உலகத் தமிழ் செம்மொழி மாநாடு என்ற பெயரில் கருணா அரசு 450 கோடிகள் ரூபாய் செலவில் செய்த ஆர்ப்பாட்டங்களில் யானை, குதிரைப்படைகள் ஊர்வலங்களைத் தவிர வேறு சில பண்பாட்டு அடிப்படையிலான நோக்கங்க‌ளும் இந்தத் தடபுடல்களுக்கு நடுவே இருப்பதை (இருந்து வந்திருப்பதை) பார்க்க முடிகிறது.

உதாரணமாக மாநாட்டை நடத்தும் உலகத் தமிழாராய்ச்சிக் கழகம் இதுவரை என்ன செய்திருக்கிறது என்ற கேள்விக்கு கற்றுக் கொடுப்பது, செய்வது, உருவாக்குவது என்று பட்டியலிட முயல்கின்றனர். மாநாட்டுக்கு அளிக்கப்படும் விளம்பரங்களுக்கு செலவழிக்கப்படும் தொகைக்கும் இந்த சாதனைப் பட்டியலுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள அளவிற்கு வித்தியாசம் உள்ளதை சிறுகுழந்தைகூட கண்டு கொள்ளும். இதுவரை உலகத் தமிழ் மாநாடுகள் என்ற பெயரில் அண்ணாதுரை முதல் கருணாநிதி ஆட்சி வரையில் நடத்தப்பட்ட ஆடம்பர விழாக்களில் நிகழ்த்தப்படும் சொற்பொழிவுகளும், படிக்கப்படும் கட்டுரைகளும் தமிழனின் பழம்பெருமை பற்றிய வறட்டுக் கத்தல்களாகத்தான் இருந்துள்ளனவே தவிர உண்மையிலேயே மொழி வளர்ச்சிக்கு உதவக் கூடிய ஆய்வுகளோ, தீர்மானங்களோ பேச்சளவில் கூட இருந்ததில்லை. கடந்த கோயம்புத்துர் மாநாடு இவற்றின் உச்சகட்டமாகும்.

wctc_logoஇந்த மாநாடுகள் மொழிவளர்ச்சிக்காக நடத்தப்படுவதை ஏன் தனது நோக்கமாக அறிவிக்கவில்லை? தமிழ் நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் ஆங்கில மொழிவழிப் பள்ளிகள் தோன்றி ஒரு தலைமுறையே மொழியினின்று அந்நியப்பட்டுப் போய்க் கொண்டிருக்கின்ற இந்தச் சூழலில் தமிழுக்கு மாநாடு என்பது வெறும் கேலிக்கூத்தாக அல்லவா இருக்கிறது. தவிர தமிழனின் சாதனைகளை உலகறியச் செய்வது என்பது இன்னொரு சாதனை. 1947க்குப் பிறகு முதன்முதலாக மொழியுரிமைக்காகப் போராடிய வரலாறு இக்காலத் தமிழர்களுக்கு உண்டு, அந்த இரத்தம் தோய்ந்த வரலாற்றையும், தமிழகமக்கள் சந்தித்த அடக்குமுறையையும், இந்திய ராணுவத்தின் கொலைவெறியால் உயிரிழந்த நுற்றுக்கும் மேற்பட்ட தமிழர்களின் தியாகத்தையும் உலகுக்கு வெளிச்சம் போட்டுக்காட்ட இந்த ஆட்சியாளர்கள் எந்தக் காலத்திலாவது முயற்சி செய்துள்ளார்களா?

இது போன்ற எதுவுமே இந்த மாநாடுகளில் இடம் பெறாததற்குப் காரணம் இவை எல்லாமே ஆளும் வர்க்கத்தின் ஆதரவோடு நடத்தப்படுவதுதான். எந்த வர்க்கம் தனது நலன்களுக்காக நமது மொழியை அழித்து நாசமாக்கி வருகிறதோ, எந்த வர்க்கம் விடுதலைப் போராளிகளைச் கொன்று குவிக்க துணைநின்றதோ, சிறையில் அடைத்து சித்திரவதை செய்து வருகிறதோ அதே வர்க்கம்தான் உலகத்தமிழ் மாநாடு நடத்தி தன்னை தமிழ் மக்களின் காவலனாகக் காட்டிக் கொள்ள முயல்கிறது.

அடக்கி ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களைச் சேர்ந்த அறிவுதுறையினர்களின், மொழியறிஞர்களின் அதீத இனப்பற்றும் இறந்த காலத்தை ஒளிமயமானதாகக் காணுந்தன்மையும் பரவலாக இருப்பதும் புதிதான விசயமல்ல. நாடு இல்லாமல் அலைந்த யூதர்கள் தாங்கள் மட்டும்தான் இறைவனின் குழந்தைகள், மற்றவர்கள் ஆதாமின் பிள்ளைகள் என்று கூறிக் கொண்ட‌னர்.

ஆளும் வர்க்கம் மொழியறிஞர்களின் இந்தப் பலவீனத்தை எப்பொழுதுமே பயன்படுத்திக் கொள்ள முயன்று வந்துள்ளது. தங்களது பழைய இனமரபு பெருமை குறித்து, தாங்கள் மற்ற இனங்களைவிட குடிப்பெருமையிலும், நாகரீகத்திலும் உயர்ந்தவர்கள் என்ற மாயையில் தமிழ் அறிஞர்கள் அமிழ்ந்து போவதை, இந்தப் பழம் பெருமையை மேடை போட்டுப் பேசி தனக்கு ஒரு வடிகால் தேடிக் கொள்வதை எல்லாவிதத்திலும் ஆளும் வர்க்கம் ஊக்கப்படுத்தியே வந்துள்ளது. இந்தியனும், நாயும் உள்ளே நுழையக் கூடாதொன்று அறிப்புப் பலகைகளைத் தொங்கவிட்ட ஆங்கில வல்லாதிக்கவாதிகள் தான் கால்டுவெல் பாதிரியாரின் கோட்பாடுகளுக்கு ஊக்கமூட்டினர்.

அதே நேரத்தில் சராசரி தமிழனின் வாழ்க்கையை அவனது பிரச்சனைகளை இந்த ஒளிமயமான பழைய வரலாற்றில் இருந்து பிரித்து வைக்க எல்லா முயற்சிகளும் செய்யப்படுகின்றன. இன்று இருக்கும் தமிழக மக்கள் தானே பழந்தமிழ் பெருமைக்கு ஆதாரம்? மக்கள் இல்லாமல் மொழி ஏது? அந்த மக்களின் வாழ்வு இந்த மாநாடுகளில் திரைபோட்டு மறைக்கப்படுகிறது. பார்ப்பனீயதாசன் ராஜராஜ சோழனின் புகழ் மணக்குமிடத்தில் பிளாட்பாரத் தமிழனின் நாற்றம் நுழைவது அவமானத்தை அல்லவா தேடித் தரும்?

தவிர தமிழக மக்களின் வாழ்விலும், உண்மையிலேயே தமிழ் வளர்ச்சியில் அக்கறையும் கொண்ட தமிழ் அறிஞர்கள் திட்டமிட்டு விலக்கி வைக்கப்படுகின்றனர் அல்லது ஓரங்கட்டப் படுகின்றனர். மற்றவர் மனம் புண்படக் கூடாதென்ற உன்னதமான தமிழ்ப் பண்பாடு திட்டமிட்டு மேடை நாகரீகமாக பேசப்படுகின்றது. தவிர தலைப்புக் கொடுக்கும் அவலட்சணமான முறையும் இதற்கு உதவியாக உள்ளது. கடையில் கத்தரிக்காய் பொறுக்கி எடுப்பதைப் போல இந்த மாநாட்டிற்காக தமிழறிஞர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இந்தத் தேர்ந்தெடுப்பு முறையாலும் தலைப்புக் கொடுக்கும் முறையாலும் எந்தக் கேள்வியும், ஆய்வும் எழாமல் திறமையாகத் தடுக்கப்படுகிறது. சாதாரண இலக்கியக் கூட்டங்களில் எழுப்பப்படும் கேள்விகளுக்குக்கூட இடங்கொடுக்காமல் வெறும் புகழுரைகளாக்கி இந்த மாநாடு நடத்தப்பட்டது. சித்தர்களும், சங்கப் புலவர்களும், ராஜராஜசோழன் போன்ற மன்னர்களும், நாட்டுப்புறக்கலைகளும், பரத நாட்டியமும் எல்லாம் கலந்து அவியலாக மேடையில் காட்டி எல்லாமே தமிழனின் சாதனைகள் என்று வேறுபாடின்றி முத்திரைக் குத்துவதே இந்த மாநாடுகள் செய்துவரும் ஒரே வேலை.

தஞ்சைப் பெரிய கோவிலில் இருந்த இரண்டாயிரம் தாசிகளைப் பற்றியும், சூலக்குறியிடப்பட்ட அடிமைகளைப் பற்றியும் ஒருவார்த்தையும் இல்லாமல் கவனமாகப் பார்த்துக் கொள்ளப்படும் அதே நேரத்தில் தற்காலத் தமிழனின் நிலையை அவன்மீது செலுத்தப்படும் சுரண்டலை திட்டமிட்டு அழகாக மூடி மறைக்கின்றனர். புறநானுற்றுத் தமிழர்களின் வீரத்தைப் பற்றி கவியரங்கங்கள் நடத்தும் அதே நேரத்தில் கடந்த நாற்பது ஆண்டுகளாக இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டத்தில், உழவர்களின் வீரமிக்க போராட்டங்களில், தொழிலாளர்களின் எழுச்சிகளில் கொன்று குவிக்கப்பட்ட தமிழக மக்களைச் சுலபமாக மறந்து விடுகின்றனர். பஞ்சாபில், காஷ்மீரில் மட்டுமல்ல, நமது தமிழ் மண்ணிலேயே நுற்றுக்கணக்கான மக்கள் நேரு அரசின் பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்டார்கள் என்ற உண்மையே இந்தத் தலைமுறை இளைஞர்களுக்குத் தெரியாது. ஆனால் அந்த நேருவுக்குத் தமிழகமெங்கும் நினைவுச் சின்னங்கள் உண்டு. காங்கிரஸ் கட்சியோடு மாறிமாறி கூட்டு சேர்ந்து பதவிசுகம் கண்டவரும் துரோகத்தனமான திராவிட கும்பல்களும் கண்மன் நடந்த இந்த வரலாற்றை மக்களின் மனங்களில் இருந்து அழிக்க த‌ங்களாலான அனைத்து முயற்சிகளையும் செய்துவருகின்றன.

semmozhi_meeting

இதற்கு மக்களிடம் இருந்து அன்னியப்பட்டு தமிழ் மொழியோடு, பழைய நிலவுடமை பெருமையோடு மட்டும் தன்னை இனங்கண்டு கொள்ளும் தமிழக அறிவுத்துறையினரின் போக்கு உதவியாக இருக்கிறது. இப்படி தமிழறிஞர்களின் போர்க்குணத்தை திசை திருப்பியதிலும், அவர்களை மக்களிடம் இருந்து தனிமைப்படுத்துவதிலும் திராவிடக் கட்சிகள் பெரும்பங்காற்றின. இன்று கூட இந்த மாநாடு நடத்துவது யாராகயிருந்தாலும் விசயம் தமிழைப் பற்றியதுதானே என்ற எண்ணம் பலரிடயே இருக்கிறது. அரசியலையும், மொழியையும் தனித்தனியே பிரித்துப் பார்ப்பதால் ஏற்படுகின்ற அவலமே இது. மக்கள்மீது மிகக் கடுமையாக சுரண்டலும், ஒடுக்குமுறையும் செய்துவரும் ஒரு அரசு, நாட்டின் செல்வங்களை ஏலம்போட்டு பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்று வரும் ஒரு அரசு எப்படி தமிழ்மொழியை வளர்ப்பதில் மட்டும் முற்போக்காக இருக்க முடியும்? முடியாது என்பதற்கு காளான்களாக முளைத்துவரும் கான்வென்ட்களே சாட்சி.

இன்றைய காலகட்டத்தில் உலகத் தமிழ் மாநாடு என்பது தமிழ் மொழியை வளர்க்கவும், அறிவியல் மொழியாக மேம்படுத்தவும், மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகள் பற்றி விவாதிக்கவும், தீர்மானங்களை நிறைவேற்றவும் அதற்காக உறுதியேற்பதாகவும் இருக்க வேண்டும். தமிழகச் சூழல், உலகம் முழுவதுமுள்ள இந்திய, ஈழத் தமிழர்களின் நிலை, பல்வேறு நாடுகளில் அகதிகளாக வதைபடும் ஈழத் தமிழர்கள் மற்றும் பல போராளி இயக்கங்களின் பிரச்சனைகள் பற்றிய நிலைகள் ஆகியவைதான் அவசியமானது.

ஆனால் கோயம்புத்தூர் மாநாடு எப்படி நடந்த்து? திமுக அரசாங்கத்தின் வெற்றி விழாவாக, சாதனையாக நடத்தப்பட்டது. ஓட்டு கட்சி அரசியல்வாதிகள் பழங்கால மன்னர்கள் போல் ஆடம்பரமாக வருகை தந்தனர். கவியரங்கங்கள், கலையரங்கங்கள் எல்லாமே யதார்த்தத்தைப் புறந்தள்ளிவிட்டு ஒருவகையான போதையூட்டுவதையே அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்டன. தமிழகமும், அதன் சேரிகளும், சாதி வெறியும், சுரண்டலும், தொற்று நோய்களும், குண்டுகளால் சின்னாபின்னமாக்கப்பட்ட ஈழமும், உலகம் முழுவதும் சிதறடிக்கப்பட்ட ஈழத்து அகதிகளும் திரைபோட்டு பட்டுத் துணியால் பளபளப்பாய் மறைக்கப்பட்டு ஒரு உன்னதமான வரலாறு நம் கண்முன்னே நடித்துக் காட்டப்பட்ட‌து.

பழைய வரலாறு உன்னதமான நிலைக்கு உயர்த்தப்படும் அதே நேரத்தில், அந்த நிலைக்குத் திரும்ப வேண்டுமென்ற எண்ணம் ஏற்படக்கூட நேரமளிக்காமல் காது புளித்துப் போகுமளவிற்குப் பழம்பெருமை பாடப்படுகிறது. தமிழ் வரலாறு நேரானதாகவும், முரண்பாடுகளற்றதாகவும், மிக எளிய வடிவம் கொண்டதாகவும், மகோன்னதமானதாகவும் காட்டப்படுகிறது. இந்த எளிமைப்படுத்தும் தந்திரம், தமிழன் முட்டாளாக இருப்பதால்தான் இந்த நிலை / அவன் திருந்திவிட்டால் எல்லாமே மாறிவிடும் என்ற தோரணையை ஏற்படுத்துகின்றன.

இந்த மாநாடுகள் ஒரு கிளைமாக்ஸ் காட்சி போல் உள்ளன. நாள் நெருங்கநெருங்க மாநாட்டு ஜூரம் திட்டமிட்டு அதிகரிக்கப்படுகிறது. வானொலி, வானொளி, சுவரொட்டி அனைத்திலும் தமிழ்... தமிழ் என்று தொடர்ச்சியான கூச்சலின் மூலம் மக்களின் சிந்தனை அதை நோக்கிக் குவிக்கப்பட்டது. எல்லோர் மனங்களிலும் ஏதோ ஒரு எதிர்பார்ப்பு திட்டமிட்டு ஏற்படுத்தப்படுகின்றது. பிறகு, பிரம்மாண்டமான மாநாட்டு ஏற்பாடுகள், மக்கள் கூட்டம், வண்ண விளக்குகள், விழாக் கோலம் எல்லாமே ஒரு மாபெரும் வரலாற்று நிகழ்வுக்கு நடுவில் நாம் அனைவரும் இருப்பது போன்று பிரமையை பங்கேற்போர், பார்வையாளர் அனைவர் நடுவிலும் ஏற்படுத்துகின்றன‌.

எல்லாமே முடிந்ததும் மெலிதான வெறுமை... பின்பு அடுத்த மாநாடு... ஆனால், இந்த முறை கருணா கும்பல் அவ்வளவு எளிதாகத் தப்பித்துக் கொள்ள முடியவில்லை. மைய, மாநில ஆட்சியாளர்களின் கோர சொரூபத்தை உண்மையான தமிழுணர்வாளர்கள் தெளிவாக இன்று புரிந்து கொண்டுள்ளனர். கடந்த ஆண்டு தமிழர்கள் அழித்தொழிப்பு, முகத்திரைகளுக்குப் பின்னிருக்கும் உண்மைகளை கண்டுகொள்ள அவர்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளது. பலர் புற‌க்கணித்ததோடு கோமாளித்தனமாகவும் எண்ணினர். அரசு தரப்பிலிருந்தும் சுயசிந்தனையுள்ள எவரையும் பாசாங்குக்காகக்கூட அழைக்காத அளவுக்கு பீதியடைந்திருந்தது.

தனி மனிதக் குறைபாடுகளுக்குப் பின்பு ஓர் இனத்தின் உரிமைகளை மறுக்கும் மாபெரும் சதி உள்ளதை நாம் காணத் தவறிவிடக்கூடாது. யார் இந்த தமிழக ஆட்சிக் கட்டிலில் ஏறினாலும் இதே நிலைதான் தொடரும். ஐந்து நாட்கள் கண்கட்டு வித்தை காட்டியதன் மூலம் தமிழனோ, தமிழோ எந்தப் பயனும் அடைந்துவிட முடியாது. பொதியேற்றப்பட்ட குதிரைக்கு விசிறிவிடுவதைப் போன்றதே இந்த மாநாடு.

கோடிக்கணக்கான ரூபாய் செலவில் நடந்து முடிந்த உலகத் தமிழ் செம்மொழி மாநாடு போன்ற கூத்துக்கள் அல்ல நமது தேவை. அன்னிய வல்லாதிக்கவாதிகளாலும், உள்நாட்டுக் கொலைகாரர்கள் அல்லது கொள்ளையர்களாலும் சூறையாடப்பட்டு வரும் நமது இனத்தின் மக்களை விடுதலைப் போருக்கு அறைகூவி அழைத்திடும் முழக்கங்களே இன்றைய தேவை.

தமிழ் வேறு, தமிழர்கள் வேறு அல்ல; கோடிக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்துவிட்டு, திக்கற்றவர்களாக்கிவிட்டு, சேரிகளிலும், பிளாட்பாரங்களிலும், வயல்களிலும் வதைபட விட்டுவிட்டு, தமிழ‌க இளைஞர்களின் மூளைகளில் ஆங்கிலத்தை ஏற்றிவிட்டு, தமிழ் மட்டும் வாழ்ந்துவிட முடியாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

- இரா.பாலன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It