periyar

மனித சம்பந்தமில்லாது தானாக நிகழும் காரியங்கள் எல்லாம் நியாயமானவை என்றால், நாம் செய்யும் ஒவ்வொரு காரியமும் நியாய விரோதமானதாகுமல்லவா? பிறந்த மேனியை மறைத்து வேட்டி கட்டிக் கொள்வது, மயிரைச் சிரைத்துக் கொள்வது, உணவைச் சமைத்து உண்பது முதலான ஒவ்வொரு காரியமும் இயற்கைக்கு விரோதமாகிறது. இயற்கை காட்டும் வழியைப் பின்பற்றுபவன் உணவைப் பச்சையாகவே தின்ன வேண்டும்; குளிருக்கும் மழைக்கும் ஒதுங்குவதற்கு வீடு கட்டிக் கொள்ளக்கூடாது; சட்டை போட்டுக் கொள்ளக் கூடாது. ஆனால் மனிதன் இவற்றைச் செய்வதிலிருந்து இந்த அளவில் இயற்கையைத் தன் போக்கில் போக விடாமல் கட்டுப்படுத்துகிறான் அல்லவா? ஆகையால், தானாக இயங்கும் இயற்கையின் போக்கு நியாயமானதல்ல என்பதை இந்த அளவுக்கு ஒப்புக் கொண்டாக வேண்டும். இயற்கையின் சக்திகள் தானாக இயங்கும் நிலையில் மனிதனுக்குச் சகாயம் செய்வதில்லை.

நமக்கு இன்றியமையாது வேண்டிய மழைத் தண்ணீரை ஆறுகள் அடித்துக் கொண்டு போய் சாகுபடிக்கு உபயோகமில்லாதபடி சமுத்திரத்தில் சேர்க்கிறது. ஆற்று வெள்ளத்தை அணை கட்டித் தேக்கிக் கால்வாய் மூலம் நிலங்களுக்குப் பாய்ச்சிக் கொள்ளும் முயற்சி, இயற்கையின் போக்குக்கு விரோதமாயினும் சிறப்புக்குரியதல்லவா? பெருங்காடுகளில் தானாகத் தோன்றும் காட்டுத் தீ பரந்த பிரதேசங்களை நாசப்படுத்துவதுடன் அப்பிரதேசத்தில் வாழும் அனேக ஜீவப் பிராணிகளையும் உடன்கட்டை ஏறச் செய்கிறது.

யாருக்கும் முன் எச்சரிக்கை செய்யாமல் எல்லா ஜோஸ்யர்களையும் ஏமாற்றித் திடீரென்று தோன்றும் பூகம்பங்களால் ஏற்படும் துன்பங்கள் அளவிடக் கூடியதா? தானாக உற்பத்தியாகி மனிதனுடைய அடக்கு முறைக்கு மீறி பெருகி வரும் விஷப் பூச்சிகளும் வியாதிக் கிருமிகளும் துஷ்ட ஜந்துக்களும் மனிதனுக்குச் செய்யும் துன்பங்கள் கொஞ்சமா? மேற்கூறிய கொடுமைகளை ஒரு தனி மனிதன் செய்தால், அச்செய்கையை நியாயமான தென்றோ, காருண்யமானதென்றோ யாராவது சொல்லத் துணிவார்களா? ஆனால் ஆஸ்திகர்களையும் நாஸ்திகர்களையும் நல்லவர்களையும் கெட்டவர்களையும் அறிஞர்களையும் மூடர்களையும் வித்தியாசமின்றி ஒரே நிலையில் வைத்துத் தன்னுடைய எதேச்சதிகார ஆட்சி புரியும் இயற்கை நெறியை உயர் நெறியென்றும் நீதிநெறியென்றும் நாம் ஒப்புக்கொள்ள முடியுமா? இந்த இயற்கைப் போக்கைத் தழுவி நாம் நடந்து கொள்ள முடியுமா? அப்படியன்றித் தன் போக்கில் இயங்கும் இயற்கை மனிதனால் அடக்கி ஆளப்படத் தகுதியுள்ளதேயன்றிப் பின்பற்றத் தகுதியுடையதல்ல என்று சொல்வதில் என்ன குற்றம்?

நம்முடைய செய்கைகளுக்கெல்லாம் கர்த்தா, நமது எண்ணங்கள். நம்முடைய எண்ணங்கள், இருவகைகளில் உருக்கொள்கின்றன. இயல்பாக எழும் உணர்ச்சி பற்றியும் ஆராய்ந்து பார்க்கும் அறிவு பற்றியும் என இரண்டு விதங்களில் நம் எண்ணங்கள் எழுப்பப்பட்டு செய்கைக்குத் தூண்டுகின்றன. இவற்றுள் எவ்வகை எண்ணங்களை நாம் பின்பற்ற வேண்டும்? உணர்ச்சி பற்றி ஏற்படுபவைகளையா? அறிவுபற்றி ஏற்படுபவைகளையா? உணர்ச்சி பற்றி எழும் எண்ணங்கள் இயற்கையானவையாகும். அறிவு பற்றி எழும் எண்ணங்கள் இயற்கையின் போக்குக்கு மாறுபட்டவையாகும்.

இயற்கையுணர்ச்சிகளைப் பின்பற்றி நடப்பது எப்போதும் நியாயமானதாக இருக்காது. பகுத்தறிவைக் கொண்டு ஆராய்ந்து இயற்கையுணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி நடப்பதையே உலகம் எப்போதும் சிலாகிக்கிறது. இயற்கைக்கு மாறாக, இயற்கையின் போக்கைக் கட்டுப்படுத்தி, மனிதனுடைய சவுகரியத்தையும் நன்மையையும் கோரி மனிதன் செய்யும் ஒவ்வொரு முயற்சியும் புகழத்தக்கவைகளாக இருக்கின்றனவேயன்றி யாராலும் இழிவுபடுத்தப் படுவதில்லை.

பெரிய ஆறுகள் இயற்கையில் பிரித்த இரண்டு கரைகளைச் சேர்க்கும் பாலத்தைக் கட்டுவது இயற்கைக்கு விரோதமாயினும் சிறப்புக்குரியதாகும். நிலத்தின் கீழ் உள்ள நீர் ஊற்றுகளைக் கிணறுகள் மூலம் மனிதன் பயன்படுத்திக் கொள்வதை யார் கூடாதென்று சொல்ல முடியும்? ஆழத்தில் இயற்கை மறைத்து வைத்துள்ள உலோக வகைகளையும், ரத்தினங்களையும் தோண்டியெடுப்பது புகழ்ச்சிக்குரியதல்லவா? சிவ சமுத்திரம், பாய்கரை நீர் வீழ்ச்சிகளைத் தூரத்திலிருந்து அவற்றின் இயற்கைத் தோற்றத்தைக் கண்டு, ஆகாச கங்கையென்றும், ஆஸ்ரம வாசத்திற்குத் தகுதியான இடமென்றும் வர்ணித்த கவியும் ரிஷியும் அந்நீர்வீழ்ச்சிகள் ஒளித்து வீணாக்கி வந்த பெருஞ்சக்தியைக் கட்டுப்படுத்தி மனிதன் இட்ட வேலையைச் செய்யும் பணிப் பெண்ணாக மாற்றிக் கொடுத்த இன்ஜினீயரைவிட எப்படி மேலானவர் ஆவார்கள்? ராஜபுதனப் பாலைவனத்தில் பளிங்குப் பாறையாக இருந்த இயற்கைப் பொருள் வெட்டப்பட்டு நாடுகடத்தப்பட்டு பல்லாயிரம் கைகளால் அடுக்க ஒரு தாஜ்மஹாலாக மாறிக் காட்சியளித்த போது அவ்வியற்கைப் பொருளின் பெருமை செயற்கை நிலையில் குறைந்தாவிட்டது?

(பகுத்தறிவு மாத இதழ், மே 1936)

Pin It