இந்து சமூக அமைப்பின் இரண்டாம் கோட்பாடு: ஒவ்வொரு வர்க்கத்திற்கும் தொழில்கள் நிலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. பரம்பரை பரம்பரையாக அத்தொழில்களையே தொடர்ந்து செய்ய வேண்டும். நான்கு வர்ணத்திற்குரிய தொழில்களைப் பற்றி மநு கூறுகிறார்...

ambedkar 3541:87 “இவ்வுலகைக் காப்பதற்காக ஒளிமிகு இறைவன் தன் வாய், தோள், தொடை மற்றும் பாதத்திலிருந்து தோன்றியவர்களுக்கு வெவ்வேறு தொழில்களை வகுத்துள்ளான்.'' 1:88 “பிராமணர்களுக்கு கற்றல், கற்பித்தல் (வேதத்தை) தம் நலனுக்காகவும் பிறருக்காகவும் வேள்வி செய்தல்; பிச்சை ஏற்றல், அளித்தல்.'' 1:89 “சத்திரியருக்கு மக்களைக் காத்தல், வேள்விக் கொடைகள் அளித்தல், கற்றல் (வேதம்), புலனின்பத்தில் பற்று நீங்கல்.'' 1:90 “வைசியருக்கு ஆடு மாடு மேய்த்தல், வேள்விக்கு கொடையளித்தல், கற்றல் (வேதம்), புலன் இன்பத்தில் பற்று நீக்கல்.'' 1:91 “சூத்திரருக்குரிய ஒரே தொழில் மேல்வர்ணத்தார் மூவருக்கும் கீழ்ப்படிந்து உழைத்தல்.''

... தன் வர்க்கத்தாருக்கு விதித்துள்ள தொழில்களையே ஒவ்வொருவரும் செய்ய வேண்டும். தனிநபர் விருப்பத்திற்கும் தனிநபர் மனப்போக்கிற்கும் இடமளிக்கப்படவில்லை. இந்து சமூக அமைப்பில் முன்னோர்கள் செய்த தொழிலையே தனிநபர்கள் செய்ய வேண்டும். தப்பிக்க முடியாத கடுமையான விதி இது. தொழிலை நிர்ணயிப்பதுடன் இக்கோட்பாடு நிற்பதில்லை. அதற்குரிய மரியாதை அடிப்படையிலும் தொழில்களை அது தரம் பிரிக்கிறது. மநு கூறுகிறார்: 10:80 – “வாழ்வதற்குரிய தொழில்களில் பிராமண, சத்திரிய, வைசியருக்கு முறையே வேதம் கற்பித்தல், மக்களைக் காத்தல், வணிகம் செய்தல் பெரிதும் பரிந்துரைக்கப்படுகிறது.''

இந்து சமூக அமைப்பின் மூன்றாம் கோட்பாடு: மக்களை அந்தந்த வர்க்கத்திற்குள்ளேயே அடக்கி வைத்து அவற்றை இந்து சமூக அமைப்பு அங்கீகரிப்பதில் வியப்போ, விந்தையோ எதுவுமில்லை. எங்கும் வர்க்கங்கள் உள்ளன. எச்சமூகத்திலும் வர்க்கங்கள் இல்லாமலில்லை. குடும்பங்கள், வட்டங்கள், சங்கங்கள், அரசியல் கட்சிகள், சமூகப் பிரிவுகள், குற்றச் சதிகளில் ஈடுபடும் குழுக்கள், மக்களைச் சுரண்டும் வணிக நிறுவனங்கள் என உலகெங்கிலுமுள்ள சமூகங்களில் வர்க்கங்கள் உள்ளன. வர்க்கங்களை ஒழிப்பது சுதந்திர சமூக அமைப்பிலும் இயலாத தொன்று. சுதந்திர சமூக அமைப்பின் நோக்கம் தனித்தும் பிரிந்தும் வாழ்வதை லட்சியமாகக் கொள்வதைத் தடுப்பதுதான். தனித்தும் பிரிந்தும் வாழாத வரையில் பல்வேறு வகுப்பினர் ஒருவருக்கொருவர் சமூகவியல் அல்லாத உறவுகளை மேற்கொண்டுள்ளனர்.

தனிமையும் பிரிவுநிலையும் சமூக விரோதத்தையும் வெறுப்பையும் வளர்க்கின்றன. வர்க்க உணர்வு இறுகிட, சமூக வாழ்வியலை நிறுவனமாக்கிட, வர்க்கத்தினுள் சுயநல லட்சியங்கள் மேலோங்கிடத் தனிநிலை உதவுகிறது. வாழ்வை நிலைகுலையச் செய்துவிட, உயர்உரிமை குறையுரிமை பெற்ற குழுக்களாக மாற்றிட, ஆண்டான் அடிமை ஆகிவிட பிரிவுநிலை உதவுகிறது.

சுதந்திர சமூக அமைப்பிற்குப் பிரிவுநிலையும் தனிநிலையுமே வர்க்கக் கொள்கையைவிட முரணானது. சுதந்திர சமூக அமைப்பு சமூக மாற்றங்களுக்கான வாயில்களைத் திறந்து வைத்திருக்கிறது. பொதுநலன்கள், நிறுவனங்கள், செலவினம், பொதுவான விழுமியங்கள், முன்னும் பின்னும் இயங்கும் நெகிழ்ச்சி, பிறரிடம் பெறவும், அளிக்கவும் சமய சந்தர்ப்பம் ஆகியவற்றில் வர்க்கங்கள் பங்கு கொள்ளும் போதுதான் இது சாத்தியமாகிறது. அத்தகைய சமூகத் தொடர்புகள் சம்பிரதாயங்களை வலுவிழக்கச் செய்கின்றன. மனம் விரிந்து விழித்திட உதவுகின்றன. மனநிலைகளை மாற்றி அமைத்திட, மாற்றத்தை விழைந்திட வகை செய்கின்றன. இந்து சமூக அமைப்பின் சிறப்பம்சம் வர்க்கங்கள் சுதந்திரமாக உறவாடுவதையும், ஊடாடுவதையும் தடை செய்வதே. உடன் உண்ணவும், மணஉறவு கொள்ளவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. சாதாரண சமூக உறவுகளையும் மநு தடை செய்கிறார்...

இந்து சமூக அமைப்பு சகோதரத்துவத்திற்கு எதிரானது. சமத்துவத்தை அது அங்கீகரிப்பதில்லை. சமத்துவத்தை அங்கீகரிக்காதது மட்டுமல்ல, சமமின்மையை அதிகாரப்பூர்வக் கோட்பாடாக்குகிறது. சுதந்திரம் பற்றிய நிலை என்ன? தொழிலைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் கிடையாது. ஒவ்வொருவரது தொழிலும் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்தொழிலை மேற்கொண்டு நடத்துவதே ஏற்புடையது. பேச்சு சுதந்திரம் இருக்கிறது. சமூக அமைப்பில் மேல்மட்டத்துக்கே பேச்சு சுதந்திரம் உண்டு. ஆனால் அது தாராளமான பெருந்தன்மையுடன் கூடிய சுதந்திரம் அன்று; வால்டேர் கூறிய தாராள மனப்பான்மையுடன் அன்று.  

(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 3, பக்கம்: 108)

Pin It