'சென்னை அரசியல் பள்ளி' என்ற அமைப்பு கடந்த இரு ஆண்டுகளாக அரசியல், வரலாறு மற்றும் பண்பாடு தொடர்பான வகுப்புகளை மாதம் இரு முறை சென்னையில் நடத்தி வருகிறது. இதுவரை 20 வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளன. நிலம், தமிழகப் பொருளாதாரம், கோயில் பொருளாதாரம், சிங்காரவேலரின் சிந்தனைகள், அண்ணல் அம்பேத்கரின் வாழ்வும் சிந்தனையும் உள்ளிட்ட தலைப்புகளில் வகுப்புகள் நடைபெற்றுள்ளன.

மார்க்சிய சிந்தனை, சாதி எதிர்ப்பு தத்துவங்கள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை "சென்னை அரசியல் பள்ளி' தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மேலும் இச்சிந்தனையை தமிழகத்தின் வரலாறு, சமூக சூழல் ஆகியவற்றுடன் பொருத்திப் பார்க்க வேண்டியதும் அவசியமாகும். இதைக் கருத்தில் கொண்டு இப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

அந்த வகையில் 24.1.2009 அன்று சென்னை பல்கலைக் கழகப் பவள விழா அரங்கில், "இந்திய அரசு: ஒரு விமர்சனப் பார்வை' என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. அக்கருத்தரங்கில் நான்கு வெவ்வேறு புள்ளிகளிலிருந்து இந்திய அரசைப் புரிந்து கொள்வதைப் பற்றிய கருத்துக்களை முனைவர் ம. விஜயபாஸ்கர், முனைவர் ராமன் மகாதேவன், வ. கீதா, விரிவுரையாளர் செல்வி ஆகியோர் முன்வைத்தனர். கவிஞர் இன்குலாப் தலைமை உரையாற்றினார்.

பள்ளி செயல்பட்டு வருவது குறித்து மகிழ்ச்சியையும் பாராட்டுதலையும் தெரிவித்த இன்குலாப், “இந்தியாவை ஆள்பவர்களுக்கே இந்தியாவைப் பற்றி தெரியாது. இந்தியா என்பது ஒரு நாடாக எப்போதும் இருந்ததில்லை. இப்பொழுதுதான் அது உருவாக்கப்பட்டிருக்கிறது. தமிழ்த் தேசியமா, இந்தியத் தேசியமா என்று கேட்டால், இந்தியத் தேசியம் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. தமிழ்த் தேசியம் என்பதில் சில சிக்கல்கள் இருந்தாலும், அதன் இருப்புக்கான காரணங்களை உடனடியாக மறுத்துவிட முடியாது. இந்திய அரசு பார்ப்பன பனியா வர்க்கத்தின் அரசாக இருப்பதோடு, தேசிய இனங்களையும், மக்களையும் ஒடுக்கும் ஓர் வன்முறைக் கருவியாகவே இருந்து வருகிறது'' என்று கூறினார்.

"இந்திய அரசும் மாறிவரும் பொருளார சூழலும்' என்ற தலைப்பில் உரையாற்றிய முனைவர் விஜயபாஸ்கர் மற்றும் முனைவர் ராமன் மகாதேவன் ஆகியோர், இந்திய அரசின் பொருளாதாரக் கொள்கை, 1990க்குப் பிறகு தாராளமய, தனியார்மய, உலகமய கொள்கையாகவே இருப்பதை ஆதாரத்தோடு சுட்டிக் காட்டினார்கள். இதன் விளைவாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கிடையே இருந்த வளர்ச்சி வேறுபாடுகள் மேலும் தீவிரமடைந்து இருப்பதாகவும், தமிழகத்தில் நீர்ப்பாசனம் 1965 67 ஆம் ஆண்டுகளில் இருந்த அதே நிலைமையில் இருப்பதாகவும், ஏரிப் பாசனம் குறைந்துள்ளதையும், கிணற்றுப்பாசனம் பரவல் அடைந்துள்ளதையும், தமிழக விவசாயம் சந்தை சார்ந்து வளர்ந்து வருவதையும், சிறு குறு விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதையும் விளக்கினர்.

விவசாயிகள் நகர்ப்புற கூறுகளாக மாறியுள்ளனர். உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. தமிழகத்தின் கிராம மக்கள் 75 சதவிகிதம் பேர் அதிகப்படியான கடனில் சிக்கியிருக்கின்றனர். அமைப்பு சாரா தொழில் வளர்ச்சி, நகரமயமாக்கல் மற்றும் சாதியத்தின் மீது ஏற்படுத்தியுள்ளதாக்கங்கள் பற்றியும் அரசு தரமான வேலை வாய்ப்புகளை வழங்காமல், இலவசங்களை கொடுத்து நிலைமையை சமாளித்துக் கொண்டு வருவதையும் சுட்டிக் காட்டினர். தற்கால இந்திய முதலாளித்துவத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்றால், நாம் காலனி ஆதிக்க காலகட்டத்திற்குச் செல்ல வேண்டும் என்று தமது கருத்துக்களை இருவரும் முன்வைத்தனர்.

"சாதி, மதம், அரசு' என்ற தலைப்பில் வ. கீதா உரையாற்றினார் : “இங்குள்ள முதலாளித்துவ வர்க்கம் இந்தியா, தமிழ் நாடு என ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு உட்பட்டதாக இல்லை. இத்தகைய அரசியலின் வெளிப்பாடாகவே இந்திய அரசு இருந்து கொண்டிருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளõக இந்திய அரசின் பிரதிநிதிகளாலும், ஆதரவாளர்களாலும் வல்லரசு தத்துவம் முன்வைக்கப்படுகிறது. இந்திய முதலாளிகள் இந்தியாவில் மட்டுமன்றி, வெளிநாடுகளில் முதலீடு செய்யும் ஆற்றலும், வெளிநாட்டு நிறுவனங்களை வாங்க பெற்றிருக்கும் ஆற்றலுமே - இந்திய அரசு தன்னை ஒரு வல்லரசாக கருதிக் கொள்வதற்கான ஆதாரத்தை வழங்கியுள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்பதில் மட்டுமே தனது தேச அடையாளத்தையும் இறையாண்மையையும் அது விளக்க முன் வருகிறது. மண்டல் பரிந்துரைகளை மத்திய அரசு நிர்வாகத்துறையில் மறுக்கக் கூடிய அளவிற்கு இடைநிலை சாதிகளின் சட்டமன்ற, நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை அவர்களால் மறுக்க முடியவில்லை. இந்த அடிப்படையில்தான் மாயாவதி போன்றவர்கள் அதிகாரத்தை பிடிப்பதன் மூலம் சமூகப் புரட்சியை சாதிக்க முடியும் என்பது போன்ற கருத்துக்களை முன்வைக்கின்றனர்.

சாதி எதிர்ப்புப் போராட்டத்தின் எதிரொலிப்பாகவே மாயாவதி, லாலு பிரசாத், முலாயம் சிங் போன்றவர்கள் தங்களது ஒடுக்கப்பட்ட சாதி அடையாளத்தை நாடாளுமன்ற அதிகாரத்திற்காக முன்வைக்கின்றனர். முதலாளித்துவ வர்க்க நலன்களின் பிரதிநிதித்துவம் உள்ள அரசு பார்ப்பனர் - பனியா, ஜமீன்தார் மட்டுமே இருந்த நாடாளுமன்ற அவை, இன்றைக்கு பல்வேறு மக்களுக்கான ஓர் அவையாக உருமாறியுள்ள

வரலாற்றுப் போக்கை ஓர் உண்மையான வரலாற்று வளர்ச்சிப் போக்காக எடுத்துக் கொள்வோமானால், இந்திய அரசு பற்றிய நமது பார்வையை கொஞ்சம் இணக்கமானதாக மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கும்.

அதே நேரத்தில் இந்த வரலாற்று மாற்றம் என்ற வீச்சும் கருத்தும் முக்கியத்துவம் இழந்துபோய், குறைந்து போய் இந்துத்துவம் என்றும் ஒன்றுக்குள் எல்லாம் அடைக்கப்படக் கூடிய வரலாற்றுச் சூழலில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.''

"இந்திய தேசியமும் இந்திய அரசும்' என்ற தலைப்பில் கஜேந்திரன் ஆற்றிய உரை : "1990 களுக்குப் பிறகு வருகிற பின் அமைப்பியல் பின் காலனிய பார்வைகள் எல்லாமே, தேசியம் ஒரு கற்பிதம் என்ற பார்வையில் அணுகுகின்றன. பின் நவீனத்துவத்தை மேற்கொண்டவர்களின் இரண்டு விதமான நிலையில் 21 ஆம் நூற்றாண்டு மாற்றம் அடைகிறது. அரசியல் சோர்வுற்று செயலற்றுப் போவது அல்லது தாராள இடதுசாரி மனப்பான்மையோடு செயல்படுவது. எனவே தேசியம் குறித்தும் பின்நவீனத்துவம் குறித்தும் உரையாட மறுக்கும் கருத்தியலை நான் முற்றிலும் எதிர்க்கிறேன்.

மேலும் மநு தர்ம வாதத்தை எதிர்கொள்கிற, சாதியவாதத்தை எதிர்கொள்கிற, மதப் பன்மை தன்மைக்கு ஆதரவு அளிக்கிற முற்போக்கு அறிவியல் கருத்துகளுக்கு ஆதரவு அளிக்கிற ஓர் உரையாடல் தளமாக இந்த தேசியம் என்ற நவீன கால வாழ்வை அமைக்க முடியும். "தேசியம் கற்பிதம்' என்ற வரி, தேசியம் பற்றிய உரையாடலை முற்றாக நிறுத்தி விட்டதாகக் கருதுகிறேன். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டுதான் இந்தியா போன்ற ஒரு செயற்கையான நாடு, தனக்கு செயற்கையான இறையாண்மையையும் தனக்கான "ஆன்மா'வையும் பெற்றிருக்கிறது. அதிலிருந்துதான் இந்துத்துவ அமைப்புகள் தனக்கு தேவையான சத்துப் பொருளை உறிஞ்சி எடுக்கின்றன.

மநு தர்ம அடிப்படையிலான இந்த செயற்கையான கட்டமைப்பு தேசியம் என்ற உரையாடலுக்கு தயார்படுத்தப்படாததற்கு காரணம் - பெரும்பான்மை, சிறுபான்மை என்ற சொல் எண்ணிக்கை அளவிலானதாக மாற்றப்பட்டது தான். இதை நாம் கலைத்துப் போட வேண்டும். அப்போதுதான் நவீன தேசியத்துக்கான உரையாடலை முன்னெடுக்க முடியும்.''

"பெண்ணியப் பார்வையில் இந்திய அரசு' என்ற தலைப்பில் உரையாற்றிய செல்வி, எந்தப் புள்ளியில் மனிதன் ஆணாக மாற்றப்பட்டான், எந்தப் புள்ளி மனிதனை ஆணாகப் பார்க்க வைக்கிறது என்பதைப் பற்றியும் பேசினார். எல்லாப் பெண்களுமே தான் ஓர் ஆணுக்கு கட்டுப்பட்டவள் என்று சிந்திப்பதற்கான வரலாற்றைத் தேடினோம் என்றால், மனித சமூகத்தில் வர்க்கங்களின் தோற்றத்தோடு தொடங்கியே பெண் மீதான ஒடுக்குமுறை வர்க்க சமூகத்தின் விளைபொருளான அரசு சுரண்டும் வர்க்க சமூகத்தை அடை காப்பது போல், பெண்கள் மீதான ஒடுக்குமுறையையும் கட்டிக் காத்து வருகிறது என்றும், இந்தியாவில் பார்ப்பனிய இந்து மதமும் மற்ற மதங்களும் பெண்களுக்கு எதிரான கருத்தியல்களையும் நடைமுறைகளையும் அடித்தளமாகக் கொண்டிருப்பதாகக் கூறினார்.

காலை முதல் மாலை வரை நடைபெற்ற இக்கருத்தரங்கில் பல்கலைக்கழக மாணவர்களும், முற்போக்கு இயக்கங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோரும் பங்கேற்று விவாதித்தனர். சென்னை அரசியல் பள்ளியையும் கருத்தரங்கையும் அறிமுகப்படுத்திப் பேசிய ஜெயபிரகாஷ் நாராயணன், இச்சமூகத்தின் அனைத்து மாற்றுக் கருத்தியலின் பின்புலத்தைக் கொண்டோர் பங்கேற்று விவாதித்த தரவுகளை முன்வைத்து, பரிசீலனைக்கான பயணமாகத் தான் தங்கள் வகுப்புகள் இருந்ததாகவும் கூறினார்.