“இந்து சமூக அமைப்பு ஜனநாயகமற்றதாக இருப்பது தற்செயலானது அல்ல. அது ஜனநாயகமற்ற முறையில் இருக்க வேண்டும் என்பதற்காகவே திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது, சமூகத்தை வர்ணங்களாகவும் சாதிகளாகவும் புறச்சாதிகளாகவும் (outcastes)  பிரித்து வைத்திருப்பது தத்துவங்களால் அல்ல; கட்டளைகளால். இவையெல்லாம் ஜனநாயகத்திற்கு எதிராக எழுப்பப்பட்டுள்ள தடைகளாகும்.''

– டாக்டர் அம்பேத்கர், ஆங்கில நூல் தொகுப்பு: 4, பக்கம்: 284

ஒவ்வொரு 18 நிமிடங்களிலும் தலித் மக்களுக்கு எதிராக ஒரு குற்றம் நிகழ்த்தப்படுகிறது. இந்தியா விடுதலை பெற்று 67 ஆண்டுகளான பிறகும் தலித் மக்களைப் பாதுகாக்க (1955, 1989) இயற்றப்பட்ட சட்டங்களும் அச்சட்டத்தை வலுப்படுத்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளும் இம்மக்களை வன்கொடுமைகளிலிருந்தும் இழிவுகளிலிருந்தும் காப்பாற்றவில்லை. மிகக் குறைந்தளவு நிவாரணங்களைப் பெற்றுத் தர அது பயன்படுகிறதே தவிர, வன்கொடுமைகளை இச்சட்டம் தடுத்து நிறுத்திவிடவில்லை.

ஆனால், இச்சட்டத்தை நடைமுறைப்படுத்தக்கோரி கால் நூற்றாண்டாக தலித் மக்கள் / இயக்கங்கள் / கட்சிகள் நடத்தாத போராட்டங்கள் இல்லை; இயற்றாத தீர்மானங்கள் இல்லை. மாறாக, வெவ்வேறு வடிவங்களில் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றதே தவிர குறைந்தபாடில்லை. இருப்பினும் இச்சட்டத்தைக் கூட சாதி இந்துக்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

மநுதர்மத்தின் அடிப்படையிலான இந்து சமூகத்தை ஜனநாயகப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் அம்பேத்கர் அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கினார். இந்த நாட்டின் சட்டம் ஜனநாயகமானது; ஆனால் இந்நாட்டின் மதமும் பண்பாடும் சனாதனமானது. அதுதான் இந்துக்களின் ஒட்டுமொத்த வாழ்க்கை முறையைத் தீர்மானிக்கிறது. தலித் மக்களைப் பாதுகாக்கும் சட்டத்தை இந்துக்கள் ஏன் நடைமுறைப்படுத்த மறுக்கிறார்கள் என்பதற்கான விடை இங்குதான் ஒளிந்திருக்கிறது.

இந்நிலையில் சட்டத்தை மட்டுமே நம்பியிருக்காமல், தலித் மக்கள் தங்களை வலுப்படுத்திக்கொள்வதுதான் இன்றைய முதன்மைத் தேவை. நோயைக் குணப்படுத்தவும் தடுக்கவும் மருந்துகளால் இயலாத சூழலில், நோய் எதிர்ப்பு ஆற்றலை உடலில் வளர்த்துக் கொள்வதுதான் நோயிலிருந்து மீள்வதற்கான / தடுப்பதற்கான அறிவார்ந்த வழி.

வன்கொடுமைகளையும் இழிவுகளையும் தலித்துகள் மீது இன்றளவும் சுமத்தும் இந்து சமூகம், அது மநுநீதி காலத்தைப் பின்பற்றவில்லை என்று நாடகமாடுவதற்குதான் நீதிமன்றங்களையும் ஊடகங்களையும் உருவாக்கி வைத்திருக்கிறது. தலித் மக்கள் இந்துக்களாக நீடிக்கும்வரை, அவர்கள் மீது வன்மங்களை உமிழ இந்து சமூகம் ஒருபோதும் தயங்காது.

இந்துக்கள் வன்கொடுமைகளை நிகழ்த்துவார்கள்; தலித்துகள் நீதி கேட்டுப் போராட வேண்டும்; பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக இருப்பதைப்போல பார்ப்பனப் பத்திரிகைகள் பாசாங்கு செய்யும்; ஆனால் நீதி மட்டும் கிடைக்காது! மறைந்திருக்கும் இச்சதித் திட்டத்தை நாம் புரிந்து கொண்டால்தான் அடுத்த கட்டத்திற்குச் செல்ல முடியும். சட்டத்தை நடைமுறைப்படுத்தக்கோரி தற்பொழுது நடைபெறும் அரசுக்கு எதிரான போராட்டங்களுக்கு இணையாக, இந்து சமூக அமைப்பிற்கு எதிரான போராட்டங்கள் – அதில் நூறில் ஒரு பங்குகூட – நடைபெறாதது ஏன்?

ஒருவருடைய ஜாதியை அவருடைய பிறப்பு தீர்மானிக்கும்வரை – அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக்கப்பட்டாலும்கூட – இந்து சமூகத்தை ஜனநாயகப்படுத்த முடியாது. தலித் மக்களை ஜனநாயகமற்ற இந்து சமூக அமைப்பிற்குள் அடிமைகளாக வைத்திருக்கவே சட்டம் / கல்வி / பொருளாதாரம் / சுயமுன்னேற்றம்... ஆகியவை பயன்படுகின்றன. இவை ஒடுக்கப்பட்ட மக்களை அதிகாரப்படுத்திவிடும் என்பது மாயை. "அடிமைகளாக இருந்து கொண்டு உரிமைகளைக் கேள்' என்பதுதான் இதன் உட்கரு. இந்து சமூக அமைப்புக்கு வெளியே நின்று சிந்தித்து செயல்திட்டங்களை வகுக்காதவரை, தலித் மக்கள் வன்கொடுமைகளிலிருந்து விடுதலை பெற முடியாது.

அம்பேத்கர் சொல்கிறார் : “படிநிலைப்படுத்தப்பட்ட இந்து சமூக அமைப்பு வேரோடு வீழ்த்தப்பட வேண்டுமென்றால், அது இரண்டு சூழல்களில்தான் நிகழ முடியும். முதலில் இந்து சமூக அமைப்பு கடும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட வேண்டும்; அதன்மீது நெருப்பு மழை பொழிய வேண்டும். இரண்டாவதாக, சிந்தனையிலும் செயலிலும் அவர்கள் (தீண்டத்தகாத மக்கள்) இந்துக்களிடமிருந்து சுதந்திரமானவர்களாக , வேறுபட்டவர்களாக இருந்தாலன்றி அதனை இடையறாத, நீடித்த தாக்குதலுக்கு உட்படுத்த முடியாது'' (ஆங்கில நூல் தொகுப்பு: 5, பக்கம்: 396)

Pin It