந்து பணியாற்றியுள்ளார். "சாதி, இனம் மற்றும் பாகுபாடு : ஓர் உலகளாவிய பார்வையிலான ஆய்வு 2004' என்ற நூலை மற்றொருவருடன் இணைந்து தொகுத்துள்ளார். உமாகாந்த், இணையதளம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியை இங்கு வெளியிடுகிறோம்.

சந்திப்பு : கோமதி குமார், சஞ்சய் கபீர்

தலித் இயக்கத்தில் ஏறக்குறைய இருபது ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறீர்கள். நீங்கள் முதன் முதலில் எப்பொழுது, எவ்வாறு தலித் இயக்கத்தில் இணைந்து பணியாற்றத் தொடங்கினீர்கள்?

நான் இளவயது முதலே தலித் இயக்கத்தில் இணைந்து பணியாற்றத் தொடங்கினேன். அம்பேத்கரிய இயக்கத்திலும், கொள்கையிலும் எனக்கான ஈடுபாடு என்பது, என்னுடைய வீட்டிலிருந்தே தொடங்குகிறது. இக்கொள்கைகளில் தீவிர ஈடுபாட்டுடன் விளங்கிய என் தந்தைக்குதான் நான் முதலில் நன்றி சொல்ல வேண்டும். என்னுடைய பள்ளிப் பருவத்திலேயே "பாம்செப்', "டிஎஸ்4' மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி வெளியீடுகளை எனக்கு அவர் அறிமுகப்படுத்தினார். அந்த காலகட்டத்தில் நம் மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைவதற்கு எந்த அமைப்போ, சங்கமோ இல்லாத சூழலில் ஆங்காங்கே சிதறியிருந்தனர். நான் கல்லூரி படிப்பிற்காக தில்லி வந்த பிறகு தலித் மாணவர்களிடம் உரையாடி, அவர்களை ஒருங்கிணைக்கத் தொடங்கினேன். ஓர் அமைப்பை உருவாக்காமல், சில குறிப்பிட்ட பிரச்சனைகளை மய்யப்படுத்தி அவர்களை ஒன்றிணைக்க முயன்றேன். இருப்பினும், 1990 இல் தில்லி பல்கலைக் கழகத்தை மய்யப்படுத்தி உருவான பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடுக்கு எதிரான மண்டல் எதிர்ப்புப் போராட்டத்தின் போதுதான் மாணவர்களை ஒருங்கிணைக்கும் என்னுடைய பணி தீவிரம் கொள்ளத் தொடங்கியது.

பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடுக்கு எதிரான போராட்டம், தலித் மாணவர்களிடையே எந்த வகையில் தாக்கத்தை ஏற்படுத்தியது?

அந்த காலகட்டத்தில் நம் மாணவர்களிடையே பல்வேறு பிரச்சனைகள் எழுந்தன. மண்டல் குழு பரிந்துரைகள் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கானதாக இருந்தாலும், சாதி இந்து மாணவர்கள், தலித் மாணவர்களையே குறி வைத்து தாக்கத் தொடங்கினர். நம்முடைய மாணவர்கள்தான் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாயினர். உண்மையில் இது பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியது. சாதி இந்துக்களுக்கு எங்கள் மீதான முன் தீர்மானங்கள் எப்பொழுதுமே இருந்து வந்தாலும், இந்தப் போராட்டத்தின் மூலம் மிக வெளிப்படையாக எங்கள் மீது அவதூறுகளை சுமத்த ஒரு வாய்ப்பாக அமைந்துவிட்டது.

அந்தக் காலகட்டத்தில் தில்லி பல்கலைக் கழகத்தில் ஒரு தலித் மாணவனாக இருப்பதே பெரும் சிரமமாக இருந்தது. எனவே, தலித், பழங்குடி மாணவர்கள் மட்டுமின்றி, பிற்படுத்தப்பட்ட மாணவர்களையும் சந்தித்து அவர்களிடையே சுயமரியாதை உணர்வை ஊட்டினோம். சாதி இந்து மாணவர்களின் சாதிய மனோபாவத்தினால் இவர்கள் தாழ்வு உணர்ச்சி கொள்ளாத அளவுக்கு, அவர்களிடையே நம்பிக்கை உணர்வை ஊட்டினோம். வெகு விரைவில் ஒரு சிறிய குழு உருவானது. இதன் மூலம் சாதி இந்து மாணவர்களால் தேவையின்றி எரிச்சலடைய வேண்டாம் என்றும், தேவை ஏற்படும்போது இடஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்களுக்கு சரியான பதிலடி கொடுக்கலாம் என்றும், ஒருவேளை அவர்கள் நம் மாணவர்கள் மீது வன்முறையை ஏவினால், நாம் ஒற்றுமையாக இருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பதிலும் உறுதியாக இருந்தோம்.

மண்டல் எதிர்ப்புப் போராட்டத்தின்போது, உத்திரப்பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களைச் சேர்ந்த சாதி இந்து வன்முறையாளர்கள், தலித் மாணவர்களுக்கு எதிராக மிகப்பெரிய வன்முறையை கட்டவிழ்த்து விட்டனர். எங்கள் கல்லூரியை சார்ந்த தலித் மாணவர்கள் இதனால் பாதிக்கப்படவில்லை எனினும், மண்டல் எதிர்ப்புப் போராட்டம் நம் மாணவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற பாடத்தை எனக்கு கற்றுக் கொடுத்தது. 1991இல் புது தில்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் முதுகலைப் பட்ட ஆய்வுக்காக சேர்ந்த பிறகு தலித் இயக்கத்தில் தீவிர ஈடுபாடு கொள்ளத் தொடங்கினேன்.

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முதுகலைப் படிப்பிலிருந்து முனைவர் பட்ட படிப்புவரை, ஏறக்குறைய பத்தாண்டுகளை அங்கு செலவழித்திருக்கிறீர்கள். இப்பல்கலைக் கழகம் தீவிர தலித் ஆர்வலர்களுக்கான களமாகக் கருதப்படுகிறது. இதில் தங்களுடைய அனுபவம் எப்படி இருந்தது? அது, தங்களுடைய மாணவப் பருவத்திற்குப் பிந்தைய வாழ்க்கையை எவ்வாறு மாற்றி அமைத்தது?

நான் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சேர்ந்தபோது, தலித் மாணவர்கள் தங்களை ஒருங்கிணைத்துக் கொள்ள முயன்று கொண்டிருந்தனர். நான் உடனடியாக அவர்களுடன் இணைந்து, "ஒருங்கிணைந்த தலித் மாணவர் பேரவை'யை (UDSF) 1991இல் உருவாக்கினேன். என்னுடைய தலைமைப் பண்பை வளர்த்துக் கொள்ளவும், பேச்சாற்றலை செம்மைப்படுத்திக் கொள்ளவும் ஏதுவான வாய்ப்பாக அது அமைந்தது. இருப்பினும் எங்கள் பேரவை கூட்டுத் தலைமையிலேயே நம்பிக்கை கொண்டிருந்தது. ஆறு முதல் பத்து பேர் கொண்ட மத்தியக் குழுதான் எங்கள் செயல்திட்டத்தை தீர்மானித்தது. இங்கு நான் எடுத்துக் கொண்ட பயிற்சியே பின்னாளில் நான் ஒரு தலித் செயல்வீரனாக மாறுவதற்கும், உலக அளவில் குறிப்பாக அய்க்கிய நாடுகள் அவையில் தலித் பிரச்சனைகளை கொண்டு செல்வதற்கும் பெரும் உதவியாக இருந்தது. இந்த குறைந்த கால அளவில் நான் ஓரளவுக்கு பங்களித்திருக்கிறேன் என்றால், அந்தப் பெருமை தலித் மாணவர் பேரவையையே சாரும்.

பெரும்பாலானஇந்திய கல்வி நிறுவனங்களில் தலித் மாணவர்களுக்கான செயல் தளம் என்பது இல்லாததாகவே இருக்கிறது. இந்நிலையில் இப்பேரவையின் முன்னோடியான தாங்கள், பேரவையின் மய்ய செயல்பாடுகளை விளக்குங்கள்.

நாங்கள் பல்வேறு செயல்திட்டங்களை வகுத்தோம். துண்டறிக்கைகளை வெளியிடு வது, சுவரொட்டிகள் ஒட்டுவது, கோரிக்கை மனுக்களை தயாரிப்பது, பொதுக்கூட்டங்களை நடத்துவது, பல்கலைக் கழகத்திற்கு உள்ளும் வெளியிலும் பல்வேறு பிரச்சனைகளை ஒட்டி பரப்புரைகளை நிகழ்த்துவது என்பவை இதில் அடங்கும். எலினார் செலட், ஓவன் லிஞ்ச் மற்றும் கெய்ல் ஓம்வெட் போன்று தலித் பிரச்சனைகள் குறித்து கவனம் செலுத்திய புகழ்பெற்ற கல்வியாளர்களை அழைத்து வாசகர் வட்டங்களையும், வகுப்பறைகளில் உரையாடல்களையும் நிகழ்த்தினோம். பேராசிரியர்களான காஞ்சா அய்லையா, எஸ்.கே. தோரட், ஜோக்டான்ட் மற்றும் டாக்டர் ராமையா போன்றவர்கள் எங்களுடைய கூட்டங்களில் தொடர்ந்து பங்கேற்று கருத்துரை வழங்குபவர்களாக இருந்தனர். அமைப்பு சார்ந்த கூட்டங்களிலும், பிற பொதுக் கூட்டங்களில் பங்கேற்று எங்கள் தரப்பு வாதத்தை முன்மொழிகின்றவர்களாகவும் செயல்பட்டோம். எங்களுடைய இத்தகைய நடவடிக்கைகள் மூலம்பல்வேறு அரசியல் குழுக்களும் எங்கள் பிரச்சனைகளைப் பேசும் கட்டாயத்திற்கு ஆளாக்கினோம்.

படிப்பைத் தவிர வேறு எந்த நடவடிக்கைகளிலும் மாணவர்கள் பங்கேற்கக் கூடாது என்ற பொதுவான கருத்து நிலவுகிறது. தலித் மாணவர்களைப் பொருத்தவரை அவர்களுடைய சமூக, பொருளாதாரப் பின்னணியை வைத்துப் பார்த்தால், அவர்களுக்கு கூடுதல் ஆபத்து இருக்கிறது. இது பற்றி தங்கள் கருத்து என்ன?

நான் இதை மறுக்கிறேன். இந்திய கல் லூரிகளில் ஒருங்கிணைந்த தலித் மாணவர் பேரவை போன்ற அமைப்புகளின் தேவை குறித்தும் அதன் முக்கியத்துவம் பற்றியும் ஒரு சிறு புரிதல்கூட மக்களிடம் இல்லை. நான் ஒன்றைத் தெளிவாக சொல்ல விரும்புகிறேன். என்னுடன் படித்த மாணவர்களில் பேரவையின் தீவிர உறுப்பினர்கள் அனைவரும், அறைக்குள் அடைந்து கிடந்த மாணவர்களை விட அதிக அளவில் தங்களுடைய தொழிலில் வெற்றி பெற்றனர். அவர்கள் எல்லாம் இப்பொழுது கல்வியாளர்களாக, அரசு அதிகாரிகளாக இன்னும் சிலர் முழு நேர செயல்வீரர்களாகப் பணிபுரிகிறார்கள்.

அவர்கள் வெற்றிகரமான வாழ்க்கையை நடத்திச் செல்வதற்கு பேரவையில் பணியாற்றியதும், பேரவையின் பயிற்சியுமே முக்கியக் காரணம். பல்வேறு சமூகத்தினரு டன் பழகுவதற்கான வாய்ப்பும், ஓர் உறவு முறையை வளர்த்துக் கொள்வதற்கான அறிமுகமும் இதன் மூலம் கிடைத்தது. எந்த ஒரு தொழிலிலும் வெற்றி பெறுவதற் கான முன்நிபந்தனை அவர்கள் பொது இடத்தில் தன்னம்பிக்கையுடன் செயல்படவேண்டும். அதற்கு பேரவை பெருமளவு உதவியாக இருந்தது. தலித்துகளுக்கு மாணவர் விடுதியில் இயல்பாக நிலவும் எதிர்மனநிலை, இத்தகைய பேரவைகளின் மூலம்தான் சரிசெய்யப்படும். தலித் மாணவர்கள் தங்களை வெளிப் படுத்திக் கொள்ளவும், போதிய தகவல்களைப் பெறவும். ஒருவருக்கொருவர் ஆதரவைப் பெறவும் தங்கள் சமூகத்தின் மீதான உணர்வைப் பெறவும் இப்பேரவை மிகவும் உதவியாக இருந்தது.

இப்பேரவையில் தலித் மாணவர்கள், இயக்கத்திற்குப் பல்வேறு வகைகளில் தங்களின் பங்களிப்பை செலுத்தி வருகிறார்கள். எங்கள் அமைப்பினுடைய உண்மையான வெற்றியே இதில்தான் அடங்கியிருக்கிறது. தொழில் ரீதியாக மட்டுமின்றி, நீங்கள் எங்கு சென்றாலும் உங்கள் சமூகம் குறித்த அக்கறையோடும், பொறுப்போடும் நடந்து கொள்வதற்கு அம்பேத்கரின் கொள்கைகளே உறுதுணையாக இருக்கின்றன. மாணவர் பருவத்தில் அம்பேத்கர் கருத்தியலைப் பரப்புவதற்கு இத்தகைய பேரவைகளே காரணமாக இருக்கின்றன. ஒவ்வொரு இந்திய கல்லூரி வளாகத்திலும் தலித் மாணவர்களுக்கென்று இப்படியான அமைப்புகள் இருந்தால், மிக வேகமான மாற்றத்தை நாம் காண முடியும்.

நீங்கள் ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் இருந்தபோது, இப்பேரவையின் முக்கிய சாதனைகள் என்ன?

நான் 2000 ஆம் ஆண்டில் நடந்தவற்றைத்தான் பேரவையின் மிக முக்கிய சாதனையாகக் கருதுகிறேன். இந்த ஆண்டில்தான் பல்கலைக் கழக மானியக் குழு (UGC), மத்திய பல்கலைக் கழகங்களில் பட்டியல் சாதி யினர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு எம்.பில். மற்றும் பிஎச்.டி. படிப்பில் இடஒதுக்கீடு இல்லை என்ற முடிவை வெளியிட்டது.நம்முடைய மாணவர்கள் மேற்படிப்பு படிப்பதைத் தடுக்கும் வகையில் இம்முடிவு எடுக்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே. சாதிய பாகுபாடுகள் நிறைந்த, சமூக, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள தலித் மற்றும் பழங்குடி மாணவர்களுக்குஉயர் கல்வி நிலையங்களில் இடஒதுக்கீடு இல்லாமல் அங்கு சேர்வதற்கு முற்றிலுமாக வாய்ப்புகளே இல்லை.

இப்பிரச்சனையை பேரவை உடனடியாக கையிலெடுத்து பல்வேறு மாணவர் குழுக்களைத் திரட்டி, ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் தலித் மாணவர்களை ஒருங்கிணைத்தது. நாங்கள் பல மத்திய அமைச்சர்களையும், நாடாளுமன்ற உறுப்பினர்களையும், குறிப்பாக மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் முரளி மனோகர் ஜோஷியையும் சந்தித்தோம். நாடு முழுவதும் உள்ள தலித் மாணவர்களை ஒருங்கிணைத்தோம். இப்பிரச்சனையில் பேரவை தலையிடாமல் இருந்திருந்தால், அதுவே தலித் மற்றும் பழங்குடி இன மாணவர்களுக்கு நேர்ந்த மிகப் பெரிய சோகமான முடிவாக இருந்திருக்கும்.

எங்களுடைய தொடர்ச்சியான போராட்டத்தால்தான் அமைச்சரவைக் கூட்டத்தில் இப்பிரச்சனை விவாதிக்கப்பட்டது. அப்போதைய மத்திய அமைச்சராக இருந்த ராம் விலாஸ் பாஸ்வான், இப்பிரச்சனையை தீர்ப்பதில் மிக முக்கியப் பங்கை வகித்தார். போராட்டம் தொடங்கிய ஒரே வாரத்திற்குள் சர்ச்சைக்குரிய இந்த ஆணை ரத்து செய்யப்பட்டது. இன்று வரையும் கூட பேரவையின் மிகப்பெரிய வெற்றியாக நான் இதைத்தான் கருதுகிறேன். இதன் மூலம் நாடு முழுவதிலும் உள்ள ஆயிரக்கணக்கான தலித் மாணவர்கள் பெரும் பயன் அடைந்தனர்.

1994 ஆம் ஆண்டு நடைபெற்ற இன்னொரு மிக முக்கியமான நிகழ்வைக் குறிப்பிட்டாக வேண்டும். அப்பொழுது ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகம் தன்னுடைய 25 ஆம் ஆண்டு வெள்ளி விழாவை கொண்டாடிக் கொண்டிருந்தது. இக்கொண்டாட்டத்தின் மூலம் அது மிக முற்போக்கான சிந்தனைகளும், கொள்கைகளும் இங்கு உருவானதாக முழக்கமிட்டுக் கொண்டிருந்தது. ஆனால், இம்முழக்கத்தின் பின்னால் இருக்கும் போலித்தனத்தை நாங்கள் அம்பலப்படுத்தினோம்.

இச்சூழலை தங்கள் பேரவை எப்படி பயன்படுத்திக் கொண்டது?

பேரவை ஒரு முழக்கத்தை முன்வைத்தது. ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகம் கடந்த 25 ஆண்டுகளில் தலித் மற்றும் பழங்குடி மக்களுக்கு செய்தது என்ன? இதுவரை எத்தனை தலித் மற்றும் பழங்குடி ஆசிரியர்கள் இங்கு நியமிக்கப்பட்டுள்ளனர்? தலித் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் எத்தனை மாணவர்கள் இங்கு சேர்த்துக் கொள்ளப்பட்டனர் என்பது குறித்த ஒரு பட்டியலைத் தயாரித்தோம். நாங்கள் எதிர்பார்த்தது போலவே, பல்கலைக்கழகத்தின் அனைத்து முற்போக்கு முகங்களும் அம்பலமாகிவிட்டன. ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகம் சட்டத்திற்கு விரோதமாக, இடஒதுக்கீட்டை முழுமையாக நிறைவேற்றவில்லை என்பதை நாங்கள் வெளிக் கொணர்ந்தோம். பல்கலைக் கழக வளாகம் முழுவதும் இப்புள்ளிவிவரங்களைக் கொண்ட சுவரொட்டிகளால் நிரப்பினோம். கருப்பு கொடிகளையும் பதாகைகளையும் ஏந்தி ஆர்ப்பாட்டங்களை நடத்தினோம். பல்கலைக் கழகம் எங்களுக்கு அநீதியை இழைத்துள்ளது என்ற பரப்புரையை மேற்கொண்டோம். இது, மிகப்பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது. அதன் மூலம் வெள்ளி விழா கொண்டாட்டமே ரத்து செய்யப்பட்டு விட்டது. அதற்குப் பிறகு தான் இவ்வளவு நாட்களாக நிரப்பப்படாமல் இருந்ததலித் மற்றும் பழங்குடியினருக்கான இடங்கள் நிரப்பப்பட்டன. எங்கள் பரப்புரையின் தாக்கம் ஏற்படுத்திய விளைவே இது.

தலித் மாணவர்களின் பிரச்சனைகளைக் கடந்து, தலித் சமூகத்திற்குப் பேரவை எந்த வகையில் பங்காற்றியது?

நம்முடைய மாணவர்கள் சாதி வன்கொடுமைகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் எழுப்பி வந்தனர். ஆந்திர மாநிலத்தில் 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற சுண்டூர் படுகொலையே பேரவை உருவாகக் காரண மாக இருந்தது. இப்படுகொலையில் 8 தலித்துகள் கொல்லப்பட்டனர். இந்தச் சூழ்நிலையில்தான் தங்களுடைய ஆதரவை தலித் சமூகத்திற்கு தெரிவிக்க வேண்டும். அதே நேரத்தில் குற்றவாளிகளை தண்டிக்க அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற நெருக்கடி நிலையில்தான் பேரவையை தொடங்க வேண்டும் என்று மாணவர்கள் உணர்ந்தனர்.

1990களில் தான் தலித் சமூகத்திற்கு எதிராக, குறிப்பாக கிராமப்புறங்களில் உச்சக்கட்ட வன்முறைகள் நிகழ்ந்தன. இந்தப் பத்தாண்டுகளில், ஏறக்குறைய ஒவ்வொரு ஆண்டும் எழுச்சியுடன் போராட வந்த தலித்துகள் கொல்லப்பட்டனர். பேரவை இத்தகைய வன்கொடுமைகள் நிகழ்ந்தபோதெல்லாம் தன்னுடைய ஆற்றலுக்கேற்ப பல்கலைக் கழக வளாகத்திற்கு உள்ளேயும், வெளியிலும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. அதுமட்டுமின்றி வன்கொடுமை நடைபெற்ற இடங்களுக்கு உண்மை அறியும் குழுக்களை அனுப்பியது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கியது. மேலும் இப்பிரச்சனை குறித்து வளாகத்தில் பொதுக் கூட்டங்களையும், கலந்துரையாடல்களையும் ஏற்படுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

1998ஆம் ஆண்டு 61 தலித்துகள் மிகக்கொடூரமாக சாதி இந்துக்களால் பீகாரில் லஷ்மண்பூர் என்ற இடத்தில் கொல்லப்பட்டனர். அப்பொழுது நானும் என்னுடன் படித்த ரவீந்திரகுமாரும் (இவர் தற்பொழுது புது தில்லியில் உள்ள இந்திரா காந்தி திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிகிறார்) இணைந்து, அய்.ஏ.எஸ். தேர்வுக்கான தீவிர தயாரிப்பில் ஈடுபட்டிருந்தோம். எங்களுடைய யு.பி.எஸ்.சி. முதன்மைத் தேர்வு நடந்து கொண்டிருக்கும்பொழுதுதான் மேற்கூறிய வன்கொடுமை நிகழ்ந்தது. அன்று இரவு முழுவதும் ஒவ்வொரு விடுதியாகச் சென்று மாணவர்களைத் திரட்டினோம்.

அடுத்த நாளே இவ்வன்கொடுமையைக் கண்டித்து மாபெரும் கண்டனக் கூட்டத்தை பல்கலைக் கழக வளாகத்தில் நடத்தினோம். மேலும் தில்லியில் உள்ள உயர் அரசு அதிகாரிகளை எங்கள் பேரவை செயற்குழு உறுப்பினர்கள் சென்று சந்தித்தனர். அதன் பிறகு எங்கள் குழு வன்கொடுமை நிகழ்ந்த லஷ்மண்பூருக்கு சென்று ஓர் உண்மையறியும் அறிக்கையை தயாரித்தது. இவ்வறிக்கையை குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் ஆகியோருக்கு அனுப்பி, வன்கொடுமையாளர்களை கடுமையாக தண்டிக் கும்படி கோரியிருந்தோம். எங்களுடைய பரப்புரையின் மூலம் கொடூரமான இக்குற்றத்தை உலகறியச் செய்ததோடு, அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று இடையறாது போராடினோம். அப்பொழுது அய்.கே. குஜ்ரால் அரசில் அமைச்சராக இருந்த ராம்விலாஸ் பாஸ்வான் அவர்கள் மிகுந்த அக்கறை எடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் துயர் துடைக்க எல்லாவிதமான உதவிகளையும் செய்தார்.

-பேட்டி அடுத்த இதழிலும்

Pin It

பூந்தோட்டம் வளர்த்த என்னை

பெருங்காட்டில் தள்ளிப் போகிறீர்கள்

ஞானம் பெற்றுத் திரும்புவேன்

அப்பெருங்காட்டிலிருந்து

வுத்தக் கூறின் தொன்மையுடன் மிளிரும் இந்தக்கவிதை, வாசகனுக்குப் பல சாளரங்களைத் திறக்கிறது. எளிமையான சொற்களாலான, பல்வேறு பரிமாணங்களைத் தரக் கூடிய இக்கவிதையை எழுதியவர் யாழினி முனுசாமி. வாழ்வின் அடர்ந்த இருளிலிருந்து வெளியேறி, வெளிச்சங்களை விழிகள் சுவைக்கும் ஒரு தலித் வாழ்வின் மனவெளியை அப்படியே பதிவு செய்வது, யாழினி முனுசாமியின் கைவண்ணம். அவருடைய முதல் தொகுப்பு "உதிரும் இலை.' கவிஞர், கட்டுரையாளர், கலை இலக்கிய விமர்சகர், பதிப்பாளர் என்ற அடையாளங்களுடன் தமிழ்த்துறை பேராசிரியராகவும் பணிபுரியும் இவர், "முரண்களரி' என்ற இலக்கிய அமைப்பை நடத்தி வருகிறார்.

கிராமத்து வாழ்விலிருந்து புலம் பெயர்ந்து, நகர வாழ்க்கைக்கு வரும் மக்களுக்கு எத்தனையோ இடர்ப்பாடுகள் இருக்கின்றன. கிராமத்திலிருந்ததைப் போன்ற அகன்ற வாசல்களோ, இயற்கை தரும் தூய்மையான காற்றோ நகரத்தில் இல்லை. ஆனால் மிக முக்கியமான பயன் ஒன்று இருக்கிறது. அதைத் தன் கவிதையில் மிக லாவகமாகப் பதிவாக்குவார் யாழினி முனுசாமி. நகரத்தின் மீது பிறர் சுமத்தும் குற்றச்சாட்டுகளையெல்லாம் அடுக்கிக் கொண்டே வந்து, கடைசியில் ஊருக்கு வெளியே/எங்களை ஒதுக்கி வைத்திருக்கும்/உங்கள் கிராமங்களைவிட/அன்பானதாய் இருக்கிறது இந்நகரம்'' என்று முடிப்பார்.

செய்யாறு வட்டம் மோரணம் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் யாழினி முனுசாமி. நாடகத்திற்குப் பெயர் பெற்ற ஊர் செய்யாறு. அங்கு நடந்த நாடகங்கள், கலைத்தன்மை மிளிரும் பொய்க்கால் குதிரை போன்ற நடனங்கள் திருவிழாக்காலங்களில் காணக் கிடைக்கும் இன்னபிற கலைவடிவங்களை இளம் வயதிலேயே மனதில் பதிய வைத்ததும், சிறு வயதில் அவருடைய பாட்டி சொன்ன கதைகள் அவருள் ஆழப்பதிந்ததும் கலைமேல் தனக்கு ஈர்ப்பை ஏற்படுத்தியது என்று சொல்கிறார்.

தொண்ணூறுகளில் சென்னையில் முதுகலை படிக்க வந்தவர், நிறைய இலக்கியக் கூட்டங்களில் பார்வையாளராகப் பங்கேற்று வந்திருக்கிறார். சிற்றிதழ்களை வாசித்திருக்கிறார். அப்போது வெளிவந்த "பழையன கழிதலும்' என்ற சிவகாமியின் நாவல், அவரை நவீன இலக்கியத்தின் பக்கமும் தலித் இலக்கியத்தின் பக்கமும் திருப்பியிருக்கிறது. மார்க்சியவாதிகளுடனான நட்பும் வாசிப்பும் அவரை மார்க்சியத்தில் பற்றுடையவராக மாற்றி விட்டது.

கொள்கையில் நேர்மையாக இருக்கின்ற சிலரைத் தவிர, மேம்போக்காக மார்க்சியம் பேசுபவர்கள் சாதியவாதிகளாகவே இருக்கிறார்கள். தலித் தோழர், வன்னிய தோழர் என்று பிரித்துப் பேசுவார்கள். நாம் மார்க்சியவாதிகளாக இருந்தாலும் நம்மை அவர்கள் மார்க்சியவாதிகளாகப் பார்ப்பதில்லை. எப்படியாவது நம் சாதியை கண்டுபிடித்து விடுவார்கள். மதம் மாறினால் சாதி ஒழிந்துவிடும் என்று நம்பிப் போனால், அங்கே சாதி கிறித்துவத்தை விழுங்கி ஏப்பம் விட்டு தலித் கிறித்துவர், நாடார் கிறித்துவர் என்று பிரிக்கிறது.  இருப்பினும் மார்க்சிய கொள்கையில் எனக்கு எப்போதும் நம்பிக்கை உண்டு'' என்கிறார் யாழினி முனுசாமி.

தலித்துகளிலும் இடஒதுக்கீட்டின் மூலம் படித்துவிட்டு இடஒதுக்கீட்டின் வேலையையும் பெற்றுக் கொண்டு, இறுதியில் தன் மக்களையும் அவர்களின் வாழ்வியல் துன்பங்களையும் அப்படியே விட்டுவிட்டு, மூன்றாந்தரப் பார்ப்பனர்களாக மாறிவிடுகின்ற படித்த தலித்துகளை கவிதைக்கான செறிவோடும் அளவோடும் விமர்சிக்கிறார் யாழினி முனுசாமி.

ஒல்லியாய் இருந்தவன்/தொப்பைப் போட்டிருந்தான்/திருமணத்திற்குப் பிறகு/குடும்பத்துடன் ஒட்டுறவு குறைந்துவிட்டதாம்/நண்பர்களுடன் வைராக்கியமாம்/உயர்ந்து காட்டணுமாம்/தங்கியிருக்கும் வீட்டிற்கழைத்தவன்/அங்கவந்து சாதி பத்திப் பேசக்கூடாது என்றான்/குடும்பம் நண்பர்கள்/நலம் விசாரிப்பு முடிந்து/உபசரிக்கும்போது/காதுபடக் கிசுகிசுத்தான்/"அதைத்' தலமுழுகி/ரொம்ப நாளாச்சி/இப்பல்லாம் ஒன்லி மட்டன் சிக்கன்தான்.''

கவிதையின் பகடியும் அதன் மூலம் பதிவாகும் சமூக எதார்த்தமும் குறிப்பிடத்தக்கவை. ஆக்கங்களைத் தருபவராக மட்டுமின்றி, தன்னை ஒரு சிறந்த விமர்சகராகவும் தகவமைத்துக் கொண்டிருப்பது, யாழினி முனுசாமியின் அடையாளம். விமர்சனம் என்பது தனி அளவுகோலுடன் இயங்கக்கூடியது. அதற்கு சாதியும் ஒரு முக்கியமான அளவுகோல். ஒரு கவிதைத் தொகுப்பை வெளியிட்டதும் சுஜாதாவுக்கு அனுப்பிவிட்டுதான் மறுவேலை பார்த்த கவிஞர்கள் நிறைய பேருண்டு. அவர் வாயால் அல்லது கையால் கவிதைகளை விமர்சித்துவிட மாட்டாரா என ஏங்கியவர்கள் ஆயிரக்கணக்கானவர்கள். அவர்களெல்லாம் இப்போது யாருக்கு அனுப்புவார்களோ தெரியவில்லை!

தீவிர இலக்கியத் தளத்தில் இயங்குபவர்களுக்கு வெங்கட் சாமிநாதன் சொல்லே "சொர்க்கம்'. நவீன கவிஞர்களுக்கு ஞானக் கூத்தன்தான் ஒட்டக்கூத்தன். இப்படி இவர்கள் பரப்பிய விமர்சன வெளியில் தனக்கென்று ஓரி டத்தை உருவாக்கி வைத்திருப்பவர் யாழினி முனுசாமி. இவருடைய "தலித் இலக்கியமும் அரசியலும்' என்னும் விமர்சனக் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு, தலித் இலக்கியத்தில் முக்கியப் பங்காற்றக் கூடியது. பதினாறு கட்டுரைகள் கொண்ட அந்த நூல், தலித் எழுத்தாளர்களின் அனைத்து வகைமைகள் குறித்தும் பேசுகிறது.

முன்னணி தலித் எழுத்தாளர்கள் என்று அறியப்பட்ட அனைவரது எழுத்துகளையும் அவர் சரியான விமர்சனப் பார்வை கொண்டு எழுதியிருப்பதாகவே வாசிப்பாளனுக்குத் தோன்றும். தலித் இலக்கியம் உருவாகும் தருணம், அதன் வேர் பிடிப்பு, அது பரப்பும் இலக்கிய ஆளுமை, தமிழ் இலக்கியத்தில் அதன் தேவை, தலித் இலக்கியம் நடத்தும் அரசியல் இவை அனைத்தும் அதில் அலசப்படுகின்றன.

யாழினி முனுசாமியின் இன்னொரு முகம் அவர் ஓர் ஆவணப்படக்காரர். அவருடைய "தொழுப்பேடு' ஆவணப்படத்தில், செய்யாறு வட்டத்திலுள்ள தொழுப்பேடு என்ற ஊரில் நடைபெற்ற சாதிய வன்கொடுமையினை ஆவணமாக்கியுள்ளார். 140 தலித் குடும்பங்களும் 500 சாதி இந்து குடும்பங்களும் அருகருகே வாழ்ந்திருக்கும் இடம்தான் தொழுப்பேடு. தலித்துகள் வாழ்கின்ற பகுதிக்கு வரும் மின்சாரத்தைத் துண்டித்து, இருட்டில் சாதி இந்துக்கள் புகுந்து தலித்துகளை தாக்குவார்களாம். இந்த நிகழ்ச்சி அடிக்கடி அங்கு நடக்கும். ஒவ்வொரு முறையும் திடீரென்று தாக்குதல் நடத்தப்படுவதால், என்ன செய்வதென்றே தெரியாமல் தலித்துகள் அடி வாங்குவார்களாம்!

பிறகு வேறு வழியே இல்லாமல் தாங்கள் வாழ்ந்திருந்த குடியிருப்புப் பகுதியில் தங்கள் வீடுகளையெல்லாம் விட்டுவிட்டு, கொஞ்சம் தொலைவிலிருந்த ஏரியில் சென்று குடியேறிவிட்டனர். முன்பிருந்த வீடுகள் எல்லாம் குட்டிச் சுவர்களாக நிற்கின்றன. அதை அப்படியே படம் பிடித்து ஆவணப்படுத்தியிருக்கிறார் யாழினி முனுசாமி. இது மிக முக்கியமான பதிவாக இருப்பினும், பரவலாக கண்டு கொள்ளப்படவில்லை.

வலிகளிலிருந்து வரும் கவிதைகள் தன்னைப் பெரிதும் ஈர்ப்பதாகச் சொல்லும் முனுசாமி ஈழக் கவிதைகளை, பெண்ணியக் கவிதைகளை, போர்ச்சூழலிலிருந்து வரும் கவிதைகளைப் பெரிதும் விரும்பி வாசிக்கிறார். அந்தக் கவிதைகள் குறித்த விமர்சனங் களும் தொகுப்பும் நூலாக வெளிவந்திருக்கிறது. "பின்நவீனத்துவச் சூழலில் புலம் பெயர்ந்தோர் கவிதைகளும் பெண்ணியக் கவிதைகளும்' என்றநூல், அவருடைய சிறந்த விமர் சனங்கள் அடங்கிய தொகுப்பாகும்.

இலக்கியத்தில் பன்முகத்தன்மையுடன் பணியாற்றிக் கொண்டிருக்கும் இவர், "முரண்களரி' என்ற அமைப்பையும் நடத்தி வருகிறார். ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கு தன் ஆற்றலைப் பயன்படுத்த வேண்டும் என்னும் பேரவா அவர் உள்ளத்தில் நீறு பூத்த நெருப்பாக இருப்பதே அவரை இத்தகைய ஆளுமை கொண்டவராக மாற்றியிருக்கிறது.

தலித் இலக்கியம் தேங்கி விட்டது என்று சொல்பவர்கள் அதன் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியில் பேசுகிறார்கள் என்று சினந்தெழும் அவர், தலித் தளத்தில் எழுத வரும் புதியவர்களை மிகச் சரியாக அடையாளப்படுத்த வேண்டும் என்றும், அவர்களின் எழுத்துகள் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் கூறுகிறார்.

இன்னும் நிறைய தலித் சிற்றிதழ்கள் தொடங்கப்பட்டு நடத்தப்பட வேண்டும். தலித் இயக்கங்கள் தங்கள் தொண்டர்களை வெறும் தொண்டர்களாகவே வைத்திருக்கின்றன. அவர்களை வாசிப்பாளர்களாகவும் மாற்ற வேண்டும். நம்மைப் பற்றியும் இலக்கியங்கள் எழுதப்பட்டிருக்கின்றன என்பதை தலித் மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். இது தெரியாமலேயே இருக்கும் "படித்த' தலித்துகள் அதிகம். இவ்வாறு செய்வதால் தலித் இலக்கியம் தலித்துகளிடையே மேலும் பரவலாக்கப்படும். தலித் அரசியலும் கோட்பாட்டளவில் இன்னும் கெட்டிப்படும் என்று உறுதியாகக் கூறும் யாழினி முனுசாமி, தலித் இலக்கிய உலகின் முக்கியப் புள்ளி.

-யாழன் ஆதி

யாழினிமுனுசாமியை தொடர்பு கொள்ள : 98413 74809

Pin It

உட்பிரிவுகள்