dmlogo

தொடர்பு முகவரி: எஸ்-5, மகாலட்சுமி அடுக்ககம், 13/26, குளக்கரை சாலை, சென்னை - 600 0034. பேச: 044 - 2822 1314

 

ஜட்டியுடன் சாக்கடையில் இறங்க நிர்பந்திப்பது மனித உரிமை மீறல் இல்லையா?

கையால் மலம் அள்ளும் தொழில் இந்த சாதியில் பிறந்த காரணத்தினால், நம்மீது திணிக்கப்பட்டது. எனவே, இத்தொழிலை ஒழிக்கப் போராடுகிறோம். இது, இந்து சாதி வர்ண முறையிலே நம் மீது திணிக்கப்பட்ட ஒரு தொழில். இன்னும் சொல்லப் போனால், இத்தொழில் சாதியோடு இணைக்கப்பட்டுள்ளது. எல்லா சாதிக்காரர்களும் இந்தத் தொழிலை செய்தால், நாம் ஒன்றும் கேள்வி கேட்கப் போவதில்லை. குறிப்பிட்ட சாதி மட்டுமே, அதாவது அருந்ததியர், சக்கிலியர் என்று சொல்லக்கூடிய நாம் மட்டுமே செய்ய வேண்டும் என வன்கொடுமையாக இத்தொழில் நம்மீது திணிக்கப்பட்டுள்ளது. இதை ஏன் மாற்ற முடியவில்லை?

கோவையில் 2004 ஆம் ஆண்டு ஆதித்தமிழர் பேரவை கூடியபோது, தமிழகத்திலேயே முதன்முதலாக, “கையால் மலம் அள்ளும் தொழிலை தடை செய்து, அதில் உள்ளவர்களுக்கு மாற்றுப்பணி வழங்க வேண்டும்'' என்று தீர்மானம் நிறைவேற்றினோம். தடை செய்வது என்பதுதான் ரொம்ப, ரொம்ப முக்கியம். இதற்கு முன்பிருந்த புரட்சி, முற்போக்கு பேசுகின்ற பல்வேறு இயக்கங்கள் ஆகட்டும், துப்புரவுத் தொழில் செய்கின்றவர்களிடையே இயக்கம் கட்டுகின்ற தொழிற்சங்கங்கள் ஆகட்டும், அவர்கள் சந்தா வாங்குவதில்தான் குறியாக இருந்தார்களே தவிர, இப்படி ஒரு இழிதொழிலை செய்கிறார்களே, இதை ஏன் தடை செய்யக் கூடாது என்கிற குறைந்தபட்ச மனிதாபிமானம்கூட இல்லாமல், அதையும் ஒரு தொழில் என்று கூறி, சங்கம் வைத்து, சந்தா வசூலிக்கிறார்கள்.

"தாட்கோ'வில் இருந்து அதிகாரிகள் வந்து பேசினார்கள், நிறைய செய்வதாக! இன்றுள்ள "தாட்கோ' நம்மை பிச்சை எடுக்கத்தான் வைக்கிறது. எத்தனை பேர் முன்னேறியிருக்கிறார்கள்? கர்நாடகாவில் 10 ஆயிரம் ரூபாய்க்கு லோன் போட்டால், கறவை மாடு வீட்டில் இருக்கும். ஆனால் இங்கு கறவை மாட்டுக்கு லோன் போட்டா, ஆட்டுக்குட்டிதான் வந்து சேரும். இப்போது கலைஞர் செய்கிறார். நல்லதுதான். இப்போதுகூட அவர், அவரோட "பெண் சிங்கம்' என்கிற திரைப்படத்திற்கு கிடைத்த 61 லட்சம் ரூபாயை, அருந்ததியர் மாணவர்களுக்கு, ஒரு மாணவனுக்கு 5 ஆயிரம் என கொடுத்துள்ளார். நான் கேட்கிறேன், அவருக்குத் தெரியாதா? இந்த 5 ஆயிரம் ரூபாயை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும் என்று? அவர் எதற்கு தன்னுடைய சொந்தப் பணத்தை அளிக்க வேண்டும். முதல்வராக உள்ளார். மருத்துவம் படிக்கின்ற ஓர் அமைச்சரின் மகனுக்கு ஆண்டுக்கு ரூபாய் 5 ஆயிரம்தான் செலவாகின்றதா? ஏன் மாதம் 10 ஆயிரம் ரூபாய் அரசாங்கம் அளித்தால் என்ன?

மனமிருந்தால் மார்க்கமுண்டு என்று நான் சொல்வது இதுதான். ஒரே மாதத்தில் தமிழகம் முழுவதும், ஏன் இந்தியா முழுவதும்கூட, கையால் மலம் அள்ளும் தொழிலை ஒழிக்க முடியும். "பாடம்' நாராயணன் உயர் நீதிமன்றத்தில் வழக்குப் போடுகிறார், இத்தொழிலை தடை செய்யச் சொல்லி. அரசாங்கம் 6 மாதம் அவகாசம் கேட்டது, அனைத்து மாவட்டங்களுக்கும் போதிய கருவிகள் வாங்குவதற்காக.

டிசம்பர் 10 ஆம் தேதி உலகெங்கும் மனித உரிமை நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இது, மனித உரிமை மீறலா தெரியலையா? சாக்கடை அள்ளுவது; வெறும் ஜட்டியுடன் "மேன்ஹோலில்' இறங்கி உயிரோடு வரமுடியுமா என்று தெரியாது. இது இன்னிக்கும் இருக்குது. இத்தொழிலில் ஈடுபடுபவர்களின் மறுவாழ்விற்காக அரசு 35 கோடி ஒதுக்கி, வாரியம் அமைத்தது. அது என்ன ஆனது? எங்கிருக்கிறது? யாருக்கும் தெரியாது. இத்தொழிலை ஒழிக்க வேண்டும் என்பதில் முழு முனைப்பில்லை. அக்கறையில்லை.

அரசு நினைத்தால் இதை ஒரே மாதத்தில் ஒழிக்க முடியும். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, வீடுகளில் மழை நீரை சேகரிக்க வேண்டும் என்ற திட்டத் தைக் கொண்டு வந்தார். மழைநீர் சேமிப்பில்லாத வீடுகளுக்கு குடிநீர் கிடையாது, மின் இணைப்பு கிடையாது, சொத்துவரி வாங்க முடியாது என்று அறிவித்தார்கள். உடனடியாக தமிழகம் முழுவதும், மின்சாரம் இல்லாத சிறு குடிசைகளில்கூட மழை நீர் சேமிப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டதே! எவ்வளவு அவசர கதியில் செய்தார்கள்.

தமிழ் நாட்டில் தற்பொழுது உலர் கழிப்பிட ஒழிப்புச் சட்டம் நடைமுறையில் உள்ளது. முன்னாள் முதல்வர் கடைசி நேரத்தில் இச்சட்டத்தை ஏற்று அறிவித்தார். இச்சட்டத்தில், இத்தொழிலை யார் செய்யச் சொல்கின்றார்களோ, அவர்களுக்கு சிறைத்தண்டனை, அபராதம் என்று உள்ளது. ஆனால், இதை யார் நடைமுறைப்படுத்துவது? இதுதான் இப்போதைய பிரச்சனை, கேள்வி. மாநகராட்சியில் ஒருவர் மலக்குழியில் இறங்கினார். புகைப்படம் எடுத்து, ஆதாரத்துடன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தோம். வழக்குப் பதிய மறுத்தார்கள். இப்படி ஒரு சட்டமே இல்லை என்றார்கள். மலக்குழியில் இறங்கச் சொன்னது, மாநகராட்சி ஆணையர். அவர்தான் குற்றவாளி. ஆனால் வழக்குப் பதிவு செய்ய முடியவில்லை. ஆனால், வேலை செய்ய விடாமல் தடுத்ததாக எங்கள் மீது வழக்குப் போடுகிறார்கள். சட்டமும் உள்ளது, தடுக்க வேண்டுமென்ற நீதிமன்ற உத்தரவும் உள்ளது. ஆனாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை.

உலகின் 190 நாடுகளில் இப்பிரச்சினை இல்லை. இந்தியாவில் மட்டும்தான் இந்தக் கொடுமை. ஏன் என்றால், இந்தியாவில்தான் இந்து மதம் உள்ளது. மதத்திற்கும், சாதிக்கும் இத்தொழிலுக்கும் தொடர்பு இருக்கிறது. சாதி எப்படி ஒழியும்? ஒழியாது. அப்ப மதமாவது மாறணும். நம்முடைய தலைவர் புரட்சியாளர் அம்பேத்கர், “நான் பிறக்கும்போது இந்துவாகப் பிறந்தேன். சாகும்போது இந்துவாக சாகமாட்டேன்'' என்று சொன்னார். சிலர் மேடையில, நீங்க என்ன வேணாலும் பேசுங்க, செய்யுங்க. ஆனா இந்த கடவுள், மதம் இதை மட்டும் "டச்' பண்ணாதீங்க அப்படின்னு சொல்வாங்க. எப்படி முடியும்?

துப்புரவுப் பணியில் இருப்பவர்களுக்கு என்று மத்திய அரசு பல கோடி ரூபாய்களை தமிழகத்திற்கு ஒதுக்கியது. அந்த ரூபாய் எல்லாம் என்ன ஆனது? அதை நம் மக்களுக்கு கொடுத்திருந்தால், நம் சமூகம் இன்று மிகப் பிரமாதமாக இருந்திருக்குமே! அந்தத் தொகையை ஏன் நெடுஞ்சாலைத் துறைக்கும், பொதுப் பணித்துறை என பல்வேறு துறைகளுக்கும் மாற்றுகிறீர்கள்? படிக்க வருகின்ற முதல் தலைமுறைக்கு ஆரம்ப கல்வியில் இருந்து ஆராய்ச்சிக் கல்வி வரைக்கும் இலவசமா கொடுக்கணும்னு திட்டத்துல இருக்கு. ஆனா ஏன் செய்யல? "ஹட்கோ'வில் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகையெல்லாம் பினாமியில் வெளியில இருக்கு. மேற்கு மாவட்டங்களில் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொழிற்சாலைகள் எல்லாம் பினாமியில் கவுண்டர், நாயக்கர் பேர்ல யும் இருக்கு. ஏன் அரசாங்கம் இதன் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாதா?

தமிழ் நாட்டில் கையால் மலம் அள்ளுகிறவர்கள் 35 ஆயிரம் பேர் என்று சொல்கிறார்கள். அது பொய். சென்ற முறை நடந்த ஒரு கூட்டத்தில் இப்படித்தான் இப்போதெல்லாம் இந்தத் தொழில் கிடையாது; எங்கும் நடக்கலன்னு ஓர் அய்..எஸ். அதிகாரி பேசினார். உடனே நம்ம பெசவாடா வில்சன், இன்னிக்கு காலையில் 6 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் நான் இறங்கிவரும்போது எடுத்த படம் என்று காட்டினார். உடனே வாய்மூடிக் கொண்டார்கள். எத்தனை சட்டங்கள், நீதிமன்ற உத்தரவுகள் இருந்தாலும், எத்தனை புத்தகங்கள் எழுதினாலும் இவர்கள் காதில் ஏறுவதில்லை.

நம்மைப் பொருத்த அளவில் ஒன்றில் நாம் தெளிவாக இருக்க வேண்டும். இந்த கக்கூஸ் என்பது இங்கிலீஸ்காரன் வரும் வரையிலும் இங்கு கிடையாது. இங்கிலீஸ்காரர்கள் வந்து 350 ஆண்டுகள் ஆகின்றன. அதற்கு முன்பு இந்தியாவில் கக்கூசு கிடையாது. இங்கிலீசுகாரன் வந்த பிறகுதான், கக்கூஸ் என்ற ஒன்று உருவாகி, அதைப் பராமரிக்க ஒரு ஆள் தேவை என்று உருவானது. இங்கிலீசுகாரன் வந்த பிறகு நாட்டில் பல விசயங்கள் வந்தன. ஆக, 400 வருசத்துக்கு முன்னாடி இந்தத் தொழில் கிடையாது. இதுதான் நிலைமை. இடைக்காலத்தில் நாம் ஏமாந்தபோது நம்மீது திணிக்கப்பட்டது இத்தொழில், சாதியின் அடிப்படையில்.

சிலர் "தீண்டாமை ஒழிப்பு' என்கிறார்கள். சாதி ஒழிப்பு என்ற வார்த்தையை சொல்ல மறுக்கிறார்கள், முற்போக்கு பேசுகின்றவர்கள். தீண்டாமை காந்தி சொன்னது. பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதார் என்று எல்லோரும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அம்பேத்கர்தான், “அப்படி அல்ல. தீண்டப்படுபவர், தீண்டப்படாதவர். இவர்கள்தான் நாட்டில் உள்ளார்கள்'' என்று சொன்னார். இந்த நாட்டையே புரட்டிப் போட்ட கருத்துகளை வழங்கிய அம்பேத்கரை ஓரம் கட்டி வைத்துவிட்டு, இன்று யார் எல்லாமோ தலைவர் ஆகிவிட்டனர். உலகத்திற்கே புரட்சிக் கருத்துகளை வழங்கிய மார்க்சுக்கு நிகராக கருதப்படும் புரட்சியாளர் அம்பேத்கருக்கு, இன்று நாட்டில் என்ன மரியாதை இருக்கிறது? நாம் அவர் படத்தை மட்டும் பயன்படுத்துகிறோம்.

மற்ற சாதியில் பிறந்தவர்களும், முற்போக்குப் பேசுகின்றவர்களும் இதை எண்ணிப் பார்த்து, இதை ஒழிக்க முன்வர வேண்டும்; நம்மோடு கைகோர்க்க வேண்டும். அப்போதுதான் இப்பிரச்சனையை தீர்க்க முடியும். எனக்குத் தெரிந்து 10 ஆண்டுகளாக நாம்தான் பேசிக் கொண்டிருக்கிறோம். இதற்கு எப்போதுதான் முடிவு? 2010 இல் தமிழ் நாட்டை கையால் மலம் அள்ளும் தொழில் இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும் என்பது சபாய் கரம்சாரி அந்தோலனின் விருப்பம். அதை நடைமுறைப்படுத்த இந்த அரசு உதவி செய்ய வேண்டும். அரசு உதவி செய்ய வேண்டும் என்றால், பிற கட்சிகள் எல்லாம் என்ன செய்கிறது என்பதுதான் நாம் முன்வைக்கின்ற கேள்வி.

இங்கு தமிழ் நாட்டில் இருக்கின்ற பெரியாரிஸ்டுகளும், அம்பேத்கரிஸ்டுகளும் கருத்துடையவர்கள். கருத்துத் தெளிவுடையவர்கள். நாம் ஒரு திட்டத்தை கையில் எடுத்தால் அதை நிச்சயம் நடத்திக் காட்ட முடியும். இத்தொழிலை ஒழிக்க ஆதித்தமிழர் பேரவை ரயில் மறியல் போராட்டம் நடத்தி, 3000 பேர் கைதானார்கள். மாநகராட்சிகள், நகராட்சிகள் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தியிருக்கிறோம். இதையொட்டி நாம் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். பல அமைப்புகளுடன் பல்வேறு திட்டங்கள் வைத்து செயல்படுகிறோம். நாம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

தமிழகத்தில் 2010 க்குள் கையால் மலமள்ளும் தொழிலை ஒழிப்பதற்கான மாநில கலந்தாய்வுகூட்டத்தை 18.12.1009 அன்று சென்னையில்சாபய் கரம்சாரி அந்தோலன்என்ற அமைப்பு நடத்தியது. இக்கூட்டத்தில் ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனர் ரா.அதியமான் நிகழ்த்திய உரையின் சுருக்கமே இங்கு வெளியிடப்பட்டுள்ளது. “இனி இத்தொழிலை செய்ய மாட்டோம் என்று சமூகப் பிரகடணம் செய்தால்தான், கையால் மலம் அள்ளும் இழித்தொழிலை ஒழிக்க முடியும்என்று இக்கூட்ட்த்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பானசமூகப் பிரகடன மாநாடுசெப்டம்பர் மாதம் பெரியார் பிற்ந்த நாளான 17,2010 அன்று நடைபெறும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

-ரா. அதியமான்

 

Pin It

 

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டைக்கு அருகிலுள்ள உஞ்சனை என்ற கிராமத்தை அடுத்துள்ள அரியக்குடி விலக்கு பேருந்து நிறுத்தத்தில் தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடும் நிலையில் கிடத்தப்பட்டிருந்த ஒருவர், அவசர ஊர்தி 108க்கு யாரோ அளித்த தகவலின் பேரில் காப்பாற்றப்பட்டு, காரைக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

“தேவகோட்டை அருகே திருடன் என நினைத்து மனநோயாளி சித்ரவதை – படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதி'' ("மாலை மலர்', 16.12.2009) என காவல் துறை தந்த செய்தியும் இச்சம்பவத்தை முக்கியமற்ற ஒன்றாக்கியது. அøனத்து செய்திகளுக்கும் பின்னே உறைந்து மறையும் உண்மைகளைப் போலவே, இச்செய்தியின் பின்னால் புதையுண்ட உண்மை நிகழ்வை, உழைக்கும் மக்கள் உரிமை இயக்கச் செயலாளரும் பட்டியலின மக்களின் வாழ்வுரிமைக்காக இப்பகுதியில் செயலாற்றி வருபவருமான ஆரோ. ஸ்டீபன்ராஜ் நமக்கு தேடித்தந்த போது, அது இன்னு மொரு வன்கொடுமை அதிர்ச்சி!

தேவகோட்டை வட்டம் கண்ணங்குடி அருகிலுள்ள தேவண்டதாவு என்ற கிராமத்திலுள்ள தனது உறவினரது வீட்டில் தங்கியிருந்த ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம், ஆண்டாவூரணி (தெற்கு)இல் வசித்து வரும் குப்பையன் மகன் கருப்பையா (வயது 50) என்பவர், 13.12.2009 அன்று இரவு 8 மணியளவில்கண்ணங்குடி டாக்ஸி ஸ்டாண்டு அருகில் நின்று கொண்டிருந்தார். அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த கருப்பையாவை திருடன் என முத்திரை குத்தி அவ்வூரைச் சேர்ந்த ஆதிக்க சாதி கும்பல் கொடூரமாகத் தாக்கியுள்ளது. அவரின் வயதையும் பொருட்படுத்தாமல் முழங்காலில் கட்டையால் தாக்கி யும் கைவிரல் நகக்கண்ணில் ஊசியால் குத்தி யும் பழுக்கக் காய்ச்சிய கம்பியால் உடல் முழுவதும் சூடுகள் வைத்தும் அவரை சித்திரவதை செய்துள்ளனர். தேவகோட்டை வட்டம் காவல் நிலையத்திலிருந்து தகவல் கேள்விப்பட்டு கண்ணங்குடிக்கு வந்த உதவி ஆய்வாளரிடம் கூட அவரை ஒப்படைக்க மறுத்து, காவலர்களையும் விரட்டி அனுப்பியுள்ளது அக்கொலைகார கும்பல். அதற்குப் பிறகுதான் உடலில் தீக்காயங்களுடன் இரு நாட்களுக்குப் பிறகு அவர் கண்டறியப்பட்டுள்ளார்.

காரைக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த கருப்பையாவிடம் பலவீனமான வாக்குமூலத்தைப் பெற்று சாதாரண பிரிவுகளில் முதல் தகவல் அறிக்கையொன்றை பதிவு செய்ததோடு, குற்றவாளிகளைத் தப்பிக்க வைக்கும் நோக்கில் அரசு மருத்துவமனையிலிருந்து கருப்பையாவை வெளியேற்றி, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை செய்து கொள்ள அறிவுறுத்தி, 200 ரூபாயையும் தந்து, அவரைக் கவனித்து வந்த உறவினரிடம் மேலணை பாண்டியன், பாலகிருஷ்ணன் என்ற காவலர்களின் மூலம் நெருக்கடியும் தந்துள்ளனர் காவல் துறையினர். ஆனால் 16.12.2009 பிற்பகலில் திருவாடானை அரசு மருத்துவமனையில் வெளி நோயாளியாகவும் மறுநாள் உள்நோயாளியாகவும் கருப்பையா சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கடுமையான சித்திரவதையில் மனரீதியாகவும் பாதிக்கப்பட்ட கருப்பையாவின் வலதுகை மோதிர விரல் நகக்கண் பிடுங்கப்பட்டதால் சீழ் பிடித்து வெட்டி எடுக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட கருப்பையாவின் சகோதரர் பால்சாமியை அழைத்துக் கொண்டு, சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் முறையிட்டபோது, (கள்ளர் சாதியைச் சேர்ந்த) டி.எஸ்.பி.யிடம் இப்புகாரை விசாரணைக்கு அனுப்பி வைப்பதாக அவர் கூறியுள்ளார். ஒட்டுமொத்த காவல் துறையும் நீண்டகாலமாகவே இப்பகுதியில் கள்ளர் சாதி ஆதிக்கக் கும்பலுக்கு அடிவருடியாகவும் "நாடு' அம்பலங்களுக்கு ஏவல் செய்தும் வருவதையும் இப்பகுதி மக்கள் அனைவரும் அறிவர்.

நிலவுடைமை காலத்திய "நாடு' அமைப்பு முறையும், கள்ளர் சாதி ஆதிக்கமும் இப்பகுதியில் ஒழிக்கப்படாத வரை ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான வன்கொடுமைகளுக்கும் இழிவுகளுக்கும் முடிவில்லை. இன்ன சாதியை சேர்ந்தவர் என்று தெரிந்தே கொடுமைப்படுத்தியதோடு அல்லாமல், நாதியற்ற உயிராய் நடுக்காட்டில் வீசியெறிந்து விட்டு, 200 ரூபாயில் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வந்துவிடலாம் என்ற சாதித் திமிருக்கு சாவுமணி அடிக்கும் எதிர்ப்பு உணர்வுக்கு ஒடுக்கப்படும் மக்களை உயர்த்த வேண்டும்.

கருப்பையாவை வன்கொடுமைக்கு உட்படுத்தி, சாதி வெறியாட்டம் நடத்திய 10 பேர் கொண்ட கும்பலின் தலைவனும் "கண்ணங்குடி நாடு' அம்பலத்தின் மகனுமாகிய படைவென்றான் என்பவனை எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் உடனடியாகக் கைது செய்யவும், பாதிக்கப் பட்ட கருப்பையாவுக்கு உரிய மருத்துவ சிகிச்சை மற்றும் நிவாரணம் தரவும், குற்றவாளிக் கும்பலுக்கு பாதுகாப்பாகச் செயல்படும் காவலர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி "ஒடுக்கப்பட்டோர் விடுதலை முன்னணி', "உழைக்கும் மக்கள் உரிமை இயக்கம்', "தியாகி இம்மானுவேல் பேரவை', "உழைக்கும் பெண்கள் இயக்கம்' ஆகியன 2010 சனவரி 3 அன்று தேவகோட்டையில் கண்டனப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்

- இளம்பரிதி

 

Pin It

இந்தியா ஊழலின் ஊற்றுக் கண்ணாகத் திகழ்கிறது. நாள்தோறும் ஊழலுக்கு எதிராக பக்கம் பக்கமாக பத்திரிகைகள் எழுதிக் குவித்தாலும், ஊழல் குறைந்தபாடில்லை. ஊழல் இல்லாத ஒரு துறையே இல்லை என்ற அளவுக்கு அது நீக்கமற நிறைந்திருக்கிறது. இந்திய ஜனநாயகத்தின் தூண்கள் அனைத்தும் ஊழல்மயமாகி நீண்ட நாட்கள் ஆகிவிட்டன. நிர்வாகத்துறை, அரசியல் துறை என்ற அதிமுக்கியத் துறைகள் எந்தளவுக்கு ஊழல்மயமாகியுள்ளன என்பது பாமரனுக்கும் தெரியும். ஆனால், நீதித்துறையும் பத்திரிகைத் துறையும் இதே அளவுக்கு ஊழல்மயமாகி வருகின்றன. கடந்த சில மாதங்களாக, பத்திரிகை மற்றும் ஊடகத் துறை எந்தளவுக்கு ஊழல்மயமாகி விட்டன என்பதை ஆதாரங்களுடன் "தி இந்து', "அவுட்லுக்' போன்ற ஏடுகள் அட்டைப்படக் கட்டுரைகளாகவே வெளியிட்டுள்ளனர்.

கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பி.டி. தினகரன் அவர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பரிந்துரை செய்யப்பட்டவுடன் இங்குள்ள பார்ப்பன ஏடுகளும், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட சில கட்சிகளும், அவர் நிலத்தை ஆக்கிரமித்ததாகவும், அளவுக்கு மீறி சொத்து சேர்த்துள்ளதாகவும், அதனால் அவரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக்கக் கூடாது என்றும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளன. நீதிபதி பி.டி. தினகரன் நீண்ட நாட்களாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தார்; இரண்டு ஆண்டுகளாக கர்நாடக மாநில தலைமை நீதிபதியாகப் பணிபுரிகிறார். அப்போதெல்லாம் அவர் மீது குற்றம் சுமத்தாத இவர்கள், அவருடைய பெயர் உச்ச நீதிமன்றத்திற்குப் பரிந்துரை செய்யப்பட்டவுடனேயே அவர் மீது அவதூறுகளை வீச வேண்டிய தேவை என்ன?

இன்னும் ஒரு படி மேலே சென்று, சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் (பா... சி.பி.எம். உள்ளிட்ட) அவர் மீது "இம்பீச்மென்ட்' (பதவி நீக்கம் செய்யும்) தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று மாநிலங்களவைத் தலைவரிடம் முறையிட்டுள்ளனர். ஆனால், இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு 124 (4) பின்வருமாறு கூறுகிறது : " A Judge of the Supreme Court shall not be removed from his office except by an order of the President passed after an address by each House of Parliament supported by a majority of the total membership of that House and by a majority of not less than twothirds of the members of that House present and voting has been presented to the President in the same session for such removal on the ground of proved misbehaviour or incapacity."

ஒரு நீதிபதி மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகளை இரு அவைகளிலும் விவாதித்து, மொத்த உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் ஆதரித்த பின்பே, நடத்தை தவறானது என்றாலோ, லஞ்சம் வாங்கினார், ஒழுக்கக்கேடாக நடந்து கொண்டார் என்றோ, திறமையற்றவர் என்றோ சந்தேகமற நிரூபிக்கப்பட்டிருந்தால்தான் அவரை நீக்க முடியும். ஆனால் அப்படி எந்தக் குற்றச்சாட்டுகளும் இல்லாமலேயே அவரை நீக்குவதற்கு இவர்கள் முறையிட்டிருக்கிறார்கள். மேலும், இவர் நீதிபதியான பிறகோ, தலைமை நீதிபதியான பிறகோ ஏதாவது சொத்து வாங்கி சேர்த்துள்ளாரா என்ற கேள்விக்கு, எந்த ஆதாரத்தையும் அவதூறுவாதிகளால் முன் வைக்க முடியவில்லை.

ஊழலை நாம் நியாயப்படுத்தவில்லை. நீதித்துறையும் அரசும் அதற்கான உண்மைகளைக் கண்டறியட்டும். ஆனால் அதற்கு முன்பு இவர்களே நீதிமன்றங்களாகி, தீர்ப்புகளை சொல்ல வேண்டிய தேவை என்ன? இதற்கு முன்பும் பல நீதிபதிகள் மீது சொத்துக் குவிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்தபோதும்; அண்மைக் காலத்தில் நீதிபதி ஒய்.கே. சபர்வால் மீது மிகப் பெரிய அளவில் குற்றச்சாட்டுகள் ஆதாரத்துடன் இருந்தபோதும் அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி இந்த நியாயவான்கள் வலியுறுத்தவில்லையே!

குஜராத் இனப்படுகொலைக்கு முதன்மைக் காரணமான நரேந்திர மோடி முதலமைச்சராக தொடர்ந்து நீடிக்க இந்த சமூகமும்/பத்திரிகையும் இன்னும் அனுமதித்துக் கொண்டிருக்கிறது. கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள காஞ்சி சங்கராச்சாரி தான் குற்றமற்றவர் என நிரூபிக்கப்படும் வரை, அவர் அந்தப் பதவியில் நீடிக்கக் கூடாது என்று எவரும் சொல்ல முன்வரவில்லை. இன்றைக்கு சட்டமன்ற/நாடாளுமன்ற/அமைச்சர்களாக/முதல்வர்களாக இருக்கக் கூடியவர்கள் மீது எத்தனையோ ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தபோதும் அவர்கள் பதவியில் நீடிக்க வாய்ப்பளிக்கப்படும்போது, நீதிபதி தினகரன் மட்டும் பதவியில் இருக்கவே கூடாது என்ற அளவுக்கு ஒரு நிர்பந்தத்தை சுமத்துவதற்கு, அவர் தலித் என்பதைத் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்?

இந்தியாவின் ஏற்றத் தாழ்வான படிநிலைப்படுத்தப்பட்ட சமூக அமைப்புதான் ஊழலுக்கு வழிவகுக்கிறது. சொத்தும் அதிகாரமும் சமமற்ற முறையில் பகிர்ந்தளிக்கப்படுவதற்கு சாதி அமைப்பே காரணமாக இருக்கிறது. ஊழலை எதிர்க்கின்ற எவரும் ஜாதியை எதிர்க்க முன்வராதது ஏன்? சாதி ஏற்றத்தாழ்வுகளை சீர் செய்ய முன்வராமல், அதன் வெளிப்பõடான ஊழலை மட்டும் ஒழிக்க முனைவது எந்தப் பலனையும் தராது

 

Pin It

மிகப் பரந்த இந்திய நிலப்பரப்பிலிருந்து பார்ப்பனிய இந்து மதத்தால், புத்த மதம் கடுமையாக ஒடுக்கப்பட்டுத் துடைத்தெறியப்பட்டதற்கு வரலாறு சாட்சியமாக இருக்கிறது. அப்படியெனில், இந்து கோயில்களை இடித்துத் தள்ளிவிட்டு பவுத்த விகார்களை அப்பீடங்களில் ஏன் நிறுவக்கூடாது? இவையனைத்தையும் இடித்துவிட்டு, மிகப் பழங்கால பழங்குடியினர் கோயில்களைக் கட்டக்கூடாதா? ஆயிரக்கணக்கான ஆண்டுகளில், கொடுமையான ஒடுக்கு முறையின் நீண்ட கால அவலம் முறியடிக்கப்படாமல் இருப்பது தலித்துகளுக்கும் பெண்களுக்கும் எதிரான வன்முறைகளால்தான் என்று சொல்ல முடியும். அப்படியெனில், அனைத்து ஆதிக்கச் சாதி ஆண்களும் மிகக் கடுமையான பழிவாங்கலை ஏன் எதிர்கொள்ளக் கூடாது?

ஒரு நாட்டு மக்களுடைய வரலாற்றின் மீது சில குறிப்பிட்ட நிகழ்வுகள், ஒரு நிலையான தழும்பை ஏற்படுத்தி விடுகின்றன. மத்திய காலப் பகுதியைச் சேர்ந்த ஒரு பழமையான மசூதி, டிசம்பர் 6, 1992 அன்று, ஒரு காட்டுத்தனமான கும்பலால் தகர்க்கப்பட்டதுதான், எனது தலைமுறையைச் சேர்ந்த பலருக்கும் புனிதமான ஒன்றை இழந்த ஒரு தருணமாக இருக்கிறது. வெற்றி ஆரவாரம் கொண்ட இளைஞர்களால் ஆன ஒரு பெருங்கூட்டம், வரலாற்றுச் சிறப்புமிக்க அம்மசூதியின் சுவர்களின் மீது ஏறி, அதன் கோபுரங்கள் மீது காவிக் கொடியை நட்டுவித்ததன் பிறகு, அதன் மூன்று "டூம்'களும் சரிந்து விழுந்தன. சில ஆண்டுகளுக்குப்பிறகு இந்நாட்டைத் தலைமை தாங்கி வழிநடத்திச் செல்லும் எண்ணத்தைக் கொண்டிருந்த அரசியல் தலைவர்களால் உத்வேகம் அளிக்கப்பட்டவர்கள் இவ்விளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு கால்பந்து அரங்கத்தைவிடப் பெரியதாய் இல்லாத, தூசு படிந்த சிறு நகரமாகிய அயோத்தியில் உள்ள ஒரு துண்டு நிலத்தின் "தலைவிதியே', காலனி ஆட்சிக்குப் பிந்தைய இந்தியாவின் குறுகிய காலத்தில், பல பத்தாண்டுகளுக்கும் மேலாக, தேசிய அரசியலின் பெரும்பகுதியை ஆக்கிரமித்திருந்தது. அரசுகள் எழுந்தன, வீழ்ந்தன; தெருக்களில் அவ்வப்போது ரத்தம் பெருக்கெடுத்து ஓடியது; ஆயிரக்கணக்கில் உயிர்கள் பறிக்கப்பட்டன, வீடுகள் இடிக்கப்பட்டன இவையனைத்தும் ஒரு தனிப்பட்ட கசப்பான நிலத்தகராறை ஒட்டியே நிகழ்ந்தன. முதலாவது மொகலாய அரசரான பாபரால் 1527 ஆம் ஆண்டு அந்த இடத்தில் கட்டப்பட்ட மசூதியை இருக்க அனுமதிப்பதா அல்லது அதற்குப் பதிலாக அதே இடத் தில் பெரிய கோயில் ஒன்றைக் கட்டுவதா என்பதுதான் பிரச்சனையாக இருந்தது. “ஒரு மசூதியைக் கட்டுவதற்காக, அந்தஇடத்தில் இருந்த ராமன் கோயிலை பாபர் இடித்து விட்டார்'' என்றும், “அம்மசூதியை இடித்து விட்டு அதற்குப் பதில் ஒரு பெரிய ராமன் கோயிலை கட்டுவது தேசியப் பெருமைக்கு அவசியமான ஒன்றாக இருக்கிறது'' என்றும் வலதுசாரி இந்து தேசியவாதக் கருத் தின் ஒரு பெரும் பிரிவு உரிமை கோரியது.

மிக தொடக்கக் காலத்திலேயே, இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போதே விதிகள் வகுக்கப்பட்டுவிட்ட ஒரு போருக்கு உயிரூட்ட, பாபர் மசூதி ஒரு வலிமையான குறியீடாகப் பரிணாமம் பெற்று, இந்து தேசியவாத அமைப்புகளால் பயன்படுத்தப்பட்டது. பகை என்பது, ராமனைப் பின்பற்றுபவர்களுக்கும், அல்லாவைப் பின்பற்று பவர்களுக்கும் இடையில் ஒரு சர்ச்சைக்குரிய இடம் குறித்த உரிமை கோரலால் எழுந்தது அல்ல. தனது குடிமக்கள் அனைவரும் தங்கள் நம்பிக்கைகளை மேற்கொள்வதற்கும், அதைப் பிரச்சாரம் செய்வதற்கும் சுதந்திரம் கொண்டவர்களாக இருக்கும் நாடாக இது இருக்க வேண்டுமா? சட்டத்தின்படி அவர்கள் அனைவருக்கும் சம உரிமைகளும், பாதுகாப்பும் உத்தரவாதமும் அளிக்கப்பட்ட நாடாக இந்நாடு இருக்க வேண்டுமா? அல்லது சிறுபான்மை மதங்களைப் பின்பற்றும் மக்கள் இரண்டாம் தர குடிமக்களாக, பண்பாட்டு ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் கீழானவர்களாக நிரந்தரமாக இருக்க வேண்டுமா என சுதந்திர இந்தியாவின் தன்மை குறித்து எழுந்த வழக்குதான் அது.

வன்முறை, பிரிவினை ஆகியவற்றின் வேதனைகளுக்கு இடையில்தான் இந்தியா சுதந்திரத்தைப் பெற்றது. பிரிவினைக் கலவரங்களின்போது பத்து லட்சம் பேர் உயிரிழந்தனர்; ஒரு கோடி மக்கள் தங்களது மூதாதையரின் நாட்டிலிருந்து துரத்தியடிக்கப்பட்டனர். இந்தியாவின் மிகவும் ஒடுக்கப்பட்ட சாதிகளின் தலைவரான டாக்டர் அம்பேத்கரால் எழுதப்பட்ட மதச்சார்பற்ற, ஜனநாயக அரசமைப்புச் சட்டத்திற்கு ஆதரவாகப் புதிதாக சுதந்திரம் அடைந்த இந்தியக் குடியரசின் அரசமைப்புச் சட்ட வரைவுக் குழு வாக்களித்தது. பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்த முஸ்லிம்களுக்கு நியாயமான ஏற்பாட்டைச் செய்வது குறித்துதான் காந்தியின் கடைசிப் போராட்டம் இருந்தது. இது, சில அதிதீவிர இந்துத்துவ அமைப்புகளின் உறுப்பினர்களுக்கு எரிச்சலூட்டியது. காந்தியின் உயிரை அவர்கள் பறித்து விட்டனர்.

இந்தியாவிலுள்ள பல்வேறு மத நம்பிக்கைகளைச் சார்ந்த மக்கள், காந்தியின் படுகொலையால் குலைநடுங்கிப் போயினர். அந்த நடுக்கம் பதினைந்து ஆண்டுகளுக்கு வகுப்பு ஒற்றுமை உடையாமல் பாதுகாக்கப் போதுமானதாக இருந்தது. காந்தியின் படுகொலையில் பங்கு வகித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் அரசியல் அணியான "ஜனசங்'கும் அந்த காலம் முழுமைக்கும் இந்தியாவின் அரசியல் மற்றும் சமூக வாழ்க்கையின் விளிம்பிலேயே கிடக்க வேண்டியிருந்தது. 1970களின் மய்யப் பகுதியில் நடைபெற்ற நெருக்கடி நிலைக்கு எதிரான போராட்டத்தில் பங்கெடுக்க அனுமதிக்கப்பட்டபோது தான், அரசியல் மதிப்பில் ஒரு சிறிய அளவை அது திரும்பவும் பெற முடிந்தது. 1984இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் கூட, பாரதிய ஜனதா கட்சி வெறும் நான்கு நாடாளுமன்றத் தொகுதிகளில்தான் வெற்றி பெற்றது. பெரும் பான்மையான இந்து உணர்வைத் திரட்டுவதற்கு உகந்த ஒரு காரணத்தையும், குறியீட்டையும் அது தேடிக் கொண்டிருந்தது. பாபர்மசூதி பிரச்சனைதான் அதற்குப் பொருத்தமானது என்று அது அடையாளம் கண்டது.

1949 இல் ராமன் சிலைகள் திருட்டுத் தனமாக பாபர் மசூதிக்குள் வைக்கப்பட்டன. மசூதிக்குள் இருந்து அவற்றை அப்புறப்படுத்த வேண்டுமென்ற நேருவின் உத்தரவுக்குக் கீழ்ப்படிய, அப்போது மாவட்ட நீதிபதியாக இருந்த கே.கே. நாயர் மறுத்து விட்டார் (பின்னாட்களில் நாயர் "ஜனசங்'கில் இணைந்து, அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் ஆனார்). அங்கு முஸ்லிம்களின் வழிபாடு தடை செய்யப்பட்டது. ஆனால், இந்துக்களின் வழிபாட்டுக்கு வரம்புகளுடன் கூடிய உரிமைகள் வழங்கப்பட்டன. 1986 இல் வெளியிட்ட ஒரு தலைப்பட்சமான நீதிமன்றத் தீர்ப்பினாலும், மத்தியில் காங்கிரஸ் அரசு அதற்கு இணக்கமாக இருந்ததாலும், கோயிலின் கதவுகள் திறக்கப்பட்டு, இந்துக்களின் வழிபாட்டுக்கு முழு உரிமையும் வழங்கப்படுவதற்கு வழிகோலப்பட்டது.

அயோத்தியில் கோயில் கட்டுவதற்காக கிராமங்களில் இருந்தும், நகரங்களில் இருந்தும், செங்கற்களைச் சேகரித்து அனுப்பும் ராம்சிலா நிகழ்வை, நாடு தழுவிய அளவில் 1989இல் ஆர்.எஸ்.எஸ். தொடங்கியது. இப்பிரச்சாரத்திற்கான வெகுமக்களின் ஆதரவு அலை மிகப் பெரிய அளவில் இருந்தது. மத்தியப் பிரதேச மாநிலத்திலுள்ள ஒரு சிறு நகரமான கார்கோனில் அப்போது நான் மாவட்ட நீதிபதியாகப் பணியில் அமர்த்தப்பட்டிருந்தேன். தீய உள்நோக்கம் கொண்ட இப்பிரச்சாரம் வகுப்பு வாதத்தை எவ்வளவு மோசமாகப் பெருக்கியது என்பதை நான் நேரடியாகப் பார்த்தேன். பல நகரங்களில், மக்கள் நன்கொடையாக அளித்த செங்கற்களோடு திரண்ட வன்முறைக் கும்பல், முஸ்லிம்களுக்கு எதிரான அடாவடியான முழக்கங்களை எழுப்பிக் கூச்சலிட்டது, அதனால் கலவரம் வெடித்தது, உயிர்கள் பறிக்கப்பட்டன. வீடுகள், குடியிருப்புகள், மசூதிகள் காலியாக்கப்பட்டன. நாடு முழுவதும் கிட்டத்தட்ட 108 நகரங்கள் மற்றும் மாநகரங்களின் அந்த இருண்ட நாட்களில், ஊரடங்கு நடைமுறையில் இருந்ததை இப்போது நினைவு கூர்கிறேன்.

பாரதிய ஜனதா கட்சித் தலைவர் எல்.கே. அத்வானி, 1990 செப்டம்பரில் நடத்திய ரதயாத்திரையின் மூலம் வகுப்புவாதப் பிரிவினை மேலும் தீவிரம் அடைந்தது. சோமநாதபுரம் (1026 இல் படையெடுப்பாளர் கஜினி முகம்மதுவால் கோயில் இடிக்கப்பட்டது இந்நகரத்தில்தான் என்பதால், மதரீதியில் மிகவும் உணர்வைத் தூண்டக் கூடியதாக இருக்கும் என்பதாலேயே இந்நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டது) தொடங்கி அயோத்தி வரை, ஏறத்தாழ பத்தாயிரம் கிலோமீட்டர்கள் பயணப்பட்டபோது அதன் வழியெங்கும் மதவெறியால் சிந்தப்பட்ட ரத்தம் பெருக்கெடுத்து ஓடியது, நாடு முழுவதிலும் உள்ள முஸ்லிம் குடிமக்களின் நெஞ்சில் அச்சத்தை ஏற்படுத்தியது.

அந்த நாட்களில் பா... எழுப்பிய முழக்கங்கள் திகைப்படைய வைப்பவையாக இருந்தன. முஸ்லிம்கள் குறித்து வைக்கப்பட்ட முழக்கம் இது : “துலுக்கனுக்கு இருப்பது ரெண்டு இடம்தான். எது வேண்டும் உனக்கு? பாகிஸ்தானா? கபர்ஸ்தானா?'' (கல்லறைத் தோட்டம்) முஸ்லிம்களுக்கு எதிரான கலகத்தில் இறங்க போலிஸ்காரர்களுக்கு வெளிப்படையான அழைப்புகள் விடப்பட்டன. “இந்துவும் இந்துவும் அண்ணன் தம்பிகள்; இடையில் எங்கேடா வந்தது சீருடை?'' மசூதி இருக்கும் அதே இடத்தில்தான் கோயில் கட்டப்பட வேண்டும் என்ற உறுதிமொழிதான் அந்த இயக்கத்தின் பொது கீதமாக இருந்தது.

ராமன் பிறந்த துல்லியமான இடம் எது? அல்லது அவன் உண்மையிலேயே பிறந்த வரலாற்று மனிதன்தானா? என்பனவற்றை எல்லாம் உறுதி செய்வது சாத்தியமற்றது என்ற உண்மை எல்லாம் ராமன் கோயில் இயக்கத்தின் தலைவர்களுக்கு தேவையற்றவையாகத் தோன்றின. நாட்டின் பெரும்பான்மை மக்கள் தொகையினராகிய இந்துக்களின் நம்பிக்கை சார்ந்த விஷயம் இது. எனவே, இந்திய முஸ்லிம்களும், நீதிமன்றங்களும், சட்டமன்றங்களும், மதசார்பற்ற ஜனநாயகவாதிகளும் அவர்களின் மத நம்பிக்கையை மதித்தாக வேண்டும் என அவர்கள் அறிவித்தனர். அந்த இடத்திலிருந்து மசூதியை அகற்றிவிட்டு, அதே இடத்தில் மொகலாயரின் வெற்றிக்கு முன்பு வரை இருந்தது என நம்பும் ராமன் கோயிலை திரும்பவும் கட்டுவது என்பது அவர்களைப் பொருத்தவரை, தேசியக் கறையை சரி செய்யும் செயலாகும். இந்து மக்களின் வரலாற்றுத் தோல்வியையும், அவமானத்தையும் பழிதீர்த்து நேர் செய்யும் செயலாகவும் அது இருக்கும் என அவர்கள் அறிவித்தனர்.

வரலாற்று ரீதியாகவும், சட்டப்படியும் அவர்களது குற்றச்சாட்டுகள் மிகவும் பலவீனமானவை என்பதெல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டாகவே தோன்றவில்லை. உண்மையில், மசூதி கட்டுவதற்காக ராமன் கோயில் இடிக்கப்பட்டது என்பதை நிறுவ தொல்லியல் சான்றுகளோ, வரலாற்றுச் சான்றுகளோ எதுவும் இல்லை என பெரும்பான்மையான சார்பற்ற அறிஞர்கள் கூறுகிறார்கள். இவ்வழக்கு நாட்டிலுள்ள மிக உயர்ந்த நீதிமன்றத்தின் பரிசீலனைக்காக அனுப்பப்பட்டது. ஆனால் வழக்கின் தீர்ப்பு ஒருவேளை தங்களது உரிமை கோரலுக்கு எதிராக அமைந்து விடுமோ என்ற அச்சத்தில் இந்துத்துவாவின் தலைமை, நீதிமன்றத்தில் இவ்வழக்கை தீர்த்துக் கொள்வதற்கு உடன்பட மறுத்துவிட்டது.

ஏனெனில், மதச்சார்பற்ற ஜனநாயகத்தின் அடிப்படையான கருத்தையே மறுதலிக்கும் விதமாக, பெரும்பான்மையினரின் நம்பிக்கைகளுக்கு சட்டம் கூட கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என அவர்கள் நம்பினார்கள். ராமன் பிறந்த இடம் குறித்த நம்பிக்கையில் கூட, இந்துக்களுக்கு இடையில் கருத்தொற்றுமை கிடையாது. அயோத்தியில் கூட, தங்களது விருப்பத்திற்குரிய கடவுளான ராமன் பிறந்த இடம் இதுதான் என உரிமை கொண்டாடும் பல்லாயிரக்கணக்கிலான கோயில்கள் உண்டு. எல்லாவற்றுக்கும் மேலாக ஆட்சியில் நீதி, கருணை ஆகியவற்றின் குறியீடாகவே ராமன் இருக்கிறானேயன்றி, வன்முறை, ஓரவஞ்சகம், அச்சம் ஆகியவற்றின் மூலம் ஆட்சி செய்வதன் குறியீடாக அவன் இல்லை என நம்புவதால், அயோத்தியின் பெரும்பான்மையான மக்கள் தொடக்கத்தில் இருந்தே ராமன் கோவில் பிரச்சனையை எதிர்த்து வந்தனர்.

வரலாற்றில் நடந்த தவறுகளுக்காக இப்போது நேர்படுத்துவதும், பழி வாங்குவதும் சரியானதுதான் என்கிற இந்து தேசியவாதிகளின் அடிப்படைக் கருத்தை, பெரும்பான்மையான இந்துக்கள் மறுக்கிறார்கள். இன்றைய மக்கள் தங்களது கடந்த கால வரலாறுகளின் சுமைகளை ஏன் சுமக்க வேண்டும்? அவற்றுக்காக நாம் ஏன் பரிகாரம் தேட வேண்டும்? சரி, அப்படித்தான் செய்யப்பட வேண்டும் என்றே வைத்துக் கொண்டோம் என்றாலும் கூட, இவ்வாறான சுமைகள் குறிப்பிடப்பட்ட சிலருக்கு மட்டும் என குறுக்கப்பட்டதாக ஏன் இருக்க வேண்டும்?

எடுத்துக்காட்டாக, மிகப் பரந்த இந்திய நிலப்பரப்பிலிருந்து பார்ப்பனிய இந்து மதத்தால் புத்த மதம் கடுமையாக ஒடுக்கப்பட்டுத் துடைத்தெறியப்பட்டதற்கு வரலாறு சாட்சியமாக இருக்கிறது. அப்படியெனில் இந்து கோயில்களை இடித்துத் தள்ளிவிட்டு, பவுத்த விகார்களை அவ்விடங்களில் ஏன் நிறுவக்கூடாது? இவையனைத்தையும் இடித்துவிட்டு, மிகப் பழங்கால பழங்குடி யினர் கோயில்களைக் கட்டக்கூடாதா? ஆயிரக்கணக்கான ஆண்டுகளில், கொடுமையான ஒடுக்குமுறையின் நீண்ட கால அவலம் முறியடிக்கப்படாமல் இருப்பது, தலித்துகளுக்கும் பெண்களுக்கும் எதிரான வன்முறைகளால்தான் என்று சொல்ல முடியும். அப்படியெனில், அனைத்து ஆதிக்கச் சாதி ஆண்களும் மிகக் கடுமையான பழிவாங்கலை ஏன் எதிர்கொள்ளக் கூடாது?

டிசம்பர் 6, 1992 அன்று நாட்டின் நெடிய மூலைமுடுக்குகளில் இருந்தெல்லாம் திரட்டி வரப்பட்ட இளைஞர்கள், பாபர் மசூதிக்கருகில் குழுமியபோது, செயல் அதன் இறுதிக் கட்டத்தை அடைந்தது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு, நீதிபதி லிபரான் கமிஷன் பா... மற்றும் ஆர்.எஸ்.எஸ்.இன் ஒட்டுமொத்தத் தலைமையையுமே குற்றஞ்சாட்டி இருக்கிறது. “சர்ச்சைக்குரிய கட்டடத்தை தகர்த்துவிட்டு, அந்த இடத்தில் கோயிலைக் கட்டுவதற்கு இத்தலைவர்கள் கூட்டாக துணிகர முயற்சியில் இறங்கினார்கள்'' என்கிறது அக்கமிஷன். காங்கிரஸ் பிரதமர் நரசிம்மராவ் தலைமையிலான மய்ய அரசு, 36 மணி நேரத்திற்கும் மேலாக, மசூதியை தரைமட்டமாக்கியதை மட்டுமல்லாமல், அவ்விடத்தில் ஒரு தற்காலிகக் கோயில் எழுப்பும் வரைக்கும் வெட்க

மின்றி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது அரசமைப்புச் சட்டத்தையும், நாட்டின் சட்டத்தையும் பாதுகாப்பதற்கு பதிலாக, அதிதீவிர இந்து தேசியவாதிகளை திருப்திப்படுத்தும் அவர்களின் வழக்கமான கொள்கைக்கு பாதகமில்லாமல் இப்போதும் நடந்து கொண்டார்கள் என்று சொல்லலாம்.

பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு நடந்த மிகப்பெரிய வகுப்புக்கலவரத்தின் மோசமான ஆவேச வெறி நாடு முழுவதும் பரவத்தொடங்கி, 2002 குஜராத் இனப்படுகொலை வரைக்கும் தொடர்ந்து ஆங்காங்கே அவ்வப்போது நடந்து கொண்டிருந்தது.

ராமன் கோயில் இயக்கத்தின் வெறுப்பு மற்றும் பிரிவினையை மய்யப்படுத்திய இப்பிரச்சாரத்தின் மூலம், பாரதிய ஜனதா கட்சி மிகப்பெரிய அரசியல் விளைச்சலை அறுவடை செய்தது. பல சந்தர்ப்பவாத மதச்சார்பற்ற அரசியல் கட்சிகளின் கூட்டணியுடன் 1990களின் இறுதியில் முதன்முறையாக அது மய்ய அரசை அமைப்பதற்கு வழிகோலியது. மிக முக்கியமானதும், நெருக்கடியானதும் ஆன இந்த ஆண்டுகளில், இந்திய ஜனநாயகத்தின் ஒவ்வொரு நிறுவனமும் இந்திய மக்களை கைவிட்டு விட்டன. மாநில மொழிகளில் வெளிவரும் உள்ளூர் நாளிதழ்கள் கலவரக்காரர்களுக்கு "ராம பக்தர்'கள் என்று புகழாரம் சூட்டின. மதக் கலவரத்தைத் தூண்டியதிலும், இந்தியாவின் மதசார்பற்ற ஜனநாயகத்தை எதிர்த்த பிரச்சாரத்தைத் திட்டமிட்டதிலும், தலைமை தாங்கி நடத்தியதிலும் அத்வானி போன்றவர்களின் பங்கை மூடி மறைத்து விட்டு, அவரைப் போன்றவர்களை மிதவாதிகள் என மறுகண்டுபிடிப்புச் செய்து முன்னிறுத்துவதில் தேசிய ஊடகங்கள் துணிந்து ஈடுபட்டன.

1992இல் நடந்த குற்றங்களில் ஈடுபட்டவர்களிலோ அல்லது அதைத் தொடர்ந்து நடந்த கலவரங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளிலோ ஒருவரைக் கூட நீதிமன்றங்கள் தண்டிக்கவில்லை. பா... மற்றும் ஆர்.எஸ்.எஸ். ஆகியவற்றின் தலைவர்கள் குற்றத்தில் வகித்த பங்கை லிபரான் கமிஷன் உறுதி செய்தது. ஆனால் எந்த கிரிமினல் நடவடிக்கையையும் அவர்கள் மீது எடுக்க அது பரிந்துரைக்கவில்லை. காங்கிரஸ் தலைமையிலான மய்ய அரசு இப்பரிந்துரைகளை அவசர அவசரமாகப் பரிசீலனையின்றி ஏற்றுக் கொண்டது. அரசியல் வெறுப்பினால் இழைக்கும் குற்றங்களைச் சூழ்ந்துள்ள தண்டனை குறித்த அச்சம் தேவையற்ற நிலை, இந்நாட்டில் ஒரு மரபாகத் தொடர்வதன் தொடர்ச்சியாகவே இது நடந்துள்ளது. சர்ச்சைக்குரிய நிலத்தின் மீதான உரிமை கோரல் தொடர்பாக சட்டப்பூர்வ உத்தரவுகள் பிறப்பிக்கவும், பிரச்சனைகளைத் தீர்ப்பதில் சட்டத்தின் முதன்மையை நிலைநாட்டவும் உச்ச நீதிமன்றம் மறுக்கிறது.

சகிப்புத்தன்மை, பன்மைத்துவம் ஆகிய பழமையான மரபுகளைத் தோற்கடித்து, வெறுப்பு மற்றும் பிரிவினை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கட்டி எழுப்பப்பட்ட அரசியலே பத்தாண்டுகளுக்கும் மேலாக வெற்றி பெறும் என்பதை, பாபர் மசூதி இடிப்பின் மூலம் எழுப்பப்பட்ட புழுதி மண்டலம் உணர்த்துவதாக இருந்தது. நவீன சட்ட அமைப்புகள் வரையறுத்த வரையறைகள் மற்றும் சுதந்திரமடைந்த பிறகு இந்திய மக்கள் தமக்குத் தாமே ஏற்படுத்திக் கொண்ட மதச்சார்பற்ற, ஜனநாயக அரசமைப்புச் சட்டம் ஆகியவற்றைத் தோற்கடித்து விட்டு, ஒரு கும்பலின் காட்டுத்தனமான வன்முறை வெற்றி பெறுவதை அது குறிக்கிறது.

எந்தக் கடவுளை வழிபட நீ தேர்ந்தெடுக்கிறாய் என்பதோ, எந்தக் கடவுளையும் வழிபட மாட்டேன் என்பதோ, ஒரு பெரிய விஷயமாகவே இந்நாட்டில் இருக்காது என்றும், இந்தச் சாதியையோ, அந்தச் சாதியையோ சார்ந்தவராக இருப்பதுவோ, ஆணாக இருப்பது அல்லது பெண்ணாக இருப்பது, அல்லது பணக்காரனாக இருப்பதோ, பராரியாக இருப்பதுவோ இந்நாட்டில் எந்த வேறுபாட்டையும் ஏற்படுத்தாது என்றும், நாட்டின் சட்டத்தால் சமமானப் பாதுகாப்புக்கு உத்திரவாதப்படுத்தப் பட்டவராகவும், முழு அளவுக்குச் சமமான மனிதராகவும், குடிமகனாகவும் நீ இருப்பாய் என்றும் இந்திய மக்கள் தங்களில் ஒருவருக்கு ஒருவர் செய்து கொண்ட உறுதிமொழிக்கு நம்பிக்கைத் துரோகம் செய்வதை அது குறித்தது.

இடிக்கப்பட்ட மசூதியின் இடிபாடுகளுக்குக் கீழே இந்தியா என்ற கருத்தாக்கம் வீழ்ந்து கிடக்கிறது. ஆனால், கடைசியில் இந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் பிற மதங்களைச் சார்ந்தவர்களைக் கொண்ட இந்தியாவின் சாதாரண பொதுமக்கள், வெறுப்பு மற்றும் பிரிவினையின் அரசியலுக்கு எதிராக 2004, 2009 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத் தேர்தல்களில் உறுதியுடன் வாக்களித்தனர். ராமன் கோயில் இயக்கத்தின் பேரபிமானிகள் கூட வாக்காளர்களைத் திரட்டுவதற்கான சக்தியை ராமன் கோயில் இழந்து விட்டது என ஒத்துக் கொள்கிறார்கள்.

காட்டுத்தனமான கும்பலால் 1992 இல் தரைமட்டமாக்கப்பட்ட மத்தியகாலப் பகுதியைச் சேர்ந்த மசூதியின் இடிபாடுகளின் கீழிருந்து இந்தியா என்கிற கருத்தாக்கத்தின் துண்டுகளை, இந்தியாவின் பராரிகளாக்கப்பட்ட மக்கள் கண்டெடுத்திருக்கிறார்கள். பழமையானதும் வேறுபாடுகள் செழித்ததுமான இந்நாட்டின் சேர்த்துக் கொள்ளும் தன்மையுள்ள, பன்மைத்துவ மரபுகளை மறுபடியும் விளையச் செய்தவர்கள் அவர்களே.

(ஹர்ஷ் மந்தர், இந்தியாவின் மிக முக்கியமான மனித உரிமைப் போராளிகளில் ஒருவர். 1980 இல் அய்..எஸ். ஆன இவர், முசோரியில் உள்ள அய்..எஸ். அகாதமியில் துணை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். அதற்கு முன்பு மாவட்ட ஆட்சியராகவும், தேசிய எஸ்.சி./எஸ்.டி. நிதி உதவிக் கழகத்தின் மேலாண்மை இயக்குநராகவும் பணியாற்றி இருக்கிறார். குஜராத் இனப்படுகொலை நடைபெற்ற சில நாட்களிலேயே அய்..எஸ். பணியில் இருந்து கொண்டே "டைம்ஸ் ஆப் இந்தியா' நாளேட்டில் இவர் எழுதிய மிக முக்கியமான ஒரு கட்டுரை பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இக்கட்டுரையில் குஜராத் இனப்படுகொலை திட்டமிட்ட ஒன்றே என்பதை ஆதாரங்களுடன் விளக்கி இருந்தார். அதோடு மட்டுமின்றி, இப்படுகொலைகளைக் கண்டித்து தன்னுடைய அரசுப் பணியையும் உதறினார். இவர் "தி இந்து' (6.12.09) நாளேட்டில் எழுதிய கட்டுரையே இங்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது)

-தமிழில் : . மதிவண்ணன்

Pin It

 

வெறுமைச் சுழல்காற்று பரவும்

வாழ்வின் துயரங்கள் சேர்ந்து

ஒரு விளையாட்டினை ஆடுகின்றன

அச்சுறுத்தல்களுடன் தொடங்கும் அவ்விளையாட்டு

வெம்மையாய் வயல்களிலாடி

நிலங்களைக் காயடிக்கின்றது

அறுவடைக்குப் பிறகான தானியக்கிடங்குகள்

பதர்களால் நிரம்பியிருக்கின்றன

பொய்மணிகளைத் தேடி அலுத்தவர்கள்

வீடு திரும்பாமை குறித்த கவலைகளோடு

இருந்தன பூட்டப்படாத வீடுகளின் அடுப்புகள்

 

குழந்தைகளின் சிலேட்டுகளைப் பறித்து

அவர்களின் எழுத்துகளை ஆழப்புதைய வீசுகின்றது

அவ்விளையாட்டு

வயல்களுக்குள்ளும்

வரப்போரங்களிலும்

மூக்குத்திப் பூக்கள் பூத்த செடிகள் நிறைந்த

மைதானத்திலுமிருந்த வண்ணத்துப் பூச்சிகளைக்

கொன்றும் நீண்டவால் தும்பிகளின்

தலைகளைத் திருகியும் கொடூரமாகிறது விளையாட்டு

இறைந்திருக்கும் வண்ணத்துப் பூச்சிகளின்

இறக்கைகளை மிதித்துக் கொண்டே

இற்றுப்போன டயர் சக்கரங்களை

தட்டிக் கொண்டு ஓடுகின்றனர் குழந்தைகள்

 

களத்தில் உதறப்பட்ட தாள்களும்

குச்சிகளாகிப் போன தாவரங்களும்

அடுப்பெரிக்கும் எரிபொருளாகின்றன

உணவுத் தானியங்கள் ஏதுமின்றி

வெப்பமேறி வெடிக்கின்ற சட்டிகள்

 

விளையாட்டு தொடர்கிறது

அபத்தங்களின் காய்களை நகர்த்தி

 

விளையாட்டு என்பதை

வறுமை என்றும் சொல்லலாம் அல்லது

வளர்ந்த நாடுகள் என்றும்கூட

-யாழன் ஆதி

Pin It

உட்பிரிவுகள்