இன்று ஜாதி எங்கே இருக்கிறது? இன்று யாரும் ஜாதி பார்ப்பதில்லை. அதுவெல்லாம் அந்தக்காலம்...'' இப்படிப் பேசும் குரல்களை இன்று பரவலாகக் கேட்க முடிகிறது. இந்தியச் சமூகத்தின் இயங்கு முறையை நுட்பமாகப் புரிந்து கொள்ளாத அல்லது புரிந்து கொண்டும் போலியாக சமத்துவம் பேசுகின்ற மனிதர்களின் குரல் இது. மறுபுறம் சமூகநீதிக்காய் போராடும் தரப்பிலிருந்தும் சில நேரங்களில் சலிப்புடன் சில வினாக்கள் எழுகின்றன. “அம்பேத்கர் சட்டம் எழுதியாயிற்று. பெரியாரும் வேறுபல தலைவர்களும் போராடிவிட்டனர். களத்தில் நின்று போராடிவரும் தலித் தலைமைகளும் இன்று உண்டு. ஆயினும் இன்னும் சாதி கொடுமைகள் ஒழியவில்லையே ஏன்? இன்னும் என்னதான் செய்வது? எங்கே தவறிழைக்கிறோம்?'' – இந்த வினாக்களையும் அறியாமையிலிருந்து வெளிப்படுபவை என்றே சொல்ல வேண்டும்.

இந்தியாவில் ஊனோடும் உயிரோடும் சாதி கலந்திருக்கிறது. இது ஆண்மய்யச் சமூகம் மட்டுமல்ல, ஜாதி மய்யச் சமூகமும் கூட. இங்கு எல்லாவற்றிலும் சாதி உண்டு. எல்லாவற்றிலும் என்றால் எல்லாவற்றிலும். மதம், சமூகம் அரசியல், வணிகம், அரசு நிர்வாகம், காவல், நீதி, கல்வி, கலை, விளையாட்டு என்று சாதியின் வேர்கள் ஆழ ஓடியுள்ள துறைகளைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். இவற்றுள் ஒரு முனையில் அடித்தால் மற்றொரு முனையிலிருந்து சாதி எழுகிறது. அண்மை நிலைமைகளைப் பார்த்தால் சாதி எதிர்ப்பாளர்கள் மேலும் கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது.

நீதிமன்ற அறையிலிருந்து அம்பேத்கரின் படத்தை அகற்றச் சொல்லியிருக்கிறார் திண்டிவனத்தில் உள்ள நீதிபதி ஒருவர். தேனி அருகே வடுகப்பட்டியில் ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த ஒருவர் தலித் சிறுவன் ஒருவனை தலையில் செருப்பைச் சுமக்க வைத்திருக்கிறார். சென்னையில் நடந்த இந்து ஆன்மிகக் கண்காட்சியில், சாதி அமைப்பை புகழ்ந்து பேசியிருக்கிறார் எஸ்.குருமூர்த்தி. அக்கருத்தரங்கில் சாகித்ய அகாதெமி விருது பெற்ற ஜோடி குரூஸ் உட்படப் பலரும் சாதி அமைப்பை வரவேற்றுப் பேசியுள்ளனர்.

தமிழ்நாட்டில் சாதியைக் காப்பாற்றி அரசியல் நடத்த கட்சிகள் இணைந்துள்ளன. தலித் பெண்களுக்கெதிரான கொடும் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. கரூரில் தலித் மாணவி ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாய் கொல்லப்பட்டிருக்கிறார். இப்பட்டியலை இன்னும் விரிவாக்கிக் கொண்டே போகலாம். வடநாட்டில் நடக்கும் சாதிய கொடுமைகளைப் பற்றியும் மிக விரிவான பட்டியலை இங்கு தரமுடியும். அவ்வளவு கொடுமைகள் நடந்தபடியே உள்ளன. இந்தியர்களைப் பொருத்த மட்டில் தலித்துகள் மனிதர்களில்லை; அம்மக்கள் செத்தொழிந்தாலும் சாதி இந்துக்களுக்கு கவலையில்லை.

இந்தியாவின் தலையாய சிக்கல்களில் சாதியமைப்பின் செயல்பாடு முக்கியமானது. இதை ஆதிக்கச் சாதியினர் ஒப்புக் கொள்வதில்லை. தலித் மக்களுக்கு எதிராக அன்றாடம் நடந்து வரும் வன்கொடுமைகளை பொது சமூகம் என பசப்பும் சாதிய சமூகம் கண்டும் காணாமல் செல்கிறதென்றால், அரசு நிர்வாகமும் நீதிபரிபாலன அமைப்புகளும் கூட அதே விதமாகத்தான் நடந்து கொள்கின்றன.

ஆந்திர மாநிலம் சுண்டூரில் 1991 ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட தலித் படுகொலைகளை விசாரித்து வந்த நீதிமன்றம், 22.04.2014 அன்று படுகொலையில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவரையும் விடுதலை செய்திருக்கிறது. அரசியல்வாதிகளாலும் ஊடகங்களாலும் கண்டு கொள்ளப்படாத தீர்ப்பு இது. மக்கள் மன்றத்தில் இத்தீர்ப்பு கவனப்படுத்தப்படவேயில்லை. தலித் மக்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது இத்தீர்ப்பு.

இந்தியாவில் நீதிமன்றங்கள் சட்டத்தின்படி இயங்குகின்றனவா? மநுதர்மத்தின் படி இயங்குகின்றனவா? என்ற தலித் மக்களின் வினாவுக்கு அத்தீர்ப்பு மீண்டும் உறுதியாக விடை சொல்லியிருக்கிறது. நாங்கள் மநுதர்மத்தின் படிதான் செயல்படுகிறோம் என்று. இந்த விடை ஏற்கெனவே சொல்லப்பட்டதுதான். வெண்மணி தீர்ப்பில், லட்சுமண்பூர் பதே தீர்ப்பில், பதானி தோலா தீர்ப்பில், கரம்சேடு தீர்ப்பில், பன்வõரிதேவி தீர்ப்பில், பூலான் தேவி தீர்ப்பில், இளவரசன் திவ்யா தீர்ப்பில். ஆயினும் எங்களுக்கு நீதிமன்றங்களை விட்டால் வேறு போக்கிடமில்லை. அதுவே எமது கடைசிப் புகலிடம் என்று இன்னும் கூறிக் கொண்டிருக்கிற தலித்துகளுக்கு மீண்டும் ஒருமுறை உரத்துச் சொல்லியிருக்கிறது.

சுண்டூர் படுகொலைச் சம்பவம் நாடெங்கிலும் கவனத்தை ஈர்த்த ஒன்று. ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் தெனாலிக்கு அருகிலிருக்கும் சிறு நகரம் சுண்டூர். தலித் மக்களும் சாதி இந்துக்களும் சம எண்ணிக்கையில் உள்ள பகுதி. 1991 கணக்கெடுப்பின்படி சுண்டூரில் அரசுப் பணிகளிலும் கல்வியறிவு பெற்றதிலும் முன்னிலையில் இருந்தவர்கள் தலித் மக்கள். கல்வியறிவு பெற்ற சமூகம் தனது அடிமைத் தளையைக் குறித்து கட்டாயம் பரிசீலனை செய்யும். இது அங்கு நடந்தது. அங்கு ஆதிக்கச் சாதியினராய் இருந்த ரெட்டிகளுக்கு இது உள்ளூர காழ்ப்புணர்வை வளர்த்திருத்திருந்தது.

தலித்துகள் அடிமைகளாக இருக்க விரும்பவில்லை. தலித்துகள் நிலமற்றவர்களாக இருந்த போதிலும் தமது கல்வியினாலும் உழைப்பாலும் முன்னேறுவதால் ஆதிக்கச் சாதியினரின்  பிடி மெல்ல தளர்ந்து வந்தது. இதை ரெட்டிகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. உள்ளூர கனன்று கொண்டிருந்த சாதி வன்மம் 6.8.1991 அன்று வெடித்தது. இந்தியா தனது விடுதலை நாளை கொண்டாடும் முகமாக தயாரிப்பு வேலைகளில் மூழ்கியிருந்த போது சுண்டூர் தலித் மக்கள் உயிருக்கு பயந்து ஓடி அலைந்தனர். மூன்று நாட்களாக நிகழ்த்தப்பட்ட கொலை வெறித் தாக்குதலில் தலித்துகள் வெட்டிக் கொல்லப்பட்டனர். இக்கொடூரத் தாக்குதலுக்கு காரணமாகச் சொல்லப்பட்டது ஒரு சிறு சம்பவம்தான்.

மகாராட்டிர மாநிலம் நாக்பூரில் முதுகலைப்பட்டப் படிப்பு படித்து வந்தார் கோவிதோட்டரவி என்ற தலித் இளைஞர்.அவர் 07.07.1991 அன்று கிராமத்திலிருந்த திரைப்படக் கொட்டகையில் படம் பார்த்துக் கொண்டிருந்த போது – தவறுதலாக அவருடைய கால் – முன்வரிசையில் அமர்ந்திருந்த ரெட்டி சாதியைச் சேர்ந்த குர்ரி சீனிவாசன் என்பவர் மீது பட்டுவிட்டது. இதைப்பிடித்துக் கொண்ட ரெட்டி சாதியினர் மேலும் சில புகார்களை கோத்து சாதி வன்மத்தை ஊதிப் பெருக்கிவிட்டனர்.

வெட்டிக் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் சாக்குப்பைகளில் கட்டப்பட்டு துங்கபத்திரா ஆற்று நீர்க்கால்வாயில் வீசப்பட்டன. முதலில் கொலையுண்டவர்கள் 14 பேர் என்றும், காணாமல் பேனவர்கள் 14 பேர் என்றும் சொல்லப்பட்டது. பிறகு எட்டு பேர் என அறிவிக்கப்பட்டது. கொலையுண்டவர்களில் தன் மகனும் ஒருவன் என அறிந்து மாரடைப்பில் ஒருவர், போராட்டத்தின் போது ஒருவர், பட்டினிப் போராட்டத்தின் போது காவல் துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் என மேலும் மூவர் இறந்து போயினர். மொத்தம் பதினோரு தலித் உயிர்கள் பலியாயின.

சுண்டூர் கொலையும், காரம்சேடு கொலையும், புலிவெந்துல படுகொலையும் ஆந்திராவின் சாதிய முகத்தை உலகிற்கு காட்டியவை. சுண்டூர் படுகொலைகள் குறித்து அப்போது வெளியிடப்பட்ட வெளியீடு ஒன்று, 1985 முதல் 1991 வரையிலான ஆறு ஆண்டுகளில் ஆந்திராவில் 47 தலித்துகள் படுகொலை செய்யப்பட்டதை ஆதாரங்களோடு பட்டியலிடுகிறது "மரணவெறித்தாக்குதல்' – தலித் முன்னேற்றச் சங்கம், சென்னை 23, 1991'

சுண்டூர் படுகொலைகளை காவல் துறை நினைத்திருந்தால் தடுத்திருக்க முடியும். திரைப்பட கொட்டகை சம்பவத்தை தொடர்ந்து 144 தடையாணை போடப்பட்டிருந்த சூழலில், படுகொலைகள் நடப்பதற்கு முந்தைய வாரத்தில் திடீரென தடையாணையை காவல்துறை நீக்கிவிட்டது. தலித் மக்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்படவில்லை. இதிலிருந்து கூட்டுச்சதியை நம்மால் அறிய முடிகிறது. சுண்டூர் கொலைகளின் மீது கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ளச் சொல்லி பட்டினிப் போராட்டம் நடத்திய கொம்மரேலா அனில் குமார் என்ற தலித் இளைஞரை காவல்துறை சுட்டுக் கொன்றுவிட்டது. அவர் சுண்டூர் கொலைகளுக்கு நேரடி சாட்சியாக இருந்தவர். இந்த திட்டமிட்ட சதியின் மூலம் காவல்துறையில் இருந்த ஆதிக்கச் சாதி அதிகாரிகளின் சாதிவெறியும் அம்பலமானது.

சுண்டூர் கொலைகளை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் இவ்வழக்கு நடந்து வந்தது. காவல்துறை வழக்கமான தனது "வேலை'யைக் காட்டியது. முதல் தகவல் அறிக்கையில் பதியப்பட்ட 219 குற்றவாளிகளில் 7 பேரை அது கைது செய்யவில்லை. காலம் தாழ்த்தி தொடங்கப்பட்ட விசாரணைக்குள் 23 பேர் இறந்தே போயினர். இவ்வழக்கில் 189 பேரை விசாரித்த நீதிமன்றம் 31.07.2007 அன்று 21 பேருக்கு ஆயுள் தண்டனையையும் 35 பேருக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனையையும் வழங்கி தீர்ப்பளித்தது. மற்றவர்கள் விடுவிக்கப்பட்டனர். வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்கில், நீதிமன்றமோ இந்திய தண்டனைச் சட்டம் 302 இன் கீழ் தீர்ப்பினை அளித்தது.

தண்டனை பெற்றவர்கள் ஆந்திர உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். நீதிபதிகள் எல். நரசிம்ம ரெட்டி, எம்.எஸ்.கே. ஜெய்ஸ்வால் அடங்கிய அமர்வின் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டது. சிறப்பு நீதிமன்றம் அளித்திருந்த குறைந்தபட்ச தண்டனையையும் நீக்கி அனைவரையும் விடுதலை செய்திருக்கிறது உயர் நீதிமன்றம். குற்றவாளிகளை அப்பாவிகள் என்று நீதிமன்றம் சான்றளித்திருக்கிறது. தங்களின் ஆதிக்கச்சாதி திமிரினை காட்டுவதற்காக எட்டு தலித்துகளை கொன்றொழித்தவர்களை எப்படி உயர்நீதிமன்றம் அப்பாவிகள் என்று கருதியதெனத் தெரியவில்லை.

சுண்டூர் வழக்கில் தலித் மக்களின் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டு, உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு தடையாணை பெறப்பட்டுள்ளது என அண்மையில் கிடைத்த செய்தி ஒன்று தெரிவிக்கிறது. உச்ச நீதிமன்றம் என்ன செய்யப் போகிறதென்று காத்திருந்து பார்க்கலாம். இத்தீர்ப்பு ஊடகங்களில் போதிய கனவத்துடன் பதிவாகவில்லை. எதற்கெடுத்தாலும் விவாதித்து பட்டையைக் கிளப்பும் நமது அறிவுஜீவிகளுக்கும், தொலைக்காட்சி ஆளுமைகளுக்கும் இதை விவாதிக்க நேரம் கிடைக்கவில்லை!

சாதிவெறியால் கொலையுண்டவர்களுக்கு இப்போதிருக்கின்ற வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நீதி கிடைக்கவில்லை, இந்திய தண்டனைச் சட்டத்தாலும் பயன் இல்லை என்ற நிலை வெளிப்படையாகத் தெரிகிறது. இந்தச் சூழலில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நீக்கச் சொல்லி ஓர் அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறது. அதை நீதிமன்றமும் ஏற்றிருக்கிறது. இதை எப்படி விளங்கிக் கொள்வதென்றே தெரியவில்லை. பொய்களால் புனையப்பட்ட உலகில் வாழ்வதற்கு பழக்கப்படுத்தப்படுகின்றனர் மக்கள். உண்மைக்கு மாறானவையே இன்று உண்மையாக முன்வைக்கப்படுகின்றன. வன்கொடுமைகளால் நாள்தோறும் துன்பத்தை அனுபவிக்கும் தலித் மக்களுக்கு ஓயாமல் போராடுவதற்கேற்ற உறுதிப்பாடு ஒன்றே இன்று தேவைப்படுகிறது.

இந்த நாடு தலித் மக்களுக்கு திறந்த வெளிச் சிறைச்சாலையாக மாறிவருகிறது. மிகக் குறிப்பாக தலித் பெண்களுக்கு இந்த நாடு ஒரு சித்திரவதைக் கூடம். "தாய் நாடு என்று எனக்கு எதுவுமில்லை. இந்த நாட்டைக் குறித்துப் பெருமை கொள்ள ஒரு தீண்டத்தகாதவனுக்கு இங்கே ஒன்றுமேயில்லை' என காந்தியிடம் அம்பேத்கர் சொன்னது நினைவுக்கு வருகிறது. இன்னும் என்ன வாழ்கிறது இந்த நாட்டை மெச்சிக் கொள்வதற்கு? அம்பேத்கர் எத்தனைப் பெரிய தீர்க்கதரிசி. தலித் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவது அதிகரித்தபடியே உள்ளது. தலித்பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமையை சகிக்காமல் தலித் மக்கள் கொதிக்கின்றனர்.

“ ஒவ்வொரு நாளும் இரண்டு தலித்துகள் தாக்கப்படுகிறார்கள், ஒவ்வொரு நாளும் மூன்று தலித் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள், இரண்டு தலித்துகள் கொல்லப்படுகிறார்கள், இரு தலித் குடியிருப்புகள் கொளுத்தப்படுகின்றன'' என்று புள்ளிவிவரங்களின் அடிப்படையில் ஹில்லாரி மேயல் வரையறுத்த மேற்கோளையே இன்னமும் எத்தனை நாட்களுக்குச் சொல்லி பேசிக் கொண்டிருக்கப் போகிறோம்? இன்று அப்புள்ளிவிவரங்களே கூட மாறிவிட்டன.

தலித் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்தப்படுவது ஒரு நாளுக்கு¬ 4.3 பேர் என அதிகரித்து விட்டிருக்கிறது. இன்னும் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? "வன்கொடுமைகள் புள்ளி விவரங்களல்ல' என்று குமைகிறார் தலித் அறிவாளர் ஆனந் டெல்டும்டே. உண்மைதான். இது வேடிக்கைப் பார்ப்பதற்கும் பேசுவதற்கும் எழுதுவதற்குமான காலமல்ல. செயல்படுவதற்கான காலம். எதையாவது செய்தே ஆக வேண்டும். இது சூழல் விடுத்திருக்கும் நெருக்கடி.

இந்தியா முழுமையிலும் வாழ்ந்து கொண்டிருக்கிற தலித் பெண்களில் 67 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் பாலியல் வன்முறைகளை ஏதாவது ஒரு வகையில் எதிர்கொள்வதாக தலித் மனித உரிமைக்கான தேசிய பரப்புரை கூறியிருக்கிறது. 2013 ஆம் ஆண்டில் தமிழகத்தில் பதிவான பாலியல் வன்முறை வழக்குகள் 923. இவற்றுள்

46 சதவிகித வழக்குகள் தலித் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு பதியப்பட்டவை என "எவிடன்ஸ்' அமைப்பு ஆய்வு செய்து அறிவித்திருக்கிறது. நிலைமை இப்படி இருக்க அரசுகளிடமிருந்தும் ஊடகங்களிடமிருந்தும் பொது சமூகத்திடமிருந்தும் எந்தவகையான எதிர்வினையுமே இல்லை. ஆண்மய்ய பகடிகளும், சாதி வன்மம் தோய்ந்த கேலிக் குரல்களும் இக்குற்றங்களுக்கு இணையாக வெளிப்படுவது பெருகியுள்ளன. "உத்திரப்பிரதேசத்தில் இருக்கும் ஆண்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடுவதென்றால், ஊடகங்களில் வெளியாகும் பாலியல் வன்முறை செய்திகள் மிகக் குறைவானதுதான்' என்கிறார் முலாயம்சிங் (யாதவ்). "பாலியல் புகார் அளிப்பது இப்போது பெண்களுக்கு நாகரிக செயலாகி விட்டது' என்று சிவசேனா கட்சியே அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

தமிழகச் சூழலை ஊன்றி கவனித்தாலே போதும் இங்கிருக்கிற நிலைமைகள் புரிந்துவிடும். புகழ்பாட நேரம் போதாதவர்களாய் ஒரு சாரார் என்றால், புனரமைப்பு பணிகளை மேற்கொள்பவர்களாய் மற்றொரு சாரார். இருவருக்கும் தலித் பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுவதை கண்டிக்கவும் தடுக்கப் போராடவும் நேரமில்லை. ஒரு சிலரோ, அடிபட்டவனுக்கும் முன்னால் அழுது ஆர்ப்பாட்டம் செய்து கொண்டுள்ளனர். இன்று பதியப்படும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைக் குற்றங்களில் பாதிக்கும் மேற்பட்டவை தலித் பெண்கள் தொடர்பானவையாய் இருக்க, அவர்களோ எம்மினப் பெண்கள் தலித் இளைஞர்களால் ஏமாற்றப்படுகின்றனர் என்ற பொய்யைக் கூறி புலம்புகின்றனர்.

இந்திய அளவில் தலித் பெண்களை பாலியல் வன்முறைக்கு ஆளாக்குவது பெருகியுள்ளது. தமிழகத்தில் கடந்த ஒன்றிரண்டு மாதங்களில் கொடூரமான நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. கடந்த மே மாதத்தில் உத்திரப்பிரதேசம் கத்ரா கிராமத்தைச் சேர்ந்த (பதான் மாவட்டம்) இரண்டு சிறுமிகள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டனர். பதினாறு வயதேயான அவ்விரு சிறுமிகள் இரவிலே இயற்கை அழைப்புக்கு ஒதுங்கப் போனபோது வன்புணர்ச்சி செய்யப்பட்டனர். மறுநாள் காலையிலே இருவரின் உடல்களும் மரத்திலே தொங்கின. இக்கொடுமையைச் செய்தவர்கள் அக்கிராமத்தைச் சேர்ந்த ஆதிக்கச் சாதி ஆண்கள்.

மனதைப்பதறச் செய்யும் வகையிலே நடந்திருக்கிற வேறொரு கொடுமையும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது நடந்தது ஹரியானாவில். அம்மாநிலத்தின் ஹிசார் மாவட்டத்திலிருக்கும் பகானா கிராமத்தில் கடந்த மார்ச் மாதம் 23 ஆம் தேதி இக்கொடூரம் நடந்திருக்கிறது. பகானா கிராமத்தைச் சேர்ந்த தலித் தொழிலாளி கிருஷ்ணாவுக்கும் ஜாட் சாதி ஆட்களுக்கும் கூலி தொடர்பான தகராறு இருந்துள்ளது. தன் உழைப்புக்கு ஏற்ற கூலியை அவர் கேட்ட போது கடுமையாய் தாக்கப்பட்டிருக்கிறார். ஜாட் சாதி பஞ்சாயத்தே இதைச் செய்திருக்கிறது. கிருஷ்ணன் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. காவல்துறை தனது வழக்கமான ஆள்காட்டி வேலையைச் செய்திருக்கிறது. அக்கிராமத்து ஜாட் ஆண்கள் கிருஷ்ணனுக்கு பாடம் புகட்ட வேண்டும் என முடிவு செய்துள்ளனர்.

மார்ச் மாதம் 23 அன்று இரவு நேரத்தில் கிருஷ்ணனின் மகளும் வேறு மூன்று தலித் சிறுமிகளும் இயற்கை உபாதையைக் கழிக்கச் சென்ற போது ஜாட் ஆண்களால் கடத்தப்பட்டார்கள். மயக்க மருந்தினால் தோய்க்கப்பட்ட கைக்குட்டையால் மயக்கமடையச் செய்யப்பட்ட அவர்கள் கிராமத்திற்கு வெளியே கோதுமை வயல்களுக்கு கொண்டு செல்லப்பட்டு பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டனர். காலையில் கண்விழித்த போது அச்சிறுமிகள் நால்வரும் பாதின்டா ரயில் நிலையத்துக்கு அருகிலுள்ள புதர்களில் வீசப்பட்டிருந்தனர்.

அச்சிறுமிகளை மீட்டு வந்தபோது, உண்மையைக் கூறக் கூடாது என்று ஆதிக்கச் சாதி ஆண்களால் மிரட்டப்பட்டுள்ளனர். அப்பெண்கள் தம் பெற்றோருடன் சென்று புகார் அளித்த போது காவல் துறையினர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று விரல் பரிசோதனை செய்துள்ளனர். பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட பெண்களுக்கு இப்பரிசோதனையை செய்யக் கூடாது என்று நீதிபதி வர்மா குழு பரிந்துரை செய்துள்ளது. விதிகளைப் புறக்கணித்து அப்பெண்களை மேலும் அவமானப்படுத்தியுள்ளனர் காவல் துறையினர்.

வன்கொடுமைக்கு ஆளான இளம் பெண்களுக்காக நீதிகேட்டு பகானா கிராமத்தைச் சேர்ந்த 90 தலித் குடும்பங்கள் டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் மூன்று மாதங்களாய் போராட்டம் நடத்தினர். அங்கேயே குடில்களை அமைத்து தங்கி எதிர்ப்பைத் தெரிவித்தனர். அவர்களின் போராட்டம் கண்டுகொள்ளப்படாமலேயே போனது. சூன் மாதம் காவல் துறை அம்மக்களை அடித்து துன்புறுத்தி அவ்விடத்திலிருந்து வெளியேற்றியது. நீதி கேட்டு உறுதியாக அங்கேயே நின்ற பெண்களை காவலர்கள் கடுமையாகத் தாக்கினர். லத்திகளை நுழைத்தால்தான் இப்பெண்கள் இங்கிருந்து போவார்கள் என்று சொல்லி தாக்கினர் காவலர்கள். தலைநகரமே பார்த்திருக்க மீண்டும் ஒரு முறை பாலியல் வன்கொடுமை நிகழ்த்தப்பட்டது.

தமிழகத்தில் தலித் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதை கரூர் அருகிலுள்ள கே.பிச்சம்பட்டியைச் சேர்ந்த ஒரு தலித் மாணவி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டது அப்பட்டமாகக் காட்டுகிறது. பொறியியல் தொடர்புடைய ஒரு படிப்பினை படித்திட வேண்டும் என்று நினைத்த அப்பெண்ணுக்கு ஏழ்மை இடம் தரவில்லை. பனிரெண்டாம் வகுப்பை முடித்த கையோடு தனது கிராமத்திலிருந்து

20 கி.மீ. தள்ளியிருக்கும் கரூர் நகரத்திலுள்ள கொசுவலை தயாரிப்பு நிறுவனத்தில் வேலைக்கு போய் வந்து கொண்டிருந்தார் அப்பெண். நாளொன்றுக்கு பத்து மணி நேரம் வேலை செய்து சம்பாதித்த பணத்தில் தனக்குத் தேவையான துணிமணிகளை வாங்கிக் கொண்டு, முசிறியில் உள்ள கல்லூரியில் சேர்வதற்கு காத்திருந்தார் அப்பெண். ஒரு நாள் அப்பெண் வேலை முடிந்து வீட்டுக்கு வரும் போது ஆதிக்க சாதி இளைஞர்கள் சிலரால் வழிமறிக்கப்பட்டிருக்கிறார். அடுத்த நாள் அப்பெண்ணின் உடல் ஒரு வெற்றிலைத் தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்டது. அப்பெண் ஓட்டிக் கொண்டு வந்த மிதிவண்டி கேட்பாரற்று அங்கு விழுந்து கிடந்ததை வைத்து இக்கொடூர நிகழ்வை கண்டுபிடித்தனர் கிராம மக்கள். கூட்டு வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டு, கொடூரமாகக் கொல்லப்பட்டிருந்தார் அப்பெண்.

கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தின் நடுமாவட்டங்களில் தலித் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதை செய்திகள் சொல்கின்றன. 2012இல் 4 தலித் இளம்பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். இவ்வாண்டில் இதுவரை 3 பாலியல் வன்முறைகள் பதிவாகியுள்ளன. அவற்றுள் கொடூரமானது கரூர் நிகழ்வு. வேறொரு புறம் சாதி மீறிய திருமணங்களை மேற்கொள்ளும் பெண்கள் கொல்லப்படுவதும் அதிகரித்து வருகிறது. மாநில குற்றப்பதிவு பிரிவு தரும் தகவல்களின்அடிப்படையில் பார்த்தாலேயே நெஞ்சம் பதறுகிறது.

கடந்த 30 மாதங்களில் 24 பெண்கள் கவுரவக் கொலை செய்யப்பட்டுள்ளனர். 2012 இல் தமிழகத்தில் 6,179 பெண்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதே ஆண்டில் 662 பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் 198 பேர் 19 லிருந்து 30 வயது கொண்டவர்கள். கடந்த மாதம் ராமநாதபுரத்தில் தலித் இளைஞர் ஒருவரை காதலித்து மணந்து கொண்டதற்காக, தனது தந்தை மற்றும் குடும்பத்தினரால் கொல்லப்பட்ட பெண் பற்றி செய்தி ஆழ்ந்த கவலையை உருவாக்கியுள்ளது.

பெண்களுக்கு எதிரான குற்றங்களை வெறுமனே பாலியல் சார்ந்ததாக மட்டுமே பார்ப்பது தவறானது. அதை இனவெறி, சாதிவெறி, வகுப்பு வெறி, ஆணாதிக்க வெறி ஆகியவற்றோடு தொடர்புபடுத்தியே பார்க்க வேண்டும் என்கிறார் தனது ஆய்வு நூலில் கேத் மில்லத் எனும் அறிஞர். ஆனால் இதை இந்திய அறிவாளர் சமூகமும் பொது சமூகமும் ஏற்பதாகத் தெரியவில்லை. திறந்த வெளியில் மலம் கழிக்கச் செல்வதாலும் கைப்பேசியைப் பயன்படுத்துவதாலும் தான் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பெருகுவதாக ஆராய்ந்து அறிவித்திருக்கிறார்கள் தற்போது. திறந்தவெளியைப் பயன்படுத்தும் தலித் அல்லாத பெண்கள் மட்டும் ஏன் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுவதில்லை?

தலித் அல்லாத பெண் பாலியல் வன்கொடுமை செய்திகள் "நிர்பயா'க்களாக்கப்படுவதும், தலித் பெண் பாலியல் வன்கொடுமை செய்திகள் கவனிக்கப்படாமலேயே விடப்படுவதும் ஏன்? இதற்கெல்லாம் விடை ஜாதி என்ற சொல்லைத் தவிர வேறென்ன?

அரசும், அறிவார்ந்த சமூகமும் தலித் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுவதற்கு எதிராக செயல்பட வேண்டியது அவசியம். இல்லையெனில் இதை நாகரிக சமூகம் என்று அழைப்பதில் எந்தப் பொருளுமே இல்லை. நிலைமை இப்படியே நீடித்தால் ஒடுக்கப்பட்ட மக்கள் தீவிர எதிர்ப்பு நிலைக்கு திரும்புவதைத் தவிரவும் வேறு வழியிருக்காது.

நீதித்துறையும் அதிகார வர்க்கமும் ஒரு சார்பாய் செயல்படுகின்றன. சாதியவாதத்தை தீவிரமாக வலியுறுத்தும் மனிதர்கள் பெருகிவிட்டார்கள். இச்சூழலில் இனி செய்வதற்கு என்ன இருக்கிறது என்று கணநேரம் தோன்றி மறைகிறது. மனம் துணுக்குறுகிறது. ஆனால், உண்மையில் தலித் மக்கள் என்றைக்குமே சாதியற்ற சமூகச்சூழலில் இருந்ததில்லை. தற்போதைய நிலையைவிடவும் கொடூரமாக சாதிய விதிகளான மநுவின் சட்டம் கடைப்பிடிக்கப்பட்ட காலங்களில் கூட வாழ்ந்து வந்திருக்கின்றனர். காலந்தோறும் எதிர்ப்புகளும் போராட்டங்களும் இருந்திருக்கின்றன என்பதை வரலாறு நமக்கு உணர்த்தியிருக்கிறது. தலித் மக்கள் இன்று இச்சூழலை எதிர்கொள்வதற்கு அணிதிரண்டு நிற்பதற்கு அவசியமாகிறது. திரட்சிக்கு என்றுமே பலம் அதிகம். நமக்கான சட்டங்களும் உதவிக்கரங்களும் ஆதரவு சக்திகளும் இல்லாமல் இல்லை. அவற்றை தலித் மக்கள் கூடுதலாக பயன்படுத்திக் கொள்ளவேண்டியது இச்சூழலில் அவசியமாகிறது. அந்தந்தப் பகுதிகளில் வலுவாக இயங்கும் அமைப்புகளின் தனிமையைப் போக்கிடும் வகையில் அவர்களின் பின்னால் நிற்கவேண்டியிருக்கிறது. தலித் மக்களுக்கெதிரான குற்றங்களை பல முனைகளிலிருந்தும் அம்பலமாக்க வேண்டியிருக்கிறது.

ஜனநாயக நெறிமுறைகளின் வழியே நமக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்காக நியாயம் கேட்டு தலித் மக்கள் உடனடியாக வீதிக்கு வரவேண்டும். அண்மையில் அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்ட ஓர் ஆப்ரோ அமெரிக்க இளைஞனுக்காக நீதி கேட்டு பெரும் போராட்டங்கள் அங்கு வெடித்தன. இதுவரையிலும் தலித் மக்கள் அவ்வாறு எங்காவது அணிதிரண்டுள்ளனரா? ஆதிக்கப்பீடங்களும் அதிகார அமைப்புகளும் ஆட்டம் காணும் வகையில் இங்கு எங்காவது தன்னெழுச்சியுடன் தலித் மக்களின் அணி திரட்சி நடந்திருக்கிறதா? ஏன் இல்லை? கருத்தியல் தளத்தில் அவர்களை ஒருங்கிணைத்து அம்பேத்கரியத்தை அவர்களிடம் கொண்டு சேர்க்காமல் விட்டதால்தானே தலித் மக்கள் தனித்தனித் தீவுகளாய் திரியும் நிலை நீடிக்கிறது.

அம்பேத்கரியத்தை நாடுகிறபோதே நமக்கு கிழக்கு வெளுக்கும். 

Pin It