டெட் ஆர்லின் (TED ORLIN) என்று அறியப்படும் பேராசிரியர் தியோடர் ஆர்லின், அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தின் யுடிகா கல்லூரியில் மனித உரிமைகள் பேராசிரியராகப் பணிபுரிகிறார். உலகளாவிய மனித உரிமை வழக்குøரஞரான அவர் அல்பேனியா, பல்கேரியா, கொசோவா போன்ற பால்கன் நாடுகளிலும் ரொமேனியா, மால்டோவா, ஸ்லோவோகியா போன்ற கிழக்கு அய்ரோப்பிய நாடுகளிலும் இந்தியா, தாய்வான், இலங்கை போன்ற ஆசிய நாடுகளிலும் மலாவி, காமரூன், ஜாம்பியா போன்ற ஆப்ரிக்க நாடுகளிலும் மனித உரிமைகள் பயிற்றுநராக, ஆலோசகராக, வழக்குரைஞராக நீண்டகாலம் பணியாற்றிய அனுபவமுள்ளவர்.

பின்லாந்தின் மனித உரிமைகள் மய்யத்தில் மனித உரிமைகள் பேராசிரியராகவும் கொசோவாவில் பணியாற்றிய பின்லாந்து மனித உரிமைகள் குழுவின் (2000–01) மூத்த மனித உரிமைகள் ஆலோசகராகவும் ரொமானியாவிற்கு சென்ற பன்னாட்டு மனித உரிமைகள் சட்டக் குழுவின் முதன்மை வழக்குரைஞராகவும் பணியாற்றியுள்ளார்.

Orlin 340மனித உரிமைகள் சார்ந்து அவர் பல நூல்களை எழுதியும் தொகுத்தும் வெளியிட்டுள்ளார். "மனித உரிமைகள் சட்டத்தின் செல்லுபடித் தன்மை', "மரண தண்டனையின் சுமைகள்', "பெண்களுக்கு எதிரான வன்முறைகள்' ஆகியவை அவற்றில் சில. அல்பேனியாவின் உலகளாவிய மனித உரிமைகள் திரைப்பட விழாவின் தேர்வுக் குழு உறுப்பினராக 2006 முதல் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.

பேராசிரியர் டெட் ஆர்லின் சனவரி 2014 இல் இந்தியா வந்திருந்தபோது, பெங்களுரில் உள்ள இந்திய சமூக நிறுவனத்துடன் இணைந்து சட்ட மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு உலகளாவிய மனித உரிமைகள் குறித்து மூன்று நாட்கள் வகுப்பு நடத்தினார். அப்போது அவருடன் நடத்திய உரையாடலிலிருந்து சில பகுதிகள்.

 சந்திப்பு: பூங்குழலி

மனித உரிமைகளை எவ்வாறு புரிந்து கொள்வது? எவற்றை மனித உரிமைகள் என்று சொல்லலாம்?

மனித உரிமைகளை விளக்குவதற்கு மிகப் பொருத்தமான சொல் மாண்பு ஆகும். எப்பொழுதெல்லாம் ஒரு மனிதனின் மாண்புக்கு இழுக்கு ஏற்படுகிறதோ, மாண்பு மறுக்கப்படுகிறதோ அப்பொழுதெல்லாம் மனித உரிமை மீறப்படுவதாகவே பொருள்.

மனித உரிமைகளுக்கான அடிப்படையாக நீங்கள் எதைக் கருதுகிறீர்கள்?

இதற்கு நான் வரலாற்றிலிருந்து தொடங்க விரும்புகிறேன். உலகின் முன்னோடிப் புரட்சியாளர்களாக நான் மூவரைப் பார்க்கிறேன். கோபர்நிகஸ், கலீலியோ, நியூட்டன் ஆகிய மூவரே அவர்கள். புரட்சி என்பதை நான் இவ்வாறு புரிந்து கொள்கிறேன். உலகம் நம்பி ஏற்றுக் கொண்டுள்ள ஒன்றிற்கு மாறாக, ஓர் உண்மையை முன் வைப்பதே புரட்சி.

அதிலும் அதிகாரத்திற்கு எதிராக தனது கருத்தை துணிச்சலுடன் முன்னெடுப்பவர்களே புரட்சியாளர்கள். அந்த வகையில் அதுகாறும் பூமியையே சூரியனும் மற்ற கோள்களும் சுற்றுகின்றன என்று நம்பி வந்த மக்களிடையே சூரியனைத்தான் பூமியும் பிற கோள்களும் சுற்றுகின்றன என்ற உண்மையை முதன் முதலாக வெளிப்படுத்தியவர் கோபர்நிகஸ்.

அதனை அன்று எவரும் ஏற்றுக்கொள்ளவில்லை. அதன் பின்னர் அவரைப் பின்பற்றி கலிலியோ சூரியனே கோள்களின் மய்யப்புள்ளி என்பதற்கு மேலும் ஆதாரங்களை அளித்தார்.

அன்று அதிகாரம் திருச்சபையிடம் இருந்தது. திருச்சபை ஏற்றுக் கொண்ட ஒரு கருத்திற்கு எதிராக இயற்கையைப் புரிந்து கொண்டு உண்மையை வெளிப்படுத்திய கலிலியோவை திருச்சபை தண்டித்தது. அதன் பின்னர் பல ஆண்டுகளுக்குப் பிறகு நியூட்டன் வெளிக்கொணர்ந்த புவிஈர்ப்பு தத்துவமே கோபர்நிகசும் கலிலியோவும் வெளிப்படுத்திய உண்மைகளை ஆணித்தரமாக உறுதி செய்தது.

இவ்வாறு இவர்கள் மூவரும் வெளிக்கொணர்ந்த அறிவியல் பேருண்மை "ரிவல்யூஷனரி தியரி' (Revolutionary Theory)  எனப்படுகிறது. அதாவது, சுழற்சி கருதுகோள் (ரிவல்யூஷனரி என்றால் சுழற்சி). இந்த வரலாற்றிலிருந்து எடுக்கப்பட்ட "ரிவல்யூஷனரி' என்ற சொல் அதிகாரத்திற்கும் பெரும்பான்மை மக்களின் நம்பிக்கைக்கும் மாறாக உண்மைகளை வெளிப்படுத்தும் செயலுக்கான குறியீட்டுச் சொல்லாக மாறிவிட்டது. இன்று புரட்சி என்ற பொருளில் அது பயன்படுத்தப்படுகிறது.

மற்றொரு புறம், அறிவியல் எனப்படுவது இயற்கையைப் புரிந்து கொள்வது. அவ்வாறு இயற்கை உண்மைகளைப் புரிந்து கொள்ளவும் பகுத்தறிவைப் பயன்படுத்தவும் அழிக்க முடியாத உரிமைகள் வேண்டும். இதனையே இயற்கை சட்ட கருதுகோள் என்கிறோம். இயற்கையாக மனிதனுக்கு அமைந்த அறிவாற்றலை, பகுத்தறிவைப் பயன்படுத்த சுதந்திரமான, அழிக்க முடியாத உரிமைகள் தேவை. எனவே மனித உரிமைகளுக்கு அடிப்படையானது; மனித உரிமைகளில் அடிப்படையானது சுதந்திரம் மட்டுமே.

மனித உரிமைகள் யாருக்கு உரியவை?

மனித உரிமைகள் என்பது பிறப்பின் அடிப்படையில் அளிக்கப்படும் சலுகையல்ல. அதாவது ஒருவர் சுவீடனில் பிறந்திருப்பதால் அவரது மனித உரிமைகள் காக்கப்படும் என்பதும் அவர் இலங்கையில் பிறந்திருந்தால் அவரது மனித உரிமைகள் நசுக்கப்படும் என்பதும் அல்ல. அதே போல் ஒருவர் அய்ரோப்பிய இனத்தில் பிறந்ததால் மனித உரிமைகள் உண்டு என்பதோ, ஆப்பிரிக்க இனத்தில் பிறந்ததால் மனித உரிமைகள் கிடையாது என்பதோ இல்லை. ஒரு மனிதன் அவன் எந்த நாட்டில், எந்த இனத்தில் பிறந்திருந்தாலும் மனிதனாகப் பிறந்ததாலேயே மனித உரிமைகளுக்கு உரியவன் ஆகிறான் என்பதே மனித உரிமைகள் கருத்தியலின் அடிப்படை.

உலகளாவிய மனித உரிமைச் சட்டங்கள் அரசுக்கானவையா? மக்களுக்கானவையா?

பொதுவாக ஒரு நாட்டின் சட்டம் என்பது அந்நாட்டின் குடிமக்களுக்கானதாக உள்ளது. அதாவது அச்சட்டம் அந்நாட்டின் குடிமக்களின் செயல்கள் மீது கட்டுப்பாடு செலுத்தும். ஆனால் உலகளாவிய சட்டங்களின் வரையறை அரசுகளுடன் நிற்கிறது. உலகளாவிய சட்டங்கள் அரசுகளை மட்டுமே கட்டுப்படுத்துகின்றன.

மக்கள் வெறும் பொருட்களாகவே மதிக்கப்படுகின்றனர். அதாவது உயிரற்ற சொத்துகள், உடைமைகள் எவ்வாறு ஒரு நாட்டின் சட்டத்தில் அதன் உரிமையாளருடன் இணைந்ததாக இடம் பெறுகிறதோ அவ்வாறே மக்கள் அவர்கள் குடியுரிமைப் பெற்ற நாட்டின் உடைமையாக, அதனுடன் இணைந்தவர்களாகவே உலகளாவிய சட்டங்களில் பார்க்கப்படுகின்றனர். ஆனால் அதே நேரம் மனிதர்களே உண்மையானவர்கள்.இயற்கையானவர்கள். அரசு என்பது செயற்கையானது. மனிதர்களுக்கு உதவுவதும் மனிதர்களுக்குப் பணியாற்றுவதுமே அரசுகளின் கடமையாகும். ஆனால் இன்று அரசின் பொருட்டு மனிதர்கள் என்ற நிலை உள்ளது. இது முற்றிலும் தவறானது. உலகளாவிய சட்டங்கள் அனைத்தும் மக்களின் உரிமைகளைக் காக்க, அரசை நிர்பந்திக்கும் நோக்கத்திலேயே உருவாக்கப்பட்டன.

அப்படியெனில், இன்று இறையாண்மையின் பெயரால் அதே அரசுகள் மனித உரிமை மீறல்கள் செய்வதை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?

நான் முன்பே குறிப்பிட்ட இயற்கை சட்டத் தத்துவத்தின் அடிப்படையில் உருவானதே அமெரிக்கப் புரட்சி. அப்போது புரட்சியாளர்கள் முன்வைத்த முக்கியமான வாதம் என்னவெனில், எங்கோ இருக்கும் இங்கிலாந்து அரசர் எப்படி தங்களுக்கானவர் ஆவார் என்பதே. அந்த வாதத்தின் அடிப்படையில் ஒரு கருதுகோள் உருவானது. அதாவது, “உங்களுடைய நலன்களைப் பேணாத கட்டுகளை உடைப்பது சட்டப்பூர்வமானது'' என்பதே அது. இந்த கருதுகோளின் அடிப்படையில் உலகெங்கும் புரட்சிகள் வெடித்து புதிய அரசாங்கங்களும் நாடுகளும் உருவாயின. இதன் அடிப்படையில் நோக்கினால், மக்களின் நலன்களைப் பேணாத அரசை எதிர்த்து மக்கள் செய்யும் புரட்சி சட்டப்பூர்வமானது. அதனை ஒடுக்க இறையாளுகை (sovereignty) என்ற ஆயுதத்தை அரசுகள் கையில் எடுக்கின்றன.

உலகளாவிய சட்டங்கள் உருவாக்கப்பட்டபோது இரு நாடுகளுக்கு இடையில் போர் மூளுவதைத் தடுக்கும் வகையில் இறையாளுகைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஒரு நாட்டின் இறையாளுகையில் தலையிட வேறு எந்த நாட்டுக்கும் உரிமை இல்லை என்று சட்டம் வகுக்கப்பட்டது. இன்று அதே இறையாளுகையைப் பயன்படுத்தி மனித உரிமை மீறல்களைத் துணிந்து செய்துவிட்டு, பிற நாடுகள் அதில் தலையிட்டு தடுக்காத வகையில் ஒரு கவசமாக அரசுகள் பயன்படுத்துகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் எந்த ஒரு நாடு தனது இறையாளுகையை அதிகமாக விட்டுக் கொடுக்கிறதோ அந்த நாடே மிக அதிகமாக உலகளாவிய மனித உரிமைகளை காக்கும் நாடாக உள்ளது என்பதும் உண்மை.

உலகளாவிய சட்டங்கள் என்று சொல்லப்படுபவை பெரும்பாலும் ஒப்பந்தங்களாகவே உள்ளன. அதாவது ஒரு நாடு தாமாக விரும்பி அந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டால், அதனை அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் கட்டுப்படுத்தலாம். மிக அதிக அளவில் ஒப்பந்தங்களை ஏற்றுக் கொண்ட நாடு தனது இறையாளுமையை அந்த அளவுக்கு விட்டுக் கொடுத்துள்ளது என்று பொருள். எனவே இறையாளுகையை விட்டுக் கொடுக்கத் தயாராக உள்ள நாடுகள் மட்டுமே மனித உரிமைகளைப் பேணுவதில் முன்னணியில் நிற்கின்றன.

அப்படியெனில், இதில் அய்க்கிய நாடுகள் அவையின் பங்குதான் என்ன?

அய்க்கிய நாடுகள் அவை என்பது அரசுகளுக்கு மேலானது அல்ல. அதாவது அது ஒரு "சூப்பர்' அரசாங்கம் அல்ல. அது அரசுகளின் கூட்டமைப்பு. அவ்வளவே. எனவே அதற்கு பல வரையறைகள் உள்ளன. அவற்றை மீறி அதனால் பெரிதாக எதையும் செய்துவிட முடியாது என்பதை நாம் முதலில் உணர வேண்டும்.

ஒப்பந்தங்களை ஏற்றுக் கொண்டுள்ள நாடுகள் அதனை மீறுகையில் நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் மட்டுமே அய்க்கிய நாடுகள் அவைக்கு உண்டு. அந்த அதிகாரமும் வரையறைக்கு உட்பட்டதே. அய்.நா.வின் பாதுகாப்புக் குழுவே அய்.நா. அமைப்புகளில் அதிக அதிகாரம் கொண்டது. ஒரு நாட்டின் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் இந்த குழுவுக்கே உண்டு.

எனினும், இந்த பாதுகாப்புக் குழுவின் நிரந்தர உறுப்பினர்களாக உள்ள 5 நாடுகளில் ஏதேனும் ஒன்று அந்த நடவடிக்கையை எதிர்த்தாலும் அவ்வாறான நடவடிக்கையை எடுக்க முடியாது. இப்படியான வரையறைகளுடன் மட்டுமே அய்.நா. இயங்குகிறது.

அந்த 5 நாடுகள் எவை? ஏன் அவற்றிற்கு மட்டும் இந்த சிறப்பு அதிகாரம்?

இதற்கு அய்.நா. உருவான வரலாற்றில்தான் பதில் உள்ளது. உண்மையில் "அய்க்கிய நாடுகள்' என்பது இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரின் ஜெர்மனிக்கு எதிராக அணி வகுத்து நின்ற நாடுகளின் கூட்டமைப்பிற்கான பெயர். அன்று ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் போன்ற நாடுகள் ஒரு புறமும் அவற்றை எதிர்த்து மறுபுறத்தில் நின்ற அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு, சோவியத் ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் தங்களுக்கு "அய்க்கிய நாடுகள்' என்ற பெயரைச் சூட்டிக் கொண்டன. போரின் இறுதியில் இந்த "அய்க்கிய நாடுகள்' அணி வென்றது. இந்நிலையில், போரினால் ஏற்பட்ட மிகப் பெரிய உயிரிழப்புகள் மற்றும் சொத்து இழப்புகளினால் உலகமே பாதிக்கப்பட்டதை உணர்ந்த இந்த அணியினர், வருங்காலத்தில் இதுபோன்ற போர் ஏற்படாமல் தடுக்க தங்களுக்குள் தொடர்ந்து புரிந்துணர்வோடு ஓர் கூட்டியக்கமாக செயல்பட முடிவெடுத்தன.

இதனால் உருவானதே அய்க்கிய நாடுகள் அமைப்பு. பின்னர் அது உலகில் உள்ள அனைத்து நாடுகளையும் உள்ளடக்கிய குடை அமைப்பாக விரிவடைந்தது. இதனால்தான் இன்றளவிலும் இரண்டாம் உலகப் போரின் "அய்க்கிய நாடுகள் அணி'யின் உறுப்பினர்களான அந்த 5 நாடுகளுக்கு மட்டும் சிறப்பு அதிகாரம் இருந்து வருகிறது. இதற்கு பிற நாடுகளிடையே எதிர்ப்பு இருந்தபோதும், இந்த அதிகாரத்தைப் பறிக்கவும்கூட இந்த அய்ந்து நாடுகளும் இணைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும். அது சாத்தியமற்றது.

இவ்வளவு வரையறைகளுடன் இருக்கும் அய்.நா.வை நம்பி எவ்வாறு மனித உரிமைகளைக் காக்க முடியும்?

மனித உரிமைகளைக் காக்க அய்.நா.வை மட்டும் நம்புவதில் பயனில்லை என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் அதற்காக முற்றிலுமாக அய்.நா.வை ஒதுக்கிவிட வேண்டியதில்லை. அய்.நா.வை பயன்படுத்தி நாம் நிறைய செய்ய முடியும். இன்று மனித உரிமைகள் சார்ந்து பல ஒப்பந்தங்களை அய்.நா. உருவாக்கியுள்ளது. உலகளாவிய மனித உரிமைப் பிரகடனம் என்பது ஒரு பரிந்துரை மட்டுமே. எனவே அதனை சட்டப்பூர்வமானதாக ஆக்க சி.சி.பி.ஆர்.

(Covenant on Civil & Political Rights ) மற்றும் சி.ஈ.எஸ்.சி.ஆர். (Covenant on Economic, Social & Cultural Rights) என இரு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டன. முன்னது சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் குறித்தது; மற்றது பொருளாதார, சமூக, பண்பாட்டு உரிமைகள் பற்றியது. ஆங்கிலத்தில் இந்த ஒப்பந்தங்களை Covenant  என்று அழைக்கிறோம். இது இறையியல் சொல். அதாவது கடவுளுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான ஒப்பந்தம் என்ற பொருளில் இறையியலில் பயன்படுத்தப்படும் சொல்.

இந்த உலகளாவிய சட்டத்தில் இச்சொல் அரசுகளுக்கு இடையிலும் தனி நபர்களுக்கு இடையிலுமான சமூக ஒப்பந்தம் என்ற பொருளில் வழங்கப்படுகிறது. முதன் முதலில் உருவாக்கப்பட்ட இந்த இரு ஒப்பந்தங்களும் நடைமுறைக்கு வர 10 ஆண்டுகள் பிடித்தன. ஏனெனில் அவ்வாறு ஓர் ஒப்பந்தம் நடைமுறைக்கு வரவேண்டுமெனில், அதற்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நாடுகள் அதனை ஏற்றிருக்க வேண்டும். அதன் பின்னர் இன்று பல ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டுவிட்டன.

அந்த ஒப்பந்தங்களை ஏற்றுக் கொண்ட நாடுகள் அதனை மீறினால், நிச்சயம் அய்.நா. நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால் அதற்கு முதலில் நாடுகளை அந்த ஒப்பந்தங்களை ஏற்றுக் கொள்ள வைக்க வேண்டும். அதனை மனித உரிமை செயற்பாட்டாளர்கள்தான் செய்ய முடியும்.

இங்கு எத்தனை மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கு அந்த ஒப்பந்தங்கள் பற்றி தெரியும்? எத்தனை பேர் குறைந்த பட்சம் உலகளாவிய மனித உரிமைப் பிரகடனத்தை வாசித்திருப்பார்கள்? பெண்ணுரிமைக்காகக் குரல் கொடுக்கும் எத்தனை பேர் "சீடா' (CEDAW - Convention on the Elimination of all forms of Discrimination Against Woman) எனப்படும் பெண்களின் உரிமைகள் குறித்த ஒப்பந்தத்தை வாசித்திருப்பார்கள்? இதுதான் சிக்கல். நாம் மிக மேலோட்டமாகவே செயல்படுகிறோம்.

மனித உரிமைகள் பிரகடனம் என்பது உலகளாவியது எனில் அதனை ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டும். அனைத்து மொழிகளிலும் அது மொழிபெயர்க்கப்பட்டு மக்களை சென்றடைந்திருக்க வேண்டும். அந்த வேலையை அரசுகள் செய்யாது. அதனை மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள்தான் செய்ய வேண்டும்.

மனித உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் அமைப்புகள் தங்கள் அலுவலகங்களில் இந்த பிரகடனத்தை அனைவர் பார்வையிலும் படும் வகையில் மாட்டி வைத்திருக்க வேண்டும். அனைத்து கல்வி நிலையங்களிலும் அது வைக்கப்பட்டிருக்க வேண்டும். அது அடிக்கடி பேசப்பட்டு, பார்க்கப்பட்டு, படிக்கப்பட்டு நமக்குள் ஊறிப் போக வேண்டும். அப்போதுதான் நாம் கேள்வி எழுப்ப முடியும். இந்த அடிப்படை வேலைகளை செய்யாமல் மனித உரிமைகளை காக்க முடியாது.

இந்திய சமூகத்தில் நிலவும் சாதிய ஒடுக்குமுறைகள், பாகுபாடுகள் பற்றிய உங்கள் கருத்து என்ன?

உண்மையைச் சொல்லப் போனால் எனது இந்தப் பயணத்தில்தான் நான் ஜாதியைப் பற்றி புரிந்து கொண்டேன். இதுவரை எனது புரிதல் மிகவும் மேலோட்டமானதாக மட்டுமே இருந்தது. ஆனால் இந்த முறை சற்று விரிவான உரையாடல்கள் மூலம் நான் அறிந்து கொண்ட செய்திகள் எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தின. பொதுவாக அரசு என்பது எந்த நாட்டிலும் தனித்த அதிகாரம் உடையது; அனைத்தையும் கட்டுப்படுத்தக்கூடியது.

அந்த அரசு உருவாக்கிய சட்டங்களே ஆட்சி செலுத்தும் அதிகாரம் கொண்டவை. ஆனால் இந்திய ஜாதிய சமூகத்தில், அரசின் இந்த தனித்த அதிகாரமும், சட்டங்களின் ஆட்சியும் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. அரசிற்கும் சட்டங்களுக்கும் மேலாக ஜாதி உள்ளது. அரசின் கொள்கை முடிவுகளிலும் சட்டங்களை செயல்படுத்துவதிலும் ஜாதியே ஆதிக்கம் செலுத்துகிறது. இது எனக்குப் பெருத்த அதிர்ச்சியை அளித்தது. நான் இதைப் பற்றி மேலும் படித்துக் கொண்டிருக்கிறேன். மேலும் அறிந்து கொள்ள விரும்புகிறேன்.

நீங்கள் உலகெங்கும் உள்ள தமிழர் அமைப்புகளோடு இணைந்து பணியாற்றுவதாகக் கூறுகிறீர்கள். இன்றைய நிலையில் அவர்களுடைய செயல்பாடு எவ்வாறு இருக்க வேண்டும் என நினைக்கிறீர்கள்?

அவர்கள் யூதர்களின் சியோனிஸ்ட் (Zionist) இயக்கத்தைப் பின்பற்ற வேண்டும் என நினைக்கிறேன். "ஹோலோகாஸ்ட்டு'க்கு முன்னும் பின்னும் உலகெங்கும் பல சியோனிஸ்ட் இயக்கங்கள் இருந்தன. ஆனால் தங்களுக்கென ஒரு நாட்டை உருவாக்க வேண்டும் என்று முடிவெடுத்தவுடன் அவர்கள் தங்களுக்கு இடையிலான அனைத்து வேறுபாடுகளையும் மறந்து இணைந்து நின்று செயல்பட்டனர். அதனால்தான் அவர்களால் தங்கள் இலக்கை அடைய

முடிந்தது. உங்களுக்குள் ஒத்தக் கருத்து இல்லாத விசயங்களைப் பற்றிக் கவலைப்படுவதை நிறுத்துங்கள். ஒத்தக் கருத்துடையவற்றை அடிப்படையாக வைத்து பணி செய்யுங்கள் என்பதே அவர்களுக்கு நான் வைக்கும் வேண்டுகோள். தமிழர்களுக்கு உலக அளவில் பெரும் ஆற்றல் உள்ளது. அவர்கள் இணைந்து செயல்பட மறுப்பது மட்டுமே அவர்களின் ஒரே பலவீனம்.

இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்பதை ஏற்க ஏன் உலக நாடுகள் தயங்குகின்றன?

இனப்படுகொலை என்பது மிகவும் கவனமாகக் கையாளப்பட வேண்டிய சொல். அதனை உறுதிப்படுத்த அதற்கு முன் பல படிகள் உள்ளன. அவற்றைச் செய்யாமல் நேரடியாக இனப்படுகொலை என்று சொல்லிவிட முடியாது. "ஹோலோகாஸ்ட்' நடந்தபோது அது இனப்படுகொலை என்று சொல்லப்படவில்லை. (Holocaust)– முழுமையாக, "காஸ்டோஸ்' – எரிக்கப்பட்டசி என்றால் முழுமையாக எரிக்கப்பட்ட என்று பொருள். ஜெர்மனியில் 1941 – 45 வரையான காலகட்டத்தில் ஹிட்லரின் நாஜிப் படையினரும் அவரது கூட்டாளிகளும் – 60 லட்சம் யூதர்கள் உட்பட – ஜிப்சிகள், போலந்து நாட்டினர், கம்யூனிஸ்டுகள், ஓரினச் சேர்க்கையாளர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் என ஏறத்தாழ ஒரு கோடியே 10 லட்சம் மக்களை – ஆரிய இன சுத்திகரிப்பு என்ற பெயரில் – கொன்றொழித்தனர்.

ஆரிய இன வெறியூட்டப்பட்ட நாஜிப் படையினர் ஊர் ஊராக, தெருத் தெருவாகச் சென்று ஆரிய இனப் பெருமைக்கு இழுக்குத் தேடக்கூடியவர்கள் என்று கருதப்பட்டவர்களை – ஆரியர் அல்லாத யூத மக்களை மற்றும் ஜெர்மனியின் பிடியில் இருந்த போலந்து இன மக்களை வெட்டியும் சுட்டும் மொத்தமாகக் கைதுசெய்து விஷ வாயு செலுத்தியும் கொன்றனர். ஜெர்மனியில் உள்ள "அஷ்விட்ஸ் முகாம்'கள் என அழைக்கப்பட்ட மூன்று முகாம்களில் பல லட்சம் மக்கள் விஷ வாயு செலுத்திக் கொல்லப்பட்டனர். இந்தப் படுகொலையே "ஹோலோகாஸ்ட்' என்ற சொல்லால் குறிக்கப்படுகிறது.

1945 ஆம் ஆண்டு சனவரி 27 அன்று ரஷ்யப் படையினர், ஆஷ்விட்ஸ் முகாம்களில் எஞ்சியிருந்த மக்களை விடுவித்தனர். இந்த நாளே இன்று "ஹோலோகாஸ்ட் நினைவு நாள்' என்று வழங்கப்படுகிறது) அப்போது இனப்படுகொலை என்ற சொல்லே கிடையாது. போலந்தைச் சேர்ந்த யூத வழக்குரைஞர் ரபெல் லெம்கின் உருவாக்கிய சொல் அது. யூதப் படுகொலை நடந்தபோது அவை மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க் குற்றங்கள் என்ற அடிப்படையிலேயே அவை விசாரிக்கப்பட்டன.

அதிலும் போர்க் காலத்தில் நடந்தவை மட்டுமே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டன. ஏனெனில் போர்க் குற்றங்கள் மற்றும் மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்த சட்டங்கள் இரண்டும் போர்க் காலத்தில் நடந்து கொள்ள வேண்டிய முறை குறித்தவை. அவை போர் இல்லாத காலங்களில் நடக்கும் இம்மாதிரியான குற்றங்கள் குறித்து எதுவும் பேசவில்லை.

ஆனால் யூதப் படுகொலை பெரும்பாலும் இரண்டாம் உலகப் போர் தொடங்குவதற்கு முன்பே நடந்தது. அவை போர்க் காலத்தில் நடைபெறவில்லை என்ற ஒரே காரணத்திற்காக அனைத்தும் கேள்வியற்றுப் போய்விட்டன. யூத வழக்குரைஞரான லெம்கின், போர் இல்லாத காலங்களில் நடைபெறும் மனி அழிப்புக்கென உருவாக்கிய சொல்லே இனப்படுகொலை. அவரது முயற்சியிலேயே இனப்படுகொலை குற்றத்தைத் தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான பிரகடனம் உருவாக்கப்பட்டு, வெளியிடப்பட்டது. அப்பிரகடனம் இனப்படுகொலை என்பதை விரிவாக விளக்குகிறது.

அந்த விளக்கங்கள் அனைத்திற்குமான ஆதாரங்கள் கிடைத்து உறுதிப்படுத்தப்படாமல் இனப்படுகொலை என்ற சொல்லை உலக அரங்கில் பயன்படுத்த முடியாது. எனவே, போர்க் காலத்தில் மட்டுமல்லாமல் வரலாற்று ரீதியாகவும் போருக்குப் பின்னும் தமிழர்கள் மீது நடப்பவை இனப்படுகொலை என்பதை உறுதிப் படுத்துவதற்கான ஆதாரங்களைத் திரட்டுவதில் திட்டமிட்டு வேலை செய்ய வேண்டும். அதன்மூலம் மட்டுமே உலக அளவில் இனப்படுகொலை என்ற சொல்லைப் பயன்படுத்தும் வாய்ப்பை நாம் பெற முடியும்.

அவ்வாறு இனப்படுகொலை என்பது உறுதிப்படுத்தப்பட்டு விட்டால் தமிழர்களின் நீண்டநாள் கோரிக்கையான தனித் தமிழீழம் சாத்தியம் ஆகுமா?

நிவாரணம் அற்ற உரிமையால் எவ்விதப் பயனும் இல்லை. எந்த ஓர் உரிமை மீறலுக்கும் சட்டம் மூன்று வகையான நிவாரணங்களை அளிக்கிறது. இழப்பீடு, மீட்பு மற்றும் தண்டனை. இது உலக அளவில் எந்த சட்டத்திற்கும் பொருந்தக் கூடியது. அந்த வகையில் போர்க் குற்றங்கள் மற்றும் மனித இனத்திற்கு எதிரான குற்றங்களை தமிழர்களுக்கு எதிராக இலங்கை புரிந்தது என்பது உறுதிப்படுத்தப்பட்டால் அதற்கான நிவாரணமாக, குற்றம் புரிந்தவர்களுக்கு தண்டனை அளிப்பதோடு, அம்மக்கள் இழந்த வாழ்வை மீட்டெடுத்து அவர்களுக்கு திரும்ப அளிப்பது பன்னாட்டுச் சமூகத்தின் கடமையாகிறது. இனப்படுகொலையும் ஒரு குற்றச் செயலே. ஆனால் இனப்படுகொலை குற்றத்திற்கான தீர்வு என்ன என்பதை பொதுவாக சொல்லிவிட முடியாது. அது சூழலுக்கு சூழல் மாறுபடும்.

தமிழர்கள் மீது இலங்கை நடத்தியது இனப்படுகொலை என்பது முடிவானால் அந்தத் தீர்வு என்னவாக இருக்க வேண்டும் என்பது குறித்த விவாதம் முன்னெடுக்கப்படும். ஆனால் தனித் தமிழீழம்தான் தீர்வு என்றால், அந்நாட்டைப் பெற்ற பின்னரான சூழலை தமிழர்கள் யோசிக்க வேண்டும். தொடர்ந்து போரை சந்திக்கும் சூழல் ஏற்படலாம். எல்லா வகையிலும் யோசித்து தமிழர்கள் எடுக்க வேண்டிய முடிவு அது.  

Pin It