வருத்தப்பட்டு பாரம் சுமக்கின்றவர்களே! எங்களிடம் வராதீர்கள் – 6

பதினைந்தாவது நாடாளுமன்றத்திற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டது. சமூக சிந்தனையாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் எல்லாரும் தேர்தல் களத்தில் கூட்டணி வியூகம் வகுத்தவண்ணமுள்ளனர். தொகுதிச் சீரமைப்பிற்குப் பின்னர் தலித் மற்றும் பழங்குடியினருக்கான 120 தனித் தொகுதிகளின் எண்ணிக்கை, தற்பொழுது 131 ஆக உயர்ந்துள்ளதாக பெருமைப்படுகின்றனர். ஆனால் தலித்துகளோ அன்றாடம் சிறுமைப்படுத்தப்படுகின்றனர். நாடாளுமன்றத்திற்கு பதினான்கு முறை நடைபெற்ற தேர்தலில், ஒவ்வொரு முறையும் குறைந்த பட்சம் 100 தலித் மற்றும் பழங்குடியின உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுடைய வாழ்வு வளமானது; ஆனால், தலித் மக்களின் வாழ்வில் மட்டும் எந்த மாற்றமும் நிகழ்ந்துவிடவில்லை!

தலித் மற்றும் பழங்குடி மக்களுக்கு முற்றிலும் எதிரானதொரு சட்டவரைவு 23.12.2008 அன்று மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி, 47 நிறுவனங்களில் தலித் மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு இல்லை என்பது உள்ளிட்ட, வேறு சில எதிர்மறையான விதிகளும் இச்சட்ட வரைவில் சேர்க்கப்பட்டுள்ளன. இது குறித்து ஓரளவுக்கு கண்டனக் குரல்கள் எழுந்த பிறகும் 25.2.2009 அன்று, இச்சட்டவரைவு மக்களவையில் வைக்கப்பட்டது. எதிர்ப்புகள் கிளம்பியதால், இச்சட்டவரைவு கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஆனால் இச்சட்டவரைவு அன்று விவாதத்திற்கு வரும் எனத் தெரிந்திருந்தும், பெரும்பாலான தலித் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவைக்கு வரவில்லை என்பதுதான் கொடுமையிலும் கொடுமை!

இந்தியாவிலும் குறிப்பாகத் தமிழ்நாட்டிலும் உயர் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கையும், இங்கு படிப்பவர்களின் எண்ணிக்கையும் பன்மடங்கு உயர்ந்துள்ளன. இருப்பினும் ஏற்கனவே நாம் குறிப்பிட்டுள்ளபடி மருத்துவம், பொறியியல், தகவல் தொடர்பு, அறிவியல் மற்றும் ஆய்வுப் பிரிவுகள் ஆகியவற்றில் தலித் மற்றும் பழங்குடியினருக்கு, வேலைவாய்ப்பிலும் மாணவர் சேர்க்கையிலும் தொடர்ந்து அநீதி இழைக்கப்பட்டு வருகிறது. 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 25.1 கோடி தலித் மற்றும் பழங்குடி மக்கள் உள்ளனர். ஆனால், எந்த ஒரு பாடப்பிரிவிலும் இம்மக்களுக்குப் போதிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை. தலித் மக்களின் மேம்பாட்டிற்காகப் பாடுபடுவதாக வாய்கிழியப் பேசித் திரியும் அரசியல் கட்சிகளும், தலித் அரசுப் பணியாளர் சங்கங்களும், தலித் மேட்டுக்குடிகளும் இவ்வவலம் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படவில்லை.

தலித் மக்களுக்கு இடஒதுக்கீட்டை மறுக்கும் சிறுபான்மைக் கல்வி நிறுவனங்கள், இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தாத அரசு நிதியுதவி பெறும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றோடு அரசுக் கல்லூரிகளும் மறைமுகமாக இணைந்து கொண்டுள்ளன. இருக்கின்ற இடஒதுக்கீட்டு உரிமைகளையும், கல்வி உதவிகளையும் இக்கல்லூரிகள் சீரழித்து வருகின்றன. தலித் மாணவர்களுக்காக வழங்கப்படுகின்ற பல்வேறு கல்வி மற்றும் இடஒதுக்கீட்டு உதவிகளை இக்கல்லூரிகள் திருடிக் கொள்கின்றன.இடஒதுக்கீட்டு உதவிகளை முறைகேடாகப் பயன்படுத்துவது, அதை செயல்படுத்தாமல் இருப்பதைக் காட்டிலும் மோசமான குற்றம். இக்குற்றங்கள் நாள்தோறும் பெரும்பாலான கல்லூரிகளில் அரங்கேற்றப்பட்டு வருகின்றன.

தலித் மாணவர்கள் கல்வி மேம்பாட்டுக்கென்று "பல்கலைக்கழக நல்கைக் குழு' (மானியக்குழு – University Grants Commission) பல நலத்திட்டங்களை அளிக்கிறது. கிராமப்புறங்களிலிருந்து, தமிழ் வழிக்கல்வி படித்து விட்டு கல்லூரிக்கு வரும் தலித் மாணவர்கள் மிக அதிகம். இவர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சவால், ஆங்கிலத்தில் திறன் பெறுவதாகும். தமிழ் வழியில் உயர் கல்வியை படிக்க முடியவில்லை; ஆங்கில வழியில் தன்னால் போட்டிப் போட முடியவில்லை என்பதற்காக மனம் வெதும்பி தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவர்களும் உண்டு. இத்தடையை நீக்க, தலித் மாணவர்கள் ஆங்கிலத்தில் திறன் பெறுவதற்கென, ஒவ்வொரு கல்லூரிக்கும் "பல்கலைக் கழக நல்கைக் குழு' ஆண்டொன்றுக்கு மூன்று லட்சம் ரூபாயை வழங்குகிறது. இத்தொகை கணினி, பயிற்றுநர் ஊதியம், நூல்கள், மாணவர்களுக்கான வழிகாட்டி நூல்கள், குறிப்பேடுகள், எழுது பொருட்கள் ஆகியவற்றுக்கு செலவழிக்கப்பட வேண்டும்.

இப்பயிற்சியை பெரும்பாலான கல்லூரிகள் நடத்துவதில்லை. இங்கு பெரும்பான்மை என்று குறிப்பிடுவது, ஒன்றிரண்டு கல்லூரிகளாவது நடத்தியிருக்காதா என்ற ஏக்கத்தில்தான். அனைத்துக் கல்லூரிகள் என்றே கூட இதை வாசிக்கலாம். போலி பற்றுச்சீட்டுகளை வைத்து கணக்கு முடிக்கப்பட்டு, அந்தப் பணம் துறைவாரியாகப் பங்கிடப்பட்டுவிடும் அல்லது துறைக்கொரு கணினியாகவோ, வேறு பொருளாகவோ அது மாறிவிடும். ஆங்கிலத்துக்கு மட்டுமல்ல, தலித் மாணவர்கள் உயர் கல்வியில் பின்தங்கியிருக்கும் பாடங்களில் சிறப்புப் பயிற்சி பெறுவதற்கும் கூட, பல்கலைக்கழக நல்கைக் குழு உதவுகிறது. அந்த நல்கையும் இப்படித்தான் நாசமாய்ப் போகிறது. மாணவர்கள் எளிமையான பாடங்களாகக் கருதும் தமிழ், பொருளாதாரம், வணிகவியல், வரலாறு ஆகிய துறைகளுக்கும்கூட இந்தப் பணத்தில் பங்கு போய்விடுகிறது. "ஊரான் வீட்டு நெய்யே, ஆளுக்கொரு கையே' என்கிற நிலைதான்! இந்த நல்கையை கல்லூரிகள் போட்டிப் போட்டுக் கொண்டு வாங்குகின்றன. இத்தகைய முறைகேடுகள் நடப்பதற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. பல்கலைக் கழக நல்கைக் குழுவிடம் இந்த நல்கைகளை மேற்பார்வையிட குழுக்கள் எதுவும் இல்லை.

தலித் மாணவர்கள் அவர்களுக்கென்று திறக்கப்பட்டிருக்கும் அரசு விடுதிகளில்தான் தங்க வேண்டும் என்றொரு கருத்து உண்டு. ஆனால் அவர்கள் விரும்பினால், கல்லூரியின் முக்கிய விடுதியில், பிற மாணவர்களுக்கான விடுதிகளிலும் தங்கிப் படிக்கலாம். ஆனால் தனியார் கல்லூரிகள் எவையும் தமது கல்லூரி விடுதிகளில் தலித் மாணவர்களை சேர்த்துக் கொள்வதில்லை. கல்விச் சுற்றுலாவுக்கென நல்கைக் குழு பணம் தருகிறது. அதற்கு போலி பற்றுச்சீட்டு வைக்க முடியாது என்பதால், அந்த நல்கையை கல்லூரிகள் பயன்படுத்துவது இல்லை.

ஒவ்வொரு கல்லூரியிலும் ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு வழிகாட்டு மய்யம் திறக்க நிதி நல்கை உண்டு. அங்கு நாளேடுகளும், நூல்களும் வைக்கப்பட வேண்டும்; எதிர்கால திட்டத்தை வகுக்க ஆலோசனை வழங்க வேண்டும். இந்த மய்யம் பெரும்பாலான கல்லூரிகளில் கிடையாது. ஒவ்வொரு கல்லூரியிலும் ஆதி திராவிடர் மாணவர்களின் நலனில் அக்கறை கொண்ட ஆசிரியர் ஒருவரை, அம்மாணவர்களின் சிக்கல்களுக்கு உதவி செய்ய நியமிக்க வேண்டும். பிரச்சினைகளை கல்லூரிகளே செய்வதால், தனக்கே வழிகாட்டிக் கொள்ள தன்னுடைய ஆசிரியரை நியமிப்பதை அவை விரும்புவதில்லை! தலித் மாணவர்களின் நலனில் அக்கறை செலுத்த பல்கலைக் கழகங்களும் ஒரு தொடர்பு அலுவலரை நியமிக்க வேண்டும். அதுவும் நடைபெறுவதில்லை.

இடைக்கால நிதி நிலை அறிக்கையில், உயர் கல்விக்கென 9 மடங்கு அதிக நிதியை அளித்திருப்பதாக மய்ய அரசு அண்மையில் அறிவித்துள்ளது. தமிழக அரசு இதற்கென 1,463 கோடி ஒதுக்கியுள்ளது. இந்த ஒதுக்கீடுகளில் தலித் மாணவர்களுக்குரிய 18 சதவிகிதத்தை கேட்கவோ, மேலும் கேட்டுப் பெறவோ இக்கல்லூரிகள் தயாராக இல்லை. அரசியல் சட்டப்பிரிவு 16(5), தலித்துகளுக்கு கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டை உறுதி செய்கிறது. அரசியல் சட்டத்தின் பின்புலத்தில் மாநில அரசு ஆணைகளை வெளியிடுகின்றன. ஆனால், உயர் கல்வி நிறுவனங்களில் தலித்துகளுக்கு கல்வி மறுக்கப்படுகிறது. கல்வி நிறுவனங்களில் வேலைவாய்ப்பிற்கு இடஒதுக்கீடு உண்டென்கிறது தமிழக அரசின் தனியார் கல்லூரி ஒழுங்காற்றுச் சட்டம் 1976. ஆனால் வேலைவாய்ப்பில் தலித்துகளுக்குப் "பட்டை நாமம்' போடுகின்றன தனியார் கல்லூரி நிர்வாகங்கள். இடஒதுக்கீட்டுச் சட்டங்களும் அரசாணைகளும் நிர்வாகங்களின் காலடியில் தான் கிடக்கின்றன.

தலித் மக்களுக்கான உரிமைகள் உயர் கல்வித் துறையில் இப்படி வெகுகாலமாய் பறிபோய்க் கொண்டிருக்கின்றன. இது குறித்த புகார்களை "தேசிய தலித் மற்றும் பழங்குடியினர் நல ஆணையத்திற்கு' அனுப்பினால் அந்த ஆணையமோ, இக்கொடுமைகளை செய்துவரும் கல்லூரி நிர்வாகம் அளித்த தன்னிலை விளக்கக் கடிதத்தையே பதிலாக அனுப்பிவிட்டு பல்லிளிக்கிறது. எவ்வகையிலும் பயனளிக்க முடியாத ஆணையமாக அது இருந்து வருகிறது. இச்சூழலில் நாம் வேறு யாரையும் விட நம்மையே நம்புவதுதான் சிறந்தது. எனினும் தலித் மக்களுக்கு இது தொடர்பான வழிகாட்டும் நிலையில் இருக்கிற படித்த தலித்துகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? படித்த தலித்துகளை நம்பி ஏமாந்து போன அண்ணல் அம்பேத்கர், தமது இறுதிக் காலத்தில் அழுத கண்ணீர் இன்னும் காயாமல் கண்ணீர் சுனையாய் ஊற்றெடுக்கிறது. தலித் மக்களுக்கான உரிமைகளைப் பெற்றுத் தருவதற்கும், பாதுகாப்பதற்கும் கல்வி பெற்ற தலித்துகள் தயாராக இல்லை!

தலித் மக்களுக்கு நேரடியாகவும், அதிக அளவிலும் உதவி செய்யும் நிலையில் இருக்கும் வருவாய்த் துறையில் மட்டும் பதவி உயர்வு மூலம் நாற்பது சதவிகிதத்திற்கும் மேல் தலித்துகள் இன்று பொறுப்பில் உள்ளனர். முதியோர் உதவித் தொகை, இலவச மனைப்பட்டா, தொகுப்பு வீடுகள், கல்வி உதவித் தொகை, ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதி உதவிகள் போன்றவற்றிற்காவது கையூட்டுப் பெறாமல் இவர்களில் பலர் உதவி செய்ய முன்வந்திருக்கிறார்களா? உயர் கல்வி நிலையங்களில் இருக்கும் பல தலித் பேராசிரியர்கள், தலித் மாணவர்கள் "ராஜிவ் காந்தி உயர் கல்வி நல்கை' போன்ற உதவிகளைப் பெறுவதற்குத் தடையாக இருக்கின்றனர். தம்மை நாடிவரும் மாணவர்களுக்கு ஆய்வு வழிகாட்டியாக இருப்பதற்கு மறுத்து விடுகின்றனர். தலித் மாணவர்களால் வரலாறு, தமிழ், பொருளாதாரம் போன்ற துறைகளில் மட்டுமே உயராய்வு செய்ய முடிகிறது. அறிவியல் பாடங்களில் உயராய்வு செய்ய இயலாமல், தலித் மாணவர்கள் திசை வழி தெரியாமல் தவிக்கின்றனர். இதைப்பற்றி எல்லாம் கவலை கொள்ள யார் இருக்கிறார்கள்? நன்கு படித்த ஒரு அம்பேத்கரால் ஆறு கோடி தலித் மக்கள் பயன் பெற்றனர்; இன்றும் 25 கோடிக்கும் மேற்பட்டோர் அவரது அயராத உழைப்பின் பயனை அறுவடை செய்து கொண்டிருக் கின்றனர். இன்று படித்த தலித்துகள் பல கோடிப்பேர் இருந்தும் அதனால் எந்தப் பயனும் விளைந்து விடவில்லை – பாமரனுக்கு!

இந்நாட்டின் ஜனநாயகம் உயிர்த் துடிப்புள்ளதாக மாற வேண்டுமெனில், அதற்கு சமூக, அரசியல், பொருளியல், கல்வி மற்றும் பண்பாட்டுத் தளங்களில் அடித்தட்டு மக்களுக்குரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும். அரசியல் தளங்களில் மட்டும் பிரதிநிதித்துவம் இருந்தால் போதாது. அரசியல் தொடக்கம் அனைத்துத் தளங்களிலும் அது எதிரொலிக்க வேண்டும். விடுதலை இறையியல், தலித் இறையியல் என்றெல்லாம் வாய் கிழியப் பேசும் சிறுபான்மைக் கல்வி நிறுவனங்கள் குறிப்பாக, கத்தோலிக்க கல்லூரிகள் மற்றும் அதையொட்டி நடத்தப்படும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், ஆறு மாதங்களாக வெளிவரும் இத்தொடர் குறித்து கள்ள மவுனம் சாதிக்கின்றன. சாதி இந்துக்களின் தீண்டாமையை கை காட்டியே தங்களுடைய தீண்டாமைக் குற்றங்களை மறைத்து விடலாம் என்று அவர்கள் கனவு காண்கின்றனர். ஆனால் ஒடுக்கப்பட்ட மக்களின் சுயமரியாதைக்கான, சம உரிமைக்கான, ஜனநாயகத்திற்கான போராட்டம் – அனைத்து வகை அநீதிகளையும், பாகுபாட்டையும் சுட்டெரிக்கும் என்பது மட்டும் உறுதி.