வெங்கிடசத்திரம் தலித் தெருக்களில் விடியற்காலை நான்கு மணிக்கு,"தண்ணி சேந்தப் போறோம் எல்லாரும் வாங்க' என்ற குரல் கேட்கும். வீடுகளிலிருந்து பெண்கள் வருவார்கள். எல்லா வீடுகளிலிருந்தும் வந்துவிட்டார்களா என்று உறுதிப்படுத்திக் கொண்டு, சேரிக்கு நடுவிலிருக்கும் அந்த கிணற்றுக்கு வருவார்கள். ஒரு பக்கத்திற்கு எட்டு ராட்டினங்கள் என்று இரண்டு பக்கங்களிலும் பதினாறு ராட்டினங்கள் இருக்கும். அதற்கு முந்திய இரவே கிணற்றுக்குள் கயிற்றுடன் இறக்கிவிடப்பட்ட பிளாஸ்டிக் குடங்கள் இரைக்கப்படும். இப்படி காலையில் சுமார் 50 குடங்கள் தண்ணீர் இரைக்கப்பட்டவுடன் கிணறு காலியாகிவிடும்.

மீண்டும் கிணற்றுக்குள் (இப்பொழுது கிணறு தரை தட்டியிருக்கும். பாறைகள்தான் தெரியும்) பிளாஸ்டிக் குடங்களை விட்டுவிடுவார்கள். மாலை அய்ந்து மணியளவில் காலையில் தண்ணீர் இரைக்காத மீதிப்பேர் வந்து இரைப்பார்கள். காலை முதல் மாலைவரை ஊற்றெடுத்த தண்ணீர் சுமார் அய்ம்பது குடங்கள் கிடைக்கும். கிணற்றில் தண்ணீர் வற்றிவிடும். மீண்டும் குடங்கள் போடப்படும். இரவெல்லாம் நீர் ஊறிவர, காலையில் தண்ணீர் இரைப்பார்கள். இப்படி சுமார் நூறு குடம் தண்ணீரில்தான் ஒரு கிராமமே வாழ்கிறதென்றால் நம்ப முடிகிறதா உங்களால்?

வேலூர் பேரணாம்பட்டு ஒன்றியம், வெங்கிடசத்திரம் ஊராட்சி மன்ற எல்லையில் அமைந்திருக்கும் தலித் பகுதியான வெங்கிடசத்திரத்தில்தான் இப்படி நடக்கிறது. ஏறக்குறைய நான்கு ஆண்டுகளாக தண்ணீரின்றி அம்மக்கள் வதைபடுகிறார்கள். வெங்கிடசத்திரம் ஊராட்சி, தேவலாபுரம் ஊராட்சிக்குட்பட்ட பிற தலித்தல்லாத பகுதிகளில் எல்லாம் குடிநீருக்கான எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால், எந்தவிதமான நடவடிக்கையும் இப்பகுதி மக்களுக்காக எடுக்கப்படவில்லை. கடந்த நான்கு ஆண்டுகளாக இம்மக்கள் எல்லா வகையிலும் தங்கள் தேவைகளை ஊராட்சி மன்றத் தலைவர், மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோருக்குத் தெரிவித்தும் பலனில்லை.

வெங்கிடசத்திர ஊராட்சி மன்றத் தலைவர் எல். நாகராஜ், தான் வாழும் பகுதிக்கும், தலித்தல்லாத பிற மக்களுக்கு மட்டும் எல்லா வசதிகளையும் செய்து கொடுப்பதாக, வெங்கிடசத்திர தலித் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். "வெங்கிடசத்திர ஊராட்சிக்குட்பட்ட தலித் பகுதிக்கு தண்ணீர் தராதவர்கள், ஒரு நாளைக்கு அய்ம்பது குடங்கள் தண்ணீரை தோல் தொழிற்சாலை, காலணி தொழிற்சாலை மற்றும் ஆம்பூர் நகர மக்களுக்கும் விற்கிறார்கள். இது எப்படி நியாயம்?' என்று தலித்துகள் குறுகின்றனர்.

வெங்கிடசத்திரம் பகுதியின் முக்கிய பிரமுகரான அலெக்சை சந்தித்தபோது, “நாலு வருஷமா போராடுறோம். ஆனால் ஒரு பயனும் இல்ல. தலித் மக்களுக்கு ஒதுக்கப்படற நிதியிலிருந்து எங்க பகுதிக்கு குடிநீர் வசதி செஞ்சி குடுங்கன்னு கேட்கிறோம். ஆனால், அந்தப் பணம் என்னாகுதுன்னே தெரியல'' என்றார். அப்பகுதியில் வசிக்கும் தே. கருணா, “இங்கிருக்கிற ஒட்டுமொத்த குடிநீர்ப் பிரச்சனையைத் தீர்க்க, குறிப்பிட்ட அளவு நிதி ஒதுக்கியிருப்பதாக தமிழக முதல்வர் அறிவிக்கிறாங்க. ஆனால், வெங்கிடசத்திரம் தலித்துகளுக்கு தண்ணீர் குடுங்கன்னா, இங்க இருக்கிற ஊராட்சி மன்றத் தலைவரும் வட்டார அலுவலரும் பணம் இல்லைன்னு சொல்றார். எங்க ஊருக்கு வெங்கிடசத்திரம்னு பேரு. ஆனா, சத்திரத்தில தண்ணியத்தான் காணோம்'' என்றார்.

போராடும் மக்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தை எழுதியவர் மா. ராமநாதன் என்ற வட்டார வளர்ச்சி அலுவலர். அவர், 'பொதுமக்கள் அனைவரும் காலி குடத்துடன் போராட்டம்' என்று எழுதினார். இதற்கு தலித் இளைஞர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். "இந்தப் போராட்டம் காலையிலிருந்து சோறு தண்ணியில்லாம நடக்குது. இந்த ஊர் மக்கள் என்ன ஏதுன்னு திரும்பிக்கூட பார்க்கவே இல்லை. போராடுனது பொதுமக்கள் இல்லை. தலித் மக்களை எப்ப பொதுமக்களா சேத்தீங்க..?" என்று தலித் இளைஞர்கள் கேட்கவே, அந்த அதிகாரி பொதுமக்கள் என்பதை மாற்றி 'வெங்கிடசமுத்திர காலனி தலித் மக்கள் என்று எழுதினார். உடனே தலித் அல்லாத ரங்காபுரம் ஊர்மக்கள் - 'அவுங்க போராடி எங்களுக்குத் தண்ணி வருதுண்ணா, அந்த தண்ணியே வேண்டாம்' என்று சொல்லி கிளம்பி விட்டனர். அதிகாரிகளிடம் மீண்டும் புது ஒப்பந்தத்தை அவர்கள் மட்டும் போட்டுக் கொண்டனர்.
இந்நிலையில், ஆகஸ்ட் 15 அன்று ஆட்சியாளர்களும் ஆளும் வர்க்கங்களும் சுதந்திர நாள் கொடியேற்றி, மிட்டாய் தின்று கொண்டிருக்க, வெங்கிடசத்திர தலித் மக்கள் காலிகுடங்களுடன் ஊராட்சி மன்றத் தலைவர் நாகராஜ் வீட்டை முற்றுகையிட்டனர். நாகராஜ் தலைமறைவாகிவிட, சுதந்திர தினத்தன்று ஊராட்சியில் நடைபெறும் "கிராம சபா' கூட்டம், வெங்கிடசத்திர ஊராட்சியின் இன்னொரு கிராமமான ரங்காபுரத்தில் நடக்கிறது என்பதை அறிந்த மக்கள், அங்கு சென்று தலைவரைப் பிடித்துவிடலாம் என்று போனார்கள். கிராமசபா கூட்டத்தை நடத்தாமல் தலைவர் தப்பிவிட்டார் என்ற செய்தி தலித் மக்களுக்குக் கிடைத்தது. காலையிலிருந்து குழந்தைகளுடன் அலையும் பெண்கள், கோபத்துடன் கோரிக்கை முழக்கங்களை எழுப்பிக் கொண்டிருந்தனர்.
கூட்டம் நடக்கும் என்று நினைத்து கூட்டத்திற்கு வந்த அரசு அலுவலர் சேகர், தலித் மக்களால் சிறைப்பிடிக்கப்பட்டார். வட்டார வளர்ச்சி அலுவலரும், மற்ற அதிகாரிகளும் வரவேண்டும் என்று மக்கள் கோரினர். காலை எட்டு மணியிலிருந்து மதியம் இரண்டு மணிவரை, இம்மக்களின் வீரஞ்செறிந்த போராட்டத்தை ரெங்காபுரத்திலுள்ள சாதி இந்துக்கள் வேடிக்கைகூட பார்க்கவில்லை என்பதுதான் இங்கே நாம் சுட்டிக்காட்ட வேண்டிய ஒன்று. மக்களால் சிறைப்பிடிக்கப்பட்ட அரசு அதிகாரியை மீட்க, காவல்துறை அதிகாரிகள் வந்தனர். கிராமசபா கூட்டம் நடைபெறும் இடத்தில் காவல் துறைக்கு என்ன வேலை என்று மக்கள் கேட்டனர்; அதிகாரியை விட மறுத்தனர். மீறி அதிகாரியை மீட்க நினைத்தால், எங்களைக் கைது செய்து அவரை அழைத்துச் செல்லுங்கள் என்று பெண்கள் வீரத்துடன் போர் முழக்கம் செய்ய வட்டார வளர்ச்சி மற்றும் திட்ட அலுவலர்கள் அங்கு வந்தனர்.
தலித் மக்கள் தங்கள் போராட்டத்தின் தீவிரத்தையும், கோரிக்கைகளையும் அவர்களிடம் சொல்ல, இந்த நேரத்தில் ரங்காபுரம் தலித் அல்லாத மக்கள் தங்களுக்கும் தண்ணீர் வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். நாளெல்லாம் போராடியது தலித் மக்கள். இப்போது இரண்டு ஊருக்கும் தண்ணீரா என்று முணுமுணுத்தனர் தலித் இளைஞர்கள். ஆனாலும், அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் இடையே ஓர் ஒப்பந்தம்போடப்பட்டது. வெங்கிடாசத்திரம், ரங்காபுரம் ஆகிய ஊர்களுக்கு ரான்னகொத்தூர் மலையடிவாரத்தில் 950 அடி போர் போட்டு, இன்னும் 20 நாட்களுக்குள் தண்ணீர் தருவதாகவும், அதுவரை தற்காலிகமாக ஒரு நாள் விட்டு ஒரு நாள் டிராக்டரில் தண்ணீர் தருவதாகவும் அதிகாரிகள் உறுதியளித்தனர்.
ஆனால், போராட்டம் முடிந்து இவ்வளவு நாட்களாகியும், வெங்கிடசத்திரத்திற்கு அதிகாரிகள் தந்த ஒப்புதலின்படி எதுவும் நடக்கவில்லை. இருபது நாட்களுக்குள் மாவட்ட ஆட்சியரின் ஒப்புதலைப் பெற்று, ஆழ்துளைக் கிணறு அமைக்கப்படும் என்றனர். அதுவும் நடக்கவில்லை. ஒருநாள் விட்டு ஒருநாள் தண்ணீர் டிராக்டரில் வந்து தருகிறோம் என்றார்கள். அதுவும் வரவில்லை. தலித் மக்கள் அதிகாரிகளைச் சென்று கேட்டால் அலட்சியப் படுத்தப்படுகின்றனர். அதிகாரியை சிறைப்பிடித்தபோது அமைதிகாத்து அடங்கிய அதிகாரிகள், மீண்டும் தலித் மக்கள் கேட்பவர்களாக மாறியவுடன் ஏளனமாகப் பார்க்கின்றனர். இதிலிருந்து என்ன தெரிகிறது?