இந்திய நாடாளுமன்றத்தின் மீது 13.12.2001 அன்று நடைபெற்ற தாக்குதலுக்கான திட்டத்தைத் தீட்டியதாகப் பொய்யாகக் குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டவர், பேராசிரியர் எஸ்.ஏ.ஆர். கிலானி. கீழ் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட அவரை, உயர் நீதிமன்றமும் அதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றமும்-இவ்வழக்குக்கும் அவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று விடுதலை செய்தன. காஷ்மீரில் பிறந்த இவர், தில்லி பல்கலைக்கழகத்தில் ஒரு பேராசிரியராகப் பணியாற்றிய போதும், தனது மண்ணான காஷ்மீரில் இந்திய அரசு அரங்கேற்றி வரும் கொடூரமான மனித உரிமை மீறல்களை வெளிக்கொண்டு வருவதற்கு, ஜனநாயக வழிமுறைகளில் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருந்ததுதான் இவர் செய்த குற்றம். இவரை எந்த வழக்கிலாவது சிக்க வைக்க வேண்டும் என்று காத்துக் கொண்டிருந்த இந்திய உளவுத்துறை, நாடாளுமன்ற தாக்குதல் வழக்கு பதிவு செய்யப்பட்ட மறுநாளே கிலானிதான் அதற்கு மூளையாக செயல்பட்டார் என்று கைது செய்தது. அன்று முதல் இன்று வரை உச்ச நீதிமன்றமே அவரை குற்றமற்றவர் என்று தீர்ப்பளித்து விட்டபோதிலும்-இச்சமூகம் அவரை ஒரு பயங்கரவாதியாக, தேசத்துரோகியாக, ஆபத்தானவராகவே பார்க்கிறது.

kilani அண்மையில் அவர் பங்கேற்ற ஒரு கருத்தரங்கில் இந்து மதவெறி அமைப்பை (ஏ.பி.வி.பி.) சேர்ந்த மாணவன் ஒருவன் மேடையில் வைத்து, கூடியிருந்த பார்வையாளர்கள் முன்னிலையில் கிலானி மீது காறித் துப்பியிருக்கிறார். இதுதான் உரிமைக்காக குரல் கொடுக்கும் ஒருவருக்கு, இந்த இந்து சமூகம் கொடுக்கும் மரியாதை. சிறையில் பல கொலை முயற்சிகளிலிருந்து தப்பித்து பல்வேறு துன்புறுத்தல்களை அனுபவித்து மீண்ட கிலானி, தான் விடுதலையான நாளிலிருந்து சிறையில் அரசியல் கைதிகள் கீழ்த்தரமாக நடத்தப்படுவதற்கு எதிராகப் போராடி வருகிறார்.

அண்மையில் அகில இந்திய அளவில் "அரசியல் கைதிகளின் விடுதலைக்கான அமைப்பை' அவரும் பல்வேறு மனித உரிமையாளர்களும் இணைந்து தொடங்கியுள்ளனர். இதற்கான அறிமுக விழாவில் பங்கேற்பதற்காக கிலானி சென்னை வந்திருந்தார். இந்து சமூகம் அளித்து வரும் கொடூரமான அனுபவங்களையெல்லாம் தனது உறுதிக்கான உரமாக மாற்றிக் கொண்டு, தொடர்ந்து மனித உரிமைகளுக்காகப் போராடி வரும் கிலானியை-‘தலித் முரசு'க்காக சந்தித்தபோது நடைபெற்ற உரையாடலில் இருந்து சில பகுதிகள்.

சந்திப்பு : பூங்குழலி

தங்களுடைய குடும்பப் பின்னணி, மற்றும் இள வயது பற்றி கூறுங்கள்?

நான் காஷ்மீரில் பிறந்தேன். அங்குதான் வளர்ந்தேன். பள்ளிப் படிப்பையும் காஷ்மீரிலேயே முடித்தேன். மேற்படிப்பிற்காக தில்லிக்கு வந்தேன். தில்லி பல்கலைக்கழகத்தில் இருந்து எம்.ஏ. மற்றும் எம்.பில். பட்டங்கள் பெற்றேன். பின்பு 1997 இல் இருந்து தில்லி பல்கலைக் கழகத்தில் கற்றுக் கொடுத்தேன். அன்றிலிருந்து இன்று வரை அங்குதான் பணிபுரிகிறேன். மனித உரிமைகள் தொடர்பான பணிகளில் தொடக்கத்தில் இருந்தே செயல்பட்டுக் கொண்டிருந்தேன். நான் தில்லிக்கு வந்த நாள் முதலாக மனித உரிமைப் பணிகளில் ஈடுபட்டு வந்திருக்கிறேன். எனது கவனம் முதன்மையாக காஷ்மீரை குறித்தே இருந்தது. காஷ்மீர் இயக்கத்தோடு நான் என்னை இணைத்துக் கொண்டேன். காஷ்மீரில் இந்திய ராணுவம் நடத்தும் மனித உரிமை மீறல்களை வெளிக் கொணர பாடுபட்டேன்.

என்ன மாதிரியான வகைகளில் வெளிக் கொணர்ந்தீர்கள்?

பல வகைகளில்... மாநாடுகள், கருத்தரங்குகள், கண்காட்சிகள் நடத்துவது போன்ற முறைகளில். பின்னர் 2001இல் நான் கைது செய்யப்பட்டேன். சிறையில் அடைக்கப்பட்டேன். சிறையிலிருந்து வெளிவந்த பிறகும் மரண தண்டனை விதிக்கப்பட்டவனாக இரண்டு ஆண்டுகள் இருந்தேன். நான் வெளிவந்த பிறகு சிறைக்கைதிகளுக்காகப் பணியாற்றுவது என முடிவு செய்தேன். ஏனெனில் நான் சிறையில் அவர்களின் நிலையை கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். குறிப்பாக, அரசியல் கைதிகள் எனப்படுபவர்கள் அதாவது பல்வேறு அரசியல் கருத்தியல்களைக் கொண்டவர்கள், பொது நலனிற்காகவும் சமூக முன்னேற்றத்திற்காகவும் போராடுபவர்கள் அனைவருமே அரசியல் கைதிகள்தாம். இந்த அரசியல் கைதிகள் சிறைகளில் மிக மோசமாக நடத்தப்படுகின்றனர். அதற்குக் காரணம், அவர்கள் நம்பும் அரசியல் கருத்தியல்கள். அதனால் நான் சிறையிலிருந்து வெளி வந்த அன்றே பத்திரிகையாளர் சந்திப்பில் நான் அரசியல் கைதிகளுக்காகப் பணியாற்றப் போகிறேன் என்று அறிவித்தேன்.

நாடாளுமன்றம் மீது நடைபெற்ற தாக்குதலில் உங்களுக்கு தொடர்பு இருப்பதாக உங்கள் மீது ஒரு பொய் வழக்குப் போடப்பட்டது. அதிலும் தாக்குதல் நடந்த மறுநாளே நீங்கள் கைது செய்யப்படுகிறீர்கள். என்ன பின்னணியில் உங்கள் மீது அப்படியொரு பொய் வழக்கு போடப்பட்டது என்பதை சொல்ல இயலுமா?

என்னால் ஊகிக்க மட்டுமே முடியும். உண்மையை காவல் துறையினர் மட்டும் தான் சொல்ல முடியும். நான் தில்லியில் காஷ்மீர் பிரச்சனைக்காக குரல் கொடுத்து வந்தேன். காஷ்மீரில் இந்தியா செய்து வந்த தவறுகளை, இந்திய ஆக்கிரமிப்பு ராணுவம் செய்து வந்த தவறுகளை நான் வெளிக் கொணர்ந்து கொண்டிருக்கிறேன். இதனால் தொடக்கம் முதலாகவே நான் குறி வைக்கப்பட்டிருந்தேன். ஏறத்தாழ 1994-95 முதலே இந்திய அரசின் பல துறைகளிலிருந்தும் என்னைத் தொடர்பு கொண்டு-என்னை விலைக்கு வாங்கவோ, அச்சுறுத்தவோ தொடர்ந்து முயல்கின்றனர்.

kilani_ நாடாளுமன்றத் தாக்குதல் நடந்தவுடன், இந்திய அரசு அதை காஷ்மீருடன் தொடர்புபடுத்த விரும்பியது. அதற்கான
காரணம் என்னவென்று பார்க்கையில், இது அமெரிக்க இரட்டை கோபுரங்கள் மீதான தாக்குதலுக்குப் பிறகு நடைபெற்றது. அச்சமயத்தில், பயங்கரவாதத்திற்கு எதிரான போருக்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்' என்ற பெயரில் உலகமே தலைகீழாக நின்றது. காஷ்மீர் இயக்கத்தைப் பயங்கரவாதத்தோடு தொடர்பு படுத்த இந்தியா பெரிதும் விரும்பியது. இந்த நிகழ்வு அனைவரின் கண்டனத்திற்கும் உள்ளானதால், காஷ்மீர் போராளி இயக்கங்கள், பிற இயக்கங்கள் என அனைவரும் இதனை கண்டித்ததால், இந்தியா இந்நிகழ்வை காஷ்மீரோடு தொடர்பு படுத்தியது. அதன் மூலம் உலகின் பார்வையில் காஷ்மீர் இயக்கத்தை ஒரு பயங்கரவாத இயக்கமாக சித்தரிக்க அது முயன்றது. இதற்காக இந்த நிகழ்வைத்திறம்பட திட்டமிட்டவராக ஒருவரை காட்ட வேண்டி இருந்தது. அப்படியான ஒரு ஆளை அவர்கள் தேடிய போது-நான் நினைக்கிறேன் நான் தான் அதற்கு சரியான ஆளாக இருந்திருக்க வேண்டும்.

ஏனெனில், நான் தில்லியில் நல்ல முறையில் வாழ்ந்து கொண்டிருந்தேன். கல்வித் துறையில் இருந்தேன். இந்தியாவின் மிக உயர்ந்த நிறுவனம் ஒன்றில் பணியிலிருந்தேன். பரவலாக அறியப்பட்டவனாக இருந்தேன். அதிலும் காஷ்மீர் சிக்கலுக்காக குரல் கொடுப்பவனாக நன்கு அறியப்பட்டிருந்தேன். இந்தியாவின் செயல்கள் குறித்தும் இந்தியாவின் ஆக்கிரமிப்பு குறித்தும் பேசுபவனாக அறியப்பட்டிருந்தேன். அதனால் அத்தகையதொரு குற்றச்சாட்டை வைத்தால், அனைவரும் நம்பத் தகுந்த அனைத்து விஷயங்களும் என்னிடம் இருந்தன. மக்கள் ஏற்கனவே நான் இது குறித்தெல்லாம் பேசுபவன் என அறிந்திருந்தனர். அதனால் என் மீது இத்தகைய குற்றச்சாட்டு வைக்கப்பட்ட போது, அதை நம்புவது அவர்களுக்கு எளிதாக இருந்தது. இதுதான் நான் புரிந்து கொண்ட வரையில் நான் கைது செய்யப்பட்டதன் பின்னணியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

உங்கள் பார்வையில் வழக்கின் விசாரணை எப்படி நடந்தது என்று நினைக்கிறீர்கள்? உங்கள் பகுதி மட்டுமல்ல, ஒட்டுமொத்த வழக்கு விசாரணையும் நேர்மையாக நடந்ததாக நினைக்கிறீர்களா?

காவல் துறைக்கும் நீதித் துறைக்கும் இடையில் மோசமான கூட்டு உள்ளது என்று நான் வெளிவந்த அன்றே கூறினேன். அதையே தான் இன்று வரை சொல்கிறேன். விசாரணை மிக வேகமாக நடைபெற்றது. முழுவதுமே அதி வேகத்தில் நடைபெற்றன. எங்கள் தரப்பை எடுத்துச் சொல்ல வாய்ப்பே இல்லை. எடுத்துக்காட்டாக, அப்சலின் நிலையை எடுத்துக் கொள்ளுங்கள். உலக அளவில் பின்பற்றப்படும் சட்டம் மட்டுமல்ல; இந்திய குற்றவியல் சட்டப்படியும் குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொருவருக்கும் தங்கள் தரப்பை எடுத்துச் சொல்ல முழு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். இந்த நாட்டின் சட்டம் என்ன சொல்கிறது என்றால், குற்றம் சாட்டப்பட்ட எவருக்கும் ஒருவழக்குரைஞரை அமர்த்தித் தருவது அரசின் கடமையாகும்.

ஆனால் இந்த வழக்கின் நீதிமன்ற ஆவணங்களைப் பார்த்தால், அப்சலுக்கு விசாரணை நீதிமன்றத்தில் வழக்கறிஞரே அமர்த்தப்படவில்லை என்பது தெளிவாகும். விசாரணை நீதிமன்றம் என்பதே ஒரு வழக்கின் போக்கை, அமைப்பை நிர்ணயிப்பது. அங்குதான் வழக்கு கட்டமைக்கப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிரான சான்றுகள் இங்குதான் ஆய்வுக்குள்ளாக்கப்படுகின்றன. சாட்சிகள் இங்குதான் குறுக்கு விசாரணை செய்யப்படுகிறார்கள். மேல் நீதிமன்றங்களான உயர் நீதி மன்றமோ, உச்ச நீதி மன்றமோ ஒரு சட்ட வாய்ப்பு மட்டுமே. அவை விசாரணை நீதிமன்றத்தின் ஆவணங்களை அடிப்படையாக வைத்தே தங்கள் முடிவுகளை எடுக்கின்றன. அதனால் விசாரணை நீதிமன்றத்திலேயே வழக்கின் அமைப்பு தவறாகச் செல்லுமானால், உயர் நீதிமன்றத்திலோ, உச்ச நீதிமன்றத்திலோ அற்புதங்கள் நடக்கும் என எதிர்பார்க்க முடியாது.

நீங்கள் வழக்கு ஆவணங்களைப் பார்த்தால் அப்சல், தன்னால் வழக்குரைஞரை நியமித்துக் கொள்ள இயலாத நிலைமையையும், நீதிமன்றம் தனக்கு ஒரு வழக்கறிஞரை நியமித்துத் தரக் கோரியும், ஏறத்தாழ 4 அல்லது 5 மனுக்களை அளித்திருப்பதை காண முடியும். அம்மனுக்களில் அவரே சில வழக்குரைஞர்களின் பெயர்களையும் குறிப்பிடுகிறார். அவர்களில் ஒருவரை நியமித்துத் தரக் கோருகிறார். ஆனால் அரசு எந்த வழக்குரைஞரையும் நியமித்துத் தரவில்லை. அதனால் என்ன நடந்தது. எல்லாம் அவருக்கு எதிராக மாறியது. அப்சல் மீதான வழக்கை ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், விசாரணை நீதிமன்றத்திலும் உயர் நீதிமன்றத்திலும் வழங்கப்பட்ட தீர்ப்பு, அப்சலின் ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே வழங்கப்பட்டிருந்தது. உச்ச நீதிமன்றம் அதை ஒதுக்கியுள்ளது. இதனால் உச்ச நீதிமன்றம் அப்சலுக்கு எதிராக நேரடியான சான்று இல்லை என்று கூறியது. ஆனால் அதே நேரத்தில் காவல் துறை போலியான ஆவணங்களையும், சான்றுகளையும் தயாரித்துள்ளது என்றும் உயர் நீதிமன்றம் சொல்கிறது.

அவருக்கு எதிராக இருப்பதெல்லாம் சூழ்நிலைச் சான்றுகள் மட்டுமே. அந்த சூழ்நிலைச் சான்றுகளையுமே பார்த்தால், அவை அப்சலுக்கு எதிராக நிலைப்பதற்கு ஒரே காரணம், அவருக்கென ஒரு வழக்குரைஞர் இல்லாததினால் மட்டுமே. ஒரு சூழ்நிலைச் சான்றை எடுத்துக் கொள்வோம். எச்.எஸ்.கில் எனும் போலிஸ் அதிகாரி விசாரணை நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில், அப்சல்தான் நாடாளுமன்றத் தாக்குதலில் கொல்லப்பட்ட 5 நபர்களையும் அடையாளம் காட்டியதாகக் கூறினார். அதன் மூலம் அப்சலுக்கு இதில் தொடர்பு இருப்பது தெரிகிறது என்ற வகையில் சொல்லப்பட்டது. ஆனால் உச்ச நீதிமன்றம் என்ன சொல்கிறது என்றால், இந்த எச்.எஸ்.கில்லை யாருமே குறுக்கு விசாரணை செய்யவில்லை. அவர் பொய் சொல்லக் கூடும் என்ற கேள்வியே எழுப்பப்படவில்லை. நீதிமன்ற ஆவணங்களைப் பார்த்தால், அப்சல், கில்லின் வாக்குமூலத்தை மறுத்திருப்பது தெரியும். ஆனால் அப்சலுக்கு ஒரு வழக்கறிஞர் கூட இல்லாத நிலையில் எச்.எஸ். கில்லை யார் குறுக்கு விசாரணை செய்திருக்க முடியும்? அவர் பொய் சொல்கிறார் என்ற கேள்வியை யார் எழுப்பியிருக்க முடியும்? ஆக, இந்த சூழ்நிலைச் சான்று அப்சலுக்கு வழக்கறிஞர் இல்லாத ஒரு காரணத்தினால் மட்டுமே நிலைத்தது.
ஒட்டுமொத்த விசாரணையும் அதி வேகத்தில் நடைபெற்றது.

"பொடா' சட்டத்தின் கீழ் நடைபெற்ற முதல் வழக்கு இது. சிறப்பு நீதிமன்றம், சிறப்பு நீதிபதி மற்றும் "சிறப்பு நோக்கம்' உடையதாகவும் இருந்தது. நாங்கள் முதன் முதலில் அந்நீதிமன்றத்திற்குச் சென்ற போது, அது எங்கள் மீதான குற்றப்பத்திரிகையைப் பதிவு செய்வதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு, காவல் துறை எங்கள் மீதான குற்றச்சாட்டிற்கு எவ்வித ஆதாரத்தையும் கொடுக்கவில்லை. காவல் துறை அது வரையில் எங்கள் மீது எந்த குறிப்பிட்ட குற்றச்சாட்டையும் சுமத்தவில்லை. ஆனால் அந்த நிலையிலேயே நீதிபதி ஒரு முன் தீர்மானத்திற்கு வந்து விட்டவராகத் தென்பட்டார். அந்த முதல் நாளில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான அப்சான் மற்றும் இவரது கணவரான ஷவுகத்தும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அப்சான் நீதிமன்றத்தில் அழுது கொண்டிருந்தார். அவர் ஏன் அழுது கொண்டிருக்கிறார் என நீதிபதி கேட்டார். அதற்கு அப்சான், “நான் எதற்காக கைது செய்யப்பட்டிருக்கிறேன். எதற்காக சித்திரவதை செய்யப்படுகிறேன் என்று தெரியவில்லை, நான் என்ன குற்றம் செய்தேன்?'' என்று கேட்டார். உடனே அதற்கு பதிலளித்த நீதிபதி “நாடாளுமன்றத்தைத் தாக்க சதித்திட்டம் தீட்டும்போது இதைப் பற்றி நீ யோசித்திருக்கவேண்டும்'' என்று கூறினார். “இப்போது வருத்தப்பட்டு என்ன பயன்? நாடாளுமன்றத் தாக்குதலில் இறந்தவர்களைப் பற்றி, அவர்களின் குடும்பங்களைப் பற்றி யோசித்துப் பார்'' என்றெல்லாம் கூறினார்.

இது எப்போது? குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு 6 மாதங்களுக்கு முன்னரே. அப்போதே அந்த முதல் நாளிலேயே, நாங்கள் குற்றவாளிகளென நீதிபதி தீர்ப்பு சொல்லிவிட்டார். நீதிபதி பல முறை நீதிமன்றத்திலேயே வெளிப்படையாக “இந்த நீதிமன்றத்தில் எனக்கு அரசுத் தரப்பு வழக்கறிஞரே தேவையில்லை'' என்று சொல்லியிருக்கிறார். ஆக, இந்த வழக்கு முழுமையாக எங்களுக்கு எதிராகவே இருந்தது. இதில் மேலும் வேதனையானது என்னவெனில், ஊடகங்களும் எதிராகவே இருந்தன. நீதிமன்றத்தில் நடப்பவை ஊடகங்களில் நேர்மையாக வெளியிடப்படவில்லை. இத்தனைக்கும் விசாரணை வெளிப்படையாகவே நடைபெற்றது. ஊடகங்கள் அனைத்தும் விசாரணையை நேரடியாகவே பார்த்தன. ஆனால், காவல் துறை அவர்களுக்கு என்ன கதையை சொல்கிறதோ அதை மட்டுமே வெளியிட்டார்கள். எங்கள் வழக்குரைஞர்கள் சொல்வதை அவர்கள் வெளியிடவில்லை.
-அடுத்த இதழிலும்