(பாபாசாகேப் அம்பேத்கருடன் ஓர் இணை ஆய்வாளராகப் பணியாற்றியவர் பகவான் தாஸ். Thus Spoke Ambedkar என்ற தலைப்பில் நான்கு தொகுப்புகளை 1970களிலேயே கொண்டு வந்த இவர், 'டைம்ஸ் ஆப் இந்தியா' (15.4.2009) நாளேட்டுக்கு அளித்த பேட்டி.)

Bagavan Dossநீங்கள் அம்பேத்கரை முதலில் எப்பொழுது சந்தித்தீர்கள்?

சமூக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் விழிப்புணர்வுடன் செயல்பட்ட என்னுடைய தந்தை, டாக்டர் அம்பேத்கரின் தீவிர பற்றாளராக இருந்தார். எனது தந்தை அம்பேத்கரை "உம்மீட்கர்' (நம்பிக்கையை விதைத்தவர் என்று பொருள்) என்றுதான் குறிப்பிடுவார். நான், பாபாசாகேப் குறித்து எல்லா நாளேடு களிலும் வெளிவந்த செய்திக் கட்டுரைகளை மிகுந்த ஆர்வத்துடன் படிப்பேன். 1943 ஆம் ஆண்டு முதன் முறையாக ஒரு வேலை கேட்டு அவரை சிம்லாவில் சந்தித்தேன். அவரை சந்திக்க ஏழு மணி நேரம் காத்திருந்தேன். அவருக்கு என்னைப் பிடித்து விட்டதால், எனக்கு ஒரு வேலை வாங்கித் தர உறுதியளித்தார். பதினைந்து நாட்களில் வேலைக்கான நியமனக் கடிதம் கிடைத்தது.

சுதந்திரத்திற்குப் பிறகு தலித் அரசியலில் எத்தகைய மாற்றங்களை நீங்கள் காண முடிந்தது?

அது, அழிவை நோக்கியே செல்கிறது. சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில், தலித் தலைவர்கள் நன்கு படித்திருந்தார்கள். தங்களுடைய சமூகம் சந்திக்கும் பிரச்சினைகளைப் பற்றியும், பொது சமூகம் பற்றியும் முழுமையாகப் புரிந்து வைத்திருந்தார்கள். அன்றைய தலித் இயக்கம் உயிர்ப்போடு இயங்கியது. இன்று இருப்பதைப் போல உதட்டளவு தொண்டாகவும், தேர்தல் அரசியலாகவும் அது இல்லை. தீண்டத்தகாத மக்கள் கல்வி பெற வேண்டும் என்பதில் கவனமாகவும், ஆதரவாகவும் அவர்கள் இருந்தனர்.

எடுத்துக்காட்டாக, மகாராட்டிரத்தில் பாபாசாகேப் மூன்று கல்லூரிகளையும், மும்பையில் ஒரு பள்ளிக்கூடத்தையும் தொடங்கினார். தங்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடுவது பற்றி மட்டும் அம்பேத்கர் பேசவில்லை; சாதி அமைப்பு முறைக்கு எதிராகவும் அவர் பேசினார். ஆனால் இன்று, எல்லாரும் பாபாசாகேப்பின் பெயரை அரசியல் லாபங்களுக்காக மட்டுமே பயன்படுத்திக் கொள்கின்றனர். இன்றைய அரசியல்வாதிகள் எவரும், மாபெரும் தலித் தலைவராகத் திகழ்ந்த பாபாசாகேப்பின் கொள்கைகளுக்கு அருகில் கூட வர முடியாது. அவருடைய லட்சியங்களும், கொள்கைகளும் என்ன என்பதுகூட அவர்களுக்குத் தெரியாது.

தலித்துகள் மீதான பாகுபாட்டுக்கு எதிராக காந்தியும் செயல்பட்டார். இவ்விரு தலைவர்களும் எதில் வேறுபட்ட கருத்துகளைக் கொண்டிருந்தார்கள்?

காந்தி, தீண்டத்தகாத மக்களின் நண்பர் அல்லர். தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக இந்திய மக்களை உணர்வுவயமாக ஈர்த்தவராக இருந்தாலும், காந்தியினுடைய சாகும்வரை பட்டினிப் போராட்டம்தான் – தீண்டத்தகாத மக்கள் தேர்தலில் தங்களுக்கான பிரதிநிதிகளை தாங்களே தீர்மானிக்கும் உரிமையை அவர்களிடமிருந்து பறித்தது. அவர் ஒரே நேரத்தில் எங்களுக்கு ஆதரவாகவும், எதிராகவும் நடந்து கொண்டார்.

இந்திய அரசியலை தலித் கட்சிகளும், தலைவர்களும் மாற்றியிருப்பதாக நீங்கள் கருதுகிறீர்களா?

கண்டிப்பாக அவர்கள் மாற்றியிருக்கிறார்கள்; ஆனால் அதை மிக மோசமானதாக மாற்றியிருக்கிறார்கள். பாகுபாட்டை ஒழிப்பதற்கு பதில், தலித் கட்சிகள் சாதி அமைப்பைப் பலப்படுத்தவே செய்திருக்கின்றன. பட்டியல் சாதியினரிடமும் பல்வேறு குழுக்களிடையிலும் மேலும் பிளவுகளை உருவாக்கி இருக்கிறார்கள். அவர்களுடைய எழுச்சி முறை தவறானது. சில தலித் தலைவர்களின் முன்னேற்றத்தால், அதிகாரத்திற்கு அருகில் உள்ள வெகு சிலரே பயன் பெற்றிருக்கின்றனர். எடுத்துக்காட்டாக, ஒரு "சமார்' தலைவர் அவருடைய சாதிக்கு மட்டுமே பணியாற்றுவார். இதனால் ஒட்டுமொத்த தலித்துகளும் ஒன்றிணைய முடியவில்லை.

சட்டமன்றங்களிலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பிலும் கிடைத்திருக்கும் இடஒதுக்கீடு, தலித்துகளை பெருமளவில் முன்னேற்றுவதற்குப் பயன்பட்டிருக்கிறதா?

இடஒதுக்கீடு உதவியிருக்கிறது; ஆனால் அது முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. நமக்கு எதிரான காழ்ப்புணர்வுகள் மிகவும் அதிகமாக இருப்பதால், அரசுப் பணியிடங்களில் நம்முடைய சமூகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் இன்றளவும் இழிவுபடுத்தப்படுகின்றனர்.