dmlogo

தொடர்பு முகவரி: எஸ்-5, மகாலட்சுமி அடுக்ககம், 13/26, குளக்கரை சாலை, சென்னை - 600 0034. பேச: 044 - 2822 1314

 

கூத்துக்கு மிகவும் தேவையானவை மிருதங்கமும் முகவீணை யும்தான். ஆதியிலே ராகத்த எடுத்து ஆலாபன பண்ணி அடவுகட்டி விருத்தம் வச்சி பாட்ட ஆரம்பிச்சி, ஆடி முடிக்கிற வர தாளத்த உடாம அடிச்சிக்கிட்டே இருக்கணும். அதுவர மூச்சே உடமுடியாது மிருதங்ககாரருக்கு. அதே மாதிரிதான் முகவீணையும். மூச்சியே உட முடியாது. இத, யாரால செய்ய முடியும்? தலித்துகளால்தான் முடியும்.''

பத்து கலைமாமணி விருதுக்குத் தேவையான கலைத்தன்மை, தலித் கூத்துக் கலைஞர்கள் ஒவ்வொருவருக்கும் உண்டு என்றும், ஆனால் அக்கலைஞர்கள் தலித்துகள் என்பதாலேயே சுரண்டப்படுகிறார்கள் என்றும், கூத்தின் அனைத்து வகைமைகளையும் தெரிந்து வைத்திருக்கும் அவர்கள், ஏதோ ஒரு வகையில் மட்டுமே பரிச்சயம் உள்ள சாதி இந்துக்களின் ஆளுமையினால் மறைக்கப்படுகிறார்கள் என்றும் கூறுகிறார், கள அனுபவமும் கலை அனுபவமும் எழுத்தியல்பும் கொண்ட ஹரிகிருஷ்ணன். அண்மைக் காலமாக, இலக்கிய உலகில் இவர் "மணல் வீடு' ஹரிகிருஷ்ணன் என்றே அறியப்படுகிறார்.

இலக்கியத்திற்கான சிறு பத்திரிகைத் தளம், தலித்துகளுக்கு மிகக் குறைந்த வெளியையே வைத்திருக்கிறது. அதில் அவர்கள் ஆக்கப் பங்காளிகளாக இருக்கிறார்களே ஒழிய, அதைத் தீர்மானிக்கும் பொறுப்பில் இருந்ததே இல்லை. தலித்துகளே நடத்திய சில பத்திரிகைகளை இந்த கருத்திலிருந்து தவிர்த்துவிடலாம். தான் பணம் போட்டு இதழை வெளிக்கொணர்ந்தும் அதில் தான் நினைத்ததை எழுத முடியவில்லை. அதற்கு வாய்ப்பு இல்லாமலேயே இருந்தது என்று கூறும் ஹரி, “சிற்றிதழ்களில் நமக்கான இடம் தனியாக இருக்கும். அங்கேயே இருக்கலாம்; எழுதலாம்; ஆனால் வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டும். இது எனக்கு வேண்டும், இதை எழுதலாம் என்று கேட்டீர்கள் என்றால் வெளியேற்றப்படுவீர்கள்'' என வாக்குமூலம் தருகிறார். தற்பொழுது "மணல் வீடு' என்னும் சிறு பத்திரிகையை அப்படியான முழு சுதந்திரத்தோடு கொண்டு வருகிறார்.

"மயில் ராவணன்' என்னும் சிறுகதைத் தொகுப்பின் மூலம் தமிழ்க் கதையுலகில் தனியிடம் பிடித்திருப்பவர் ஹரிகிருஷ்ணன். மக்கள் மொழியில் கதை சொல்லுதல் என்ற பெயரில் தன் சாதி சார்ந்த அல்லது தங்கள் சாதிக்கு இணையான சாதியினரின் கதைகளைச் சொன்னவர்கள் பெரியவர்களாக மதிக்கப்படும் தமிழிலக்கியச் சூழலில், உண்மையாக மக்கள் பேசும் மொழியிலேயே கதை சொல்பவர் ஹரி.

1979 – 80களில் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் நடந்த இந்து முஸ்லிம் கலவரத்தில், ஹரிகிருஷ்ணனின் தந்தை முஸ்லிம்களை ஆதரித்தார் என்பதால், அவர்களுடைய உறவுக்காரர்களாலேயே அவர்களின் வீடு கொளுத்தப்பட்டிருக்கிறது. தன்னுடைய ஆறு குழந்தைகளையும் மனைவியையும் அழைத்துக் கொண்டு, சேலம் ஏர்வாடியில் சென்று குடியேறியிருக்கிறார். தீவிரமாக வாசிக்கும் பழக்கமுடைய அவருடைய அண்ணனின் புத்தகங்களைப் படிக்க நேர்ந்த பிறகு, அந்நூல்களை எழுதிய எழுத்தாளர்களுக்கு கடிதம் எழுதும் வழக்கம் இவருக்கு ஏற்பட்டிருக்கிறது. அப்படி எல்லாருக்கும் கடிதம் எழுதியுள்ளார் ஹரி. இவருடைய கடிதத்தைப் படித்துவிட்டு சென்னைக்கு வரச் சொன்ன ராஜம்கிருஷ்ணன், இவரிடமுள்ள எழுத்தாற்றலை அடையாளம் கண்டு எழுதச் சொன்னதாகவும், பல இதழ்களை அறிமுகம் செய்ததாகவும், தான் முதன்முதல் எழுதிய கதை அவராலேயே வெளிவந்ததாகவும் கூறுகிறார்.

1996 இல் அவர் வாழும் பகுதியான ஏர்வாடியில் தேனிரும்பு ஆலை வருவதற்கு 1500 ஏக்கர் நிலத்தினை அரசு கையகப்படுத்தியது. அதில் நிலமிழந்து, வாழ்விழந்தோரை முன்வைத்து அக்கதை எழுதப்பட்டது என்பதை நினைவு கூர்கிறார். அதற்குப் பிறகு அவருடைய கதைகள் ஒரு சிற்றிதழில் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருந்தது. மக்கள் மொழியிலேயே கதை ஒன்றை எழுதி அனுப்ப, என் கதைகளைத் தொடர்ந்து வெளியிட்ட அவ்விதழ், இந்தக் கதையை வெளியிட மறுத்துவிட்டது. அப்போதுதான் இந்த மொழிநடையிலேயே எழுதுவது எனத் தீர்மானித்தேன்'' என்கிறார் ஹரிகிருஷ்ணன்.

ஹரியின் தொகுப்பில் உள்ள கதைகளின் தலைப்புகள் மக்களின் சொல்லாடல்களிலேயே அமைக்கப்பட்டிருப்பது, அவருடைய தனித்தன்மை. வழக்கமாக கதையை மக்களின் மொழியில் எழுதினாலும் தலைப்பை தன் இலக்கிய ஆளுமையை வெளிப்படும் விதமாகவே வைப்பார்கள் : "குன்னூத்தி நாயம்', "ஊருவாயி', "குடிநாசுவன்', "உத்தமியோலம்', "பெத்தவ', "மூணுத்தலக்கட்டு' என கதைத் தலைப்புகள் அமைந்திருக்கும். ஒவ்வொரு கதையும் ஒரு விளிம்பு நிலை வாழ்க்கையைச் சொல்லும் ஓவியமாகவே இருக்கும்.

ஏண்டா கேனா, எள நேரத்துல வர்றதுக்கு உனக்கு என்றா கேடு? வெய்ய நேரத்துல வந்து ஏண்டா எந்தாலிய அறுக்கற? இனுமேட்டு நீ எப்ப செரைக்கிறது, நானு எந்நேரந் தண்ணிய வாத்துக்கிட்டு சோறு குடிக்கிறது''ன்னு பண்ணாடிக்கு அவனப் பாத்ததும் பாக்காத மின்னச் சிர்ன்னு நேபாளஞ் சீறிக்கிட்டு வந்தது...... அப்படியே சைசாப்பேசி நைசுபண்டி கவுண்டரக் குந்த வெச்சி,

கத்தியத் தீட்டி மொவறயில வச்சாம்பா. இருந்தாப்பில இருந்து பண்ணாடி சிவுக்குனு எழுந்து தென்ன மரத்துல சாஞ்சி நின்னு வெடுக்குனு கோமணத்த அவுத்துட்டு, “அங்க கெடந்தா கெடக்கட்டும், அதவுடுறா, அப்புறம் பாத்துக்கலாம். இங்க பண்டுறா மொதல்ல''ன்னு முக்கிலியமான எடத்த காட்டும்படி வழுதுப்பேசல அங்கமுத்து.

"குன்னூத்தி நாயம்' கதையிலும் ஒரு காட்சி இருக்கும். போரிங் பைப்பு உடைந்து போனதால் காலனி சனங்க குடிக்கத் தண்ணீரில்லாமல் காடு கிணறு என்று அலைந்து சோர்ந்து போக, மேட்டூர் தண்ணீர் தொட்டியில் ஊர்ப்பக்கம் போய்க் கொண்டிருக்கும் வால்வை கொஞ்ச நேரம் நிறுத்திவிட்டு, சக்கிலித் தெருப்பக்கம் தண்ணீர் வரும் வால்வை திறந்ததற்காய் தண்ணீர் டேங்கிலேயே மணிப் பையனை கட்டிவச்சு அடித்த கவுண்டரின் சாதித்திமிரும், அதை நிலைநிறுத்தப் பயன்படுத்தப்படும் வசவுச் சொற்களும் மிகவும் அப்பட்டமாக அந்தக் கதையில் இருக்கும். இத்தகைய வாழ்வோட்டம் தன் அனைத்துக் கதைகளிலும் இருக்கும்படி எழுதுவது ஹரியின் தலித் எழுத்து வகைமை.

எழுத்து என்று எதையும் தனியாக நான் யோசிப்பதில்லை. எது என் மனதில் படுகிறதோ அதை எழுதுகிறேன். அதற்காக மனதில் ஊறப்போட்டு வைத்திருந்தேன் என்றெல்லாம் என்னால் சொல்ல முடியாது. ஒரு கதைக்காரன் தன் மனவுணர்ச்சிகளின் அடிப்படையில்தான் பாத்திரங் களை உருவாக்குகிறான். தலித்துகளுக்கு கதை சொல்லும் மரபு இருக்கிறது. கதையினைச் சொல்லும்போது ஆசிரியர் கூற்று என்று வரும். அப்போது, அந்தப் பாத்திரத்தைப் பற்றிய விமர்சனத்தையும் சொல்லுவது என்பதுதான் அது. அப்போது அந்தக் கதாபாத்திரத்தின் சகல பக்கங்களையும் நாம் உணர முடியும். ராமாயணக் கதையில் ராமனின் பாத்திரம் குறித்து பேசுகையில், கூனியின் முதுகு மீது கல்லெடுத்துப் போட்டான் எனக் கூறவரும்போது, “கொழுப்புதானே அது. அந்தக் கயித எதுக்கு அவ மேல கல்லப் போடனும்'' என்று கதை சொல்லியின் விமர்சனம் வரும். அப்படித்தான் நானும் அழகியல், இலக்கியத் தகுதி என்று பார்க்காமல் வாழ்வை அப்படியே எழுதுவது என்பதுதான் நான் தேர்ந்தெடுத்த எழுத்து முறை.

கதைகள் வாழ்விலிருந்துதான் எடுக்கப்படுகின்றன. ஆனால் நாம் எத்தகைய வாழ்வை வாழ நிர்பந்திக்கப்படு கிறோம். இடரும் இன்னலும் துயரும் கண்ணீரும் இருக்கும்போதுதான் கலகம் பிறக்கும் எழுத்துகளை உருவாக்க முடிந்தது. ஆனால் இன்றைய நிலை, வாழக் கற்றுக் கொண்ட பின் வாழப்படுவதாக இருக்கிறது. தலித்துகளுக்கு கிடைத் திருக்கும் ஓரளவு வசதி வாய்ப்புகள், அவர்களுடைய போராட்ட வாழ்வை மழுங்கடித்துவிட்டன. அதனால்தான் தற்போதைய தலித் எழுத்து வாழ்வைப் பதிவாக்காமல் இலக்கிய அங்கீகாரத்திற்கும், பதிப்பாளர் அல்லது பத்திரிகையாசிரியரின் கருதுகோளுக் கும் ஏற்ப எழுதப்படுகிறது. அதனால் அவை தலித்துகளால் எழுதப்பட்டாலும் தலித் எழுத்தாக இல்லாமல் இருக்கிறது'' என்கிறார் ஹரி.

அவருடைய இன்னொரு ஆளுமை கூத்தில் வெளிப்படுகிறது. கூத்துக் கலைஞர்களுடனான அவருடைய நட்பும் கூத்தில் அவருக்குள்ள ஈடுபாடும் அவரை ஒரு கூத்தாடியாகவே மாற்றி வைத்திருக்கிறது. தலித் கூத்துக் கலைஞர்கள் எத்தகைய வில்லாதி வில்லன்களாக இருந்தாலும், ஜமாவில் ஓர் ஆளாகத்தான் இருக்க முடியும்; வாத்தியாரா ஆகவே முடியாது என்ற உண்மையில் பொய் யில்லை என்கிறார் ஹரி. கூத்தை தங்கள் வாழ்வாகவே கருதிக் கொண் டிருக்கும் இத்தகைய உண்மைக் கலைஞர்கள் கண்டு கொள்ளப்படுவதில்லை என்ற ஆதங்கம், அவரை அவர்களுக்கான செயல் வீரராக மாற்றியிருக்கிறது. அதற்குக் காரணம் அவர்கள் தலித்துகள் என்பதுதான் என்கிறார்.

பேருந்துகளில் பெட்டிகளுடன் ஏறுகின்ற கலைஞர்களை ஏற்றாமல் மறுக்கின்ற நடத்துநர் தொடங்கி, தாமதமாகச்

செல்வதால் ஏசுகின்ற ஊர்க்காரன் அதற்கு தகுந்த "தகுமானம்' சொல்லி, கூத்தினை இரவெல்லாம் நடத்திவிட்டு வரும் அம்மக்களின் வாழ்வு குறித்து - எந்த இலக்கியவாதியும் அரசும் கண்டுகொள்வதில்லை. சினிமாக்காரர்களுக்கு வாரிவாரி விருதுகளை வழங்கும் அரசு, கூத்துக் கலைஞர்களை கூலித் தொழிலாளிகளைப்போல் நடத்துகிறது. அதனால்தான் அவர்களுக்கு நான் விழா எடுத்து விருதுகளை தருகிறேன் என்னும் அவருடைய கோபத்தில் நியாயம் இருக்கிறது.

தலித் கதைசொல்லி, சிற்றிதழ் ஆசிரியர், கூத்துக் கலைஞர் என்னும் பன்முகத்தன்மை இருந்தாலும், தலித் வாழ்வியல் என்னும் பண்பாட்டுத் தளத்தினை தன் ஒற்றை அடையாளமாக்கிக் கொண்டிருக்கிறார் ஹரிகிருஷ்ணன்.

- யாழன் ஆதி

 

Pin It

காஷ்மீரின் மரணக் குழிகள்

வடக்கு காஷ்மீரின் பந்திபோரா, பாரமுல்லா மற்றும் குல்வாரா ஆகிய மாவட்டங்களில் உள்ள 55 கிராமங்களில், இதுவரை அடையாளம் காணப்படாத 2700 பேரை மொத்தமாகக் கொன்று புதைத்துள்ள மரணக் குழிகள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் குறைந்தது 2900 உடலங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று "உலக மனித உரிமைகள் மற்றும் நீதிக்கான தீர்ப்பாயம்' (ஐணtஞுணூணச்tடிணிணச்டூ கஞுணிணீடூஞு'ண் கூணூடிஞதணச்டூ ச்ணஞீ ஏதட்ச்ண கீடிஞ்டtண் ச்ணஞீ ஒதண்tடிஞிஞு ஞூணிணூ ஓச்ண்டட்டிணூ) தெரிவித்துள்ளது. இவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளரான டாக்டர் அங்கனா சாட்டர்ஜி, “அரசு இவ்வறிக்கைக்கு முன்னுரிமை அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்; அலட்சியப்படுத்தக்கூடாது'' என்று கூறியிருக்கிறார். மேலும் 2700 மரணக் குழிகளில் 2,373 உடலங்கள் (87.9 சதவிகிதம்) பெயரிடப்படாதவை. “இத்தகைய மரணக் குழிகள், இனப்படுகொலை அல்லது போர்க்குற்றங்கள் மற்றும் மனித நேயத்திற்கு எதிரான குற்றங்களிலிருந்து வெளிப்படுபவை. இந்திய ராணுவத்தினரும் துணை ராணுவத்தினரும் தண்டனை மற்றும் விசாரணையிலிருந்து தப்பிக்க இத்தகு மரணக் குழிகளை உருவாக்கி இருக்கலாம்'' என்று அவர் கூறுகிறார்.

இந்திய பாதுகாப்புப் படையினர் 50 "போலி மோதல் கொலை' களையும் செய்திருப்பதாக இவ்வறிக்கை கூறுகிறது. இந்த அய்ம்பது பேரில் 39 பேர் முஸ்லிம்கள், 4 பேர் இந்துக்கள், 7 பேரை அடையாளம் காண முடியவில்லை. இவ்வாறு பலியானவர்களை எல்லாம் தீவிரவாதிகளாகவும், வெளிநாட்டிலிருந்து ஊடுருவியவர்களாகவும் அரசு சொல்கிறது. சுதந்திரமான ஆய்வுகளை மேற்கொண்டால், இங்கு மொத்தமுள்ள 10 மாவட்டங்களில், 1989 முதல் 8 ஆயிரம் பேர் காணாமல் போயுள்ளனர் என்ற தகவலுடன் தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ள அடையாளம் தெரியாத மரணக் குழிகள் பற்றிய தகவல்களும் ஒருமித்துச் செல்வதை உணர முடியும்.

“அய்க்கிய நாடுகளும் அதன் உறுப்பு நாடுகளும், இந்திய அரசு காஷ்மீரை ராணுவமயமாக்கி வருவதைத் தடுத்து நிறுத்த முன்வரவில்லை'' என்று சாட்டர்ஜி கூறியிருக்கிறார். காஷ்மீரில் 1989 முதல் 2009 வரை நடைபெற்ற வன்முறை மற்றும் ராணுவமயமாக்கலால் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் போலி மோதல் கொலைகளும், காவல் நிலைய மரணங்களும் அடக்கம் என்று இந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. தொடர்ந்து நடைபெற்று வரும் இம்மோதலில், 6 லட்சத்து 67 ஆயிரம் ராணுவ மற்றும் துணை ராணுவத்தினர் தொடர்ந்து எந்தவித தண்டனைகளுமின்றி, காஷ்மீரில் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றுகின்ற பெயரில் செயல்பட்டு வருவதாக சாட்டர்ஜி கூறுகிறார். இது தொடர்பான மேலும் அதிர்ச்சிகரமான தகவல்கள் "தலித் முரசி'ன் சனவரி இதழில் விரிவாக இடம்பெறவிருக்கிறது.

எங்கே பிரதிநிதித்துவம்?

மத்திய அரசுப் பணியில் 88 அரசு செயலாளர்களும், 66 கூடுதல் செயலாளர்களும், 249 இணைச் செயலாளர்களும், 471 இயக்குநர்களும் உள்ளனர். ஆனால் அரசை வழி நடத்தும் அதிமுக்கிய அதிகாரம் கொண்ட இப்பதவியில், ஒரு தலித் கூட இல்லை. ஒரே ஒரு தலித் மட்டும் கூடுதல் செயலாளர் பதவியிலும், 13 பேர் இணைச் செயலாளர் பதவியிலும், 31 பேர் இயக்குநர் பதவியிலும் உள்ளனர். பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர்களில் நான்கு பேர் செயலாளர் பதவியிலும், ஒருவர் கூடுதல் செயலாளர் பதவியிலும், ஒன்பது பேர் இணைச் செயலாளர் பதவியிலும் உள்ளனர். நாடாளுமன்றத்தில் 16.12.2009 அன்று, மத்திய நிர்வாகத்துறை அமைச்சர் பிருத்விராஜ் சவுகான் இத்தகவலை தெரிவித்திருக்கிறார்.

தலித்துகள் விற்பனைப் பொருட்களா?

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மர் மாவட்டத்தில் ஒரு தலித் குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரும் 2.75 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளனர். இதற்குக் காரணமான ராஜ்புத்திர குடும்பத்தினர் மீது வழக்குப் பதிவு செய்ய ராஜஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மகாவீர், அவருடைய மனைவி மற்றும் அவர்களின் குழந்தைகளான ராகேஷ், முகேஷ், கைசாலால், சிதார் மற்றும் அவருடைய மனைவி சஜானி ஆகியோர் கடந்த ஆண்டு விற்கப்பட்டனர். ஆனால் இக்குடும்பம் கொத்தடிமையில் இருந்து தப்பித்து வெளியேறிய பிறகுதான் இந்த உண்மை உலகத்திற்கு தெரிய வந்தது. ஓராண்டுவரை கொத்தடிமைகளாக இருந்த இவர்களை ராஜ்புத்திர குடும்பத்தினர் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இந்நிலையில்தான் அருகிலுள்ள காடுகளுக்கு தப்பித்து, தங்கள் சொந்த கிராமத்திற்கு வந்து சேர்ந்தனர். இந்து இந்தியாவில் தலித்துகள் உயிர்களாகக் கருதப்படுவதில்லை; பண்டங்களாகவே கருதப்படுகிறார்கள். தலித்துகளை பிறவி அடிமைகளாகவே இந்து சமூகம் கருதுவதால்தான், இப்பிறவி இழிவை ஒழிக்க "நான் இந்துவாக சாகமாட்டேன்' என்று பாபாசாகேப் அம்பேத்கர், இந்து சமூகத்தின் முகத்தில் ஓங்கி அறைந்தார். இந்துக்களாக இருக்கும் தலித்துகள் அறை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்!

கழுதைக்குப் பேர் முத்துமாரி''

குஜராத் மாநிலத்தில் "நானோ கார்' உற்பத்தி செய்யப்படும் இடத்தை சமூக நீதிப் பார்வையுடன் அணுகினால், தீண்டாமைக் கொடுமை பளிச்சென வெளிப்படுகிறது. பிக்காபாய் சோலங்கி (50) என்பவர், லோட்ரியால் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் தலித் அல்லாதவர்களுடன் இதுவரை கை குலுக்கியதே இல்லை. காரணம்? “நாங்கள் தீண்டத்தகாதவர் என்பதால் எங்களை யாரும் தொடுவதில்லை'' என்கிறார் அவர். மேலும், கையால் மலமள்ளும் தொழிலை குஜராத்தில் ஒழிப்பதற்காக இடையறாது போராடும் மார்ட்டின் மெக்வான் நடத்தும் "நவ் சர்ஜன் அறக்கட்டளை', குஜராத்தின் 1655 கிராமங்களில் நடத்திய ஒரு விரிவான ஆய்வில், தேநீர்க் கடைகளில் தலித்துகளுக்கு "ராம்பத்ரா' என்ற தனிக் குவளையில்தான் தேநீர் வழங்கப்படுகிறது என்ற உண்மையை கண்டறிந்துள்ளது.

லோத்ரியால் கிராமத்து தலித் பெண்கள் காய்கறி கடைகளில் காய்களை தொட்டு வாங்க முடியாது. தேவையான காய்களுக்குரிய பணத்தை கடைகளில் வைத்து விட்டால், அவர்களுடைய முந்தானையில் காய்களை கொட்டி விடுவார்கள். மேலும் ஓர் ஆய்வில் கருத்து தெரிவித்த 98 சதவிகித தலித் அல்லாதோர், தலித்துகளுக்கென தங்கள் வீடுகளில் தேநீர் மற்றும் உணவு கொடுப்பதற்கென தனி பாத்திரம் வைத்திருப்பதாகக் கூறுகிறார்கள். மார்ட்டின் மெக்வான் சொல்கிறார் : “தீண்டாமையின் பல வடிவங்களிலும் தூய்மை காப்பாற்றப்பட வேண்டும் என்பதுதான் சாதி இந்துக்களின் மனநிலையாக இருக்கிறது. இத்தகைய இழி நிலையை புனிதப்படுத்துவதற்குதான் இத்தீண்டாமைப் பாத்திரங்களுக்கு "ராம்பத்ரா' என்று பெயரிடப்பட்டுள்ளது.'' தமிழகத்திலும் இதுபோன்ற ஒரு செய்தி. தனது 75ஆவது பிறந்த நாளை கொண்டாடும் காஞ்சி சங்கராச்சாரி ஜெயேந்திரன், திருச்சியில் நடைபெற்ற ஒரு விழாவில் நால்வருக்கு விருது வழங்கினார். அதில் முக்கியமானவர் இளையராஜா. இவரைத் தொட விரும்பாத ஜெயேந்திரன் ஆசி மட்டும் வழங்கி விட்டு, தன் உதவியாளர் கையால்தான் விருதுகளை கொடுத்தாராம் ("நக்கீரன்', 26.12.09). அங்கு, தீண்டாமைப் பாத்திரத்திற்கு ராமன் என்ற அயோக்கியனின் பெயர். இங்கு, தீண்டாமையை காப்பாற்றும் குற்றவாளிக்கு "அந்தணன்' என்று பெயர்.

தென்னை மரத்தில் தேள் கொட்டினால்...

இந்திய அரசால் தீவிரமாகத் தேடப்படும் மாவோயிஸ்டுகளில் இரண்டாவது இடத்தில் இருக்கும் கிஷன்ஜி என்பவர், தன்னை "பிராமணன்' என்று வெளிப்படுத்திக் கொண்டதை ("தெகல்கா' நேர்காணல்) கடந்த இதழில் சுட்டிக்காட்டியிருந்தோம். மாவோயிஸ்டுகளின் செயல்பாடுகளில் கருத்து வேறுபாடு கொண்டுள்ள "புதிய ஜனநாயகம்' ஏடு, கிஷன்ஜியை நாம் விமர்சித்ததை ("தலித் முரசின் வர்க்காஸ்ரம வெறி') சாடியிருக்கிறது. நமக்கு கிஷன்ஜியின் ஜாதி என்னவென்றே தெரியாது. வர்க்கத்தை முதன்மைப் படுத்துகின்ற இப்புரட்சிக்காரர்கள், தங்களை வர்க்க ரீதியாகவும் அடையாளப்படுத்திக் கொள்ளாமல், முற்படுத்தப்பட்ட ஜாதியில் பிறந்தவராகவும் அடையாளப்படுத்திக் கொள்ளாமல், வர்ண – ஜாதி அடிப்படையில் அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை என்ன என்பதுதான் நாம் முன்வைத்த விமர்சனத்தின் மய்யக்கரு. அதற்கு பதில் சொல்ல வக்கற்ற "புதிய ஜனநாயகம்', பிறப்பின் அடிப்படையில் ஒருவரை தீர்மானிப்பதும், அணுகுவதும் பார்ப்பனியம் என்று நமக்கு புத்தி சொல்லிவிட்டு முடிவுரையில், நாம் முன்னெடுக்கும் தலித்தியத்தை “ஏகாதிபத்தியம் பெற்றெடுத்த கள்ளக் குழந்தை'' (குழந்தையில் என்னடா நல்லக் குழந்தை / கள்ளக் குழந்தை?) என்று கூறி, நமக்கு பூணூல் மாட்டி, நம்மை அடிமையாக சித்தரித்துள்ளது. பேசுவது முற்போக்கு, கம்யூனிசம். ஆனால், ஆத்திரம் வந்தால், அறிவு மறைந்து ஆண்டைத்தனம்தான் வெளிப்படுகிறது

****

பந்த் சிங் (50) – பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த புரட்சிகர தலித் பாடகர். விவசாயத் தொழிலாளர் அமைப்பான மஸ்தூர் முக்தி மோட்சா அமைப்பின்தலைவர். 2000 ஆம் ஆண்டில் இவருடைய இளைய மகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆட்படுத்தப்பட்டதை எதிர்த்து நீதி கேட்டு, தன்னுடைய போராட்டத்தைத் தொடங்கினார். இதன் விளைவாக 2002இல் இக்குற்றத்தைச் செய்த சாதி இந்துக்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. ஆனால் இக்குற்றவாளிகள் அவரை பழி தீர்க்க 5.1.2006 அன்று அவர் மீது தொடுத்த கடும் தாக்குதலில் மரணத்தின் விளிம்புக்கு சென்றார் பந்த் சிங். அவருடைய இரு கைகளும் ஒரு காலும் வெட்டப்பட்டு, மற்றொரு காலும் புரையோடிப் போய்விட்டது. இதிலிருந்து மீண்டு தற்பொழுது புத்தெழுச்சியுடன் பாடத் தொடங்கி இருக்கிறார் பந்த் சிங். இரு கைகளையும் இரு கால்களையும் இழந்தும் சமூக அநீதிகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழும் இப்போராளியின் விடுதலை உணர்வு, நம் சுணக்கத்தை கலைக்கட்டும்

****

விடுதலைப் புலிகள் - ரணில் விக்ரமசிங்கேவை தேர்தலில் ஆதரித்திருக்க வேண்டும்; அவ்வாறு செய்யாமல் தேர்தலைப் புறக்கணித்ததால்தான் – ராஜபக்சே பதவிக்கு வந்து இவ்வளவு அழிவையும் செய்துவிட்டார் என்று முதல்வர் கலைஞர் பேசுகிறார். சரி என்றே வைத்துக் கொள்வோம். தற்பொழுது ராஜபக்சேயும், (ரணில் விக்ரம சிங்கே முன்னிறுத்தியுள்ள வேட்பாளர்) சரத் பொன்சேகாவும் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். இவர்களில் யாரை ஆதரித்தால் தமிழர்களுக்கு நல்லது என்று கலைஞர் கூறுவாரா?

கோவை ராமகிருஷ்ணன்

பொதுச் செயலாளர், பெரியார் தி.க

Pin It

 

ஜட்டியுடன் சாக்கடையில் இறங்க நிர்பந்திப்பது மனித உரிமை மீறல் இல்லையா?

கையால் மலம் அள்ளும் தொழில் இந்த சாதியில் பிறந்த காரணத்தினால், நம்மீது திணிக்கப்பட்டது. எனவே, இத்தொழிலை ஒழிக்கப் போராடுகிறோம். இது, இந்து சாதி வர்ண முறையிலே நம் மீது திணிக்கப்பட்ட ஒரு தொழில். இன்னும் சொல்லப் போனால், இத்தொழில் சாதியோடு இணைக்கப்பட்டுள்ளது. எல்லா சாதிக்காரர்களும் இந்தத் தொழிலை செய்தால், நாம் ஒன்றும் கேள்வி கேட்கப் போவதில்லை. குறிப்பிட்ட சாதி மட்டுமே, அதாவது அருந்ததியர், சக்கிலியர் என்று சொல்லக்கூடிய நாம் மட்டுமே செய்ய வேண்டும் என வன்கொடுமையாக இத்தொழில் நம்மீது திணிக்கப்பட்டுள்ளது. இதை ஏன் மாற்ற முடியவில்லை?

கோவையில் 2004 ஆம் ஆண்டு ஆதித்தமிழர் பேரவை கூடியபோது, தமிழகத்திலேயே முதன்முதலாக, “கையால் மலம் அள்ளும் தொழிலை தடை செய்து, அதில் உள்ளவர்களுக்கு மாற்றுப்பணி வழங்க வேண்டும்'' என்று தீர்மானம் நிறைவேற்றினோம். தடை செய்வது என்பதுதான் ரொம்ப, ரொம்ப முக்கியம். இதற்கு முன்பிருந்த புரட்சி, முற்போக்கு பேசுகின்ற பல்வேறு இயக்கங்கள் ஆகட்டும், துப்புரவுத் தொழில் செய்கின்றவர்களிடையே இயக்கம் கட்டுகின்ற தொழிற்சங்கங்கள் ஆகட்டும், அவர்கள் சந்தா வாங்குவதில்தான் குறியாக இருந்தார்களே தவிர, இப்படி ஒரு இழிதொழிலை செய்கிறார்களே, இதை ஏன் தடை செய்யக் கூடாது என்கிற குறைந்தபட்ச மனிதாபிமானம்கூட இல்லாமல், அதையும் ஒரு தொழில் என்று கூறி, சங்கம் வைத்து, சந்தா வசூலிக்கிறார்கள்.

"தாட்கோ'வில் இருந்து அதிகாரிகள் வந்து பேசினார்கள், நிறைய செய்வதாக! இன்றுள்ள "தாட்கோ' நம்மை பிச்சை எடுக்கத்தான் வைக்கிறது. எத்தனை பேர் முன்னேறியிருக்கிறார்கள்? கர்நாடகாவில் 10 ஆயிரம் ரூபாய்க்கு லோன் போட்டால், கறவை மாடு வீட்டில் இருக்கும். ஆனால் இங்கு கறவை மாட்டுக்கு லோன் போட்டா, ஆட்டுக்குட்டிதான் வந்து சேரும். இப்போது கலைஞர் செய்கிறார். நல்லதுதான். இப்போதுகூட அவர், அவரோட "பெண் சிங்கம்' என்கிற திரைப்படத்திற்கு கிடைத்த 61 லட்சம் ரூபாயை, அருந்ததியர் மாணவர்களுக்கு, ஒரு மாணவனுக்கு 5 ஆயிரம் என கொடுத்துள்ளார். நான் கேட்கிறேன், அவருக்குத் தெரியாதா? இந்த 5 ஆயிரம் ரூபாயை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும் என்று? அவர் எதற்கு தன்னுடைய சொந்தப் பணத்தை அளிக்க வேண்டும். முதல்வராக உள்ளார். மருத்துவம் படிக்கின்ற ஓர் அமைச்சரின் மகனுக்கு ஆண்டுக்கு ரூபாய் 5 ஆயிரம்தான் செலவாகின்றதா? ஏன் மாதம் 10 ஆயிரம் ரூபாய் அரசாங்கம் அளித்தால் என்ன?

மனமிருந்தால் மார்க்கமுண்டு என்று நான் சொல்வது இதுதான். ஒரே மாதத்தில் தமிழகம் முழுவதும், ஏன் இந்தியா முழுவதும்கூட, கையால் மலம் அள்ளும் தொழிலை ஒழிக்க முடியும். "பாடம்' நாராயணன் உயர் நீதிமன்றத்தில் வழக்குப் போடுகிறார், இத்தொழிலை தடை செய்யச் சொல்லி. அரசாங்கம் 6 மாதம் அவகாசம் கேட்டது, அனைத்து மாவட்டங்களுக்கும் போதிய கருவிகள் வாங்குவதற்காக.

டிசம்பர் 10 ஆம் தேதி உலகெங்கும் மனித உரிமை நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இது, மனித உரிமை மீறலா தெரியலையா? சாக்கடை அள்ளுவது; வெறும் ஜட்டியுடன் "மேன்ஹோலில்' இறங்கி உயிரோடு வரமுடியுமா என்று தெரியாது. இது இன்னிக்கும் இருக்குது. இத்தொழிலில் ஈடுபடுபவர்களின் மறுவாழ்விற்காக அரசு 35 கோடி ஒதுக்கி, வாரியம் அமைத்தது. அது என்ன ஆனது? எங்கிருக்கிறது? யாருக்கும் தெரியாது. இத்தொழிலை ஒழிக்க வேண்டும் என்பதில் முழு முனைப்பில்லை. அக்கறையில்லை.

அரசு நினைத்தால் இதை ஒரே மாதத்தில் ஒழிக்க முடியும். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, வீடுகளில் மழை நீரை சேகரிக்க வேண்டும் என்ற திட்டத் தைக் கொண்டு வந்தார். மழைநீர் சேமிப்பில்லாத வீடுகளுக்கு குடிநீர் கிடையாது, மின் இணைப்பு கிடையாது, சொத்துவரி வாங்க முடியாது என்று அறிவித்தார்கள். உடனடியாக தமிழகம் முழுவதும், மின்சாரம் இல்லாத சிறு குடிசைகளில்கூட மழை நீர் சேமிப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டதே! எவ்வளவு அவசர கதியில் செய்தார்கள்.

தமிழ் நாட்டில் தற்பொழுது உலர் கழிப்பிட ஒழிப்புச் சட்டம் நடைமுறையில் உள்ளது. முன்னாள் முதல்வர் கடைசி நேரத்தில் இச்சட்டத்தை ஏற்று அறிவித்தார். இச்சட்டத்தில், இத்தொழிலை யார் செய்யச் சொல்கின்றார்களோ, அவர்களுக்கு சிறைத்தண்டனை, அபராதம் என்று உள்ளது. ஆனால், இதை யார் நடைமுறைப்படுத்துவது? இதுதான் இப்போதைய பிரச்சனை, கேள்வி. மாநகராட்சியில் ஒருவர் மலக்குழியில் இறங்கினார். புகைப்படம் எடுத்து, ஆதாரத்துடன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தோம். வழக்குப் பதிய மறுத்தார்கள். இப்படி ஒரு சட்டமே இல்லை என்றார்கள். மலக்குழியில் இறங்கச் சொன்னது, மாநகராட்சி ஆணையர். அவர்தான் குற்றவாளி. ஆனால் வழக்குப் பதிவு செய்ய முடியவில்லை. ஆனால், வேலை செய்ய விடாமல் தடுத்ததாக எங்கள் மீது வழக்குப் போடுகிறார்கள். சட்டமும் உள்ளது, தடுக்க வேண்டுமென்ற நீதிமன்ற உத்தரவும் உள்ளது. ஆனாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை.

உலகின் 190 நாடுகளில் இப்பிரச்சினை இல்லை. இந்தியாவில் மட்டும்தான் இந்தக் கொடுமை. ஏன் என்றால், இந்தியாவில்தான் இந்து மதம் உள்ளது. மதத்திற்கும், சாதிக்கும் இத்தொழிலுக்கும் தொடர்பு இருக்கிறது. சாதி எப்படி ஒழியும்? ஒழியாது. அப்ப மதமாவது மாறணும். நம்முடைய தலைவர் புரட்சியாளர் அம்பேத்கர், “நான் பிறக்கும்போது இந்துவாகப் பிறந்தேன். சாகும்போது இந்துவாக சாகமாட்டேன்'' என்று சொன்னார். சிலர் மேடையில, நீங்க என்ன வேணாலும் பேசுங்க, செய்யுங்க. ஆனா இந்த கடவுள், மதம் இதை மட்டும் "டச்' பண்ணாதீங்க அப்படின்னு சொல்வாங்க. எப்படி முடியும்?

துப்புரவுப் பணியில் இருப்பவர்களுக்கு என்று மத்திய அரசு பல கோடி ரூபாய்களை தமிழகத்திற்கு ஒதுக்கியது. அந்த ரூபாய் எல்லாம் என்ன ஆனது? அதை நம் மக்களுக்கு கொடுத்திருந்தால், நம் சமூகம் இன்று மிகப் பிரமாதமாக இருந்திருக்குமே! அந்தத் தொகையை ஏன் நெடுஞ்சாலைத் துறைக்கும், பொதுப் பணித்துறை என பல்வேறு துறைகளுக்கும் மாற்றுகிறீர்கள்? படிக்க வருகின்ற முதல் தலைமுறைக்கு ஆரம்ப கல்வியில் இருந்து ஆராய்ச்சிக் கல்வி வரைக்கும் இலவசமா கொடுக்கணும்னு திட்டத்துல இருக்கு. ஆனா ஏன் செய்யல? "ஹட்கோ'வில் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகையெல்லாம் பினாமியில் வெளியில இருக்கு. மேற்கு மாவட்டங்களில் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொழிற்சாலைகள் எல்லாம் பினாமியில் கவுண்டர், நாயக்கர் பேர்ல யும் இருக்கு. ஏன் அரசாங்கம் இதன் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாதா?

தமிழ் நாட்டில் கையால் மலம் அள்ளுகிறவர்கள் 35 ஆயிரம் பேர் என்று சொல்கிறார்கள். அது பொய். சென்ற முறை நடந்த ஒரு கூட்டத்தில் இப்படித்தான் இப்போதெல்லாம் இந்தத் தொழில் கிடையாது; எங்கும் நடக்கலன்னு ஓர் அய்..எஸ். அதிகாரி பேசினார். உடனே நம்ம பெசவாடா வில்சன், இன்னிக்கு காலையில் 6 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் நான் இறங்கிவரும்போது எடுத்த படம் என்று காட்டினார். உடனே வாய்மூடிக் கொண்டார்கள். எத்தனை சட்டங்கள், நீதிமன்ற உத்தரவுகள் இருந்தாலும், எத்தனை புத்தகங்கள் எழுதினாலும் இவர்கள் காதில் ஏறுவதில்லை.

நம்மைப் பொருத்த அளவில் ஒன்றில் நாம் தெளிவாக இருக்க வேண்டும். இந்த கக்கூஸ் என்பது இங்கிலீஸ்காரன் வரும் வரையிலும் இங்கு கிடையாது. இங்கிலீஸ்காரர்கள் வந்து 350 ஆண்டுகள் ஆகின்றன. அதற்கு முன்பு இந்தியாவில் கக்கூசு கிடையாது. இங்கிலீசுகாரன் வந்த பிறகுதான், கக்கூஸ் என்ற ஒன்று உருவாகி, அதைப் பராமரிக்க ஒரு ஆள் தேவை என்று உருவானது. இங்கிலீசுகாரன் வந்த பிறகு நாட்டில் பல விசயங்கள் வந்தன. ஆக, 400 வருசத்துக்கு முன்னாடி இந்தத் தொழில் கிடையாது. இதுதான் நிலைமை. இடைக்காலத்தில் நாம் ஏமாந்தபோது நம்மீது திணிக்கப்பட்டது இத்தொழில், சாதியின் அடிப்படையில்.

சிலர் "தீண்டாமை ஒழிப்பு' என்கிறார்கள். சாதி ஒழிப்பு என்ற வார்த்தையை சொல்ல மறுக்கிறார்கள், முற்போக்கு பேசுகின்றவர்கள். தீண்டாமை காந்தி சொன்னது. பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதார் என்று எல்லோரும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அம்பேத்கர்தான், “அப்படி அல்ல. தீண்டப்படுபவர், தீண்டப்படாதவர். இவர்கள்தான் நாட்டில் உள்ளார்கள்'' என்று சொன்னார். இந்த நாட்டையே புரட்டிப் போட்ட கருத்துகளை வழங்கிய அம்பேத்கரை ஓரம் கட்டி வைத்துவிட்டு, இன்று யார் எல்லாமோ தலைவர் ஆகிவிட்டனர். உலகத்திற்கே புரட்சிக் கருத்துகளை வழங்கிய மார்க்சுக்கு நிகராக கருதப்படும் புரட்சியாளர் அம்பேத்கருக்கு, இன்று நாட்டில் என்ன மரியாதை இருக்கிறது? நாம் அவர் படத்தை மட்டும் பயன்படுத்துகிறோம்.

மற்ற சாதியில் பிறந்தவர்களும், முற்போக்குப் பேசுகின்றவர்களும் இதை எண்ணிப் பார்த்து, இதை ஒழிக்க முன்வர வேண்டும்; நம்மோடு கைகோர்க்க வேண்டும். அப்போதுதான் இப்பிரச்சனையை தீர்க்க முடியும். எனக்குத் தெரிந்து 10 ஆண்டுகளாக நாம்தான் பேசிக் கொண்டிருக்கிறோம். இதற்கு எப்போதுதான் முடிவு? 2010 இல் தமிழ் நாட்டை கையால் மலம் அள்ளும் தொழில் இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும் என்பது சபாய் கரம்சாரி அந்தோலனின் விருப்பம். அதை நடைமுறைப்படுத்த இந்த அரசு உதவி செய்ய வேண்டும். அரசு உதவி செய்ய வேண்டும் என்றால், பிற கட்சிகள் எல்லாம் என்ன செய்கிறது என்பதுதான் நாம் முன்வைக்கின்ற கேள்வி.

இங்கு தமிழ் நாட்டில் இருக்கின்ற பெரியாரிஸ்டுகளும், அம்பேத்கரிஸ்டுகளும் கருத்துடையவர்கள். கருத்துத் தெளிவுடையவர்கள். நாம் ஒரு திட்டத்தை கையில் எடுத்தால் அதை நிச்சயம் நடத்திக் காட்ட முடியும். இத்தொழிலை ஒழிக்க ஆதித்தமிழர் பேரவை ரயில் மறியல் போராட்டம் நடத்தி, 3000 பேர் கைதானார்கள். மாநகராட்சிகள், நகராட்சிகள் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தியிருக்கிறோம். இதையொட்டி நாம் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். பல அமைப்புகளுடன் பல்வேறு திட்டங்கள் வைத்து செயல்படுகிறோம். நாம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

தமிழகத்தில் 2010 க்குள் கையால் மலமள்ளும் தொழிலை ஒழிப்பதற்கான மாநில கலந்தாய்வுகூட்டத்தை 18.12.1009 அன்று சென்னையில்சாபய் கரம்சாரி அந்தோலன்என்ற அமைப்பு நடத்தியது. இக்கூட்டத்தில் ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனர் ரா.அதியமான் நிகழ்த்திய உரையின் சுருக்கமே இங்கு வெளியிடப்பட்டுள்ளது. “இனி இத்தொழிலை செய்ய மாட்டோம் என்று சமூகப் பிரகடணம் செய்தால்தான், கையால் மலம் அள்ளும் இழித்தொழிலை ஒழிக்க முடியும்என்று இக்கூட்ட்த்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பானசமூகப் பிரகடன மாநாடுசெப்டம்பர் மாதம் பெரியார் பிற்ந்த நாளான 17,2010 அன்று நடைபெறும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

-ரா. அதியமான்

 

Pin It

டிசம்பர் 3, 1984. கதிரவன் உதிப்பதற்கு இன்னும் சிலமணி நேரங்கள் இருக்கின்றன. நல்ல பனி மூட்டம் ஆழ்ந்த உறக்கத்திற்குத் தோதுவாக. போபால் நகரின் குடிசைப் பகுதியிலுள்ள மக்கள் திடீரென விழித்தெழுகின்றனர். மிளகாய் வற்றல் எரிவது போல நாற்றம் நாசியில் நுழைந்து உடலைத் தாக்குகிறது. அவர்களுக்கு விஷயம் புரியவில்லை. எனினும், ஏதோ பேராபத்து நெருங்குகிறது என்பதை அவர்களது உள்ளுணர்வு கூற, குழந்தைகளை வாரி அணைத்தபடி தாய்மார்கள், அவர்களது கணவர்கள், சிறுவர்கள், பெரியவர்கள் என திசையறியாது எங்கோ ஓடுகிறார்கள். படுக்கையிலிருந்து எழ முடியாதவர்கள் ஏறத்தாழ ஒரு நொடியில் மரணத்தைத் தழுவுகின்றனர். தப்பியோடி வந்தவர்கள் பலர் தெருக்களில் ஈக்களைப் போல விழுந்து மடிகின்றனர். இன்னும் பலர் மருத்துவமனையின் வாசலைத் தட்டியதுடன் சரி.

போபாலிலிருந்த (இன்னும் இருக்கிறது) "யூனியன் கார்பைட்' தொழிற்சாலையிலிருந்து கசிந்து வந்த 27 டன் மெதில் அய்சோசையனேட் வாயுவுக்கு – "செவின்' என்னும் பூச்சிக்கொல்லியைத் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட சையனைடைவிட 500 மடங்கு நச்சுத்தன்மையுள்ள அந்த ரசாயன வாயுக்கு – 72 மணி நேரத்தில் பலியானவர்கள் ஏறத்தாழ 8000 பேர். அதன் பிறகு அந்த நச்சு வாயுவால் நுரையீரல், இதயம், மூளை ஆகியவற்றுக்கு ஏற்படுத்தப்பட்ட பாதிப்பால் ஏறத்தாழ 15,000 பேர் மாண்டனர்.

அச்சமயம் கர்ப்பிணிகளாக இருந்தவர்களில் மூன்றிரண்டு பகுதியினருக்கு கருச்சிதைவு ஏற்பட்டது. பிள்ளைப்பேறுக்கு ஆசைப்பட்டவர்களும் முழு கர்ப்பிணிகளும் பிரசவித்தவை கால், கையில்லாத, பார்வையில்லாத, உடல் உறுப்புகள் திரிபடைந்த "குழந்தைகள்'தான். இன்றும்கூட போபால் நகரில் பிறக்கும் ஒவ்வொரு 25 குழந்தைகளிலொன்று தலை சிறுத்தோ, இடுப்பிற்குக் கீழ் ஏதுமற்ற சதைப் பிண்டமாகவோதான் இருக்கிறது. "அம்னஸ்ட்டி இன்டர்நேஷன'லின் மதிப்பீட்டின்படி, அந்த வாயுவால் பாதிக்கப்பட்ட ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் கடுமையான நோய்களுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

அந்தத் தொழிற்சாலையின் கழிவுகள் புதைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு அருகில் உள்ள நீர்நிலைகளில் உள்ள நீரைப் பயன்படுத்தியதால், மேலும் 30 ஆயிரம் பேர் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், மத்தியப் பிரதேச அரசாங்கமோ, போபால் உள்ளூராட்சி அமைப்புகளோ, அந்தக் கழிவுகள் புதைக்கப்பட்ட இடங்களைக் கண்டறிந்து அவற்றைத் தம் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவில்லை. எனவே, இன்றும்கூட அங்கு ஆடுமாடுகள் மேய்கின்றன; குடிசைப் பகுதி குழந்தைகள் விளையாடுகின்றனர். "போபால் மெடிகல் அப்பீல்' என்னும் தொண்டு நிறுவனம், 1984இல் அந்தப் பேரழிவு நேர்ந்தபோது சிறுவர்களாக இருந்தவர்கள், தற்சமயம் மூளை, தைராய்ட், நுரையீரல் போன்ற உறுப்புகள் பாதிக்கப்பட்ட நிலையில் குற்றுயிரும் குலையுமாக நாட்களை ஓட்டி வருகிறார்கள் எனக் கூறுகிறது.

போபாலில் இருந்த யூனியன் கார்பைட் இந்தியா லிமிடெட்டின் தாய் நிறுவனமாக இருந்தது, அமெரிக்காவின் மேற்கு வர்ஜீனியாவில் இருந்த "யூனியன் கார்பைட்'. அந்தத் தாய் நிறுவனத்துடன் இந்திய அரசாங்கம் "நீதிமன்றத்துக்கு வெளியே' செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, நச்சு வாயுவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக 47 கோடி டாலர் அந்த நிறுவனம் தர வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. ஆனால், இறந்து போனவர்கள், நச்சு வாயுவால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோரின் எண்ணிக்கை முறையே 3810,1,02,000 என்னும் கணக்கின்படியே அந்தத் தொகை தீர்மானிக்கப்பட்டது. அதாவது இறந்து போனவர்களின் அல்லது பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு சராசரியாக வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையில் மிக அதிபட்சம் 1000 அமெரிக்க டாலராகும். அதாவது கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் அவர் நாளொன்றுக்கு 11 சென்ட் பெற்று வந்திருக்கிறார் (அமெரிக்க டாலரின் இன்றைய மதிப்பு ரூ.47க்கும் குறைவு; நூறு சென்ட் சேர்ந்தால் ஒரு டாலர்).

குறைந்தபட்சம், அமெரிக்க நீதிமன்றங்கள் அந்த நாட்டிலுள்ள ஆஸ்பெஸ்டாஸ் தொழிற்சாலை மாசுகளால் பாதிக்கப்படுகிறவர்களுக்கு வழங்கும் இழப்பீட்டு விகிதத்தைக் கருத்தில் கொண்டாலும்கூட, யூனியன் கார்பைட் போபாலில் பாதிக்கப்பட்டவர்களுக்குக் குறைந்தது 10 பில்லியன் டாலராவது கொடுத்திருக்க வேண்டும். இந்தத் தொகையும்கூட, இறந்துபோன, பாதிக்கப்பட்ட, தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறவர்களுக்குப் போதவே போதாது.

யூனியன் கார்பைட் நிறுவனத்தைப் பற்றிய ஒரு தகவலை அமெரிக்காவிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த the bublic citizen என்னும் பத்திரிகையின் 1986 அக்டோபர் இதழில் மார்க் டி. கிராஸ்மன் என்பவர் எழுதிய கட்டுரை வெளிப்படுத்தியது. அதாவது, மேற்கு வர்ஜீனியாவிலிருந்த யூனியன் கார்பைட் நிறுவனத்திற்குச் சொந்தமான ட்ரக் வண்டியொன்று, அங்கிருந்த தொழிற்சாலையிலிருந்து வாயுக் கசிவு ஏற்படுகிறதா என்பதைக் கண்டறிய ஒவ்வொரு நாளும் நான்கு முறை ரோந்து வரும்; அந்த வண்டியிலுள்ள தொழிலாளர்களின் வேலை, அசாதாரணமான மணம் காற்றில் வருகிறதா என்பதை முகர்ந்தறிவதுதான். ஒவ்வொரு ரோந்தின் போதும் அவர்கள் பத்து முறை மேலும் விரிவான ஆய்வுகளைச் செய்வர். அதாவது வண்டியை நிறுத்திவிட்டு ஆழமாக மூச்சு இழுப்பர். மனிதர்களைச் காட்டிலும் அதிக நுண்ணுணர்வுடன், நுட்பமாக வாயுக் கசிவுகளைக் கண்டறியும் கருவிகளை, அறிவியல் கருவிகள் செய்யும் தொழிற்கூடங்கள் அப்போதும் தயாரித்து வந்தனஆனால், யூனியன் கார்பைட் நிறுவனமோ தொழிலாளிகளை மோப்ப நாய்களாகப் பயன்படுத்தியது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் சுரங்கத் தொழிலாளிகள், சுரங்கங்களில் நச்சு வாயு இருக்கிறதா என்பதைக் கண்டறிய, கூண்டுகளில் அடைக்கப்பட்ட குருவிகளுடன் குழிக்குள் இறங்குவார்களாம். குருவிகள் செத்தால், அங்கே நச்சு வாயு இருக்கிறது என்று அர்த்தம்!

அமெரிக்கத் தொழிலாளிகளையே இப்படி மனிதக் குருவிகளாக வைத்திருந்த யூனியன் கார்பைட், மூன்றாம் உலக சேரித் தொழிலாளிகளான போபால் ஏழைகள் மீது எத்தகைய அக்கறை கொண்டிருந்திருக்கும் என்பதை ஊகிப்பது கடினமானது அல்ல. அதாவது 1986 டிசம்பர் 3 கறுப்பு விடிகாலையில் போபால் யூனியன் கார்பைட் தொழிற்சாலையில், நச்சு வாயு கசிவைத் தடுப்பதற்காக வைத்திருந்த ஆறு தடுப்பு ஏற்பாடுகள் ஒன்றுகூட வேலை செய்யவில்லை.

யூனியன் கார்பைட் நிறுவனத்தை சில ஆண்டுகளுக்கு முன், அமெரிக்காவிலுள்ள "டோவ் கெமிகல்' நிறுவனம் விலைக்கு வாங்கி அதைத் தன்னுடன் இணைத்துக் கொண்டது. ஆக, "சட்டப்படி' டோவ் கெமிகல்ஸ், யூனியன் கார்பைட் நிறுவனம் அல்ல என்றும் போபால் பேரழிவுக்குத் தான் பொறுப்பேற்க முடியாது என்றும் கூறுகிறது. ஆனால், அதற்குப் பொறுப்பு உள்ளதா, இல்லையா என்பதை இந்திய நீதிமன்றங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

போபால் பேரழிவுக்குக் காரணமான யூனியன் கார்பைட் நிர்வாக இயக்குநர் வாரன் ஆண்டெர்சன் மீதும் வேறு சில நிர்வாகிகள் மீதும் இந்திய நீதிமன்றங்களால் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு, கால் நூற்றாண்டு முடிந்துவிட்டது. அவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள கிரிமினல் குற்றச்சாட்டுகள் திரும்பப் பெறப்படவில்லை. பல்லாயிரக்கணக்கான மக்களின் சாவுக்குப் பொறுப்பேற்க வேண்டிய அந்தக் குற்றவாளிகளைக் கைது செய்து கொண்டு வர, இறையாண்மையுள்ள இந்தியாவால் இதுவரை முடியவில்லை. கிளிண்டனைச் சந்தித்த வாஜ்பாயியோ, ஜார்ஜ் புஷ்ஷையும், ஒபாமாவையும் சந்தித்த மன்மோகன் சிங்கோ, வாரன் ஆண்டெர்ஸனைத் தேடிக் கண்டுபிடித்து இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஒருபோதும் கோரியதில்லை.

இதற்கிடையே, யூனியன கார்பைட் நிறுவனத்தின் மீது இந்திய நீதிமன்றங்களில் தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்வது தொடர்பாக, டோவ் கெமிகல் நிறுவனத்திற்கும் இந்திய அரசாங்கத்திற்குமிடையே பேச்சு வார்த்தைகள் தீவிரமாக நடந்து கொண்டிருப்பதை "அம்னஸ்டி இன்டர்நேஷனல்' சுட்டிக் காட்டியுள்ளது. இதுதான் "ஹமாரா ஹிந்துஸ்தான்!'

-எஸ்.வி.ஆர்.

Pin It

 

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டைக்கு அருகிலுள்ள உஞ்சனை என்ற கிராமத்தை அடுத்துள்ள அரியக்குடி விலக்கு பேருந்து நிறுத்தத்தில் தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடும் நிலையில் கிடத்தப்பட்டிருந்த ஒருவர், அவசர ஊர்தி 108க்கு யாரோ அளித்த தகவலின் பேரில் காப்பாற்றப்பட்டு, காரைக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

“தேவகோட்டை அருகே திருடன் என நினைத்து மனநோயாளி சித்ரவதை – படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதி'' ("மாலை மலர்', 16.12.2009) என காவல் துறை தந்த செய்தியும் இச்சம்பவத்தை முக்கியமற்ற ஒன்றாக்கியது. அøனத்து செய்திகளுக்கும் பின்னே உறைந்து மறையும் உண்மைகளைப் போலவே, இச்செய்தியின் பின்னால் புதையுண்ட உண்மை நிகழ்வை, உழைக்கும் மக்கள் உரிமை இயக்கச் செயலாளரும் பட்டியலின மக்களின் வாழ்வுரிமைக்காக இப்பகுதியில் செயலாற்றி வருபவருமான ஆரோ. ஸ்டீபன்ராஜ் நமக்கு தேடித்தந்த போது, அது இன்னு மொரு வன்கொடுமை அதிர்ச்சி!

தேவகோட்டை வட்டம் கண்ணங்குடி அருகிலுள்ள தேவண்டதாவு என்ற கிராமத்திலுள்ள தனது உறவினரது வீட்டில் தங்கியிருந்த ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம், ஆண்டாவூரணி (தெற்கு)இல் வசித்து வரும் குப்பையன் மகன் கருப்பையா (வயது 50) என்பவர், 13.12.2009 அன்று இரவு 8 மணியளவில்கண்ணங்குடி டாக்ஸி ஸ்டாண்டு அருகில் நின்று கொண்டிருந்தார். அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த கருப்பையாவை திருடன் என முத்திரை குத்தி அவ்வூரைச் சேர்ந்த ஆதிக்க சாதி கும்பல் கொடூரமாகத் தாக்கியுள்ளது. அவரின் வயதையும் பொருட்படுத்தாமல் முழங்காலில் கட்டையால் தாக்கி யும் கைவிரல் நகக்கண்ணில் ஊசியால் குத்தி யும் பழுக்கக் காய்ச்சிய கம்பியால் உடல் முழுவதும் சூடுகள் வைத்தும் அவரை சித்திரவதை செய்துள்ளனர். தேவகோட்டை வட்டம் காவல் நிலையத்திலிருந்து தகவல் கேள்விப்பட்டு கண்ணங்குடிக்கு வந்த உதவி ஆய்வாளரிடம் கூட அவரை ஒப்படைக்க மறுத்து, காவலர்களையும் விரட்டி அனுப்பியுள்ளது அக்கொலைகார கும்பல். அதற்குப் பிறகுதான் உடலில் தீக்காயங்களுடன் இரு நாட்களுக்குப் பிறகு அவர் கண்டறியப்பட்டுள்ளார்.

காரைக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த கருப்பையாவிடம் பலவீனமான வாக்குமூலத்தைப் பெற்று சாதாரண பிரிவுகளில் முதல் தகவல் அறிக்கையொன்றை பதிவு செய்ததோடு, குற்றவாளிகளைத் தப்பிக்க வைக்கும் நோக்கில் அரசு மருத்துவமனையிலிருந்து கருப்பையாவை வெளியேற்றி, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை செய்து கொள்ள அறிவுறுத்தி, 200 ரூபாயையும் தந்து, அவரைக் கவனித்து வந்த உறவினரிடம் மேலணை பாண்டியன், பாலகிருஷ்ணன் என்ற காவலர்களின் மூலம் நெருக்கடியும் தந்துள்ளனர் காவல் துறையினர். ஆனால் 16.12.2009 பிற்பகலில் திருவாடானை அரசு மருத்துவமனையில் வெளி நோயாளியாகவும் மறுநாள் உள்நோயாளியாகவும் கருப்பையா சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கடுமையான சித்திரவதையில் மனரீதியாகவும் பாதிக்கப்பட்ட கருப்பையாவின் வலதுகை மோதிர விரல் நகக்கண் பிடுங்கப்பட்டதால் சீழ் பிடித்து வெட்டி எடுக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட கருப்பையாவின் சகோதரர் பால்சாமியை அழைத்துக் கொண்டு, சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் முறையிட்டபோது, (கள்ளர் சாதியைச் சேர்ந்த) டி.எஸ்.பி.யிடம் இப்புகாரை விசாரணைக்கு அனுப்பி வைப்பதாக அவர் கூறியுள்ளார். ஒட்டுமொத்த காவல் துறையும் நீண்டகாலமாகவே இப்பகுதியில் கள்ளர் சாதி ஆதிக்கக் கும்பலுக்கு அடிவருடியாகவும் "நாடு' அம்பலங்களுக்கு ஏவல் செய்தும் வருவதையும் இப்பகுதி மக்கள் அனைவரும் அறிவர்.

நிலவுடைமை காலத்திய "நாடு' அமைப்பு முறையும், கள்ளர் சாதி ஆதிக்கமும் இப்பகுதியில் ஒழிக்கப்படாத வரை ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான வன்கொடுமைகளுக்கும் இழிவுகளுக்கும் முடிவில்லை. இன்ன சாதியை சேர்ந்தவர் என்று தெரிந்தே கொடுமைப்படுத்தியதோடு அல்லாமல், நாதியற்ற உயிராய் நடுக்காட்டில் வீசியெறிந்து விட்டு, 200 ரூபாயில் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வந்துவிடலாம் என்ற சாதித் திமிருக்கு சாவுமணி அடிக்கும் எதிர்ப்பு உணர்வுக்கு ஒடுக்கப்படும் மக்களை உயர்த்த வேண்டும்.

கருப்பையாவை வன்கொடுமைக்கு உட்படுத்தி, சாதி வெறியாட்டம் நடத்திய 10 பேர் கொண்ட கும்பலின் தலைவனும் "கண்ணங்குடி நாடு' அம்பலத்தின் மகனுமாகிய படைவென்றான் என்பவனை எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் உடனடியாகக் கைது செய்யவும், பாதிக்கப் பட்ட கருப்பையாவுக்கு உரிய மருத்துவ சிகிச்சை மற்றும் நிவாரணம் தரவும், குற்றவாளிக் கும்பலுக்கு பாதுகாப்பாகச் செயல்படும் காவலர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி "ஒடுக்கப்பட்டோர் விடுதலை முன்னணி', "உழைக்கும் மக்கள் உரிமை இயக்கம்', "தியாகி இம்மானுவேல் பேரவை', "உழைக்கும் பெண்கள் இயக்கம்' ஆகியன 2010 சனவரி 3 அன்று தேவகோட்டையில் கண்டனப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்

- இளம்பரிதி

 

Pin It

உட்பிரிவுகள்